அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday 13 October 2012

ஹஜ்ஜும் உம்ராவும் பூரணமடைவது எப்போது?


இஸ்லாமிய மாதங்களில் உள்ள நான்கு புனித மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இறுதிக் கடமையாம் ஹஜ் கடமையை நிறைவேற்ற தயாராகிக் கொண்டிருப்பவர்கள் தங்களின் நாடு, மொழி, இனம், நிறம், கோத்திரம், செல்வாக்கு போன்ற அனைத்து வேறுபாடுகளையும் மறந்து நாமனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற ஒருமித்த உணர்வுடன் ஒன்றுகூட இருக்கிறார்கள்! அப்படிப்ப‌ட்ட அற்புதமான ஒரு உலகமகா மாநாடாக திகழக்கூடிய 'ஹஜ்'ஜிலே இறைவன் வகுத்துள்ள சட்டங்களை, அவனுடைய தூதர்(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியிலே மட்டுமே நிறைவேற்றும்போதுதான் அதன் முழுமையான பலன்களை நாம் அடைந்துக்கொள்ள முடியும், இன்ஷா அல்லாஹ்!

ஆனால்.. வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையைப் பறைசாற்ற வேண்டிய புனிதமிக்க ஒரு இடத்தில், அணிகின்ற ஆடைகள்கூட ஒரே விதமாக இருக்கவேண்டிய ஒரு நேர‌த்தில்கூட‌ மத்ஹப்களின் வழியென்றும், முன்னோர்களின் வழியென்றும், இமாம்கள்/பெரியார்களின் வழியென்றும் கூறி வணக்க வழிபாடுகளில் நாம் வேறுபட்டு நிற்கலாமா சகோதர, சகோதரிகளே?

“அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் பூரணமாக நிறைவேற்றுங்கள்.”(2:96)
என அல்லாஹ் கூறுகிறான். ஹஜ்ஜும் உம்ராவும் எப்போது பூரணமடையும்..? நம் வாழ்வின் அனைத்துக்கும் அழகிய முன்மாதிரியாக வந்த அண்ண‌லெம் பெருமானார்(ஸல்) அவர்களையல்லவா எல்லா வழிமுறைகளிலும் நாம் பின்பற்றவேண்டும்? அப்போதல்லவா (இன்ஷா அல்லாஹ்) நம்முடைய ஹஜ்ஜும் உம்ராவும் பூரணமடையும்?
'அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது.' (அல்குர்ஆன் 33:21) 
என்று அல்லாஹுதஆலா கூறுவதை நம் வாழ்வின் ஒவ்வொரு அமல்களிலும் பின்பற்றவேண்டாமா?

“ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்களே, அத்தகைய பாக்கியவான்களாக (இன்ஷா அல்லாஹ்) நாமும் ஆகவேண்டுமானால், ஹஜ்ஜுக்காக நாம் செலவழிக்கும் செல்வங்களோ, சிரமங்களோ, அந்த அமல்களுக்கான உடலுழைப்புகளோ, கண்விழிப்புகளோ மட்டும் முக்கியமில்லை! நாம் செய்யும் ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அதிமுக்கியமான இரண்டு நிபந்தனைகளை நாம் முழுமைப்படுத்தியே ஆகவேண்டும்.

முதலாவது:- இக்லாஸ் - பேருக்கோ, பெருமைக்கோ அல்லாமலும், அடுத்தவர்கள் செய்கிறார்களே நாமும் செய்துக் காட்டுவோம் என்ற எண்ணமில்லாமலும் அல்லாஹ்விற்காக மட்டுமே நம் ஹஜ்ஜை நிறைவேற்றுவது.

தனிப்பட்ட முறையில் நம் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களிடத்தில் சொல்லி துஆ செய்யச் சொல்வதும், அவர்களிடத்தில் நம் குற்றம் குறைகள் (அறிந்தோ/அறியாமலோ) ஏதுமிருப்பின் மனம்பொறுத்துக் கொள்ள (மன்னிக்க) சொல்வதும், அதுவும்கூட தூய மனதுடன், எந்தவித தற்பெருமையோ மனதில் நுழைந்துவிடாத வண்ணம், அல்லாஹ்வின் அச்சத்தை முன்னிறுத்தி சொல்வதும் தவறில்லை. ஆனால் அனைவருக்கும் பொது விளம்பரமாக‌ ஹஜ்ஜுக்கு செல்வதற்கென பேனர் வைத்து பிரபலப்படுத்துவது, நோட்டீஸ் விநியோகிப்பது, இன்னும் இதுபோன்றவை நம் மக்களிடத்தில் 'ஹாஜி' என்று பெயர் சொல்லவைக்க செய்யும் ஏற்பாடுகளே! தற்பெருமையின் அடையாள‌ங்களே! இவை மட்டும்தான் ஹஜ்ஜைப் பாழாக்குமா? 'ஊர் வழக்கம்' என இன்னும் நிறைய இருக்கிறது.

வீடு வீடாக சென்று ஹஜ் பயண பிரியாவிடை என்று கூறி, (கைக் கொடுப்பது) 'முஸாஃபஹா' செய்துவிட்டு வரும் பழக்கமாகட்டும்..,

ஹாஜிகளுக்கான விருந்து உபசரிப்புகளாகட்டும், ஊர் அழைத்து விருந்து கொடுத்தலாகட்டும்..,

மாலை அணிவித்து, (சில இடங்களில்) ஊர்வலமாக அழைத்து செல்லும் பழக்கங்களாகட்டும்..,

பள்ளிவாசல்களில் ஹாஜிகளைக் கூட்டி வைத்து அவர்களுக்கு சலாம் கொடுக்கும் நிகழ்ச்சி என பிரியாவிடை நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, (அதற்கு சம்மதிக்கும்) ஹாஜிகளும் அங்கு சென்று ஊர் மக்களுக்காக காத்திருப்பதாகட்டும்..,

திரும்பி வரும்போது பள்ளிகளில் பொது அறிவிப்பு செய்து அங்கு அனைவரும் கூடி செய்யும் வரவேற்பாக இருக்கட்டும்... அவை அனைத்துமே 'இக்லாஸ்' என்ற எல்லையை விட்டும் கடந்தவையே! இக்லாஸ் இல்லாவிட்டால் அந்த ஹஜ்ஜை அல்லாஹ்தஆலா ஏற்றுக்கொள்வானா என்பதும் கேள்விக்குறியே! விழலுக்கிரைத்த நீராக வீணாகக்கூடிய, நாம் அறியாமலே நம் அமல்களை நாசமாக்கும் அத்தகைய செயல்களை விட்டும் அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாப்பானாக!

இரண்டாவது:- நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்திக் காட்டினார்களோ அதைப் போன்று மட்டுமே ஹஜ்ஜின் அமல்களை நிறைவேற்றுவது. இதில் முதலாவது நிபந்தனை கணிசமான மக்களிடத்தில் இருக்கக்கூடும் என்றாலும், இரண்டாவது நிபந்தனையை எத்தனைப் பேர் கடைபிடிப்பார்கள் என்பது கவலைக்குரிய விஷயமே! ஹஜ்ஜுக்காக முடிவெடுக்கும் அடுத்த நிமிஷமே ஹஜ்ஜில் நாம் செய்யவேண்டிய கிரியைகள் எப்படிப்பட்ட முறையில் இருக்கவேண்டும் என்பதை பலரும் சிந்திப்பதில்லை; அவற்றைத் தெரிந்துக் கொள்ள தனிப்பட்ட‌ முயற்சிகளும் எடுப்பதில்லை. ஹஜ்ஜுக்கு புறப்படும் அந்த நெருக்கத்தில் அதற்கான ஹஜ் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டு, ஹஜ்ஜுக்கு வழிகாட்டிகளாகச் செல்லும் ஆலிம்கள் அதன் சட்டங்களை நபிவழியில்தான் சொல்கிறார்களா என்ற சரியான புரிந்துணர்வும், தெளிவும் மக்களிடத்தில் இல்லாததால் அவரவர்கள் இஷ்டத்துக்கு எதையாவது அளந்துவிடும், நபிவழியில் இல்லாத சட்டங்களைக் கேட்டு அதையே நம்பி இன்று பல ஹாஜிகள் தங்களின் ஹஜ் கிரியைகளை தவறான முறையில் செய்வது கைசேதத்திற்குரியது!

பெரும்பாலான மக்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய‌ வணக்கமாகிய இந்த ஹஜ் வணக்கம், அதை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு மிகப்பெரிய ஒரு அருட்கொடையாகும்!! இந்த அருட்கொடையைப் பெற்றவர்கள் நபிவழி அல்லாத வேறுமுறைகளில் செயல்பட்டுத் தங்கள் ஹஜ் வணக்கத்தைப் பாழாக்கிக் கொள்ளாமல்,
"உங்களது ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் வழிமுறையை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:ஜாபிர்(ரலி); நூல்:முஸ்லிம் (2286)
என நபி(ஸல்) அவர்கள் கூறியது போன்று, அவர்கள் காட்டிய வழியில் ஹஜ் செய்து அதற்குரிய பலன்களையும் பெற்றுக்கொள்வோமாக!

2 comments:

  1. //பெரும்பாலான மக்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய‌ வணக்கமாகிய இந்த ஹஜ் வணக்கம், அதை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு மிகப்பெரிய ஒரு அருட்கொடையாகும்!! இந்த அருட்கொடையைப் பெற்றவர்கள் நபிவழி அல்லாத வேறுமுறைகளில் செயல்பட்டுத் தங்கள் ஹஜ் வணக்கத்தைப் பாழாக்கிக் கொள்ளாமல்,நபி(ஸல்) அவர்கள் கூறியது போன்று, அவர்கள் காட்டிய வழியில் ஹஜ் செய்து அதற்குரிய பலன்களையும் பெற்றுக்கொள்வோமாக! //

    இது தான் முக்கியம் எங்களுக்கு சரியான வழி காட்டக் கூ டிய ஆலிம்கள், எண்களு வழி தவற செய்து விட்டார்கள், அவர்களால் தான் எங்களுடைய ஹஜ் கிரியைகள் நபிவழி படி நடக்காமல் போனது என்று அல்லாஹ்விடத்தில் நாம் போய் செல்ல முடியாது என்பதை நினைவில் நிறுத்தி, எப்படி ஹஜ்ஜுக்கு செல்வதற்கு சில மாதங்களுக்கு முன்னே அதற்கு தேவையான விஷயங்களில் கவனம் செளுத்துவோமோ அதை போன்றே எப்படி நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்தார்கள் என்று தெரிந்து கொள்வது அவசியம்.

    அல்ஹம்துலில்லாஹ். சரியான நேரத்தில் இடப்பட்ட சரியான பதிவு.

    ReplyDelete
  2. Assalamu Alaikum sagothari. Sariyana pathivu.
    Jazakallah hair.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை