அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday 7 March 2011

ஸ்டார் (ஒயர்)கூடை பின்னுவது எப்படி? (பாகம் - 1)

க்ராஃப்ட் வேலைகள் செய்வதற்கு எப்போதுமே கொஞ்சம் பொறுமை வேண்டும். அதிலும் ஒயர்களில் பின்னி ஒரு பொருளை செய்து முடிப்பதற்கு பொறுமை இன்னும் அதிகமாகவே தேவைப்படும் :) அதனால் இந்த ஒயர் கூடையைக் கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் பொறுமையோடு பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். பெண்களுக்கு இது ஒரு நல்ல கைத்தொழிலாகக் கூட உதவும்.

ஒயரில் பின்னும் கூடைகளில் வகை வகையான மாடல்கள் உண்டு. இப்போது நாம் பார்க்கப் போவது ஸ்டார் மாடல் கூடை. பொதுவாகவே இந்த ஒயர் பின்னல்களின் அடிப்படையான செய்முறைகள் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்றாலும், அறவே பின்னத் தெரியாதவர்களும் அடிப்படையிலிருந்து தெரிந்துக் கொள்ளும் ஒரு அரிச்சுவடியாக இந்த முதல் பாகத்தை கொடுத்துள்ளேன். சந்தேகம் இருந்தால் கண்டிப்பாக கேளுங்கள்.

தேவையான பொருட்கள்:




ப்ளாஸ்டிக் ஒயர் - 2 கட்டு
மெட்டல் ஃபுட்ஸ்(Foots) 
கத்தரிக்கோல்

செய்முறை:



முதலில் ஒயர் கட்டைப் பிரித்து ஒரு பேப்பர் அல்லது கட்டையில் இவ்வாறு நூல் கண்டு போல் சுற்றி, கயிற்றால் இறுக கட்டிக் கொள்ளவும். சுற்றும்போது இடையில் முடிச்சு விழாமல் கவனமாகச் சுற்றவும்.





ப்ளூ ஒயரில் 2½ மீட்டர் நீளமுள்ள 20 துண்டுகள் வெட்டவும். மஞ்சள் ஒயரில் 2¾ மீட்டர் நீளமுள்ள 20 துண்டுகள் வெட்டவும். (கவனம்: ப்ளூ ஒயரைவிட மஞ்சள் ஒயர் ச‌ற்று நீளம் அதிகம் இருக்கவேண்டும்). வெட்டியவற்றை சிக்கு விழாமல் முனையில் ரப்பர் பேண்ட் போட்டு வைக்கவும். மீதியுள்ள ஒயர் 'சுற்று ஒயர்' எனப்படும்.





ப்ளூ ஒயரில் ஒன்றை சரி பாதியாக மடக்கிக் கொண்டு, சுற்று ஒயரின் முனையிலிருந்து 35 செ.மீ. அளவுக்கு விட்டுவிட்டு மடக்கி, இரண்டு ஒயர்களையும் இதுபோல் இணைக்கவும். (இதிலுள்ள சுற்று ஒயர்தான் 'நடு ஒயர்' ஆகும்)





இப்போது படத்தில் காட்டியுள்ளபடி மடக்கி சொருகவும்.





சதுர வடிவில் வரும் இதுபோன்று உருவாகும் முடிச்சுக்கு 'சோவி' என்பார்கள்.






இப்போது அதே சுற்று ஒயரில் 2 வது ஒயரை இணைத்து முன்போல் மடக்கி பின்னவும்.





இதேபோல் 10 ப்ளூ ஒயர்களையும் சம அளவில் மடக்கி சுற்று ஒயருடன் இணைத்து பின்னி முடிக்கவும்.





அதைத் தொடர்ந்து 20 மஞ்சள் ஒயர்களையும், அடுத்து மீதியுள்ள 10 ப்ளூ ஒயர்களையும் பின்னவும்.





40 ஒயர்களையும் பின்னி முடித்த பிறகு சுற்று ஒயரின் முடிவில் 35 செ.மீ. அளவு விட்டு வெட்டி, இரண்டாவது லைன் ஆரம்பிக்க‌வும். அப்படி ஆரம்பிக்கும்போது இரண்டாவது லைனின் சுற்று ஒயரில் 10 செ.மீ. அளவு மட்டும் விட்டுவிட்டு மடக்கிக் கொண்டு முதல் சோவி பின்னவும்.


குறிப்பு:‍-

- முடிச்சுகளை சற்று இறுக்கமாகப் போடவேண்டும். அப்போதுதான் கூடை நன்கு ஸ்ட்ராங்காகவும் அழகாகவும் இருக்கும்.

- அப்படி இறுக்கும்போது ரொம்பவும் இழுக்கவேண்டாம். சில இடங்களில் ஒயர் மெலிந்திருந்தால் பிய்ந்துவிடும். (ஒட்டுக் கொடுத்து பின்னும்படி சிரமமாகிவிடும்). அதனால் மெதுவாக இழுத்து டைட் பண்ணவும்.

- ஒயர் வாங்கும்போது நல்ல‌ தரமானதாக வாங்கவும்.

2 வது பாகம் காண இங்கே க்ளிக் பண்ணவும்.

28 comments:

  1. ஸலாம்க்கா. சின்ன வயதில் நிறைய கூடைகள் இதேமாடலில் பின்னியிருக்கிறேன். இன்னும் சில வகைகள் உண்டு. ஸ்டார் போல பின்னும் வகையும் உண்டே! அதெல்லாம் ஒரு காலம். நாமே பின்னிய கூடையைப் பள்ளிக்குக் கொண்டுபோய் பெருமையடிப்பதில் இருக்கும் சுகமே தனிதான்க்கா!!

    ReplyDelete
  2. சூப்பர்ர் அஸ்மா!! எனக்கும் இந்த கூடை பிண்ணத் தெரியும்..எவ்வளவு அழகா பொறுமையா விளக்கியிருக்கீங்க.இந்த ஒயர் இங்க வாங்கியதா இல்லை இந்தியாவிலிருந்து வாங்கீ வாங்கி வந்ததா?

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா...
    அடடே...அருமையான விளக்கங்களோடு கூடிய கூடை பின்னல்கள்.நல்லா இருக்கு அஸ்மா...
    ஆறாம் வகுப்பு படிக்கும் போது துண்டு ஒயரில் ஒண்ணு ரெண்டு பின்னல் போட்டதோடு சரி... முழுசா பின்னி பார்த்ததில்லை.தெரியவும் தெரியாது.
    எனக்கு இதை கத்துக்கணும்னு ரொம்ப ஆசை.ஆனால் சந்தர்ப்பங்கள் சரியாக அமையவில்லை.
    மாமியார் மிகவும் அழகாக பின்னுவார் என தெரியும் ஆனால் அவரிடமும் கற்று கொள்ளமுடியவில்லை.
    ஆனால் உங்கள் பதிவு மூலம் மறுபடியும் கற்று கொள்ள வாய்ப்பு வந்திருக்கு.விட்டுடுவேனா என்னா... இன்ஷா அல்லாஹ் ஊருக்கு போனது இந்த ஒயர் வாங்கி கத்துக்கிறேன்.
    பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி அஸ்மா..

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  4. அஸ்மா நல்ல பகிர்வு,எனக்கும் ஸ்டார் கூடை முன்பு பின்னிய அனுபவம் உண்டு,இப்ப டச் விட்டு போச்சு.நான் திருமணத்திற்கு முன்பு பின்னிய கூடை இன்னமும் எங்கள் பூர்வீக வீட்டில் உள்ள அண்ணன் வச்சிருக்காங்க,நானா இதை பின்னினேன்னு ஆசையாக பார்த்தேன்,இப்ப இங்கு ஒயர் கிடைத்தால் மகளை பின்ன சொல்லலாம் உங்களை தொடர்ந்து.பொறுமையாக சொல்லி தரீங்க.மிக்க நன்றி.

    ReplyDelete
  5. நல்ல பதிவு. முன்பு எங்கள் அம்மா பின்னியிருக்கிறா. இப்போ மறந்திருப்பா என நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. @ ஹுஸைனம்மா...

    ஸலாம் ஹுஸைனம்மா! //அதெல்லாம் ஒரு காலம்// 'ஒரு காலம்' என்று அப்படியே அது மறந்து, மறைந்துவிடக் கூடாது என்றும், கைத்தொழில் செய்ய நினைப்ப‌வர்களுக்கு இது ஒரு சின்ன ஹெல்ப்பாக இருக்கட்டுமே என்றும்தான் இப்படியொரு முயற்சி :)

    //நாமே பின்னிய கூடையைப் பள்ளிக்குக் கொண்டுபோய் பெருமையடிப்பதில் இருக்கும் சுகமே தனிதான்க்கா!!// அதுபோன்ற சுகங்களை நானும் நன்றாக அனுபவித்திருக்கேன் :‍-) நன்றி மிஸஸ் ஹூஸைன்.

    ReplyDelete
  7. @ S.Menaga...

    //சூப்பர்ர் அஸ்மா!! எனக்கும் இந்த கூடை பிண்ணத் தெரியும்..எவ்வளவு அழகா பொறுமையா விளக்கியிருக்கீங்க// நன்றி மேனகா :) உங்களுக்கு தெரிந்த மாடல்களையும் சொல்லித்தாங்க.

    //இந்த ஒயர் இங்க வாங்கியதா இல்லை இந்தியாவிலிருந்து வாங்கீ வாங்கி வந்ததா?//

    இங்கெல்லாம் கிடைக்காது மேனகா. இந்தியாவிலிருந்து வரும்போது அறுசுவையில் செய்துக் காட்டுவதற்காக :) வாங்கி வந்தேன். இப்போ நம்ம ப்ளாக்கை கவனிக்கவே நேரம் காண மாட்டேங்குது, அறுசுவைக்கு அதிகம் போக முடியவில்லையென்று இங்கேயே செய்முறை கொடுத்துவிட்டேன். நீங்க ஃபிரான்சில் எங்கே இருக்கீங்க மேனகா? விருப்பமிருந்தால் சொல்லுங்க :)

    ReplyDelete
  8. @ apsara-illam...

    வ‌ அலைக்குமுஸ்ஸலாம் அப்சரா.. முதலில் உங்க மெயிலுக்கு இன்னும் பதில் கொடுக்காததுக்கு ஸாரிமா :) பிறகு பதில் தருகிறேன். நான் கேட்டிருந்ததை அனுப்பியதற்கு ரொம்ம்...ப தேங்க்ஸ் :-)

    //முழுசா பின்னி பார்த்ததில்லை.தெரியவும் தெரியாது.
    எனக்கு இதை கத்துக்கணும்னு ரொம்ப ஆசை// இப்போ கத்துக்கிட்டா போச்சு ;)

    //விட்டுடுவேனா என்னா... இன்ஷா அல்லாஹ் ஊருக்கு போனது இந்த ஒயர் வாங்கி கத்துக்கிறேன்//
    இன்ஷா அல்லாஹ் ஊர் போனபிறகு செய்து பாருங்க. சும்மா ரெஸ்ட்டா இருக்கும்போது இரண்டு இரண்டு லைனா கூட பொறுமையா போடலாம்.
    நன்றி அப்சரா.

    ReplyDelete
  9. @ asiya omar...

    //எனக்கும் ஸ்டார் கூடை முன்பு பின்னிய அனுபவம் உண்டு,இப்ப டச் விட்டு போச்சு//

    நான் மற்ற கூடைகள் பின்னியிருக்கேன். ஆனா ஸ்டார் கூடை கண்ணால் மட்டும் பார்த்ததோடு சரி, இப்போதான் முதன்முதலா பின்னுகிறேன் ;)

    //இப்ப இங்கு ஒயர் கிடைத்தால் மகளை பின்ன சொல்லலாம் உங்களை தொடர்ந்து.பொறுமையாக சொல்லி தரீங்க//
    ஒயர் கிடைக்காவிட்டால் ஊரிலிருந்து வரவழைத்து மகளுக்கு சொல்லிக் கொடுங்க, யூஸ்ஃபுல்லா இருக்கும். நன்றி ஆசியாக்கா!

    ReplyDelete
  10. @ athira...

    //முன்பு எங்கள் அம்மா பின்னியிருக்கிறா. இப்போ மறந்திருப்பா என நினைக்கிறேன்//

    ஆமா, ரொம்ப நாளாயிட்டா கொஞ்சம் மறந்ததுபோல்தான் ஆகிவிடும். வருகைக்கு நன்றி அதிரா.

    ReplyDelete
  11. சின்ன பொன்னாக இருந்த சமயம் அம்மா கூட நானும் பின்னுவேன்...மலரும் நினைவுகள்...

    தேங்காய் மரத்தில் இருக்கும் அந்த இலையில் இருந்து தான் பின்னேவே கற்று கொண்டேன்...

    சீக்கிரம் அடுத்த பாகம் போடுங்க...

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அலைக்கும்

    பொறுமையா விளக்கியிருக்கீங்க. நம்ம ஊர் கூடை பின்னல் அங்கேயுமா.

    ReplyDelete
  13. @ GEETHA ACHAL...

    //தேங்காய் மரத்தில் இருக்கும் அந்த இலையில் இருந்து தான் பின்னேவே கற்று கொண்டேன்... சீக்கிரம் அடுத்த பாகம் போடுங்க...//

    தென்னை ஓலைக்கு 'தேங்காய் மரத்தில் இருக்கும் அந்த இலை'ன்னு இவ்வளவு நீள பெயரா கீதாச்சல்? (ச்சும்மா..) :)))அடுத்த பாகத்திற்கு பின்னிக் கொண்டிருக்கேன் :) ஓரளவு வந்ததும் போடுகிறேன். நன்றி கீதாச்சல்.

    ReplyDelete
  14. @ ஆயிஷா அபுல்...

    //அஸ்ஸலாமு அலைக்கும். பொறுமையா விளக்கியிருக்கீங்க. நம்ம ஊர் கூடை பின்னல் அங்கேயுமா//

    வ அலைக்குமுஸ்ஸலாம் ஆயிஷா! இங்குள்ள ஃப்ரெஞ்சுக்காரர்களுக்கு இதுபோன்று வேலைப்பாடுள்ள பொருட்கள் ரொம்ப பிடிக்கும். தெரிந்தவர்களுக்கு பின்னிக் கொடுக்கதான் நமக்கு நேரம் இல்லை, பொருளும் கிடைப்பதில்லை. நன்றி ஆயிஷா.

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அலைக்கும் தோழி..

    அது ஒரு கனக்காலம் அப்படிங்கிறமாதரி 10 11 வருடங்களுக்கு ஊரில் இருக்கும்போது, எப்போதும் இதுபோல் கூடை. மற்றும் ஒயரில் பூக்கள்செய்து மரம்போல் குருவிபோல் மாடல் மாடலாக செய்வது ரொம்ப பிடிக்கும்.
    துபை வந்தபின்னே ம்ஹும். எங்கே இதெல்லாம் .


    அருமையான விளக்கம். சூப்பர்..

    ReplyDelete
  16. ஆஹா...பார்த்ததுமே மலரும் நினைவுகள்... :-)) நீங்க பேஸ் மட்டும் போட்டுக்குடுத்தா போதும் .(( பேஸ் போட வரவே வராது )) இப்ப கூட நான் அழகா பின்னிடுவேன் .எதையுமே கத்துக்கொள்ளும் ஆர்வம் எனக்கு எப்பவுமே அதிகம் . இதில் பாக்ஸ் , கண் (நெடு வாட்டத்தில இருக்கும் ) இதுப்போல பலடைப் இருக்கே..!!

    பார்க்கும் போதே கூடவே பழைய நினைவுகள் வருவதை மறக்க முடியவில்லை .

    ReplyDelete
  17. இப்போது பழக்கம் விட்டுப் போய்விட்டது. பார்த்த்தும்
    மீண்டும் ஆர்வம் வந்துவிட்டது.

    ReplyDelete
  18. @ அன்புடன் மலிக்கா...

    //அஸ்ஸலாமு அலைக்கும் தோழி..

    எப்போதும் இதுபோல் கூடை. மற்றும் ஒயரில் பூக்கள்செய்து மரம்போல் குருவிபோல் மாடல் மாடலாக செய்வது ரொம்ப பிடிக்கும்//

    வ அலைக்குமுஸ்ஸலாம் தோழி! கொஞ்சம் பிசியால் உடனே பதில் கொடுக்க முடியலமா. நீங்களும் நம்ம கட்சிதானா? :‍‍‍-) எனக்கும் க்ராஃப்ட் வொர்க்குகள் ரொம்ப பிடிக்கும். வருகைக்கு நன்றி மலிக்கா.

    ReplyDelete
  19. @ ஜெய்லானி...

    //ஆஹா...பார்த்ததுமே மலரும் நினைவுகள்... :‍))//

    நீங்களும் பின்னுவீங்களா...? பரவாயில்லையே!

    //இதில் பாக்ஸ் , கண் (நெடு வாட்டத்தில இருக்கும் ) இதுப்போல பலடைப் இருக்கே..!! //

    ஆமா சகோ, பல மாடல்களும் இருக்குதான். ஆனா அவ்வளவையும் இங்கு சொல்லிக் கொடுக்க இந்தியாவிலிருந்து தனி கார்கோதான் போடணும் :-) வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  20. @ இராஜராஜேஸ்வரி...

    //இப்போது பழக்கம் விட்டுப் போய்விட்டது. பார்த்த்தும்
    மீண்டும் ஆர்வம் வந்துவிட்டது//

    வாங்க சகோதரி! கைவேலைத் தெரிந்தவர்களுக்கு டச் விட்டுப் போனாலும் அதைப் பார்க்கும்போது மீண்டும் ஆர்வம் வந்துவிடும், உண்மைதான் :) தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.

    ReplyDelete
  21. இப்போழுதுதான் உங்க கமெண்ட் பார்த்தேன்,நான் Essonne dept (91) Villemoisson S/Orge ல் இருக்கேன்பா...

    ReplyDelete
  22. @ S.Menaga...

    அப்படியா... 91 ல் இருக்கீங்களா மேனகா? உங்கள் பதிலுக்கு நன்றிபா. இறைவன் நாடினால் ஒருநாள் சந்திப்போம் :)

    ReplyDelete
  23. அருமை..வாழ்த்துக்கள்.தொடருங்கள்...
    ..பலர் பயன் அடைவார்கள்.நன்றி

    ReplyDelete
  24. @ Geetha6...

    //அருமை..வாழ்த்துக்கள்.தொடருங்கள்...
    ..பலர் பயன் அடைவார்கள்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா.

    ReplyDelete
  25. Assalamu alaikum (varha)

    ReplyDelete
  26. Assalamu alaikum (varha)

    ReplyDelete
  27. ஸ்டார் கூடை தவிர வேறு ஏதாவது ஒயற் கூடை செய்ய தெரியுமா? "சிவன் கண்" போன்ற கூடை செய்ய கற்றுக்கொடுங்கள்.

    ReplyDelete
  28. Asalammu alaikum


    intha kudai romba super

    innum niraiya model wire kudai seiya theriyuma

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை