அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday 30 September 2010

இன்னும் சில மணித் துளிகளே...!


அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் ஹைகோர்ட்டின் லக்னோ கிளை கோர்ட்டு இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்க உள்ளது. உத்தரப்பிரதேச கோர்ட்டுகளில் கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய இடம் தங்களுக்குச் சொந்தம் என்று இரு தரப்பினருமே ஆவணங்களை கோர்ட்டில் ஒப்படைத்து, வழக்கு விசாரணையில் இருக்கும்போதே பிரச்ச‌னைக்குரிய இடத்திலுள்ள ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டு நீதிமன்ற அவமதிப்பு நடந்திருக்கிறது நம் தாய் திருநாட்டில்! 450 ஆண்டுகால பழமைவாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல கலவரங்கள், ஏராளமான அப்பாவி மனித உயிர்கள் என பல கோர சம்பவங்கள் கடந்த 60 ஆண்டுகளில் நம் நாட்டில் நடைபெற்றுள்ளன.

கடந்த 1996-ம் ஆண்டு இறுதிக் கட்ட விசாரணை தொடங்கி நடந்தது. கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி அனைத்து விசாரணைகளும் நிறைவுபெற்றன. தீர்ப்பை எப்போது அறிவிப்பது என்பது குறித்து கடந்த 2 மாதமாக ஆலோசிக்கப்பட்டு வந்தது. பல்வேறு இடையூறுகளுக்குப் பிறகு இன்று இந்த வழக்கில் வர இருக்கும் தீர்ப்பை வழங்கும் 3 நீதிபதிகள் இந்த பிரச்சனையில் எத்தகைய தீர்வு காண்பார்கள்? என்ற எதிர்பார்ப்பே எல்லோரது மனதிலும் எதிரொலித்தபடி உள்ளது.

3 நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி எஸ்.யூ.சிபகத்துல்லாஹ் கான், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். அலிகாரில் சிவில் வக்கீலாக பணியாற்றி நீதிபதியான இவர், மிக மிக பொறுமைசாலி. ஆனால் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதில் உறுதியாக இருப்பவர் என்று பெயர் எடுத்தவர்.

நீதிபதி சுதீர் அகர்வால் மீரட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். வரி தொடர்பான வழக்குகளில் சிறப்பு பெற்றவர். உத்தரப்பிரதேச மாநில கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றி அனுபவம் பெற்றவர்.

நீதிபதி டி.வி.சர்மா நாளை (அக்டோபர்-1) ஓய்வுபெற உள்ளார். உத்தரப்பிரதேச பாராளுமன்ற விவகார முதன்மை செயலாளராக பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு இவர் அலகாபாத் ஹைகோர்ட்டின் நிரந்தர நீதிபதிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு போய் சேரும் என்பது இவர்கள் 3 பேரின் கையில்தான் உள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்க உள்ளதால் 3 நீதிபதிகளுக்கும் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களோடு 200 அதிரடிப்படை வீரர்களும் கோர்ட்டு வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்படும்போது கோர்ட்டு வளாகம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடங்கள் மீது போலீசார் ஹெலிகாப்டரில் பறந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். தீர்ப்பை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலத்தின் அனைத்து வழிகளும் மூடி “சீல்” வைக் கப்பட்டுள்ளது.தீர்ப்பு சமயத்தில் சட்டம்- ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக லக்னோவில் பெரிய போலீஸ் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. லக்னோ நகரம் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் ஏற்பட்டால் அது பற்றி பொதுமக்கள் தகவல் கொடுத்து உதவ ஹெல்ப் -லைன்களை போலீசார் ஏற்படுத்தியுள்ளனர். லக்னோ நகரில் உள்ள மதுக்கடைகள், பட்டாசு விற்பனை கடைகள் மூடப்பட்டுள்ளன.

லக்னோ கோர்ட்டு வளாகத்தின் அருகில் மாநில நெடுஞ்சாலை உள்ளது. அந்த சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு வழங்கப்பட இருக்கும் அலகாபாத் ஐகோர்ட்டு லக்னோ கிளை வளாகத்தின் 21-வது எண் கோர்ட்டு பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கோர்ட்டு வளாகத்துக்குள் இன்று (வியாழன்) காலை முதலே யாரும் அனுமதிக்கப்படவில்லை. தீர்ப்பை கேட்க பொதுமக்கள் யாரும் கூட்டமாக திரண்டு வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பிற்பகல் 3.30 மணிக்கு கோர்ட்டுக்குள் செல்ல அயோத்தி வழக்கின் வாதி, பிரதிவாதி, மற்றும் வக்கீல்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள், கோர்ட்டு வளாகத்துக்குள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.


செய்தி சேகரிக்க உலகின் பல பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான நிருபர்கள் லக்னோவில் குவிந்துள்ளனர். அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனி இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. 3 நீதிபதிகளும் தீர்ப்பு கூறி முடித்ததும், அந்த விபரங்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள செய்தியாளர்களுக்கு கொடுக்கப்படும். அதன் பிறகே அயோத்தி தீர்ப்பு வெளி உலகுக்குத் தெரிய வரும்.


இன்று பிற்பகல் தீர்ப்பு வாசிக்கப்படும்போது கோர்ட்டு வளாகத்துக்குள் யாரும் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். அது போல தீர்ப்பு முழுமையாக வெளியாகும் வரை யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். தேவையற்ற வதந்தி கிளம்புவதைத் தடுக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோர்ட்டு வளாகத்தில் செல்போன்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு சமயத்தில் பதற்றம் ஏற்படாமல் இருக்க அலகாபாத், லக்னோ, அயோத்தியில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். வெடிகுண்டு நிபுணர்களும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ஊரடங்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. (பத்திரிக்கைச் செய்திகள்)

சர்ச்சைக்குரிய பகுதியில் பல்வேறு விஷயங்களில் இழுபறி நிலவுகிறது. குறிப்பாக 7 விஷயங்களில் இரு தரப்பினரும் தீர்ப்பை எதிர்பார்க்கிறார்கள். அந்த 7 விஷயங்கள் :-

1. சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தாரா?
2. சர்ச்சைக்குரிய இடத்தில் மசூதி இருந்ததா?
3. சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள கட்டிடத்தை யார், எப்போது கட்டினார்கள்?
4. சர்ச்சைக்குரிய இடத்தில் இந்து கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதா?
5. சர்ச்சைக்குரிய பகுதியில் 1949-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந்தேதி இரவு ராமர் சிலையை அத்து மீறி நுழைந்து வைத்து பிரதிஷ்டை செய்தார்களா?
6. சர்ச்சைக்குரிய இடத்தை சொந்தம் கொண்டாடுவதற்கு கால வரம்பு ஏதேனும் உள்ளதா?
7. சர்ச்சைக்குரிய இடத்தின் உள்பகுதி, வெளிப்பகுதி நிலை என்னவாக இருக்க வேண்டும்?

இந்த 7 கேள்விகளுக்கும் இன்று பிற்பகல் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த விடை ஒரு நிரந்தர தீர்வாக இருக்கலாம் என்று இரு தரப்பினருமே ஆவலுடன் உள்ளனர்.

இந்த நிலையில்....,

முழுக்க முழுக்க நமக்கு சொந்தமான, நாம் வசிக்கும் நம் வீடு அடுத்த வீட்டுக்காரனால் இடிக்கப்பட்டு அது நமக்கா, இடித்தவனுக்கா என்ற தீர்ப்புக்காக இரண்டு தலைமுறைகள் செல்லுமளவு பல வருடங்கள் கோர்ட்டில் விசாரணையை இழுத்தடித்து, இடித்தவனுக்குரிய தண்டனையும் கொடுக்கப்படாமல், அந்த தீர்ப்பு தனக்கு பாதகமாக அமையும் பட்சத்தில், எந்த ஒரு மனிதனும் ஆதங்கப்படவே செய்வான். ஆனால் அதுபோன்ற அநியாயமாக பாதிக்கப்படும் சூழல்களில் தனிப்பட்ட ஒரு மனிதனாக இருந்தாலும் சரி, ஒரு சமுதாயமாக இருந்தாலும் சரி, அந்த சூழலில் நாம் எவ்வாறு இருக்கவேண்டும்? நம்முடைய வீர தீரத்தைக் காட்டுகிறோம் என்று ஆவேசப்படுவதா? அமைதிக் காத்து யாருக்கும் தீங்கு விளைவிக்காத‌ அடுத்த கட்ட முயற்சிகளை மேற்கொள்வதா? என்றால், அமைதியும் பொறுமையுமே எந்த நிலையிலும் நம்மை மனிதத் தன்மையிலிருந்து பிறழாமல் காக்கும் என்பதைதான் நாம் அனைவரும் மனதில் உறுதியாக பதிய வைத்துக் கொள்ளவேண்டும்.

தீர்ப்பு எதுவானாலும் அதை நாம் எவ்வாறு அணுகுவது? 

தீர்ப்பு என்றாலே ஒரு வழக்கின் நியாயங்கள் எந்த பக்கம் உள்ளனவோ அந்த ஏதாவது ஒரு பக்கம்தான் சொல்லமுடியும். ஆக, பாபர் மசூதி தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக இருந்தால் இந்துக்களுக்கும், இந்துக்களுக்கு சாதகமாக இருந்தால் இஸ்லாமியர்களுக்கும் மன வேதனையும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. இந்த தீர்ப்பு இன்னும் 50 வருடங்களுக்கு பிறகு வெளியானாலும் இந்துக்கள்-இஸ்லாமியர்கள் என்ற‌ இந்திய பாரம்பரியமிக்க இனப் பிரிவினைகளுக்கு பாதகமான சூழலே நிழவும். நம் நாட்டு இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்து பிரிவினருக்கும் அல்லாஹ்தஆலா மன அமைதியையும் பொறுமையையும் கொடுப்பானாக!                                                                                                                    

நம் இந்திய நாட்டு அனைத்து மத, மார்க்க சகோதர, சகோதரிகளே! தீர்ப்பு எப்படி அமைந்தாலும் அனைத்து தரப்பினரும் அமைதி காக்கவேண்டும். இந்திய நாட்டு அரசியலமைப்புச் சட்டப்படி, உயர் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் இறுதியானவை அல்ல. ஒரு வழக்கில் உயர் நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லமுடியும். ஆகவே, நாளை வழங்கப்படும் தீர்ப்பு எத்தகையதாக இருந்தாலும் இரு தரப்பாரும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமை காக்க வேண்டும்.

வன்முறை நெருப்பைத் தூண்டிவிட்டு தங்கள் ஆதாயங்களுக்காக குளிர்காய நினைக்கும் குறுமதியாளர்களின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகிவிடக் கூடாது. அயோத்'தீ'யை எரிய விடாமல் அனைவரையும் மதித்து, அரவணைத்து செல்லும் பொறுப்பை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனது கடமையென செய்ய வேண்டும். வதந்திகளையோ, வன்முறை செய்திகளையோ பரப்பாமல் இருக்க வேண்டும். பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். நாளை மற்றொரு நாளாக இருக்க வேண்டுமே தவிர, வரலாற்றில் கறைபடியும் வகையில் மற்றொரு கறுப்பு நாளாக மாறி விடாமல் இருக்க இந்திய நாட்டின் இறையாண்மையைப் பேணி பாதுகாக்கும் வகையில் அனைவரும் அமைதி காப்போம்!

இஸ்லாமிய பெருமக்களுக்காக தனிப்பட்ட முறையில்:

1) தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக இருந்தால்

பாபர் மசூதிக்கு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கவிருக்கும் நீதிமான்கள் பாபர் மசூதியை இடித்தது முறையல்ல என்று தீர்ப்பளித்து அந்த இடம் இஸ்லாமியர்களுக்கு உரியது என்று தீர்ப்பளித்தால், நாம் நமக்கு உரிய நியாயமான தீர்ப்பை இந்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுள்ளோம் என்று எண்ணி, அல்ஹம்துலில்லாஹ் (புகழ் அனைத்தும் இறைவனுக்கே) என்று கூறி அமைதி காக்க வேண்டும். ஆரவாரப்படக்கூடாது. இதை மீறி தம்பட்டம் அடித்து ஆரவாரப்பட்டால் நமக்கு எதிர்த் தரப்பினருக்கு மனவேதனை ஏற்படும். மீண்டும் அங்கிருந்து ஒரு பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும். எனவே தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தால் இறைவனைப் புகழ்ந்துவிட்டு அமைதியாக இருக்கவேண்டும்.

2) தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக இருந்தால்

பாபர் மசூதிக்கு தீர்ப்பு வழங்கும்போது அது இந்துக்களுக்கு சாதகமாக அமைந்து நமக்கு எதிராக அமைந்துவிட்டால் நாம் ஆத்திரப்படக்கூடாது. ஏனெனில் இஸ்லாமியர்கள் என்றாலே அமைதியை விரும்புபவர்கள் என்றுதான் பொருள். எனவே இந்துக்களுக்கு தீர்ப்பு சாதகமாக அமையும் பட்சத்தில் நாம் நம்மை திடப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தக்க‌ட்ட மேல் முறையீடுகளுக்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமே தவிர, மற்ற சமுதாயத்திற்கு எந்த சிறு தீங்கும் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுவிடக்கூடாது!

சிந்திக்கப் படைக்கப்பட்ட சமுதாயமே! இதோ உங்கள் சிந்தனைக்கு சில வசனங்கள்:

‘பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்’ (அல்குர்ஆன் 2:153)


‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். (எதிரிகளை விஞ்சும் வகையில்) பொறுமையில் நிலைத்திருங்கள். (சத்தியத்திற்காகத் தொண்டு செய்திட) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருங்கள்” (அல்குர்ஆன் 3:200)


‘யார் பொறுமையை மேற்கொள்கிறார்களோ மேலும் மன்னிக்கவும் செய்கிறார்களோ அவர்களின் அந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயல்களைச் சேர்ந்ததாகும்’ (அல்குர்ஆன் 42:43)

2 comments:

  1. தீர்ப்பு வந்திடுச்சே அஸ்மா, கவனிச்சீங்களா? இப்படி ஒரு தீர்ப்பெழுத எதுக்கு அறுபது வருடம்னுதேன் புரியலை. அதுவுமில்லாம...இந்த தீர்ப்பால யாருக்கு லாபம்? மீண்டும் மீண்டும் பிரச்சினைகள் தலை தூக்ககூடிய தீர்ப்பைதான் தந்திருக்காங்க. சுப்ஹானல்லாஹ். முஸ்லிம்களுக்குன்னில்லை, மொத்த இந்தியாவுக்கே விடியல் காணவில்லை, இன்னமும்!!

    ReplyDelete
  2. @ அன்னு...

    ஆமா அன்னு... பார்த்தேன். மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டு வந்த சமுதயம் இப்போதும் ஏமாற்றப்பட்டுள்ளது! நீதிமான்களே நீதிக்கு சாவு மணியடித்தால்... இந்தியாவுக்கு விடிவுகாலமே பிறக்காதுதான் அன்னு :(

    கருத்துக்கும் வரவுக்கும் நன்றி அன்னு!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை