அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Sunday 10 June 2018

வெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..

வெளி நாடுகளில் வசிப்பவர்கள் அங்கே பிறைப் பார்த்த அடிப்படையில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு, ரமலான் முடிவதற்குள் தாயகம் திரும்பி வந்தால் நோன்பின் எண்ணிக்கை 31 ஆகிவிடுகிறது. இவர்கள் எவ்வாறு நோன்பு வைக்க வேண்டும்?

ஒருநாள் முன்னதாக பிறையைக் கண்டதால் ரமலான் நோன்பை ஆரம்பித்தவர்கள் ஒரு நோன்பு கூடுதலாக நோற்றுவிட்டு தாயகம் வரும்போது, அங்குள்ள நாள் கணக்கின்படி நோன்பை தொடர வேண்டும். அதாவது, தாயகத்துக்கு வந்துவிட்டால் ஏற்கனவே இருந்த பகுதியையோ, வெளி நாட்டையோ பின்பற்ற இயலாது.

ஏனெனில் குறிப்பிடப்பட்ட நேரம் மற்றும் நாட்களைக் கணக்கிட்டு நிறைவேற்றப்படும் அமல்களான தொழுகை, நோன்பு போன்ற காரியங்களை நாம் எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் நேரக் கணக்கின்படியும், பிறைக் கண்ட நாளின் அடிப்படையிலும்தான் நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டில் இருப்பவர் வேறொரு நாட்டின் நேரக் கணக்கைப் பின்பற்ற முடியாது. அதுபோன்று ஒரே நாட்டுக்குள் உள்ள தொலைதூர ஊர்களுக்கு மத்தியிலும் அதிக வித்தியாசமான நேரக் கணக்கு அமைந்திருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அப்படியானால், தங்கள் பகுதியில் முந்திய நாள் பிறைக் கண்டு ரமலானின் முதல் நோன்பை ஆரம்பித்தவர்கள், மறுநாள் ரமலானின் முதல் பிறையைக் கண்டு நோன்பை ஆரம்பித்த வேறொரு பகுதிக்கோ அல்லது நாட்டுக்கோ வந்து அங்கே தங்களின் நோன்பைத் தொடர்ந்த பிறகு, ரமலானின் இறுதியில் 30 நோன்பையும் அவர்கள் நிறைவேற்றிவிட்ட நிலையில் அந்தப் பகுதியில் பிறைக் காணாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?


ரமலான் முதல் பிறையிலிருந்தே தாயகத்தில் இருப்பவர்களுக்கு அன்றைய தினம் 29 நோன்புகள் மட்டுமே நிறைவேறிய நிலையில் பிறையைக் காணாவிட்டால் அவர்கள் ரமலானை 30 ஆக பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும். ஆனால் வேறொரு பகுதியில் முந்திய நாள் நோன்பை ஆரம்பித்துவிட்டு தாயகம் வந்தவர்களுக்கு அதே நாளில் 30 நோன்புகள் நிறைவேறியிருக்கும். அவர்கள் 31 - வது நாளும் நோன்பை தொடர முடியாது. ஏனெனில்,

"மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு அது மறைக்கப்பட்டால் (மேக மூட்டம் ஏற்பட்டால்) எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புஹாரி (1907)


இந்த நபிமொழியின்படி எந்த மாதத்துக்கும் 28 நாட்களோ அல்லது 31 நாட்களோ இருக்க முடியாது. மாதத்தின் குறைந்தபட்ச அளவு 29 நாட்கள்; அதிகபட்ச அளவு 30 நாட்கள் மட்டுமே. மாதத்தைப் பற்றி இஸ்லாம் கூறும் இந்த அடிப்படையை நாம் முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

இதனடிப்படையில் நோன்பின் எண்ணிக்கையும் 29 விடக் குறைவாகவோ 30 விட அதிகமாகவோ இருக்கக் கூடாது. ஆக, முந்திய நாள் நோன்பு வைத்து ரமளானை ஆரம்பித்த பிறகு தாயகம் வந்தவர்கள் 30 நோன்புகளை ஏற்கனவே நிறைவேற்றிய பிறகும் பிறையைக் காணாவிட்டால், மறுநாள் அந்த பகுதியில் பிறை காணும்வரை நோன்பை நோற்காமல் (சாதாரண நாட்களில் உள்ளதைப் போன்று) இருந்துக் கொள்ளவேண்டும்.

அப்படியானால், 30 நோன்புகளை அவர்கள் நிறைவேற்றிவிட்டதால் அன்றைய தினம் அவர்கள் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமா என்றால், நிறைவேற்றக் கூடாது. ஏனெனில் அந்த பகுதியில் அன்றைய தினம் பிறை தென்படாததால் அல்லது அதன் சுற்று வட்டாரங்களில் பிறை தென்பட்ட உறுதியான தகவலை அவர்கள் பெறாததால், ரமளானை 30 ஆக பூர்த்தி செய்யக்கூடிய அந்த பகுதி மக்களுக்கு எப்போது பெருநாளோ அப்போதுதான் அவருக்கும் பெருநாளாக இருக்க முடியும்.

நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள்தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள்தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ (697)


ஆக அன்றைய தினம் பெருநாள் என்று அந்த பகுதி மக்கள் முடிவு செய்ய வாய்ப்பின்றி 30 - வது நோன்பை அவர்கள் தொடரும்போது, ஏற்கனவே 30 நோன்புகளை நிறைவேற்றிய நிலையில் உள்ளவர்களும் பெருநாள் கொண்டாடக் கூடாது. மாதத்தின் அதிகபட்ச அளவு 30 நாட்கள் மட்டுமே என்பதால் அன்றைய தினம் நோன்பும் நோற்கக் கூடாது. மறுநாள் தாயக மக்கள் பெருநாள் கொண்டாடும்போதே அவர்களும் பெருநாள் கொண்டாட வேண்டும்.

➤ ரமளான் மாதம் ஆரம்பித்த பிறகு வெளிநாடுகளிலிருந்து புறப்பட்டு பிரயாணத்தில் நோன்பை விட்டவர்கள் தாயகத்திற்கு வரும்போது, அவர்கள் ஒருநாள் முன்னதாக நோன்பை ஆரம்பித்த கணக்கின்படி மாத கடைசியில் அவர்களுக்கு  ரமலான் நாட்களின் எண்ணிக்கை 31 - வது நாளாக இருக்கும்.

ஆனால் தாயகத்திலுள்ள மக்கள் பெருநாள் பிறை காணாததால் அன்றைய தினம் 30 - வது நோன்பை நோற்றிருக்கும்போது, பிரயாணத்திற்காக தாங்கள் விட்ட அந்த ஒரு நோன்பை தாயக மக்களோடு சேர்ந்து அதே தினத்தில் களா செய்துக் கொள்ளலாமா?

ரமளான் மாதத்தில் நோற்க வேண்டிய நோன்புகளின் எண்ணிக்கையில் குறை ஏற்படும்போதுதான் அது களாவாக ஆகும். ஆனால் பிரயாணத்தில் ஒரு நோன்பை விட்டவர்கள் 29 நோன்புகளை நிறைவேற்றிவிட்டு 30 - வது நோன்பை தாயகத்திலுள்ள மக்கள் நோற்றிருக்கும்போது, (பிரயாணத்திற்காக) தாங்கள் விட்ட அந்த ஒரு நோன்பை தாயக மக்களோடு சேர்ந்து தங்களின் 30 - வது நோன்பையும் நிறைவேற்ற வேண்டும். இது களா அல்ல; அது ரமலானின் கடைசி நோன்பாகவே அமையும்.

அதாவது, அவர்கள் இருந்த பகுதியில் ஒருநாள் முன்னதாக ரமளான் பிறைக் கண்டு முதல் பிறையை ஆரம்பித்ததால் அவர்களுக்கு அந்த மாத நாட்களின் அதிகபட்ச கணக்கான 30 நிறைவேறியிருந்தாலும், தாயகத்தில் ஒரு பிறை பிந்தி கண்டவர்களின் பகுதிக்கு வந்து அவர்கள் சேர்ந்துவிட்டதால் அவர்களும் ஒரு பிறையை பிந்தி அடைந்தவராக ஆகிவிடுகிறார்கள். அதனால் அந்த பகுதி (தாயக மக்கள்) அங்கு ஷவ்வால் பிறை காணவில்லையென்றால் அவர்களுக்கு எப்படி ரமளான் மாதம் தொடருமோ அவ்வாறே, பயணித்து வந்து சேர்ந்தவர்களுக்கும் ரமளான் மாதம்தான் தொடரும்.

ஒருவர் எங்கு இருக்கிறாரோ அங்குள்ள தொழுகை நேரத்தையே பின்பற்ற வேண்டும் என்பதைப் போல, பிறை கணக்கையும் அங்குள்ளபடியே பின்பற்ற வேண்டும் என்பது இஸ்லாம் கூறும் முக்கியமான அடிப்படையாகும்.

அப்படியானால் பிரயாண சலுகையாக ஒரு நோன்பை விட்டிருந்தாலும் அவர்கள் 29 நோன்புகளை மட்டும் நிறைவேற்றியவர்கள் என்பதால், தாங்கள் வந்து சேர்ந்த பகுதியில் பிறை காணப்படாமல் ரமளானின் 30 - வது நோன்பாக இருக்கும்பட்சத்தில் விடுபட்ட ஒரு நோன்பை நோற்று 30 நோன்புகளை நிறைவு செய்யவேண்டும்.

நாங்கள் "தாத்து இர்க்" எனும் இடத்தில் ரமளான் பிறைப் பார்த்தோம். இதுபற்றி விளக்கம் பெறுவதற்காக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ஒருவரை அனுப்பினோம். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் "பிறையைப் பார்ப்பது வரை (முந்தைய) மாதத்தை அல்லாஹ் நீட்டி விட்டான். எனவே மேகமூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முழுமையாக்குங்கள்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: அபுல் பக்தரீ (ரஹ்)
நூல்: முஸ்லிம் (1985)


➤ ஒருநாள் பிந்தி ரமலான் பிறைக் கண்டவர்கள் முந்திய நாள் பிறைக் கண்ட பகுதிக்கு செல்லும்போது, அங்குள்ளவர்கள் 29 நோன்புகளை முடித்த நிலையில் ஷவ்வாலின் பிறை தென்பட்டுவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

தங்களுக்கு முந்திய நாள் முதல் பிறையைக் கண்ட பகுதிக்கு ரமளானின் இறுதியில் செல்பவர்கள், 28 நோன்புகள் மட்டுமே நிறைவேற்றியிருக்கக்கூடிய நிலையில் ஷவ்வாலின் (பெருநாள்) பிறையைக் கண்டுவிட்டால் அங்குள்ள மக்களோடு சேர்ந்து பெருநாளைக் கொண்டாட வேண்டும்.

உதாரணமாக, ரமலான் மாதம் பாதியில் இந்தியாவிலிருந்து புறப்பட்டு சஊதிக்கு செல்லும் ஒருவர் ரமலானின் இறுதியில் 28 நோன்புகளை மட்டுமே நிறைவேற்றிய நிலையில் சஊதியில் பிறைப் பார்க்கப்பட்டுவிட்டால், அவருக்கு 28 நோன்புகளுக்கு மேல் நோற்க இயலாது. ஏனெனில், அப்போது ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதம் ஆரம்பமாகி இருக்கும். அது பெருநாளுடைய நாளாகவும் இருக்கும்.

எனவே, மாதத்தைப் பற்றி இஸ்லாம் கூறும் அடிப்படையை ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியபடி ஒரு மாதத்தின் குறைந்தபட்ச அளவு 29 நாட்களாக இருக்க வேண்டும் என்பதால், 28 நோன்புகளை மட்டுமே நிறைவேற்றிவிட்டு அவ்வாறு பெருநாள் கொண்டாடியவர்கள் ரமலானுக்கு பிறகு 1 நோன்பை களா செய்துவிட வேண்டும்.

ஆனால், சஊதியில் உள்ள மக்கள் 30 நோன்புகளை நிறைவு செய்த நிலையில் இந்தியாவிலிருந்து அங்கு சென்றடைந்தவர் ரமலானின் 29 நோன்புகளை மட்டுமே நிறைவேற்றியிருந்தார் என்றால், அந்த 30 - வது நோன்பை அவர் களா செய்யத் தேவையில்லை. ஏனெனில், "மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும்" என்று ஒரு மாதத்தின் குறைந்தபட்ச அளவாக நபி (ஸல்) அவர்கள் கூறிய அந்த 29 நாட்களும் அவர் நோன்பை நிறைவேற்றி விட்டதால், மறுநாள் பெருநாள் கொண்டாடுவதன் மூலம் அவருக்கு எந்தவொரு நோன்பும் களாவாக ஆகாது.


1 comment:

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை