அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Sunday 25 June 2017

பெருநாள் தொழுகைக்கு முன் பாலும் பேரீத்தம் பழமும் சாப்பிடுவது நபிவழியா?

கேள்வி: பெருநாள் தொழுகைக்கு செல்லும் முன் பாலும் பேரீத்தம் பழமும் சாப்பிட்டுவிட்டு செல்வது நபிவழி என்கிறார்களே, இது சரியா?

பதில்: பாலும் பேரீத்தம் பழமும் சாப்பிட்டுவிட்டு பெருநாள் தொழுகைக்கு செல்லவேண்டும் என்பது நபிவழியா என்ற உங்கள் கேள்வியில், இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும்.

முதல் விஷயம், பெருநாள் தொழுகைக்கு முன் என்று பொதுவாக குறிப்பிட்டு கேட்டுள்ளீர்கள். நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு செல்லும் முன் சாப்பிட்டுவிட்டு செல்வார்கள் என்பது நோன்புப் பெருநாளில்தான். இதை பல ஹதீஸ்களிலும் நாம் காண முடிகிறது. ஆனால் ஹஜ் பெருநாள் அன்று நபி(ஸல்) அவர்கள் தொழுதுவிட்டுதான் சாப்பிடுவார்கள். ஆனாலும், ஹஜ் பெருநாள் தொழுகை தொழ செல்லும் முன் சாப்பிடுவதை அங்கீகரித்தும் இருக்கிறார்கள். (அதை பின்னர் காண்போம்.)

நோன்புப் பெருநாள் தினத்தில் நபி(ஸல்) அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: இப்னு ஹுஸைமா (1426)

நோன்புப் பெருநாள் அன்று நபி(ஸல்) அவர்கள் காலை உணவாக பேரீத்தம் பழங்களை ஒற்றைப்படையாக உண்பார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுதுவிட்டு வந்த பின்னரே குர்பானி இறைச்சியிலிருந்து உண்பார்கள்.

அறிவிப்பவர்: அனஸ்(ரலி)
நூல்: புஹாரி (953)




இரண்டாவது விஷயம், பேரீத்தம் பழம் சாப்பிடுவார்கள் என்றுதான் அறிவிப்புகளில் வருகிறதே தவிர பாலும் பேரீத்தம் பழமும் சாப்பிட்டார்கள் என்று எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை. அவை இரண்டையும் அவர்கள் சாப்பிட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும், அவற்றை மட்டுமே நாமும் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயமுமில்லை. பேரீத்தம் பழம் அவர்களின் பிரதான உணவுகளில் ஒன்றாகவும், தொழச்செல்ல முன் சாப்பிடுவதற்கு எளிமையாகவும் இருந்ததால் அதை சாப்பிட்டிருக்கலாம். ஆக, நோன்புப் பெருநாளில் பாலும் பேரீத்தம் பழமும் சாப்பிட்டுவிட்டு செல்வதுதான் நபிவழி என்பது சரியானதல்ல. மாதம் முழுதும் நோன்பு வைத்துவிட்டு அன்றைய தினம் வெறும் வயிற்றோடு தொழ செல்லாமல், ஏதாவது எளிமையான உணவை சாப்பிட்டுவிட்டு தொழ செல்லலாம் என்பதே நபி(ஸல்) அவர்களின் அந்த வழிமுறையிலிருந்து நாம் புரிகிறோம்.

அப்படி சாப்பிடும்போது ஒற்றைப்படை எண்ணிக்கையில் சாப்பிடுதலும் சுன்னத்தானது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். (மேலே கொடுக்கப்பட்டுள்ள புஹாரி (953) ஹதீஸைப் பார்க்கவும்.)

ஹஜ் பெருநாள் தினத்தைப் பொறுத்தவரை, நபி(ஸல்) அவர்கள் அன்றைய தினம் தொழுதுவிட்டு வந்துதான் சாப்பிட்டார்கள் என்ற அடிப்படையில் நாமும் தொழுதுவிட்டு சாப்பிடுவது நபிவழி என்றாலும், சாப்பிட்டுவிட்டு தொழச் செல்வதும் தவறில்லை. ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்பு குர்பானிப் பிராணியை அறுத்துவிட்ட ஒரு நபித் தோழரைக் கண்டிக்கிறார்கள். ஆனால் அவர் சாப்பிட்டுவிட்டு தொழ வந்ததைக் கண்டிக்கவில்லை. அதாவது அவர் தொழ முன் அவ்வாறு சாப்பிட்டதை அங்கீகரித்துள்ளார்கள். அதனடிப்படையில் ஹஜ் பெருநாளன்று ஒருவர் சாப்பிட்டு தொழ சென்றாலும் தவறில்லை.

நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'யார் நமது தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பதுபோல் கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர்' என்று குறிப்பிட்டார்கள்.

அப்போது அபூபுர்தா இப்னு நியார்(ரலி), 'அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்துவிட்டேன். என் வீட்டில் அறுக்கப்படும் ஆடுகளில் எனது ஆடே முதன் முதலில் அறுக்கப்படுவதாக அமையவேண்டும் என்றும் விரும்பி (அறுத்து)விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாகவும் உட்கொண்டுவிட்டேன் என்றார். அப்போது நபி(ஸல்) 'அவர்கள் உம்முடைய ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்' என்று கூறினார்கள்.

அப்போது அவர் 'அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக் குட்டி உள்ளது. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமாக ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா?' என்று கேட்டார். 'ஆம்! இனி மேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது' என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.


அறிவிப்பவர்: பராஃ (ரலி)
நூல்: புஹாரி (955)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை