Monday, 15 October 2012

குர்பானி கொடுப்பதின் சட்டங்கள் (பகுதி 3)



முதல் பகுதி மற்றும் இரண்டாம் பகுதியைப் பார்க்கவும்.


பங்கிடும் முறை

சில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழியில் எந்த ஆதாரமும் இல்லை. இவ்வாறுதான் கொடுக்கவேண்டும், இவ்வளவுதான் உண்ணவேண்டும் என்ற வரம்பு எதுவும் இல்லாததால், அவரவர் விரும்பிய அளவு தர்மம் செய்யலாம். அதேசமயம், இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக்கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்கவேண்டும்.

குர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் கட்டளைக்கு முரணானதாகும். 'அல்ஹஜ்' அத்தியாயத்தின் 28 வது வசனத்தில் 'அவற்றை நீங்களும் உண்ணுங்கள்; வறிய ஏழைகளுக்கும் வழங்குகள்' என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

ஆட்டை உரிப்பவ‌ரின் கூலி

"நபி(ஸல்)அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தபோது, அதன் இறைச்சியையும், தோலையும் விநியோகிக்குமாறும், ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக இதில் எதனையும் கொடுக்கக் கூடாது என்றும் கட்டளையிட்டனர்" என்று அலி(ரலி)அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
                                 நூல்: புகாரி(1717)

இந்த ஹதீஸிலிருந்து அறுப்பவர்களுக்கும் உரிப்பவர்களுக்கும் தனியாகத்தான் கூலி கொடுக்கவேண்டுமே தவிர குர்பானியின் எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக்கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

விநியோகம் செய்தல்

குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3 நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்டபோது, 'நீங்கள் உண்ணுங்கள்; வேண்டுமென அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் அனுமதிய‌ளித்தார்கள். நூல்: புகாரி(1719)   
                                         
எனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம். 

பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாமா? 

மக்காவில் குர்பானி கொடுக்கப்பட்ட ஆட்டின் இறைச்சியை மதீனாவிற்கு நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் கொண்டு வருவோம் என்று ஜாபிர்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது. ஆக, குர்பானி இறைச்சியை தேவைப்பட்டால் பிற ஊர்களுக்கு எடுத்துச் சென்றும் விநியோகிக்கலாம். 

ஒரு குடும்பத்துக்கு எத்தனை ஆடுகள் கொடுப்பது?

நபி(ஸல்)அவர்கள் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது? என்று அபூ அய்யூப்(ரலி)அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது என்று விடையத்தார்கள்.
                    அறிவிப்பவர்: அதா இப்னு யஸார்; நூல்கள்: திர்மிதீ (1425), இப்னு மாஜா (3137), முஅத்தா (921)

எனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரே ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்துக் கொள்ளலாம். அதேசமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக் கூடாது என்பதற்கும் தடை எதுவுமில்லை. நபி(ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானிக் கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேணங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.
                          அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: புகாரி (1718)

ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி

மாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானிக் கொடுக்க விரும்புபவர்கள் ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஏழு பேர் சேர்ந்து ஒரு ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம்.

நபி(ஸல்)அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் ஏழு பேர் சார்பாக ஒரு ஒட்டகத்தையும் ஏழு பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தார்கள்.
                   அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி); நூல்: முஸ்லிம் (2323)

இந்த‌ ஹதீஸ் மூலம் ஒட்டகத்தில் ஏழுபேர் கூட்டு சேரலாம் என்பது தெளிவானாலும், ஒரு ஒட்டகத்தில் பத்து பேர் கூட்டு சேர்வதற்கும் இன்னொரு ஹதீஸ் ஆதாரமாக‌ உள்ளதை அறிய முடிகிறது.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தபோது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழுபேர் வீதமும், ஒரு ஒட்டகத்தில் பத்துபேர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம். 
     அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி);    நூல்: திர்மிதீ(1421), நஸாயீ(4316), இப்னுமாஜா (3122)

ஆக, ஒட்டகத்தைப் பொறுத்தவரை ஏழு பேரும் கூட்டு சேர்ந்துக் கொள்ளலாம், அல்லது 10 பேரும் கூட்டு சேர்ந்துக் கொடுக்க‌லாம்.

நம் தமிழகத்தில் சிலர் ஆட்டைதான் குர்பானி கொடுக்கவேண்டும்; அந்தளவு வசதியுள்ளவர்கள் மட்டுமே கொடுக்க முடியும் என்று கருதுகிறார்கள். இந்தியாவில்தான் ஆட்டின் விலை அதிகமாக உள்ளதே தவிர, வெளிநாடுகளை எடுத்துக் கொண்டால் ஆட்டைவிட மாட்டின் விலைதான் கூடுதலாக இருக்கும். எனவே இந்தியாவைப் பொறுத்தவரை ஆடு கொடுக்க வசதியில்லாதவர்கள் குர்பானி கொடுக்க விரும்பினால் ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டைக் குர்பானி கொடுக்கலாம். ஆட்டைக் குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் இவர்களுக்குக் குறையாது என்பதை மேலே நாம் பார்த்த‌ ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

பயணி மற்றும் பெண்கள் குர்பானி கொடுக்கலாமா?

வீட்டில் ஆண்களின் உதவியின்றி குடும்பத்தை நடத்தும் பெண்கள், வசதிப் பெற்றிருந்தால் அவர்களும் தங்களுக்காக குர்பானி கொடுக்கலாம். குர்பானி என்பது ஆண் பெண் ஆகிய இரு பாலருக்கும் உரிய வணக்கமாகும். அதுபோல் ஒருவர் தன் சொந்த ஊரில்தான் கொடுக்கவேண்டும் என்ற நிபந்தனை ஏதுமில்லை.  பிரயாணத்தில் இருப்பவர்களும் குர்பானி கொடுக்கலாம். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவிற்கு சென்று தனது மனைவிமார்களுக்கு குர்பானி கொடுத்துள்ளார்கள்.

நாங்கள் மினாவில் இருந்தபோது மாட்டிறைச்சி என்னிடம் கொண்டுவரப்பட்டது. நான் 'இது என்ன?' என்று கேட்டேன். மக்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தம் துணைவியர்களுக்காக மாடுகளை அறுத்துக் குர்பானி கொடுத்தார்கள் என்று பதிலளித்தார்கள்.                          
அறிவிப்பவர்:ஆயிஷா(ரலி); நூல்:புகாரி(5548)

இறந்தவர்கள் சார்பாகக் குர்பானி கொடுக்கலாமா?

நபி(ஸல்)அவர்களுடைய வாழ்நாளிலே அவர்களுக்கு மிகப் பிரியமான பலர் மரணித்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் நேசித்த அவர்களுடைய மகன் இப்ராஹீம், மகள் ஜைனப்(ரலி), மனைவி கதீஜா(ரலி), சிறிய தந்தை அபூதாலிப் ஆகியோர் மரணித்தனர். இறந்தவர்களுக்கு குர்பானி கொடுப்பது கூடுமென்றால் நபி(ஸல்) அவர்களால் நேசிக்கப்பட்ட‌ இவர்களுக்கு முதலில் குர்பானிக் கொடுத்திருக்கவேண்டும். ஆனால் உயிருடன் வாழும் தன் குடும்பத்தார்களுக்கு கொடுத்தார்களே தவிர மரணித்தவர்களுக்காக அல்ல!

அதே சமயம் இறந்தவர் மரணிப்பதற்கு முன்பு குர்பானி கொடுக்கும்படி யாரிடமாவது கூறிச் சென்றிருந்தாலோ அல்லது அவர் ஆசைப்பட்டிருந்தாலோ அவர் சார்பில் கொடுக்கலாம். ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்துவிட்டு இறந்தவர்களுக்காக அவர்களது உறவினர்கள் அதை நிறைவேற்ற நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள் என்பதின் மூலம் மேற்கூறிய சட்டமும் நமக்கு கிடைக்கிறது.

(உக்பா இப்னு ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று '(அல்லாஹ்வின் தூதரே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துக் கொண்டு (அதை நிறைவேற்றாமல்) இறந்துவிட்டார்' என்றார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் 'உன் சகோதரிக்கு கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்?' என்று கேட்டார்கள். அவர் 'ஆம் (நான் தான் நிறைவேற்றுவேன்)' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று; கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமைப் படைத்தவன்' என்றார்கள். 
                         அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரலி); நூல்:புகாரி (6699)

நபி(ஸல்) அவர்களுக்காக குர்பானி கொடுக்கலாமா?

நாங்கள் நபி(ஸல்) அவர்களுக்காக ஒரு குர்பானி கொடுக்கிறோம் என்று சிலர் வழக்கமாக்கி வருகிறார்கள். இதற்கு அல்லாஹ்வின் கட்டளையோ நபி(ஸல்)அவர்களின் வழிகாட்டுதலோ எதுவுமில்லை. எனவே இதுவும் மார்க்கத்தில் இல்லாததுதான்.

குர்பானிப் பிராணியைப் பயன்படுத்தலாமா?

குர்பானிக் கொடுப்பதற்காக வாங்கப்பட்ட ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றின் பாலை அருந்துவதையோ, அவற்றின் மீது பயணிப்பதையோ, அதன் மீது சுமைகளைத் சுமத்துவதையோ அல்லது அவைகளை உழுவதற்கு பயன்படுத்துவதையோ தவிர்ந்துக் கொள்ளவேண்டும். மேலும் அவற்றின் முடிகளை வெட்டியெடுத்து பயன்படுத்தவும் கூடாது. ஆனால் வெட்டுவதினால் பிராணிகளுக்கு எதுவும் பயன் உண்டு என்றால் வெட்டிக்கொள்ளலாம்.

அதேசமயம் மிகவும் தேவையுள்ள சந்தர்ப்ப‌த்தில் மட்டும் குர்பானிப் பிராணியை பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒருவருக்கு ஒரு ஒட்டகத்தைத் தவிர வேறு ஒட்டகம் இல்லை. இப்போது இவர் வேறு ஒட்டகத்தை பெறும் வரைக்கும் குர்பானி கொடுக்கவேண்டிய ஒட்டகத்தில் பயணிக்கலாம். அதிலிருந்து பால் கரந்து அருந்திக் கொள்ளலாம். ஆனால் மற்றொன்று இருக்கும்போது இதை பயன்படுத்தக் கூடாது. ஆடு, மாடுகளுக்குரிய சட்டமும் இதுபோன்றுதான்.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம் பலிப் பிராணியில் ஏறிச் செல்வதைப்பற்றிக் கேட்கப்பட்டது. அவர்கள் நபி(ஸல்) அவர்கள் "நீங்கள் அதில் ஏறிச் செல்லவேண்டிய நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டால் பயண வாகனம் கிடைக்கும்வரை முறையோடு அதில் ஏறிச் செல்க!" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள். 
            அறிவிப்பவர் : இப்னு ஜுரைஹ்(ரஹ்); நூல்:முஸ்லிம்(2346),(2347), நஸாயீ(2752),அபூதாவூத்(1498), அஹ்மத்(14230)

மேலும் நபி(ஸல்) அவர்கள் ஒரு நபித்தோழர் சிரமத்துடன் குர்பானி ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு சென்றதைப் பார்த்தபோது அதில் ஏறி சவாரி செய்யும்படி கட்டளையிட்டுள்ளார்கள். 

ஒருவர் தமது குர்பானி ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் "அதில் ஏறிக் கொள்ளும்" என்றார்கள். அதற்கவர் "இது குர்பானி ஒட்டகமாயிற்றே!" என்றதும் "(பரவாயில்லை) அதில் ஏறிக்கொள்ளும்" என்றார்கள். மீண்டும் அவர் "இது குர்பானி ஒட்டகமாயிற்றே!" என்றதும் "(பரவாயில்லை) அதில் ஏறிக்கொள்ளும்" என மூன்றாம் தடவையும் கூறினார்கள். 
                  அறிவிப்பவர் : அனஸ்(ரலி); நூல்:புகாரி(1690)

நபி(ஸல்) அவர்கள் சிரமத்தின்போது பயணிப்பதற்கு சலுகை வழங்கியுள்ளார்கள். இன்றைய காலகட்டத்தில் பயணிப்பதற்கு கால்நடைகள் பெருமளவில் பயன்படுத்தப்படவில்லையென்றாலும், பால் கரப்பது போன்ற மற்ற விஷயங்களிலும் கஷ்டமான சூழ்நிலையில் இதுபோன்றே நமக்கு அனுமதியுள்ளது என்பதை இதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

பொது நிதியிருந்து குர்பானி கொடுத்தல்

வசதியுள்ளவர்கள் மட்டுமின்றி வசதியற்றவர்களும் குர்பானி கொடுப்பதற்கான ஏற்பாட்டை நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தி இருந்தார்கள். அவர்கள் நடைமுறைப்படுத்திய 'ஜகாத்' என்ற‌ பொருளாதாரக் கொள்கை காரணமாக அரசுக் கருவூலத்தில் ஏராளமாக நிதி குவிய ஆரம்பித்தது. ஆரம்பக் காலத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிடக்கூட வசதியற்றிருந்த ஒரு சமுதாயம் மிக உன்னதமான பொருளாதார முன்னேற்றத்தை எட்டியது. இவ்வாறு செல்வச் செழிப்பு ஏற்பட்ட காலத்தில் குர்பானி கொடுக்க விரும்புகிறவர்களுக்கு குர்பானிப் பிராணிகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வழங்கினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் குர்பானிப் பிராணிகளை மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தனர். எனக்கு ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டிதான் கிடைத்தது. 'அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஆறு மாதக் குட்டிதானே கிடைத்துள்ளது' எனக் கூறினேன். 'அதையே நீர் குர்பானி கொடுப்பீராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
   அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர்(ரலி); நூல்கள்: புகாரி(5547), முஸ்லிம் (3634)

பொது நிதியிலிருந்து குர்பானிப் பிராணிகள் வழங்கப்படும் வழக்கம் நபி(ஸல்) அவர்களது காலத்தில் இருந்ததை இந்த ஹதீஸிருந்து அறிந்துக் கொள்ளலாம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்!
(முற்றும்)

(இதைத் தொகுப்பதற்கு உதவியாக இருந்தவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்கட்டுமாக!)

15 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

    அஸ்மா! எல்லாவற்றையும் அழகா விளக்கமாக கூறியுள்ளீர்கள்.

    கூலியாக குர்பானி இறைச்சியை தான் கொடுக்க கூடாது. ஆனால் அவர் முஸ்லீம் மற்றும் தெரிந்தவர் என்ற அடிப்படையில் இறைச்சி கொடுக்கலாம் தானே!

    ReplyDelete
  2. @ ஆமினா...

    //அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

    அஸ்மா! எல்லாவற்றையும் அழகா விளக்கமாக கூறியுள்ளீர்கள்.

    கூலியாக குர்பானி இறைச்சியை தான் கொடுக்க கூடாது. ஆனால் அவர் முஸ்லீம் மற்றும் தெரிந்தவர் என்ற அடிப்படையில் இறைச்சி கொடுக்கலாம் தானே!//

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...! குர்பானிப் பிராணியின் கறியோ, தோலோ எதுவாக இருந்தாலும், கூலி என்ற அடிப்படையில்தான் கொடுக்கக் கூடாது ஆமினா. ஆனால் தனியாக முதலில் கூலியைக் கொடுத்துவிட்டு பிறகு கறியோ தோலோ எது வேண்டுமானாலும் கூடுதலாக கொடுக்கலாம். வேறு சந்தேகங்கள் இருந்தாலும் கேளுங்க ஆமினா.

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்.நிறைய விஷயங்கள் இதன் மூலம் தெரிந்துக் கொண்டேன்.நீங்கள் மத்ரஸாவில் படித்திருப்பீர்கள் ..... அப்படித்தானே!அல்லாஹ் அருள் புரிவானாக.

    ReplyDelete
  4. @ zumaras...

    //மாஷா அல்லாஹ்.நிறைய விஷயங்கள் இதன் மூலம் தெரிந்துக் கொண்டேன்//

    உங்களுக்கு இவை பயனளித்ததில் மிக்க மகிழ்ச்சி. எல்லாப் புகழும் இறைவனுக்கே!

    //நீங்கள் மத்ரஸாவில் படித்திருப்பீர்கள் ..... அப்படித்தானே!அல்லாஹ் அருள் புரிவானாக// அப்படியேதான் :) துஆ செய்யுங்கள் சகோ.

    ReplyDelete
  5. இதன் மூலம் ஒரு நல்ல தெளிவு கிடைத்தது .

    நன்றிகள் பல கூறினாலும் அவை இன்றியே நீர் எழுதுள்ளிர்.

    ReplyDelete
  6. @ Mohamed Ayoub K...

    //இதன் மூலம் ஒரு நல்ல தெளிவு கிடைத்தது// அல்ஹம்துலில்லாஹ்!

    //நன்றிகள் பல கூறினாலும் அவை இன்றியே நீர் எழுதுள்ளிர்// :-)

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும்!

    சட்டங்களை பலரும் விளங்கிக் கொள்ளும் வண்ணம் மிக எளிதாக விளக்கியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள் சகோதரி.

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    மாஸா அல்லாஹ்!

    அறியாத சில செய்திகள்
    அற்புதமான விளக்கங்கள்!

    தாமதமாக வந்தாலும் மூன்று பதிவுகளையும் முழுமூச்சாய் படித்துவிட்டேன்.(அவ்வளவு விறுவிறுப்பான நடை!)

    சரியான நேரத்தில் அந்தந்த பதிவுகளை தொகுப்பதில் சகோ.அஸ்மாவை மிஞ்ச யாரும் இல்லை!

    பாராட்டுக்கள் சகோதரி!

    ReplyDelete
  9. @ சுவனப்பிரியன்...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  10. @ மு.ஜபருல்லாஹ்...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    //மாஸா அல்லாஹ்!

    அறியாத சில செய்திகள்
    அற்புதமான விளக்கங்கள்!

    தாமதமாக வந்தாலும் மூன்று பதிவுகளையும் முழுமூச்சாய் படித்துவிட்டேன்.(அவ்வளவு விறுவிறுப்பான நடை!)//

    மாஷா அல்லாஹ்... அல்ஹம்துலில்லாஹ்! முழுமையாய் படித்தவரை சந்தோஷம்.

    //சரியான நேரத்தில் அந்தந்த பதிவுகளை தொகுப்பதில் சகோ.அஸ்மாவை மிஞ்ச யாரும் இல்லை!//

    அப்படியெல்லாம் இல்லை சகோ :) நம்மனைவருக்கும் இறைவன் கல்வி ஞானத்தை அதிகப்படுத்திக் கொடுப்பானாக! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும்
    காஃபீர்களுக்கு இறைச்சிவழங்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. வ‌அலைக்குமுஸ்ஸலாம். உங்கள் கேள்வி கவனிக்கப்படாமல் தாமதமான பதில் தருவதற்கு மன்னிக்கவும்.

      //காஃபீர்களுக்கு இறைச்சிவழங்கலாமா?//

      குர்பானி இறைச்சிகளை காஃபிர்களுக்கு கொடுக்க இஸ்லாம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. குர்ஆனின் (22:36) வது வசனத்தில்,

      "அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்" என்று,

      ஏழைகள், யாசிப்பவர்கள் என பொதுவாகதான் அல்லாஹ் கூறுகிறான். எனவே முஸ்லிமான ஏழைகளுக்கு வழங்குவதுபோல் முஸ்லிமல்லாத ஏழைகளுக்கும் வழங்குவதில் எந்த தவறுமில்லை.

      ஆனாலும் நாம் ஒன்றை கவனிக்கவேண்டும். ஹஜ் பெருநாளும் அதைச் சார்ந்த குர்பானியும் முஸ்லிம்களுக்கான விசேஷ நாட்களாக இருப்பதால், முஸ்லிம் ஏழைகள் அந்த பெருநாள் அன்றும் சிரமப்படக்கூடாது என்ற நோக்கத்தில்தான் நமக்கு குர்பானி வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே குர்பானி இறைச்சிகளை வழங்குவதில் முஸ்லிம்களுக்குத்தான் அதிக முன்னுரிமை அளிக்கவேண்டும். நீங்கள் அவர்களுக்கு கொடுத்தது போக மீதமிருந்தால் முஸ்லிமல்லாதவர்களுக்கும் வழங்கலாம்.

      Delete
    2. இதில் இன்னொரு முக்கிய அம்சமும் உள்ளது. நீங்கள் குர்பானியின் இறைச்சியை கொடுக்க விரும்பும் அந்த மாற்று மதத்தவ‌ர் முஸ்லிம்களுக்கு தொல்லை கொடுக்காதவராகவும், இஸ்லாத்திற்கு எதிராக போராடாதவராகவும் இருக்கவேண்டும். அல்லாஹ் கூறுகிறான்,

      "(விசுவாசிகளே!) மார்க்க (விஷய)த்தில் உங்களுடன் எதிர்த்துப்போரிடாமலும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அத்தகையோருக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்கள் பால் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் இறைவன் தடுக்க வில்லை, நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்வோரை நேசிக்கிறான்." (60:08)

      Delete
  12. Allahvin beral kutukkalamla saho

    ReplyDelete
    Replies
    1. அல்லாஹ்வின் பெயர் சொல்லிதான் நமக்கு உண்ண அனுமதிக்கப்பட்ட எந்த பிராணியையும் அறுக்கவேண்டும். ஆனால் இதல்லாமல், குர்பானி கொடுக்கும்போது அல்லாஹ்வின் பெயரில் என்றும் நபி(ஸல்) அவர்களின் பெயரில் என்றும் நிய்யத் வைத்துக் கொண்டு சிலர் குர்பானி கொடுக்கிறார்கள். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமுமில்லை.

      Delete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!