அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday 4 October 2010

நியாயமான சில பார்வைகள்

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து அந்த தீர்ப்பைப் பற்றி "இது நீதியற்ற தீர்ப்பு" என உலக அளவில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில்,  அவற்றிலிருந்து உங்கள் பார்வைக்காக சில:

"இந்த தீர்ப்பு அரசியல் தனமானது; நியாயத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு அல்ல. மேலும் இந்த தீர்ப்பை பார்க்கும் போது குரங்குகள் தங்களுக்கு பங்கிட்டு கொடுத்து கொள்வதை போன்று உள்ளது."
- முன்னால் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ் லிப்ரஹான் அவர்கள்

                                                

                                                                                                        
                                                                                                                   **********************


"பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதுதான் பிரச்சனையின் அடிப்படை. அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் பெரிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம், அதைச் சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் அணுகாமல், ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பு வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.


450 ஆண்டுகாலமாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததும், அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்ததும், 1949ல் அங்கே வலுக்கட்டாயமாக ராமர் சிலைகளை உள்ளே நிறுவி, அதைக் காரணம் காட்டி மசூதியை இழுத்து மூடியதும், 1992ல் இந்துத்துவச் சக்திகள் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததும் நம் கண்முன்னே நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள். ஆனால், ராமர் அயோத்தியில் தான் பிறந்தார் என்பதற்கான வரலாற்று ஆதாரமோ ஆவணமோ எதுவும் இல்லை என்பதும் ராமர் ஒரு புராண நாயகன்தான் என்பதும் ஒரு சாதாரண பாமரனுக்குக் கூடப் புரியும்.


இது இரண்டு நீதிபதிகளுக்குப் புரியாமல் போனது வியப்பளிக்கிறது. மேற்படி உண்மைகளை மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பில் சொல்லியும், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் அது மூடி மறைக்கப்படுகிறது.


பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த அத்வானி உள்ளிட்ட இந்துத்துவச் சக்திகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைச் சுதந்திரமாக உலவவிட்டுள்ள நீதிமன்றமும் சட்டமும், இப்போது மசூதியையும் கபளீகரம் செய்து இந்துத்துவச் சக்திகளிடம் ஒப்படைக்கத் துணிந்திருப்பது மிகப் பெரும் மோசடியாகும்.


இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது ஜனநாயகச் சக்திகளின் கடமை என விடுதலைச் சிறுத்தைகள் கருதுகிறது."


- திருமாவளவன்                                  
                                       **********************


"அலஹாபாத் உயர் நீதிமன்றம் அளித்த பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வரலாற்றின் கண்ணியத்திற்கு இழுக்கை ஏற்படுத்திவிட்டது. மேலும் இந்த தீர்ப்பு நீதிமன்ற சட்டத்தில் எங்கும் இல்லாத புதிய வழிமுறையை வகுத்துள்ளது. அதாவது இனிமேல் யார் வேண்டுமானாலும் இந்த இடம் இந்த கடவுள் அல்லது கடவுள் தன்மையுள்ள ஒருவர் பிறந்த இடம் எனக் கூறி ஆதாரம் ஏதும் காட்டாமல் நிலத்தை உரிமைக் கொண்டாட இந்த தீர்ப்பு வழிவகை செய்துள்ளது." 



- Early India என்ற‌ புத்தகத்தின் பிரபல இந்திய வரலாற்று நிபுணர் ரோமிலா தாப்பர், முன்னணி ஆங்கில நாளேடான THE HINDU வில்
                                                                                                              *********************
                                                                                                        
"ராமர் கிருதயுகத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டதாகும். இப்படி கற்பனைக்கே எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்குமுன், நடந்த நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என்று அறுதியிட்டு உறுதியாக வழங்கப்பட்டிருக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பை பார்க்கும்போது, சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது!(?)

ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, தென்னகத்தையே கட்டி ஆண்ட மாமன்னன் இராஜராஜசோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கான நினைவுத்தூண் அமைந்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது."



- முதலமைச்சர் கருணாநிதி 


                                  **********************




"அயோத்தி தீர்ப்பு எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. நமது நாடு மத நம்பிக்கையை விட, சட்டம் மற்றும் அரசியல் சட்டத்தால்தான் ஆளப்படுகிறது. ஆனால் அயோத்தி தீர்ப்போ, சட்டம் மற்றும் ஆதாரங்களைவிட, மத நம்பிக்கைக்கே முன்னுரிமைக் கொடுத்து அளிக்கப்பட்டுள்ளது. இது நாட்டுக்கோ, அரசியல் சட்டத்துக்கோ, ஏன் நீதித்துறைக்கோ கூட நல்ல அறிகுறி அல்ல. இத்தீர்ப்பால், முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர். அவர்கள் நம்பிக்கை இழந்த நிலையில் உள்ளனர். அவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லப் போவதாக அறிந்தேன். அங்காவது மத நம்பிக்கைக்கு முன்னுரிமை கொடுக்காமல், சட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்து நீதி வழங்கப்படும் என்று நம்புகிறேன். "

-   முலாயம்சிங் யாதவ்
                                      **********************

"உண்மையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கி, வருங்கால‌த்திற்கு மோசமான ஒரு முன் உதாரணத்தை இந்த தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு இந்திய மதச் சார்பின்மையை குழி தோண்டி புதைக்கும் வண்ணமாக அமைந்துள்ளது. மேலும் உச்ச நீதிமன்றம் இதை முறையாக விசாரிக்க வேண்டும்." 

-   மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் 

                                                            

                                   **********************


"உயர்நீதி மன்றம் நீதி வரம்பை தாண்டியுள்ளது. எந்த வாதியும் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையிடுவார்கள். இங்கு இப்போதைக்குள்ள கேள்வி, உயர் நீதி மன்றம் ஒரு தவறான அடிப்படையை உருவாக்கியுள்ளதா என்பதே! இது (இந்த தீர்ப்பு ) மிகவும் ஒரு தலைப்பட்சமானது. இந்த சொத்து யாருக்கு சொந்தம் என்பது தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும். ‘இந்த கேள்விக்கு எங்களால் (உயர் நீதிமன்றம்) பதில் சொல்ல இயலாது. ஆகவே பிரித்துக்க் கொள்ளுங்கள்’ என்று சொல்லப்படக்கூடாது. யாருக்கு இடம் சொந்தம் என்பது தெள்ளத் தெளிவாக சொல்லப்பட்டிருக்க வேண்டும்”




-  பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ் தவான்



10 comments:

  1. தீவிரவாதிகள் உருவாவதல்ல உருவாக்கப்படுகிறார்கள் இந்த ஒரு தீர்ப்பை வைத்து எத்தனை பேருக்கு மூளைசலவை செய்யப்பட்டதோ யார் அறிவார்.

    ReplyDelete
  2. @ ராஜவம்சம்...

    //தீவிரவாதிகள் உருவாவதல்ல உருவாக்கப் படுகிறார்கள்// உண்மதான்! பாதிக்கப்பட்டவர்களுக்கு இறைவன்தான் பொறுமையைக் கொடுக்கவேண்டும்.

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  3. நல்ல தொகுப்பு. ஆனால் முலாயம்சிங் யாதவ், கருணாநிதி போன்றவர்களின் எச்சங்கள் தேவையற்றது. எப்படி வேண்டுமானாலும் சுழலும் நாக்கு இவர்களின் வாயில் இன்னும் பல வித்தைகள் செய்யும், குட்டிக்கரணம் அடிக்கும். மசூதி இடிக்கப்படும்போது அளிக்கப்பட்ட வாக்குறிதிகள் காற்றில் பறந்தது போலவே இந்த தீர்ப்பில் குற்றம் புரிந்தவர்களை கடக்கண் கொண்டு கூட பாராமலலிருந்ததும் சுட்டிக்காட்டுகிறது. கட்சிக்கொடி எந்த நிறமாயினும், கட்சியின் கொள்கை எதுவாயினும் முஸ்லிம்கள் என்று வரும்போது எல்லோருக்கும் கொள்கை ஒன்றுதான். அது உலகின் எந்த மூலையில் இருக்கும் நாடாயினும் சரி!! சுப்ஹானல்லாஹ்...அல்லாஹ் மிக மிக தூய்மையானவன். அவனின் தீர்ப்பையே நம் எதிர்நோக்குவோம். அல்லாஹு முஸ்த'ஆன்.

    ReplyDelete
  4. @ அன்னு...

    //முலாயம்சிங் யாதவ், கருணாநிதி போன்றவர்களின் எச்சங்கள் தேவையற்றது. எப்படி வேண்டுமானாலும் சுழலும் நாக்கு இவர்களின் வாயில் இன்னும் பல வித்தைகள் செய்யும், குட்டிக்கரணம் அடிக்கும்.//

    மறுக்க முடியாது, மறக்கவும் முடியாதுதான் அன்னு! ஆனால் இந்த நேரத்தில் எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி "நல்ல தீர்ப்பு" என்று "பாராட்டு" பாட்டு படிக்கும்போது, தீர்ப்பின் அநீதியை சொல்ல இவர்களுக்கும் இந்தளவுக்கு மனம் வந்ததே என்பதை சுட்டிக்காட்டவே அவற்றையும் சேர்த்தேன்.

    முலாயம்சிங் கேட்ட மன்னிப்பு:

    "கடந்த நாடாளுமன்ற தேர்தலில், மத்தியில் மதவாத சக்திகள் ஆட்சியமைப்பதை தடுப்பதற்காக சில தவறான சக்திகளின் ஆதரவை பெற்றேன். இது மதச்சார்பற்ற சக்திகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதோடு,இஸ்லாமிய சகோதரர்களின் உணர்வுகளையும் புண்படுத்திவிட்டது.

    எனது இந்த தவறை நான் ஏற்றுக்கொண்டு,எனது அந்த செயலுக்காக இஸ்லாமிய சகோதரர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். நான் செய்த இந்த தவறை இனிமேல் செய்யமாட்டேன் என்று எனது இஸ்லாமிய சகோதரர்களுக்கு உறுதியளிப்பதோடு, இஸ்லாமிய சமூகத்தினருக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

    பார்ப்போம் பொறுத்திருந்து!

    //கட்சிக்கொடி எந்த நிறமாயினும், கட்சியின் கொள்கை எதுவாயினும் முஸ்லிம்கள் என்று வரும்போது எல்லோருக்கும் கொள்கை ஒன்றுதான்.// சரியாச் சொன்னீங்க. கருத்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி அன்னு!

    ReplyDelete
  5. பார்வைகள் மாறுபடும்,தீர்ப்பு என்ற பெயரில் நினைத்ததை சாதித்து விட்டார்கள்.இது முன்பே தெரிந்தது தான் ,இதற்கு எதற்கு அறுபது ஆண்டு காலம்?

    ReplyDelete
  6. //இது முன்பே தெரிந்தது தான் ,இதற்கு எதற்கு அறுபது ஆண்டு காலம்?//

    உடனே சொல்லும் அநீதியான தீர்ப்பு அதிக கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதால் திட்டம் போட்டு இழுத்துப் பூட்டி, பின்னர் கொஞ்சம் ஆறப் போட்டு இடித்துத் தள்ளி, பின்னர் மேலும் ஆறப்போட்டு இப்படி ஒரு அநியாய தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது. அதற்குதான் இந்த 60 வருஷ காலமும்!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா!

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு அஸ்மா. என்ன சொல்ல என்று தெரியவில்லை. பள்ளிவாயில்கள் எல்லாம் இறைவனின் இல்லம். அல்லாஹுடைய சொத்து அவன் காப்பாற்றுவான்.

    அலம் தரகை பஃபல ரப்புக்க ஃபி அஸ்காஃபில் பீல்.

    என்ற சூராவை நினைவில் கொள்ளுங்கள். இந்த சூரா அப்ரஹா மன்னருக்கு நேர்ந்த கதையை எடுத்துச் சொல்கிறது. எல்லாம் அவன் பாத்துப்பான். நம்பிக்கை கொள்வோம். உண்மையை யாராலும் மறைக்க முடியாது. அது வெளியாகியே தீரும். இன்ஷா அல்லாஹ்!.

    ReplyDelete
  8. @ Starjan ( ஸ்டார்ஜன் )...

    //....நம்பிக்கை கொள்வோம். உண்மையை யாராலும் மறைக்க முடியாது. அது வெளியாகியே தீரும். இன்ஷா அல்லாஹ்!//

    இன்ஷா அல்லாஹ். அறப் போராட்டங்களின் மூலமும் பொறுமையைக் கொண்டும் இறைவனிடம் உதவி தேடுவோம்! அல்லாஹ் போதுமானவன் நானா. உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!

    ReplyDelete
  9. ம்ம்... இந்திய முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல்வாதிகளுக்குள்ளேயே ஒற்றுமையோடு இருந்திருந்தால் இம்மாதிரி தீர்ப்பெல்லாம் வந்திருக்காதோ என்னவோ... இனியாவது முஸ்லிம் அமைப்புகள் திருந்தினால் சரி..

    ReplyDelete
  10. @ ஹுஸைனம்மா...


    //இனியாவது முஸ்லிம் அமைப்புகள் திருந்தினால் சரி..//

    சேவைகளும் சுயநலமாகிப் போனதால்தான் இவ்வள‌வு பிரிவுகளும் மிஸஸ்.ஹுஸைன். எல்லாமே அல்லாஹ்வுக்காக என்ற எண்ணம் எப்போது ஆழப் பதிந்துவிடுமோ, அப்போது இஸ்லாமிய இயக்கங்கள் நிச்சயம் ஒன்று சேரும் இன்ஷா அல்லாஹ்! அதற்காக நாம் துஆ செய்வோம்.

    உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தோழி!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை