அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday 30 June 2011

'மிஃராஜ்' இரவும் பித்அத்களும்



நபி(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த‌தற்கு பிறகு, அவர்களின் மக்கா வாழ்க்கையில் நடந்த மாபெரும் ஒரு அற்புதமான‌ விண்ணுலகப் பயணம்தான் 'மிஃராஜ்' என்பதாகும். இதைப்பற்றி வரக்கூடிய ஆதாரப்பூர்வமான செய்திகளை விரிவாக அடுத்தடுத்த‌ பதிவுகளில் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்! அதற்கு முன்பாக, இந்த மிஃராஜ் சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு இஸ்லாமிய மக்களில் சிலர் செய்யும் வணக்கங்கள் 'பித்அத்' என்னும் வழிகேடுகளின் பட்டியலில் உள்ளவைதானா, அல்லது அதற்கு குர்ஆன் - ஹதீஸ்களில் எதுவும் ஆதாரம் உள்ளதா என்பதைப் பார்ப்போம்.

'மிஃராஜ் இரவு' ரஜப் பிறை 27 ல் தானா?

'மிஃராஜ்' என்ற சம்பவம் ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் நம்பவேண்டிய, அல்லாஹ்வின் வல்லமையை அடிப்படையாகக் கொண்ட உண்மையான ஒரு நிகழ்வு என்றாலும், அது எப்போது நடந்தது என்ற மாதமோ, பிறை(தேதி)யோ ஹதீஸ்களில் குறிப்பிடப்படவில்லை என்பதை முதலில் நாம் புரிந்துக் கொள்ளவேண்டும். தோராயமாக அனுமானித்து சொல்லக்கூடிய‌ ஆதாரங்களைத் தவிர, அது இந்த நாளில்தான் நடந்தது என்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சரியான ஆதாரம் எதுவும் கிடைக்காததால் அறிஞர்களிடம் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன‌.

- ஜாபிர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) இருவரும், யானை ஆண்டில் ரபீவுல் அவ்வல் பிறை 12 ல் மிஃராஜ் நடந்த‌தாக கூறுகிறார்கள். இதே கருத்தை இமாம் ஜுஹ்ரியும், இமாம் உர்வா அவர்களும் அறிவிக்கிறார்கள். இன்னொரு அறிவிப்பில், "நபி(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்றது" என இமாம் ஜுஹ்ரி அறிவிக்கிறார்கள். (பைஹகீ)

- "ஹிஜ்ரத் நடப்பதற்கு 16 மாதங்களுக்கு முன்னால் தொழுகை கடமையாக்கப் பட்டது. அப்படியானால் துல்கஃதா மாதத்தில்தான் மிஃராஜ் நடந்தது" என்று இஸ்மாயீல் ஸதீ அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஹாகிம்)

- ஹாபிஸ் அப்துல் கனி அவர்கள் பலவீனமான ஆதாரக் குறிப்போடு "ரஜப் 27 ல் நடந்தது" என்கிறார்.

- "ரஜப் மாதம் முதல் ஜும்ஆவின் இரவில் நடைபெற்றது" என்று வேறு சிலரும் குறிப்பிடுகிறார்கள்.

- "நபித்துவம் கிடைத்த ஆண்டு நடைபெற்றது" என்ற கருத்தை இமாம் தப்ரி அவர்கள் ஆமோதிக்கிறார்கள்.

இவை அல்லாமல், "ஹிஜ்ராவிற்கு ஓராண்டு, இரண்டரை மாதங்களுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் நடைபெற்றது என்றும், ஹிஜ்ராவிற்கு ஓர் ஆண்டுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம் நடைபெற்றது என்றும் சில கருத்துக்கள் உள்ளன. ஆனால், "இந்த செய்திகள் எதற்குமே எந்த அடிப்படையும் கிடையாது" என்று இமாம் இப்னு கஸீர் அவர்கள் 'பிதாயா வந்நிஹாயா' என்ற தன‌து நூலில் குறிப்பிடுகிறார்கள். ஆக, இது நடந்த நாளைப்பற்றி ஒவ்வொருவரின் அனுமானம் மட்டுமே நமக்கு கிடைக்கிறதே தவிர, 'மிஃராஜ் இரவு' என்று உறுதியாக சொல்லப்பட்ட நாள் இதுவென‌ யாராலும் குறிப்பிட்டு சொல்ல இயலாது.

ஆனால் ரஜப் மாதம் 27 ஆவது இரவுதான் மிஃராஜ் நடைபெற்றது என்று மக்கள் தவறாக எண்ணிக்கொண்டு, அந்த இரவில் அல்லாஹ்வோ, ரசூல்(ஸல்)அவர்களோ கட்டளையிடாத பல வணக்க‌ங்களைச் செய்து வருகிறார்கள். "மிஃராஜ் இரவில் வானத்திலிருந்து ஆயிரக்கணக்கான வானவர்கள் இறங்கி இறையொளியைத் தட்டில் ஏந்தி பூமியில் வந்திறங்கி ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து, இறையோனின் நினைவில் ஈடுபட்டுள்ளவர் மீது இறையொளியைப் பொழிகின்றனர்" என்று குர்ஆன் - ஹதீஸின் எந்த ஆதாரமும் இல்லாமல் சிலர் எழுதி வைத்துள்ளனர். மேலும் அந்நாளில் 6 ஸலாமைக் கொண்ட 12 ரக்அத் தொழவேண்டும் என்றும், அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் 'குல்ஹுவல்லாஹு' சூரா(இக்லாஸ்)வை ஐந்து முறை ஓத வேண்டும் என்றும், 3 ம் கலிமா 100 தடவையும், இஸ்திக்ஃபார் 100 தடவையும் ஓத வேண்டும் என்றும் எழுதி வைத்துள்ளார்கள் . அதற்கு பிறகு 3 ஸலாமைக் கொண்ட 6 ரக்அத் தொழவேண்டும்; ஒவ்வொரு ரக்அத்திலும் 7 தடவை 'குல்ஹுவல்லாஹு' சூரா(இக்லாஸ்)வை ஓத வேண்டும்; பிறகு இரண்டு ரக்அத் தொழ வேண்டும்; அதில் 'அலம் தர கைஃப'வும், 'லி ஈலாஃபி குறைஷ்' சூராவை ஓதவேண்டும் என்றெல்லாம் அந்நாளுக்கு ஒரு அலங்காரத்தை ஏற்படுத்த தங்கள் இஷ்டத்துக்கு சிலர் எழுதி, 'தொழுகை முறையை இவ்வாறு மாற்றி தொழுதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்' என்றும் எழுதி வைத்துள்ளவற்றை மக்கள் உண்மையென நம்பி கடைப்பிடித்து வருகிறார்கள். அத்துடன் மிஃராஜ் நாளின் பகலில் நோன்பையும் நோற்கிறார்கள். இவற்றை தவறென்று சுட்டிக்காட்டினால், 'நல்ல அமல்(வணக்கங்)களைதானே செய்கிறோம், இதிலென்ன தவறு?' என்று கேட்பவர்கள்,

"உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா?" (அல்குர்ஆன் 49:16) என்ற அல்லாஹ்வின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

'லைலத்துல் கத்ர்' என்னும் இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்று தனது திருமறையில் சிலாகித்து கூறியுள்ள அல்லாஹ்தஆலா, அதேபோல் இந்த மிஃராஜ் இரவுக்கும் தனிச்சிறப்பு உண்டு என்று எங்காவது கூறியிருக்கிறானா? அல்லது இந்த நாளில் சிறப்புத் தொழுகைகள் தொழுது, நோன்பு வைத்தால் அதிக நன்மை உண்டு என்று நபி(ஸல்) அவர்கள்தான் கூறியுள்ளார்களா? இந்த மிஃராஜ் பற்றி தனது திருமறையில் அறிவிப்பு செய்துள்ள‌ அல்லாஹ்தஆலாவும் இந்த நாளை இவ்வாறு சிறப்பிக்கவேண்டும் என்று கட்டளையிடவில்லை; அந்த நாளில் தொழுவதற்கென்று எந்த‌ விசேஷமான‌ தொழுகைகளோ, நோன்பையோ நபி(ஸல்) அவர்களும் நமக்கு கற்றுத் தரவுமில்லை.

ஏதேனும் ஒரு விசேஷமான நாளில் அமல் செய்ய‌ நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குச் சொல்லியிருந்தால், நபித்தோழர்கள் அதை தவறாமல் கடைப்பிடித்திருப்பார்கள். குறிப்பிட்ட அந்த நாளையும் நினைவு வைத்திருப்பார்கள். ஆனால் மேலே சொன்னதுபோல் 'மிஃராஜ் எந்த மாதம் ஏற்பட்டது' என்பதில் பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது என்றால், அந்த நாளை வணக்கங்கள் செய்வதற்குரிய நாளாக நபி(ஸல்) அவர்கள் நமக்கு அறிவிக்கவில்லை என்பதை மிக சுலபமாக நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆக அல்லாஹ்வும், ரசூலும் ஒன்றை கூறவில்லையென்றால் அதை நாமாக செய்வதில் நமக்கு எந்த உரிமையுமில்லை. மார்க்கத்தின் அமல்கள் (வணக்கங்கள்) விஷயத்தில், நாம் நினைத்ததையெல்லாம் சேர்த்துக் கொள்ளவும்/நீக்கிக் கொள்ளவும் அது நம் வீட்டு மளிகை லிஸ்ட் அல்ல மக்களே! அல்லாஹ் தனது இறுதி தூதரான‌ நபி(ஸல்) அவர்கள் மூலமாக இஸ்லாமிய மார்க்கத்தை பூர்த்தியாக்கிவிட்டதாக கூறுகிறான். நபி(ஸல்)அவர்களின் இறுதி ஹஜ்ஜின்போது,

"இன்றைய தினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்காக முழுமையாக்கி விட்டேன்"(திருக்குர்ஆன் 5:3) என்று அல்லாஹ்தஆலா முற்றுப்புள்ளி வைத்தது எதற்கு? இஸ்லாத்தின் வணக்கம் சார்ந்த விஷயங்களுக்குதானே? அப்படியானால் நாம் மார்க்கத்தில் ஒரு வணக்கத்தை நடைமுறைப்படுத்த‌ அணுக‌ வேண்டியது எப்படி? இஸ்லாத்தில் எந்தவொரு வணக்கத்தையும் செய்வதற்கு இரண்டு அடிப்படை விஷயங்கள் உள்ளன‌. அந்த அடிப்படைதான் அல்குர்ஆனும், ஸஹீஹான ஹதீஸ்களும். இதைத் தவிர வேறு எதுவுமே இஸ்லாம் அல்ல! ரசூல்(ஸல்) அவர்களின் காலத்தோடு இவைதான் மார்க்கம் என நமக்கு வரையறுக்கப்பட்டுவிட்டது.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: "நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன். அவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம் குர்ஆன்; மற்றொன்று எனது வழிமுறை". 

அறிவிப்பவர் : மாலிக் இப்னு அனஸ்(ரலி) நூல் : முஅத்தா


ஆனால் இதை மக்கள் உணராமல், 'ஒரு பெரியார் சொன்னார்... மகான் சொன்னார்...', 'இமாம் சொன்னார்..', 'இந்த கிதாபில் உள்ளது', 'இது முன்னோர்களின் வழிமுறை' என்று எதையாவது கூறிக்கொண்டு, எதைச் செய்தாலும் இறைவனிடமிருந்து நன்மை கிடைக்கும் என்று எண்ணி செய்யக்கூடிய வணக்கங்கள் யாவும் இறைவனால் அங்கீகரிக்கப்படுவது இல்லை. மாறாக மார்க்கத்தில் சொல்லப்படாத ஒன்றை செய்த குற்றத்திற்காக தண்டனை பெறும் நிலைதான் ஏற்படும். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக!) இஸ்லாத்தின் இந்த சாதாரண அடிப்படையை நாம் ஒவ்வொருவரும் புரிந்து, அதை சரியான முறையில் நாம் கடைபிடிக்கவேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: "நம் கட்டளை அல்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்".

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: முஸ்லிம் (3243)

அல்லாஹ் தனது திருமறையில்,

"(நம்முடைய) இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள். எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிருந்து) விலகிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்" (அல்குர்ஆன் 59:7) 
என்று கூறுகிறான். 

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

"செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும்; நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும்; காரியங்களில் மிகவும் கெட்டது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும்; புதிதாக உருவாகக் கூடியவை அனைத்தும் 'பித்அத்துகள்' ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்".


அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); நூல்: நஸாயீ (1560)


ஆகவே என்னருமை சகோதர, சகோதரிகளே! நன்மையை எதிர்ப்பார்த்து செய்யப்படும் வணக்கங்களுக்கு நன்மை கிடைக்காமல் இருப்பதைவிட, குர்ஆன் ஹதீஸுக்கு வெளியில் இருப்பதெல்லாம் மார்க்கம் என்று அறியாமையினால் நம்பி, விழுந்து விழுந்து வணக்கங்கள் புரிந்தும் அது தீமையின் கணக்கில் சேர்க்கப்பட்டு நரகத்தில் சேர்ர்த்துவிடும் என்பது எவ்வளவு பெரிய நஷ்டமானது, கை சேதத்திற்குரியது என்பதை தயவுசெய்து புரிந்துக் கொள்ளுங்க‌ள். நபி(ஸல்) அவர்களின் 'மிஃராஜ்' என்ற விண்ணுலகப் பயணம் நடந்தது என்ற உண்மையை நம்பி அல்லாஹ்வின் வல்லமை மீது ஈமான் கொள்ளும் அதேசமயம், அல்லாஹ்வின் தண்டனைகளை விட்டும் தப்பிக்க‌ வேண்டுமென்றால், அந்த நாளில் செய்யும் மார்க்கத்தில் இல்லாத இதுபோன்ற பித்அத்தான‌ செயல்களைப் புறக்கணித்துவிடுங்கள். சரியான மார்க்கத்தை முறையாக பின்பற்றி வாழ நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

5 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    சரியான அருமையான தகுந்த நேரத்தில் வந்த பதிவு சகோ.

    இன்ன இரவு தான் சென்றார்கள் என்பதில் குழப்பம் இருக்கின்ற விஷயத்தில் பிடிவாதமாக பித்அத்களை பின்பற்றுக்கின்ற இவர்கள். அதனை தவிர்த்து விட்டு.

    மிஃராஜ் இரவு சம்பந்தமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் வயிலாக வரக்கூடிய படிப்பினைகளை தங்கள் வாழ்வில் பின்பற்ற முயற்சி செய்தால் அல்லாஹ் அவர்களை நாடினால் பொருந்திக் கொள்வான்.

    முஹம்மது நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

    மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த இறைவன் என்னை மிஃராஜுக்கு அழைத்துச் சென்ற போது நான் ஒரு சமுதாயத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினால் நகங்கள் இருந்தன. (அவற்றால்) தங்கள் முகங்களையும், மார்புகளையும் அவர்கள் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். ""ஜிப்ரீலே! இவர்கள் யார்?'' என்று நான் கேட்டேன். "இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சி சாப்பிட்டு, அவர்களின் தன்மான உணர்வுகளைக் காயப்படுத்திக் கொண்டிருந்தவர்கள்'' என்று பதிலளித்தார்கள். (நூல்கள்: அபூதாவூத் 4235, அஹ்மத் 12861)

    இந்த ஹதீஸை படிப்பினையாக எடுத்து பிறரை புறம் பேசுவதை நிறுத்தி தங்களை அந்த அவலமான நிலையிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

    முஹம்மது நபி ஸல் அவர்கள் கூறினார்கல்.

    இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்" நான் (மிஅராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன். (நூல்: புகாரி, எண் 3241)

    இந்த ஹதீஸில் பணக்காரர்களுக்கும். சாபமிடுகின்ற பெண்களுக்கும்,படிப்பினை இருக்கிறது.

    பித்அத்களை பின்பற்றி நரகத்திற்கு போவதை தவிர்த்து சரியான ஹதீஸ்களை படிப்பினைகளோடு பின்பற்றி சொர்க்கம் செல்ல இறைவன் அனைவருக்கும் அருள் புரிவானாக.

    ReplyDelete
  2. @ ஹைதர் அலி...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

    //இன்ன இரவு தான் சென்றார்கள் என்பதில் குழப்பம் இருக்கின்ற விஷயத்தில் பிடிவாதமாக பித்அத்களை பின்பற்றுக்கின்ற இவர்கள். அதனை தவிர்த்து விட்டு

    மிஃராஜ் இரவு சம்பந்தமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் வயிலாக வரக்கூடிய படிப்பினைகளை தங்கள் வாழ்வில் பின்பற்ற முயற்சி செய்தால் அல்லாஹ் அவர்களை நாடினால் பொருந்திக் கொள்வான்//

    இன்ஷா அல்லாஹ், கண்டிப்பா சகோ. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  3. /'லைலத்துல் கத்ர்' என்னும் இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்று தனது திருமறையில் சிலாகித்து கூறியுள்ள அல்லாஹ்தஆலா, அதேபோல் இந்த மிஃராஜ் இரவுக்கும் தனிச்சிறப்பு உண்டு என்று எங்காவது கூறியிருக்கிறானா? அல்லது இந்த நாளில் சிறப்புத் தொழுகைகள் தொழுது, நோன்பு வைத்தால் அதிக நன்மை உண்டு என்று நபி(ஸல்) அவர்கள்தான் கூறியுள்ளார்களா? இந்த மிஃராஜ் பற்றி தனது திருமறையில் அறிவிப்பு செய்துள்ள‌ அல்லாஹ்தஆலாவும் இந்த நாளை இவ்வாறு சிறப்பிக்கவேண்டும் என்று கட்டளையிடவில்லை; அந்த நாளில் தொழுவதற்கென்று எந்த‌ விசேஷமான‌ தொழுகைகளோ, நோன்பையோ நபி(ஸல்) அவர்களும் நமக்கு கற்றுத் தரவுமில்லை./ சரியான கேள்வி அக்கா... எனது சந்தேகங்களைத் தீர்த்து வைத்து விட்டீர்கள். ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

    ReplyDelete
  4. /'லைலத்துல் கத்ர்' என்னும் இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்று தனது திருமறையில் சிலாகித்து கூறியுள்ள அல்லாஹ்தஆலா, அதேபோல் இந்த மிஃராஜ் இரவுக்கும் தனிச்சிறப்பு உண்டு என்று எங்காவது கூறியிருக்கிறானா? அல்லது இந்த நாளில் சிறப்புத் தொழுகைகள் தொழுது, நோன்பு வைத்தால் அதிக நன்மை உண்டு என்று நபி(ஸல்) அவர்கள்தான் கூறியுள்ளார்களா? இந்த மிஃராஜ் பற்றி தனது திருமறையில் அறிவிப்பு செய்துள்ள‌ அல்லாஹ்தஆலாவும் இந்த நாளை இவ்வாறு சிறப்பிக்கவேண்டும் என்று கட்டளையிடவில்லை; அந்த நாளில் தொழுவதற்கென்று எந்த‌ விசேஷமான‌ தொழுகைகளோ, நோன்பையோ நபி(ஸல்) அவர்களும் நமக்கு கற்றுத் தரவுமில்லை.
    / சரியான கேள்வி அக்கா... என் சந்தேகங்களைத் தீர்த்து வைத்து விட்டீர்கள். ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

    ReplyDelete
    Replies
    1. //சரியான கேள்வி அக்கா... என் சந்தேகங்களைத் தீர்த்து வைத்து விட்டீர்கள். ஜஸாக்கல்லாஹ் ஹைர்//

      உங்களின் சந்தேகம் தீர்ந்தது சந்தோஷம், அல்ஹம்துலில்லாஹ் :) வருகைக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரா பானு.

      Delete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை