அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday 2 September 2017

குர்பானி தோலை யாருக்கு கொடுக்கவேண்டும்?

கேள்வி: குர்பானி தோலை யாருக்கு கொடுக்கவேண்டும்?

பதில்: இஸ்லாத்தின் பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாகக் கொண்டவையாக அமைந்துள்ளன. அதாவது நோன்புப் பெருநாள் தினத்தில் "ஸதகத்துல் ஃபித்ரு" என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பதுபோல், ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் "உள்ஹியா" என்று சொல்லப்படும் "குர்பானி" கொடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளது.

குர்பானியின் முழுமையான சட்டதிட்டங்களை இங்கே க்ளிக் செய்து படிக்கவும்.

குர்பானி சம்பந்தமாக சமூக வலைதளங்களில் நம்மிடம் கேட்கப்படும் மற்ற சில சந்தேகங்களுக்கான தெளிவுகளை கேள்வி பதில்கள் பகுதியில் கொடுத்து வருகிறோம். அதன் வரிசையில் குர்பானி தோலை யாருக்கு கொடுக்கவேண்டும்? என்ற கேள்விக்கான பதிலை இங்கே காண்போம்.


குர்பானி கொடுக்கப்படும் பிராணியின் தோலை மத்ரஸாக்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளுக்கோ, தொண்டு நிறுவனங்களுக்கோ ஜமாஅத் நிர்வாகிகளிடமோ மக்கள் கொடுத்து வருகின்றனர். இவற்றில் எவையெல்லாம் மார்க்க அடிப்படையில் அனுமதிக்கப்பட்டது என்பதை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நாம் முடிவு செய்யவேண்டும்.

ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி(ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாமிசத்தையும், தோலையும் அதன் மீது கிடந்த (கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும், உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம்.

அறிவிப்பவர்: அலீ(ரலி)
நூற்கள்: புஹாரி(1716), முஸ்லிம்(2320)


குர்பானிப் பிராணியின் எந்தவொரு பகுதியையும் அறுப்பவர்களுக்கோ உரிப்பவர்களுக்கோ கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக்கூடாது என்பதையும் அவற்றை ஏழைகளுக்கு தர்மமாக வழங்க வேண்டும் என்பதையும் இந்த ஹதீஸின் மூலம் நாம் புரிய முடியும்.

ஆனால் குர்பானி இறைச்சியை யார் யாருக்கு பங்கிடலாம் என்று புரிந்து வைத்திருக்கும் நம் மக்கள், குர்பானிப் பிராணியின் தோலை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறார்கள். நன்மையை விரும்பி குர்பானித் தோலை தர்மம் செய்வதே சிறந்தது என்றாலும், நம் சொந்த தேவைகளுக்காக பதனிட்டு அதை பொருளாக பயன்படுத்திக் கொள்வதும் தவறில்லை.

அப்துல்லாஹ் இப்னு வாகித் இப்னு அப்தில்லாஹ் இப்னு உமர்(ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்பதற்குத் தடை விதித்துள்ளார்கள்" என்று கூறினார்கள். இதை நான் அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அம்ரா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

அப்துல்லாஹ் இப்னு வாகித் சொன்னது உண்மையே. (ஏனெனில்) ஆயிஷா(ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது காலத்தில் ஈதுல் அள்ஹா (ஹஜ்) பெருநாள் சமயத்தில் கிராமப்புற ஏழை மக்களில் சிலர் (மதீனாவுக்கு) வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), "(குர்பானி இறைச்சிகளை) மூன்று நாட்களுக்கு மட்டுமே சேமித்துவையுங்கள். பிறகு எஞ்சியதை தர்மம் செய்யுங்கள்" என்று கூறினார்கள்.

அதன் பின் (அடுத்த ஆண்டு) ஆனபோது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்களது குர்பானிப் பிராணியி(ன் தோலி)லிருந்து தோல் பை தயாரித்துக் கொள்கின்றனர். அவற்றின் இறைச்சியிலிருந்து கொழுப்பை உருக்கி எடுத்துக்கொள்கின்றனர்" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், "அதனால் என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "குர்பானிப் பிராணியின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்ண வேண்டாம் எனத் தாங்கள் தடை செய்தீர்களே?" என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், "(நம்மை நாடி) வந்திருந்த (ஏழை) மக்களுக்காகவே (மூன்று நாட்களுக்கு மேலாகக் குர்பானி இறைச்சியை உண்ண வேண்டாமென) உங்களைத் தடுத்தேன். இனி, நீங்கள் குர்பானி இறைச்சியை உண்ணுங்கள். சேமித்துவையுங்கள். தான தர்மமும் செய்யுங்கள்" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அபீபக்ர் இப்னு முஹம்மத் இப்னு அம்ர் இப்னு ஹஸ்ம் (ரஹ்)
நூல்: முஸ்லிம் (3986)


இந்த ஹதீஸில் குர்பானி இறைச்சியைப் பற்றி சொல்லப்பட்டாலும் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், குர்பானிப் பிராணியின் தோலிலிருந்து சிலர் தோல் பை தயாரித்துக் கொள்வதைப் பற்றியும் நபி(ஸல்) அவர்களிடம் மக்கள் முறையிடுகிறார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அதை கண்டிக்கவில்லை. மாறாக "அதனால் என்ன?" என்று கேட்டு அதற்கு அங்கீகாரம் அளிக்கிறார்கள்.

எனவே, தனக்கு தேவை இருக்கும்போது குர்பானி தோல்களை பயன்படுத்திக் கொள்ளவும் மார்க்கம் அனுமதியளிக்கிறது. ஆனால் அவற்றை விற்று அதன் கிரயத்தை எடுத்துக் கொள்வது கூடாது. ஏனெனில் தோல்கள் ஏழைகளுக்குச் சேரவேண்டியது என்பதால் நபி(ஸல்) அவர்கள் அதை கூலியாக கொடுப்பதைக்கூட தடுத்து ஸதகா செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார்கள். சிலர், தோல் வீணாகி விடக்கூடாது என்பதற்காக உரித்த சில மணி நேரங்களுக்குள் விற்றுவிடுவார்கள். அப்படி விற்றுவிட்டால் அதனுடைய முழு கிரயத்தையும் கஷ்டத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு ஸதகா செய்துவிட வேண்டும்.

இவையல்லாமல் சில ஊர்களில் பள்ளிவாசல் கட்டிடப் பணிகளுக்காகவோ, முஅத்தின் மற்றும் இமாம்களுக்கு சம்பளமாக கொடுப்பதற்கோ மஸ்ஜித் நிர்வாகிகளிடம் தோல்கள் கொடுக்கப்படுவது முற்றிலும் தவறானதாகும். அதுபோல் மத்ரஸாக்களுக்கும் கல்வி அறக்கட்டளைகளுக்கும் சிலர் கொடுக்கின்றனர். அங்கு பயிலும் ஏழை மாணவர்களுக்கு மட்டுமே அதன் கிரயம் செலவழிக்கப்படும் என்று உறுதியாக தெரிந்தால் மட்டும் அப்படி கொடுப்பதில் தவறில்லை. ஆனால் ஏழை மக்களை சென்றடையாத வகையில் கட்டுமானப் பணிகள், மராமத்துப் பணிகள் போன்ற மற்ற செலவினங்களுக்கு அவை பயன்படுத்தப்படுமானால் அவர்களிடம் குர்பானி தோல்களை ஒப்படைக்கக் கூடாது.

மொத்தமாக குர்பானி தோல்களை வசூல் செய்து அதன் வருவாயில் ஏழை மக்களுக்கு வெளிப்படையாக விநியோகிக்கும் நம்பிக்கைக்குரிய சில சமூகநல இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அமைப்புகளிடம் ஒப்படைத்தால் நம்மூரில் உள்ள ஏழைகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.

அதுபோல் ஏழை மக்களுக்கு முறையாக சென்றடையக்கூடிய மருத்துவ உதவி, கல்வி உதவி மற்றும் அவர்களின் பல வாழ்வாதார திட்டப் பணிகளுக்காக கொடுக்கலாம். வறியவர்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக குர்பானி தோல்களின் வருவாயை பயன்படுத்தும் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கலாம். அநாதை நிலையங்கள், முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள் போன்றவற்றில் செய்யப்படும் நலத்திட்ட உதவிகளுக்காகவும் கொடுக்கலாம். குர்பானி தோல்களை உயிர் காக்கும் உயர் தர்மத்திற்கு வழங்குவதும் சிறந்ததாக அமையும்.

எனவே, குர்பானி கொடுக்கும்போது தர்மம் செய்பவற்றில் தோல்களையும் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டு சொல்லியிருப்பது அதன்மூலம் ஏழை எளியவர்களின் கஷ்டங்களைப் போக்கி அவர்களை மகிழ்ச்சியாக வாழ வைக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்தினால்தான் என்பதை நாம் விளங்கி, யாரிடம் கொடுத்தால் அந்த நன்நோக்கம் நிறைவேறும் என்பதை கவனித்து ஏழைகளின் வாழ்வாதார திட்டங்களுக்காக அவற்றை சரியான முறையில் சேர்ப்பித்து, அல்லாஹ்விடத்தில் அதன் முழு நன்மைகளையும் அடைவோமாக!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை