அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday, 13 September 2010

மாற்றம் வேண்டாமே!


சிறப்புமிகுந்த‌ ரமலான் மாதம் நம்மைவிட்டு சென்று, ஷவ்வால் மாதமும் ஆரம்பித்து விட்டது. ரமலான் மாதத்தில் பள்ளிகளெல்லாம் நிறைந்திருந்தும், பள்ளிக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே இருந்த மக்களும் கூட‌ நல் அமல்கள் செய்வதில் ஆர்வம் காட்டியும், சின்ன சின்ன தவறுகளிலிருந்தும் கூட தூரமாக இருக்கவேண்டும் என்று மக்கள் மிகுந்த கவனமுடன் இருந்தார்கள். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! இவ்வாறுதான் ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்நாள் முழுவதையும் கழிக்க வேண்டும்.

யார் மரணிக்கும் வரை அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு, அந்த கட்டுப்பாட்டிலேயே உறுதியாக‌ வாழ்ந்து மரணிக்கின்றாரோ அவரின் மரண நேரத்தில் வானவர்கள் இறங்கி, 'உனக்கு சுவர்க்கம் உறுதி என்கிற நற்செய்தியை சொல்லுமாறு அல்லாஹ் எங்களை உன்னிடம் அனுப்பியிருக்கின்றான். ஆகவே நீ உன் மறுமை நிலைப் பற்றி பயப்படாதே! உன் குடும்பம் மற்றும் சொத்து சுகங்களைப் பற்றியும் கவலைப்படாதே! நாங்கள் இரு உலகத்திலும் உனக்கு உதவியாளர்களாக இருப்போம்' என அம்மலக்குகள் யாராலும் ஆறுதல் வார்த்தைகள் கூறமுடியாத நேரத்தில் அம்மனிதனுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறுவார்கள். இதைப் பற்றி அல்லாஹ்தாஆலா தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:

நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்தான்" என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, "நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் படவேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்" (எனக் கூறியவாறு) இறங்குவார்கள். "நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். "மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன் தரும் விருந்தாகும்" (இது என்று கூறுவார்கள்). (அல்குர்ஆன் 41: 30-32)

அல்லாஹ்வுடைய கட்டளைப்படி வாழ்வதென்பது, தன் வாழ்க்கையை குர்ஆனும் ஹதீஸும் போதிக்கின்ற போதனைகளின்படி அமைத்துக் கொள்வதாகும். அந்த போதனைகளின் வழியிலே உறுதியாக நிற்கவேண்டும்.

'நான் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களைத்தவிர வேறு யாரிடமும் கேட்க மாட்டேனே அத்தகைய ஒரு சொல்லை இஸ்லாத்தில் எனக்குக் கூறுவீர்களாக! எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வைக் கொண்டு நான் ஈமான் கொண்டேன் எனக் கூறுவீராக! பின்னர் (அதன் மீதே) உறுதியாக நிற்பீராக! எனக் கூறினார்கள்.'
அறிவிப்பவர்: அபூ அம்ரா ஸுப்யான் இப்னு அப்துல்லாஹ்(ரலி);
நூல்: முஸ்லிம்

எப்படிப்பட்ட சோதனைகள் வரும்போதும், காலங்கள் மாறும் போதும், இடங்கள் மாறும் போதும் நம் ஈமானின் நிலையோ இஸ்லாமிய நற் பண்புகளின் நிலையோ மாறக்கூடாது. ஆனால் பெரும்பாலான மக்களின் நிலை இதற்கு மாற்றமாக இருக்கின்றது. காலத்திற்குக் காலம் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றவர்களும், செழிப்பானபோது ஒரு நிலையும், சோதனை வரும்போது மற்றொரு நிலைக்கு மாறுபவர்கள்தான் அதிகம்!

நோன்பு மாதம் வந்தால் அல்லாஹ்வை அஞ்சி நடப்ப‌து - மற்ற மாதங்களில் அலட்சியமாக பாவங்கள் செய்வது, கம்பெனியில் தொழுவதற்கு நேரம் கொடுத்தால் மட்டும் அதற்காகவாவது தொழுவது - வீட்டுக்கு வந்தபின் தொழுகையை விடுவது, அல்லது வேலைக்கோ படிப்பிற்கோ செல்லும்போது அங்கு தொழ வாய்ப்பில்லை என்று கூறி தொழுகைகளை விட்டுவிடுவது, இஸ்லாமிய சூழலில் இருக்கும் வரை இஸ்லாத்தை கடைப்பிடிப்பது - பிறகு அதை விட்டுவிடுவது போன்ற செயல்கள் மக்களுக்கு வாடிக்கையாக இருப்பதை பார்க்கிறோம். ஏன் இந்த மாறுபட்ட‌ நிலை? ஒரு உண்மை முஸ்லிம் இப்படிப்பட்ட பண்புகளில் இருக்க முடியாது. எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் நம்மைக் கவனித்துக் கொண்டிருப்பது அந்த ஒரே அல்லாஹ்தான் என்ற அச்சமும் அதில் உறுதியும்தான் நம் நற்பண்புகளை மாற்றாது!

ஆக, ரமலான் மாதத்தில் எந்த இறைவனை பயந்து வாழ்ந்தோமோ அதே இறைவன் ஷவ்வால் மாதத்திலும் மற்ற எல்லா மாதங்களிலும் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற‌ உணர்வு நமது உள்ளத்தில் ஆழ பதிந்திருக்க வேண்டும். இதோ இஸ்லாத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்கு அல்லாஹ் உதாரணமாகக் காட்டும் ஒரு பெண்மணியின் வாழ்க்கையைப் பாருங்கள்!

மூஸா(அலை)அவர்கள் காலத்தில் எகிப்தை ஆட்சி செய்துக் கொண்டிருந்த 'ஃபிர்அவ்ன்' தன்னை கடவுள் என பிரகடனம் செய்து கொண்டிருக்கும்போதுதான் மூஸா(அலை) அவர்கள் அங்கு நபியாக அனுப்பப்பட்டார்கள். அவர்களோ அல்லாஹ்வை இறைவனாக நம்பும்படி மக்களிடம் பிரச்சாரம் செய்தார்கள். இப்பிரச்சாரத்தை ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவர்தான் ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா பின்த் முஸாஹிம் அவர்கள்!

மூஸா(அலை)அவர்கள் கொண்டு வந்த இறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களை ஃபிர்அவ்ன் கொடுமைப் படுத்தினான். தன் மனைவியையும் கடுமையாக கொடுமைப்படுத்தினான். சிறையில் அடைத்தான். ஒரு சர்வாதிகார மன்னனாக இருந்தவனின் மனைவி அனுபவிக்கக்கூடிய அத்துனை சுகபோகங்களையும் இழந்தாலும், அந்த ஃபிர்அவ்னின் அனைத்துக் கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு இஸ்லாத்தில் உறுதியாக இருந்தார்கள் ஆசியா(ரலி)அவர்கள்! அரசனாகிய தன் கணவனின் மூலம் கிடைத்த இன்பங்களை துறந்தது மட்டுமல்ல, அவன் கொடுத்த‌ தண்டனைகளையும் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் இவ்வளவு சோதனைகளுக்கு மத்தியிலும் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், அல்லாஹ்விடத்திலே "எனக்கு சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொடு என் இறைவா!" என்றுதான் கேட்டார்கள். சுப்ஹானல்லாஹ்,  இதற்குப் பெயர்தான் உறுதி!

எந்தவொரு சோதனைகளுக்கு மத்தியிலும் ஒவ்வொரு இறை விசுவாசியும் இஸ்லாத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்கு அல்லாஹ் இத்தியாகப் பெண்மணியை உதாரணமாகக் காட்டுகின்றான். அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்,

மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் "இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக" என்று (பிரார்த்தித்துக்) கூறினார். (அல்குர்ஆன் 66:11)

ஒவ்வொரு ரமலானும் நம்முடைய நற்செயல்களை புதுப்பித்துக் கொள்வதற்காகவே நமக்கு இறைவன் தந்த மாதமாகும்! அந்த ரமலானில் புதுப்பித்த நற்செயல்களையும் இறையச்சத்தையும் ரமலான் மாதத்தோடு முடித்து மூட்டைக்கட்டி வைத்துவிடாமலும், பழைய நிலைகளுக்கு நாம் திரும்பிவிடாமலும் இஸ்லாத்தில் உறுதியாக இருந்து, இஸ்லாம் காட்டும் நற்பண்புகளின் வழியில் நம் வாழ்வை அமைத்துக் கொள்வ‌தற்கு அல்லாஹ்தாஆலா நம் அனைவருக்கும் அருள்புரிவானாக!

6 comments:

 1. அல்லாஹ்தாஆலா நம் அனைவருக்கும் அருள்புரிவானாக!

  ஆமீன்.

  ReplyDelete
 2. @ ராஜவம்சம்...

  //அல்லாஹ்தாஆலா நம் அனைவருக்கும் அருள்புரிவானாக!// இன்ஷா அல்லாஹ்!

  ReplyDelete
 3. சரியான நேரத்தில் சரியான சப்ஜெக்ட்.உண்மை தான்

  தளிகா

  ReplyDelete
 4. @ தளிகா...

  //சரியான நேரத்தில் சரியான சப்ஜெக்ட்.உண்மை தான்//

  கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தளிகா! மக்களுக்கு பயன்பட்டால் சந்தோஷம், அல்ஹம்துலில்லாஹ்!

  ReplyDelete
 5. நீங்க No Image கு பதிலா அல்லாஹு போட்டு இருப்பது நல்ல இருக்கு லாத்தா..

  ReplyDelete
 6. @ Barakath...

  டெம்ப்ளேட் புதுசா மாற்றும் வரைக்கும் இப்படியே ஓடட்டுமேன்னுதான்! "No Image" னு பார்த்தா டென்ஷனாகுது :)

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!