Sunday, 13 March 2016

உள்ளத்தை உருக்கும் துயரச் சம்பவம்! பாடம் பெறுவோமா?


உலகம் முழுவதும் நாள்தோறும் எண்ணற்ற துயரச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆனால் நாம் வசிக்கும் பகுதியில், அல்லது நமது நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு துன்பங்கள், துயரங்கள் ஏற்படும்போது அது மிகவும் மனதில் கவலையை ஏற்படுத்துகிறது. கடையநல்லூரில் நாங்கள் வசிக்கும் பகுதி இக்பால் நகர். எங்கள் தெருவைச் சார்ந்த சகோதரி ஃபாத்திமா ஃபர்வின் (வயது 36), சகோதரர் முகம்மது இக்பால் அவர்களின் மனைவி. சகோதரி ஃபாத்திமா ஃபர்வின் அவர்கள் மதிய உணவு சமைப்பதற்காக மீன் வாங்கி வைத்துவிட்டு, தனது ஆறு வயது மகன் முகம்மது அத்தீக்கை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வந்துவிடுவோம் என்று வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார்.

இக்பால் நகர் பகுதியில் உள்ள சத்துணவுக் கூடம் அருகில் தனது சிறிய மகனோடு அச்சகோதரி வந்து கொண்டிருந்தபோது 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் மக்கள் நடமாட்டம் மிகுந்த அப்பகுதியில் கார் ஓட்ட படித்துள்ளார். அவர் காரை தவறாக இயக்கியதில் கார் மிக வேகமாக சீறி சகோதரி ஃபாத்திமா பர்வின் அவர்கள் மீது மோதி சம்பவ இடத்திலேயே அவர்கள் மரணித்துவிட்டார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) சிறுவன் அத்தீக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (அல்லாஹ் அச்சிறுவனக்கு பூரண உடல் நலத்தை வழங்குவானாக)

ஃபாத்திமா பர்வின் அவர்களின் மூன்று குழந்தைகள் அஃப்ரின், செசினா, அத்தீக் ஆகியோர் பெற்ற தாயை இழந்து பரிதவிக்கும் நிலை. படைத்த இறைவனைத் தவிர வேறு யாரும் இத்துயரத்திற்கு பரிகாரம் செய்ய இயலாது! இச்சம்பவம் கடையநல்லூர் மக்களிடம், குறிப்பாக இக்பால் நகர் மக்களிடம் மிகப் பெரும் மனத்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக ஒரு துயரச் சம்பவம் நடக்கும்போது அதற்குரிய காரண காரியங்கள் மக்களிடம் அதிகமாக அலசப்படுகிறது. ஆனால் இயல்பான கால கட்டங்களில் கால ஓட்டத்தில் அவை மக்கள் மனதிலிருந்து அடித்துச் செல்லப்படுகின்றன. இந்த விபத்தின் பிண்ணனியில் இஸ்லாமிய இளைஞர்களின் நிலையையும் சற்று சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கின்றோம்.

தெருக்கள் என்பது குழந்தைகளும், வயோதிகர்களும், பெண்களும் அதிகமாக புழங்கும் பகுதிகள். அதிலே அச்சமின்றி நடமாடும் உரிமை அவர்களுக்கு உள்ளது.  பைபாஸ் ரோட்டிலே எவ்வாறு பாதசாரிகள் ஹாய்யாக நடுரோட்டில் செல்ல முடியாதோ அதுபோன்று தெருக்களிலே வாகனங்கள் படுவேகத்தில் செல்வதற்கு உரிமை கிடையாது. ஆனால் நமதூரில் நடப்பது என்ன?

விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் கண் இமைக்கும் வேகத்தில் செல்லும் இளைஞர்களின் போக்குதான் என்ன? குழந்தைகள் தெருக்களில் விளையாடுவதற்கு அனுப்பும் பெற்றோர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் அனுப்ப வேண்டியிருக்கிறது. பிள்ளைகளை தெருவிற்கு அனுப்பிவிட்டால் எவன் வருவானோ? எப்படி வருவானோ என்ற அச்சத்தில் பிள்ளைகளுக்கு பின்னாலேயே பெற்றோர்கள் நிற்க வேண்டிய நிலைமை. வேகமாகச் செல்லும் இளைஞருக்கு , மெதுவாகச் செல்லலாமே என்று அறிவுரை சொன்னால் நமட்டுச் சிரிப்புடன் ஆக்ஸிலேட்டர் இன்னும் முறுக்கப்படுகிறது. தடியெடுத்தால்தான் அடங்குவார்கள் என்னும் அளவிற்கு இந்த இளைஞர்களின் செயல்பாடுகள் இருப்பதைப் பார்க்கிறோம்.

மிகக் குறுகலான சந்துகளில் கூட குழந்தை குட்டிகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் கூட மிக வேகமாக இந்த ஷைத்தான்கள் ஓட்டிச் செல்கின்றனர்.
சிறு சிறு விசயங்களுக்கெல்லாம் வட்டார ரீதியாக குழுக்களைத் திரட்டி சண்டையிடும் இளைஞர் குழுக்களை பலதடவை நான் கண்டுள்ளேன். பொதுவாக மிகவேகமாகச் செல்லும் இளைஞர்களில் 90 சதவிகிதம் பேர் மார்க்க ரீதியிலான ஒழுக்கங்களை அறியாதவர்களாகத்தான் உள்ளனர்.
மார்க்கம் போதிக்கும் பணிவு, நிதானம், பிறர் நலம் பேணுதல், மற்றவர்களுக்கு உதவுதல் போன்ற பண்புகளைப் அறிந்த இளைஞர்களிடம் இதுபோன்ற இருசக்கர வாகனத்தில் இறுமாப்புடன் செல்லும் போக்கினை அதிகம் காண முடிவதில்லை.

தினந்தோறும் சினிமாக்களில் சீரழிந்து, கஞ்சாவிற்கும் டாஸ்மாக்கிற்கும் செய்யது பீடிக்கும், ஃபாரின் சிகரெட்டிற்கும் அடிமையாகி, முட்டுச் சந்துக்களில் சங்கங்களை வைத்து அந்நியப் பெண்களை அழுக்குப் பார்வைப் பார்க்கும் சமூகக் கேடுகள் அனைத்தும் இந்த மார்க்கமறியா இளைஞர்களிடம்தான் அதிகம் காணப்படுகிறது. ஆட்டோ ஓட்டிகளும் நல்லவர்கள் என்று சொல்வதற்கில்லை. சிலர் தெருக்களில் மெதுவாகச் சென்றாலும் பலர் மிக வேகத்தில் தெருக்களில் ஓட்டிச் செல்கின்றனர். யாராவது வயோதிகர், காது கேளாதவர் இவர்கள் அடிக்கும் ஹாரன் சத்தத்திற்கு வழிவிடவில்லை என்றால் எருமை மாடு என்று திட்டிக் கொண்டு போகும் ஆட்டோ ஓட்டிகளையும் பார்க்கத்தான் செய்கின்றோம். அட்டக்குளத் தெருவையும், பெரிய தெருவையும் பைபாஸ் சாலையாகவே அனைவரும் கருதுகின்றனர். அங்கு போடப்பட்டிருக்கும் வேகத்தடைகள் சற்று பெரிதானவை. அவற்றை தாண்டும் போதெல்லாம் அந்த வட்டாரவாசிகளுக்கு திட்டுதான்.

அய்யா இளைஞர்களே ! ஆட்டோ ஓட்டுநர்களே..! நீங்கள் உங்கள் திறமையையும் பந்தாவையும் ஹைவே ரோட்டில் விரும்பினால் காட்டிக் கொள்ளுங்கள். ஆனால் குழந்தைகளும், பெண்களும், தள்ளாடும் முதியவர்களும், காது கேளாதவர்கள் நடமாடும் தெருக்களில் காட்டாதீர்கள். தெருக்களில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், வயோதிகர்களுக்கும் குறிப்பாக பாதசாரிகளுக்குத்தான் உரிமை உள்ளது. அங்கே வாகனங்கள் அமைதியாகத்தான் செல்லவேண்டும். வேகமாகச் செல்வதற்கு வாகன ஓட்டிகளுக்கு உரிமை இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தெருவில் நடந்து செல்பவர்களை யாரோ எவரோ என்று எண்ணாமல் நீங்கள் பெற்ற பிள்ளைகள், உங்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள், உங்களைப் பெற்ற தாய்மார்கள், தந்தைமார்கள் செல்கிறார்கள் என்ற எண்ணத்தில் வாகனங்களை இயக்குங்கள். இந்த விபத்திற்குப் பிறகாவது நாம் பாடம் படிக்க வேண்டும். இக்பால் நகர் சத்துணவுக் கூடம் அமைந்துள்ள பகுதியிலும், அனைத்து தெருக்களிலும் வேகத்தடைகளை அதிகரிக்க வேண்டும். தெருக்களில் இருசக்கர வாகனங்களிலும் ஆட்டோக்களிலும் மிக வேகமாகச் செல்லும் இளைஞர்களை கண்டிப்பதில் தயங்குவது கூடாது. அவர்களுக்கு மார்க்க ரீதியிலான ஒழுக்க மாண்புகளை கற்பிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். தகுதியில்லாதவர்கள் இருசக்கர வாகனங்களையும், ஆட்டோ கார் போன்றவற்றை மக்கள் நடமாடும் பகுதியில் இயக்குவதைத் தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டப் படிப்பவர்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உள்ள சாலைகளுக்குச் சென்று பயில வேண்டும். மொத்தத்தில் அனைத்து விஷயங்களிலும் நிதானம் வேண்டும். இவற்றையும் தாண்டி இறைவனின் நாட்டப்படி ஏற்படும் விதிகளை நாம் பொருந்திக் கொள்ள வேண்டும்.

From Bro. Abdunnasir Misc

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!