Monday, 15 October 2012

குர்பானி கொடுப்பதின் சட்டங்கள் (பகுதி 2)



முதல் பகுதி மற்றும் மூன்றாம் பகுதியைப் பார்க்கவும்.

அடையாளமிடுதல்

அதிகமான ஆடுகளையும் மாடுகளையும் வைத்திருப்பவர்கள் குர்பானிக்கு பொருத்தமானதை அவற்றில் தேர்வுசெய்து அதற்கு அடையாளம் இட வேண்டும். அப்படியில்லாமல் பெருநாளன்று இருக்கும் கால்நடைகளில் கையில் கிடைக்கும் ஏதாவது ஒன்றைப் பிடித்து அறுத்துவிடக் கூடாது. அடையாளம் இடுவது கட்டாயம் இல்லையென்றாலும் முறையாக தேர்வு செய்யப்பட்ட‌ குர்பானிப் பிராணி மற்றப் பிராணிகளுடன் குழம்பிக் கொள்ளாமல் இருப்பதற்காகவும், குர்பானிக் கொடுப்பதை ஏழைகள் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் நபி(ஸல்)அவர்கள் காலத்தில் அடையாளமிடக்கூடிய‌ வழக்கம் இருந்தது. இன்று பெரும்பாலும் குர்பானிக்கென்று பிரத்யேகமாக பிராணிகள் வாங்கப்படுவதால் அடையாளமிட வேண்டிய அவசியமில்லைதான். ஆனால் அறுக்கும் அன்று வரை விற்பவர்களிடத்திலேயே விட்டு வைப்பவர்களும், அதிக எண்ணிக்கையில் வைத்திருப்பவர்களும் இம்முறையைக் கையாளுவதே சிறந்தது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களின் பலி ஒட்டகங்களின் அடையாள மாலைகளை நான் என் கைகளாலேயேத் திரித்தேன். அந்த மாலைகளை அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் (அவற்றின்) கழுத்தில் போட்டு அவற்றுக்கு அடையாளச் சின்னமிட்டு இறையில்லம் கஃஅபாவிற்கு அவற்றை அனுப்பி வைத்தார்கள். 
       அறிவிப்பவர்:ஆயிஷா(ரலி); நூல்:புகாரி(2335), முஸ்லிம்(2549) 

சிலர் குர்பானிக்காக தேர்வு செய்யப்பட்ட ஒரு நல்ல பிராணியை வாங்காமல், குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதால் அதைவிட மட்டமான தரத்தில் உள்ள பிராணியை வாங்குவதையும் காண்கிறோம். குர்பானிப் பிராணிகள் தரமானதாக இருக்கவேண்டுமே தவிர, அவ்வாறெல்லாம் செய்யக்கூடாது. முடிந்தவரை எந்த விதத்திலும் தரம் குறையாததாக‌ பார்த்துக் கொள்ள வேண்டும்.

குர்பானிப் பிராணிகள் எவ்வாறு இருக்கவேண்டும்?

ஆடு, மாடு ஒட்டகம் ஆகிய பிராணிகளில் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னரே நாம் பார்த்தோம். அவற்றில் நான்கு குறைகள் உள்ளவை குர்பானி கொடுப்பதற்கு ஏற்றவையல்ல.
1. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை
2. வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய்
3. வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம்
4. கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

'அல்லாஹ்வின் தூதரே! கொம்பில் ஒரு குறை, பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை' என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்)அவர்கள், 'உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு; மற்றவருக்கு அதை ஹராமாக்கிவிடாதே' என்று கூறினார்கள்.
                    அறிவிப்பவர்: பராஃ(ரலி); நூல்: நஸயீ(4293)

இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரிய‌க்கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ளவேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட பிராணிகளை குர்பானி கொடுக்கலாம். ஏனெனில் நபி(ஸல்)அவர்கள் ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட பிராணிகளை, குர்பானி கொடுத்துள்ளதாக அபூராபிஃ(ரலி)அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை அஹ்மத் இமாம் தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

பெண் ஆட்டை குர்பானி கொடுக்கலாமா?

பெட்டை ஆடுகளையும், கிடாய்களையும் நம் மக்க‌ள் வித்தியாசமாகவே பார்க்கின்றனர். சில பகுதிகளில் பெட்டை ஆடுகள் சாப்பிடுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது போலவும் கருதுகின்றனர். சாதாரணமான நேரத்திலேயே பெட்டை ஆடுகளைச் சாப்பிடக்கூடாது எனக் கருதக்கூடியவர்கள், குர்பானி கொடுப்பதற்குப் பெட்டை ஆடுகள் அறவே தகுதியற்றவை என்று நினைக்கின்றனர். இது பற்றி மார்க்கம் என்ன கூறுகிறது என்பதையும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

உண்பதற்கு அனுமதிக்கப்பட்டதில் கிடாயும் ஆடும், காளையும் பசுவும், சேவலும் கோழியும் சமமானவைதான் என்பதை முஸ்லிம்கள் முதலில் நம்பவேண்டும். பறவையினங்களில் இதை ஏற்கக் கூடியவர்கள் கால்நடைகளில் மட்டும் ஏற்கத் தயங்குகின்றனர்.

குர்பானி கொடுப்பதற்குக் காளையும் கிடாயும்தான் தகுதியானது என்று திருக்குர்ஆனிலும் கூறப்படவில்லை. நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளிலும் கூறப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் குர்பானி பற்றிக் கூறும் போது "ஜத்வு" என்று ஆண்பால் கூறப்பட்டுள்ளது போலவே "ஜத்அத்" என்று பெண்பாலும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் "முஸின்" என்று ஆண் பாலாகவும் "முஸின்னத்" என்று பெண்பாலாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே ஆண் கால்நடைகளைதான் குர்பானி கொடுக்கவேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அதே சமயம், குட்டியை ஈன்று பால்கொடுத்துக் கொண்டிருக்கும் பிராணியை அறுக்க வேண்டாம் என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். ஏனென்றால் தாயை அறுத்துவிட்டால் குட்டி பாசத்திற்கும் பாலுக்கும் ஏங்கக்கூடிய நிலை ஏற்படும். குர்பானி கொடுப்பவர்கள் இதை கவனத்தில் கொண்டு, குட்டிப்போட்டு பால்தரும் பிராணிகளை அறுக்கக்கூடாது. 

அவர்(ஒரு அன்சாரித் தோழர்)'இதை உண்ணுங்கள்!' என்று கூறிவிட்டு (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள், 'பால்தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என நான் உம்மை எச்சரிக்கிறேன்' என்று கூறினார்கள். 
           அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி); நூல்: முஸ்லிம்(3799)

எத்தனை வயதுள்ள பிராணிகள் குர்பானிக்கு ஏற்றவை?

குர்பானி கொடுக்கவேண்டிய ஆடு, மாடு ஒட்டகம் ஆகிய மூன்றில், குர்பானிக்காகத் தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் நிர்ணயம் செய்துள்ளார்கள்.

நீங்கள் 'முஸின்னத்' தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர! அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ள)தை அறுங்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
                    அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி); நூல்:முஸ்லிம்(3631)

பருவமடையும் பருவத்தில் உள்ள பிராணிகள் 'முஸின்னத்' எனப்படும். பெரும்பாலும் ஒட்டகம் ஆறு வயதிலும், மாடுகள் மூன்று வயதிலும், ஆடுகள் இரண்டு வயதிலும் பருவமடையும். இந்தக் கணக்கு உத்தேசமானதுதான். பருவமடையும் வயது பல காரணங்களால் வித்தியாசப்படும். பற்கள் விழுதல், துணை தேடுவது போன்றவற்றை வைத்து, அது சம்பந்தமான அறிவுள்ளவர்கள் அவை பருவமடைந்துவிட்டதைக் கண்டுபிடித்து விடுவார்கள். ஆக, 'முஸின்னத்தை குர்பானி கொடுங்கள்' என்றால் 'பருவமடைந்ததைக் குர்பானி கொடுங்கள்' அல்லது 'அந்த பருவத்தில் உள்ளதை' என்பது பொருள் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். இத்துறையில் அனுபவமுள்ளவர்களிடம் வெள்ளாடு, செம்மறியாடு, மாடு ஆகியவை எத்தனை வருடம், எத்தனை மாதத்தில் பருவமடையும் என்று கேட்டு அறிந்துக் கொள்ளலாம்.

அறுக்கும் முறை

பொதுவாகவே பிராணியை அறுக்கும்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்' எனக் கூறி அறுப்பார்கள். குர்பானிப் பிராணிக்கும் அதுபோலவே செய்தார்கள்.

கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன், 'ஆயிஷாவே! கத்தியை எடுத்து வா; அதைக் கல்லில் தீட்டி கூர்மையாக்கு' என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது 'பிஸ்மில்லாஹ்' என்று கூறிவிட்டு, 'இறைவா! இதை முஹம்மதிடம் இருந்தும், முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும், முஹம்மதின் சமுதாயத்தாரிடம் இருந்தும் ஏற்றுக் கொள்வாயாக!' எனக் கூறினார்கள்.
              அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்:முஸ்லிம்(3637)

முஸ்லிம் நூலில் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் 'பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்' என்று நபி(ஸல்)கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நபி(ஸல்)அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது.

எனவே அறுப்பவர்கள் 'பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்' எனக்கூறி அறுக்க வேண்டும். அத்துடன் அறுக்கும்போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும். "ஆயிஷா கத்தியைக் கொண்டு வா! அதைக் கல்லில் கூர்மையாக்கு!" எனும் ஹதீஸிலிருந்து வீட்டில் வைத்தும் அறுத்திருக்கிறார்கள் என்பதை விளங்கலாம்.

யார் அறுப்பது?

நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்தபோது தமது கையால் தாமே அறுத்திருக்கிறார்கள் என்று புகாரி, முஸ்லிம் உட்பட பல நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் முடிந்தவரை மற்றவர்களை வைத்து அறுக்காமல் நாமே குர்பானிப் பிராணிகளை அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.

பெண்கள் அறுக்கலாமா?

ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்)அவர்களிடம் கேட்கப்பட்டபோது அதைச் சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள். 
                                 நூல்:புகாரி

(குர்பானி அல்லாத மற்ற சமயங்களுக்கும் இந்த சட்டம் பொதுவானதாகும்.)

அறுத்த பிறகு துஆச் செய்தல்

குர்பானி கொடுக்கும்போது கூறவேண்டியவை:

 அல்லாஹ்விற்காக நிறைவேற்றப்படும் இந்த வணக்கத்தில் ஏராளமான பித்அத்கள் ம‌க்களிடம் ஊடுருவி இருக்கின்றன. அறுக்கும்போதோ அல்லது அறுத்தப் பின்போ ஃபாத்திஹா ஓதுவது அல்லது  தொழுகையில் தக்பீர் தஹ்ரீமாவிற்கு பிறகு ஓதும் 'இன்னீ வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ...' என்று ஆரம்பிக்கும் துஆவை ஓதுவதுதான் மார்க்கம் என்று ம‌க்கள் விளங்கி வைத்துள்ளார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆவை பெரும்பாலும் யாரும் ஓதுவதில்லை.

கீழ்க்காணும் ஹதீஸ் மூலம் அதைய‌றிந்து, அதுபோல் நாமும் ஓதிக் கொள்ளலாம். 

நபி(ஸல்)அவர்களும் குர்பானிக் கொடுத்தார்கள். அவர்கள் பின்வரும் பிரார்த்தனையைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. பிறகு அந்தக் கத்தியை வாங்கி அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். (அறுப்பதற்கு முன்) பிஸ்மில்லாஹ் அல்லாஹும்ம தகப்பல் மின் முஹம்மதின் வஆலி முஹம்மதின் வமின் உம்மதி முஹம்மதின் (அல்லாஹ்வின் பெயரால், இறைவா! முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக்கொள்வாயாக) என்று கூறி அதை அறுத்தார்கள். 
             அறிவிப்பவர்:ஆயிஷா(ரலி); நூல்:முஸ்லிம்(3637), அபூதாவூத்(2410), அஹ்மத்(23351) 

எனவே நாமும் இதேபோன்று துஆ செய்துக் கொள்ளலாம்.  தனித்து குர்பானி கொடுப்பதாக இருந்தால்  'இறைவா! என் புறத்திலிருந்து இதை ஏற்றுக்கொள்வாயாக!' 
(அரபியில் சொல்ல விரும்பினால்), اَللّهُمَّ تَقَبَّلْ مِنِّي ("அல்லாஹும்ம தகப்பல் மின்னீ") என்றும்,

குடும்பத்தாருக்கு சேர்த்து கொடுப்பதாக இருந்தால் 'இறைவா! என் புறத்திலிருந்தும் என் குடும்பத்தார் புறத்திலிருந்தும் இதை ஏற்றுக்கொள்வாயாக!'
اَللّهُمَّ تَقَبَّلْ مِنِّي وَاَهْلِي ("அல்லாஹும்ம தகப்பல் மின்னீ வஅஹ்லீ") என்றும் குர்பானி கொடுத்த பிறகு ஓதிக் கொள்ளலாம். 

தொடரும்... இன்ஷா அல்லாஹ்!

(மூன்றாம் பகுதியைப் பார்க்க)

(பதிவு நீளமாக இருப்பதால், வாசகர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது)



4 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!

    நல்லா சொல்லியிருக்கீங்க அஸ்மா!

    வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்க

    ReplyDelete
  2. @ ஆமினா...

    //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!
    ... தொடர்ந்து எழுதுங்க//

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்! நீங்கள் தொடர்ந்து படிப்பது சந்தோஷமாக உள்ளது ஆமினா. தெரியாதவர்கள் தெரிந்துக் கொள்ளவும், தெரிந்தவர்கள் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளவும் இந்த தொகுப்புகள் பயன்பட்டு, அது மறுமைக்குரிய நன்மையாக இன்ஷா அல்லாஹ் நமக்கு கிடைப்பதற்கு அல்லாஹ்தஆலா அருள்புரிவானாக!

    ReplyDelete
  3. படிப்பதற்கு மிக எழிமையாக இருக்கு, அனைத்து முஸ்லிம்களும் கட்டாயமாக குர்பானி கொடுக்கப் பட வேண்டுமா ? அல்லது விருப்பப் பட்டவர்கள் மட்டும் கொடுத்தால் போதுமா ?( ஏழைகளை இதில் சேர்க்க வேண்டாம் அவர்களுக்கு விலக்கு அளிக்கப் பட்டிருக்கு )

    ReplyDelete
  4. @ Mohamed Ayoub K...

    //படிப்பதற்கு மிக எழிமையாக இருக்கு, அனைத்து முஸ்லிம்களும் கட்டாயமாக குர்பானி கொடுக்கப் பட வேண்டுமா ? அல்லது விருப்பப் பட்டவர்கள் மட்டும் கொடுத்தால் போதுமா ?( ஏழைகளை இதில் சேர்க்க வேண்டாம் அவர்களுக்கு விலக்கு அளிக்கப் பட்டிருக்கு )//

    "அனைத்து முஸ்லிம்களும் கட்டாயமாக குர்பானி கொடுக்கப்படவேண்டுமா?" இந்த கேள்வியே பயமாக உள்ளது :-) "கொடுக்கப்படவேண்டும்" அல்ல, "கொடுக்கவேண்டும்" :)) சகோ.

    இதன் முதல் பகுதியில் "குர்பானி யார் மீது கடமை?" என்ற முதல் தலைப்பில் விளக்கம் உள்ளது. அதைப் பார்த்துவிட்டு சந்தேகம் இருந்தால் தாராளமா கேளுங்க நானா! சரியா?

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!