அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, 3 December 2010

மசால் தோசைஉள்ளடம்(ஸ்டப்பிங்) செய்ய‌
தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 300 கிராம்
உருளைக் கிழங்கு - 1 கப்(சிறிய கட்டங்களாக நறுக்கியது)
கேரட் - 1/2 கப்(பொடிதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 5 அல்லது 6
கறிவேப்பிலை - 1 கொத்து
கடலைப் பருப்பு - 1 பிடி
கடுகு - 1 ஸ்பூன்
ஜீரகம் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

இன்ஸ்டண்ட் வெஜிடபிள் பௌடர் அல்லது
சிக்கன் ஸ்டோக் பௌடர் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 3 ஸ்பூன்

உப்பு - 1 ஸ்பூன்
செய்முறை:


வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகை வெடிக்கவிட்டு, ஜீரகம் போட்டு தாளித்தவுடன் கடலைப் பருப்பை கழுவி அத்துடன் சேர்த்து வறுக்கவும்.கடலைப் பருப்பு வறுபட ஆரம்பித்தவுடன் கறிவேப்பிலைப் போட்டு, நறுக்கிய உருளைக் கிழங்கு, கேரட் மற்றும் மஞ்சள் தூள், இன்ஸ்டண்ட் வெஜிடபிள் பௌடர், பாதி உப்பு சேர்த்து வதக்கவும்.
வாசம் வரும்வரை வதங்கியவுடன் சுமார் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு சிம்மில் 2,3 நிமிடங்கள் வைக்கவும்.
கிழங்கு மற்றும் கேரட் வெந்த பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மீதி உப்பு சேர்த்து வெங்காயம் முக்கால் பதத்திற்கு வேகுமளவு வதக்கவும்.
தோசைக் கல்லில் மாவை தேய்த்துக் கொண்டு, ஓரங்களில் சிறிது எண்ணெய் விட்டு மாவு முழுவதும் வெந்த பிறகு, நாம் எந்த வடிவில் விரும்புகிறோமோ அந்த வடிவில் உள்ளடத்தை பரத்தவும்.
தோசைத் திருப்பியால் மெதுவாக மடித்து, நன்கு மடிந்தவுடன் அப்படியே மெதுவாக திருப்பி போடவும்.
மறுபக்கம் திருப்பிப் போட்டு சிறிது நேரத்தில் எடுத்து சூடாக பரிமாற‌வும்.

குறிப்பு:

வெங்காயத்தை வதக்கும்போது முழுவதுமாக வேகவிடக் கூடாது. முக்கால் வேக்காடு மட்டுமே கொடுக்கவேண்டும்.

உள்ளடத்தோடு திருப்பிப் போடும்போது கவனமாக, மெதுவாக போடவும்.

காரத்தின் தேவைக்கேற்ப பச்சை மிளகாயை கூட்டியோ குறைத்தோ கொள்ளவும்.

15 comments:

 1. மசாலா தோசை தான் செய்முறை தெரியாம இருந்துச்சு. இப்ப தெரிஞ்சுகிடேன்.

  குளிர் நேரம் மாவு புளிக்கவோ பொங்கவோ மாட்டேங்குது :( ஈஸ்ட் சேக்கலாமா? அடிக்கடி சேத்தா எதாவது ஆகுமான்னு பயமா இருக்கு.

  பேரிச்சம் பழம் நிறையா இருந்தா என்ன பண்ணுவீங்க. சிம்பிளா செய்ய கூடிய ஐட்டமா சொல்லுங்களேன். நேரம் இருக்கும் போது :))

  ReplyDelete
 2. ஆமினா ,அந்த நேரத்தில் ஓவனில் சிறிது நேரம் வைத்து எடுக்கலாம்

  ReplyDelete
 3. மசால்தோசை ரொம்ப நல்லா செய்திருக்கீங்க அஸ்மா. பார்க்க நல்லாருக்கு.

  ReplyDelete
 4. @ ஆமினா...

  //மசாலா தோசை தான் செய்முறை தெரியாம இருந்துச்சு. இப்ப தெரிஞ்சுகிடேன்// சந்தோஷம் ஆமினா :)

  //குளிர் நேரம் மாவு புளிக்கவோ பொங்கவோ மாட்டேங்குது :( ஈஸ்ட் சேக்கலாமா? அடிக்கடி சேத்தா எதாவது ஆகுமான்னு பயமா இருக்கு//
  தோசை மாவுக்கெல்லாம் ஈஸ்ட் போடாதீங்க ஆமினா. ஓவன் இருந்தால் அதை ஹை டெம்ப்ரேச்சரில் 5 நிமிஷம் வைத்து ஆஃப் பண்ணிட்டு, தோசை மாவை மூடி போட்ட நிலையில் அதனுள் வைத்துவிடுங்க. அப்படியே மெதுவா புளிக்க ஆரம்பிக்கும்.

  //பேரிச்சம் பழம் நிறையா இருந்தா என்ன பண்ணுவீங்க. சிம்பிளா செய்ய கூடிய ஐட்டமா சொல்லுங்களேன். நேரம் இருக்கும் போது :))//

  ஈசி & டேஸ்ட்டியாக உங்களுக்காக பேரீத்தம்பழ ரெசிபி தரேன், இன்ஷா அல்லாஹ்! ஒரு 10 நாட்கள் ரொம்ப பிசி. பிறகு கண்டிப்பா தரேன், ஓகேவா? நன்றி ஆமினா.

  ReplyDelete
 5. @ LK...

  //ஆமினா ,அந்த நேரத்தில் ஓவனில் சிறிது நேரம் வைத்து எடுக்கலாம்//

  ஓவனில் வைப்பது ஓகே, அந்த நேரத்தில் சிறிது நேரம் வைத்தால் உடனே பொங்கிடுமா..?! உங்கள் வருகைக்கும், தோழி ஆமினாவுக்கு பதில் தந்ததற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 6. @ Starjan ( ஸ்டார்ஜன் )...

  //மசால்தோசை ரொம்ப நல்லா செய்திருக்கீங்க அஸ்மா. பார்க்க நல்லாருக்கு//

  தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி நானா!

  ReplyDelete
 7. நாளை எங்க வீட்ல இதை பார்த்து செய்ய போறோம்..

  எப்ப்டி இருக்கிறது என பார்த்து விட்டு என் கருத்தை சொல்வேன்

  ReplyDelete
 8. @ பார்வையாளன்...

  //நாளை எங்க வீட்ல இதை பார்த்து செய்ய போறோம்..

  எப்ப்டி இருக்கிறது என பார்த்து விட்டு என் கருத்தை சொல்வேன்//

  கண்டிப்பா சொல்லுங்க சகோ. தங்களின் முதல் வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 9. //ஆமினா ,அந்த நேரத்தில் ஓவனில் சிறிது நேரம் வைத்து எடுக்கலாம் //

  நம்றி சகோ..!! அப்படியே செய்கிறேன்.

  நன்றி அஸ்மா. வேலைலாம் முடிச்சுட்டு அந்த ரெசிபி கொடுங்க!!

  ReplyDelete
 10. நல்லாயிருக்கு அஸ்மா.

  ReplyDelete
 11. @ asiya omar...

  //நல்லாயிருக்கு அஸ்மா//

  நன்றி ஆசியாக்கா!

  ReplyDelete
 12. அம்மா பசிக்குதே..இன்ஷா அல்லாஹ் விடியட்டும் காலைல நானா மசால் தோசையான்னு பாத்துடறேன்

  ReplyDelete
 13. @ தளிகா...

  //அம்மா பசிக்குதே..இன்ஷா அல்லாஹ் விடியட்டும் காலைல நானா மசால் தோசையான்னு பாத்துடறேன்//

  :)) பார்த்தவுடன் பசிக்குதா மகளே? செய்து சாப்பிட்டுவிட்டு சொல்லுங்க.

  ReplyDelete
 14. ஆஹா,
  கடசி ஸ்டெப்பை விட்டுட்டீங்களே, எனக்கு சுடசுட பார்சல்ல அனுப்பனும்னு ரெசிபில எழுதியிருக்குமே?? :))

  ReplyDelete
 15. @ அன்னு...

  //ஆஹா,
  கடசி ஸ்டெப்பை விட்டுட்டீங்களே, எனக்கு சுடசுட பார்சல்ல அனுப்பனும்னு ரெசிபில எழுதியிருக்குமே?? :))//

  ஆமா அன்னு.. அது மட்டும்தான் எழுதி இருந்துச்சி.. ஆனா உங்க அட்ரஸ அதுல காணோமேன்னு பார்சல் பண்ணாம‌ விட்டுட்டேன். அதுனால உங்க பேர சொல்லி உள்ளே இறக்கியாச்சு :))

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!