அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Tuesday, 29 August 2017

ஹஜ்ஜுக்கு சென்றிருக்கும்போது கணவன் மரணித்துவிட்டால்...

கேள்வி: ஹஜ்ஜுக்கு சென்றிருக்கும் பெண்மணியின் கணவன் மரணித்துவிட்டால் இத்தாவை எப்படி கடைபிடிக்க வேண்டும்? ஹஜ் கிரியைகளை அந்த பெண்மணி எவ்வாறு நிறைவேற்றுவது?


பதில்:

"இத்தா" என்ற பெயரில் மார்க்கத்திற்கு மாற்றமான நடைமுறைகளும் மூடநம்பிக்கைகளும் மக்களிடம் வேரூன்றிப் போயிருப்பதால்தான் இப்படியான சந்தேகங்களும் வருகின்றன. கணவனை இழந்த பெண்கள் தங்கள் மறுமணத்தைத் தள்ளிப்போட்டு (காத்திருக்கும்) குறிப்பிட்ட காலகட்டம்தான் "இத்தா" என்பதாகும். அதனால் ஒரு பெண்மணி ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்றிருக்கும்போது கணவன் மௌத்தாகிவிட்டால் தன் ஹஜ் கிரியைகளைத் தொடர மார்க்கத்தில் எந்த தடையுமில்லை.

அதேபோல, எல்லாப் பெண்களுக்கும் எவையெல்லாம் இத்தாவின் சட்டங்களாக சொல்லப்படுள்ளதோ அந்த சட்டங்கள்தான் ஹஜ்ஜில் உள்ள பெண்மணிக்கும் பொருந்தும். அதாவது, இத்தாவுக்காக வரையறுக்கப்பட்ட அந்த நான்கு மாதங்கள் பத்து நாட்களுக்குள் சில விஷயங்களை மட்டும் இஸ்லாம் தடை செய்கிறது.

- மறுமணம் செய்வது
- திருமண ஒப்பந்தம் செய்வது
- மை, சுருமா இட்டுக்கொள்வது
- நறுமணம் பூசுவது
- தலைக்குச் சாயம் பூசுவது
- மருதாணி போட்டுக் கொள்வது
- நெய்த பிறகு சாயமிடப்பட்ட ஆடைகளை அணிவது
- அலங்காரம் செய்வது
- ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது

இவைதான் இத்தாவின்போது தடைசெய்யப்பட்டவையாகும்.

இவற்றிற்கான ஆதாரங்கள்:

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 2:234)

கர்ப்பிணிகளின் காலக்கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். (அல்குர்ஆன் 65:4)

(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றமில்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2:235)

"இறந்தவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு தடுக்கப்பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின்னர் அவனுடைய மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இந்த நாட்களில் நாங்கள் சுருமா இடவோ, மணப் பொருட்களைப் பூசவோ, சாயமிடப்பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும்போது மணப் பொருளைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வதைவிட்டும் தடுக்கப்பட்டுள்ளோம்."

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி)
நூல்: புஹாரி (313)


கணவனை இழந்த பெண், மஞ்சள் அல்லது சிவப்புச் சாயம் பூசப்பட்ட ஆடைகள், நகை ஆகியவற்றை அணியக் கூடாது; தலைக்குச் சாயம் பூசக் கூடாது; சுர்மா இடக் கூடாது என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி)
நூல்: அபூதாவூத் (1960)


மறுமணத்தைத் தள்ளிப் போடும் இந்தக் காலகட்டத்தில் நகை அணியலாகாது. மருதாணி போன்ற சாயங்கள் பூசக் கூடாது என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி)
நூல்: அபூதாவூத் (1960), அஹ்மத் (25369)


மற்றபடி இத்தா இருப்பதற்கென்று விசேஷமான முறைகளோ, நூதனமான கட்டுப்பாடுகளோ எதுவும் இஸ்லாத்தில் கிடையாது. இந்த தடைகள் தவிர மற்ற விஷயங்களில் எல்லா பெண்களும் எப்போதும் கடைபிடிக்க வேண்டிய, மார்க்கம் அனுமதித்த வகையிலான பொதுவாக வரையறைகளோடு அன்றாட வாழ்க்கையில் இருப்பதுபோல் சாதாரணமாக இருந்துக் கொள்ளலாம். அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்ற சென்றிருந்த பெண்களாக இருந்தாலும் சரியே!

ஆக, ஹஜ் செல்ல சென்றிருக்கும்போது கணவனை இழந்த பெண்கள் மேற்சொன்ன இந்த தடைகளை மட்டும் கவனத்தில் கொண்டாலே போதுமானதாகும். அவற்றைத் தவிர ஹஜ் கிரியைகள் அனைத்தையும் எல்லா ஹாஜிகளையும்போல் அந்த பெண்களும் நிறைவேற்ற வேண்டும்.

பொதுவாக இத்தாவின் காலத்தில் உழைத்து சம்பாதிக்கும் அவசியத் தேவை ஏற்பட்டால், மார்க்கத்தின் வரையறைகளை பேணிய நிலையில் சென்று வருவதற்கான அனுமதியையும் கூட இஸ்லாம் அந்த பெண்களுக்கு வழங்குகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் கூறினார்கள்:

என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் (இத்தாவில் இருந்தபோது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)தபோது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், "ஆம்; நீ (சென்று) உமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள்! ஏனெனில் (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்" என்றார்கள்.

நூல்: முஸ்லிம் (2972)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!