அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday, 18 May 2013

பணம் தருமா பூரியான் ஃபாத்திஹா?


இஸ்லாத்தின் பெயரால் அரங்கேறும் மூட நம்பிக்கைகள் ஒவ்வொன்றும் மக்களிடம் தெளிவாக்கப்பட்டு, அதன் மூலம் இஸ்லாமிய சமுதாயத்தை உண்மையான இஸ்லாத்தின் வழியில் வாழவைக்க, ஏகத்துவக் கொள்கையுடைய மார்க்க அறிஞர்கள் மேற்கொண்ட‌ முயற்சியில் இறைவன் உதவியால் மிகப்பெரிய மாற்ற‌ம் இஸ்லாமியர்களிடையே ஏற்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்! ஆயினும் எல்லா இஸ்லாமிய மக்களையும் அப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளிலிருந்து இன்னும் முழுமையான அளவில் வென்றெடுக்கவில்லை என்பது வருத்தமான ஒரு உண்மைதான்.

இஸ்லாமிய மாதங்களில் இப்போது நடந்துக் கொண்டிருக்கும் மாதம் 'ரஜப்' மாதமாகும். இந்த மாதத்தில் சில இஸ்லாமியர்கள் மூட நம்பிக்கைகளை வணக்கமாக செய்துவருகிறார்கள். அவற்றில் ஒன்றுதான் தங்களுக்கு செல்வம் கொழிக்கவேண்டும் என்பதற்காக மூட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வணக்கமான(?) 'பூரியான் ஃபாத்திஹா' என்று சொல்லப்படும் ஒன்றாகும். ஷியாக்களின் 12 இமாம்களில் ஒருவரான 'ஜாஃபர் சாதிக்' என்பவரின் பெயரை முன்னிறுத்தி, இந்த ரஜப் மாதம் 22 வது பிறையில் 'பூரியான் ஃபாத்திஹா'வை ஓதுவதற்காக வீட்டின் ஒரு அறையை பிரத்தியேகமாக கழுவி சுத்தம் செய்து, மேலே வெள்ளைத் துணியினால் பந்தல் அமைத்து, அதில் பூக்களைத் தொங்கவிட்டு அலங்கரித்தவுடன் அந்த அறைக்கே ஒரு புனிதம் வந்துவிட்டதாக எண்ணி, ஃபாத்திஹா ஓதி முடிக்கும்வரை யாரையும் உள்ளேகூட அனுமதிக்கமாட்டார்கள்! (ஓதுபவர்கள் மட்டும் உள்ளே செல்லலாம்). தயாரித்து வைத்துள்ள பூரியான்களில் 22 பூரியான்கள் மட்டும் ஓதுவதற்காக (படைப்பதற்காக) வைக்கப்படும். வணக்கம் என்ற பெயரில் அல்லாஹ்வும் அவனுடைய தூதர்(ஸல்)அவர்களும் காட்டித்தராத ஒன்றை சிந்தித்து சுயமாக உருவாக்கிக் கொண்டு, அதன்மூலம் நன்மையை அடைந்து விடலாம் என்ற தவறான எண்ண‌த்தில் இவ்வாறு ஏதேனும் ஒரு புதுமையை மக்கள் அவ்வப்போது நிறைவேற்றுகிறார்கள். அதிலும் 'சீரணி/நார்ஸா' என்ற பெயரில் அதற்கு வகை வகையான காம்பினேஷன் கொண்ட உணவு வகைகளும், பதார்த்தங்களும் வேறு! ஃபாத்திஹா முடிந்தவுடன் அவற்றை ஓதியவர்களுக்கும் அதை ஏற்பாடு செய்தவர்களுக்கும் (பயபக்தியுடன்) 'ரவா கஞ்சி' என்ற பாயசத்துடன் பூரியான் பரிமாறப்படும். சில பகுதிகளில் இவற்றிற்கு பதிலாக‌ 'கீர் பூரி'யும் 'கோடா கஞ்சி'யும் படைப்பதற்கு வைத்திருப்பார்கள். (ஒருவேளை 'இவற்றில் நன்மை' என்று சொல்வதில் 'நாவிற்கும் நன்மை' என்று அர்த்தமும் உள்ளதோ? இந்த ஃபாத்திஹாவில் பூரியான் மட்டும் இல்லாவிட்டால் அதை ஓதுவதற்கு ஆலிம்கள் யாரும் வருவார்களா பாருங்கள்? 'பூரியானைப் பாத்தியா?' என்று தனக்குள் முதலில் கேட்டுக்கொண்டுதான் வந்து ஓதுவார்கள்.)

அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லியவை மட்டுமே மார்க்கம் என்பதை அறியாமல், கற்பனைக் கதைகளையே மார்க்கம் என்று நினைத்து பழகிப்போன சில பகுதி மக்கள், பூரியான் ஃபாத்திஹாவுடன் சேர்ந்த 'விறகு வெட்டி கிஸ்ஸா'வை விடிய விடியப் படிப்பதும், கேட்பதும்கூட வணக்கம் என்று எண்ணி, அதைக் கேட்பதற்காக பக்தி பரவசத்துடன் இரவெல்லாம் கண்விழித்துக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது? இவையனைத்தும் தங்களைப் பணக்காரர்களாக ஆக்கிவிடும் என்ற எண்ணத்தில் செய்யும் இந்த மூடப்பழக்கத்திற்கும் இஸ்லாத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? நிதானமாக சிந்தித்துப் பாருங்கள் சகோதர, சகோதரிகளே! நீங்கள் உண்மை இஸ்லாத்தை சிந்திக்காமலும் உங்களை திருத்திக் கொள்ளாமலும் இருந்தால் அதனால் யாருக்கு நஷ்டம்... உங்களுக்குதானே? பூரியான் பாத்திஹா செய்வதால் உண்மையிலேயே ஒருவருக்கு செல்வம் வரும் என்றிருந்தால் ஏன் உங்கள் வீட்டு ஆண்களை வேலைக்கு அனுப்புகிறீர்கள்? பல ஆயிரங்கள் செலவு செய்து, உங்களைப் பிரிந்து ஏன் வெளிநாடுகளுக்கு அவர்கள் செல்லவேண்டும்? நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் பூரியான் தயாரித்து, பாத்திஹா ஓதி செல்வத்தை தலைவழிய‌ கொட்டச் செய்யலாமே? ஆனால், பூரியான் பாத்திஹாவிற்காக‌ கடன்பட்டும், கஷ்டப்பட்டும் அதை நிறைவேற்றுபவர்கள் எத்தனையோ பேர்!

காலமெல்லாம் ஓதிவிட்டோமே என்பதற்காகவும், இதை விட்டால் இன்னும் மோசமான நிலைக்கு ஆகிவிடுவோமோ என்று அஞ்சியும் கடன் வாங்கியாவது தொடர்ந்து ஓதிக் கொண்டிருப்பவர்களும் உண்டு. அதேபோல், இதை நடத்தாமலேயே பணக்காரர்களாக‌ ஆனவர்களும் உண்டு. இல்லையென்று சொல்லமுடியுமா? ஆக, பணக்காரர்களாக ஆக‌வேண்டுமென்று இந்த‌ பூரியான் பாத்திஹாவுக்காக பணத்தை செலவு செய்தவர்களும், அதை ஓதவென்று வீடு வீடாகச் சென்றவர்களும் அதனால் பணக்காரர்களாக ஆக‌வில்லை. அப்படியே அவர்களுக்கு எப்படியோ வசதி வாய்ப்பு ஏற்பட்டு செல்வந்த‌ர்களாக‌ ஆகியிருந்தாலும் அது பூரியான் பாத்திஹாவின் புண்ணியத்தால்தான் என்று யாரேனும் நம்பிக்கை வைத்தால், அவர்களின் 'ஈமான்' என்ற இறைநம்பிக்கையே பாழாகி, இஸ்லாத்தை விட்டும் அவர்கள் வெளியேறிவர்களாக ஆகிறார்கள். ஏனெனில், செல்வத்தைத் தருபவனும் அல்லாஹ்தான், அதை தடுத்து வைத்திருப்பவனும் அல்லாஹ்தான். அல்லாஹ் மீது வைக்கவேண்டிய இந்த நம்பிக்கை தடம் மாறினால்..? (அல்லாஹ்தான் நம்மை காப்பாற்றணும்!) தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தை கொடுக்கிறான். தான் நாடியோருக்குக் குறைக்கிறான். இதுபற்றி அல்லாஹ்தஆலா, திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்களில் 'தான் நாடியோருக்கு செல்வத்தை வழங்குவதாக' கூறுகிறான்.

"அல்லாஹ் தான் நாடியவருக்கு ஏராளமாகக் கொடுக்கிறான். (தான் நாடியவருக்கு) அளவோடு கொடுக்கிறான்.எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் அற்பமேயன்றி வேறில்லை". (அல்குர்ஆன் 13:26)

"நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான். ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்தபோதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான். மேலும், அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்" என்று (நபியே) நீர் கூறும். (34:39)


ஆனால் இந்த‌ 'பூரியான் ஃபாத்திஹா'வைப் பொருத்தவரை குறுகிய காலத்தில் செல்வந்தராவதற்காக மாற்று மதத்தவர்கள் செய்யும் 'லட்சுமி பூஜை'யைக் காப்பி அடித்ததாக இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. மூட நம்பிக்கையையும், கண்மூடிப் பின்பற்றும் மடமையையும் ஒழிக்க வந்த பகுத்தறிவு மார்க்கமான இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்துக்கொண்டு, 'முன்னோர்கள் சொன்ன வழிமுறை' என்று அதே இஸ்லாத்தின் பெயராலேயே நாம் அத்தகைய மூடச்செயல்களை செய்துக் கொண்டிருக்கலாமா? இது உங்களுக்கு கைசேதமில்லையா? இதுபோன்ற ஒரு வணக்க‌த்தை அல்லாஹ் நமக்கு கட்டளையிட்டுள்ளானா? நபி(ஸல்) அவர்கள்தான் இதுபோன்று நமக்குக் கற்றுத்தந்தார்களா? அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கற்றுத்தந்த‌ வழிமுறை அல்லாமல் முன்னோர்கள் செய்தவைகள் என்றோ, காலம் காலமாக நடைமுறையில் வந்தவை என்றோ நாம் ஒன்றை செய்வோமேயானால் நாளை மறுமையில் அவற்றிற்கு எந்த பல‌னும் கிடைக்காது என்பது மட்டுமல்ல, மார்க்கத்தில் சொல்லாத புதுமையை ஏற்படுத்திய குற்றத்திற்காக தண்டனைதான் கிடைக்கும்.

இப்னு மஸ்வூத்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்,

வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம்; நடைமுறையில் சிறந்தது நபி(ஸல்)அவர்களின் நடைமுறை; காரியங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை (பித்அத்); பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்க்கும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி


ஆகவே என்னருமை இஸ்லாமிய சொந்தங்களே! திருக்குர்ஆனும் ஏராளமான நபிமொழிகளும் தமிழ் மொழியில் எப்போதோ வந்துவிட்டன. தயவுசெய்து அதைப் படித்துப் பாருங்கள். அவற்றைப் படித்து, நீங்கள் சிந்திக்கத் துவங்கிவிட்டால், பூரியானுக்காக‌ பாத்திஹா ஓத வருபவர்களுக்கு இனி பூசைதான் கொடுப்பீர்கள். வணக்கம் என்று சொல்லி இன்னும் இதுபோன்ற ஏராளமான‌ மூட நம்பிக்கைகளாலும் வழிகேடுகளாலும் உங்கள் பணத்தை சாப்பிட்டு பொருளாதார சுரண்டல் பண்ணிய‌வர்களை/உங்கள் மறுமை வாழ்வை பாழாக்க வருபவ‌ர்களை நீங்களே திருத்த முன்வாருங்கள். இத்தகைய வழிகேடுகள், தான் காணும் கட்டுக் கதைகளை எல்லாம் தங்கள் இஷ்டம்போலக் கூறி, மக்களை வழக்கம்போல் நம்பவைத்து ஏமாற்றி, ஓசியில் தங்கள் வயிறு வளர்க்க சில ஆலிம்கள்(?) உருவாக்கியவைதான் என்பதை புரிந்துக் கொண்டு, சிறிதும் தாமதிக்காமல் உங்களை நபிவழியின் பக்கம் மாற்றிக்கொண்டு நேரான வழியில் செல்லுங்கள். ஏனெனில் மரணம் என்பது எப்போது, எந்த நொடியில் நம்மை வந்தடையும் என்பது நம் யாருக்குமே தெரியாது. அதற்குமுன் நாம் திருந்திக் கொண்டாலே தவிர, வழிதவறி வாழ்ந்துக் கொண்டிருக்கும் நிலையில் மரணம் சம்பவித்தால் வல்ல இறைவனின் தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. அல்லாஹ் நம்மைக் காப்பானாக! நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக! நேர்வழியில் இருப்போரை அதைவிட்டும் தடம் புரண்டுவிடாமல் காப்பானாக!

28 comments:

 1. //இந்த ஃபாத்திஹாவில் பூரியான் மட்டும் இல்லாவிட்டால் அதை ஓதுவதற்கு ஆலிம்கள் யாரும் வருவார்களா பாருங்கள்? 'பூரியானைப் பாத்தியா?' என்று தனக்குள் முதலில் கேட்டுக்கொண்டுதான் வந்து ஓதுவார்கள்.)//


  ஹ ஹ ஹா.... சிரிப்பை அடக்க முடியலை அஸ்மா. அருமையான பதிவு, நோகடிக்கிறீங்க. வெறும் பூரியாவது So called 'ஆலிம்கள்' சாப்பிட்டு போகட்டுமே... ஹ ஹ ஹா...

  ReplyDelete
 2. //காலமெல்லாம் ஓதிவிட்டோமே என்பதற்காகவும், இதை விட்டால் இன்னும் மோசமான நிலைக்கு ஆகிவிடுவோமோ என்று அஞ்சியும் கடன் வாங்கியாவது தொடர்ந்து ஓதிக் கொண்டிருப்பவர்களும் உண்டு.//

  இதுதான் பிரச்சினை அஸ்மா. எங்க உறவினர் வீட்டிலும் இது, மௌலூது ஓதுவது எல்லாம் நடக்கிறது. எப்படி தடுத்தாலும் கேட்க மாட்டென் என்கிறார்கள். என் அறிவுரை கேட்டு கேட்டு வெந்து என் தாய்தந்தையும் அங்கே செல்வதை நிறுத்தி விட்டனர். பின் அந்த உறவினர் பக்கத்தில் உள்ள மஸ்ஜிதில் இமாமை கேட்டுள்ளார்கள். அவரோ, யாசீன் தானே ஓதுகிறீர்கள், உணவுதானே தருகிறீர்கள், எதீம்களைத்தானே ஓத வைத்து பணமும் உணவும் தருகிறீர்கள் அதனால் ஒன்றுமில்லை என்றுவிட்டாராம்... அதில் இன்னமும் திண்ணமாக நடக்கிறது...என்ன சொல்ல...

  ReplyDelete
 3. //ஏனெனில் மரணம் என்பது எப்போது, எந்த நொடியில் நம்மை வந்தடையும் என்பது நம் யாருக்குமே தெரியாது. அதற்குமுன் நாம் திருந்திக் கொண்டாலே தவிர, வழிதவறி வாழ்ந்துக் கொண்டிருக்கும் நிலையில் மரணம் சம்பவித்தால் வல்ல இறைவனின் தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. //

  அப்பட்டமான உண்மை அஸ்மா. மரணம் ஒன்று மட்டுமே உண்மை, திண்ணம். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன்.

  நல்ல பகிர்வு அஸ்மா. ஜஸாகல்லாஹு க்ஹைர். :)

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  தூய இஸ்லாமிய அடிப்படையில் விழிப்புணர்வூட்டும் நல்ல பதிவு. நன்றி சகோ.அஸ்மா.

  ReplyDelete
 5. எல்லாமே ஏமாற்று வேலைதான் அறியாமையில் இருப்பவரகளை பயன் படுத்தி ஒரு கூட்ட மே சாப்பிட்டு கொண்டு இருக்கிறது இது போல் எல்லா மதத்திலேயும் இருக்கிறது இந்த மாதிரி மக்களை திருத்த அந்த அல்லா ஹ் ஒருவனால் மட்டுமே முடியும் .

  ReplyDelete
 6. Everything is a matter of deception and ignorance iruppavarakalai use in a crowd is eating it in May

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  எங்கள் வீட்டில் இதை நிறுத்த நான் பட்டபாடு.....
  என் சகோதர சகோதரியும் எனக்கு துணை நின்றபோதுதான் என்பெற்றோர்கள் அமைதியானார்கள்.
  எங்கள் ஊரில் இந்த பாத்தியாவை நிறுத்தியதில் நாங்கள்தான் முன்மாதிரி.
  அல்லாஹ் நாங்கள் அறியாமல் செய்த பாவங்களை மன்னித்து கிருபை செய்வனாக!

  ReplyDelete
 8. சிறுவனாக இருக்கும் போது எங்கள் வீட்டில் ஓதுவதில்லையே என்று வறுந்தியது உண்டு. அந்த அளவு ருசியாக இருக்கும் இந்த பதார்த்தம். :-)

  ஆனால் கடந்த 10 பதினைந்து வருடங்களாக சிறிது சிறிதாக இது போன்ற பாத்திஹர்கள் குறைந்து விட்டது. ஆலிம்களை சிறந்த கல்வியாளர்களாகவும், தொழிற் கல்வியாளர்களாகவும் மாற்ற வேண்டும். அவர்களின் வருமானத்துக்கு ஒரு நிரந்தர வழியை மத்ரஸாக்களின் கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும். அது வரை ஆலிம்கள் பத்திஹா ஓதுவதை தடுப்பது கஷ்டம்.

  ReplyDelete
 9. @ அன்னு...

  //ஹ ஹ ஹா.... சிரிப்பை அடக்க முடியலை அஸ்மா. அருமையான பதிவு, நோகடிக்கிறீங்க. வெறும் பூரியாவது So called 'ஆலிம்கள்' சாப்பிட்டு போகட்டுமே...//

  இந்த‌ மாதிரியான‌ ஆலிம்கள் செய்யும் அநியாயங்கள் ஒரு பக்கம் வெறுப்பாகவும் இன்னொரு பக்கம் சிரிப்பாகவும்தான் உள்ளது அனிஷா. வெறும் பூரி சாப்பிட்டால்தான் பரவாயில்லையே... அதற்கு நொண்டி சாக்கு ஒரு ஃபாத்திஹா. இப்படிதான் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயரில் அரங்கேறுகிறது :( என்ன செய்ய.. 'So called ஆலிம்கள்' - இப்படியும் சொல்ல நல்லாதான் இருக்கு :)

  ReplyDelete
 10. @ அன்னு...

  //..பின் அந்த உறவினர் பக்கத்தில் உள்ள மஸ்ஜிதில் இமாமை கேட்டுள்ளார்கள். அவரோ, யாசீன் தானே ஓதுகிறீர்கள், உணவுதானே தருகிறீர்கள், எதீம்களைத்தானே ஓத வைத்து பணமும் உணவும் தருகிறீர்கள் அதனால் ஒன்றுமில்லை என்றுவிட்டாராம்... அதில் இன்னமும் திண்ணமாக நடக்கிறது...//

  குறிப்பிட்ட சில நாட்களில் ஸ்பெஷலாக யாசீன் ஓதுவதற்கும் சாப்பாடு கொடுப்ப‌தற்கும் குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் உள்ளதா என்று அந்த மக்கள் கேட்டிருந்தால், அந்த இமாம் 'கழுவுற மீனில் நழுவுற மீனாக'தான் சென்றிருப்பார். இவர்களால்தான் மக்களும் முழுமையாக திருந்தமுடியாமல் இருக்கிறார்கள் :(

  //அப்பட்டமான உண்மை அஸ்மா. மரணம் ஒன்று மட்டுமே உண்மை, திண்ணம்//

  அதை புரியாதவர் யாருமில்லை என்றாலும், அதற்காக மக்கள் தங்களை சரிபடுத்திக் கொள்வதற்கு இமாம்களே தடைக்கல்லாக இருப்பதுதான் வருத்தமான விஷயம். எதையாவது சொல்லி இல்லாதவற்றை நியாயப்படுத்தியே வாழ்க்கையை தள்ளுகிறார்களே :( அல்லாஹ்தான் மரணத்திற்கு முன்னர் நேர்வழியைக் கொடுக்கணும். தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அனிஷா.

  ReplyDelete
 11. @ முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'...

  வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

  //தூய இஸ்லாமிய அடிப்படையில் விழிப்புணர்வூட்டும் நல்ல பதிவு. நன்றி சகோ.அஸ்மா//

  இன்னும் உறக்கத்தில் இருக்கும் மக்கள் விழித்து எழ இறைவன் உதவிசெய்வானாக! வருகைக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 12. @ நண்பன்...

  //எல்லாமே ஏமாற்று வேலைதான் அறியாமையில் இருப்பவரகளை பயன் படுத்தி ஒரு கூட்ட மே சாப்பிட்டு கொண்டு இருக்கிறது//

  'ஏமாற்று வேலை' என்பது உண்மைதான். அறியாமைதான் எல்லா வழிகேடுகளுக்கும் அடிப்படையாகிவிடுகிறது.

  //இது போல் எல்லா மதத்திலேயும் இருக்கிறது இந்த மாதிரி மக்களை திருத்த அந்த அல்லா ஹ் ஒருவனால் மட்டுமே முடியும்//

  இஸ்லாத்தில் இதுபோல் இல்லாவிட்டாலும் இஸ்லாமிய மக்களில் சிலர் செய்யும் தவறுகள்தான் இவை. அல்லாஹ் அவர்களையும் நேர்வழிக்கு கொண்டு வரட்டும், இன்ஷா அல்லாஹ்! தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 13. @ மு.ஜபருல்லாஹ்...

  வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

  //எங்கள் வீட்டில் இதை நிறுத்த நான் பட்டபாடு.....// பாடு பட்டாலும் பலன் கிடைத்தவரை சந்தோஷம் :) அல்ஹம்துலில்லாஹ்!

  //எங்கள் ஊரில் இந்த பாத்தியாவை நிறுத்தியதில் நாங்கள்தான் முன்மாதிரி.
  அல்லாஹ் நாங்கள் அறியாமல் செய்த பாவங்களை மன்னித்து கிருபை செய்வனாக!//

  மாஷா அல்லாஹ்! உங்களைப் பார்த்து, அதன்மூலம் சிந்தித்து திருந்தியவர்களின் நன்மையும் உங்களுக்கு கிடைக்கும் இன்ஷா அல்லாஹ். திருந்தி, மனப்பூர்வமாக பாவமன்னிப்பு கேட்பவரை (இன்ஷா அல்லாஹ்) இறைவன் மன்னிப்பான். வருகைக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 14. @ சுவனப்பிரியன்...

  //சிறுவனாக இருக்கும் போது எங்கள் வீட்டில் ஓதுவதில்லையே என்று வறுந்தியது உண்டு. அந்த அளவு ருசியாக இருக்கும் இந்த பதார்த்தம். :‍)//

  :)))

  //ஆலிம்களை சிறந்த கல்வியாளர்களாகவும், தொழிற் கல்வியாளர்களாகவும் மாற்ற வேண்டும். அவர்களின் வருமானத்துக்கு ஒரு நிரந்தர வழியை மத்ரஸாக்களின் கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும். அது வரை ஆலிம்கள் பத்திஹா ஓதுவதை தடுப்பது கஷ்டம்//

  இதுபோன்ற வழிமுறையை ஏகத்துவக் கொள்கையை மட்டும் போதிக்கும் சில கல்லூரிகளில் கொண்டு வந்துள்ளார்கள். மற்ற மதரஸாக்களில் பின்னாளில் (ஒருவேளை) அதுபோல் கொண்டு வந்தாலும், மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கை சரியாக போதிக்கப்படாவிட்டால் அவர்களின் தொழிலை ஆரம்பிக்கவே ஃபாத்திஹா ஓத வைத்தாலும் வைப்பார்கள். நீங்கள் சொல்லும் தொழிற் கல்வியோடு ஏகத்துவத்தையும் சேர்த்து ஆலிம்கள் உருவாக்கப்பட்டால்தான், அடுத்த தலைமுறையாவது 'ஃபாத்திஹா ஓதுவது, சீரணி கொடுப்பதுன்னா என்னம்மா?'ன்னு கேட்கும் நிலை வரும் இன்ஷா அல்லாஹ் :) தங்களின் கருத்துக்களுக்கும் மதரஸா சம்பந்தமான‌ நல்ல ஆலோசனைக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 15. assalamu alaikkum
  good article

  ReplyDelete
 16. @ bat...

  வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

  தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 17. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )

  இந்த (ஓதி முடிச்சதும் ) பூரியானை சொந்தக்காரங்க வீட்டுக்கு 5 , 6 ந்னு டெலி வரி செய்ய சொல்லி சின்ன பிள்ளைகளான எங்களை தொல்லை செய்வதை முக்கியமான இந்த மேட்டரை விட்டுட்டீங்களே. அதுப்போல அங்கிருந்தும் வரும் .

  இப்போது ஓதுவதில்லை .அது செய்வதுமில்லை. ஒரு சூப்பர் ஐட்டம் சாப்பிட முடியாமல் உலகை விட்டு போயிடுச்சேன்னு எனக்கு ஒரே கவலை :-))))))

  ReplyDelete
 18. @ ஜெய்லானி...

  வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

  //இந்த (ஓதி முடிச்சதும் ) பூரியானை சொந்தக்காரங்க வீட்டுக்கு 5 , 6 ந்னு டெலி வரி செய்ய சொல்லி சின்ன பிள்ளைகளான எங்களை தொல்லை செய்வதை முக்கியமான இந்த மேட்டரை விட்டுட்டீங்களே//

  டெலிவரி பண்ணுவதெல்லாம் பசங்கதான். நாங்க‌ போனதில்ல, தின்றதோடு சரி :) அதான் அதை சொல்லவில்லை :)

  //இப்போது ஓதுவதில்லை .அது செய்வதுமில்லை//

  அல்ஹம்துலில்லாஹ், சந்தோஷம் சகோ.

  //ஒரு சூப்பர் ஐட்டம் சாப்பிட முடியாமல் உலகை விட்டு போயிடுச்சேன்னு எனக்கு ஒரே கவலை :-))))))//

  அது எப்படி உலகை விட்டுப் போகும்.. டேஸ்ட்டி ஐட்டமாச்சே.. :) ஓசியில் சாப்பிட்ட சான்ஸ் வேணும்னா போயிருக்கலாம் :)) இதோ செய்முறை இருக்கு தேங்காய்ப்பூ சோமாஸ் பாருங்க, எவ்வளவு வேணாலும் சாப்பிடுங்க :))

  ReplyDelete
 19. அஸ்மா..இந்த பூரியான் சுடுவதில் நான் எக்ஸ்பர்ட்.சென்னைக்கு வாங்க மொருகலான சூப்பர் பூரியான் செய்து தர்ரேன்.ஆனால் பூரியான் பாத்திஹாதான் ஓதுவதில்லை.:)

  ReplyDelete
  Replies
  1. //அஸ்மா..இந்த பூரியான் சுடுவதில் நான் எக்ஸ்பர்ட்.சென்னைக்கு வாங்க மொருகலான சூப்பர் பூரியான் செய்து தர்ரேன்//

   அப்படியா..? இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா வருகிறேன் ஸாதிகா லாத்தா. இப்பவே புக்கிங் போட்டு வச்சுட்டேன் உங்க பூரியானுக்கு :)

   //ஆனால் பூரியான் பாத்திஹாதான் ஓதுவதில்லை.:)//

   அல்ஹம்துலில்லாஹ் :)

   Delete
 20. Replies
  1. வருகைக்கு நன்றி சகோ.

   Delete
 21. எனக்குத்தெரிந்து எங்கள் ஊரில் [ அதிராம்பட்டினம் ] இதை செய்பவர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் இது வரை ஒதிய "பூரியான் ஃபாத்திஹா" வுக்கு இதுவரை அவர்கள் பில்கேட்ஸ் / அம்பானி களின் வசதியை மிஞ்சி இருக்க வேண்டும். இதுவரை அப்படி நடந்ததாக தெரியவில்லை.

  ReplyDelete
 22. எனக்குத்தெரிந்து எங்கள் ஊரில் [ அதிராம்பட்டினம் ] இதை செய்பவர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் இது வரை ஒதிய "பூரியான் ஃபாத்திஹா" வுக்கு இதுவரை அவர்கள் பில்கேட்ஸ் / அம்பானி களின் வசதியை மிஞ்சி இருக்க வேண்டும். இதுவரை அப்படி நடந்ததாக தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. //எனக்குத்தெரிந்து எங்கள் ஊரில் [ அதிராம்பட்டினம் ] இதை செய்பவர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் இது வரை ஒதிய "பூரியான் ஃபாத்திஹா" வுக்கு இதுவரை அவர்கள் பில்கேட்ஸ் / அம்பானி களின் வசதியை மிஞ்சி இருக்க வேண்டும். இதுவரை அப்படி நடந்ததாக தெரியவில்லை//

   ha..haa.. நல்ல ஆராய்ச்சி :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

   Delete
 23. அக்கா இந்த சகுபர் சாதிக் (ரஹ்) அவர்கள் ஷியாக்களின் 12வது இமாம் என்று கேள்வி பட்டு இருக்கேன் உண்மையா/, இவர் பற்றி அறிய ஆவல் kaleelfly@gmail.com என்னும் முகவரிக்கு அனுப்புங்கள், சகோக்களே.

  ReplyDelete
  Replies
  1. அலி(ரலி) அவர்களுடன் 11 பேரைச் சேர்த்து ஷியாக்களில் மொத்தம் 12 இமாம்கள் என கூறுவார்கள். கீழுள்ள இந்த பட்டியலில் முதல் இடத்தில் அலி(ரலி) அவர்களையும், நீங்கள் கேட்ட ஜஃபர் சாதிக் என்பவரை 6 வது இடத்திலும் சொல்லப்பட்டுள்ளது. காண்க:

   1. அபுல் ஹஸன் அலீ பின் அபீதாலிப்(ரலி)
   2. அபூமுஹம்மது பின் அல்ஹஸன் பின் அலீ (அல் ஜகீ)
   3. அபூஅப்துல்லாஹ் அல் ஹுஸைன் பின் அலீ (ஸய்யித் அஷ்ஷுஹதாஃ - ஷுஹதாக்களின் தலைவர்)
   4. அபூமுஹம்மது அலீ பின் அல்ஹுஸைன் (ஜைனுல் ஆபிதீன்)
   5. அபூஜஃபர் முஹம்மது அலீ பின் அலீ (அல்பாகிர்)
   6. அபூஅப்துல்லாஹ் ஜஃபர் பின் முஹம்மது (அஸ்ஸாதிக் - இவர்தான் பூரியான் ஃபாத்திஹாவின் கதாநாயகர் :) )
   7. அபூ இப்ராஹீம் மூஸா பின் ஜஃபர் (அல்காழிம்)
   8. அபுல் ஹஸன் அலீ பின் மூஸா (அர்ரிளா)
   9. அபூ ஜஃபர் முஹம்மது பின் அலீ (அல்ஜவாத்)
   10. அபூ ஹஸன் அலீ பின் முஹம்மது (அல்ஹாதீ)
   11. அபூ முஹம்மது அல்ஹஸன் பின் அலீ (அல் அஸ்கரி)
   12. அபுல் காஸிம் முஹம்மது பின் அல்ஹஸன் (அல் மஹ்தி)

   Delete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!