அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday 4 November 2010

அநியாயமான‌ நிபந்தனைகளும் அண்ணலின் பணிவும்(ஹுதைபிய்யா தொடர் 5)

ஹுதைபிய்யா தொடரின் முதல் பகுதி, இரண்டாவது பகுதி, மூன்றாவது பகுதி, நான்காவது பகுதிகளைப் பார்க்கவும்.


அண்ணல் நபி(ஸல்)அவர்கள் ஒப்பந்தத்திற்காக‌ முயற்சிக்கின்ற அந்த வேளை, 'மக்கா எந்த வகையிலும் முஸ்லிம்களை ஏற்கும் நிலையில் இல்லை' என்ற வகையில் இம்முயற்சியைக் குழப்பிவிடும் நோக்கம் கொண்டதாக நிராகரிப்பவர்களின் நடவடிக்கைகள் அமைகின்றன. நபி(ஸல்)அவர்களோடு பேசுவதற்கு பொருத்தமற்றவர்களை அவர்களிடம் அனுப்பியவர்கள், இப்போது முஸ்லிம்களுக்கு வெளிப்படையாகவே பாதகமாகத் தோன்றக்கூடிய, அவர்களை ஆத்திரமூட்டக்கூடிய‌ நிபந்தனைகளை உடன்படிக்கையில் எழுதச் சொல்கிறார்கள். ஆரம்பிக்கும்போதே தகராறுக்காக‌ மறுத்துப் பேசுகிறார்கள் நிராகரிப்பளர்கள்.

நபி(ஸல்) அவர்கள் எழுத்தரை அழைத்தார்கள். பின்னர், "பேரருளாளனும் கருணையன்பு உடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்..." என்று (சமாதான ஒப்பந்தத்திற்கான ஆரம்ப‌ வாசகத்தை)நபியவர்கள் சொன்னார்கள்.

சுஹைல், "ரஹ்மான்- கருணையன்புடையோன்" என்பது என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும், "இறைவா! உன் திருப் பெயரால்..." என்று நீங்கள் முன்பு எழுதிக் கொண்டிருந்ததைப் போல்தான் நான் எழுதுவேன்" என்றார்.

முஸ்லிம்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் -அளவற்ற அருளாளனும் கருணையன்பு உடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்" என்றுதான் இதை எழுதுவோம்" என்று கூறினார்கள்.

நபி(ஸல்)அவர்கள், "பிஸ்மிக்க அல்லாஹும்ம - இறைவா! உன் திருப்பெயரால் என்றே எழுதுங்கள்" என்று சொன்னார்கள்.

பிறகு நபி(ஸல்)அவர்கள், "இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது அவர்கள் செய்துக் கொண்ட சமாதான ஒப்பந்தம்" என்று (எழுதும்படி வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், "அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் இறையில்லத்திற்கு வரவிடாமல் உங்களைத் தடுத்திருக்கவும் மாட்டோம்; உங்களுடன் போரிட்டிருக்கவும் மாட்டோம். மாறாக, 'முஹம்மத் பின் அப்தில்லாஹ் -அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது' என்று எழுதுங்கள்" என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்வதாக நீங்கள் கருதினாலும் நிச்சயம் நான் அல்லாஹ்வின் தூதர்தான். (இருந்தாலும் உங்கள் விருப்பப்படி) 'முஹம்மத் பின் அப்தில்லாஹ் - அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது' என்றே எழுதுங்கள்" என்று கூறினார்கள்.


அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள். நபி(ஸல்)அவர்கள், அவர்களுடன் விட்டுக்கொடுத்து ஒத்துப் போகவிட்டதற்குக் காரணம் அவர்கள், "அல்லாஹ்வினால் புனிதமாக அறிவிக்கப்பட்ட (மக்கா நகரத்)தை கண்ணியப்படுத்துகிற எந்த ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டாலும் அதை அவர்களுக்கு நான் (வகுத்துக்)கொடுப்பேன்" என்று முன்பே சொல்லியிருந்ததை நிறைவேற்றுவதற்காகதான்.

                                                     நூல்: புகாரி (2731)

புகாரியின் மற்றொரு அறிவிப்பிலே,

ஒப்பந்தத்தை அவர்கள் எழுதியபோது, "இது அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தத்தின் நிபந்தனைகள்" என்று எழுதினார்கள். உடனே மக்காவாசிகள், "நாங்கள் இதை ஒப்புக் கொள்ள மாட்டோம்; நீங்கள் இறைத்தூதர்தாம் என்று நாங்கள் அறிந்திருப்போமாயின் உங்களை (மக்காவில் நுழையவிடாமல்) தடுத்திருக்க மாட்டோம். ஆயினும், நீங்கள் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான்" என்று கூறினார்கள். நபி(ஸல்)அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதராவேன்; அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது ஆவேன்" என்று பதிலளித்துவிட்டு, அலீ(ரலி) அவர்களை நோக்கி, 'இறைத்தூதர்' என்ற வார்த்தையை அழித்துவிடுங்கள்" என்று கூறினார்கள். அலீ(ரலி), "முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தங்கள் (அந்தஸ்தைக் குறிக்கும்) பெயரை ஒருபோதும் அழிக்கமாட்டேன்" என்று கூறிவிட்டார்கள்.                          
                                           நூல்: புகாரி (2699)

பிறகு ஒவ்வொரு நிபந்தனையும் சொல்லப்படும்போது அதை நிராகரிப்பவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவிப்பதும் மாற்றமாக சொல்வதுமாக இருந்தனர்.

முதல் நிபந்தனை:

பிறகு சுஹைலுக்கு நபி (ஸல்) அவர்கள், "எங்களை (இந்த ஆண்டு) இறையில்லத்திற்குச் செல்லவிடாமலும் அதை நாங்கள் தவாஃப் செய்ய விடாமலும் தடுக்கக் கூடாது" என்று (வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், "அல்லாஹ்வின் மீதாணையாக! (இதை ஏற்க)முடியாது. (இந்த ஆண்டே உம்ரா செய்ய நாங்கள் உங்களுக்கு அனுமதியளித்தால்) 'நாங்கள் உங்கள் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து விட்டோம்' என்று அரபுகள் பேசிக் கொள்வார்கள். ஆயினும், வருகிற ஆண்டில் நீங்கள் உம்ரா செய்து கொள்ளலாம்" என்று கூறி, அவ்வாறே எழுதினார்.

அதாவது, முஸ்லிம்கள் இவ்வருடம் மக்காவில் நுழைய‌க்கூடாது. அடுத்த ஆண்டு தான் உம்ராவுக்கு வரவேண்டும்.

இரண்டாவது நிபந்தனை:

குறைஷியரில் எவரேனும் உத்தரவின்றி மதீனாவுக்கு வந்துவிட்டால் அவரைத் திருப்பி அனுப்பிவிட வேண்டும். அதற்கு மாறாக‌ முஸ்லிம்களில் எவரேனும் குறைஷிகளிடத்தில் வந்துவிட்டால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்.

சுஹைல், "எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்பிவிட வேண்டும்" என்று நிபந்தனையிட்டார். முஸ்லிம்கள், "சுப்ஹானல்லாஹ்! அவர் முஸ்லிமாக (எங்களிடம்)வந்திருக்க, அவரை எப்படி இணைவைப்பவர்களிடம் திருப்பியனுப்புவது?" என்று வியப்புடன் கேட்டார்கள்.

அவர்கள் இவ்வாறு ஒப்பந்தம் பேசிக் கொண்டிருக்கும் போது (குறைஷிகளின் தரப்பிலிருந்து ஒப்பந்தம் பேச வந்த) சுஹைல் இப்னு அம்ருடைய மகன் 'அபூ ஜந்தல்'(எனபவர் தம் கால்கள் பிணைக்கப்பட்டிருக்க) விலங்குகளுடன் தத்தித் தத்தி நடந்து வந்தார். அவர்கள் மக்காவின் கீழ்ப்பகுதியிலிருந்து தப்பி வந்து முஸ்லிம்களிடையே வந்து தஞ்சம் புகுந்தார்.


உடனே (அவரது தந்தையான) சுஹைல், "முஹம்மதே! (ஒப்பந்தப்படி) முதலாவதாக, இவரை எங்களிடம் ஒப்படைக்கும்படி உங்களிடம் கோருகிறேன்" என்றார். அதற்கு நபி(ஸல்)அவர்கள், "நாம் இன்னும் இந்த நிபந்தனையை எழுதி முடிக்கவில்லையே" என்று பதிலளித்தார்கள்.


அதற்கு சுஹைல், "அப்படியென்றால், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களிடம் நான் எந்த அடிப்படையிலும் ஒரு போதும் சமாதானம் செய்து கொள்ள மாட்டேன்" என்று கூறினார். (அப்போது) நபி(ஸல்)அவர்கள், "அப்படியென்றால் இவரை மட்டுமாவது நான் திருப்பியனுப்பாமலிருக்க எனக்கு அனுமதி தாருங்கள்" என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், "நான் உங்களுக்கு அனுமதி தர மாட்டேன்" என்று கூறினார்.


அதற்கு நபி(ஸல்)அவர்கள், "இல்லை, இவரை மட்டுமாவது திருப்பியனுப்பாமல் நிறுத்திக்கொள்ள எனக்கு அனுமதியளியுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், "நான் அனுமதியளிக்கப் போவதில்லை" என்று கூறினார்.


மிக்ரஸ் என்பவர், "நாம் அதற்கு உங்களுக்கு அனுமதியளித்து விட்டோம்" என்று கூறினார். அபூஜந்தல்(ரலி)அவர்கள், "முஸ்லிம்களே! நான் முஸ்லிமாக (உங்களிடம்)வந்திருக்க, என்னை இணை வைப்பவர்களிடம் திருப்பியனுப்புகிறீர்களா? நான் சந்தித்த துன்பங்களை நீங்கள் (சிந்தித்துப்) பார்க்க மாட்டீர்களா?" என்று கேட்டார். அவர் இறைவழியில் கடுமையாக வேதனை செய்யப்பட்டிருந்தார்.


அப்போது, (இணைவைப்பவர்களின் அநியாயங்களைக் கண்டு, தான் கொந்தளித்துப் போனதைப் பற்றிக் கூறும்போது) உமர்(ரலி)அவர்கள் கூறுகின்றார்கள்:

உடனே நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, "நீங்கள் சத்தியமாக அல்லாஹ்வின் தூதர் இல்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதர்தான்" என்று பதிலளித்தார்கள். நான், "நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா?" என்று கேட்டேன். அதற்கும் நபி(ஸல்)அவர்கள், "ஆம்" என்று பதிலளித்தார்கள். நான், "அப்படியானால் (இந்த நிபந்தனைகளை ஏற்று) நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதராவேன். நான் அவனுக்கு மாறு செய்வதில்லை. அவனே எனக்கு உதவக் கூடியவன்" என்று பதிலளித்தார்கள். நான், 'விரைவில் நாம் இறையில்லம் கஃஅபாவைத் தவாஃப் செய்வோம்' என்று தாங்கள் எங்களுக்கு சொல்லி வந்திருக்கவில்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம். ஆனால், நாம் இந்த ஆண்டே கஃஅபாவுக்குச் செல்வோம் என்று நான் உங்களுக்குச் சொன்னேனா?" எனக் கேட்டார்கள். நான், "இல்லை" என்று பதிலளித்தேன். நபி(ஸல்)அவர்கள், "நீங்கள் நிச்சயம் கஃஅபாவுக்குச் சென்று அதை தவாஃப் செய்வீர்கள்" என்று கூறினார்கள்.


பிறகு நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, "அபூபக்ரே, இவர்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் தூதரல்லவா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதர் தான்" என்று கூறினார்கள். நான், "நாம் சத்திய மார்க்கத்திலும், நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்" என்றார்கள். நான், "அப்படியென்றால் இதை ஒப்புக்கொண்டு நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நண்பரே! அல்லாஹ்வின் தூதர், தம் இறைவனுக்கு மாறு செய்ய முடியாது. அவனே அவர்களுக்கு உதவக் கூடியவன். அவர்களுடைய சுவட்டையே நீங்கள் பின்பற்றுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் சத்திய வழியில்தான் இருக்கிறார்கள்" என்று கூறினார்கள்.


நான், "அவர்கள் நம்மிடம், 'நாம் இறையில்லத்திற்குச் சென்று அதை தவாஃப் செய்வோம்' என்று சொல்லவில்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்,(சொன்னார்கள்.) ஆனால், 'நீங்கள் இந்த ஆண்டே அங்கு செல்வீர்கள்' என்று உங்களிடம் சொன்னார்களா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை" என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், "நீங்கள் நிச்சயம் அங்கு சென்று இறையில்லத்தை தவாஃப் செய்யத் தான் போகிறீர்கள்" என்று கூறினார்கள்.

                                                            நூல்: புகாரி (2731)

மூன்றாவது நிபந்தனை:

இரு தரப்பினரும் தங்களின் மற்ற‌ கோத்திரத்தாருடன் சமாதான உடன்படிக்கை செய்துக் கொள்ளலாம். அதாவது, குறைஷியரின் நண்பர்களை முஸ்லிம்கள் எதிர்ப்பது கூடாது. அவ்வாறே முஸ்லிம்களின் நண்பர்களையும் குறைஷியர் தாக்கக் கூடாது.

"முஹம்மதின் உடன்படிக்கையில் சேர்ந்துக்கொள்ள விரும்புவோர் சேர்ந்து கொள்ளலாம்; குறைஷிகளின் உடன்படிக்கையில் சேர்ந்து கொள்ள விரும்புபவர்கள் அவ்வாறு சேர்ந்து கொள்ளலாம்" என்ற நிபந்தனையை எழுதியவுடனே 'குஸாஆ' கிளையினர் நபி(ஸல்)அவர்களின் உடன்படிக்கையில் வந்து இணைந்துக் கொண்டனர். பனூபக்ர் கிளையினர் குறைஷிகளின் உடன்படிக்கையின் கீழ் இணைந்து கொண்டனர்.
                                            அறிவிப்பவர்கள்: மிஸ்வர்(ரலி), மர்வான்(ரலி); நூல்: அஹ்மத் 18152

நான்காவது நிபந்தனை:

அடுத்த வருடம் உம்ராவுக்கு வரும்போது நிராயுதபாணிகளாக மக்காவுக்கு வந்து குறைஷிகள் விரும்புகின்ற வரை மட்டுமே, அதாவது மூன்று தினங்கள் மட்டும் தங்கியிருக்கலாம் என்பதும் நிபந்தனைகளில் ஒன்றாகும்.

"வரும் ஆண்டில், நான் (என் தோழர்களுடன்) உம்ரா செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்; வாள்களைத் தவிர வேறு ஆயுதங்களை நாங்கள் எடுத்து வர மாட்டோம்; குறைஷிகள் விரும்புகின்ற வரை மட்டுமே மக்காவில் தங்கியிருப்போம்' என்னும் நிபந்தனையின் பேரில் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். 
                                                  நூல்: புகாரி (2701)

ஐந்தாவது நிபந்தனை:

பத்தாண்டு காலத்திற்கு போர் நிறுத்தம்

மக்கள் அமைதியாக வாழ்வதற்காக (அடுத்த) பத்து ஆண்டுகளில் (இரு தரப்பினருக்கும் இடையில்) போர் இல்லை என்று உடன்படிக்கை ஏற்பட்டது.
                                          அறிவிப்பவர்கள்: மிஸ்வர்(ரலி), மர்வான்(ரலி); நூல்: அபூதாவூத் (2385)

இந்த நிபந்தனைகளை உள்ளடக்கிய ஒப்பந்தம் நபித்தோழர்களின் மனங்களை மிகவும் பாதிக்கச்செய்தது. காரணம்,

* சங்கிலியில் பிணைக்கப்பட்டு, கொடூரமான‌ சித்ரவதைகளுக்கு தினம் தினம் ஆளாகி வந்த முஸ்லிமான சகோதரர் அபூஜன்தல், தங்கள் கண் முன்னால் மக்கத்து நிராகரிப்பவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்ட கொடுமை!

* ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில் நபி(ஸல்)அவர்கள் மிகவும் இறங்கிப்போன விதம்!

* குறைஷிகள் ஒவ்வொரு நிபந்தனையிலும் ஏறுக்கு மாறாக, முஸ்லிம்களுக்கு பாதகமாக அமையும் நிபந்தனைகளை விதித்தது!

இவை அத்தனைக்கும் அண்ணல் நபி(ஸ‌ல்)அவர்களின் சமாதான சொல்லுக்கு இணங்கி அவர்களுக்கு கட்டுப்படவேண்டும் என்பதற்காகவே, அந்த அநியாயமான நிபந்தனைகளுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து குரல் கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் நபித்தோழர்களை உறைய வைத்தது!

தொடரும்.... இன்ஷா அல்லாஹ்!



8 comments:

  1. நெஞ்சம் நெகிழவைக்கும் நிகழ்ச்சிகள்.இதிலிருந்து படிப்பினை பெறுவோம்.தொடருங்கள்......

    ReplyDelete
  2. @ zumaras...

    //நெஞ்சம் நெகிழவைக்கும் நிகழ்ச்சிகள்.இதிலிருந்து படிப்பினை பெறுவோம்.தொடருங்கள்......//

    ஆமாம் சகோ. இஸ்லாமிய வரலாறு ஒவ்வொன்றிலும் ஏராளமான படிப்பினைகள் நிறைந்து கிடக்கின்றன! உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. அஸ்மா அழகா சொல்லியிருக்கீங்க....

    அடுத்த பதிவையும் சீக்கிரமா போட்டுடுங்க. படிக்க ஆவலாக உள்ளது

    ReplyDelete
  4. @ ஆமினா...

    //அஸ்மா அழகா சொல்லியிருக்கீங்க....

    அடுத்த பதிவையும் சீக்கிரமா போட்டுடுங்க. படிக்க ஆவலாக உள்ளது//

    இன்ஷா அல்லாஹ் எப்படியும் இன்று போட்டாகணும் ஆமினா! இந்த தொடரை துல்கஃதா மாத ஆரம்பத்திலேயே ஆரம்பித்திருக்கவேண்டியது, முடியாமல் போய்விட்டது. இப்போ ஹஜ் பெருநாளும் நெருங்கிவிட்டது, அதற்கான தொகுப்புகள், வேலைகள் எதுவும் இன்னும் தொடவில்லை. தொடர்ந்து படித்து வரும் உங்களுக்கு என் நன்றிகள் பல!

    ReplyDelete
  5. அழகான பகிர்வு,எழிய முறையில் அனைவரையும் கவர்ந்து படிக்கச் சொல்லும் வரிகள்.
    வாழ்த்துக்கள் சகோதரி, தொடரட்டும் உங்களின் பயணம்

    ReplyDelete
  6. @ Mohamed Ayoub K...

    தொடர்ந்து படிங்க சகோ. வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  7. அஸ்மா,

    விடுமுறை தினமாகையால் மற்ற சில வேலைகளில் பிஸியாய் இருந்து விட்டென்.

    அல்ஹம்துலில்லாஹ். இந்த ஒப்பந்தத்தை படிக்கும்போதே நம்முடைய அறியாமையினால் நாம் கோபப்பட நேரிடுகிறது, உமர் (ரலி) அவர்களைப் போலவே கேள்விகளை அடுக்குகிறது மனம் எனில், நேரில் நின்று இதை பார்வையிட்ட சஹாபாக்களின் நிலை என்னவாயிருக்கும், சுப்ஹானல்லாஹ். மார்க்கத்தில் வருவதற்கு அபூ ஜந்தல்(ரலி) போன்ற சஹாபாக்கள் கண்ட சித்திரவதைகள்தான் என்னென்ன... நினைக்கும்போதே நெஞ்சம் நடுங்குகிறது. இவ்வாறெல்லாம் வாழ்ந்து, இத்தனை நிகழ்வுகளுக்கிடையிலும் பொறுமையை கைக்கொண்டு இஸ்லாத்தை துளியும் காம்ப்ரமைஸ் செய்யாமல் வாழ்ந்ததாலேயே அல்லாஹ் தன் திருமறையில் கடைசி மனிதன் வரை படிக்க தந்து, அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொண்டான் என்கிறான்...மாஷா அல்லாஹ்.

    தங்களின் இந்த ஆக்கத்தையும் அல்லாஹ் நல் அமல்களில் பொருந்திக் கொள்வானாக. ஆமீன்.

    என் மெயில் கிடைத்ததா??

    ReplyDelete
  8. @ அன்னு...

    //இந்த ஒப்பந்தத்தை படிக்கும்போதே நம்முடைய அறியாமையினால் நாம் கோபப்பட நேரிடுகிறது, உமர் (ரலி) அவர்களைப் போலவே கேள்விகளை அடுக்குகிறது மனம் எனில், நேரில் நின்று இதை பார்வையிட்ட சஹாபாக்களின் நிலை என்னவாயிருக்கும், சுப்ஹானல்லாஹ்//

    உண்மைதான் அன்னு.. போரைத் தவிர்த்து வெற்றிக்கு வழி தேடுவதற்காக பொறுத்துப் போன நபி(ஸல்)அவர்களின் பணிவையும், நேரில் இந்த அநியாயங்களைக் கண்டும் அண்ணல் நபிக்காக தங்களின் கோபங்களை அடக்கிக் கட்டுப்பட்டார்களே அந்த ஸஹாபாக்களின் பண்பையும், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக இவ்வுலக வாழ்வை துச்சமாக நினைத்து உறுதியாக நின்று கொடுமைகளைத் தாங்கிக் கொண்ட நபித்தோழர்களையும் நினைத்தால் மெய் சிலிர்க்கிறது! நாமெல்லாம் இவர்களைக் கொண்டு படிப்பினைப் பெறவேண்டும்.

    தங்களின் மெயில் கிடைத்த‌து அன்னு.. ப‌தில் அனுப்புகிறேன் இன்ஷா அல்லாஹ்!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை