அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Wednesday 8 September 2010

நோன்புப் பெருநாள் தர்மம் (ஸதக்க‌துல் ஃபித்ர்)

நம்மிடையே ஏழைகள், செல்வந்தர்கள், நடுத்தர வர்க்கத்தினர் எனும் ஏற்றத்தாழ்வு வாழ்க்கை அமைப்பில் இருந்தாலும், இஸ்லாம் இந்த வேறுபாடான மக்களை ஒன்று சேர்க்கும் விதமாக சில வணக்கங்களை விஷேசமான முறையில் ஏற்படுத்தித் தந்துள்ளது. அதில் ஒன்றுதான் 'ஸதக்க‌துல் ஃபித்ர்' அல்லது 'ஜகாத்துல் ஃபித்ர்' என்று சொல்லப்படும் தர்மமாகும். இஸ்லாம் கூறும் இந்த ஃபித்ரா தர்மத்தின் முக்கியத்துவத்தையும் அதன் சட்டங்களையும் இப்போது பார்ப்போம்.

யார் யாரெல்லாம் நோன்புப் பெருநாள் தர்மம் கொடுக்கவேண்டும்?

பொருளாதாரக் கடமையான 'ஜகாத்' எவ்வாறு பொருள் வளத்தைத் தூய்மைப்படுத்தி இஸ்லாமிய சமூகத்தின் பொருளாதாரத் தேவையில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்கின்றதோ, அதேபான்று இந்த 'ஜகாத்துல் ஃபித்ரு'ம் ஏழைகளின் சந்தோஷத்தில் பெரும் பங்காற்றுகிறது. பொருள்கள் மீதான கட்டாயக் கடமையான 'ஜகாத்' குறிப்பிட்ட செல்வ வளமுள்ள‌ முஸ்லிம்களில் யார் அதற்குரிய 'நிஸாப்' எனும் எல்லை அளவையை எட்டுகின்றனரோ அவர்கள் மீது மட்டுமே கடமையாகின்றது. ஆனால் இந்த ஜகாத்துல் ஃபித்ர் அவ்வாறல்ல! நோன்பாளிகள், நோன்பு நோற்க இயலாமல் இருந்தவர்கள், வசதியில் குறைந்தவர்கள் யாராக இருந்தாலும், தன் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேர் சார்பாகவும் கட்டாயம் கொடுக்க‌ப்பட வேண்டிய ஒன்றாகிவிடுகின்றது. எனவே த‌ன் குடும்பத்தின் பெருநாள் செலவு போக இதைக் கொடுக்கச் சக்தியுள்ள அனைத்து முஸ்லிம்களும் இந்த தர்மத்தை கொடுக்க வேண்டும். பெரும் செல்வந்தர்கள் தான் கொடுக்க வேண்டும் என்பது இதில் கிடையாது.

-:பெருநாள் தர்மம் கொடுப்பதின் நோக்கம்:-

ரமலானைத் தொடர்ந்து வரும் ஈகைத் திருநாள் எனும் இஸ்லாமிய பண்டிகையின்போது எந்தவொரு முஸ்லிமும் அப்பண்டிகை நாளின் மகிழ்ச்சியிலிருந்து தூரமாகி நிற்கக்கூடாது எனும் பரந்த நோக்கமும் இந்த தர்மத்தின் மூலம் வியாபித்து நிற்கின்றது! இதனால் நோன்பு நோற்றவர்களில் பணக்காரர்கள் ஏழைகளுடனும், ஏழைகள் அவர்களைவிட வறிய‌ ஏழைகளுடனும் நேரடியாக தொடர்புகொண்டு பெருநாளின் சந்தோஷத்தை பகிர்ந்துக்கொள்ள முடிகிறது. இதனால் அவர்களிடையே மகிழ்ச்சியின் தாத்பர்ய அம்சம் சகோதரத்துவ வாஞ்சையுடன் மிளிர்கின்றது.

இந்த நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கிய நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள், ஏழை மக்கள் பெருநாள் பொழுதை மகிழ்வுடன் கழிப்பதற்காகவும், நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி ஏதாவது வீணான காரியங்களில் ஈடுபட்டிருந்தால் அதற்கு பரிகாரமாகவும் இந்த தர்மம் அமைவதாக‌ கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி,"இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்"என்றும் கூறினார்கள்.
         அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி); நூல்கள்: பைஹகீ, தாரகுத்னீ

ஸதக்க‌துல் ஃபித்ர் என்பது நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளின் (அன்றைய) உணவுக்கு வழியாக இருப்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
         அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்கள்: அபூதாவூத், இப்னுமாஜா, தாரகுத்னீ, பைஹகீ

பெருநாள் தர்மம்(ஸதக்க‌துல் ஃபித்ர்) எப்போது வழங்க வேண்டும்...?

இந்த தர்மமானது புனித ரமலானின் முடிவில், ஈகைத் திருநாள் தொழுகைக்கு முன்பே வழங்கப்படுவதாகும். ஒவ்வொரு முஸ்லிமான ஆண்-பெண்கள், அன்று பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவரின் சார்பாகவும் வழங்கப்படவேண்டும்.

ஃபித்ர் ஜகாத்தை பெருநாள் தொழுகைக்கு மக்கள் புறப்படும் முன்பே வழங்கிவிடவேண்டுமென நபி(ஸல்)அவர்கள் கட்டளையிட்டார்கள்.
         அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி); நூல்கள்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ

நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பாக அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக பெருநாள் தர்மத்தை வழங்குபவர்களாக இருந்தனர்.
         அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி); நூல்: புஹாரி (1511)

எனவே பெருநாள் தர்மத்தினைப் பெறக்கூடிய மக்கள் பெருநாளைக்கான‌ உணவுகளை தயார்படுத்திக்கொள்ள‌ வசதியாக ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் முன்னதாக கொடுத்துவிடவேண்டும்.

-:பெருநாள் தர்மத்தின் அளவு:-

முஸ்லிமான ஆண்கள் பெண்கள், பெரியவர் சிறியவர், அடிமை, சுதந்திரமானவர் ஆகிய அனைவருக்கும் பேரீத்தம்பழம் அல்லது கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் தலா ஒரு 'ஸாவு' என்று நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தனர்.
         அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி)
நூல்கள்: புஹாரி (1503), முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் உணவுப் பொருட்களில் ஒரு 'ஸாவு' ஃபித்ர் தர்மம் வழங்குவோம். அன்றைய தினம் எங்களின் உணவாக கோதுமையும் உலர்ந்த திராட்சையும் இருந்தது.
         அறிவிப்பாளர்: அபூஸயீத்(ரலி); நூல்: புஹாரி

குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்காகவும் ஒரு "ஸாவு" அளவுக்கு கொடுக்கவேண்டும் என்று இந்த ஹதீஸ்க‌ள் கூறுகின்றன.

(குறிப்பு:- இரு கை கொள்ளளவின் நான்கு மடங்கே ஒரு "ஸாவு" என்பதாகும். அதாவது இருகைகளையும் ஒன்று சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்கு முறை அள்ளி அளந்து போடுவதே ஒரு 'ஸாவு' என்பதன் அளவாகும். கிராம் கணக்கில் சொல்வதாக இருந்தால் சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.)

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும். உதாரணமாக, நமது பராமரிப்பில் 3 நபர்கள் இருந்தால் தன்னையும் சேர்த்து தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் (4 x 2.5 கிலோ) 10 கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா தர்மத்தின் அளவாகும்.

எதைக் கொடுக்கலாம்......? நபி(ஸல்) காலத்தில் கொடுக்கப்பட்டது போல் கோதுமைப் போன்ற பொருளாகதான் ஃபித்ராவைக் கொடுக்கவேண்டுமா?



நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் காலத்தில் தங்கக் காசுகள் மற்றும் வெள்ளிக் காசுகள் ஓரளவுக்கு புழக்கத்தில் இருந்தாலும் நோன்புப் பெருநாள் தர்மமாக உணவுப் பொருட்கள்தான் கொடுக்கப்பட்டன. அதற்காக நாமும் பணத்தை ஃபித்ராவாக கொடுக்கக் கூடாதா என்றால், நிச்சயமாக இல்லை. ஃபித்ராவின் நோக்கத்தை சரியான முறையில் விளங்காமல் சிலரால் அப்படி தவறாக புரியப்பட்டுள்ளது. (இதுபற்றிய விபரத்தை இந்தப் பதிவின் இறுதிப் பகுதியில் காணலாம்.)

நபித்தோழர்களின் அன்றைய உணவாக இருந்த பேரீச்சம்பழம், தீட்டப்படாத கோதுமை (தோல் நீக்கப்படாதது) ஆகியவற்றைதான் கொடுத்து வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இப்படிதான் கட்டளையிட்டிருந்தனர்.

صحيح البخاري 1506 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدِ بْنِ أَبِي سَرْحٍ العَامِرِيِّ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: «كُنَّا نُخْرِجُ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، أَوْ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ أَقِطٍ، أَوْ صَاعًا مِنْ زَبِيبٍ»

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் உணவில் தீட்டப்படாத கோதுமையில் ஒரு "ஸாவு', பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவு, பாலாடைக் கட்டியில் ஒரு 'ஸாவு', உலர்ந்த திராட்சை(கிஸ்மிஸ்)யில் ஒரு 'ஸாவு' என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஸகாத்தை வழங்கி வந்தோம்.
             அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி(ரலி); நூல்: புஹாரி (1506)

صحيح البخاري 1510 - حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا أَبُو عُمَرَ حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كُنَّا نُخْرِجُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ»، وَقَالَ أَبُو سَعِيدٍ: «وَكَانَ طَعَامَنَا الشَّعِيرُ وَالزَّبِيبُ وَالأَقِطُ وَالتَّمْرُ»

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஒரு "ஸாவு' உணவை நோன்புப் பெருநாளில் வழங்கி வந்தோம். எங்களின் அன்றைய உணவு, தீட்டப்படாத கோதுமை, உலர்ந்த திராட்சை, பாலாடைக் கட்டி, பேரீச்சம் பழம் ஆகியவை தான்.
             அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி (ரலி); நூல்: புஹாரி (1510)

ஆக, பொதுவாக உணவுப் பொருட்கள் வழங்குவதுதான் முக்கியம் என்றும், அன்றைக்கு எது உணவாக இருந்ததோ அதைதான் வழங்கினார்கள் என்றும் மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களிலிருந்து புரிந்துக் கொள்ளலாம். ஆனால் நபி(ஸல்) காலத்தில் கோதுமை, பேரீத்தம்பழங்கள் பெருநாள் தர்மமாக கொடுக்கப்பட்டதால் நாமும் அதையேதான் கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. ஏனெனில், ஏழைகளுக்கு உணவாக இருப்பதை நபியவர்கள் காரணம் காட்டியுள்ளதால், அந்தந்தப் பகுதிகளில் எது மக்களுக்கு உணவாக அமைந்துள்ளதோ அவற்றைதான் கொடுக்கவேண்டும். அப்போதுதான் இந்த ஃபித்ராவின் நோக்கம் நிறைவேறும்.

மேலே கூறப்பட்டுள்ள பொருட்களில் கோதுமை மட்டும்தான் நம்மில் சிலருக்கு உணவாக அமையுமே தவிர, உலர்ந்த திராட்சையோ, பேரீச்சம்பழமோ, பாலாடைக் கட்டியோ நமக்கு (இந்தியர்களுக்கு) முதன்மை உணவாக ஆகாது. இன்றைக்கு நம்முடைய உணவு முறை எதுவாக இருக்கிறதோ அதைதான் ஃபித்ரா தர்மமாக கொடுக்க வேண்டும். நமது உணவுப் பழக்கத்தில் முதன்மையானதாக‌ அரிசி இருப்ப‌தால் அதை ஒரு 'ஸாவு' அளவு கொடுக்கவேண்டும். (ஒரு 'ஸாவு' என்பது இதர உணவுப் பொருள்களுக்கும் இது பொருந்தும்.)

அதேசமயம், அரிசியை மட்டுமே ஃபித்ராவாக கொடுக்கவேண்டும் என்றும், மற்ற உணவுப் பொருட்களைக் கொடுக்கக்கூடாது என்றும் எந்த அடிப்படையுமின்றி இன்று சிலர் மக்களைக் குழப்பிக் கொண்டுள்ளனர். நபி(ஸல்) அவர்கள் கோதுமையை மட்டும்தான் கொடுக்கவேண்டும் என கட்டளையிடவில்லை. அப்படி கோதுமை மட்டும்தான் அன்றைய ஃபித்ராவுக்கான உணவுப் பொருள் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தால் கூட இவர்கள் சொல்வதில் அர்த்தமிருக்கும். ஆனால் கோதுமையை ஃபித்ராவாக கொடுக்க சொன்னதுபோல் உலர்ந்த திராட்சை, பாலாடைக் கட்டி, பேரீச்சம்பழம் போன்ற அன்றைய உணவாக இருந்த பல பொருட்களையும் கொடுப்பதற்குதான் நபி(ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

நம் உணவுப் பழக்கத்தைப் பொறுத்தவரை, வெறும் அரிசியைப் பெற்றுக் கொள்ளும் மக்களின் தேவைப் பூர்த்தியாகிவிடும் என்று நம்மால் சொல்ல முடியாது. ஏனெனில் அரிசி சோறு சாப்பிட வேண்டுமானால் குழம்பு போன்றவை தேவைப்படுகிறது. அப்போதுதான் உணவு என்ற அந்தத் தேவை அவர்களுக்குப் பூர்த்தியாகும். அன்றைய மக்கள் பேரீத்த‌ம் பழத்தை மட்டுமே உணவாக உட்கொண்டார்கள். ஆனால் நம் நாட்டு மக்கள் வெறும் அரிசியை மட்டும் உணவாகச் சாப்பிட முடியாது. எனவே ஏழைகளின் உணவுக்குப் பயன்படும் விதத்தில், அரிசியுடன் சமைக்கத் தேவையானவற்றை, இன்றைய உணவாக மக்களுக்கு பயன்பாட்டில் இருக்கக்கூடிய எந்த ஒரு உணவுப் பொருட்களையும் சேர்த்து கொடுக்கலாம். அதே சமயம்,

அரிசிக்குப் பதிலாக அதற்கான பணத்தைக் கொடுக்கலாமா? ன்றால்,

தாராளமாக கொடுக்கலாம். சிலர் அவ்வாறு கொடுக்கக் கூடாது எனக் கூறினாலும், கொடுக்கலாம் என்பதே சரியானதாகும்.

பணத்தை ஃபித்ராவாக கொடுக்கக் கூடாது எனக் கூறும் சிலர், "நபி(ஸல்) காலத்தில் தங்கமும், வெள்ளிக் காசுகளும் புழக்கத்திலிருந்தது. அப்படியிருந்தும் அதைக் கொடுக்காமல் தானியத்தை ஏன் அவர்கள் கொடுக்க வேண்டும்; தானியத்தைதான் நபிகளார் கொடுத்தார்கள்; ஆகவே நாமும் தானியத்தைதான் கொடுக்கவேண்டும்" என்ற தவறான கருத்தை சமூகத்தில் பரப்பிக் கொண்டுள்ளனர். ஜகாத், ஜகாத்துல் ஃபித்ரு போன்ற உயரிய இலக்குடன் கூடிய இஸ்லாத்தின் இத்தகைய கோட்பாடுகள் மற்றும் செயல்முறைத் திட்டங்கள் தொடர்பான விஷயங்களில், சமகால சமூகத்திலுள்ள அந்த சிலருடைய தெளிவின்மையே இதற்குக் காரணம்.

நோன்புப் பெருநாள் தர்மமான இந்த ஃபித்ராவைப் பொருத்தவரை, நபிகளார் காலத்தில் அதன் நடைமுறையிலிருந்த அன்றைய சமூக எதார்த்தப் பின்னணியில் இருந்தே நோக்க வேண்டும். நபிகளாரின் காலத்தில் தீனார்களும், திர்ஹம்களும் (தங்க, வெள்ளிக் காசுகள்) இருந்தாலும், அதைவைத்து இன்றைய பணப் புழக்கம் போன்று அன்றாடப் புழக்கத்தில் பெரிதாக பயன்படுத்திக் கொண்டிருக்கவில்லை. முஸ்லிம்களுக்கென்று தனியான நாணயம் கூட அன்று இருக்கவில்லை. இன்றைய காலச்சூழலில் பணம் மூலம் கொடுக்கல், வாங்கல் முறை அனைவராலும் பயன்படுத்தப்படுவதுபோல், நபிகளாரின் காலத்தில் பண்டமாற்று முறைதான் அன்றாட வாழ்வில் பெரும்பாலான மக்களின் புழக்கத்திலிருந்தது. இந்தப் பின்னணியை நாம் கவனித்தால் ஃபித்ராவின் அழகிய நோக்கத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்று தெளிவாகப் புரிந்துக் கொள்வதோடு, பணத்தை ஃபித்ராவாக கொடுக்கக் கூடாது என்பவர்களின் கருத்து முற்றிலும் தவறானது என்பதையும் உணர முடியும்.

பணத்தை ஃபித்ராவாக கொடுக்கக் கூடாது என்று இவர்கள் முன்வைக்கும் கருத்தின்படி, ரூபாய்களுக்கு ஸகாத் இல்லை என்று கூறவேண்டிய நிலை ஏற்படும். ஏனெனில் தங்கம், வெள்ளி, கால்நடைகள், நகைகள் இவைகள் பற்றிதான் ஸகாத் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ரூபாய்கள் பற்றி இல்லை. ஆனால் ரூபாய்க்கும் தங்கத்துடன் மதிப்பிட்டு நாம் ஜகாத் வழங்குகிறோமா இல்லையா? அதுபோல்தான் ஃபித்ராவின்போதும் நபி(ஸல்) அவர்கள் கூறிய 'ஸாவு' கணக்கில் ரூபாயை மதிப்பிட்டுக் கொடுக்கலாம். அன்றைக்குப் பண்டமாற்று முறை நடைமுறையில் இருந்ததால் உபரியாக உள்ள பேரீத்த‌ம் பழத்தைக் கொடுத்துவிட்டு கோதுமையை வாங்கிக்கொள்ள முடிந்தது. அதுபோல் உபரியாக கிடைக்கும் எந்த பொருளையும் கொடுத்து தேவையான மற்ற எந்த பொருட்களையும் வாங்கிக்கொள்ள முடியும். இன்றைக்கு நம்மிடம் உள்ள அரிசியைக் கொடுத்து விட்டு தேவையானதை எந்தக் கடையிலும் வாங்க முடியாது. ஆனால், பணம் இருந்தால் இன்று எந்த உணவுப் பொருளையும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும்.

தானியத்தைதான் ஃபித்ராவாக கொடுக்கவேண்டும் என்ற தவறான ஃபத்வாவினால் எல்லோரும் அரிசியை மட்டுமே ஃபித்ரா தர்மமாக வழங்கும்போது அன்றைய தினம் ஏழைகள் வீட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடில்லாமலிருக்கும். ஆனால் அதனுடன் சேர்த்து சாப்பிடத் தேவையான துணைப் பொருட்களின் தேவையே அதிகரித்து நிற்கும். அப்போது ஏழைகளின் அன்றைய உணவுக்கு வழியாக இருப்பதற்காக ஃபித்ராவைக் கடமையாக்கிய நோக்கம் அடிபட்டு, அதை முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலைதான் ஏற்படும். அதனால் பணமாக கொடுப்பது ஹதீஸுக்கு மாற்றமானதல்ல என்பதை நாம் புரிந்துக் கொள்ளலாம்.

எனவே, தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்வதற்குரிய‌ மொத்த‌ பணமாகவும் ஃபித்ரா கொடுக்கலாம். சில மக்களுக்கு பணமாகக் கொடுத்தால்தான், தன் குடும்பத்திற்கு தேவையான அளவுக்கு உணவுப் பொருட்களை அவர்களே வாங்கிக் கொள்ளவும் வசதியாக இருக்கும். அல்லது உணவகங்களில் சமைக்கப்பட்ட உணவுகளை அவர்கள் விரும்பினால்கூட அவற்றை ஆர்டர் செய்து வாங்கி, அன்றைய தினம் சந்தோஷமாக சாப்பிட வாய்ப்பாகவும் அமையும். எனவே ஏழைகள் மகிழ்வோடு அந்த நாளைக் கொண்டாட அரிசியைவிடப் பணமும் உதவியாக இருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆக, பணமாகக் கொடுத்தாலும் ஃபித்ராவின் நோக்கத்தை அது நிறைவேற்றும் என்பதால் ரூபாயாகக் கொடுப்பதைத் தடுக்க எந்த நியாயமும் இல்லை. அப்படி பணமாகக் கொடுக்கும்போது நாம் எதைப் பிரதான‌ உணவாக உட்கொள்கிறோமோ அந்த அரிசியின் விலையை அளவுகோலாகக் கொண்டு, அரிசியும் அதனுடன் சேர்த்து தேவையான மற்ற பொருட்களையும் மேலே சொன்ன அளவில் (ஒரு 'ஸாவு' மதிப்புக்கு) கொடுக்கவேண்டும்.

அதுமட்டுமின்றி, வெளியில் சென்று உணவுப் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியாத நிலையிலுள்ள முதியோர்கள், கொடுக்கும் உணவுப் பொருட்களை சமைத்து சாப்பிட முடியாத பலஹீனர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு பணமாகக் கொடுப்பதைவிட, அன்றைய தினம் அவர்களின் உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வசதியாக என்ன வேண்டும் என்று அவர்களிடமே விசாரித்து அவற்றை சமைத்த உணவுகளாகக் கூட வழங்கலாம். இதுவும் நபி(ஸல்) அவர்கள் கூறிய ஃபித்ராவின் நோக்கத்தை நிறைவேற்றுவதாகவே அமையும்.

எனவே எதைக் கொடுத்தால் ஏழைகள் அதிகம் பயனடைவார்கள், எதைக் கொடுத்தால் ஏழைகளின் பெருநாள் மகிழ்ச்சியாக அமையும் என்ற ஷரீஆவின் நோக்கமே நம் நோக்கமாக இருக்கவேண்டும். அவரவர் இஷ்டத்துக்கு சொல்லக்கூடிய கருத்துக்களை ஓரம் கட்டிவிட்டு, இஸ்லாத்தின் உன்னதமான இந்த இலக்குகளை அடையும் வண்ணம் நாம் ஃபித்ராவை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.

அப்படி கொடுக்கும்போது அன்றாடம் நாம் எந்த வகையான தரத்தில் உணவைப் பயன்படுத்துகிறோமோ, அந்த தரத்திலிருந்து குறைந்துவிடாமல் தரமானதாக கொடுக்கவேண்டும். சிலர், தான் மட்டும் உயர்தர அரிசியைப் பயன்படுத்திவிட்டு இதுபோன்ற ஸதகாவுக்காக விலை மலிவான, தரம் குறைந்த அரிசியை வாங்கி விநியோகிப்பார்கள். பிறருக்கு தானமாகக் கொடுக்கும்போது, தான் பயன்படுத்துவதைவிட தரம் குறைந்தவற்றைத் தேர்ந்தெடுதுக் கொடுப்பது கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டியதாகும். இஸ்லாம் (நாம் முந்திய பதிவில் பார்த்தபடி) இதுபோன்ற தர்மங்களை அங்கீகரிக்கவில்லை, சிறந்தவற்றையே கொடுக்கச் சொல்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

எனவே பரிவுடன் ஏழைகளுக்கு உதவுவது, குறைந்த பட்சம் அவர்களைப் பெருநாளன்று பிறரிடம் கையேந்திக் கேட்காதிருக்கச் செய்வது போன்ற உன்னத மனிதம் கலந்திருக்கும் இந்த உயரிய நோன்புப் பெருநாள் தர்மத்தின் தத்துவத்தை உணர்ந்து, உரிய நேரத்தில் அலட்சியமின்றி அனைவரும் இந்த பெருநாள் தர்மத்தை ஈந்து, நாம் நோற்ற‌ நோன்பைத் தூய்மைப்படுத்திக் கொள்வோம்! அதன்மூலம் நாம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் இந்த‌ பண்டிகை நாளில், வறண்ட பாலையிலிருந்து ஏழை எளிய மக்களை வெளியேற்றி சோலைவன சுகந்தத்தை ந‌ம்முடன் பகிர்ந்திடச் செய்வோம்!இறைவனின் முழு திருப்பொருத்தத்தையும் நாம் அடைவோம், இன்ஷா அல்லாஹ்!


16 comments:

  1. அருமையான விளக்கம் மிகத் தத்ருபமாக விளக்கியுள்ளிர்கள் மிக்க நன்றி.

    இதைப் படித்தோர் மிக எளிதாக பயன் படக் கூடிய வகையில் அமைந்துள்ளது உங்கள் தொகுப்பு.

    ReplyDelete
  2. @ Mohamed Ayoub K...

    //இதைப் படித்தோர் மிக எளிதாக பயன் படக் கூடிய வகையில் அமைந்துள்ளது உங்கள் தொகுப்பு//

    அனைவரும் பயன்பெற்று அதன் நற்பலனை இறைவன் நமக்குத் தரட்டும், இன்ஷா அல்லாஹ்!

    தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அழைக்கும்.. அஸ்மா..
    கொஞ்சம் வேலை பளு காரணமாக என்னால் எனது ப்ளாக் பக்கம் போக முடியவில்லை மன்னிக்கவும்.. இன்ஷா அல்லாஹ் நான் பிறகு உங்களுக்கு விளக்கமாக எழுதுகிரேன் இது தான் என இ-மெயில் ID - barakathibm@gmail.com சலாம்...!!!!

    Salamath Hari Raya... "EE'D Mubarak"

    ReplyDelete
  4. பயனுள்ள பதிவு ...
    புனித நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. @ Farhath said...

    //புனித நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்//

    உங்களுக்கும் என் மனமார்ந்த ஈத் வாழ்த்துக்கள்! வருகைக்கு நன்றி.

    தொடர்ந்து வந்து பாருங்கள், கருத்து சொல்லுங்கள்!

    ReplyDelete
  6. @ Barakath......

    வ அலைக்குமுஸ்ஸலாம் பரக்கத்! பரவாயில்லை, பொறுமையாக பார்த்து சொல்லுங்கள். உங்கள் மெயில் ஐடி தந்ததற்கு மிக்க நன்றி! தேவைப்படும்போது இன்ஷா அல்லாஹ் கான்டக்ட் பண்ணுகிறேன்.

    உங்களுக்கும் "Salamath Hari Raya" ("EID Mubarak")!

    ReplyDelete
  7. அருமையான பகிர்வு.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. @ asiya omar...

    தங்களின் கருத்திற்கு நன்றி ஆசியாக்கா! உங்களுக்கு முடியும்போது தொடர்ந்து பாருங்கள், இன்ஷா அல்லாஹ்!

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    சகோதரி., நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.தற்செயலாய் உங்கள் வலைப்பூவை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ். இந்த பதிவு "பித்ரா" குறித்து முஸ்லிம்களுக்கு ஓர் நினைவூட்டும் (சிறப்பான) பதிவு.இந்த ரமலானில் தங்கள் மேற்கொண்ட நோன்பையும், தொழுகையும், துஆ, பாவமன்னிப்பையும் ஏனைய நல்ல அமல்களையும் அல்லாஹ் பொருந்தி கொள்வானாக! தங்களுக்காகவும் ,தங்கள் குடும்பத்திற்காகவும் என்றும் துஆ செய்தவனாய்.,

    ReplyDelete
  11. @ G u l a m...

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்....! உங்களுக்கும் ஈத் பெருநாளின்(தாமதமான) வாழ்த்துக்கள்!

    தற்செயலாய் இந்த வலைப்பூவை பார்வையிட்டது சந்தோஷம், அல்ஹம்துலில்லாஹ்! தங்களின் நீண்ட துஆவிற்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள், இன்ஷா அல்லாஹ்!

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    //நம்மிடையே ஏழைகள், செல்வந்தர்கள், நடுத்தர வர்க்கத்தினர் எனும் ஏற்றத்தாழ்வு வாழ்க்கை அமைப்பில் இருந்தாலும், இஸ்லாம் இந்த வேறுபாடான மக்களை ஒன்று சேர்க்கும் விதமாக சில வணக்கங்களை விஷேசமான முறையில் ஏற்படுத்தித் தந்துள்ளது.//

    ஆரம்ப வரிகளே ஆமர்க்களம்

    அருமையான விளக்கமான பதிவு சகோ நன்றி

    ReplyDelete
  13. விளக்கமாக சொல்லியிருக்கறீங்க அஸ்மா.நானும் சகாத் கொடுக்கிறேன் என்று வருகிற போகிற அப்பத்திக்கி தலையில் முக்காடு போட்டுக் கொண்டு வருகிறவர்களுக்கெல்லாம் அம்மாதம் முழுக்க சில்லறைகளை கொடுத்து விட்டு திருப்தி படுகிறாவர்கள் யோசிக்க வேண்டும்..பிச்சை எடுக்க உற்சாகிப்பது போல இருக்கும் அந்த வழக்கம்.யாருக்கு உணமையான தேவையோ எது தேவையோ அதை சமயத்துக்கு கொடுத்து உதாவலாம் என்பதே என் கருத்து

    Thalika

    ReplyDelete
  14. @ ஹைதர் அலி...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

    //ஆரம்ப வரிகளே ஆமர்க்களம்

    அருமையான விளக்கமான பதிவு சகோ நன்றி//

    அல்ஹம்துலில்லாஹ்.. வருகைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  15. @ Thalika...

    //நானும் சகாத் கொடுக்கிறேன் என்று வருகிற போகிற அப்பத்திக்கி தலையில் முக்காடு போட்டுக் கொண்டு வருகிறவர்களுக்கெல்லாம் அம்மாதம் முழுக்க சில்லறைகளை கொடுத்து விட்டு திருப்தி படுகிறாவர்கள் யோசிக்க வேண்டும்..//

    ஆமா ருபீனா.. ஜகாத்துக்கும் ஸதகாவுக்கும் வித்தியாசம் தெரியாமலோ அல்லது தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் இல்லாமலோ இதுபோன்ற சில்லரை தர்மங்களை கொடுத்துவிட்டு 'ஜகாத்' கடமை நிறைவேறிவிட்டதாக நினைத்துக் கொள்பவர்களுக்கு நாம் விழிப்புணர்வூட்ட வேண்டும்.

    //பிச்சை எடுக்க உற்சாகிப்பது போல இருக்கும் அந்த வழக்கம்.யாருக்கு உணமையான தேவையோ எது தேவையோ அதை சமயத்துக்கு கொடுத்து உதாவலாம் என்பதே என் கருத்து//

    உண்மையான, சரியான கருத்துதான். நன்றி ருபீனா.

    ReplyDelete
  16. அருமையாக எளிதில் புரியும் படியாக விளக்கி இருக்கீங்க.. ஜஸாக்கல்லாஹ்..

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை