Thursday, 30 September 2010

இன்னும் சில மணித் துளிகளே...!


அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் ஹைகோர்ட்டின் லக்னோ கிளை கோர்ட்டு இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்க உள்ளது. உத்தரப்பிரதேச கோர்ட்டுகளில் கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய இடம் தங்களுக்குச் சொந்தம் என்று இரு தரப்பினருமே ஆவணங்களை கோர்ட்டில் ஒப்படைத்து, வழக்கு விசாரணையில் இருக்கும்போதே பிரச்ச‌னைக்குரிய இடத்திலுள்ள ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டு நீதிமன்ற அவமதிப்பு நடந்திருக்கிறது நம் தாய் திருநாட்டில்! 450 ஆண்டுகால பழமைவாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல கலவரங்கள், ஏராளமான அப்பாவி மனித உயிர்கள் என பல கோர சம்பவங்கள் கடந்த 60 ஆண்டுகளில் நம் நாட்டில் நடைபெற்றுள்ளன.

கடந்த 1996-ம் ஆண்டு இறுதிக் கட்ட விசாரணை தொடங்கி நடந்தது. கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி அனைத்து விசாரணைகளும் நிறைவுபெற்றன. தீர்ப்பை எப்போது அறிவிப்பது என்பது குறித்து கடந்த 2 மாதமாக ஆலோசிக்கப்பட்டு வந்தது. பல்வேறு இடையூறுகளுக்குப் பிறகு இன்று இந்த வழக்கில் வர இருக்கும் தீர்ப்பை வழங்கும் 3 நீதிபதிகள் இந்த பிரச்சனையில் எத்தகைய தீர்வு காண்பார்கள்? என்ற எதிர்பார்ப்பே எல்லோரது மனதிலும் எதிரொலித்தபடி உள்ளது.

3 நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி எஸ்.யூ.சிபகத்துல்லாஹ் கான், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். அலிகாரில் சிவில் வக்கீலாக பணியாற்றி நீதிபதியான இவர், மிக மிக பொறுமைசாலி. ஆனால் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதில் உறுதியாக இருப்பவர் என்று பெயர் எடுத்தவர்.

நீதிபதி சுதீர் அகர்வால் மீரட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். வரி தொடர்பான வழக்குகளில் சிறப்பு பெற்றவர். உத்தரப்பிரதேச மாநில கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றி அனுபவம் பெற்றவர்.

நீதிபதி டி.வி.சர்மா நாளை (அக்டோபர்-1) ஓய்வுபெற உள்ளார். உத்தரப்பிரதேச பாராளுமன்ற விவகார முதன்மை செயலாளராக பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு இவர் அலகாபாத் ஹைகோர்ட்டின் நிரந்தர நீதிபதிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு போய் சேரும் என்பது இவர்கள் 3 பேரின் கையில்தான் உள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்க உள்ளதால் 3 நீதிபதிகளுக்கும் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களோடு 200 அதிரடிப்படை வீரர்களும் கோர்ட்டு வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்படும்போது கோர்ட்டு வளாகம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடங்கள் மீது போலீசார் ஹெலிகாப்டரில் பறந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். தீர்ப்பை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலத்தின் அனைத்து வழிகளும் மூடி “சீல்” வைக் கப்பட்டுள்ளது.தீர்ப்பு சமயத்தில் சட்டம்- ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக லக்னோவில் பெரிய போலீஸ் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. லக்னோ நகரம் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் ஏற்பட்டால் அது பற்றி பொதுமக்கள் தகவல் கொடுத்து உதவ ஹெல்ப் -லைன்களை போலீசார் ஏற்படுத்தியுள்ளனர். லக்னோ நகரில் உள்ள மதுக்கடைகள், பட்டாசு விற்பனை கடைகள் மூடப்பட்டுள்ளன.

லக்னோ கோர்ட்டு வளாகத்தின் அருகில் மாநில நெடுஞ்சாலை உள்ளது. அந்த சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு வழங்கப்பட இருக்கும் அலகாபாத் ஐகோர்ட்டு லக்னோ கிளை வளாகத்தின் 21-வது எண் கோர்ட்டு பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கோர்ட்டு வளாகத்துக்குள் இன்று (வியாழன்) காலை முதலே யாரும் அனுமதிக்கப்படவில்லை. தீர்ப்பை கேட்க பொதுமக்கள் யாரும் கூட்டமாக திரண்டு வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பிற்பகல் 3.30 மணிக்கு கோர்ட்டுக்குள் செல்ல அயோத்தி வழக்கின் வாதி, பிரதிவாதி, மற்றும் வக்கீல்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள், கோர்ட்டு வளாகத்துக்குள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.


செய்தி சேகரிக்க உலகின் பல பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான நிருபர்கள் லக்னோவில் குவிந்துள்ளனர். அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனி இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. 3 நீதிபதிகளும் தீர்ப்பு கூறி முடித்ததும், அந்த விபரங்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள செய்தியாளர்களுக்கு கொடுக்கப்படும். அதன் பிறகே அயோத்தி தீர்ப்பு வெளி உலகுக்குத் தெரிய வரும்.


இன்று பிற்பகல் தீர்ப்பு வாசிக்கப்படும்போது கோர்ட்டு வளாகத்துக்குள் யாரும் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். அது போல தீர்ப்பு முழுமையாக வெளியாகும் வரை யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். தேவையற்ற வதந்தி கிளம்புவதைத் தடுக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோர்ட்டு வளாகத்தில் செல்போன்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு சமயத்தில் பதற்றம் ஏற்படாமல் இருக்க அலகாபாத், லக்னோ, அயோத்தியில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். வெடிகுண்டு நிபுணர்களும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ஊரடங்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. (பத்திரிக்கைச் செய்திகள்)

சர்ச்சைக்குரிய பகுதியில் பல்வேறு விஷயங்களில் இழுபறி நிலவுகிறது. குறிப்பாக 7 விஷயங்களில் இரு தரப்பினரும் தீர்ப்பை எதிர்பார்க்கிறார்கள். அந்த 7 விஷயங்கள் :-

1. சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தாரா?
2. சர்ச்சைக்குரிய இடத்தில் மசூதி இருந்ததா?
3. சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள கட்டிடத்தை யார், எப்போது கட்டினார்கள்?
4. சர்ச்சைக்குரிய இடத்தில் இந்து கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதா?
5. சர்ச்சைக்குரிய பகுதியில் 1949-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந்தேதி இரவு ராமர் சிலையை அத்து மீறி நுழைந்து வைத்து பிரதிஷ்டை செய்தார்களா?
6. சர்ச்சைக்குரிய இடத்தை சொந்தம் கொண்டாடுவதற்கு கால வரம்பு ஏதேனும் உள்ளதா?
7. சர்ச்சைக்குரிய இடத்தின் உள்பகுதி, வெளிப்பகுதி நிலை என்னவாக இருக்க வேண்டும்?

இந்த 7 கேள்விகளுக்கும் இன்று பிற்பகல் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த விடை ஒரு நிரந்தர தீர்வாக இருக்கலாம் என்று இரு தரப்பினருமே ஆவலுடன் உள்ளனர்.

இந்த நிலையில்....,

முழுக்க முழுக்க நமக்கு சொந்தமான, நாம் வசிக்கும் நம் வீடு அடுத்த வீட்டுக்காரனால் இடிக்கப்பட்டு அது நமக்கா, இடித்தவனுக்கா என்ற தீர்ப்புக்காக இரண்டு தலைமுறைகள் செல்லுமளவு பல வருடங்கள் கோர்ட்டில் விசாரணையை இழுத்தடித்து, இடித்தவனுக்குரிய தண்டனையும் கொடுக்கப்படாமல், அந்த தீர்ப்பு தனக்கு பாதகமாக அமையும் பட்சத்தில், எந்த ஒரு மனிதனும் ஆதங்கப்படவே செய்வான். ஆனால் அதுபோன்ற அநியாயமாக பாதிக்கப்படும் சூழல்களில் தனிப்பட்ட ஒரு மனிதனாக இருந்தாலும் சரி, ஒரு சமுதாயமாக இருந்தாலும் சரி, அந்த சூழலில் நாம் எவ்வாறு இருக்கவேண்டும்? நம்முடைய வீர தீரத்தைக் காட்டுகிறோம் என்று ஆவேசப்படுவதா? அமைதிக் காத்து யாருக்கும் தீங்கு விளைவிக்காத‌ அடுத்த கட்ட முயற்சிகளை மேற்கொள்வதா? என்றால், அமைதியும் பொறுமையுமே எந்த நிலையிலும் நம்மை மனிதத் தன்மையிலிருந்து பிறழாமல் காக்கும் என்பதைதான் நாம் அனைவரும் மனதில் உறுதியாக பதிய வைத்துக் கொள்ளவேண்டும்.

தீர்ப்பு எதுவானாலும் அதை நாம் எவ்வாறு அணுகுவது? 

தீர்ப்பு என்றாலே ஒரு வழக்கின் நியாயங்கள் எந்த பக்கம் உள்ளனவோ அந்த ஏதாவது ஒரு பக்கம்தான் சொல்லமுடியும். ஆக, பாபர் மசூதி தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக இருந்தால் இந்துக்களுக்கும், இந்துக்களுக்கு சாதகமாக இருந்தால் இஸ்லாமியர்களுக்கும் மன வேதனையும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. இந்த தீர்ப்பு இன்னும் 50 வருடங்களுக்கு பிறகு வெளியானாலும் இந்துக்கள்-இஸ்லாமியர்கள் என்ற‌ இந்திய பாரம்பரியமிக்க இனப் பிரிவினைகளுக்கு பாதகமான சூழலே நிழவும். நம் நாட்டு இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்து பிரிவினருக்கும் அல்லாஹ்தஆலா மன அமைதியையும் பொறுமையையும் கொடுப்பானாக!                                                                                                                    

நம் இந்திய நாட்டு அனைத்து மத, மார்க்க சகோதர, சகோதரிகளே! தீர்ப்பு எப்படி அமைந்தாலும் அனைத்து தரப்பினரும் அமைதி காக்கவேண்டும். இந்திய நாட்டு அரசியலமைப்புச் சட்டப்படி, உயர் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் இறுதியானவை அல்ல. ஒரு வழக்கில் உயர் நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லமுடியும். ஆகவே, நாளை வழங்கப்படும் தீர்ப்பு எத்தகையதாக இருந்தாலும் இரு தரப்பாரும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமை காக்க வேண்டும்.

வன்முறை நெருப்பைத் தூண்டிவிட்டு தங்கள் ஆதாயங்களுக்காக குளிர்காய நினைக்கும் குறுமதியாளர்களின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகிவிடக் கூடாது. அயோத்'தீ'யை எரிய விடாமல் அனைவரையும் மதித்து, அரவணைத்து செல்லும் பொறுப்பை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனது கடமையென செய்ய வேண்டும். வதந்திகளையோ, வன்முறை செய்திகளையோ பரப்பாமல் இருக்க வேண்டும். பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். நாளை மற்றொரு நாளாக இருக்க வேண்டுமே தவிர, வரலாற்றில் கறைபடியும் வகையில் மற்றொரு கறுப்பு நாளாக மாறி விடாமல் இருக்க இந்திய நாட்டின் இறையாண்மையைப் பேணி பாதுகாக்கும் வகையில் அனைவரும் அமைதி காப்போம்!

இஸ்லாமிய பெருமக்களுக்காக தனிப்பட்ட முறையில்:

1) தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக இருந்தால்

பாபர் மசூதிக்கு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கவிருக்கும் நீதிமான்கள் பாபர் மசூதியை இடித்தது முறையல்ல என்று தீர்ப்பளித்து அந்த இடம் இஸ்லாமியர்களுக்கு உரியது என்று தீர்ப்பளித்தால், நாம் நமக்கு உரிய நியாயமான தீர்ப்பை இந்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுள்ளோம் என்று எண்ணி, அல்ஹம்துலில்லாஹ் (புகழ் அனைத்தும் இறைவனுக்கே) என்று கூறி அமைதி காக்க வேண்டும். ஆரவாரப்படக்கூடாது. இதை மீறி தம்பட்டம் அடித்து ஆரவாரப்பட்டால் நமக்கு எதிர்த் தரப்பினருக்கு மனவேதனை ஏற்படும். மீண்டும் அங்கிருந்து ஒரு பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும். எனவே தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தால் இறைவனைப் புகழ்ந்துவிட்டு அமைதியாக இருக்கவேண்டும்.

2) தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக இருந்தால்

பாபர் மசூதிக்கு தீர்ப்பு வழங்கும்போது அது இந்துக்களுக்கு சாதகமாக அமைந்து நமக்கு எதிராக அமைந்துவிட்டால் நாம் ஆத்திரப்படக்கூடாது. ஏனெனில் இஸ்லாமியர்கள் என்றாலே அமைதியை விரும்புபவர்கள் என்றுதான் பொருள். எனவே இந்துக்களுக்கு தீர்ப்பு சாதகமாக அமையும் பட்சத்தில் நாம் நம்மை திடப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தக்க‌ட்ட மேல் முறையீடுகளுக்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமே தவிர, மற்ற சமுதாயத்திற்கு எந்த சிறு தீங்கும் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுவிடக்கூடாது!

சிந்திக்கப் படைக்கப்பட்ட சமுதாயமே! இதோ உங்கள் சிந்தனைக்கு சில வசனங்கள்:

‘பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்’ (அல்குர்ஆன் 2:153)


‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். (எதிரிகளை விஞ்சும் வகையில்) பொறுமையில் நிலைத்திருங்கள். (சத்தியத்திற்காகத் தொண்டு செய்திட) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருங்கள்” (அல்குர்ஆன் 3:200)


‘யார் பொறுமையை மேற்கொள்கிறார்களோ மேலும் மன்னிக்கவும் செய்கிறார்களோ அவர்களின் அந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயல்களைச் சேர்ந்ததாகும்’ (அல்குர்ஆன் 42:43)

Tuesday, 28 September 2010

"முள்ளங்கிக் கீரை" சாப்பிடுங்க‌!

              "முள்ளங்கிக் கீரை"

முள்ளங்கி குத்துச்செடி வகையைச் சேர்ந்த கிழங்காகும். சிலர் முள்ளங்கி எனப்படுவது முள்ளங்கிச் செடியின் வேர்தான், அது ஒரு கிழங்கல்ல என்கிறார்கள். அதைப்பற்றி ஆராய்வதைவிட‌ அதிலிருந்து கிடைக்கும் நன்மைகளைப் பற்றி முதலில் தெரிந்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இந்த முள்ளங்கி மட்டுமல்லாமல், அதன் இலை, தண்டுகள், விதை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்ட‌வை. இப்போது முள்ளங்கிக் கீரையின் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.

முள்ளங்கிக் கிழங்கின் மேல் பக்கம் தழைத்து வளர்ந்திருக்கும் இலைகளைதான் முள்ளங்கிக் கீரை என்கிறோம். நம்மில் பெரும்பாலானோர் முள்ளங்கியை மட்டும் பயன்படுத்திவிட்டு, அதன் கீரையை அலட்சியம் செய்துவிடுகிறோம்.  ஆனால், முள்ளங்கிக் கிழங்கைவிட அதன் கீரையில்தான் ஏராளமான‌ மருத்துவக் குணங்கள் உள்ளன‌!

அதன் சத்துக்கள்:-

-   கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் A,B,C முதலியவையும் இதில் அதிகம் உள்ளன.

-   இதன் கிழங்குப் பகுதியில் இருப்பதைவிட‌ ஆறு மடங்கு 'வைட்டமின் C' இதன் கீரைகளில் இருக்கிறது.

-  100 கிராம் கீரையில் சுமார் 28 கலோரிகள் கிடைக்கிறது.

-  இதில் 90 சதவீதம் மாவுச் சத்தும், 0.7 சதவீதம் நார்ச்சத்தும் உள்ளன.

-   புரோட்டீன், சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்புச் சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன.

முள்ளங்கிக் கீரையின் பலன்களும், பயன்படுத்தும் முறைகளும்:

பொதுவாக முள்ளங்கிக் கீரையை மற்ற கீரைகளைப் போலவே சமைத்து சாப்பிடலாம். ஆனால் எந்தக் கீரையானாலும் அதன் பசுமை நிறம் மாறாத அளவுக்கு மட்டுமே வேகவைக்கவேண்டும். முள்ளங்கிக் கீரையை சமைக்காமல் மெல்லிய துண்டுகளாக்கி பச்சையாக சாலட் போலவும் சாப்பிடலாம்.

‍-  முள்ளங்கிக் கிழங்கைப் போன்றே அதன் கீரையும் இரைப்பைக் கோளாறுகள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலக்கடுப்பு, மஞ்சள் காமாலை போன்றவைகளையும் குணப்படுத்துகின்றன.

- நீரிழிவு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக உள்ளது.

-  மலச்சிக்கலைக் குணப்படுத்தும் ஆற்றல் இந்தக் கீரைக்கு உண்டு.

-  கல்லீரலில் உண்டாகும் பலவிதமான‌ கோளாறுகளை இக்கீரை குணப்படுத்த வல்லது! அதுபோல் இருதயத்திற்கும் பலம் சேர்க்கக்கூடியதாக உள்ளதால் இதயம் பாதிக்கப்பட்டவர்கள், இதயப் படபடப்பு, இதய பலவீனம் உடையவர்கள் வாரம் ஓரிரு முறையாவது இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

‍‍-   முள்ளங்கிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும். வைட்டமின் பற்றாக்குறைகளும் நீங்கும்.

-   முள்ள‌ங்கிக் கீரையின் சாற்றை 5 அல்லது 6 டீஸ்பூன் அளவு எடுத்து, 3 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும். சிறுநீர்ப்பை வீக்கம் இருந்தாலும் குணமாகும். சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள் கீரை சாப்பிட விரும்பினால், முள்ளங்கிக் கீரையை மட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

-  சிறுநீர் சரியாக பிரியாமல் இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் பார்லியை முள்ளங்கிக் கீரையுடன் சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு நீங்கி சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

- சிறுநீர் கல்லடைப்பு, கரப்பான் என்ற தோல் வியாதிகளையும் குணமாக்கும்.

-  பசியின்மைக்கு முள்ளங்கிக் கீரையில் சாறெடுத்து, அந்த சாற்றில் ஊற வைத்த மிளகைப் பொடியாக்கி, அதிகாலையில் 1/2 ஸ்பூன் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் ஜீரண சக்தி ஏற்பட்டு நன்றாக பசி உண்டாகும்.  

-  சூட்டினால் உண்டாகும் தொடர் வயிற்றுவலிக்கு வெந்தயம் ஊற வைத்த 1/2 டம்ளர் தண்ணீரில் 1 பிடி முள்ளங்கிக் கீரையை அரைத்துச் சாப்பிட்டால் குணமாகும்.

‍‍   (a ) கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டவர்கள், (b) விந்து உற்பத்தியின்மை உடையவர்கள், (c) நீரிழிவு நோய் உள்ளவர்கள் முள்ளங்கிக் கீரையைச் சாப்பிடுவதால் நோயின் தாக்கம் குறைவதை நன்கு உணரமுடியும்.

-    (a) கல்லீரல் நோய்களுக்கு முள்ளங்கிக் கீரை சாற்றுடன் சிறிது வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும்.

‍-    (b) முள்ளங்கீரைச் சாறில் நெருஞ்சில் முள்ளை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் விந்து உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  
‍  
-    (c) முள்ளங்கிக் கீரை சாறில் வெந்தயத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும்.

-  முள்ளங்கிக் கீரையின் சாற்றை 100 மில்லியளவு எடுத்து மெல்லிய, சுத்தமான‌ வெள்ளைத் துணியில் வடிகட்டி, அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அருந்தினால் மஞ்சள் காமாலை உடனே கட்டுப்படும். தினமும் அரைக்கிலோ முள்ளங்கிக் கீரையைச் சேகரித்து இந்த முறையில் அருந்தி வந்தால் வயதானவர்களுக்கும் கூட‌ மிக விரைவில் மஞ்சள் காமாலை நோயிலிருந்து குணம் கிடைக்கும்.

-  ஒரு கைப்பிடி அளவு முள்ளங்கிக் கீரையில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வேகவைத்து, தொடர்ந்து மூன்று நாட்கள் காலை, மாலை உண்டு வர நீர் அடைப்பு தொல்லை தீரும்.

-  தொடர்ந்து மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், முள்ளங்கிக் கீரையின் சாற்றை 1 ஸ்பூன் எடுத்து 3 வேளைகளும் சாப்பிட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும்.

-  சுறுசுறுப்பின்றி படிப்பிலும் அன்றாட செயல்பாடுகளிலும் மந்தமாக உள்ள குழந்தைகளுக்கு இதை ஏதாவது ஒரு வகையில் செய்துக் கொடுத்தால் மந்தகுணம் நீங்கும். குழந்தைகள் உடலுறுதியுடன் வளரவும் முள்ளங்கிக் கிழங்குடன் முள்ளங்கிக் கீரையையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொடுக்கலாம். அடிக்கடி சளித் தொல்லை இருந்தால் கொடுக்கவேண்டாம். ஏனெனில் இந்தக் கீரை குளிர்ச்சி நிறைந்ததாகும்.

-  சிகப்பு முள்ளங்கியின் கீரையை நிழலில் காயவைத்து நன்கு ஈரமில்லாமல் காய்ந்தவுடன் அதை ஒரு மண் சட்டில் போட்டு எரித்து சாம்பலாக்கி, ஈரமில்லாத, சுத்தமான ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

தேவைப்படும்போது அந்த சாம்பலில் சிறிது எடுத்து விளக்கெண்ணெய் சேர்த்து குழைத்து, ஒரு வெள்ளைத் துணியில் தொட்டு பாலுண்ணி உள்ள இடங்களில் போட்டு வந்தால் சில தினங்களில் குணமாகும்.

-   கற்களால் உண்டாகும் நீர் அடைப்பு மற்றும் வெள்ளையால் வரும் நீர் அடைப்பிற்கு முள்ளங்கிக் கீரையின் கொழுந்து இலைகளாக 2 கைப்பிடியளவு எடுத்து 1 சிட்டிகை கல் உப்பு சேர்த்து அரைத்து நீரில் கலக்கி தினமும் 2 முறை குடித்து வந்தால் குணம் கிடைக்கும். நீர்க்கடுப்பிற்கும் இதுப்போல் செய்தால் குணமாகும்.

முள்ளங்கிக் கீரையை யாரெல்லாம் தவிர்த்துக்கொள்ளவேண்டும்?

-  வாத நோய்க்காரர்கள் முள்ளங்கிக் கீரையைச் சாப்பிடக் கூடாது. ஆனால், முள்ளங்கிக் கிழங்கை பகலில் மட்டும் சாப்பிடலாம்.

‍-  கப உடம்புக்காரர்கள் என்று சொல்லக்கூடிய சளித் தொல்லைகள் உடையவர்கள், ஆஸ்த்துமா நோயாளிகள் அதிகமாக‌ சாப்பிடவேண்டாம்.

-  கேஸ் ப்ராப்ளம் உள்ளவர்கள் பூண்டு சேர்க்காமல் சமைக்கப்பட்ட முள்ளங்கிக் கீரையோ, சமைக்காமல் சாலட் போன்று உண்ணுவதையோ தவிர்ந்துக்கொள்ளவேண்டும்.

-  பொதுவாகவே எந்தக் கீரைகளும் இரவில் சாப்பிடக்கூடாது என்றாலும் முள்ளங்கிக் கீரையை கண்டிப்பாக இரவில் சாப்பிடக்கூடாது. (முள்ளங்கியும் அதுபோலவே இரவில் சாப்பிட்டால் தீங்குதான் விளையும்.)

இதுவரை முள்ளங்கிக் கீரை எவ்வாறெல்லாம் நமக்கு பயன்படுகிறது என்பதையும் அவற்றை மருந்தாக பயன்படுத்துவது எவ்வாறு என்பதையும் பார்த்தோம். அதை பலவிதமாக சமைத்து உண்டும் அதன் பயன்க‌ளை அடையலாம். அதன் ஒரு செய்முறையைக் காண இங்கே க்ளிக் பண்ணவும்.

Monday, 27 September 2010

அமைதியை இழந்து தவிக்கும் அமெரிக்க வீரர்கள்!

‘அமைதியை நிலை நாட்ட ஒரு போர்’ என்ற பெயரில் பொய்யான காரணத்தை அவ்வப்போது உலக அரங்கிற்கு முன் அரங்கேற்றிப் பொருளாதாரத்திலும், ஆயுத பலத்திலும் குன்றிய ஏழை நாடுகளைத் தேர்ந்தெடுத்து அதன் மீது படையெடுப்பதைத் தன் இலட்சியமாகக் கொண்டு இயங்கி வரும் அமெரிக்க ராணுவத்துறை இப்போது அமைதியின்றித் தவிக்கிறது.


ஆம்! ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பிய அமெரிக்கப் படைவீரர்களில் மூன்று இலட்சம் பேருக்கு ‘உணர்வதிர்ச்சி’ (post-traumatic stress disorder) எனும் நோயினால் பாதிக்கப்பட்டு கடுமையாக மனநலம் குன்றியிருப்பதாக வாஷிங்டனில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன. போரினால் தொடர்ச்சியாக ஈடுபடும்போது படைவீரர்களுக்கு ஏற்படும் நோய்க்கு Post-traumatic stress disorder என்று பெயர். இது PTSD என்று சுருக்கமாக அழைக்கப்படும். 


அதிகப்படியான மனித உயிர்களைக் கொலை செய்வதும், துடிதுடித்து இறப்பவர்களையும் அதீத (ம)ரணங்களை அருகிலிருந்து பார்ப்பதனாலும், இந்நோய் ஏற்படுகிறது. ஸர்ச் அண்டு டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (RAND corporation) சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட 320,000 அமெரிக்கப் படைவீரர்களுக்கு இத்தகைய மனநோய் ஏற்பட்டுக் கடும் அவதிக்கு உள்ளாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


சிகிச்சை பெற்றுவரும் வீரர்களின் எண்ணிக்கையை இதுநாள் வரை ரகசியமாக வைத்திருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறை உள்பட உலகம் முழுவதும் இந்த அறிக்கை பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கப் படையில் பணிபுரிவோர், விரக்தியில் வேலையை விட்டு ஒதுங்கியோர், மனநோய்க்கு சிகிச்சை பெறுவோரில் சிலர் என்று கிட்டத்தட்ட இரண்டாயிரம் அமெரிக்கப் படைவீரர்களின் வாழ்க்கையினைப் பகுத்தாய்ந்து புள்ளிவிபரங்களுடன் துல்லியமாகத் 500 பக்கங்கள் அடங்கிய RAND நிறுவனத்தின் இவ்வறிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வீரர்களைப் பாதித்து வரும் PTSD எனப்படும் இந்நோயின் அறிகுறிகள்:
- கொடூர சம்பவங்கள் மற்றும் அவற்றின் நினைவலைகள் கண்ணில் தோன்றி மறைதல், சிறு சப்தமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துதல் (உதாரணம்: போக்குவரத்து சத்தம், செய்திகளைத் தொலைக்காட்சியில் பார்ப்பது போன்றவற்றின் மூலம்)

- தனது போர்க்காலங்களில் நடந்த நிகழ்வை திரும்ப நினைவு படுத்தும் எவ்வித காரணிகளில் இருந்தும் தூர விலகி ஓடுதல்


- குடும்பம், சொந்த பந்தங்களுடன் உறவுகளை முறித்துக் கொள்ளல், விரக்தியான மனோநிலை, எளிதில் கோபப்படுதல், தூக்கமின்மையால் அவதியுறுதல், அதிர்ச்சியால் துடித்தல் …….. .

இது தவிர மூளையின் உட்புறம் ஏற்பட்டுள்ள நோயால் விளையும் உடல்நலக் குறைகள்:
— அடிக்கடி வரும் தலைவலி
— குழப்பமான மனநிலை
— தலைசுற்றல், தலை கனத்திருத்தல்
— விசித்திர மனநிலை
— நினைவில் எதுவும் நிற்காமல் இருப்பது
— குமட்டல் வாந்தி
— பார்வைக்குறைபாடு மற்றும் காது கேளாமை

 

பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்ட வீரர்களுக்கு சரியான முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாமல் இருக்கும் திடுக்கிடும் உண்மையும் இவ்வறிக்கை மூலம் வெளிவந்துள்ளது. இவர்களுக்கு ஏற்பட்டுள்ள மூளை நோய்க்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படா விட்டால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது” என்று RAND இன் தலைமை ஆய்வாளர் டெர்ரி டேனிலியன் குறிப்பிட்டுள்ளார்.

தாம் மனநலம் குன்றியுள்ள விவகாரம் வெளியே வந்தால் பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் பெருமளவு அமெரிக்க வீரர்கள் மருத்துவர்களிடம் செல்ல வெட்கப்பட்டு உள்ளுக்குள் அவதியுறும் விவகாரமும் வெளியாகியுள்ளது. மனநலம் குன்றிய நிலையிலேயே அவர்கள் பணியினைத் தொடர்வது அமெரிக்க படைக்கு ஆபத்தானது என்ற எச்சரிக்கையும் கூடவே விடுக்கப்பட்டுள்ளது.


                                                   [Tim.jpg]
'டிம் நோ' என்ற பெயருள்ள இப்படைவீரர் (காண்க: மேலேயுள்ள புகைப்படம்) மன அழுத்தம் காரணமாக மூளையில் ஏற்பட்டுள்ள நோய்க்கு அமெரிக்க மருத்துவர்கள் மூலம் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சை முடிந்துவிட்டாலும் வாழ்நாள் முழுக்க பிளாஸ்டிக்கிலான ஹெல்மெட்டை அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார். அமெரிக்கப் படையிலிருந்து ஓய்வு பெறும் வீரர்களின் பிற்கால வாழ்க்கை நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள 'Veterans Affairs' ஒப்புக்கொண்டுள்ள அறிக்கையில் 120,000 படைவீரர்கள் கொண்ட ஒரு குழுவில் 60,000 பேருக்கு இத்தகைய PTSD மனநோய் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


அமெரிக்க வீரர்களின் இந்த அவல நிலைக்குக் காரணம் அமெரிக்க ஆட்சியாளர்கள்தான். ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். தங்கள் நாட்டைக் காப்பதற்காக அவர்கள் போரிட்டிருந்தார்கள் என்றால் அவர்களை உயிர்த் தியாகிகள் என்று போற்றலாம். தங்கள் நாட்டுக்காக இராணுவ வீரர்கள் இழக்கும் ஒவ்வொரு நொடியும்கூட‌ தியாகம்தான்! ஆனால், எந்தக் காரணத்தைச் சொல்லி அமெரிக்கா இந்த போரைத் துவக்கியதோ அவையெல்லாம் பொய் என்று நிரூபணம் ஆகிவிட்டன. இது தியாகம் அல்ல! ஒருபுறம் உலகுக்கு உதவுவது போலவும் மற்றொரு புறம் ஏதாவது ஒரு பொய்க்காரணம் சொல்லிக்கொண்டு, தான் குறிவைக்கும் நாட்டின் அப்பாவி மக்களை அநியாயமாக கொன்று குவிக்கும் இரட்டை வேஷம் போடும் உலக மகா கொடுங்கோலாட்சி அமெரிக்கா, தான் இழப்பதற்கு இதுமட்டுமல்ல, இறைவன் புறத்திலிருந்து இன்னும் நிறைய இருக்கிறது இன்ஷா அல்லாஹ்!


அமெரிக்காவில் இருந்து வெளியாகியுள்ள இவ்வறிக்கை மூலம் அமைதியை உலகில் நிலைநாட்ட பிறந்தவர்கள் என்ற மமதையுடன் வலம் வந்தவர்கள், இன்று அமைதியிழந்து அவதிக்கு ஆளாகியுள்ளதைக் கண்கூடாகக் காண முடிகிறது. இத்தகைய “அமைதியை நிலை நாட்டும்(?) போர்” அடுத்தடுத்த நாடுகளில் தொடர்ந்து நடத்தி பிணக்குவியல்களை அதிகரித்துக் கொண்டிருக்கும் திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டே உள்ளன.
                                   
இவ்வளவுக்கும் காரணமாகச் சொல்லப்பட்ட அல்காயிதா தொடர்பு, அணுஆயுதம் தயாரிப்பு போன்ற பொய்யான காரணங்களும் முகத்திரை கிழிந்து தொங்கும் இச்சூழலில், இதுநாள் வரை இரட்டை வேடம் காட்டிய ஊடகங்கள் இதனை உணர்ந்து, சர்வதேச அளவில் மக்களுடன் ஒன்று சேர்ந்து இனிவரும் காலங்களிலாவது மனித உயிர் மதிப்பின்றி சருகாய் கருகுவதைத் தடுக்க வழிவகை செய்ய முன் வரவேண்டும்.


எங்கெல்லாம் அமெரிக்க வீரர்கள் அமைதியை நிலைநாட்டவும் பயங்க‌ரவாதத்தை ஒடுக்கவும் என்று சொல்லி காலடியெடுத்து வைக்கிறார்களோ அங்கெல்லாம் மனிதத் தன்மை என்பதே இல்லாத மனிதநேயமற்ற அவர்களின் மிருக வெறியாட்டத்தைதான் காண்கிறோம். ஆனால், அதுபோன்ற நாடுகளில் நடக்கும் செய்திகளை இந்திய ஊடகங்கள் கவரேஜ் செய்யும் விதமும் அந்த நாடுகளில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அவலங்களும் நேர்மாறானவை என்பதை எந்த ஒரு மனிதாபிமானியும் சரியாக உணர்ந்துக் கொள்ளமுடியும். மதம், மொழி, இனம், நிறம் அனைத்தையும் கடந்து மனிதாபிமானத்தை மட்டும் கொண்டு இங்கு நடக்கும் அநியாயத்தை பார்த்தால் நிச்சயம் ஒவ்வொரு மனிதாபிமானியின் இரத்தமும் கொதித்து எழும் என்பதில் சந்தேகமில்லை!
அப்பாவி முஸ்லிம்களின் அமைதியை கெடுப்பவர்களுக்கு வல்லோனின் தன்டணையோ இது..…?! அன்று கஃபாவை இடிக்காமல் விடமாட்டேன் என சூளுரைத்து நின்ற அப்ரஹாவின் யானைப்படைக்கு எதிராக நிராயுதபாணிகளாக நின்ற குறைஷிகளுக்கு அபாபீல் பறவைகளை அனுப்பிய இறைவன், இன்று இஸ்லாத்தின் எதிரிகளிடம் நிராயுதபாணிகளாக நிற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கு உதவ இதுவும், இன்னும் இதுபோன்ற எத்தனையோ சோதனைகளையும் அவர்களுக்கு கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றான். அல்லாஹ் மிகப் பெரியவன்!  ‘அல்லாஹ் சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் மிகப்பெரும் சூழ்ச்சியாளன்’. இனியாவது பாடம் பெற்றுக்கொள்ளுமா மேற்குலகம்?


source:myalagankulam

Friday, 24 September 2010

பஃப் பேஸ்ட்ரி தயாரிக்கும் முறைபஃப் பேஸ்ட்ரி பலவிதமான சமையல் செய்முறைகளுக்கு பயன்படக்கூடியது. இது தயாரிக்கும் முறையை அறுசுவை.காமில் விளக்கப் படங்களுடன் கொடுத்துள்ளேன். இதைக் கொண்டு செய்யக்கூடியவற்றை பின்னர் ஒவ்வொன்றாக‌ கொடுக்கப்படும்.

இதன் செய்முறையை இங்கே க்ளிக் செய்து பார்த்துவிட்டு, உங்கள் கருத்துக்களை இங்கு வந்து சொல்லுங்கள்! (முடிந்தால் அங்கேயும் உங்கள் கருத்துக்களை பதிந்துவிட்டு வாருங்கள்.)

Wednesday, 22 September 2010

மின்னல் எவ்வாறு உற்பத்தி ஆகிறது?விஞ்ஞானம் இன்று கண்டுபிடித்திருப்பதை அன்றே உரைத்த குர்ஆன் !!


அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது. (அல்குர்ஆன் 24:43)

இந்த வசனத்தில் மின்னலைப் பற்றிக் குறிப்பிடும் போது, அதன் மின்னல் என்று மின்னலை ஏதோ ஒன்றுடன் இணைத்து அல்லாஹ் கூறுகின்றான். எதன் மின்னல்? என்ற கேள்விக்கு நாம் விடையைத் தேடினால் இந்த வசனத்திலேயே இதற்கு முன்பாக ஆலங்கட்டியைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுவதைப் பார்க்க முடிகின்றது.

அது சரி! ஆலங்கட்டிக்கும் மின்னலுக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி இப்போது எழுகின்றது. எனவே இந்த மின்னலைப் பற்றி அறிவியல் உலகம் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.

ஒன்றாகத் திரண்டு நிற்கும் மேக மலையின் மேற்பகுதியில் உள்ள ஆலங்கட்டிகள், அதிகம் குளிர்ந்து போன நீர்ப்பகுதிகள் மற்றும் பனித்துகளின் மேல் விழும் போது மேகங்கள் மின் காந்தப் புலன்களைப் பெற்று விடுகின்றன. இந்த நேரத்தில் குளிர்ந்த நீர்பபகுதிகள் மற்றும் பனித்துகள்களிலிருந்து எலக்ட்ரான்கள் கிளம்பி சூடான ஆலங்கட்டிகளை நோக்கித் தாவுகின்றன. அதனால் ஆலங்கட்டி எதிர் மின்னூட்டத்தையும் குளிர்ந்த நீர்ப்பகுதிகள் மற்றும் பனித்துகள்கள் நேர் மின்னூட்டத்தையும் பெறுகின்றன.


இதன் விளைவாக நேர் மின்னூட்டம் பெற்ற சின்னஞ்சிறு பனித்துகள்கள் உடைந்து சிதறுகின்றன. சிதறிய சின்னஞ்சிறு சிதறல்கள் மேகத்தின் மேற்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகின்ற போது அங்கு ஏற்கனவே எதிர் மின்னூட்டத்தைப் பெற்றிருக்கின்ற ஆலங்கட்டிகள் மேகத்தின் அடிப்பாகத்தில் விழுகின்றன.


கீழே விழுந்த ஆலங்கட்டிகளின் எதிர் மின்னூட்டங்கள் தான் மின்னல் வெட்டுவதன் மூலம் வெளியேற்றப் படுகின்றன. இந்த மின் வெட்டு தன்னைச் சுற்றிலும் உள்ள காற்றை 30,0000 C அளவுக்கு வெப்பப் படுத்துகின்றது. இது சூரியனின் மேற்பரப்பிலுள்ள வெப்பத்தை விட 5 மடங்கு அதிகமாகும். (சூரியனின் மேற்பரப்பு வெப்பம் 60000 C) இந்த அளவுக்கு வெளியாகும் வெப்பம் காற்றை வெகு வேகமாக விரிவுபடுத்துகின்றது. இதில் உருவாவது தான் இடி முழக்கம்!


இங்கு நாம் கவனிக்க வேண்டிய அம்சம், அதன் மின்னல் என்று கூறியதன் மூலம் மின்னலுக்குக் காரணம் ஆலங்கட்டி தான் என்று அல்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன் சொன்ன உண்மையை இன்று வானிலை ஆய்வாளர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இதுவும் அல்குர்ஆன் தூய நாயனான அல்லாஹ்வின் வேதம் என்பதற்கு ஓர் அற்புதமான அறிவியல் சான்றாகும்.


விண்ணகத்தில் வெப்பத்தைப் பிரசவித்து வெளிவரும் இந்த மின்னல் மண்ணகத்தில் என்ன சாதித்துக் கொண்டிருக்கின்றது? இதைப் பற்றியும் அல்லாஹ் திருக்குர்ஆனில் நாம் வியக்கும் வண்ணம் கூறுகின்றான்.


அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலை உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான். இடியும் அவனைப் புகழ்ந்து போற்றுகிறது. அவனைப் பற்றிய அச்சத்தினால் வானவர்களும் (புகழ்ந்து போற்றுகின்றனர்). இடி முழக்கங்களையும் அவனே அனுப்புகிறான். தான் நாடியோரை அவற்றின் மூலம் தண்டிக்கிறான். அவர்களோ அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றனர். அவன் வலிமை மிக்கவன். (அல்குர்ஆன் 13:12,13)


இவ்விரண்டு வசனங்களும் மின்னல், இடியைப் பற்றி விளக்குகின்றன. இடி, மின்னல் எவ்வாறு உருகின்றன என்பதை மேலே நாம் கண்டோம். எல்லாம் வல்ல அல்லாஹ் இவ்விரண்டில் மின்னலைப் பற்றி குறிப்பிடும் போது, அச்சத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலைக் காட்டுகின்றான் என்று கூறுகின்றான்.


மின்னல் பளிச்சென்று வெட்டி மறையும் போது நம்முடைய நாடி நரம்புகளில் அச்ச அலைகள் ஓடிப் பரவுகின்றன. 30,0000 C வெப்பத்தை ஏற்படுத்தும் மின்னலைப் பற்றி அச்சம் தரக் கூடியது என்று அல்குர்ஆன் கூறுவதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் மின்னலில் எதிர்பார்ப்பு, ஆதரவு உள்ளது என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து என்ன கருத்தை அவன் சொல்ல வருகின்றான் என்று எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. மின்னலுக்கு ஏன் எதிர்பார்ப்பு என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்த வேண்டும்? என்ற விளக்கத்தைக் காண நாம் களமிறங்குவோம்.


வளி மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவிகிதமும், ஆக்ஸிஜன் 21 சதவிகிதமும், கார்பன் டை ஆக்ஸைடு 0.033 சதவிகிதமும், ஆர்கான், நியான், ஹீலியம், மீதேன், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் மிகக் குறைந்த அளவிலும் கலந்துள்ளன என்பதை வளி மண்லத்தில் கலந்திருக்கும் வாயுக்கள் என்ற தலைப்பில் முன்னர் கண்டோம்.


ஒரு தடவை மின் வெட்டி மறையும் போது, ஏதோ மின் வெட்டி மறைகின்றது என்று நாம் கண் சிமிட்டி விட்டு அதைக் கண்டு கொள்ளாது விட்டு விடுகின்றோம். ஆனால் ஒரு தடவை மின்னல் வெட்டுகின்ற போது அங்கு ஒரு கல்யாணமே நடந்து முடிகின்றது.


ஆம்! காற்றிலுள்ள 78 சதவிகித நைட்ரஜனும் 21 சதவிகித ஆக்ஸிஜனும் ஒன்றாகக் கலந்து கை கோர்க்கின்றன. இதனால் பிறக்கின்ற குழந்தை தான் நைட்ரேட்டுகள்! நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்ததும் நைட்ரேட் உருவாகின்றது. இந்த நைட்ரேட்டுகள் மழை நீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மாறி மழையாகப் பொழிகின்றது.


வளி மண்டலத்திலுள்ள இந்த நைட்ரஜனை ஏற்கனவே மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் கவர்ந்து நைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன! இந்தப் பணியை மின்னல் வந்து பாய்ந்து வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜன்களை உடைத்து அமிலமாக, சத்தாக, சாறாக மாற்றி மழை நீருடன் ஆறாக ஓடச் செய்கின்றது.


மண்ணுக்குள் கால்சியம், இரும்பு, அலுமினியம் போன்ற கனிமங்கள் இருக்கின்றன. அந்தக் கனிமங்களுடன் இது கலக்கும் போது அவற்றின் நைட்ரேட்டுகள் உருவாகின்றன. கால்சியத்துடன் கலக்கும் போது கால்சியம் நைட்ரேட்டு உருவாகின்றது. இவை தான் மண்ணில் விளைகின்ற தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகின்றன. இவற்றை நேரடியாக மனிதன் சாப்பிடுவதன் மூலமோ அல்லது இவற்றைச் சாப்பிடும் ஆடு, மாடுகளின் இறைச்சியைச் சாப்பிடுவதன் மூலமோ மனிதன் நைட்ரஜனைத் தன் உடலில் சேர்த்துக் கொள்கின்றான்.


மனிதனுடைய உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த நைட்ரஜன் அவன் இறந்தவுடன் மீண்டும் அது மண்ணிலேயே போய் சேர்ந்து விடுகின்றது. மனித உடலில் மட்டுமல்லாது மொத்த உயிரினங்களின் உடலிலும் நைட்ரஜன் கலந்து அந்த உயிரினங்கள் மடிந்ததும் மண்ணில் கலந்து விடுகின்றது. பின்னர் மீண்டும் காற்றிலேயே கலந்து விடுகின்றது. இதற்குப் பெயர் தான் நைட்ரஜன் சுழற்சி என்று வழங்கப் படுகின்றது.


சுப்ஹானல்லாஹ்! அல்லாஹ் மின்னலுக்கு ஏன் எதிர்பார்ப்பு என பெயர் வைத்தான் என்ற உண்மை நமக்கு மின்னல் போல் பளிச்சிடுகின்றதல்லவா? மிகப் பெரிய ஆற்றலாளனான அவன் நைட்ரஜன், ஆக்ஸிஜன் என்ற பின்னல்களில் மின்னலைப் பாய்ச்சி நம்மை வாழ வைக்கின்றான். நாம் எப்படி அவனுக்கு நன்றி செலுத்த மறந்தவர்களாக இருக்கின்றோம் என்பதை எண்ணிப் பார்ப்போம்!


மின்னலில் பொதிந்திருக்கும் இந்த ஆற்றலை அறிவியல் உலகம் கண்டு பிடிப்பதற்கு முன்னால் அன்றே நபி (ஸல்) அவர்கள் மூலம் குர்ஆனில் சொல்லி முடித்த அந்த நாயன் மிகப் பெரியவனே!


(நன்றி: tntj.net)

Monday, 20 September 2010

"சுன்னத் ஜமாஅத்" - பெயரை மாற்றுங்கள்!

 

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


சுன்னத் வ‌ல் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை!


சுன்னத் வல் ஜமாஅத்தினரே இது சுன்னத்தா?ஷிர்க்கா?

சகோதரர்களே! சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளது.


சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது. அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதையெல்லாம் செய்தார்களோ மேலும் தாம் செய்ததை மக்களுக்கும் ஏவினார்களோ அவைகளை பின்பற்றுவது சுன்னத் எனப்படும். நபிகளார் (ஸல்) அவர்கள் வாழ்ந்துக்காட்டிய விதத்தை அல்லாஹ் அங்கீகரித்து அதை ஒவ்வொரு முஸ்லிமும் பேண வேண்டும் என்று வலியுறுத்திவிட்டான். இதோ ஆதாரம்:
 

அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)

இங்கு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் என்று கூறப்பட்டுள்ளதை சற்று கவனிக்கவும்.
 •  அல்லாஹ்வின் வார்த்தைகளான அருள்மறை குர்ஆனுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வுக்கு கீழ்படிந்தும், 
 • அல்லாஹ்வுடைய தூதரது வழிமுறை மற்றும் அறிவுரைகளுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வின் தூதருக்கும் கீழ்படிய வேண்டும் என்பதும் பொருளாகும். 
மேற்கண்ட இரண்டிற்கும் கட்டுப்படும்போது ஒரு முஸ்லிம் தவ்ஹீத் என்ற ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறான். இந்த இரண்டில் ஒன்றை நிராகரிக்கும் போது முஷ்ரிக்காகவோ, முனாஃபிக்காகவோ மாறிவிடுகிறான்!(அல்லாஹ் நம்மைக் காப்பானாக!)

அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதலுக்கு உதாரணம்


அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்காதீர்கள் என்று அருள்மறையில் அல்லாஹ் கூறுகிறான். நாம் அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அல்லாஹ்வை மட்டும் வணங்குகிறோம். இங்கு அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகிறோம்!

நபிமார்களுக்கு கட்டுப்படுதலுக்கு உதாரணம்


எந்த நபிமாரும் அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் கையேந்திப் பிரார்த்தித்ததில்லை! தங்களின் குழந்தைகளுக்கும், தங்களுக்கும்  மரண நேரம் நெருங்கிய போது கூட அல்லாஹ்விடமே அழுது பிரார்த்தித்தார்கள். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மைக் கூட யாரும் வணங்கக்கூடாது என்று கட்டளையுடன் கூடிய அறிவுரையை நமக்கு விட்டுச்சென்றுள்ளார்கள். 

இந்த நபிமார்களின் அறிவுரையை நாம் கேட்கும்போது அதன்படி அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வணங்கமாட்டோம். மேலும் அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழியில் அல்லாஹ்வைப் பிரார்த்தித்து முற்றிலும் தூதர்களின் வழியில் நடப்போம். இதை "சுன்னத் ஜமாஅத்" என்று கூறும் கப்ருவணங்கிகள் செய்கிறார்களா?

                            சுன்னத்திற்கு மாற்றமாக நடக்கும் சுன்னத்ஜமாஅத்

சகோதரர்களே! சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளதாக முன்பே கூறியிருந்தோம். அதை இப்போது வெளிச்சம் போட்டு காட்டலாமா? 'சுன்னத்' என்பதற்கு 'நபிவழி' என்று பொருள்படுகிறது. இதன் அடிப்படையில் சுன்னத் ஜமாஅத்தை அட்டவணைபடுத்தலாமா?

நபி வழி சுன்னத் சுன்னத் ஜமாஅத் 
எப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் அல்லாஹ்வின் மேல் முழு ஈமான் கொண்டு அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுவது. சாதாரண எறும்பு கடித்தால் கூட 'யா கவுஸ்!', நாகூர் ஆண்டவரே!, என்று ஈமானை பரிகொடுத்து அவ்லியாவிடம் குய்யோ முய்யோ என்று கதறுவது, உதவி தேடுவது 
அல்லாஹ்விடம் மட்டுமே அழுது துஆ செய்வது அவ்லியாவிடம் அழுது துஆ கேட்பதை தெய்வீகமாக கருதுவது 
இணைவைப்பு வழிபாடு கிடையாது சமாதி வழிபாடு முக்கியத்துவம் 
மார்க்கத்தில் புதுமையைப் புகுத்துவதை தடுப்பது! மார்க்கத்தில் நாள்தோறும் புதுமையைப் புகுத்துவது 
நபிமார்கள் முதற்கொண்டு எந்த மனிதருக்கும் அற்புத சக்தி கிடையாது என்றும் அவர்கள் அல்லாஹ்வைச் சார்ந்தவர்கள் என்றும் நம்புவது! அதில் உண்மையாக நிலைத்து நிற்பது பச்சை ஆடை உடுத்தி, தாடி வைத்துக்கொண்டு ஒருவர் வந்துவிட்டால் போதும் அவர்தான் அவ்லியா என்று நம்பி அவரிடம் முரீது, பைஅத்,  தீட்சை என்று நம்பி மோசம் போவது! 
அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த துஆக்கள், வணக்க வழிபாடுகளை மட்டும் மேற்கொள்வது ஸலவாத்துன் நாரியா, மவ்லூது, ஷிர்க், கஜல் என்று கண்டதையெல்லாம் நம்பி வணக்கமாக‌ மேற்கொள்வது 
இணைவைப்பது பாவம் என்றும் மறுமையில் நரகம் உறுதி என்றும் பயந்து அல்லாஹ்வை மட்டும் வழிபடுவது இணைவைப்பது புண்ணியம் என்றும் மறுமையில் அவ்லியாக்கள் கைக் கொடுப்பார்கள் என்றும் நம்பி அல்லாஹ்வுக்கு இணையாக செத்துப்போன மனிதர்களை கருதுவது! 
அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக வாழ்ந்து மடிவது! இணை வைப்பதன் மூலம் அல்லாஹ்வுக்கு துரோகம் செய்து நன்றிகெட்ட மனிதனாக வாழந்து மடிவது 

சுன்னத் ஜமாஅத்தினரே இது சுன்னத்தா?

 • தர்காவுக்கு போவது சுன்னத்தா?
 • அவ்லியாவை வணங்குவது சுன்னத்தா?
 • கப்ரு வணக்கம் சுன்னத்தா?
 • மவ்லூது சுன்னத்தா?
 • மீலாது சுன்னத்தா?
 • ஸலவாத்துன் நாரியா சுன்னத்தா?
 • தாயத்து, தட்டு, தகடு சுன்னத்தா?
 • முரீது சுன்னத்தா?
 • ஷைகுமார்களின் கால்களில் விழுவது சுன்னத்தா?
 • கத்தம் ஃபாத்திஹா சுன்னத்தா?
 • 10ம் நாள், 20ம் நாள், 40ம் நாள், ஆண்டு பர்ஸி சுன்னத்தா?
 • 1000 முறை கத்தினால் கவுஸ் வருவார் என்பது சுன்னத்தா?
 • ஸபர், முஹர்ரம் மாதம் பீடை என்பது சுன்னத்தா?
 • வரதட்சனை வாங்குவது சுன்னத்தா?
 • வளர்பிறை, தேய்பிறை சகுணம் சுன்னத்தா?
 • நாகூர் மொட்டை சுன்னத்தா?
 • தப்ருக் தட்டுக்கள் சுன்னத்தா?
 • மரணித்தால் ஜியாரத் பொரி வழங்குவது சுன்னத்தா?
 • சமாதியை கழுவி அந்த அழுக்கு நீரை குடிப்பது சுன்னத்தா?
 • தர்காஹ் சந்தனத்தை நெற்றியிலும் கழுத்திலும் தடவிக்கொள்வது சுன்னத்தா?
 • உரூஸ், படையல் சுன்னத்தா?
 • சந்தனக்கூடு சுன்னத்தா?
 • கொடிமரம் சுன்னத்தா?
 • அவ்லியாக்களுக்கு நேர்ச்சை செய்வது சுன்னத்தா?
 • கப்ரை உயர்த்திக் கட்டுதல் சுன்னத்தா?
 • தஸ்பீஹ் மணி உருட்டுதல் சுன்னத்தா?
 • கவாலி இசைக் கச்சேரிகள் சுன்னத்தா?
 • யானை, குதிரை ஊர்வலங்கள் சுன்னத்தா?
 • ஜோதிட நம்பிக்கை சுன்னத்தா?
 • கருமணி, தாலி கட்டுதல் சுன்னத்தா?
 • மஞ்சள் நீராட்டுவிழா சுன்னத்தா?
 • சுன்னத் கத்னா திருவிழா சுன்னத்தா?
அல்லாஹ்தஆலா 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்களை இந்த உலகத்திற்கு அனுப்பியதாக அருள்மறையில் சாட்சி கூறுகிறான். எந்த நபியாவது மேற்கண்ட இழிச்செயல்களை செய்து காட்டினார்களா? குர்ஆன் - ஹதீஸ் மூலமாக ஆதாரம் இருந்தால் காட்டவும்!

இவர்களின் சுன்னத் ஜமாஅத் என்பது முழுக்க முழுக்க சுன்னத்தை தவறவிடுவதேயாகும்!


அல்லாஹ்வுக்கு இணைவைத்துக்கொண்டு தங்களை அழகான 'சுன்னத் ஜமாஅத்தினர்' என்று பெயரை சூட்டிக்கொண்டால் மட்டும் சுவனம் சென்றுவிடமுடியுமா? கீழ்கண்ட வசனத்தை உணர்ந்திருக்கக் கூடாதா?

இணைக் கற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது!


     ‘இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணைக் கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)

இணைக் கற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்!


     (ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணைக் கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)

இணைக் கற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்!


      அவர்கள் இணைக் கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)

 இணைக் கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். 


       நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக்குர்ஆன்:    39:65,66)

இறைத்தூதர்களும்கூட‌ இணைக் கற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!


       நீர் இணைக் கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன்:  039:065, 066)

         அல்லாஹ் கூறுகிறான்:  “…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணைக் கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான். மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )

பெயர் மாற்ற கோரிக்கை:


நபிகளாரின் சுன்னத்திற்கு மாற்றமாக நடந்துக்கொண்டு தங்களை சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயர்  வைத்திருப்பது அந்த சுன்னத்திற்கு (நபிவழிக்கு) அவமானப்படுத்தும் விதமாக உள்ளது. எனவே சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயரை மாற்ற இவர்கள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கை இத்துடன் முன்வைக்கிறோம்!

என்ன பெயர் வைக்கலாம் யோசியுங்கள்!

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிக் காட்டுவானாக!
நன்றி-AN ISLAMIC PARADISE BLOG 


அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!