அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday 16 November 2012

முஹர்ரம் (பத்தாவது நாள்) ஆஷூரா நோன்பு


முந்திய பதிவைப் பார்க்கவும்.

ஹுஸைன்(ரலி) அவர்களின் நினைவாகதான் முஹர்ரம் பத்தாம் நாள் நோன்பு நோற்கிறோம் என்ற ஒரு தவறான நம்பிக்கை சில இஸ்லாமியர்களிடத்தில் உள்ளது. ஆனால் இந்த நாளில், இஸ்லாமிய வரலாற்றில் இரண்டு விதமான சம்பவங்கள் நடந்துள்ளன. ஒரே நாளில் நடந்த அந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் எந்த அடிப்படையில் நாம் தீர்மானிக்க‌வேண்டும்?

அதாவ‌து இஸ்லாமிய வரலாற்றில் காணப்படும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் படிப்பினைப் பெறத்தக்கதாகவோ, வாழ்வியல் சட்டங்களைக் கூறக்கூடியதாகவோ, வணக்கங்களை செயல்முறைப் படுத்தக்கூடிய விளக்கங்களாகவோ, தியாகங்களை நினைவு கூறும் கொண்டாட்டங்களாகவோ, அந்த கொண்டாட்டங்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக அமைவதாகவோ இருக்கும். அவ்வாறு நினைவு கூறும் கொண்டாட்டங்களாக இருக்கும்போது, எந்த வகையில் நாம் கொண்டாடவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்தார்களோ அந்த வரையறைக்குட்பட்டே அவற்றை நாம் செயல்படுத்தவேண்டும். இதை நினைவில் வைத்துக் கொண்டு இப்போது தொடர்வோம்.

ஹுஸைன்(ரலி) அவர்களின் அந்த நிகழ்ச்சி நடந்த இதே நாளில்தான் திருக்குர்ஆனிலே கூறப்பட்டுள்ள‌ முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

கொடுங்கோலன் ஃபிர்அவ்னுக்கு எதிராக நபி மூஸா(அலை) அவர்கள் செய்த பிரச்சாரத்தின் முடிவில், அந்த ஃபிர்அவ்னிடம் அடிமைப்பட்டுக் கிடந்த பனூ இஸ்ரவேலர்களை அழைத்துக் கொண்டு மூஸா(அலை) அவர்கள் எகிப்தை விட்டு வெளியேறுகிறார்கள். இதைய‌றிந்த ஃபிர்அவ்ன் தம் படைகளைத் திரட்டிக்கொண்டு மூஸா(அலை) அவர்களைக் கொல்வதற்காக அவர்களைப் பின்தொடர்ந்து செல்கிறான். அப்போது மிகப்பெரிய அற்புதம் ஒன்று நடக்கிறது. கடல் இரண்டாகப் பிளந்து இருபக்கமும் பிரிந்து இரண்டு மலைகளைப் போல் எழுந்து நின்றுவிடுகின்றது! அவற்றிற்கு நடுவே, அல்லாஹுதஆலா ஏற்படுத்திய அந்த பாதை வழியே மூஸா(அலை) அவர்கள் தப்பித்து கரைச் சேர்ந்ததும், அதைக் கண்ட ஃபிர்அவ்னும் அவனுடைய பட்டாளங்களும் அவர்களைத் தொடர்ந்து அந்த பாதையில் நுழைகிறார்கள். ஆனால், மலையாக நின்ற அந்தக் கடல் அலைகள் அவர்களைச் சுருட்டி கடலுக்குள் இழுத்துவிடுகிறது. இவை அனைத்தும் இறைவனின் திட்டத்தின்படி கச்சிதமாக நடந்து முடிகின்றன!

நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். "இது என்ன நாள்?" என்று கேட்டார்கள்.  "இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில்தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்" என்று யூதர்கள் கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவர்களை விட மூஸாவுக்கு நான் நெருக்கமானவன்' என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களையும் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டார்கள்.
      அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்: புகாரி(3397)

மூஸா(அலை) அவர்கள் காப்பாற்றப்பட்டு 'நான் தான் அகிலம் அனைத்துக்குமான மிக உயர்ந்த கடவுள்' என்று கூறிய ஒரு சர்வாதிகாரி, அல்லாஹ்வின் எதிரி ஒழிக்கப்பட்ட இந்த மகிழ்ச்சியான நாளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகதான் நபி(ஸல்) அவர்கள் நோன்பு வைத்து பிறரையும் நோன்பு நோற்கச் சொல்கிறார்கள். இது சம்பந்தமான ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸாயீ போன்ற கிரந்தங்களில் காணப்படுகிறது.

எனவே மூஸா நபி(அலை) அவர்களுக்கு இறைவன் கொடுத்த‌ வெற்றி நாளில் இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாகவே, நபி(ஸல்) அவர்கள் இந்த முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளில் வைக்கக்கூடிய 'ஆஷுரா நோன்பை' நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்கள் என்ற சரித்திரப் பிண்ண‌னியை நாம் மறந்துவிடக்கூடாது. ஆக, ஒரு உண்மையான முஸ்லிம் நபி(ஸல்) அவர்கள் காட்டிய இந்த வழிமுறைப்படி அந்த நாளில் நோன்பு நோற்க வேண்டுமே தவிர, ஃபாத்திஹா ஓதுதல் உட்பட‌ வேறு எந்த கூடுதலான அனாச்சாரங்களையும் செய்யக்கூடாது.

முஹர்ரம் மாதம் மற்றும் ஆஷுரா நோன்பின் சிறப்பு:

"வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி, மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றுள் நான்கு மாதங்கள் புனிதமானவை" என அல்குர்ஆன்(9:36) கூறுகிறது. அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய 4 மாதங்களாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.

          நூல்: புகாரி(2006)

"நோன்புகளில் ரமலானுக்குப் பின் மிகவும் சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் மிகச் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

             நூல்: முஸ்லிம், அஹ்மத்

ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஃஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, 'யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டுவிட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டுவிடட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
      அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: புகாரி(1592)

இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


அறியாமைக்கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள், 'நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டுவிடலாம்' எனக் கூறினார்கள்.

       ஆதாரம்: முஸ்லிம்(1901)

பாவங்களுக்கு பரிகாரம்

நாம் ஒவ்வொரு நாளும் நம்மையறியாமலே ஏதாவது பாவங்களைச் செய்திருப்போம். நினைவில் இருக்கும்படி ஏதாவது பெரிய‌ பாவங்கள் இருந்தால் மட்டும் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவோம். மன்னிப்பு தேடப்படாத சிறு பாவங்கள் இருந்தால் நாம் கேட்கின்ற பிரார்த்தனை மூலமும், செய்கின்ற நல்லறங்களின் மூலமும் அல்லாஹுத்தஆலா (நாடினால்) மன்னிப்பளிக்கிறான். பாவங்களை மன்னிக்கும் நன்மைகளைக் கொண்ட‌ அதுபோன்ற‌ நல்லறங்களில் ஒன்றுதான் இந்த ஆஷூரா நோன்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

"முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்."

  அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி); நூல்: முஸ்லிம்(1976)

நபி(ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, 'அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும்' என்றார்கள்.

  அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி); நூல்: முஸ்லிம்(1977)

யூதர்களுக்கு மாறு செய்தல்

'ஆஷூரா நாள்' என்றால் 'பத்தாவது நாள்' என்று பொருளாகும். இந்த நோன்பு, பிறை 10 ல் நோற்கும் நோன்பு என்றாலும் யூதர்களும் அந்நாளில் நோன்பு நோற்றதால் நபி(ஸல்) அவர்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒன்பதாவது நாளும் சேர்த்து நோன்பு வைக்கும்படி கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், '(அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?' என்று வினவினர். அதற்கு நபியவர்கள், 'இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம்(முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் (சேர்த்து) நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள்.

மற்றொரு அறிவிப்பில், 'அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன்' என்று
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக வந்துள்ளது.
   அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: முஸ்லிம்(1916, 1917)

நபி(ஸல்) அவர்கள், இந்த ஆஷூரா நோன்பை நோற்க ஆரம்பித்த வருடத்தில் ஒன்பதாவது நாளும் சேர்த்து நோன்பு நோற்காவிட்டாலும், (இது யூத‌ர்களும் சிறப்பிக்கும் நாள் என்று தெரிந்ததால்) அடுத்த வருடத்திலிருந்து ஒன்பதாவது நாளும் சேர்த்து நோன்பு நோற்குமாறு கூறியிருக்கிறார்கள். அதனால் ஒன்பது & பத்து ஆகிய இரண்டு நாட்களும் நாம் நோன்பு நோற்கவேண்டும்.

எனவே நபி(ஸல்) அவர்களின் காட்டிய வழியில், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் வித‌மாக முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நோன்பிருந்து, இம்மாதத்தை கண்ணியப்படுத்தும் வித‌மாக நம்மால் இயன்ற வணக்கங்களை அதிகப்படுத்தி, பாவ மன்னிப்பு பெற்றவர்களாக அல்லாஹ் நம்மனைவரையும் ஆக்கியருள்வானாக!

20 comments:

  1. விருவான விளக்கங்களுக்கு நன்றி

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    அஸ்மா வழக்கம் போல் இக்கட்டுரையும் அருமையாக வந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்...

    ஆஷூரா நோன்பின் உண்மையான நோக்கத்தை அறியாமல் துக்க நாளாக நினைத்து உண்மையான நோக்கத்தையே மாற்றிவிட்டனர். மொஹரம் என்றாலே அவர்களுக்கான நாட்கள் என்றாகிவிட்டது. இந்நிலை மாறவும், அல்லாஹ் த்தஆலா பெயரில் இவர்கள் செய்யும் அனாச்சாரங்களும் ஒழிய துஆ செய்வோம். மக்கள் தெளிவு பெறுவது அவரவர் கையில் தான் உள்ளது. முடிந்தவரை இப்புனித நாளை பற்றி மாற்றுகருத்து கொண்டவர்களிடன் எடுத்துச்செல்லலாம்.

    ReplyDelete
  3. நல்ல விளக்கம் அஸ்மாக்கா.

    ReplyDelete
  4. சரியான நேரத்தில் அனைவரும் தெளிவு பெரும் வகையில் உள்ளது. அல்லா உங்களுக்கு வெகுமதி தருவானாக ஆமின்.

    ReplyDelete
  5. @ பார்வையாளன்...

    //விருவான விளக்கங்களுக்கு நன்றி//

    வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  6. @ ஆமினா...

    //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    ஆஷூரா நோன்பின் உண்மையான நோக்கத்தை அறியாமல் துக்க நாளாக நினைத்து உண்மையான நோக்கத்தையே மாற்றிவிட்டனர். மொஹரம் என்றாலே அவர்களுக்கான நாட்கள் என்றாகிவிட்டது. இந்நிலை மாறவும், அல்லாஹ் த்தஆலா பெயரில் இவர்கள் செய்யும் அனாச்சாரங்களும் ஒழிய துஆ செய்வோம். மக்கள் தெளிவு பெறுவது அவரவர் கையில் தான் உள்ளது. முடிந்தவரை இப்புனித நாளை பற்றி மாற்றுகருத்து கொண்டவர்களிடன் எடுத்துச்செல்லலாம்//

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... கண்டிப்பாக நம்மால் முடிந்தவரை சலிக்காமல் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் ஆமினா. காது கொடுத்து கேட்கும் மக்களில் பாதி பேராவ‌து திருந்தட்டுமே, இன்ஷா அல்லாஹ்!

    ReplyDelete
  7. @ ஹுஸைனம்மா...

    //நல்ல விளக்கம் அஸ்மாக்கா//

    வருகைக்கு நன்றி தோழி!

    ReplyDelete
  8. @ இளம் தூயவன்...

    //அல்லா உங்களுக்கு வெகுமதி தருவானாக ஆமின்//

    தங்களின் பிரார்த்தனைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ அஸ்மா
    சரியான சமயத்தில் வெளிவந்துள்ள விழிப்புணர்வு பதிவு
    சவூதியில் இன்று நாங்கள் நோன்பு நீங்கள்?

    ReplyDelete
  10. @ ஹைதர் அலி...

    //சவூதியில் இன்று நாங்கள் நோன்பு நீங்கள்?//

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... நாங்களும் இன்று நோன்புதான் சகோ. (பிறை 9)

    ReplyDelete
  11. மாஷா அல்லாஹ் தெளிவான விளக்கத்துக்கு மிக்க நன்ற அக்கா...:)

    ReplyDelete
  12. @ Hasan1...

    //மாஷா அல்லாஹ் தெளிவான விளக்கத்துக்கு மிக்க நன்ற அக்கா...:)//

    அல்ஹம்துலில்லாஹ்.. வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  13. அருமையாக விளக்கி இருக்கீங்க. நினைவுபடுத்தலுக்கு நன்றி.

    ReplyDelete
  14. @ asiya omar...

    //... நினைவுபடுத்தலுக்கு நன்றி//

    வருகைக்கு நன்றி ஆசியாக்கா.

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ அஸ்மா அவர்களே...ஆஷுரா நாள் பற்றி தெளிவான விளக்கங்கள்,...ஆஷுரா நோன்பை நாங்களும் நோற்றோம்.அல்லாஹ் நம் அனைவரின் சிறிய பெரிய பாவங்களை மன்னிக்க போதுமானவன்...

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  16. @ ரஜின்...

    //அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ அஸ்மா அவர்களே...ஆஷுரா நாள் பற்றி தெளிவான விளக்கங்கள்,...ஆஷுரா நோன்பை நாங்களும் நோற்றோம்.அல்லாஹ் நம் அனைவரின் சிறிய பெரிய பாவங்களை மன்னிக்க போதுமானவன்...

    அன்புடன்
    ரஜின்//

    வ அலைக்குமுஸ்ஸலாம். தங்களின் வருகைக்கும் துஆவுக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  17. மிக அருமையான விளக்கம் அஸ்மா

    ReplyDelete
  18. நாங்களும் இங்கு நோன்பு வைத்தோம் அல்லா நம் அனைவரின் சிறிய பெரிய பாவஙக்ளை மன்னிப்பானாக.

    ReplyDelete
  19. @ Jaleela...

    //மிக அருமையான விளக்கம் அஸ்மா//

    அல்ஹம்துலில்லாஹ்..!

    //நாங்களும் இங்கு நோன்பு வைத்தோம் அல்லா நம் அனைவரின் சிறிய பெரிய பாவஙக்ளை மன்னிப்பானாக//

    ஆமீன்! வருகைக்கும் துஆவுக்கும் நன்றி ஜலீலாக்கா.

    ReplyDelete
  20. விளக்கத்தை புரிய வைத்ததற்கு மிக்க நன்றி!!!!!!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை