அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday 30 August 2010

ரப்புல் ஆலமீன் தரும் ரமலான் பரிசு!


புனிதமிகு இந்த ரமலானிலே செய்யும் நல்லறங்களுக்கு நிகராக வேறு எந்த நாட்களிலும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

நம்மில் அதிகமானோர் அதற்காக நம் ஓய்வு, உறக்கம் கூட மறந்து அல்லாஹ்வுக்காக செய்யவேண்டிய அமல்களில் ஈடுபடுவது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றாலும், இன்னும் சில பேர் இந்த ரமலானில்கூட இறைவழிபாடுகளின் விஷயத்தில் அலட்சியம் செய்பவர்களாக இருப்பதைக் காண்கிறோம். கடைகளில் தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்குவதற்கு அந்த கூட்ட நெரிசலிலும் நாம் காட்டும் ஆர்வம், அல்லாஹ்வின் இந்த மகத்தான நற்கூலியை அடைவதில் காட்டுவதில்லை.

ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்:முஸ்லிம் (1945)

ஆக‌ ரமலானில் நாம் ஒரு நாள் செய்யும் நல்லறங்கள் அல்லாஹ்விடத்தில் 10 முதல் 700 நாட்கள் செய்யும் நல்லற‌ங்களுக்கு நிகரானதாக இருக்கிறது.

டிவி, இன்டர்நெட், செல் ஃபோன்கள், மற்ற பொழுது போக்குகள் மூலம் முடிந்தவரை நோன்பிருக்கும் நேரத்தை செலவழிப்பதில் முனைப்பாக‌ இருக்கும் நம் மக்கள், அல்லாஹ்வின் அளப்பரிய அருளைத் தேடுவதில் முனைப்புக் காட்டாமல், ரமலானின் நாட்களை வீணாக்கிக் கொண்டிருப்பது வேதனையான விஷயம்தான்! எனவே, கடந்த நாட்கள் கடந்ததாக இருக்கட்டும்; இனி மீதமிருக்கும் நாட்களிலாவது நம்மால் முடிந்த நல்ல அமல்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள முயற்சி செய்வோம்.

அடுத்த நொடி என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத நமக்கு, அடுத்த ரமலானை நாம் அடைவோம் என்பதில் யாரும் எந்த உத்திரவாதமும் கொடுக்க இயலாது. ஆகவே தொழுகையை சரியான முறையில் கடைப்பிடிப்பது, குர்ஆன் ஓதுதல், அதிகமதிகம் பிரார்த்தனையில் ஈடுபடுவது, இஸ்லாத்தின் ஒவ்வொரு அம்சங்களையும் பயான் கேட்பதின் மூலமோ, குர்ஆன்/ஹதீஸ் சம்பந்தமான இணையங்களைப் படிப்பதின் மூலமோ (எதன் மூலமாவது) அறிந்துக் கொள்வதில் ஆர்வத்துடன் ஈடுபடுவது, அல்லாஹ் நமக்கு பெருக்கித் தருவான் என்ற எண்ணத்தில் மனமுவந்து தாராளமாக தான தர்மங்கள் செய்வது, உங்களைப் போன்ற நோன்பாளிகளுக்கு உங்களால் இயன்றளவு நோன்பு திறக்க கொடுத்து உதவுவது மற்றும் பொதுநல சேவைகள் என மறுமைக்குரிய நற்காரியங்களை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும்.

மேலும் உலகில் எவ்வளவு பெரிய‌ வெகுமதிகள் நமக்கு கிடைத்தாலும் அவையாவும் அல்லாஹ்வுடைய பரிசுக்கு எள் முனைய‌ளவும் நிகரானது கிடையாது! அதுவும் இன்று ஆரம்பமாகும் கடைசிப் பத்தில் ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்தஆலா நமக்கு தரக்கூடிய ஓர் உன்னத அன்பளிப்பு 'லைலத்துல் கத்ரு' என்று சொல்லப்படும் ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவாகும்! அந்த இரவை அடையக்கூடிய‌ நாளை நாம் இப்போது நெருங்கிவிட்டோம்.

அல்லாஹ் தனது திருமறையில்,

"மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது" (அல்குர்ஆன் 97 :3)

என்று கூறுகின்றான்.  

அதாவது அந்த ஓர் இரவின் நன்மைகள் ஆயிரம் மாதங்கள் செய்யும் நன்மைகளைவிட சிறந்தது என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களும் நான்கு மாதங்களும் ஆகும். அதாவது ஒரு நாளின் நன்மை சராசரி மனித ஆயுளையும் விட அதிகமான ஆண்டுகளின் நன்மைகளினைப் பெற்றுத் தரவல்லது என்பதை நினைத்துப் பார்க்கும்போதே நமக்கு அல்லாஹ்வின் இந்த மகத்தான வெகுமதியினைத் தவற விடக்கூடாது எனும் எண்ணம் நிச்சயம் நமக்கு வரும்!

ஆனால், நமது வாழ்க்கையில் நாம் சந்தித்த கடந்த ரமலான்களில் லைலத்துல் கத்ரின் நன்மையை நாம் பெற்றுள்ளோமா என்பதை அல்லாஹ்வே நன்கறிவான். ஆயினும் அதைப் பெற நாம் நாடியுள்ளோமா? அதற்காக முறையாக நபி(ஸல்) அவர்களின் வழியில் முயன்றுள்ளோமா? என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நபி(ஸல்)அவர்கள் எந்த நாட்களில் 'லைலத்துல் கத்ரு' இரவைத் தேடிக்கொண்டார்கள்?

லைலதுல் கத்ரு (இரவு) கடைசிப் பத்து நாட்களில் உள்ளது. அதை இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ தேடுங் கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்: புஹாரி (2022)
    
நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரு (இரவைப்) பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். நபி(ஸல்)அவர்கள், "லைலத்துல் கத்ரு (இரவு) பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம். ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்'' என்றார்கள்.

அறிவிப்பவர்: உபாதா இப்னு ஸாமித் (ரலி); நூல்கள்: புஹாரி (49), முஅத்தா (615)

சில நபித்தோழர்கள் லைலத்துல் கத்ர், இருபத்தி ஏழாம் இரவு என்று கனவு கண்டு நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உங்கள் கனவைப் போல் நானும் கனவு கண்டேன். அது கடைசிப் பத்து நாட்களில்தான் அமைந்துள்ளது. யார் லைலத்துல் கத்ரை அடைய முயற்சிக்கின்றாரோ அவர் கடைசிப் பத்தில் தேடட்டும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி); நூல்: புஹாரி (1158)
    
மேலேயுள்ள‌ ஹதீஸ்கள் அனைத்தும் பொதுவாக லைலத்துல் கத்ரு கடைசிப் பத்து இரவுகளில் இருப்பதாக அறிவிக்கின்றன.

"எனக்கு லைலத்துல் கத்ரு இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே நீங்கள் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்!"
      அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி); நூல்கள்:புகாரி,முஸ்லிம்

'லைலத்துல் கத்ரை ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான இரவுகளில் நீங்கள் தேடுங்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:
அன்னை ஆயிஷா (ரலி); நூல்கள்: புஹாரி (2017), முஸ்லிம் (1997) 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, அது ரமலான் மாதத்தில்தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான 'இருபத்தி ஒன்று' அல்லது 'இருபத்தி மூன்று' அல்லது 'இருபத்தி ஐந்து' அல்லது 'இருபத்தி ஏழு' அல்லது ரமலானின் 'கடைசி இரவில் (29)' இருக்கும்'' என்று சொல்லி விட்டு, யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி); நூல்: அஹ்மத் (20700)
    
இந்த ஹதீஸ்களிலிருந்து லைலத்துல் கத்ரு இரவு கடைசிப் பத்து இரவுகளில், குறிப்பாக ஒற்றைப்படையான ஐந்து இரவுகளில் இருக்கிறது என்பதை அறியமுடிகிறது.

லைலத்துல் கத்ரும் இருபத்து ஏழாம் கிழமை இரவும்..!

இவ்வாறு மேலே கண்ட ஹதீஸ்களில் நபி(ஸல்)அவர்கள் தெளிவாக அறிவித்த செய்திகள் இருக்க, லைலத்துல் கத்ரு இரவு ரமலான் மாதத்தின் 27 ஆம் இரவில்தான் என பெரும்பான்மையான இஸ்லாமிய‌ மக்கள் தவறாக விளங்கி வைத்துள்ளனர். இவ்வாறு தவறாக விளங்கி வைத்திருப்பதால், ரமலான் மாதத்தின் 27ஆம் இரவில் மட்டும் பள்ளிகளில் மக்கள் நிரம்பி வழிவதைக் காண்கிறோம். அதுவரைக் கண்டிராத கூட்டம் பள்ளியில் அலைமோதும். அன்றைய இரவில் பள்ளிகள் அலங்கரிக்கப்பட்டும், பண்டங்கள், பதார்த்தங்கள், நேர்ச்சைப் பொட்டலங்கள், பழங்கள் என்று குவித்து வைத்து, அந்த ஓரிரவை மட்டும் விசேஷமாக சிறப்பிக்கும் அமல்களில் ஈடுபடுவதையும் காண முடிகிறது.

இப்படி அமர்க்களப்படுத்தி, அந்த 27 ஆம் இரவில் மட்டும் தொழுதுவிட்டு மற்ற ஒன்பது இரவுகளையும் வீணாக‌ விட்டுவிடுவது சரியான‌ முறைதானா? அந்த லைலத்துல் கத்ரு இரவு எப்போது கிடைக்கும், எப்படி முயன்றால் கிடைக்கும் என்பதை நம் மக்கள் அறிந்திருந்தால், கடைசிப் பத்தின் எல்லா நாட்களிலும் கண்விழித்து இறைமன்னிப்பைத் தேடுவதை விட்டுவிட்டு, இப்படி ஒரே நாளில் கொண்டாடிவிட்டு, மற்ற நாட்களில் வீட்டில் குறட்டை விட மனம் இடம் கொடுக்குமா?

இந்த நிலை சரியானதுதானா என்பதை நாம் ஆய்வு செய்தோமானால், நபி(ஸல்)அவர்கள் இப்படி ரமலான் 27 எனும் ஒரே இரவை சிறப்பிக்குமாறு கூறாததாலும், அவர்கள் வாழ்க்கையில் இது 21, 23, 25, 27, 29 போன்ற வெவ்வேறு ஒற்றைப்படை இரவுகளில் வந்துள்ளதாக அறிவித்துள்ளதாலும் 27 ஆவது இரவை மட்டுமே சிறப்பிப்பது நபிவழிக்கு மாற்றமானது என்பதை நாம் விளங்கமுடிகிறது. ஆக‌, முன்னோர்கள் செய்துவந்தார்கள் என்பதற்காக அல்லாமல், இதை நமது மறுமை வாழ்வுக்காக கவனத்தில் கொண்டு நமது அமல்களை நபிவழியில் மாற்றிக்கொண்டால் மட்டுமே மறுமையில் நாம் வெற்றிபெறமுடியும்!

-:லைலத்துல் கத்ரும் அதற்கான‌ ஸ்பெஷல் தொழுகையும்:-

'ரமலானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், "நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்துகளை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவர்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவர்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸலமா; நூல் : புஹாரி (1147)

மேற்படி ஹதீஸில் கூறப்பட்ட பதினொரு ரக்அத் இரவுத் தொழுகையைத்தான் நபி(ஸல்)அவர்கள் - தொழுகையின் நிலை, குர்ஆனை ஓதுதல், ருகூவு, ஸுஜுது போன்றவற்றை தகுந்த முறையில் நீட்டி, ஸஹர் நேரம் தப்பிவிடுமோ என்று கருதும் அளவுக்குத் தொழுதிருக்கின்றார்கள். இவ்வாறானத் தொழுகையைத்தான் நாமும் தொழ வேண்டும்.

அதை விட்டுவிட்டு, மார்க்கத்தில் இல்லாத தஸ்பீஹ் தொழுகை, 'குல்குவல்லாஹு' சூராவை நூறு தடவை ஓதி தொழும் தொழுகை, ராத்திபுகள், குர்ஆன் ஓதி கத்தம் செய்தல், குர்ஆனில் வரும் ஸஜ்தா வசனங்கள் அனைத்தையும் அந்தந்த அத்தியாயத்தோடு ஓதி ஸஜ்தா செய்யாமல் மொத்தமாக 27 ஆம் இரவில் ஓதி ஸஜ்தா செய்வது என நபி(ஸல்)அவர்கள் கற்றுத்தராத வணக்க வழிபாடுகளையெல்லாம் இஸ்லாமியர்களில் பெரும்பாலோர் செய்து வருவது எதன் அடிப்படையில் என்பதற்கு அவர்கள்தான் இறைவனிடத்தில் பதில்சொல்லவேண்டும்.

ஆக, லைலத்துல் கத்ரு இரவுக்கென்று எந்தவொரு பிரத்யேகத் தொழுகையையோ, மேற்கூறப்பட்டவற்றையோ நபி(ஸல்) அவர்கள் காட்டித்தரவில்லை என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.இப்போது இந்த லைலத்துல் கத்ரு இரவில் நம்முடைய வணக்க வழிபாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் நபிவழியில் நாம் பார்க்கலாம்:

நபி(ஸல்)அவர்கள் எவ்வாறு 'லைலத்துல் கத்ரு' இரவைத் தேடிக்கொண்டார்கள்?

ரமலானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்)அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். (அல்லாஹ்வைத் தொழுது) இரவை உயிர்ப்பிப்பார்கள். தமது குடும்பத்தினரையும் (இறைவனை வணங்குவதற்காக) எழுப்பி விடுவார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி); நூல் : புஹாரி 2024

நபி (ஸல்) அவர்கள் மற்ற எந்த நாட்களிலும் வணக்கத்தில் ஈடுபடாத அளவுக்கு ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.
      
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்:முஸ்லிம்

எனவே நபி(ஸல்) அவர்கள் தாமும் தமது குடும்பத்தினரும் விழித்திருந்து லைலத்துல் கத்ரு இரவைப் பெற வணக்கங்களில் ஈடுபட்டதைப் போல் நாமும் முயலவேண்டும். இயன்றால் அவர்கள் கடைசிப் பத்து நாட்கள் பள்ளியில் 'இஃதிகாஃப்' இருந்ததைப் போல் இஃதிகாஃப் இருக்கவேண்டும். நமது வாழ்நாளில் நேரம் கிடைக்கும் போது ரமலானில் குறைந்தது ஒரு முறையேனும் நபிவழியான (ஸுன்னத்தான) இந்த 'இஃதிகாஃப்' இருக்கவேண்டும் என்று உள்ளத்தினால் நாட்டம் கொள்ளவேண்டும். எத்தனையோ விஷயங்களுக்கு கண் விழித்து செயல்படும் நாம், இந்த மகத்தான கடைசிப் பத்து இரவுகளிலும் பாவமன்னிப்பு பெரும் விதத்தில் துவா செய்யவும் லைலத்துல் கத்ரு இரவினை முறையாகப் பெற்றிடவும் முனைந்திட வேண்டும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 
"அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ரு எந்த இரவு என்று நான் அறிய நேர்ந்தால் அந்த இரவில் என்ன சொல்ல வேண்டும்'' என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு (துஆவைக்) கற்றுத் தந்தார்கள்:

اَللَّهُمَّ اِنَّكَ عَفُوٌّ ، تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي 

(அல்லாஹும்ம இன்ன(க்)க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபு அன்னீ)

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி); நூல் : திர்மிதீ (3435)

பொருள்: இறைவா..! நீ மன்னிப்பவன்; மன்னிப்பையே விரும்புபவன்; எனவே என்னை மன்னித் தருள்வாயாக!

மேற்கண்ட துஆவை நாம் அதிகமதிகம் ஓதி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடவேண்டும். இந்த வருடம் நம்முடைய கடைசி ரமலானாக இருக்கலாம் என்ற உள்ளச்சத்தோடு துஆ செய்வோமேயானால், அதுவே நம்முடைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதற்கு போதுமானதாக அமைந்துவிடும், இன்ஷா அல்லாஹ்!

நாம் அந்த இரவைப் பெற முடியாத துர்பாக்கியசாலிகளாக இல்லாமல், எப்படியாவது அதை அடைந்துக் கொள்ளும் பாக்கியசாலிகளாக முயற்சிக்க வேண்டும். எந்தளவுக்கு அந்த பாக்கியம் நமக்கு கிடைக்கும் என்பதை அல்லாஹ்வே நன்கறிவான். ஆனால் பரவலாக பல முஸ்லிம்கள் இதன் அருமையை மறந்தவர்களாக  வாழும் நிலையும், குறிப்பாகக் கடைசிப் பத்து நாட்களில் நமது பொன்னான நேரத்தை இவற்றைவிடவும் அதிகமாக இதர அலுவல்களிலும், பெருநாளின் தேவைகள் என்று துணிமணிகள், அணிகலன்கள், அலங்காரப் பொருட்கள் போன்ற இதர பொருட்களை வாங்கும் நிமித்தம் கடைவீதிகளில் கழித்து விடுவதும், அதிலும் தள்ளுபடி விளம்பரங்களுக்காக மாலையில் வெளியேறி கடை கடையாக அலைவதும், இரவில் தாமதமாக அசதியுடன் வீடு திரும்பி இரவு தொழுகைகள், ஃபஜ்ரு தொழுகை, லைலத்துல் கத்ரு எனும் மகத்தான இரவு போன்ற அனைத்தும் தவறிவிடும் நிலையையும் காண முடிகிறது. அவையெல்லாம் லைலத்துல் கத்ரு என்னும் இந்தப் பொன்னான வாய்ப்பை இழக்கவைக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஷைத்தானின் முயற்சி என்றுதான் சொல்லவேண்டும். ஆக, இவற்றைத் தவிர்த்துக் கொள்ளும் விதமாக நமது தேவையானவற்றை கடைசிப் பத்து நாட்களுக்கு முன்னரே தாமதமின்றி வாங்கி தயார் பண்ணிக்கொண்டால், நேர விரயமின்றி கடைசிப் பத்து இரவுகளில் அதிகமான வணக்கங்கள், நல்ல அமல்கள் புரிந்து கண்ணிய மிக்க இந்த லைலத்துல் கத்ரை பெற ஏதுவாக அமையும்.

-:லைலத்துல் கத்ரு இரவினால் கிடைக்கும் இன்னொரு பயன்:-

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.

 அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்:
புஹாரி (35)

எனவே ரப்புல் ஆலமீன் தரும் ரமலான் பரிசான‌ லைலத்துல் கத்ரு இரவை அடைய‌ ரமலானின் கடைசிப் பத்தில் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்)அவர்களும் அனுமதித்தவைகளை நடைமுறைப்படுத்தியும் அனுமதிக்காதவைகளை தவிர்ந்து நடந்தும், இஸ்லாம் கற்றுத்தந்த வழியில் நம் வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொள்வோம். அதற்குரிய அறிவையும், ஆற்றலையும், பக்குவத்தையும் தர வல்ல அல்லாஹ்வையே பிரார்த்திப்போம்.

மேலும் இத்தகைய சிறப்புவாய்ந்த லைலத்துல் கத்ருடைய இரவுகளில் நின்று வணங்கியும், குர்ஆனை அதிகமாக‌ ஓதியும், திக்ருகளை மொழிந்தும் நம்முடைய அமல்களை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும். வீணான பேச்சுக்கள், சண்டை சச்சரவுகள் இவற்றை அறவே தவிர்த்துக்கொண்டு இறைவனிடம் அதிகமதிகம் பாவமன்னிப்பு கோரவேண்டும்.

சிறப்புமிகு இந்நாட்களின் அமல்களை முறையாக நிறைவேற்ற உதவிடவும், அதன் மூலம் அல்லாஹ்தஆலா நமக்கு பாவமன்னிப்பு அளித்திடவும், நமது பிராத்தனைகளை ஏற்று அருள் புரிந்திடவும், நம் அனைவரையும் நரகில் இருந்து பாதுகாத்திடவும், புனித ரமலானின் அனைத்து நன்மைகளையும் முழுமையாக பெற்றிடும் விதத்தில் அல்லாஹ்வின் ஏற்பிற்குரியதாக நமது அமல்கள் அமைந்திடவும், அதன் மூலம் நமது இம்மை/மறுமை வாழ்க்கை வெற்றி பெற்றிடவும் இந்த புனித ரமலானில் நமக்காகவும் அனைவருக்காகவும் என்றென்றும் பிரார்த்திப்போமாக!


ஜகாத்தும் ஸதகாவும் ஒன்றல்ல

நம் இஸ்லாமிய மக்களில் பலர் மார்க்கத்தில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டு அமல்கள் செய்தாலும், முக்கியமான கடமைகளில் ஒன்றான ஜகாத்தையும், கடமையல்லாத உபரி வணக்கமான ஸதக்காவையும் பிரித்தறியாதவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் ரமலான் மாதத்தில் ஏழை எளியவர்களுக்கு சில சில்லரைக் காசுகளை கொடுப்பதின் மூலம் தங்களின் ஜகாத் நிறைவேறிவிட்டதாக நிம்மதியடைந்துக் கொள்கிறார்கள். இதனால் கடமையான ஜகாத்தை முறையாக நிறைவேற்றாத ஆபத்தான நிலை ஏற்படுகிறது. அல்லது முறையாக ஜகாத்தை கணக்கிடுபவர்களும் அதே போலவே ரமலானில் அவற்றை சில்லரைகளாக பகிர்ந்துக் கொடுத்துவிட்டு, ஜகாத்தையும் அதுபோக அதிகபட்சமாக கொடுக்கவேண்டிய ஸதகாவையும் 'டூ-இன்-ஒன்'னாக கொடுத்து வேலையை முடிப்பதையும் பார்க்கிறோம். எனவே நாம் ஜகாத்திற்கும் ஸதகாவிற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து செயல்பட்டு அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிக்கவும், உபரியான ஸதகாவை அதிகமதிகம் கொடுத்து இறைவனின் அருளைப் பெறுவதற்காகவும் சிலவற்றை நாம் அவசியம் தெரிந்துக்கொள்ளவேண்டியுள்ளது.

- ஜகாத் என்பது ஒருவர் தம்முடைய செல்வத்திலிருந்து இஸ்லாம் மார்க்கம் வரையறுத்துள்ள குறிப்பிட்ட அளவின்படி குறிப்பிட்ட சில வகையின‌ருக்கு கொடுப்பதன் மூலம் செய்யும் கடமையான ஒரு இறை வணக்கமாகும்.

தொழுகையை நிலை நாட்டுங்கள்; ஜகாத்தையும் கொடுங்கள் (அல்குர்ஆன் 2:43)

‘இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

(1) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வை அன்றி வேறு யாரும் இல்லை என்றும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுதல்.
(2) தொழுகையை நிலைநாட்டுதல்.
(3) ஜகாத்தைக் கொடுத்தல்.
(4) ஹஜ் செய்தல்.
(5) ரமலானில் நோன்பு நோற்றல் என்பனவே அவையாகும்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்:புகாரி

- ஸதகா என்பது இஸ்லாத்தில் கடமையாக இல்லாவிட்டாலும் ஒருவர் தம்முடைய செல்வத்திலிருந்து யாருக்கு வேண்டுமானாலும் தானமாக கொடுப்பதன் மூலம் செய்யும் ஓர் இறை வணக்கமாகும்.

**********************************************************************************

- ஜகாத் என்பது திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிட்டுக் கூறியுள்ள சில‌ குறிப்பிட்ட பிரிவினருக்கு கொடுப்பதாகும். (இந்தப் பிரிவினர்களைத் தவிர வேறு யாருக்கும் ஜகாத் கொடுப்பதற்கு அனுமதியில்லை. அப்படி கொடுத்துவிட்டால் அந்த ஜகாத் செல்லாது)

(ஜகாத் என்னும்) தானதர்மங்களெல்லாம், ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும், இந்தத் தானதர்மங்களை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளம் ஈர்க்கப்பட்டவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடன் பட்டவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல் குர்ஆன் 9:60)

- ஸதகா என்பது ஜகாத்துக்காக இறைவன் வரையறுத்துள்ள பிரிவுகள் மட்டுமின்றி கஷ்டப்படக்கூடிய பிறருக்கும் கொடுக்கலாம். இப்படி கொடுக்கும்போது ஒருவேளை அது செல்வந்தர்களை சென்றடைந்துவிட்டாலும் அது செல்லும்.

**********************************************************************************

- ஜகாத் என்பது ஒருவரின் செல்வம் 'நிஸாப்' என்று சொல்லப்படும் ஒரு குறிப்பிட்ட அளவை அடைந்தவுடன் அவர் மீது கடமையாகும்.

- ஸதகா என்பதற்கு குறிப்பிட்ட அளவு நிர்ணயம் கிடையாது. ஒருவர் எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

**********************************************************************************

- ஜகாத் என்பது தங்கம், வெள்ளி, விளை பயிர்கள்/பழங்கள், வியாபார பொருட்கள் மற்றும் ஒட்டகம், ஆடு, மாடு போன்ற கால் நடைகள் ஆகிய குறிப்பிட்ட பொருட்களுக்காக மார்க்கம் வரையறுத்துள்ள குறிப்பிட்ட அளவின்படி கொடுக்கப்படுவதாகும்.

- ஸதகா என்பது குறிப்பிட்ட ஒரு பொருள் என்றில்லாமல் ஒருவர் எந்தப் பொருளையும் இறைவழியில் செலவழிப்பதாகும். இதற்கு இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்ற‌ வரையறையும் இல்லை.

**********************************************************************************

- ஜகாத்தைக் கொடுக்கும்போது ஒருவருடைய பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மொத்த தொகையாக ஒருவருக்கு கொடுக்கவேண்டும்.(அதன் மூலம் அவரும் ஜகாத் கொடுக்கக்கூடிய நிலைமைக்கு உயர்த்தப்படலாம்.)

சில்லரைகளாக ஜகாத் கொடுக்கக் கூடாது.

- ஸதகா என்பது மொத்தமாகவோ சில்லரையாகவோ நம் வசதிக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு கொடுக்கலாம்.

**********************************************************************************

- ஜகாத் கடமையான நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவரது வாரிசுகள் அவருடைய சொத்துக்களை பங்கிடுவதற்கும் அவரது மரண சாசன‌த்தை நிறைவேற்றுவதற்கும் முன்பே கடமையான ஜகாத்தை இறந்தவரின் சொத்திலிருந்து முதலில் நிறைவேற்றவேண்டும்.

- ஸதகா என்பதில் அவ்வாறான கடமை எதுவும் இல்லை.

**********************************************************************************

- ஜகாத் கொடுக்காவிட்டால் மறுமையில் தண்டணை உண்டு.

'எவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு' (அல் குர்ஆன் 9:34)

- ஸதகா கொடுப்பது நமக்கு அதிகபட்ச‌ நன்மைகளைப் பெற்றுத்தரும். கொடுக்காவிட்டால் நம்முடைய நன்மைகளின் அளவு குறையுமே தவிர தண்டனைக்குரிய‌ குற்றமாகாது.

**********************************************************************************

- ஜகாத்தை ஒருவர் தனது பெற்றோர்களுக்கோ அல்லது தமது வாரிசுகளுக்கோ கொடுக்கக்கூடாது.

- ஸதகா என்பதை இவர்களுக்கு கொடுக்கலாம்.

**********************************************************************************

- முஸ்லிமல்லாதவர்களில் யார் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் உளமார அன்பு செலுத்துகிறார்களோ அவர்களுக்கோ அல்லது பகைமைக்கொண்ட முஸ்லிமல்லாதவர்கள், தங்கள் பகைமையைக் கைவிடுவார்கள் என்றால் அவர்களுக்கும் ஜகாத் கொடுக்கலாம்.

இது தவிர முஸ்லிமல்லாத மற்றவர்களுக்கு ஜகாத் கொடுப்பதற்கு அனுமதியில்லை.

"......இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும்..." (அல்குர்ஆன் 9:60)

நபி(ஸல்)அவர்களும் இவ்வாறு அவர்களுக்கு வழங்கியுள்ளார்கள். நூல்: முஸ்லிம்; எண்: 4275, 4277

- ஸதகாவை நிராகரிப்பவர்களுக்கும், இணை வைப்பவர்களுக்கும் கொடுக்கலாம்.

இவைகளே ஜகாத்துக்கும் ஸதகாவுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசங்களாகும்.

குறிப்பு:-

- 'ஜகாத்' என்ற வார்த்தைக்கு 'வளர்ச்சி அடைதல்', 'தூய்மைப் படுத்துதல்' போன்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு. ஏனெனில், ஜகாத் வழங்குவது பொருளாதாரம் வளர்ச்சியடையவும் நன்மைகள் வளரவும் காரணமாக அமைகிறது.

"தர்மம் செய்வதால் செல்வம் குறைந்து விடாது". நூல்:முஸ்லிம், திர்மிதி, அஹ்மத்

ஸதகா என்பது எல்லா நற்செயல்களையும் குறிக்கக்கூடிய பரந்த பொருளுடையதாக இருக்கிறது.

'எல்லா நற்செயலும் தர்மமே' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி)அறிவித்தார்கள். நூல்:புகாரி

- கடமையான ஜகாத்தும் (குர்ஆன்/ஹதீஸ்களில்) சில இடங்களில் ஸதகா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அப்படி பெயர் சொல்லப்படும் இடங்களிலும்கூட‌ சட்டங்கள் ஒன்றாகாது.

அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

Saturday 28 August 2010

'ஸ‌தகா' என்ற தர்மம்


அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய பல வழிகள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று 'ஸ‌தகா' என்று சொல்லப்படும் தான தர்மங்கள் செய்வதாகும்.

“நீங்கள் விரும்பும் பொருள்களிலிருந்து செலவு செய்யாதவரை அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய முடியாது” என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். (அல்குர்ஆன் 3:92)

இந்த உலகத்தில் மனிதன் விரும்பக்கூடிய முக்கியமானவைகளில் முதலாவது செல்வம்தான்! எனவே செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாதவரை நன்மையை அடைய முடியாது என்பதை முதலில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

பொருளாதரத்தைப் பெற்றிருக்கும் ஒரு மனிதன்,அந்த பொருளாதாரத்தில் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் செலவு செய்ததுபோக மீதம் உள்ளதில் அவனால் இயன்ற அளவிற்கு தன்னுடைய உறவினர்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் அனாதைகளுக்கும் வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் அவர்களின் கண்ணீர் துடைக்கும் விதமாக, துயர் போக்கும் விதமாக‌ தர்மம் வழங்குவது இஸ்லாத்தின் பார்வையில் அவசியமாகும். ஆனால், பொருளாசை நிறைந்த இந்த உலகில் தர்மம் செய்வது என்பது மிகவும் அரிதாகி விட்டது. மரணித்த பிறகு எந்தப் பலனும் தராத செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதை விட, சேர்த்து வைப்பதில்தான் மனிதன் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறான்.

எனவேதான், மனித சமுதாயத்தின் ஒப்பற்ற வாழ்க்கை நெறியான இஸ்லாம், மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதற்காகவும் மனித நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மத்தியில் சகோதரத்துவமும் நல்லிணக்கமும் ஏற்படவேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தர்மம் வழங்குவதை கட்டாயமாக்கி இருக்கிறது.

பொருளாதாரம் என்பது இறைவனின் அருள். இவ்வுலகில் பொருளாதாரம் வழங்கப்பட்டவர்களின் நிலைமையையும் பொருளாதாரம் வழங்கப்படாதவர்களின் நிலைமையையும் நாம் சற்று சிந்தித்துப்பார்க்க கடமைப்பட்டுள்ளோம். வசதி படைத்தவர்களைவிட வசதி அற்றவர்கள் கல்வி, அறிவு, திறமை, கூர்மையான சிந்தனை போன்றவற்றில் உயர்ந்து இருக்கிறார்கள். இருந்தபோதிலும் அவர்கள் ஏழைகளாகவும் அன்றாட‌ம் பணத்திற்கு திண்டாடுபவர்களாவும் இருக்கிறார்கள். எனவேதான் பொருளாதாரம் என்பது என்னதான் திறமை, அறிவு இருந்தாலும் இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்பதை நாம் உணரவேண்டும்.

அதனால்தான் நபித்தோழர்கள் தர்மம் வழங்கும் விஷயத்தில் நான்-நீ என்று போட்டி போட்டார்கள். அவர்களில் செல்வம் படைத்தவர்கள், அதிகமதிகமாக தர்மம் செய்தார்கள். செல்வம் இல்லாதவர்கள் அதை செய்வதற்கு இயலாமல் போனார்கள். தர்மம் செய்ய இயலாம‌ல் ஏழைகளாகளாக இருந்த‌ நபித்தோழர்களுக்கு (தர்மம் செய்வதற்கு ஈடான நன்மை தரக்கூடிய)ஒரு துஆவை நபி (ஸல்)அவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள். அந்த துஆவையும் வசதி படைத்த சஹாபாக்களும் கற்றுக்கொண்டு ஓதத் துவங்கிவிடுகிறார்கள். இதைக் கண்ட ஏழை சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ்வின் அருள்கொடையாகும். அதை அவன், தான் நாடியவருக்கு கொடுப்பான் என்று குறிப்பிட்டார்கள்.
நூல்: முஸ்லிம் (ஹதீஸின் சுருக்கம்)

ஆக, செல்வம் என்பது இறைவனின் அருட்கொடைகளில் ஒன்றாகும். அல்லாஹ் நமக்கு செல்வத்தை கொடுத்து, அதை அல்லாஹ்வுக்காகவே தர்மம் செய்யக்கூடிய மனதையும் நமக்கு கொடுப்பதற்காக, அல்லாஹ்விடம் அதற்கான‌ எண்ணங்கொண்டு நாம் பிரார்த்திக்க வேண்டும். அவன் கொடுத்தவற்றிலிருந்து நாம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை விரும்பி மனதார தர்மம் செய்யவேண்டும். வசதி படைத்தவர்களாகிய நாம் வசதி இல்லாதவர்களுக்கு எந்த வகையில் உதவினாலும் அதன் மூலம் நாம் முழுமையான பலனை அனுபவிப்போம் என்பதையும், அது மறுமையின் (நம்முடைய நன்மை)அக்கவுண்ட்டில் சேரக்கூடிய தொகையாகும் என்பதையும் நினைவில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள்; நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும்; நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள் என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். (அல்குர்ஆன்: 2:272)

செல்வம் படைத்தவர்கள் தான தர்மங்கள் செய்து அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைந்துவிடுகிறார்கள். ஆனால் நாம் எவ்வாறு தானதர்மங்கள் செய்வது, அந்த நன்மைகளை எவ்வாறு அடைவது என்று வசதியில்லாதவர்கள் நினைக்கலாம்.

1 லட்ச‌ ரூபாய் இருக்கும் ஒருவர் 1000 ரூபாய் தர்மம் செய்வதைவிட, வெறும் 100 ரூபாய் வைத்திருப்பவர் தன்னைவிட கஷ்டப்படுபவருக்கு 50 ரூபாய்க்கு செய்யும் தர்மம்தான் மேலானதாகும். ஏனெனில் இறைவன் கொடுத்த‌ தன்னுடைய உடமையில் பாதியை அவர் கொடுத்துவிடுகிறார். ஆக தர்மம் செய்வதற்கு அதிகமான வசதிதான் இருக்கவேண்டும் என்று நினைக்கத் தேவையில்லை. அவரவர்களும் தன்னால் இயன்றளவுக்காவது தான தர்மங்களை செய்யவேண்டும். அதற்கும்கூட‌ சக்தி பெறாத பரம ஏழைகள் மற்றும் வறிய‌வர்கள் ஸதகாவின் நன்மையை அடைவதற்காக‌, நபி(ஸல்)அவர்களின் உபதேசங்கள் எவ்வாறு கைக்கொடுக்கின்றன, சுப்ஹானல்லாஹ்!

அபூதர்(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள், இறைவனின் தூதர்(ஸல்)அவர்களுடைய தோழர்களில் சிலர் பெருமானார்(ஸல்)அவர்களிடம் சொன்னார்கள், "இறைவனின் தூதரவர்களே! செல்வச் செழிப்புள்ளவர்கள் இறைவனிடம் மிகுந்த நற்கூலியை (தான தர்மத்தின் மூலம்)சம்பாதித்துக் கொண்டார்கள். அவர்கள் நாங்கள் தொழுவது போலவே தொழுகிறார்கள்; நாங்கள் நோன்பிருப்பது போலவே நோன்பிருக்கின்றார்கள்; அவர்கள் தங்களது தேவைக்குப் போக மிகுதியாயுள்ள செல்வத்திலிருந்து தர்மம் செய்கிறார்கள்"என்று கூறியபோது, பெருமானார் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உங்களுக்கும், தான தர்மங்கள் செய்திட தேவையானவைகளைத் தரவில்லையா?" எனக் கேட்டுவிட்டு சொன்னார்கள்,

"உண்மையிலேயே ஒவ்வொரு தஸ்பீஹும் ஒரு தர்மமாகும். ஒவ்வொரு தக்பீரும் ஒரு தர்மமாகும். ஒவ்வொரு தஹ்மீதும் ஒரு தர்மமாகும். ஒவ்வொரு தஹ்லீலும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல செயலைச் செய்யத் தூண்டுவதும் ஒரு சிறந்த தர்மமாகும். ஒரு தீய செயலைத் தடுப்பதும் ஒரு தர்மமாகும். நீங்கள் உங்கள் மனைவியரோடு வீடு கூடுவதும் ஓர் தர்மமாகும்" என்று கூறினார்கள்.

அப்போது நபித்தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் மனைவியிடம் தன் இச்சையை நிறைவு செய்துக்கொள்ளும்போது அதற்காகவும் அவருக்கு நற்கூலி உண்டா?" எனக் கேட்டார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்,"இதில் தடுக்கப்பட்ட(விபச்சாரத்)தை செய்பவர்கள் பாவம் செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீகளா? ஆகவே இதில் ஆகுமான முறையில் நடந்துக் கொள்பவர்களுக்கும் நற்கூலி உண்டு"
                 நூல்:முஸ்லிம்

இன்னொரு ஹதீஸிலே,

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள், “தொழுகைக்காக எடுத்து வைக்கக்கூடிய ஒவ்வொரு அடியும் ஸதகா, பாதையில் இருந்து தீங்கு தருபவற்றை அகற்றுவதும் ஸதகா, உன் சகோதரனைப் பார்த்துப் புன்முறுவல் பூப்பதும் ஸதகா” என்று கூறியுள்ளார்கள்.

"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும்." நூல்கள்: புகாரி, முஸ்லிம்

ஆக, அன்றாடம் உண்ணும் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்படும் மக்கள்கூட‌ இவ்வாறாக ஸதகாவின் நன்மைகளை அடைந்துக்கொள்வதற்கு இஸ்லாம் அழகிய நல்லொழுக்கங்களை வழிமுறைகளாக ஆக்கிக் கொடுத்திருக்கிறது. அதே சமயம் சஹாபாக்கள் செய்த தர்மங்களிலிருந்தும் இங்கே நாம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது.

அபூபக்கர் (ரலி) அவர்களைக் குறித்து நபி(ஸல்) அவர்கள் “இவருடைய செல்வம் இஸ்லாத்திற்கு உதவியது போல் வேறு யாருடைய செல்வமும் எனக்கு உதவியதில்லை” என்று கூறினார்கள். அதாவது, தபூக் யுத்தத்தின் போது நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டால் இங்கு பொருத்தமாக இருக்கும்.

தபூக் யுத்தத்திற்காக நபி(ஸல்) அவர்கள் பொருள் சேகரிக்க அறிவிப்பு கொடுக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அபூபக்கர் (ரலி) அவர்கள் தன்னிடம் உள்ள பொருள்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பது வழக்கமான ஒன்று. உமர் (ரலி) அவர்கள் இந்த முறை தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்து, அபூபக்கர் (ரலி) அவர்களை முந்திவிட வேண்டும் என்று நினைத்து நபி (ஸல்) அவர்களிடம் வந்து கொடுத்த போது, நபி(ஸல்) அவர்கள் உங்களுடைய குடும்பத்தினருக்காக ஏதாவது வைத்துள்ளீர்களா? என்று கேட்கிறார்கள். “சிலதை என்னுடைய குடும்பத்தினருக்காக மட்டும் வைத்துக் கொண்டு மற்ற அனைத்தையும் கொடுத்து விட்டேன்” என பதில் அளிக்கிறார்கள்.

அபூபக்கர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கொடுத்த போது உமர் (ரலி) அவர்களிடம் கேட்ட அதே கேள்வியை நபி (ஸல்) அவர்கள் கேட்கிறார்கள். அப்போது “அல்லாஹ்வும் அவனது தூதரும் எனது குடும்பத்தினருக்குப் போதுமானவர்களாக உள்ளனர்” என்று அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறியபோது, உமர் (ரலி) அவர்கள் “அபூபக்கர் (ரலி) அவர்களை என்னால் ஒருபோதும் கொடுப்பதில் முந்திவிட முடியாது” என்றார்கள். சஹாபாக்களிடையே கொடுப்பதில் அந்த அளவுக்குப் போட்டி இருந்தது.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்...? யாராவது நம்மிடம் உதவி கேட்டு வரும்போது நம்முடைய மணிபர்ஸில் உள்ள பெரிய நோட்டுகளையெல்லாம் விட்டுவிட்டு, சில்லரையாக தேடிப்பிடித்து கொடுக்கக் கூடியவர்களாக உள்ளோம். நம் செல்வம் பிறருக்கு சென்றுவிடா வண்ணம், நம் செல்வத்தோடு கைவிலங்குப் போட்டுக்கொள்வதையே நம்மில் அதிகமானோர் விரும்புகிறோம்.

நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் கொடுக்காவிட்டாலும் நம்மால் முடிந்த அளவு தாராளமாக கொடுத்து, அந்த தர்மம் நம் பாவங்களை அழித்து, நரகத்தைவிட்டும் நம்மை தடுக்கக்கூடிய கேடயமாகும்படி ஆக்கிக் கொள்ளவேண்டாமா?

“பேரீத்தம் பழத்தின் ஒரு கீற்றை(தர்மம் செய்வதைக்)கொண்டாவது உன்னை நரக நெருப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்” என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: அதிய்யுப்னு ஹாதம்(ரலி); நூல்:புகாரி

அதாவது, தன்னால் இயன்றது ஒரு பேரீத்தம்பழத்தின் கீற்றுதான் என்றாலும் அதையாவது தானமாக கொடுத்து, நரகத்தை விட்டும் தப்பித்துக் கொள்ளும்படி நபி(ஸல்)அவர்கள் கூறியிருக்கிறார்கள் என்றால், 'இது நான் சம்பாதித்த சொத்து, என்னுடைய செல்வம், நான் மட்டுமே இதை அனுபவிக்கவேண்டும், இதிலே என்னைத் தவிர யாருக்கும் உரிமையில்லை என்றெல்லாம் எண்ணி, கொடுக்கும் கரங்களைப் பெற்றிருக்கவேண்டிய எத்தனையோ செல்வந்த‌ர்கள், தன்னுடைய செல்வங்களை தன் கரங்களுக்குள் இறுக்கிப் பிடித்தவர்களாக வாழ்கிறார்களே, அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நரக நெருப்பையும் இவர்கள் அஞ்சவேண்டாமா?

ஒரு மனிதன் தான் செய்யும் சில தவறுகளின் காரணத்தினால் மறுமையில் நரகத்திற்கு செல்லக்கூடிய அவல நிலை ஏற்படும். அந்த நேரத்தில் அவன் தன்னை நரகைவிட்டும் காத்துக்கொள்வதற்கு தர்மத்தை ஒரு துணைச்சாதனமாக அல்லாஹ் ஆக்கி இருக்கிறான். ஒரு பேரீத்தம் பழத் துண்டுகூட சில நேரங்களில் நம்மை நரகை காப்பாற்றும் கேடயமாக அமைந்துவிடும். எனவே அற்பமானது என்று எண்ணி தர்மம் செய்யாமல் இருந்துவிடாமல் நம்மால் முடிந்த அளவு தர்மம் செய்து மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து யாருடைய ஆதரவுமற்ற அந்த‌ மறுமை நாளில் 'இன்னும் ஏதாவது ஒரு சிறிய நன்மை இருந்தால் போதுமே, அதைக் கொண்டு நரகத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாமே' என ஆதங்கப்பட்டாலும், திரும்பி இந்த உலகத்துக்கு வந்தா நாம் தர்மம் செய்து நன்மை தேடமுடியும்? சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?

இதுபோன்றவர்களைப் பற்றி இறைவன் தன் திருமறையில் கூறுகிறான், உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! "இறைவா! (இன்னும் கொஞ்சம்) குறைந்த காலலமாவது எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே" என்று அப்போது (மனிதன்) கூறுவான். (அல்குர்ஆன் 63:10)

மேலும் அல்லாஹ் தன்னுடைய திருமறையில், “குழந்தைகளும், செல்வங்களும் இந்த உலகத்தில் உங்களுக்கு சோதனைகளாகவே தரப்பட்டுள்ளது” என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 8:28) அந்த சோதனையில் இருந்து தப்பித்து வெற்றிபெற வேண்டுமெனில், அந்தச் செல்வத்தை நம்மால் இயன்றவரை அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்தால் மட்டுமே ஈடேற்றம் பெற முடியும்.

ஆக, ஏழை எளிய மக்களுக்கு நாம் பெரிதாக வீடு வாசல் கட்டி மறுவாழ்வு அளிக்க இயலாவிட்டாலும், அடுத்த வேளை உணவுக்கு அவர்களுக்கு என்ன வழி பண்ணுவோம் என்றாவது நாம் சிந்திக்கவேண்டும்.

-:தர்மம் செய்வதால் நம்முடைய செல்வம் குறைந்துவிடுமா?:-

நாம் அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் மூலம் நம்முடைய செல்வம் குறைந்துவிடுகிறது என சிலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் வழங்கும் தர்மம் மறுமையில் அல்லாஹ்வால் பல மடங்கு உயர்த்தப்பட்டு மிகப் பெரிய கூலியாக வழங்கப்படும். அல்லாஹ் தன் திருமறையில்,

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 2:261)

ஆக, ஒவ்வொரு முறையும் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் போது 1×7×100=700 மடங்கு நன்மைகளை அல்லாஹ்தஆலா நமக்கு அள்ளித் தருகிறான்.

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,

யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீத்தம் பழத்தின் மதிப்புக்கு தர்மம் செய்தாரோ, அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வதில்லை; அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலது கரத்தால் ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரை குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைப்போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹூரைரா(ரலி); நூல்: புகாரி

மேலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தான தர்மங்கள் செய்பவருக்கான உவமானம்:

“அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது, உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்” (அல்குர்ஆன் 2:265)

நம்முடைய செல்வத்தை விசாலப்படுத்த வேண்டுமென்றால், தான தர்மங்கள் செய்ய வேண்டும் என குர்ஆனும் ஹதீஸும் நமக்கு அறிவுறுத்துகின்றன‌. இதை வலுப்படுத்தும் வகையில், அல்லாஹுத்தஆலா நம்முடைய செலவினங்களை தான் கவனித்துக்கொள்வதாக ரசூல்(ஸல்) கூறும் இன்னொரு ஹதீஸ்:

ஆதமுடைய மகனே நீ (கொடு) செலவிடு! உனக்கு நான் செலவிடுகிறேன் (கொடுக்கிறேன்)என்று அல்லாஹ் சொல்வதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி); நூல்:புகாரி

ஆக, நாம் ஸதகா செய்யும்போது இறைவனும் நமக்கு பொருளாதாரத்தை வழங்குவான். கொடுக்க கொடுக்க நம் செல்வத்தை நாம் அறியாத புறத்திலிருந்து இறைவன் வளர்த்துதான் கொடுப்பானே தவிர, நமது செல்வம் தான தர்மங்களால் குறைவதில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

-:தான தர்மங்களை வாரிவழங்குதல்:-

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்,

"நபி(ஸல்)அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை)ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) ரமலானின் ஒவ்வொரு இரவும் - ரமலான் முடியும்வரை - நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள்." நூல்:புகாரி

எனவே எனதருமை சகோதர சகோதரிகளே! நன்மைகள் பெருக்கிக் கொடுக்கப்படும் இந்த ரமலானிலும், வருஷத்தின் மற்ற நாட்களிலும் நாம் அல்லாஹ்வின் பாதையில் அதிகமதிகம் செலவு செய்து அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் நன்மைகளை அடைந்துக் கொள்ள முழுமையாக முயற்சி செய்வோமாக!


Friday 27 August 2010

ரமலான் எதிர்பார்க்கும் இலட்சியம்



'யார் பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ, அவர் பசித்திருப்பதாலும், தாகித்திருப்பதாலும் அல்லாஹ்வுக்கு எத்தகையத் தேவையுமில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, அவனுக்காக நாம் நோன்பு நோற்கின்றோம். நோன்பை நோற்பதன் மூலம் நம்மிடத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படவேண்டுமோ, அவை ஏற்பட்டிருக்கின்றனவா? இல்லையா என்பதை நாம் சுயபரிசோதனை செய்யக் கடமைப் பட்டுள்ளோம். அல்லாஹ் எவைகளைச் செய்யச் சொன்னானோ, அவற்றை முழு மனதுடன் செய்வது போலவே, எவைகளைத் தவிர்க்கச் சொன்னானோ அவற்றையும் கண்டிப்பாகத் தவிர்ந்து நடக்கவேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடக்கும்போது அதற்கான நற்கூலிகள் வழங்கப்படும். எவைகளை அல்லாஹ் தேவையில்லை என்ற தடுத்தானோ, அவை மீறப்படும்போது தண்டனையைத் தயார் படுத்துகின்றான். ஒவ்வொரு நிமிடமும் நான் ஒரு அடிமை என்ற நன்றி உணர்வோடு நாம் வாழ வேண்டும். குறிப்பாக ரமலான் மாதத்தில் மிகுந்த பக்குவத்துடன் அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். தீமைகளை விட்டும் தூரமாகி, பரிசுத்தமான வாழ்வின் பக்கம் மீளவேண்டும். இதையே அல்லாஹ் எதிர்பார்க்கிறான்.

Tuesday 24 August 2010

சுவர்க்க வாசிகள் vs நரக வாசிகள்




சுவர்க்க வாசிகள் vs நரக வாசிகள்
=================================



இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்) (56:20,21)

உணவு

அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது அன்றியும் பசியையும் தணிக்காது. (88:6,7)

----------------------------------------------------------------------------------------------

நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள் அதன் கலப்பு கற்பூரமாக இருக்கும் (76:5)

பானம்

அவனுக்கு முன்னால் நரகம் தான் இருக்கிறது, இன்னும் அவனுக்கு (துர் நாற்றமுள்ள) சீழ் நீரே குடிக்கக் கொடுக்கப்படும். அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான். எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும். எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன். அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு. (14:16,17)

----------------------------------------------------------------------------------------------

அவர்களின் மீது ஸுன்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும். இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர். அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான். (76:21)

ஆடை

(முஃமின்களும், முஃமின்களல்லாதவருமான) இரு தரப்பாரும் தம் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர். ஆனால் எவர் (இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தாயாரிக்கப்படும். கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும். (22:19)
----------------------------------------------------------------------------------------------


அந்நாளில் சிலமுகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும். சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். (80:38,39)

தோற்றம்

ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும். (80:40)

----------------------------------------------------------------------------------------------
(பொன்னிழைகளால்) செய்யப்பட்ட கட்டில்களின் மீது - ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். (56:15,16)

படுக்கை

அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம். (7:41)

----------------------------------------------------------------------------------------------

எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள். அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும். அதன் காவலர்கள் அவர்களை நோக்கி "உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள் எனவே அதில் பிரவேசியுங்கள் என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்" (என்று அவர்களிடம் கூறப்படும்). (39:73)

வரவேற்பு

"நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள் என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்" என்று (அவர்களுக்குக்) கூறப்படும் பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது. (39:72)

----------------------------------------------------------------------------------------------

அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான் சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான் அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் அன்றியும், நிலையான அத்னு என்னும் நிலையான சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு இதுவே மகத்தான பாக்கியமாகும். (61:12)

தங்குமிடம்

அது சுட்டெரிக்கும் நெருப்பாகும் (101:11)
அவர்கள் நரகில் கருகுவார்கள் (83:16)

----------------------------------------------------------------------------------------------

அவர்கள் செய்த (நற்)கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. (32:17)

முன்னேற்பாடு

மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)


----------------------------------------------------------------------------------------------

அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்கள் அதிலிருந்து மாறி (வேறிடம்) செல்ல விரும்ப மாட்டார்கள். (18:108)

நிரந்தரம்

நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள் - இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள். (98:6)

----------------------------------------------------------------------------------------------
thanks to: tntjkaraikal


நரக நெருப்பும் அதன் அகோரமும் (உலகத்திலுள்ள அதன் சிறு உதாரணம்)



Photobucket
இஸ்லாம் நரக நெருப்பையும் - அதன் வேதனையையும் பற்றி கடினமாக எச்சரிக்கை செய்கின்றது. நரகத்தின் அகோரமும், அதன் தீப்பிழம்புகளும் எப்படி இருக்கும் என்பதற்கான உதாரணங்கள் சிறிய அளவில் பூமியி்ன் சிற்சில பகுதிகளில் அவ்வப்போது தெரியத்தான் செய்கின்றன. நல்லுணர்வு பெறும் உள்ளங்களுக்கு இந்த உதாரணங்கள் போதுமானதாகும்.

وَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ كُلَّمَا أَرَادُوا أَن يَخْرُجُوا مِنْهَا أُعِيدُوا فِيهَا وَقِيلَ لَهُمْ ذُوقُوا عَذَابَ النَّارِ الَّذِي كُنتُم بِهِ تُكَذِّبُونَ
எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் - அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு "எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்" என்று அவர்களுக்குச் சொல்லப்படும். (அல்குர்ஆன் 32:20)
Photobucket





لَهُم مِّن جَهَنَّمَ مِهَادٌ وَمِن فَوْقِهِمْ غَوَاشٍ وَكَذَلِكَ نَجْزِي الظَّالِمِينَ

(ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கையற்று வாழும்) அவர்களுக்கு நரகத்தில் விரிப்புகளும், அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.(அல்குர்ஆன் 7:41)



உலக நெருப்பிற்கும், நரக நெருப்பிற்கும் உள்ள வேறுபாடு:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்" என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே" என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், '(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்" என்றார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி); நூல்: புகாரி

فَاتَّقُواْ النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ
மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:24)
கற்பாறைகளே உருகி ஓடுமளவு வெப்பம் கொண்ட இந்த உலக நெருப்பே இப்படியென்றால், இதைவிட 70 மடங்கு அதிக வெப்பத்தை கக்கும் நரக நெருப்புக்கு, கற்பாறைகளை விட பல மடங்கு மென்மையான மனிதர்களாகிய நாம் எம்மாத்திரம்? சிந்திக்கவேண்டாமா?



إِنَّهُ مَن يَأْتِ رَبَّهُ مُجْرِمًا فَإِنَّ لَهُ جَهَنَّمَ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيى


நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ, அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது. அதில் அவன் மரிக்கவும் மாட்டான். வாழவும் மாட்டான். (அல்குர்ஆன் 20:74)




சீறும் எரிமலையைப் பாருங்கள்! நரகத்தின் கொந்தளிப்பைப் பற்றி இறைவன் கூறுவதையும் பாருங்கள்!


إِذَا رَأَتْهُم مِّن مَّكَانٍ بَعِيدٍ سَمِعُوا لَهَا تَغَيُّظًا وَزَفِيرًا

(அந்நரகம்) இவர்களை வெகு தொலைவில் காணும்போதே அதற்கே உரித்தான கொந்தளிப்பையும், பேரிரைச்சலையும் அவர்கள் கேட்பார்கள். (அல்குர்ஆன் 25:12)
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களுக்காக நாங்கள் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறோம். நாங்கள் அறிந்துக்கொண்டே பாவம் செய்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம். அறியாமல் செய்யும் பாவங்களுக்காக எங்களைப் பொறுத்தருள வேண்டுகிறோம். இந்த பயங்கர நரக வேதனையிலிருந்து எங்களை தூரமாக்கிவைப்பாயாக‌!





பயணிக்கும் பாதை