அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Wednesday 1 September 2010

வீணாகிப் போகும் தர்மங்கள்


நாம் முந்திய பதிவுகளிலே தர்மம் என்றால் என்ன என்பதைப் பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியும் பார்த்தோம். இப்போது, நாம் செய்யக்கூடிய தர்மங்கள் அனைத்தும் நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடியதாக ஆகுமா? அல்லது சம்பாதித்ததையெல்லாம் செலவு செய்தாலும் நன்மைகளின்றி பாழாகிப் போய்விடுமா? எப்படிப்பட்ட தர்மங்கள் நமக்கு மறுமையில் கைக் கொடுக்காது? என்பதையெல்லாம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலே தெரிந்துக்கொள்வோம்.

பாழாகும் த‌ர்மங்கள்:-

(1) பெயருக்காகவும் புகழுக்காகவும் செய்யப்படும் தர்மம்:

அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகிறான்,

நம்பிக்கைக் கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லைத் தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான். (அல்குர்ஆன் 2:264)

இன்று யாருக்காவது சில‌ உதவிகள் செய்து அதன் மூலம் ஒருவர் முன்னேறிவிட்டால் 'நான்தான் அவனுக்கு செய்தேன்; நான் இல்லை என்றால் அவன் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது' என்று மற்றவரிடம் பெருமையாக கூறுவதைப் பார்க்கிறோம். வழுக்குப் பாறையின் மீது படிந்திருக்கின்ற மண், அடை மழையிலே கரைந்தோடி விடுவதைப் போன்றே பெயருக்காகவும் புகழுக்காகவும், பொன்னாடைக்காகவும் வெறும் கைத் தட்டலுக்காகவும் செய்யப்படுகின்ற காரியங்கள் நன்மையை விட்டும் நம்மை தூரமாக்கிவிடும். ஆகவே அடுத்தவர் நம்மை கொடையாளி, தர்ம பிரபு என்று மெச்சுவதற்காக செய்யவேண்டும் என்ற எண்ணம் நம்மில் அணுவளவும் ஏற்பட்டுவிடக் கூடாது. முகஸ்துதியோடு செய்யப்படுகின்ற அமல்களை அல்லாஹ் அறவே அங்கீகரிக்கமாட்டான் என்ப‌தை நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், "செல்வத்தை வாரி வழங்கிய வள்ளல், மார்க்கத்தை தெளிவுபடுத்திய ஆலிம், மார்க்கப் பாதையில் உயிரை விட்ட தியாகி இம்மூவரும் மனிதர்களிடம் கிடைக்கின்ற நன்மதிப்பிற்காகவும் பெருமைக்காகவும் புகழுக்காகவும் செயல்பட்டால் அவர்களின் அமலை மறுமையிலே அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்." (ஹதீஸின் கருத்து) அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி); நூல்: முஸ்லிம்

மேலும் எவர் இறைப் பொருத்தத்திற்காக செலவழிக்காமல் பிறர் பார்க்க வேண்டும், புகழ வேண்டும் என்று தர்மங்களை கொடுப்பவரின் நிலைமை மறுமையில் எவ்வாறு இருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,

மறுமையில் மூன்று பேரை இறைவன் சந்திப்பான். அதில் ஒருவர் கொடையாளி (செல்வந்தர்கள்). இறைவன் இவரைப் பார்த்து 'உலகில் உனக்கு நான் செல்வத்தைத் தந்தேனே, அதை எவ்வழியில் செவழித்தாய்?' என்பான். அவன், 'இறைவா! நான் உன் வழியில்தான் செலவிட்டேன்' என்பான். இறைவன், 'எனக்காக நீ செலவிடவில்லை. பிறர் புகழவேண்டும் என்று பெருமைக்காக செலவிட்டாய்' என்று கூறி அவரை முகம் குப்புற‌ நரகத்தில் இழுத்துச் சென்று போடும்படி கட்டளையிடுவான். நூல்: முஸ்லிம்

இந்த நபிமொழியில் இருந்து செல்வம் கொடுக்கப்பட்ட‌வர்கள் மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் என்றும், எதற்காக/எப்படி அவர்கள் அந்த செல்வத்தை செலவழித்தார்கள் என்றும் விசாரிக்கப்படுவார்கள் என்றும் தெளிவாக தெரிகிறது.

இன்னொரு ஹதீஸிலே,

‘நீ கொடை வள்ளல் என்று சொல்லப்படுவதற்காக தர்மம் செய்தாய்; அவ்வாறு (உலகில்) சொல்லப்பட்டுவிட்டது என்று (அல்லாஹ்) கூறுவான். பின்னர் இவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு இறுதியில் நரகில் தூக்கி எறியப்படுவார்’ என நபியவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம்

தர்மம் செய்யாமல் எவ்வளவுதான் பணத்தை சேமித்தும் ஆடம்பரமாகவும் இருந்தாலும் அது இவ்வுலக வாழ்க்கையோடு முடிந்து போய்விடும். நாம் கண்ணை மூடிய அதே நொடியிலேயே நம் செல்வங்கள் அடுத்தவர்களுக்கு உரியதாகிவிடுகிறது. இந்த நிலையில் நாம் ஏற்கனவே செய்த தர்மங்களும் கொடை வள்ளல் என்று புகழப்பட வேண்டும் என்பதற்காக என்றிருந்தால், நாம் உண்டு கழித்ததையும் உடுத்தி கிழித்ததையும் தவிர நம்முடைய செல்வம், வேறு எந்த விதத்திலும் நமக்கு பயனுள்ளவை ஆகாது. அடுத்தவர்களின் புகழ் வார்த்தைகள் எந்தவொரு மனிதனுக்கும் கொஞ்சமாவது இனிக்கவே செய்யும். ஏனெனில் சராசரி மனிதனின் இயல்பு அது! ஆனால் அந்த புகழ்ச்சிகளைக் கொண்டெல்லாம் நம் தர்மத்திற்கு பெருமைத் தேடிக்கொள்ளாமல் நம் ஈமானை உறுதியாக வைத்துக்கொண்டால், அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்கிறோம் என்ற பக்குவம் நம்மிடத்தில் வந்துவிடும். இன்ஷா அல்லாஹ், அதற்கான முழு பலனையும் இறைவனிடத்தில் அடைந்தவர்களாகவும் முடியும்.

"உன் மனைவியின் வாயில் ஊட்டக்கூடிய ஒரு கவள உணவு உட்பட அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீ செலவழிப்பதற்கு கூலி வழங்கப்படாமல் இருக்காது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ்(ரலி); நூல்கள்: புகாரி, முஸ்லிம்

(2) முறையற்ற (ஹலால் அல்லாத) பொருளிலிருந்து செய்யப்படும் தர்மம்:

அதாவது, மக்களின் தேவைகளுக்காக ஏதாவது கொடுத்துதவும்போதும் மக்களுக்கு தர்மங்கள்(ஸதகாக்கள்) செய்யும்போதும் ஹலாலான சம்பாத்தியங்களிலிருந்து செலவிட வேண்டும். அது ந‌ம் உழைப்பிலிருந்து வந்ததாக இருந்தாலும் சரி, அந்த பொருள் நமக்கு வந்த வழி எப்படி இருந்தாலும் அது தூய்மையானதாக இருத்தல் அவசியமானதாகும்.

'தூய்மையான சம்பாத்தியம்' எது என்றும் நபி(ஸல்) அவர்கள் நமக்கு கூறியுள்ளார்கள்:

'எவ்வகை சம்பாத்தியம் மிகத் தூய்மையானது?' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. "அதற்கு அம்மனிதன் தன் கையினால் உழைத்து சம்பாதிக்கும் சம்பாத்தியமும் ஏமாற்றமில்லாமல் செய்யும் வியாபாரமும்" என்று கூறினார்கள். நூல்: அஹ்மத்

ஊரான் சொத்தை அபகரித்து ஊரே மெச்சுமளவிற்கு நற்செயல் செய்வது, திருட்டுப் பணத்திலே தர்மம் செய்வது, மோசடி செய்து குடிசைப் போட்டுத் தருவது, வட்டிப் பணத்திலே விருந்து வைப்பது மற்றும் லஞ்சம், லாட்டரி போன்ற தடுக்கப்பட்ட வழிகளிலே சம்பாத்தித்து நிறைவேற்றப்படுகின்ற அனைத்து நற்காரியங்களும் நன்மைகளைப் பெற்றுத் தருவதற்கு தகுதியற்றவைகளாகும்.

"ஒளூ (அங்கத் தூய்மை) செய்யாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது; மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தான தர்மமும் ஏற்கப்படாது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன் என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம்

உபரியான தான தர்மங்களையும் ஜகாத்தையும் கொடுக்கச் சொன்ன இறைவன் அது எந்த வழியில், எவ்வாறு இருக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறி இருக்கிறான். இன்று மக்களுக்கு சம்பாதிக்கும் வழியைப்பற்றி கவலை இல்லை. அது இறைவனால் தடுக்கப்பட்ட வழியாக இருந்தாலும் லாபம் கிடைக்கும் தொழிலாக இருந்தால் போதுமென்று, இறைவன் கூறிய வழியை மறந்து தன் பொருளாதாரத்தை தவறான‌ அந்த வழியிலேயே மென்மேலும் அதிகரிக்கச் செய்கிறான் மனிதன். காரணம் ஒரு மனிதன் வளர வளர அவனுடைய ஆசைகளும் சேர்ந்தே வளர்கின்றன.

இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்,

மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தைத்) தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பிவிட்டது. (அல்குர்ஆன் 102:1,2)

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி தர்மம் செய்யும் நாம், அல்லாஹ் பொருந்திக் கொள்கின்ற பிரகாரமே தர்மம் செய்யவேண்டும். அல்லாஹ் அங்கீகரிக்காத பொருட்களையோ அல்லது செல்வங்களையோ பகிர்ந்துக் கொடுப்பதால் அந்த தர்மத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. ஹராமான வழிகளில் சம்பாதித்த சொத்துகளையோ வியாபார பொருட்களையோ ரமலானிலோ மற்ற நாட்களிலோ ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்துக் கொடுப்பதாலோ அல்லது பள்ளிவாசல்களுக்கு வழங்குவதாலோ நன்மைகள் நமக்கு சேராது.

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,

"இறைவன் ஹலாலானதை (அனுமதிக்கப்பட்டதை) தவிர வேறு எதையும் ஏற்க மாட்டான். எவரேனும் அதிலிருந்து தர்மம் செய்தால் ரஹ்மான் தன் வலக்கரத்தால் தைப் பெற்றுக் கொள்கிறான். அது ஒரு பேரித்தம் பழமாக இருப்பினும் சரியே. அது இறைவனிடம் மலையை விடப் பெரியதாக இருக்கிறது. ஒருவர் தன் ஒட்டகக் குட்டியை வளர்ப்பதுபோல் அதை அல்லாஹ் வளரச் செய்கிறான்." நூல்: புகாரி, முஸ்லிம்

ஆக, அளவில் சிறியதாயினும் தூய்மையான முறையில் சம்பாதித்த பணத்தினால் செய்யும் தர்மத்தை மட்டுமே இறைவன் ஏற்றுக்கொள்கிறான்.

(3) தர்மம் செய்ததால் நோவினை செய்தலும், செய்துவிட்டு சொல்லிக் காட்டிய தர்மமும்:

ஒருவருக்கு நாம் தர்மம் செய்தால் அதை சொல்லிக் காட்டக்கூடாது. மேலும் அந்த தர்மத்திற்கு பகரமாக அவரிடம் வேலை வாங்கி துன்புறுத்தவும் கூடாது. இவ்வாறு செய்தால் நாம் செய்த தர்மத்தின் பலன் கிடைக்காமல் போய்விடும். தர்மம் பெறப்படுபவரிடமிருந்தும் எந்த பிரதிபலனையும் எதிர்ப்பார்க்கக் கூடாது. மேலே கூறப்பட்ட அந்த இறை வசன‌த்தினை மீண்டும் ஒருமுறை பாருங்கள்:

நம்பிக்கைக் கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லைத் தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான். (அல்குர்ஆன் 2:264)

மேலும் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:

"செய்த உதவியை சொல்லிக் காட்டுபவனை மறுமை நாளில் இறைவன் பார்க்கவும் மாட்டான்; தூய்மைப்படுத்தவும் மாட்டான்; அவனே நஷ்டவாளி" என்றார்கள். அறிவிப்பவர்: அபூதர்(ரலி); நூல்: முஸ்லிம்

"இவ்வாறு தான் செய்த உதவியை சொல்லிக் காட்டியவனை மறுமை நாளில் அல்லாஹ் பார்க்கவும் மாட்டான், பேசவும் மாட்டான், பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். மேலும் அவனுக்கு கடுமையான வேதனையை அல்லாஹ் வழங்குவான். 
      நூல்: முஸ்லிம்

எனவே எனதருமை சகோதர, சகோதரிகளே! நாம் செய்யக்கூடிய தர்மம் எப்படிப்பட்டது? அந்த சமயம் நம் மனம் தன்னை ஒரு தர்மசீலன் என்று பெருமைப்பட்டுக் கொள்ளாமல் இருக்கிறதா? தர்மம் செய்த பிறகு அதை அப்படியே நம் மன‌ம் மறந்துவிடும்படி சொல்கிறதா? அல்லது அதை சொல்லிக் காட்டி நம்மிடம் தர்மம் பெற்றவர்களை நோவினை செய்யும்படி சொல்கிறதா? என்பதையெல்லாம் ஒன்றுக்கு நூறு முறை சிந்தித்துக் கொள்ளுங்கள்! உங்கள் தர்மங்களை வீணாக்கிவிடாதீர்கள்! நல்ல விஷயங்களை செய்யும்போது அதை வீணடிக்கும் விதமாக ஷைத்தான் இதுபோன்ற எண்ணங்களை மனதில் ஏற்படுத்துவான். எனவே அதைவிட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடியவர்களாக, அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்கிறோம் என்ற தூய எண்ணத்தில் தர்மம் செய்வோமாக! அதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு துணை புரிவானாக‌!

முறையான தர்மம் எது என்பதை அடுத்தடுத்த பதிவுகளிலே பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்!

2 comments:

  1. நல்லதொருப் பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. @ Mohamed Ayoub K....

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை