அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday 16 November 2012

முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும் (பகுதி 3)

முதல் பாகத்தைக் காண‌இரண்டாம் பாகத்தைக் காண‌

முந்திய இரண்டு பகுதிகளில் நாம் கண்ட மூடத்தனங்களும், சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் எல்லாம் தெளிவான வழிகேடும் இணை வைப்புமாகும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆக, ஹுஸைன் (ரலி)அவர்களின் நினைவாக செய்வதாகக் கூறி இந்த முஹர்ரம் மாதத்தில் ஷியாக்கள் செய்யும் அட்டூழியங்களினால், அல்லாஹ்வின் கணக்கிலே அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெகுதூரம் சென்றவர்களாக ஆகிவிடுகிறார்கள். (அல்லாஹ் நம்மனைவரையும் காப்பானாக!) இது ஒருபுறமிருக்க, 'சுன்னத் வல் ஜமாஅத்' அமைப்பினர் இதுவரை நாம் கூறிய‌ ஷியாக்களின் சடங்குகளை தவிர்ந்துக் கொண்டாலும், வேறுவிதமான பெயர்களில் வழிகேடான‌ காரியங்களில் ஈடுபடுகின்றனர். அவற்றில் தமிழக அளவில் பிரசித்திப் பெற்றது 'ஹஸனார் ஹுஸைனார் ஃபாத்திஹா' வாகும்.



நபி(ஸல்) அவர்களின் அன்புப் பேரர்களில் ஒருவரான‌ ஹுஸைன்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டது, இஸ்லாமிய வரலாற்றில் ஒரு சோகமான நிகழ்ச்சிதான்! இந்த நிகழ்ச்சியைப்பற்றி கேள்விப்படும் மனிதாபிமானம் உள்ள யாரும் மனம் கலங்காமல் இருக்க முடியாது. ஆனால் அதற்காக நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறிய 'ஆஷுரா' நாளை சோக நாளாக நாம் ஆக்கிக் கொள்வதற்கும், அண்ணலவர்கள் காட்டித் தராத வணக்கங்களை மார்க்கமாக்கிக் கொள்வதற்கும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

மார்க்க அறிஞர்களாக இருக்கக்கூடியவர்கள், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையையே தகர்க்கும், வழிகேட்டில் இட்டுச் செல்லும் அனாச்சாரங்களை கண்டித்து மக்களை நேர்வழியில் கொண்டு செல்ல வேண்டியவர்களாக இருக்கவேண்டும்! ஆனால் அவர்கள் கூட இந்த முஹர்ரம் மாதத்தில் மக்களிடம் பாராட்டுகளைப் பெறுவதற்காக ஹுஸைன்(ரலி)யின் சோக வரலாற்றைப் பேசி, முஹர்ரம் மாதத்தில் நடக்கும் பித்அத்களுக்கு ஆதரவு கொடுத்து, மக்களை வழிகேட்டில் அழைத்துச் செல்வதுதான் கொடுமையிலும் கொடுமை!

இந்த 'ஹஸனார் ஹுஸைனார் ஃபாத்திஹா'வுக்கென்று முஹர்ரம் பத்தாம் நாள் வீடு வாசலையெல்லாம் கழுவி விட்டு, கொழுக்கட்டை செய்து, இதனை ஆதரிக்கும் ஆலிம்களை அழைத்து ஃபாத்திஹா ஓதி, தெரிந்த அனைவருக்கும் விநியோகிப்பார்கள். அதிலும், போரில் வெட்டுப்பட்ட கை, கால், தலைகள் என்று உருவகப்படுத்த கொழுக்கட்டைகளை உருண்டையாகவும் நீளமாகவும் செய்வார்கள். சுப்ஹானல்லாஹ், ஹுஸைன்(ரலி) அவர்கள் மீது கொண்ட பாசம் என்று நினைத்து செய்யக்கூடிய இவையெல்லாம் அவர்களுக்கு கண்ணியம் கொடுக்குமா? கொஞ்சமாவது சிந்திக்கவேண்டாமா? கேட்டால் 'நாங்கள் ஒன்றும் பஞ்சா தூக்கவில்லை, அவர்கள் பெயரில் ஃபாத்திஹாதான் ஓதுகிறோம்' என்று பெருமையோடு கூறிக் கொள்கிறார்கள் இந்த சுன்னத் வல் ஜமாஅத்தினர்! இதற்கு பக்க பலமும் தூண்டுகோலும் அவர்களிலுள்ள ஆலிம்கள்தான் என்கிறபோது, அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்லும் பாமர மக்களை அல்லாஹ்தான் காப்பாற்றவேண்டும்!

மேலும் தஞ்சை மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் முஹர்ரம் மாத முத‌ல் பத்து நாட்களும் புதுமணத் தம்பதிகளைப் பிரித்து வைப்பார்கள். அந்தப் பத்து நாட்களில் குழந்தை உருவானால் அந்தக் குழந்தை இரத்தக் காயம்பட்டு சாகுமாம்!(?) மடத்தனமான இதுபோன்ற கண்டுபிடிப்புகளை மார்க்கமாக்கும் கொடுமையும் சில இடங்களில் நடந்து வருகிறது. அல்லாஹ் அனுமதித்த ஒரு திருமண உறவை தடுத்து நிறுத்தி வைப்பது (தற்காலிகமாக என்றாலும் சரிதான்) எவருக்கும் அதற்கு உரிமை இல்லை. அதுபோல் ஆஷுரா நாளில் கண்டிப்பாக குளிப்பவர்கள் அந்த ஆண்டு முழுவதும் நோய்வாய்ப் படமாட்டார்கள் என்ற நம்பிக்கை வேறு சிலரிடத்தில்!

அதேசமயம், அல்லாஹ்வின் உதவியால் ஏகத்துவப் பிரச்சாரம் வளர்ந்து வரும் (சுமார் 25 வருஷ) இந்தக் காலக்கட்டதில் இவையெல்லாம் குறைந்து, உயிரோட்டமின்றி ஏதோ கடனுக்காகதான் நடத்தப்படுகின்றன. எனினும், முழுமையாக ஒழியவில்லை என்பதை வேதனைக் கண்களோடு இன்னும் பார்க்கத்தான் செய்கிறோம்.

எப்போது 'பித்அத்' என்ற ஒரு வழிகேடு மார்க்கத்தில் நுழைகிறதோ, அங்கு 'சுன்னத்' என்ற நபிவழி நம்மிலிருந்து வெளியேறிவிடும். ஆனால் இங்கே குறிப்பிட்ட விஷயங்கள் பித்அத் என்ற நிலையையும் தாண்டி, 'ஷிர்க்' என்ற இணை வைத்தலின் ஆபத்தான நிலைக்கு நம்மை கொண்டு தள்ளிவிடும் என்பதை நாம் உணரவும், அறியாத நம் சகோதர மக்களுக்கு எந்தவித தயவு தாட்சணையுமின்றி உணர்த்தவும் நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டுள்ளோம். ஆகவே இதுப்போன்ற மூட நம்பிக்கைகளை நம்மிலிருந்து தகர்த்தெறிந்து இஸ்லாத்தின் உண்மையான அடிச்சுவடுகளைப் பின்பற்றி வாழ்வோமாக! அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்தஆலா நம்மனைவருக்கும் உதவி செய்தருள்வானாக!

15 comments:

  1. ஒரு விஷயத்தை நினைவுகூருதல் என்ற அடிப்படையில் இதெல்லாம் நடக்கிறது போலும்..

    இதை தவறு என்கிறீர்கள்..ஓகே,
    இந்த கால கட்டத்தை எப்படி அனுசரிக்க வேண்டும் என் இஸ்லாம் சொல்கிறது... அதையும் சொன்னால்தானே எங்களை போன்றவர்களுக்கு தெரியும்..

    அவர்களின் தியாகத்துக்கு ஓர் இஸ்லாமியன் எப்படி நன்றி செலுத்த வேண்டும் என நினைக்கிறீர்கள் ?

    ReplyDelete
  2. ஆலிம்களே இதை பற்றி பிரச்சாரம் செய்து மக்களை தீய வழிக்கு அழைத்துச்செல்வதை நினைத்தால் தான் வேதனையாக இருக்கு அஸ்மா.

    ReplyDelete
  3. மாஷாஅல்லாஹ் மிக அழகாக தெளிவுபடுத்தியுள்ளீர்கள்
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. @ பார்வையாளன்...

    //ஒரு விஷயத்தை நினைவுகூருதல் என்ற அடிப்படையில் இதெல்லாம் நடக்கிறது போலும்..

    இதை தவறு என்கிறீர்கள்..ஓகே//

    சரியான முறையில் புரிந்துக் கொண்டமைக்கு சந்தோஷம் சகோ.

    //இந்த கால கட்டத்தை எப்படி அனுசரிக்க வேண்டும் என் இஸ்லாம் சொல்கிறது... அதையும் சொன்னால்தானே எங்களை போன்றவர்களுக்கு தெரியும்..

    அவர்களின் தியாகத்துக்கு ஓர் இஸ்லாமியன் எப்படி நன்றி செலுத்த வேண்டும் என நினைக்கிறீர்கள்?//

    இப்போது நாம் எடுத்துக் கொண்ட தலைப்பு, முஹர்ரம் மாத‌த்தில் மக்க‌ளிடம் காணப்படும் மூடப்பழக்கங்கள் பற்றியது. அவை அனைத்தும் தவறானவை என்பதை சுட்டிக்காட்டுவது முதலில் அவசியம்! தயாராகிக் கொண்டிருக்கும் அடுத்த பதிவில் இன்ஷா அல்லாஹ் உங்களுக்கான பதில் கிடைக்கும். தொடர்ந்து வந்து படிங்க சகோ. நன்றி!

    ReplyDelete
  5. @ ஆமினா...

    //ஆலிம்களே இதை பற்றி பிரச்சாரம் செய்து மக்களை தீய வழிக்கு அழைத்துச்செல்வதை நினைத்தால் தான் வேதனையாக இருக்கு அஸ்மா//

    அந்த ஆலிம்களுக்கெல்லாம் உண்மை தெரிந்தும் 'இவ்வளவு நாட்கள் இதையே சொல்லிக் கொண்டிருந்தோமே, இப்போது மாற்றுவது எப்படி' என்ற ஈகோ. அல்லாஹ் உதவியால் அவர்கள் திருந்திவிட்டால் அவர்கள் பின்னால் செல்லும் மக்களும் நேர்வழி பெறுவார்கள், இன்ஷா அல்லாஹ்! வருகைக்கு நன்றி ஆமினா.

    ReplyDelete
    Replies
    1. ஆலிம்களேதான் இது போன்று அநாச்சாரத்துக்கு ஒத்துஊதுராங்ஙளே

      Delete
  6. @ ராஜவம்சம்...

    வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    சகோதரி அவர்களுக்கு
    சவூதியில் தாவா களத்தில் இருக்கின்ற
    என்னைப் போன்றவர்களுக்கே இந்த அனாச்சரங்களைப்பற்றி முழுமையாக தெரியாது
    உங்களுடைய இந்த தொடரை படித்து முழுமையாக தெரிந்துக் கொண்டேன்
    ஜஸக்கல்லாஹ் கைர்
    சகோதரன்
    ஹைதர் அலி

    ReplyDelete
  8. இந்த அனாச்சரத்தை ஒரு சிலர் தெரிந்தே ஊக்குவிக்கின்றார்கள்.

    சகோதரி ஊரில் மூன் என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சி தீன் ஒலி என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடத்துகின்றது. இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ஒவ்வொருவரும், நிகழ்ச்சியை நடத்துபவரை திட்டுகிறார்கள்.
    இது அந்த தொலைக்காட்சி நிருவாகத்திற்கு தெரியுமோ இல்லையோ எனக்கு தெரியாது.
    இந்த நிகழ்ச்சியை நடத்தும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி ,ஒவ்வொரு கேள்விக்கும் பதில் , கருபனையின் அடிபடையிலேய உள்ளது.
    எதில் இவர் விளையாடுகிறார் என்று சற்று சிந்தித்து பார்க்க கடமை பட்டுள்ளோம். தொலைக்காட்சி
    நிருவாகம் நடவடிக்கை எடுக்குமா? .

    ReplyDelete
  9. நிறைய தகவல்கள் அஸ்மா. அழகாக விளக்கம் கொடுத்ததுக்கு மிக்க நன்றி.. இன்னும் சொல்லுங்கள் அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கு.

    ReplyDelete
  10. @ ஹைதர் அலி...

    //உங்களுடைய இந்த தொடரை படித்து முழுமையாக தெரிந்துக் கொண்டேன்//

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    நானும் நேரில் பார்த்ததில்லை சகோ. 'முஹர்ரம் பண்டிகை' என்று டிவியில் ஒவ்வொரு ஊராக காட்டுவார்கள். அப்போ பார்த்ததும், நம் தவ்ஹீத் சகோதரர்களின் பேச்சுக்கள், எழுத்துக்கள் மூலமாகவும் சிறுக சிறுக அந்த அனாச்சாரங்களின் எல்லா விபரமும் தெரிந்துக் கொள்ள முடிந்தது. இதை தொகுத்ததில் அவர்களுக்கு பங்குண்டு என்பதால் அல்லாஹுத்த‌ஆலா அவர்களுக்கும் நற்கூலி வழங்குவானாக!

    தங்களின் தஃவா பணி சிறக்கவும் அதன் பலன்களை மறுமையில் முழுமையாக பெறவும் பிரார்த்திக்கிறேன். வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  11. @ இளம் தூயவன்...

    //இந்த அனாச்சரத்தை ஒரு சிலர் தெரிந்தே ஊக்குவிக்கின்றார்கள்//

    அதையே அவர்கள் தொடர்ந்தால் அல்லாஹ்விடத்தில் குற்றவாளிகளாகதான் நிற்பார்கள்.

    //இந்த நிகழ்ச்சியை நடத்தும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி ,ஒவ்வொரு கேள்விக்கும் பதில் , கருபனையின் அடிபடையிலேய உள்ளது.
    எதில் இவர் விளையாடுகிறார் என்று சற்று சிந்தித்து பார்க்க கடமை பட்டுள்ளோம்//

    மார்க்கத்தில் சர்வ சாதாரணமாக விளையாடுவதுதான் அவருக்கு கைவந்த கலையாச்சே! அவர்தான் சிந்தித்து திருந்தவேண்டும்.

    //தொலைக்காட்சி நிருவாகம் நடவடிக்கை எடுக்குமா?//

    அந்த நிர்வாகமும் அவர்களைச் சார்ந்ததாக இருப்பதால்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு இடம் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  12. @ மின்மினி RS...

    //இன்னும் சொல்லுங்கள் அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கு//

    தங்களின் ஆர்வம் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி, தொடர்ந்து படிங்க மின்மினி.

    ReplyDelete
  13. மூன்று பகுதிகளையும் ஒருசேர வாசித்தேன். தகவல்கள் அனைத்தும் எனக்குப் புதுசு.

    கொழுக்கட்டை, தண்ணீரில் (பாஞ்சாவை) கரைப்பது இப்படி பல சடங்குகளில் மதங்களுக்குள் ஒரு ஒற்றுமை இருப்பதை பார்த்தால் வியப்புதான்!!!!

    ReplyDelete
  14. @ துளசி கோபால்...

    //மூன்று பகுதிகளையும் ஒருசேர வாசித்தேன். தகவல்கள் அனைத்தும் எனக்குப் புதுசு.

    கொழுக்கட்டை, தண்ணீரில் (பாஞ்சாவை) கரைப்பது இப்படி பல சடங்குகளில் மதங்களுக்குள் ஒரு ஒற்றுமை இருப்பதை பார்த்தால் வியப்புதான்!!!!//

    உங்களைப்போன்று இன்னும் நிறைய பேருக்கு இவை புதுசாக இருக்கும் சகோ. ஆனால் இதைப்பற்றி பார்த்தவர்கள்/கேள்விப்பட்டவர்கள் அனைவரும், இப்படியும் இஸ்லாத்தில் உள்ள‌தோ என தவறாக விளங்கிக் கொள்ளக்கூடாது என்பதாலேயே இந்தப் பதிவுகளை கொடுக்கவேண்டியுள்ளது. உங்கள் கருத்தில்கூட தவறான புரிதல் இருப்பதாக தோன்றுகிறது சகோ. அதனால் இங்கே ஒரு சிறு விளக்கம் கொடுக்க விரும்புகிறேன்.

    நீங்கள் மேலே குறிப்பிட்ட விஷயங்களில் மற்ற மதங்களுக்குள் ஒற்றுமை இருக்கலாம். ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தில் இவை எதுவுமே அனுமதிக்கப்படாத ஒன்று! இதுபோன்றவற்றை தாங்களாகவே உருவாக்கிக் கொண்டும், மாற்று மதங்களைப் பார்த்து காப்பியடித்தும் செய்கிறார்களே தவிர, இஸ்லாம் இவற்றை வன்மையாகக் கண்டிக்கிறது. அவர்களுக்கும் இஸ்லாமிய மார்க்கத்துக்கும் அணுவளவும் சம்பந்தமில்லை. இஸ்லாத்தின் பெயரால் அவற்றை அரங்கேற்றுகிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை