அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday 10 December 2012

நீங்கா நினைவுகள்! (ஹ‌ஜ் ‍- 1)

    வ்வுலகில் நாம் எத்தனையோ விஷயங்களை கற்பனையில் சுமந்துக் கொண்டு 'இதுவும் நடக்குமா?' என மனக்கோட்டைக் கட்டி வைத்திருப்போம். அவற்றில் சிலவற்றுக்கு நம் மனதில் அதி முக்கியத்துவம் கொடுத்து, தொடர்ந்து அதற்காக பிரார்த்தித்துக் கொண்டே இருப்போம். ஆனால் அவை எல்லாமே எல்லோருக்கும் நடந்துவிடுவதில்லை. அப்படி ஏதேனும் சில விருப்பங்கள் நடந்துவிட்டால்..? அதை இறைவன் நாடிவிட்டால்..? அந்த அனுபவமும், அதனால் ஏற்பட்ட உணர்வுகளும் எவ்வளவு இனிமையாக இருக்கும்..!!

'யான் பெற்ற‌ இன்பம் பெறுக இவ்வையகம்' என்று ஒற்றை வார்த்தையில் வாழ்த்து சொல்லி செல்வதைவிட அந்த அனுபவத்தையே சொல்லும்போது, நம்மைப்போல் அதை விரும்பிய பலருக்கும் மேலும் உற்சாகம் ஊட்டக்கூடியதாக இது அமையலாம்! அதன்மூலம் அவர்களும் அந்த இன்ப அனுபவத்தை அடைய முயற்சிக்கலாம். எனவே எதிர்பார்த்து.. எதிர்பார்த்து, ஏங்கிக் கிடைத்த அந்த பாக்கியத்தை, அனுதினமும் நினைத்து நினைத்து சந்தோஷத்துடனும் திருப்தியுடனும் இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டே இருக்கும் அந்த‌ இனிய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

  
குறிப்பு: ஊர் திரும்பி ஒரு மாதம் ஆகியும் (நம் மீது கடமையாக்கப்பட்ட ஒரு வணக்கத்தை சொல்லிக்காட்டி பெருமைத் தேடியதாக ஆகிவிடுமோ என்ற அச்சத்தில்) இதை எழுதலாமா.. வேண்டாமா.. என எழுதத் தயங்கி, தோழிகளின் வற்புறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு பிறகுதான் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடிந்தது. நம் அனுபவம் பிறரை உற்சாகப்படுத்தி அதன் மூலம் அவர்களுக்கு பலன் கிடைத்தால் அதையும் இறைவன் நன்மை கணக்கில் சேர்ப்பான் (இன்ஷா அல்லாஹ்) என நினைத்து பகிரும் இந்த ப‌கிர்வில், இறைவன் சாட்சியாக அணுவளவும் தற்பெருமையோ எவ்வித மிகைப்படுத்தலோ இல்லை என்பதை கூறிக்கொள்கிறேன்.
    ஸ்லாத்தின் ஐந்து அடிப்படைக் கடமைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தனித்துவம் வாய்ந்தவை! அவற்றில் கடைசிக் கடமையான 'ஹஜ்' என்னும் கடமை ஆயுளில் ஒருமுறை நிறைவேற்றினாலே போதுமானது என்றளவுக்கு அதிகமான வணக்கங்களை உள்ளடக்கிய, உலகளாவிய முஸ்லிம்களின் சமத்துவத்தை நிரூபிக்கின்ற‌ மிகப்பெரிய ஒரு கடமையாகும்!  தேசத்தாலோ இனத்தாலோ குலத்தாலோ கோத்திரத்தாலோ நிறத்தாலோ மொழியாலோ, ஆடை முறைகளினாலோ, தாங்கள் நடைமுறைப்படுத்தும் நாகரிக‌த்தாலோ வேறுபட்ட, உலகின் அத்தனை வகையான முஸ்லிம் மக்களும் ஒரே இடத்தில் ச‌ங்கமித்து, ஒரே வித ஆடைய‌ணிந்து, ஒரே முழக்கம் மொழிந்து, ஒரே முறையைப் பின்பற்றி, ஒரே வித வணக்கங்கள் புரிந்து, ஒரே இறைவனை வேண்டி நிற்கும்... ஓர் உயரிய கடமைதான் ஹஜ்!

நாம் மரணிப்பதற்குள் அந்தக் கடமையை செய்ய நமக்கு பாக்கியம் கிடைக்குமா? என ஏங்கிப் பிரார்த்தித்த பல தருணங்கள் கடந்தன! இந்த வருடம் 'உம்ரா' மட்டுமே செய்ய இயலும், எனவே வகேஷனில் (இந்தியா செல்கையில்) உம்ராவுக்கு செல்வோமென முடிவு செய்திருந்த எங்களுக்கு, (ஹஜ்ஜுக்குரிய பொருளாதார‌ தகுதியைப் பெற்றிராவிடினும்..) ஒரேயொரு நாளில் ஏற்பட்ட மனமாற்றத்தின் மூலம், அதற்காக‌ ஃபைனான்ஸ் லெவலில் (இஸ்லாம் அனுமதித்துள்ள வழியில்) எப்படி தயாராவது என்ற சிந்தனையைத் த‌ந்து.. இந்த வருடமே ஹஜ்ஜுக்கு செல்வதென திடீரென முடிவுசெய்ய வைத்த அந்த கருணையாளனான‌ வல்ல அல்லாஹ்வுக்கு எங்கள் வாழ்நாள் முழுவதும் எவ்வளவு நன்றிகள் செலுத்தினாலும் போதாது! அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கஸீரா!!

    ஜ்ஜுக்கான எல்லா ஏற்பாடுகளோடு.. மகனை சமாதானப்படுத்துவது ஆரம்பத்தில் பெரும்பாடாக இருந்தது. 'நானும் ஹஜ்ஜுக்கு வந்து 'கஃஅபா'வை நேரில் பார்க்கணும்' ‍ - குழந்தைத்தனம் மாறாத பிடிவாதமாக இதையே சொல்லிக் கொண்டிருந்து ஒருவகையாக தொடர்ந்து சமாதானப்படுத்தியதில் அதுவரை பொறுமையாயிருந்த மகன், புறப்படுவதற்கு முந்தியநாள் ரொம்பவே கலங்க ஆரம்பித்து விட்டதில் மனதுக்கு சங்கடமாகிப் போனது. 'அல்லாஹ்வுக்காகதானே நாங்க ஹஜ்ஜுக்கு செல்கிறோம் ராஜா..? அழக்கூடாது' என்றதும் உடனே கட்டுப்படுத்திக் கொள்வதும், மீண்டும் சிறிது நேரத்தில் சோகமாகி புலம்புவதுமாக பொழுதுபோய்.. புறப்படும் நாளும் விடிந்தது.

சலாமத்தான பிரயாணம் வேண்டி நஃபில் தொழுது, ஃபஜ்ருத் தொழுகையெல்லாம் முடித்துக் கொண்டு புறப்பட்டு, செல்லும் வழியில் மகனுக்கு உபதேசித்துக் கொண்டும் ஆறுதல் வார்த்தைகளைக் கூறிக்கொண்டும் சென்றபோது பெய‌ருக்கு தலையாட்டிக் கொண்டு, வாடிய முகத்தோடு பதிலே பேசாமல் கண்களில் நீர்கட்ட எங்கேயோ பார்ப்பதுபோல் முகத்தைத் திருப்பிக் கொண்டு வந்தது ரொம்ப பாவம்போல இருந்தது. மகனுக்கு கவலை மட்டுமே! ஆனால் அவரை விட்டுச் செல்கிறோம் என்ற கவலை எங்களுக்கு அதிகமிருந்தாலும் இறையில்லத்தைக் காணவும், இறுதிக் கடமையை நிறைவேற்றவும் செல்கிறோம் என்ற அளவிலா ஆனந்தம் அந்த கவலையை அவ்வப்போது மறக்கடிக்கவே செய்தது.

    ஃபிரான்ஸின் சர்வதேச விமான நிலையம்.. எத்தனையோ முறை அங்கு சென்றிருந்தாலும் இந்த முறை அங்கு நுழையும்போது புதுவிதமான ஒரு உற்சாகம்! வழக்கமான ஃபார்மாலிட்டிகளை எல்லாம் முடித்துவிட்டு வந்திருந்த உறவினர்களிடம் விடைபெற்று, செல்ல மகனிடமும் விடைபெற்றுக் கொள்ளும்போது...

    மகன்: ம்மா...! உங்களோடு வர்றவங்க யாராவது இப்போ வராம அன்னுய்லே (கேன்சல்) ஆகியிருந்தாங்கன்னா... அந்த இடத்துல என்னை கூப்பிட்டுச் செல்ல அவங்ககிட்ட‌ கேட்டுப் பார்க்க முடியுமா?
(கடைசி நேரத்திலேயாவது தன்னையும் அழைத்துச் சென்று விடமாட்டார்களா என்று அந்த பிஞ்சு மனதின் ஆவல்!)

    நான்: இப்பலாம் அது முடியாதே கண்ணு...! எல்லோரும் வந்திருக்காங்களே... யாரும் அன்னுய்லே ஆகலபா...

    மகன்: த்ருவா செமேன் (3 வாரம்) கழிச்சு நீ வருவேன்னு சொன்னா 1 முவா (1 மாதம்) மாதிரி ரொம்ப நாளாகிடுமே..ம்மா! (மீண்டும் கண்ணீர் துளிர்க்க.. கூடவே எனக்கும் :( )

    தங்கை: நான் இருக்கேன்ல‌ கண்ணு... நானும் உனக்கொரு உம்மாதானே..? த்ருவா செமேன் சீக்கிரமா ஓடிடும்... இன்ஷா அல்லாஹ். உம்மாவையும் வாப்பாவையும் ஹஜ் நேரத்துல‌ நாம லைவ்ல பார்க்கலாம்..! இப்போ அழக்கூடாது ராஜா.. ம்..?

    கணவர்: உனக்கு டெய்லி நாங்க‌ ஃபோன் போடுவோம் ராஜா. அதோடு சித்தி வீட்ல நீ ஜாலியா விளையாடலாம். அப்புறமா ரிஸ்வானா லாத்தா வந்து உன்ன எல்லா இடத்துக்கும் அழைச்சிட்டு போகும். அங்க போயும் விளையாடலாம். ஓகே..?

    மகன்: (கொஞ்ச நேர மௌனத்துக்கு பிறகு) மக்காவுல‌ ஸ்கைப் இருக்குமா..ம்மா? உன்னையும் வாப்பாவையும் வெப்கேம்லயாச்சும் நான் பார்க்கணும்!

    நான்: ஹஜ் செய்யும்போது அங்கே அதெல்லாம் முடியாதுடா செல்லம்..! நாங்க ஃபோன் போடும்போது என்ன வேணும்னாலும் கேளு... திரும்பி வரும்போது எல்லாம் வாங்கி வர்றோம்.. சரியா?

    சமாதானம் ஆகாமலே 'ம்..!' மட்டும் பதிலாக வந்தது. நெஞ்சை முகர்ந்து முத்தமிட்டு.. திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே கையசைத்து நகர்ந்தாயிற்று. வெயிட்டிங் ஹாலில் அமர்ந்திருந்த ஒரு மணி நேரமும் மகனின் கவலையும், செல்லக்கூடிய புனித இடம்/காரியத்தை எண்ணி சந்தோஷமுமாக மாறி மாறி வந்துக்கொண்டிருக்க‌.. 'அல்லாஹ்வுக்காக பிள்ளையைப் பிரிந்து வந்துள்ளோம், அவனே போதுமானவன்!' என (இறைவனிடம் பொறுப்பு சாட்டி) நான் கூற, 'இப்ராஹீம் நபி(அலை) அவர்கள் இறைக்கட்டளையை ஏற்று தன் பாலகனையும் மனைவியையும் யாருமில்லா பாலைவனத்தில் விட்டு வந்தார்களே... அதை ஒருகணம் நினைத்தால், நம் பிள்ளையை நாம் விட்டு வந்தது அதைவிட பல்லாயிரம் மடங்கு குறைவான தியாகமே! அதை நினைத்துதான் நான் சமாதானம் செய்துக் கொள்கிறேன்' என்று என் கணவர் கூறியதும், மிச்சமிருந்த கவலையும் வெகுவாக குறைந்து போனது!

டைரக்ட் ஃப்ளைட் என்பதால் விமானத்தில் ஏறும் முன்பே ஹஜ்ஜுக்கான பிரத்யேக (யூனிஃபார்ம்) ஆடையான 'இஹ்ராம்' ஆடையை ஆண்கள் இங்கிருந்தே அணிந்துக்கொண்டு தயாராகி வந்த‌தைப் பார்த்த‌தும், உலக ஆசைகள் நம் நெஞ்சைவிட்டு விடைபெற ஆரம்பிக்கும் உணர்வு! போர்டிங் அழைப்பு வந்ததும் சுறுசுறுப்பு கூடியவர்களாய் புறப்பட்டு விமானத்துக்குள் காலடி எடுத்து வைக்கும்போது, வழக்கம்போல் இறைவனின் பெயர் சொல்லி வைத்தாலும் இது ஹஜ்ஜுக்கான பயணம் என்ற எண்ணத்தினால் இந்த முறை நம்மையும் அறியாமல் இறை நாமத்தோடு, இறைப் புகழையும் சேர்த்து மொழிந்துக்கொண்டே இருந்தது நாவு! (நம்மை மீறிய இந்த பூரிப்பு அத்தனை ஹாஜிகளுக்கும் நிச்சயம் ஏற்பட்டிருக்கலாம்.) பிறகு பிரயாண துஆவினை ஓதிக் கொண்டு புறப்பட்டு, எப்போது மீகாத் (எல்லை) வரும் என்று மணிக்கொரு முறை கணக்கிட்டுக் கொண்டே வந்து... அந்த நேரமும் நெருங்கிவிட்டது.

24 comments:

  1. சலாம் சகோ!

    ஆரம்பமே மிக நெகிழ்ச்சியாக மகனின் பிரிவோடு ஆரம்பிக்கிறது. சிறந்த முயற்சி. அடுத்த பதிவையும் நேரம் கிடைக்கும் போது பகிருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சலாம் சகோ.

      முதலில் வந்து பின்னூட்டமிட்ட தங்களின் ஆதரவுக்கு ஜஸாகல்லாஹ் ஹைரா :) அடுத்த பதிவை இன்ஷா அல்லாஹ் விரைவில் பதிகிறேன்.

      Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா.ஹஜ் அனுபவத்தை ஒரு வழியாக எழுத ஆரம்பித்து விட்டீர்கள்.அனுபவத்தை அறிய வெகு ஆவலுடன் இருக்கின்றேன்.//// ஊர் திரும்பி ஒரு மாதம் ஆகியும் (நம் மீது கடமையாக்கப்பட்ட ஒரு வணக்கத்தை சொல்லிக்காட்டி பெருமைத் தேடியதாக ஆகிவிடுமோ என்ற அச்சத்தில்) இதை எழுதலாமா.. வேண்டாமா.. என எழுதத் தயங்கி, தோழிகளின் வற்புறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு பிறகுதான் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடிந்தது//இது என்ன அஸ்மா?நம் அனுபவத்தை எழுதுவது தற்பெருமை அடித்துக்கொள்வதாகிவிடமுடியுமா?நீங்கள் சொல்வதை போல் இதுவரை ஹஜ் செல்லாத முஸ்லிம்கள் இதை யெல்லாம் பார்க்கும் பொழுது அவர்களிடத்தில் ஹஜ் செல்லும் ஆசை இன்னும் மிகுதியாக ஏற்படும்.முஸ்லிம் இல்லாத சகோக்கள் அன்பவத்தை படிக்க எத்தனை ஆர்வத்துடன் இருக்கின்றார்கள் என்பதற்கு என் ஹஜ் பதிவுகளே சாட்சி.தொடருங்கள் அஸ்மா படிக்க காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. வ‌அலைக்குமுஸ்ஸலாம் ஸாதிகா லாத்தா.

      //ஹஜ் அனுபவத்தை ஒரு வழியாக எழுத ஆரம்பித்து விட்டீர்கள்//

      நீங்களும் திரும்பி வந்து இன்னும் எழுதலயான்னு கேட்ட பிறகு கூடுதல் தெம்பு கிடைத்துவிட்டது :‍-) :-) எல்லாம் நன்மையை நாடியே..!

      //அனுபவத்தை அறிய வெகு ஆவலுடன் இருக்கின்றேன்//

      உங்களுக்குதான் முன்பே ஓரளவுக்கு தெரிந்திருக்குமே என் அனுபவங்கள்? ;)

      //இது என்ன அஸ்மா?நம் அனுபவத்தை எழுதுவது தற்பெருமை அடித்துக்கொள்வதாகிவிடமுடியுமா?நீங்கள் சொல்வதை போல் இதுவரை ஹஜ் செல்லாத முஸ்லிம்கள் இதை யெல்லாம் பார்க்கும் பொழுது அவர்களிடத்தில் ஹஜ் செல்லும் ஆசை இன்னும் மிகுதியாக ஏற்படும்//

      நிச்சயமா அப்படிப்பட்ட பலன்களும் உண்டு என தெரிந்தாலும் பலவித யோசனைகளுக்கு பிறகும், நட்பு வட்டங்களின் ஆலோசனைகளுக்கு பிறகுமே எழுதலாமென முடிவு வந்தது. அத்துடன் அந்த இறை சாட்சியோடு தொடங்கியதும்தான் மனதுக்கு நிம்மதியாக இருந்தது :)

      //முஸ்லிம் இல்லாத சகோக்கள் அன்பவத்தை படிக்க எத்தனை ஆர்வத்துடன் இருக்கின்றார்கள் என்பதற்கு என் ஹஜ் பதிவுகளே சாட்சி.தொடருங்கள் அஸ்மா படிக்க காத்திருக்கிறோம்//

      ஜஸாகல்லாஹ் ஹைரா! நானும் வந்து உங்க பதிவைப் பார்க்கணும் இன்ஷா அல்லாஹ் :)

      Delete
  3. சலாம் அஸ்மா

    படிக்க படிக்க உடலெல்லாம் சிலிர்த்தது... கடைசி நேரத்திலும் மகன் சொன்ன வார்த்தைகள்,இபுராஹிம் (அலை) யின் நிலை வைத்து உங்கள் சமாதானம் என ஒரு பக்கம் கண்ணீரை வரவழைத்தது.

    அல்ஹம்துலில்லாஹ். அருமையான கட்டுரை அஸ்மா..தொடருங்க!!

    ReplyDelete
    Replies
    1. சலாம் ஆமினா!

      //படிக்க படிக்க உடலெல்லாம் சிலிர்த்தது...//

      அந்த சிலிர்ப்போடவே ஹஜ் செய்ய‌ நிய்யத் வச்சுடுங்க ஆமி :) இன்ஷா அல்லாஹ்.

      //கடைசி நேரத்திலும் மகன் சொன்ன வார்த்தைகள்,இபுராஹிம் (அலை) யின் நிலை வைத்து உங்கள் சமாதானம் என ஒரு பக்கம் கண்ணீரை வரவழைத்தது//

      நபிமார்களின் வாழ்வு ஒவ்வொன்றும் நமக்கு படிப்பினையே! வருகைக்கும் கருத்துக்கும் ஜஸாகல்லாஹ் ஹைரா.

      Delete
  4. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ.!

    மாஷா அல்லாஹ்!பதிவும், மகனுடனான உரையாடலும் நெகிழ்வாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. வ‌அலைக்குமுஸ்ஸலாம் சகோ.

      //மாஷா அல்லாஹ்!பதிவும், மகனுடனான உரையாடலும் நெகிழ்வாக இருந்தது//

      :) :) வருகைக்கும் கருத்துக்கும் ஜஸாகல்லாஹ் ஹைரா.

      Delete
  5. அன்பின் அக்கா.
    தாய் மகன் தற்காலிக பிரிவை அனுஅனுவாய் உணர்பவள்நான். ஏக்கம் வலி எப்படியிருக்கும் என்பதையும் உணர்ந்துவருகிறேன். தங்களின் வரிகளை படிக்கும்போதே கண்ணீர் வந்தது

    தங்களின் ஹஜ் பயண அனுபவம் ஆரம்பத்திலேயே நெகிழ்ச்சியை தருகிறது தொடர்ந்து படிக்கவும் ஆவலாய் உள்ளேன்.

    உடல் நிலை இப்போது எப்படியுள்ளது கவனமாக பார்த்துக்கொள்ளவும்..

    ReplyDelete
    Replies
    1. //தாய் மகன் தற்காலிக பிரிவை அனுஅனுவாய் உணர்பவள்நான். ஏக்கம் வலி எப்படியிருக்கும் என்பதையும் உணர்ந்துவருகிறேன். தங்களின் வரிகளை படிக்கும்போதே கண்ணீர் வந்தது//

      தாய் மனம் அப்படிதானே மலிக்கா? :( ஆனா 'அல்லாஹ்வுக்காக' என நினைக்கும்போது அதையும் தாங்கும் மனம் தன்னாலே வந்துவிடுகிறது! மஃரூஃப் இப்பவும் ஹாஸ்டலில்தானா?

      //தங்களின் ஹஜ் பயண அனுபவம் ஆரம்பத்திலேயே நெகிழ்ச்சியை தருகிறது தொடர்ந்து படிக்கவும் ஆவலாய் உள்ளேன்

      உடல் நிலை இப்போது எப்படியுள்ளது கவனமாக பார்த்துக்கொள்ளவும்..//

      அல்ஹம்துலில்லாஹ், இப்போ நலமே! இன்ஷா அல்லாஹ் வந்து தொடர்ந்து படி மலிக்கா. வருகைக்கும் கருத்துக்கும் ஜஸாகல்லாஹ் ஹைரா :)

      Delete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    மாஷா அல்லாஹ் சகோ..பதிவு நெகிழ்சியோடு, ஆரம்பித்து மெய் சிலிர்க்கும் விதமா தொடருது...

    இன்ஷா அல்லாஹ்..அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்கிறோம் சகோ...:)

    ReplyDelete
    Replies
    1. வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

      //மாஷா அல்லாஹ் சகோ..பதிவு நெகிழ்சியோடு, ஆரம்பித்து மெய் சிலிர்க்கும் விதமா தொடருது...//

      :) :)

      //இன்ஷா அல்லாஹ்..அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்கிறோம்//

      கண்டிப்பா வந்து படிங்க சபிதா. வருகைக்கும் கருத்துக்கும் ஜஸாகல்லாஹ் ஹைரா :)

      Delete
  7. அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

    என் அன்புத் தோழியே! உன்னுடைய புனிதப் பயணத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தின் ஆரம்பத்தைப் படிக்கும்போதே மெய் சிலிர்த்துவிட்டது. உனக்கும், உனது அருமை மகனுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் என் கண்களைக் குளமாக்கிவிட்டன. என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே பதிவு முழுவதையும் படித்து முடித்தேன்.

    மழலை மாறாத அந்தப் பாலகனின் வார்த்தைகள் நெகிழ்ச்சியூட்டக்கூடியதாய் அமைந்திருந்தன.
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

    எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் இருவ‌ரது ஹஜ்ஜையும் ஏற்றுக்கொள்வானாக. அதற்குப் பிரதிபலனாக சுவனத்தின் சுகபோகங்களைத் தந்தருள்வானாக.

    உன் அன்புத் தோழி,
    F.ஜவாஹிரா.

    ReplyDelete
    Replies
    1. வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு!

      //என் அன்புத் தோழியே! உன்னுடைய புனிதப் பயணத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தின் ஆரம்பத்தைப் படிக்கும்போதே மெய் சிலிர்த்துவிட்டது//

      உன் அளவுக்கெல்லாம் எனக்கு சொல்ல/எழுத வராதுபா. நடந்ததை அப்படியே சொல்லியிருக்கேன், அவ்வளவுதான் :)

      //உனக்கும், உனது அருமை மகனுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் என் கண்களைக் குளமாக்கிவிட்டன. என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே பதிவு முழுவதையும் படித்து முடித்தேன்//

      'தாய்' என்ற நிலையில் நாம எல்லோருமே அப்படிதானா? ;)

      //மழலை மாறாத அந்தப் பாலகனின் வார்த்தைகள் நெகிழ்ச்சியூட்டக்கூடியதாய் அமைந்திருந்தன//

      :) :)

      //அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்//

      இன்ஷா அல்லாஹ் நாளை மறுநாள் 2 வது பகுதியையும் பதிவிடுகிறேன். உன் முதல் வருகைக்கும் துஆவுக்கும் நன்றி ஜவா! ஜஸாகில்லாஹ் ஹைரா :)

      Delete
  8. சின்னச் சின்ன விஷயங்களைக்கூட தவறவிடாது, விளக்கமாகச் சொல்லும் உங்கள் பாணியில் புனிதப் பயணத்தின் சிறப்புகளை மேலும் அறியக் காத்திருக்கிறேன்.

    நானும் போன வருடம் போனபோது சின்னவனுக்கு 8 வயதுதான். ரொம்ப யோசனையாக இருந்தது. ஆனால், அங்கே சந்தித்த சிலர் 9 மாதக் குழந்தை முதற்கொண்டு விட்டுவிட்டு வந்ததைக் கேட்டு, ஆச்சரியமாகிவிட்டது. இன்னும் நிறைய பாக்கிஸ்தானி, அரபி பெண்கள் சின்னச் சின்னக் குழந்தைகளைக் கையோடே கூட்டிவந்து, அவர்களையும் கவனித்துக் கொண்டு, ஹஜ்ஜையும் நிறைவேற்றியதைப் பார்த்தபோது, மாஷா அல்லாஹ், அவர்கள் எங்கே, நான் எங்கே என்றுதான் தோன்றியது.

    ReplyDelete
    Replies
    1. //சின்னச் சின்ன விஷயங்களைக்கூட தவறவிடாது, விளக்கமாகச் சொல்லும் உங்கள் பாணியில்...//

      உங்க எழுத்துக்கு பல சமயங்களில் நான் ரசிகையாக இருந்திருக்கேன். நீங்களே என் பதிவினை விரும்பி படிப்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது தோழி :)

      //நானும் போன வருடம் போனபோது சின்னவனுக்கு 8 வயதுதான். ரொம்ப யோசனையாக இருந்தது//

      அப்படியா.. அவர் உங்க பிரிவை ஃபீல் பண்ணலயா?!

      //நிறைய பாக்கிஸ்தானி, அரபி பெண்கள் சின்னச் சின்னக் குழந்தைகளைக் கையோடே கூட்டிவந்து, அவர்களையும் கவனித்துக் கொண்டு, ஹஜ்ஜையும் நிறைவேற்றியதைப் பார்த்தபோது, மாஷா அல்லாஹ், அவர்கள் எங்கே, நான் எங்கே என்றுதான் தோன்றியது//

      உண்மைதான் ஹுஸைனம்மா. ஆனா அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றினாலும் கூடுதலான உபரி வணக்கங்களை செய்ய முடிவதில்லை என்பது வருத்தத்திற்குரியது. அதோடு அங்குள்ள உஷ்ணத்தை தாங்க இயலாத குழந்தைகள் மௌத்தாகியும் விடுகிறார்கள் :( இந்த முறை (நம்ம‌ பின்னூட்டவாதி) முஹம்மத் ஆஷிக்கின் தங்கை தங்கியிருந்த மினா டெண்ட்டில்கூட ஒரு குழந்தை மௌத்தாகிவிட்டதாக ரொம்ப வருத்தப்பட்டு சொன்னாங்க அவங்க.

      என்னைக் கேட்டால் கடமையான வயது வந்த பிறகே (சுமார் 15 வயதில்) குழந்தைகளை ஹஜ்ஜுக்கு அழைத்து வரலாம் என்பேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹுஸைனம்மா, ஜஸாகல்லாஹ் ஹைரா :)

      Delete
  9. அக்கா.... நீங்க புறப்படும்போது உங்க மகனுடைய நிலையை உணரும்போது அழுகையை அடக்கவே முடியவில்லை. நெகிழ்ச்சியான ஆரம்பம் மகிழ்ச்சியுடன் முடியும், இன்ஷா அல்லாஹ். நீங்க சொன்னதுபோல் உலகில் எத்தனையோ பேர் படும் கஷ்டங்களையெல்லாம் நினைத்துப் பார்த்தால் அல்லாஹ் நம்மையெல்லாம் எளியவிதத்தில் தான் சோதிக்கிறான்.அல்ஹம்துலில்லாஹ். அடுத்த பகிர்வுக்காகக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. //அக்கா.... நீங்க புறப்படும்போது உங்க மகனுடைய நிலையை உணரும்போது அழுகையை அடக்கவே முடியவில்லை//

      மகன் என்னோடவே ஒட்டிக்கிட்டேதான் இருப்பார் பானு, அதான் அப்படி :) பொறுமையான பிள்ளையாக இருந்தும் அந்த நேரத்தில் அவரால் தாங்கமுடியவில்லை.

      //நெகிழ்ச்சியான ஆரம்பம் மகிழ்ச்சியுடன் முடியும், இன்ஷா அல்லாஹ்//

      சரியா சொல்லியிருக்கீங்க :)

      //அடுத்த பகிர்வுக்காகக் காத்திருக்கிறோம்//

      இதோ அடுத்த பதிவு :) நேரமிருக்கும்போது பாருங்க.

      http://payanikkumpaathai.blogspot.com/2012/12/2.html

      வருகைக்கும் கருத்துக்கும் ஜஸாகல்லாஹ் ஹைரா :)

      Delete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா
    எத்தனை முறை படித்தாலும் சலிக்காது..இப்பவே அனுப்பி வச்சுடுவீங்க போல ஆசை வந்துடுது.இம்மாதிரி உணர்வுகளை வார்த்தைகளாக வடிக்கவும் தெரிய வேண்டும் மாஷா அல்லாஹ் அது உங்களுக்கு நல்லாவே வருது.
    நீங்கள் எழுதும் முறையிலேயே எங்களுக்கும் சந்தோஷமும் பரவசமும் எல்லாமாக சேர்ந்து கண்கள் குளமாகிப் போகிறது..அருமை..வாழ்த்துக்கள்..மீதி பாகத்துககக வெயிடிங்

    ReplyDelete
    Replies
    1. வ‌அலைக்குமுஸ்ஸலாம் ருபீனா.

      //எத்தனை முறை படித்தாலும் சலிக்காது..இப்பவே அனுப்பி வச்சுடுவீங்க போல ஆசை வந்துடுது//

      அல்ஹம்துலில்லாஹ்! கூடிய சீக்கிரம் நீங்களும் புறப்பட நிய்யத் வச்சுடுங்க ருபீ :) அல்லாஹ் நிறைவேற்றித் தருவான், இன்ஷா அல்லாஹ்.

      //நீங்கள் எழுதும் முறையிலேயே எங்களுக்கும் சந்தோஷமும் பரவசமும் எல்லாமாக சேர்ந்து கண்கள் குளமாகிப் போகிறது..//

      :-) மாஷா அல்லாஹ்! தொடர்ந்து எழுத துஆ செய்யுங்க. இரண்டாவது பாகம் இன்னும் நீங்க படிக்கலயா? இதோ இருக்கு பாருங்க:

      நீங்கா நினைவுகள்! (ஹ‌ஜ் ‍- 2)

      ஜஸாகல்லாஹ் ஹைரா :)

      Delete
  11. அருமையான தொடக்கம்.அலஹம்துலில்லாஹ்! உங்கள் உணர்வுப் பூர்வமான அனுபவங்களைத் தொடர்ந்து வாசிக்க ஆவல்.நெகிழ்ச்சியான எழுத்து நடை.

    ReplyDelete
    Replies
    1. //அருமையான தொடக்கம்.அலஹம்துலில்லாஹ்! உங்கள் உணர்வுப் பூர்வமான அனுபவங்களைத் தொடர்ந்து வாசிக்க ஆவல்//

      அல்ஹம்துலில்லாஹ், உங்கள் ஆவலும் நீண்ட நாட்களுக்கு பிறகான வருகையும் ரொம்ப சந்தோஷம் ஆசியாக்கா :) ஜஸாகல்லாஹ் ஹைரா!

      Delete
  12. Assalamu alaikkum sister

    படிக்க படிக்க உடலெல்லாம் சிலிர்த்தது

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்குமுஸ்ஸலாம் சகோ. வருகைக்கு ஜஸாகல்லாஹ் ஹைரா!

      Delete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை