அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Tuesday, 23 October 2012

ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்க‌ள் (2012)


எங்குமுள்ள இறையவனின் ஏவலினைச் செய்ய‌
        எங்கள் நபி இப்ராஹீம் எழுந்தனர் வாளேந்தி
செங்குருதி கண்ணெதிரே செம்மையுடன் பாய்ச்சும்
        சிந்தையுடன் தம் மகனைத் தியாகமிடச் சென்றார்!

அந்த பெரும் நினைவாலே அல்லாஹ்வின் பேரில்
        அல்லலுறும் மாந்தருக்குத் தியாகமென்னச் செய்தோம்?
அந்தமிகும் வாழ்விதனில் கொஞ்சமேனும் செய்ய‌
        இந்த பெருநாளிலே வாக்குறுதி கொள்வோம்!

"அல்லாஹு அக்பர்" என்ற தக்பீரை மொழிந்து
         அல்லாஹ்வின் நினைவோடு அணிவகுத்து நின்று
உள்ளோரும் இல்லாரும் உளங்கனிந்து வேண்டும்
         உயர்வான "அரஃபாத்"தைக் கொண்ட திருமாதம்!

மாந்தரினில் "ஹஜ்"ஜுக்குச் சென்றுவரும் பேற்றை
         மறையவனே! பல்லோர்க்கும் மகிழ்வுடனே அளித்தாய்!
பாங்கு தரும் கடமைகளில் ஐந்தாவதனில் - யாம்
         பங்கு பெற வாழ்வில் ஒருமுறையேனும் அருள்வாய்!

மங்கி வரும் ஒழுக்கங்களில் மறு மலர்ச்சியோடும்
         மங்காத நபி வழியில் மன எழுச்சி வேண்டும்!
பொங்கும் மறைப் போதனையில் சிந்தையுடன் செயலும்
         பொருளினையும், நீண்டதொரு ஆயுளினையும் தருவாய்!

'குர்ஆனி'ன் கட்டளையைத் தம் மனதிற் கொண்டு
'குர்பானி'யை மதிப்பறிந்து செய்யும் திருநாளில்
"உன்னத ஓர் இறையவனிச் சிரம் வணங்கிப் போற்றும்
உலகமெலாம் வாழ்க!"வென வாழ்த்து நவில்கிறேன்!

கவிதை ஆக்கம்: 
(மறைந்த) எனத‌ன்புத் தந்தை, 
S. முஹம்மத் இஸ்ஹாக், B.A. 

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மாஷா அல்லாஹ் நல்ல கவிதை இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!