அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday 17 February 2011

'மீலாதுந்நபி' எனும் மீலாது விழா: வழிபாடா? வழிகேடா?

இஸ்லாமிய மாதங்களில் மூன்றாவது மாதம் 'ரபீஉல் அவ்வல்' மாதம். இந்த மாதத்தில் இஸ்லாமியர்களில் சிலர் அத‌ற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து 'மீலாது விழா' என்ற பெயரில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளை ஒரு விழாவாக‌க் கொண்டாடி வருகின்றனர். நேற்று (16/02/11) உட்பட பல இடங்களில் இது கொண்டாடப்பட்டுள்ள‌து.


அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் தவ்ஹீத் பிரச்சாரத்தின் மூலமாக மக்கள் விழிப்புணர்வு பெற்றதால், மீலாத் விழாவும் அதன் பெயரால் நடத்த‌ப்படுகின்ற அனாச்சாரங்களும் பல பகுதிகளில் ஒழிந்துக் கொண்டு வந்தாலும், இன்னும் சில இட‌ங்களில் இன்றுவரை அரங்கேற்றப்பட்டு வருவதால் முழுமையான இஸ்லாமிய சமுதாயத்தையும் அதிலிருந்து மீட்டெடுக்க, மென்மேலும் அவர்களுக்கு தெளிவூட்டவேண்டியது அவசியமாகிறது. அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும், இன்ஷா அல்லாஹ்!

இந்த மீலாது விழாக்கள் இந்தியாவில் மட்டுமின்றி, அரபு நாடுகளுக்கு செல்பவர்களில் சிலர் அங்கும் போய் மீலாது விழாவைக் கொண்டாடவென‌ அவர்களுக்குள் நோட்டீஸ், ஈமெயில் மூலமாக அறிவிப்பு செய்து, அழைப்புகள் விடுத்து எப்படியோ ஒன்றுகூடி நடத்திவிடுகின்றனர். ஆனால் அந்த இஸ்லாமிய‌ நாடுகளில் "மீலாது" என்ற பெயரில் எந்தவித‌ கொண்டாட்டங்களோ, விசேஷ நிகழ்ச்சிகளோ, அரசாங்க விடுமுறையோ கூட இருப்பதில்லை என்பது நாம் கவனிக்கவேண்டிய ஒன்றாகும்.

இந்த‌ மீலாத் விழாக் கொண்டாட்டங்கள் மூலம் நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள எங்களின் அன்பை வெளிப்படுத்துகிறோம், அவர்களைப் புகழ்வதின் மூலம் அவர்களை கண்ணியப்படுத்துகிறோம், இதன் மூலம் அவர்களை நினைவு கூறுகிறோம் என்ற காரணங்களைக் கூறிக்கொண்டு அவர்கள் அரங்கேற்றி வரும் பல்வேறு அனாச்சாரங்களுக்கு இஸ்லாத்தில் துளியளவும் இடமில்லை. அவையெல்லாம் வழிபாடுகளே என்று நினைத்துக் கொண்டிருக்கும் அறியா மக்களை அந்த அறியாமையிலிருந்து வெளியேற விடாமல் எதையாவது சொல்லி மழுப்பி, அவை அத்தனையும் சரியென்று மக்களை நம்பவைத்து அவர்களை வழிகேட்டிலேயே தள்ளிக் கொண்டிருக்கும் சுன்னத் வல்ஜமாஅத்தின் ஆலிம்கள், அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லவேண்டிய நாளைய மறுமைக்கு அஞ்சிக் கொள்ளட்டும்! இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இம்மாதத்தில் அவர்கள் நடத்தும் இந்த மீலாது விழாவின் பின்னணி என்ன? இதை எந்த விதத்தில் இஸ்லாம் தடுக்கிறது? என்பதைப் பார்ப்போம்.

அல்லாஹ்வையும் அவனது தூதர்(ஸல்) அவர்களையும் மனதார ஏற்றுக் கொண்ட ஒரு முஸ்லிம், வணக்கமாக நினைத்து, தான் செய்யும் ஒரு காரியத்தை அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆனையும், நபி(ஸல்) அவர்கள் கூறிய/செயல்படுத்திய/அங்கீகரித்தவற்றை மட்டுமே உரைக் கல்லாக வைத்துதான் அது வணக்கமா அல்லது இல்லையா என்பதை முடிவு செய்ய‌வேண்டும். அப்போதுதான் அந்த வணக்கத்திற்கு நன்மை கிடைக்கும். இல்லையென்றால் அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படாத தீமைகளின் பட்டியலில் சேர்ந்துவிடும். (அல்லாஹ் காப்பானாக!) அப்படியானால், இந்த 'ரபீஉல் அவ்வல்' மாதத்தில் நடத்தப்படுபவை அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் காட்டித் தந்த‌தின் அடிப்படையில் அமைந்துள்ளதா என்றால், நிச்சயமாக இல்லை!

மீலாது விழாவின் பின்னணி:

நபி(ஸல்) அவர்கள் தனக்காகவோ, தனக்கு முந்திய நபிமார்களுக்காகவோ அல்லது இறப்பால் தனக்கு முந்திச் சென்ற தன்னுடைய தோழர்களுக்காகவோ, குடும்பத்தினருக்காவோ பிறந்தநாள் ('மீலாது') விழா கொண்டாடியதில்லை. அதுபோல் நான்கு கலீஃபாக்களோ, மற்ற நபித்தோழர்களோ, அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களோ, அல்லது நபி(ஸல்) அவர்களால் போற்றப்பட்ட முந்தய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களோ மீலாது விழா கொண்டாடவில்லை. அப்படியானால் மீலாது விழாவின் ஆரம்பம் எப்போது?

திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒருவரான இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஹிஜ்ரீ 357 முதல் 567 வரை மிஸ்ரை(எகிப்து) ஆண்டு வந்த 'ஃபாத்திமியீன்'களின் ஆட்சியில் 'அப்துல்லாஹ் இப்னு மைமூன் அல் கதாஹ்' என்ற யூதனால் இஸ்லாத்தின் பெயரால் பல விழாக்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் நபி(ஸல்) அவர்களின் பிறந்தநாள் விழாவும் ஒன்று. 

(நூல்: பிதாயா வன் நிஹாயா; பாகம் 11; பக்கம் 172) 

எனவே இவ்விழா ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் இஸ்லாமியப் போர்வையில் வந்த யூதர்களால் முதலில் அரங்கேற்றப்பட்டுள்ளது. அதாவது, நபி(ஸல்) அவர்களுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் வந்த 'பாதினிய்யா' கூட்டத்தைச் சேர்ந்த 'ஃபாத்திமியீன்கள்' என்ற வழிகெட்ட வம்சா வழியினர்தான் இந்த "மீலாது விழா"வை இஸ்லாத்தில் புகுத்தியவர்கள் என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. (இவர்கள் யார்? எப்படிப்பட்ட கொள்கைக் கொண்டவர்கள்? அவர்களின் கொள்கையின் நோக்கம் என்ன? என்பதை (இன்ஷா அல்லாஹ்) அடுத்தடுத்த பதிவுகளில் காண்போம்) ஆக, 'நபி(ஸல்) அவர்களுக்காக' என்று கூறி இவர்கள் இவ்வாறு மீலாது விழாவை ஆரம்பித்து வைத்தது இஸ்லாத்தையோ, நபி(ஸல்) அவர்களையோ நேசிப்பதற்காக அல்ல‌! இஸ்லாத்தை அழிப்பதற்காகவும், இஸ்லாத்தை விட்டும் அதன் உண்மையான/தூய்மையான‌ கொள்கைகளை விட்டும் முஸ்லிம்களை தூரமாக்கும் திட்டத்தில், இஸ்லாத்தில் இல்லாதவைகளை இஸ்லாத்தில் நுழைய வைக்கவேண்டும் என்பதற்காகவே இதுபோன்றவற்றை துவக்கி வைத்தார்கள்.

நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் எப்போது?

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு மீலாது விழாவைக் கொண்டாடுபவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12 ல் நபி(ஸல்) அவர்கள் பிறந்தார்கள் என்று எண்ணிதான் கொண்டாடுகிறார்கள். ஆனால் இஸ்லாமிய தேதி(பிறை)யின் அடிப்படையில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் இதுதான் என்று எந்தவித சரியான தகவலும் எந்த ஹதீஸ் நூலிலும் பதிவு செய்யப்படவில்லை. அதேசமயம் கிழமையின் அடிப்படையில் உறுதியாகப் பதிவு செய்யப்பட்ட ஒரே ஆதாரம் திங்கள் கிழமை என்பது மட்டுமே! அப்படியானால் நபி(ஸல்) அவர்கள் எந்த பிறையில் பிறந்தார்கள் என்றே சரியாக சொல்லப்படவில்லை என்ற விஷயம் கூட தெரியாமல் எப்படி பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் அவர்களுக்கு?! இதை முன் நின்று நடத்தும் சுன்னத் ஜமாஅத்தினரிடம் இதுபற்றி கேட்போமானால் அதற்கும் அவர்கள் ஆயிரம் மழுப்பல்கள் வைத்திருக்கலாம்!

நபி(ஸல்) அவர்களைப் புகழ் பாடக்கூடாதா?

இந்த விழாவிற்கு முந்திய நிகழ்ச்சிகளில் முக்கியமானது 'மவ்லிது' என்ற புகழ் பாடுவதாகும். நபி(ஸல்) அவர்கள் எந்தக் கொள்கையை விட்டும் மக்களைத் தடுப்பதற்காக நபியாக அனுப்பப்பட்டார்களோ அதே இணை வைக்கும் கொள்கையை அடிப்படையாக‌க் கொண்ட  அந்த பாடல்களை அவர்களைப் புகழ்வதற்காக பாடப்படுகிறது. இது எவ்வளவு பெரிய அநியாயம்?! அதுவும் அல்லாஹ்வை மட்டுமே அழைக்கவேண்டிய பள்ளிவாசலில் வைத்தே அவனுக்கு இணைவைக்கும் இந்த மவ்லிது கவிதைகள் மிகவும் பக்திப் பரவசத்தோடு பாடப்படுகின்றன‌! இது மிகப்பெரும் அநீதியில்லையா? ஏக இறைவனை மறைமுகமாக‌ எதிர்க்கும் நன்றிகெட்ட செயல் அல்லவா?  வெளிப்படையாகப் பார்த்தால் அவை நபி(ஸல்) அவர்களைப் போற்றுவது போன்று தோன்றினாலும், உண்மையில் அவை அத்தனையும் 'ஷிர்க்' என்னும் இணைவைக்கும் கொள்கைகையைக் கொண்ட வரிக‌ளாகும்.

அண்ணல் நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையைப் பாருங்கள்:

"கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தியதுபோல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியான்தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உமர்(ரலி); நூல்:புகாரி(3445)

இன்னும் இதுபோன்ற நிறைய ஹதீஸ்களில் தன்னை வரம்பு மீறி புகழ்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்பதைக் காணமுடிகிறது. ஏனெனில் வரம்பு மீறிப் புகழ்வது கூட இணை வைத்தலில் கொண்டுபோய் சேர்த்துவிடும் என்பதில் நபி(ஸல்) அவர்கள் மிகவும் கவனமாக இருந்தார்கள்.

'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; தான் நாடியவருக்கு இது அல்லாத மற்ற பாவங்களை மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)

ஆக மவ்லிது, மீலாது விழா போன்றவை நபி(ஸல்) அவர்கள் மரணித்து நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது மட்டுமல்லாமல், இறைவனிடம் மன்னிப்பே கிடைக்காத‌ இணை வைத்தல் என்னும் மாபாதக குற்றத்தை செய்யக்கூடியதாக இருக்கும்போது, அதற்கு மார்க்க சாயம் பூசுவது அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் கை வைப்பதாகும். (நஊது பில்லாஹி மின்ஹா!)

மவ்லிது ஓதி, மீலாது கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களே! இந்த வருடம் அறிந்தோ அறியாமலோ கொண்டாடியவர்கள் அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்ச‌க்கூடிய மக்களாக இருந்தால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடிக்கொள்ளுங்கள்! வரக்கூடிய வருடங்களில் இதுபோல் கொண்டாடி இறைவனின் கோபத்தைப் பெற்றுக்கொள்வதை விட்டும் தற்காத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் முறை இதுவல்ல என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்! அப்படியானால் நபி(ஸல்) அவர்களை எவ்வாறுதான் நேசிக்கவேண்டும்? என்ற கேள்விக்கு, வரக்கூடிய பதிவுகளில் விடைக் காண்போம் இன்ஷா அல்லாஹ்!

14 comments:

  1. அறியாமைன்னு ஒரே வரியில இதுக்கு பதில் சொல்ல முடியாது.. அறிவுள்ள மக்களே அதிகம் செய்யுறாங்க ..கேட்டா அறிவுக்கு சம்பந்தமில்லாத பதிலாதான் வருது என்ன செய்ய ...!!

    ReplyDelete
  2. அந்தந்த நேரத்திர்க்கு தகுந்த பதிவுகளை அழகாக ஆதாரத்தோடு பதிவிடுகிறீர்கள் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    மீலாது விழா கொண்டாடும் பலர் கடமையான தொழுகையை கடைபிடிப்பதில்லை என்பதும் ஒரு வேதனையான செய்தி.

    ReplyDelete
  4. @ ஜெய்லானி...

    //அறியாமைன்னு ஒரே வரியில இதுக்கு பதில் சொல்ல முடியாது.. அறிவுள்ள மக்களே அதிகம் செய்யுறாங்க ..கேட்டா அறிவுக்கு சம்பந்தமில்லாத பதிலாதான் வருது என்ன செய்ய ...!!//

    நீங்க சொல்வதும் சரிதான் சகோ. கற்றறிந்த ஆலிம்கள்தான் இதற்கு தலைமை தாங்குவதெல்லாம். ஆனா அதற்கு ஆதாரம் கேட்காம‌ அவங்கள அப்படியே ஃபாலோ பண்ணுகிற மக்கள் கூட்டத்தில் பெரும்பான்மையினர் அறியாமைல்தான் உள்ளனர் :( வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  5. @ ராஜவம்சம்...

    //அந்தந்த நேரத்திர்க்கு தகுந்த பதிவுகளை அழகாக ஆதாரத்தோடு பதிவிடுகிறீர்கள் வாழ்த்துக்கள்//

    எல்லா புகழும் இறைவனுக்கே! தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  6. @ மு.ஜபருல்லாஹ்...

    //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    மீலாது விழா கொண்டாடும் பலர் கடமையான தொழுகையை கடைபிடிப்பதில்லை என்பதும் ஒரு வேதனையான செய்தி//

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... உண்மைதான் சகோ. தர்காவைக் கட்டிக் கொண்டு அழுவார்களே தவிர பள்ளிவாசல் பக்கம் தலை வைத்துக்கூட படுக்காதவர்களும் அவர்களில் உண்டு :( அல்லாஹ்தான் அனைவருக்கும் ஹிதாயத் கொடுக்கவேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  7. In UAE, Is it Holiday for Milad Un Nabi...?

    ReplyDelete
  8. @ Anonymous...

    உலக சந்தையான UAE ல் வணிக நோக்கத்திற்காக அங்கு விடுமுறை விடுவதாக என் தோழி ஒருவர் மூலம் தகவல் கிடைத்தது. மக்கள் மார்க்கமாக நினைத்து தவறான வழியில் செல்வதைத் தடுக்காமல் அதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு இஸ்லாமிய அரசாங்கம் செய்கிறது என்றால், அவர்களிடமே முழுமையான மார்க்கம் இல்லை என்றுதான் சொல்லமுடியும்.

    கருத்து தெரிவித்தமைக்கு நன்றி. அடுத்த முறை உங்கள் பெயரோடு கருத்திடுங்கள்!

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் ரொம்ப அருமையான ஆக்கம் தூய இஸ்லாத்தை மக்கள் மன்றில் உரக்க சொல்ல வேண்டிய உலமாக்களே இவற்றை செய்கிறார்கள் என்பது தான் கவலைக்குரிய விடயம்

    ReplyDelete
  10. @ abooyahya...

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

    //தூய இஸ்லாத்தை மக்கள் மன்றில் உரக்க சொல்ல வேண்டிய உலமாக்களே இவற்றை செய்கிறார்கள் என்பது தான் கவலைக்குரிய விடயம்//

    உண்மைதான். முதலில் ஆலிம்கள் தங்களைத் திருத்திக் கொண்டால் எல்லா மக்களுக்கும் முழுமையான நேர்வழிக் கிடைத்துவிடும், இன்ஷா அல்லாஹ்! தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா...,
    சரியான நேரத்தில் சரியானதொரு பதிவை நான் தான் கலம்தாமதமாக பார்வையிடுகிறேன்.
    அதற்க்கு என்னை முதலில் மன்னிக்கவும்.

    \\ மக்கள் மார்க்கமாக நினைத்து தவறான வழியில் செல்வதைத் தடுக்காமல் அதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு இஸ்லாமிய அரசாங்கம் செய்கிறது என்றால், அவர்களிடமே முழுமையான மார்க்கம் இல்லை என்றுதான் சொல்லமுடியும். ///

    சரியா சொன்னீங்க அஸ்மா...
    அதை ஏன் கேக்குறீங்க...?இங்க (துபாயில்) வருடா வருடம் இதற்க்காக விடுமுறை விடுவது என்பது வருத்தத்திற்க்கு உரிய விஷயமாக உள்ளது.மாற்று சகோதரிகள் இந்த மீலாத் ஸ்பெஷல் என்ன செய்வீங்க என்று கேட்பவர்களிடம் அதை நாங்கள் கொண்டாட கூடாது எனறு விளக்கம் சொல்லுவோம்.ஆனால் அரசாங்கம் விடுமுறை விடுகிறார்களே அப்ப அதற்க்கு முக்கியத்துவம் உண்டு என்று தானே என்கிறார்கள்.அந்த அளவிற்க்கு இந்த அரேபியர்களின் செயல்கள் இருந்து கொண்டு வருகின்றது.என்ன சொல்ல...
    அதுவும் இந்த முறை மீலாத் நாள் செவ்வாய் கிழமை வருகின்ரது என்று வெள்ளி,சனியோடு சேர்த்து விடுமுறை விடலாம் என்று வியாழன்,வெள்ளி,சனி என விடுமுறை அறிவித்தார்கள்.இந்த கொடுமையை என்னவென்று சொல்ல அஸ்மா...
    இது பலருக்கும் இன்னும் கொண்டாட்ட்மாக அல்லாவா ஆகிவிடுகின்றது.
    எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நாட்டத்தால் நம் அனைவரிடமும் நல்லதொரு மாற்றம் வரவேண்டும்.
    நன்றி மற்றும் வாழ்த்துக்கள் அஸ்மா...

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  12. @ apsara-illam...

    வ‌ அலைக்குமுஸ்ஸலாம் அப்சரா!

    //நான் தான் கலம்தாமதமாக பார்வையிடுகிறேன்.
    அதற்க்கு என்னை முதலில் மன்னிக்கவும்//

    மன்னிப்பெல்லாம் வேண்டாம்மா.. அதுவும் ஃப்ரெண்ட்ஸுக்குள்! :) உங்களுக்கு முடியும்போது ஒவ்வொன்றா பாருங்க அப்சரா. காலம் கடந்தாலும் பயனுள்ளதாகவே இருக்கும் இன்ஷா அல்லாஹ்!:)

    //...ஆனால் அரசாங்கம் விடுமுறை விடுகிறார்களே அப்ப அதற்க்கு முக்கியத்துவம் உண்டு என்று தானே என்கிறார்கள்//

    இப்படிதான் இல்லாத ஒன்று அவசியமான‌துபோல் ஆகிவிடுகிறது :( தலைமையில் இருப்பவர்களும் விழிப்புணர்வு பெற இறைவன் உதவி செய்யட்டும்! நன்றி அப்சரா.

    ReplyDelete
  13. இன்னும் கொடுமை என்னன்னா முஸ்லீமுக்கு செய்த நல்ல காரியங்களில் சென்ற தேர்தலில் ஸ்டாலின் சொன்னது? எங்களுடைய ஆட்சியில் மீலாது விழாவிற்கு அரசாங்க விடுமுறை அறிவித்தோம், ஆனால் அம்மையார் (ஜெ) அவர்கள் ஆட்சியில் அந விடுமுறை ரத்து செய்யப்பட்டது, மறுமுறை நாங்கள் ஆட்சிக்கு வந்த போது முஸ்லீம்களுக்கு நலன் சேர்க்கும் வகையில்(?) மீலாது விழாவிற்கு மறுபடியும் அரசாங்க விடுமுறை அறிவித்தோம், என்று கூறினார்.

    என்னுடைய கேள்வி என்னெவென்றால் மீலாது விழாவிற்கு விடுமுறை அளிப்பதால் முஸ்லீம்களுக்கு என்ன நன்மை, மார்க்கத்தை அறியாத முஸ்லீம்கள் செய்யும் காரியங்களால் மீலாது விழாவும் மார்க்கத்தின் ஒரு முக்கிய அங்கம் என்று மாற்றுமத சகோதரர்களும் நினைக்க வைத்தது தான் மீலாது விழாவை ஆரம்பித்து வைத்தவர்களுக்கும், அதை ஊக்குவிப்பவர்களுக்கும் கிடைத்த வெற்றி(?)

    அல்லாஹ் தான் அனைவருக்கும் ஹிதாயத் கொடுக்க வேண்டும்.

    அபு நிஹான்

    ReplyDelete
  14. @ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)...

    //என்னுடைய கேள்வி என்னெவென்றால் மீலாது விழாவிற்கு விடுமுறை அளிப்பதால் முஸ்லீம்களுக்கு என்ன நன்மை, மார்க்கத்தை அறியாத முஸ்லீம்கள் செய்யும் காரியங்களால் மீலாது விழாவும் மார்க்கத்தின் ஒரு முக்கிய அங்கம் என்று மாற்றுமத சகோதரர்களும் நினைக்க வைத்தது தான் மீலாது விழாவை ஆரம்பித்து வைத்தவர்களுக்கும், அதை ஊக்குவிப்பவர்களுக்கும் கிடைத்த வெற்றி(?)//

    ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாதவற்றைக் கொடுத்தாலும் அதை வாங்கிக்கொண்டு 'ஜே..' போட‌ முஸ்லிம் சமுதாயத்தில் சிலர் இருப்பது தெரிந்து கொடுப்பதுதான் இப்படிப்பட்ட விடுமுறைகள். இந்த விழாவை மார்க்கமாக ஊக்குவிப்பவர்கள் அதை அங்கீகரிக்கத் தேவையான ஆதாரமாக இந்த விடுமுறையைக்கூட எடுத்தாலும் எடுத்துக் கொள்வார்கள். 'பார்த்தீர்களா..? அரசாங்கமே விடுமுறை விடுறாங்க‌.. அப்படீன்னா மீலாது விழா கூடும்'னு சொன்னாலும் சொல்வார்கள். அப்படிதானே கண்டதையெல்லாம் மார்க்கத்திற்கு ஆதாரமாக காட்டி மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் ஆலிம்களும். ஹ்ம்.. என்னதான் சொல்ல இவர்களை..?

    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை