அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday 19 December 2019

அல்குர்ஆன் கூறும் ஆறுவகை பங்குகள்

இஸ்லாமிய சமூகம் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளை குர்ஆனின் கட்டளைச் சார்ந்த கோட்பாடுகள் வரையறுக்கின்றன. அத்துடன், ஹதீஸ்கள் என்று சொல்லப்படும் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் குர்ஆனின் ஒவ்வொரு கோட்பாடுகளையும் சார்ந்துதான் நமக்கு வாழ்வியலாக்கித் தரப்பட்டுள்ளன.

இந்த அடிப்படையில், ஒரு மனிதன் தன் சொத்துக்களுக்கு அவன் சொந்தக்காரனாக இருந்தாலும் அவன் விரும்பிய விதத்தில் தானாகவே முடிவுசெய்து தன் வாரிசுகளுக்கு பங்கிட்டு கொடுக்க முடியாது. இஸ்லாம் தயாரித்துத் தந்திருக்கும் பட்டியல் முறையில்தான் பங்கீடு செய்யவேண்டும். ஒரு குடும்ப சொத்துக்கள் தலைமுறை தலைமுறையாக உள்ளுக்குள்ளேயே மாறிக் கொண்டிருக்காமல், அச்சொத்துக்களால் பலருடைய வாழ்வும் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதே இதன் முக்கிய அம்சமாகும்.

நேர்மையான, அற்புதமான, விரிவான இந்த பின்னக் கணக்கீட்டு முறை (Fraction) ஏக இறைவனான அல்லாஹ்வால் இறுதியாக அருளப்பட்ட வேதமான குர்ஆனில் தவிர மற்ற வேதங்களிலோ, அறிவில் சிறந்த மனிதர்கள் இயற்றிய எந்த சட்டங்களிலோ முழுமையாக காணமுடியாது. ஏனெனில் குர்ஆன் கூறும் இந்த பங்கீட்டு முறை எல்லாம் வல்ல இறைவன் வகுத்த விதியாகும். இதில் அவனல்லாத வேறு எவரது தலையீடும் இல்லை. இஸ்லாமியச் சட்டங்களிலேயே இந்த பாகப்பிரிவினைச் சட்டம்தான் மிக மிக நுட்பமானதாக அமைந்துள்ளது!


இந்த சட்டத்தின் மூலம் யாரெல்லாம் வாரிசுகள்? அவர்கள் எந்த வகையில் ஒருவருக்கு வாரிசுகளாகிறார்கள்? அவர்களில் முன்னுரிமை வழங்கப்படவேண்டிய வாரிசுகள் யார், யார்? அவர்களில் யாருக்கு எவ்வளவு பங்குகள் கொடுக்கப்படவேண்டும் என்ற விபரங்களை எல்லாம் இஸ்லாம் தெளிவுபடுத்துகிறது. ஒருவர் மரணித்துவிட்டால் அவரது சொத்துக்களை அவருடைய வாரிசுகள் எவ்வாறு பிரித்துக் கொள்வது என்பதை குளறுபடிகளின்றி கையாள்வதற்கு நாம் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்கவேண்டிய இந்த பங்கீட்டு அளவுகளை இங்கே பார்ப்போம்.

இஸ்லாமிய வாரிசுரிமை சட்டப்படி ஒருவரது சொத்தில் அவரது சொந்தபந்தங்கள் அனைவருக்கும் பங்கு கிடைக்காது. தாய், தந்தை, கணவன் (அல்லது) மனைவி, மகன், மகள் ஆகிய உறவுகளுக்குதான் முதல் சொத்துரிமை கிடைக்கும். தந்தை, மகன் போன்ற உறவுகள் இல்லாதபோதுதான் சகோதர சகோதரிகளுக்கு கிடைக்கும். சகோதர சகோதரிகளும் இல்லாதபோதுதான் தந்தையின் சகோதரரர்களுக்கு கிடைக்கும். இவர்களை மூன்று வகையினராக பிரிக்கலாம்:
முதல் வகையினர்  அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ள பங்குதாரர்கள்.
இரண்டாம் வகையினர்  எச்சதாரர்கள் என்று சொல்லப்படும் "அஸபா" (عصبة) உறவினர்கள். இவர்களுக்கு பங்குகள் நிர்ணயிக்கப்படவில்லை. ஏனெனில் முதல் வகையினருக்கு நிர்ணயிக்கப்பட்ட பங்குகளைக் கொடுத்து முடித்தபிறகு, எஞ்சியிருக்கும் பங்கிற்கு உரியவர்கள் இவர்கள். அதேசமயம், நிர்ணயிக்கப்பட்ட பங்குகளை அடைவதற்கு முதல்வகை வாரிசுகளே இல்லாதபோது இந்த அஸபா வாரிசுகள்தான் முழுச் சொத்துக்கும் உரிமையாளர்களாக ஆகிவிடுவார்கள்.
மூன்றாம் வகையினர்  இரத்தத் தொடர்புடைய தூரத்து உறவினர்கள். பங்குதாரர்கள், எச்சதாரர்கள் ஆகிய இரு வகையினரும் இல்லாத நிலையில் இவர்களுக்கு உரிய அளவுகளின்படி சொத்துக்களை அடைவார்கள்.

குர்ஆனில் கூறப்பட்டுள்ள ஆறுவகை பங்குகளும் அதற்குரிய பங்குதாரர்களும்
   
   

 ❦

 ⚖ பங்கு விகிதங்கள் ⚖

        பங்கிற்கு உரியவர்கள் ✿

 1

             

            ▶ 1/2 

 

                       ▶ கணவன் ◀
(மனைவிக்கு பிள்ளை இல்லாதபோது)

      ▶ ஒரு மகள் மட்டுமிருந்தால் ◀
     (மற்ற பிள்ளைகள் இல்லாதபோது)

 2

            ▶ 1/4 ◀

                       ▶ கணவன் ◀
        (மனைவிக்கு பிள்ளை இருந்தால்)

            ▶ மனைவி / மனைவியர் ◀
(கணவனுக்கு பிள்ளை இல்லாதபோது)

 3

            ▶ 1/8 ◀ 

               ▶ மனைவி / மனைவியர் ◀
       (கணவனுக்கு பிள்ளை இருந்தால்)

 4

            ▶ 1/3 

                             ▶ தாய் ◀
(இறந்தவரின் பிள்ளை இல்லாதபோது)

 5

            ▶ 2/3 ◀

                   ▶ 2 அல்லது அதற்கு மேற்பட்ட பெண் பிள்ளைகள் 
             (ஆண் வாரிசு இல்லாதபோது)         

 6

            ▶ 1/6 ◀

                     ▶ தாய், தந்தை ◀
(மரணித்தவருக்கு பிள்ளை இருந்தால்)

பின்ன அளவுகளில் சொல்லப்பட்டுள்ள இந்த ஆறுவகை பங்கீடுகளின் விபரங்களைப் பற்றியும் பார்ப்போம்.

1-A) ஒரு பெண் தனக்கு பிள்ளை இல்லாத நிலையில் மரணித்துவிட்டால் அவளுடைய கணவன் தன் மனைவியின் சொத்திலிருந்து பாதி பங்கை (1/2) அடைவார். அதுபோல்,

1-B) ஒரு தாயோ அல்லது தந்தையோ தங்களுக்கு தனியொரு பெண் பிள்ளை மட்டும் இருக்கும் நிலையில் மௌத்தாகிவிட்டால், அவர்களுடைய அந்த மகளுக்கு பாதி (1/2) பங்கு கொடுக்கவேண்டும். இந்த இருவரும் அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ள முதல்வகை பங்குதாரர்களில் வரக்கூடியவர்கள். (இவர்கள் அல்லாமல் இன்னொரு உறவினரும் பாதி பங்கை அடைவார். அதைப்பற்றி பிறகு பார்க்கலாம்)



2-A) ஒரு பெண் தனக்கு பிள்ளை இருக்கும் நிலையில் இறந்துவிட்டால், அவளுடைய சொத்திலிருந்து கணவன் கால் பங்கை (1/4) அடைவார். அதுபோல்,

2-B) ஒரு ஆண் தனக்கு பிள்ளை இல்லாத நிலையில் மரணித்துவிட்டால், அவருடைய சொத்திலிருந்து மனைவிக்கு கால் பங்கு (1/4) கொடுக்கவேண்டும். (ஒன்றுக்கு மேற்பட்ட (2,3,4) மனைவியராக இருக்கும்பட்சத்தில், கிடைக்கும் அந்த பங்கிலிருந்து சமமாக பிரித்துக் கொடுக்கவேண்டும்.)



3) கணவனுக்கு பிள்ளை இருக்கும் நிலையில் அவர் இறந்துவிட்டால், அவருடைய மனைவி/மனைவியருக்கு எட்டில் ஒரு பங்கு (1/8) அவருடைய சொத்திலிருந்து கொடுத்துவிடவேண்டும்.


4) ஒரு மகனோ அல்லது மகளோ தனக்கு பிள்ளை இல்லாத நிலையில் மரணித்திருந்தால், அவருடைய /அவளுடைய தாய்க்கு மூன்றில் ஒரு பங்கு (1/3) கொடுக்கப்படவேண்டும்.


5) ஒருவர் மரணிக்கும்போது ஆண் வாரிசுகள் யாருமில்லாமல் 2 அல்லது அதற்கு மேற்பட்ட பெண் பிள்ளைகள் மட்டும் இருந்தால், அவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்குகள் (2/3) கொடுக்கவேண்டும்.

6) மரணித்தவருக்கு பிள்ளைகள் இருந்து அவர்களுடன் தாயும் தந்தையும் இருந்தால், மரணித்தவரின் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கு (1/6) கொடுக்கவேண்டும்.


இவர்கள் அனைவரும் அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ள முதல்வகை பங்குதாரர்களில் வரக்கூடியவர்கள். இந்த முதல் வகையினரில் இடம்பெறாமல், அளவு நிர்ணயிக்கப்படாத பங்குதாரராக வரக்கூடிய (இரண்டாம் வகையினரில் இடம்பெறும்) முக்கிய வாரிசு ஒருவர் யாரெனில், மரணித்தவரின் மகன் ஆவார். இவருக்குதான் முதல்வகை பங்குதாரர்களைவிட முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவுகளில் பார்ப்போம். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை