Friday, 17 January 2020

பாகப்பிரிவினைப் பற்றி கேள்வி கேட்கும்போது...

பாகப்பிரிவினை சம்பந்தமாக கேள்வி கேட்பவர் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு சொத்துப் பங்கீடு பற்றி கேள்வி கேட்கும்போது தன்னை மையமாக வைத்து மற்ற உறவினரைக் குறிப்பிட்டால் பதில் சொல்பவருக்கு குழப்பம் ஏற்படும். அதுபோன்று, நாம் கொடுக்கும் விபரங்கள் தவறாக இருந்தாலோ, ஏதாவது விடுபட்டிருந்தாலோ அதனடிப்படையில் அளிக்கும் ஃபத்வாவும் தவறாக அமைந்துவிடும். எனவே வாரிசுரிமைச் சட்டம் குறித்து நாம் மார்க்கத் தீர்ப்பு கேட்கும்போது, சொத்துக்கு உரிமையாளர் யாரோ அவரை மையமாக வைத்துதான் அவருடைய மற்ற உறவுகளைக் குறிப்பிட வேண்டும். அத்துடன் வாரிசுகள் யாரும் விடுபட்டுவிடாமல் சொத்தைப் பெறக் கூடியவர்கள் அனைவரையும் குறிப்பிட வேண்டும். (சொத்துக்கான வாரிசுகளின் பட்டியலை கீழுள்ள விளக்கப் படத்தில் பார்க்கவும்) ▼

Islamic Inheritance Tree

உதாரணமாக, கேள்வி கேட்பவரின் தந்தை மரணித்துவிட்டால், "என் தந்தை மரணித்துவிட்டார், எனக்கு 1 அண்ணன், 2 தங்கைகள், எனக்கு தாயார் இருக்கிறார், எனக்கு பாட்டனார் இருக்கிறார்" என்று தனது நிலையில் வைத்து வாரிசுகளைக் குறிப்பிடக் கூடாது. மரணித்தவர் அவருடைய தந்தையாக இருந்தால், "என் தந்தைக்கு இத்தனை ஆண் பிள்ளைகள், இத்தனை பெண் பிள்ளைகள், அவருக்கு இத்தனை மனைவிகள், அவருடைய தகப்பனாரும் இருக்கிறார்" என்று (தன்னையும் சேர்த்து) தந்தையின் வாரிசுதாரர்களைக் குறிப்பிட வேண்டும். அதாவது,
 
➤ சொத்து இருக்கும் நிலையில் இறந்தவர் யார்?

➤ அவர் இறக்கும்போது அந்த சொத்துக்கு உரிமையுடைய அவருடைய வாரிசுகளில் யார் யார் உயிருடன் இருந்தார்கள்?

➤ பிள்ளைகளில் எத்தனை பேர் ஆண்மக்கள்? பெண் மக்கள் எத்தனை பேர்?

➤ (மனைவியைப் பற்றி சொல்லும்போது) ஒரேயொரு மனைவியா அல்லது அவர் இறக்கும்போது எத்தனை மனைவிகள் இருந்தார்கள்?

➤ அவர் மரணிக்கும்போது மனைவி கர்ப்பமாக இருந்தாரா? அந்தக் குழந்தை பிறந்து இறந்துவிட்டதா அல்லது உயிரோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறதா?

➤ இறந்தவருடைய தாய், தந்தை உயிருடன் இருந்தார்களா?

➤ மரணித்தவரின் சொத்தைப் பிரிக்கும் முன்னால் அவருடைய வாரிசுகளில் யாராவது இறந்துவிட்டார்களா?

➤ அவர் மரணிக்கும் முன்பு யாரிடமாவது கடன் வாங்கியிருந்தாரா? அல்லது யாருக்காவது மரண சாஸனம் செய்திருந்தாரா?

➤ மரணித்தவரின் நெருக்கமான வாரிசுகள் யாருமில்லை என்றால் மற்ற உறவினர்களில் யார் யார் உயிருடன் இருக்கிறார்கள்?

இதுபோன்ற எல்லா விபரங்களையும் முழுமையாகக் குறிப்பிட வேண்டும். ஒவ்வொருவரின் நிலைக்கேற்ப அதற்குரிய சட்டங்களும் மாறுபடும்.

நிர்ணயிக்கப்பட்ட அளவுகளும் கொடுக்க வேண்டிய பங்குகளும்

அதேபோன்று இன்னொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அளவுகளையும் கொடுக்க வேண்டிய பங்குகளையும் சிலர் குழப்பிக் கொள்கின்றனர். 'நிர்ணயிக்கப்பட்ட அளவுகள்' என்பது வேறு, 'கொடுக்க வேண்டிய பங்குகள்' என்பது வேறு. இரண்டிற்குமுள்ள வித்தியாசம் என்ன?

அதாவது, யாருக்கு எத்தனை விகிதங்கள் கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதோ அந்த பின்ன (Fractions) அளவுகளைதான் "நிர்ணயிக்கப்பட்ட அளவுகள்" என்கிறோம். அந்த அளவுகளை வைத்து ஒரு பொருளைப் பங்கிடும்போது ஒவ்வொருவருக்கும் எத்தனைப் பங்குகள் கொடுக்கிறோமோ அவற்றைதான் "பங்குகள்" (Quota) என்கிறோம் என்பதை முதலில் தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டும்.


மேலுள்ள படத்தில் உதாரணமாக காட்டியுள்ளது போன்று பின்ன எண்களாக வரக்கூடியவை "நிர்ணயிக்கப்பட்ட அளவுகள்" ஆகும். அதைப் பங்கிட்ட பிறகுள்ள ஒவ்வொரு துண்டுகளும் "பங்குகள்" ஆகும்.

நம்மிடம் பாகப்பிரிவினைக் கணக்குகளைக் கொடுத்து பங்கிடச் சொன்னால், இன்னாருக்கு இந்த மொத்த எண்ணிக்கையில் இத்தனை பங்குகள் என்று இஸ்லாம் நிர்ணயித்துள்ள (¼, ½, ⅓, ⅔, ⅙, ⅛ ) இந்த அளவுகளை மட்டும் கூறுவது பங்கீடு அல்ல. இவற்றை அடிப்படையாக வைத்து யாருக்கு எவ்வளவு பங்குகள் என்று அதற்குரிய முறைகளின்படி பங்குகளை மீதமில்லாமல் பிரிக்கத் தெரிந்திருக்கவேண்டும். அதைப்பற்றிய கல்விதான் சொத்துரிமைக் கல்வியாகும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!