அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday, 21 August 2010

சுன்னத்தான நோன்புகளும் நோன்பு நோற்கக் கூடாத நாட்களும்


சுன்னத்தான நோன்புகள்:-



• ஆறு நோன்புகள்


ரமலான் மாதத்திற்கு அடுத்த ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பதற்கு நபி (ஸஸ்)அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

‘யார் ரமலான் மாதம் நோன்பு நோற்று, அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறுநாட்கள் நோன்பு நோற்கிறாரோ, அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.’
              அறிவிப்பவர்: அபூ அய்யூப்(ரலி); நூல்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி.

• வியாழன் மற்றும் திங்கள் தோறும் நோன்பு நோற்பது

‘நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள்.’
       அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி); நூல்:அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா.

‘ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கட்கிழமைகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்பிக்கப்படுகின்றன. எனவே, நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.’
      அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா.

• முஹர்ரம் மாத (ஆஷூரா)நோன்பு

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவ்னையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.
        அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய (ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும் நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள்.
           அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்: முஸ்லிம்.

விளக்கம்: அதாவது, ஃபிர்அவ்னிடமிருந்து மூஸா(அலை)அவர்களை அல்லாஹ் காப்பாற்றியதற்கு (அல்லாஹ்வுக்கு) நன்றி கூறும் விதமாக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றதைப் பின்பற்றி அதே ஆஷூரா(முஹர்ரம் பத்தாவது) நாளில் யூதர்களும் நோன்பு நோற்றிருப்பதை நபி(ஸல்)அவர்கள் பார்க்கிறார்கள். அப்போது நபி(ஸல்)அவர்கள் "நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள்" என்று கூறிவிட்டு அந்நாளில் நோன்பும் நோற்கிறார்கள், நோன்பு நோற்குமாறும் மக்களுக்கு கட்டளையிடுகிறார்கள். முதல் ஹதீஸ் இதைத்தான் கூறுகிறது.

அன்றைய தினம் பத்தாவது நாளாக இருந்ததால், அன்று மட்டுமே நோன்பை நோற்றுவிட்டு, யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யவேண்டும் என்பதற்காக "நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்" என்று கூறினார்கள். ஆனால் அந்த வருடத்திற்கு பிறகு நபி(ஸல்)அவர்கள் மரணித்துவிட்டார்கள். இதுதான் இரண்டாவது ஹதீஸின் கருத்து.

அதே சமயம், நபி(ஸல்)அவர்கள் அடுத்த வருடம் ஒன்பதாவது நாளும் சேர்த்து நோன்பு நோற்பதற்கு முன்பே மரணித்துவிட்டாலும், ஒன்பதாம் நாளும் சேர்த்து நோன்பு வைத்து யூதர்களுக்கு மாற்றம் செய்யும்படி நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளதால் நாம் முஹர்ரம் 9, 10 ஆகிய இரண்டு நாட்களிலும் நோன்பு நோற்கவேண்டும்.


• மாதத்தில் மூன்று நோன்புகள்

மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும், ரமளானில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்பதாக அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
            அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி); நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்.

''நீர் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்றால் அதை பதிமூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நாட்களில் நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
            அறிவிப்பவர்: அபூதர் (ரலி); நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்.

• அரஃபா நோன்பு

துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று ஹாஜிகள் தவிர்ந்த மற்றவர்கள் நோன்பு நோற்கவேண்டும்.

‘அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம், மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’
                         (நூல்: முஸ்லிம்)


ஆனால் இந்த நோன்பை, அரஃபாவில் (அந்த நாளில்) தங்கியிருக்கும் ஹாஜிகள் மட்டும் நோற்கக் கூடாது.

அரஃபா தினத்தன்று, அரஃபா மைதானத்தில் (கூடியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.
           அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்:அபூதாவூத், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா.


(அரஃபா நோன்பு பற்றிய கூடுதல் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்)


நோன்பு நோற்கக் கூடாத நாட்கள்:-


• இரண்டு பெருநாட்களும் ஹஜ்ஜுப் பெருநாளைத் தொடர்ந்து வரக்கூடிய‌(தஷ்ரீக்குடைய) மூன்று நாட்களும்

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள், அதையடுத்த மூன்று நாட்கள் (தஷ்ரீக்குடைய 3 நாட்கள்) ஆகிய ஐந்து நாட்கள் நோன்பு நோற்பது நபி (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்டுள்ளது.

‘நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள்.’
                 அறிவிப்பவர்: அபூஸயீத்(ரலி); நூல்: புகாரி, முஸ்லிம்.

‘தஷ்ரீக்குடைய நாட்கள் (துல்ஹஜ் பிறை 11,12,13) உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும். அந்நாட்களில் எந்த நோன்பும் கிடையாது என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.’
                அறிவிப்பவர்: ஸஃது (ரலி); நூல்: அஹ்மத்.

ஷஃஅபான் மாதத்தின் இறுதி இரண்டு நாட்கள்

‘ரமளானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும்போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம், வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர. அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

            அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புஹாரி, முஸ்லிம்

சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கக்கூடாது

ஷஅபான் முப்பதாம் இரவா? ரமலானின் முதல் இரவா? என்ற சந்தேகம் ஏற்படும் நாளிலும் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
‘(ரமலானா? ஷவ்வாலா? என்று) சந்தேகம் உள்ள நாளில் யார் நோன்பு நோற்கிறாரோ அவர் நபி (ஸல்)அவர்களுக்கு மாறு செய்து விட்டார்.’

• வெள்ளிக்கிழமை மட்டும் தனித்து நோன்பு நோற்கக்கூடாது

நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம் வெள்ளிக்கிழமை நோன்பை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களா? என்று வினவினேன் அதற்கு ''ஆம்'' என்றார்கள்.
             அறிவிப்பவர்: முஹம்மது பின் அப்பாத்(ரஹ்); நூல்கள்:புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

''உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முந்திய நாள் அல்லது அடுத்த நாள் சேர்த்து நோன்பு நோற்றாலன்றி வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
               அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்கள்: புகாரி, முஸ்லிம்



வெள்ளிக்கிழமை நான் நோன்பு நோற்றிருந்தபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். 'நேற்று நோன்பு நோற்றாயா?' என்று கேட்டார்கள். நான் 'இல்லை' என்றேன். 'நாளை நோன்பு நோற்கும் எண்ணம் உள்ளதா?' என்று கேட்டார்கள். நான் 'இல்லை' என்றேன். 'அப்படியானால் நோன்பை விட்டு விடு' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                அறிவிப்பவர்: ஜுவைரிய்யா(ரலி); நூல்:புகாரி


வெள்ளிக்கிழமையுடன் இன்னொரு நாள் சேர்த்துதான் நோன்பு நோற்க வேண்டும். அப்படி வெள்ளிக்கிழமை மட்டும் தனித்து நோன்பு நோற்றிருந்தால், அதை முறித்து விட வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறிய முடிகிறது.

நம‌க்கு வெள்ளிக்கிழமை என்பது வாராந்திர பெருநாள் போன்றதாகும், அதனாலேயே அந்த நாளில் நோன்பு நோற்க தடுக்கப்பட்டுள்ளது என்பதை பின் வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

'நிச்சயமாக வெள்ளிக்கிழமை உங்களுக்கு பெருநாளாகும். ஆகவே அதற்கு முன்போ அல்லது பின்போ நோன்பு நோற்றாலே தவிர, அதில் நோன்பு நோற்காதீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
           அறிவிப்பவர்: அம்ர் அல் அஸரி(ரலி); நூல்: அல்பஸ்ஸார்

'இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவை மட்டும் இரவுத் தொழுகைக்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள். தினங்களில் வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் நோன்பு நோற்பதற்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள். உங்களில் ஒருவர் (வழக்கமாக) நோன்பு நோற்கும் நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்து விட்டால் தவிர' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
         அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்லிம்

இந்த ஹதீஸ் வெள்ளிக்கிழமை மட்டும் தனித்து நோன்பு வைக்கக் கூடாது என்பதையும் யாரெல்லாம் அவ்வாறு வெள்ளிக்கிழமை நோன்பு வைக்க சலுகை பெற்றவர்கள் என்பதையும் தெளிவாக கூறுகிறது. ஆக, நாமாக விரும்பி நோற்கக்கூடிய நஃபிலான நோன்பை வெள்ளிக்கிழமை தனித்து நோற்கக்கூடாது.

• காலமெல்லாம் தொடர் நோன்பு கூடாது

''நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ''நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே? என்று நபித்தோழர்கள் கேட்டனர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''நான் (எல்லா விஷயத்திலும்) உங்களைப் போன்றவனல்லன் நிச்சயமாக நான் உண்ணவும், பருகவும் வழங்கப்படுகிறேன் என்றோ உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவு பொழுதை கழிக்கிறேன் என்றோ கூறினார்கள்.
                     அறிவிப்பவர்: அனஸ்(ரலி); நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பீராக என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியபோது, இதைவிட எனக்கு அதிக சக்தியுள்ளது என்றேன். முடிவில் நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டு விடுவீராக அதுதான் நோன்புகளில் சிறந்ததாகும், என் சகோதரர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்கவே இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
             அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி); நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

பராஅத் நோன்பு என்றும் மிஃராஜ் நோன்பு என்றும் நோற்கக் கூடிய நோன்புகள் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத, குர்ஆன் ஹதீஸில் இடம்பெறாத, மக்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொண்ட பித்அத்தான நோன்புகளாகும். இதையும் கண்டிப்பாக‌ தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

16 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும் அஸ்மா ,
    உங்கள் வலைப்பூவில் எல்லாம்
    படித்தேன். இஸ்லாத்தை தெளிவாக
    விளக்குகிறீர்கள்.இன்னும் மேலும்
    சிறப்பாக எழுத என்னுடைய வாழ்த்துக்கள்.
    என் வலைபூ முகவரி
    iniyavasantham.blogspot.com
    நீங்கள் பார்த்து ,படித்துவிட்டு
    உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. வ அலைக்குமுஸ்ஸலாம் ஆயிஷா! உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! இன்ஷா அல்லாஹ் உங்கள் ப்ளாக் வந்து பார்க்கிறேன். தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா தெளிவாக அழகான முறையில் விளக்கியிருக்கிறிங்க. .

    ReplyDelete
  4. //அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா தெளிவாக அழகான முறையில் விளக்கியிருக்கிறிங்க. .//

    அல்ஹம்துலில்லாஹ்! தொடர்ந்து படிங்க ஃபாயிஜா!

    ReplyDelete
  5. இது அனைவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியது. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  6. @ இளம் தூயவன்....

    //இது அனைவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியது.// நிச்சயமா!

    ReplyDelete
  7. அல்ஹம்துலில்லாஹ் தவ்ஹீத் சிந்தனை உலகம் முழுவதும் பரவியுள்ளது.
    இதுப்போன்றப்பதிவுகள் இன்னும் பரவச்செய்யும் வாழ்த்துக்கள்

    அதே போல் வெள்ளிகிழமை சுன்னத்தான நோன்புவைக்க மறுத்துள்ளார்கள் .
    வியாழன் வெள்ளி அல்லது வெள்ளி சனி சேர்ந்தால்போல் வைக்க அனுமதியுள்ளது.

    ReplyDelete
  8. இன்னும் இது போன்ற நல்ல விஷயங்களை நிறைய எழுதுங்கள்...!!

    ReplyDelete
  9. @ ஜெய்லானி

    //இன்னும் இது போன்ற நல்ல விஷயங்களை நிறைய எழுதுங்கள்...!!// இன்ஷா அல்லாஹ்! தொடர்ந்து பாருங்கள்.

    ReplyDelete
  10. @ ராஜவம்சம்

    //அதே போல் வெள்ளிகிழமை சுன்னத்தான நோன்புவைக்க மறுத்துள்ளார்கள். வியாழன் வெள்ளி அல்லது வெள்ளி சனி சேர்ந்தால்போல் வைக்க அனுமதியுள்ளது.//

    விடுபட்டுவிட்டது, இப்போது சேர்த்துவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி, ஜஸாகல்லாஹூ ஹைரா.

    ReplyDelete
  11. Assalaamu alaikum Asma

    azhagaaga thelivaaga ezhudhiyirukkeenga.mukkiya farugalai veru kalaril kaattiyiruppadhu koodudhal sirappu..sorgam vs naragam thelivaaga nachenru irukku..romba ubayogamaana subjects aaga irukku...innum neraiya ezhudhunga..inshallah padikkiren


    Thalika

    ReplyDelete
  12. @ Thalika.....

    வ அலைக்குமுஸ்ஸலாம் தளிகா! அவ்வப்போது நீங்கள் கருத்து சொல்லும் உங்களின் மார்க்க ஆர்வத்தை நினைத்து சந்தோஷமாக உள்ளது, அல்ஹம்துலில்லாஹ்! தொடர்ந்து வந்து படிங்க. நானும் என்னால் இயன்றவரை பதிவிடுகிறேன். தொடர்ந்து எழுத இறைவனிடம் துஆ செய்யுங்கள். குழந்தைகளை வைத்துக்கொண்டு உங்களுக்கு தமிழ் டைப்பிங் சிரமமாக இருக்கும் என நினைக்கிறேன். முடிந்தால் தமிழ் டைப்பிங் செய்யுங்க.

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    லாத்தா....• முஹர்ரம் மாத (ஆஷூரா)நோன்பு • என்ற தலைப்பின் கீழ் //அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள் // என்றும் அடுத்த ஹதிஸில் //மேலும் நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள்.// என்றும் வந்துள்ளது.
    இங்கு முதல் ஹதிஸில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றார்கள் என்றும் இரண்டாம் ஹதிஸில் நோன்பு நோற்பதற்கு முன்னமே மரணமடைந்தார்கள் என்றும் வருகிறது. நான் இரண்டாம் ஹதிஸையே பெரும்பாலான இடங்களில் கேட்டிருக்கிறேன் இது முரண்படுவது போல் தெரிகிறதே, என் புரிதலில் தான் தவறு இருக்கும் என்று நினைக்கிறேன்.இன்ஷா அல்லாஹ் லாத்தா விளக்கவும்.

    ReplyDelete
  14. @ G u l a m...

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்....! முஹர்ரம் நோன்பு சம்பந்தமாக நீங்கள் கேட்ட சந்தேகங்களுக்கு, அதே தலைப்பின் கீழேயே இப்போது விளக்கம் சேர்த்துள்ளேன். அந்த ஹதீஸ்கள் முரண்படவில்லை. விளக்கம் போதுமானதாக உள்ளதா? தெளிவு கிடைத்ததா? என்று பார்த்து சொல்லுங்க!

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    அல்ஹம்துலில்லாஹ். எளிதாய் புரியும் வண்ணம் அழகான விளக்கம்

    ReplyDelete
  16. @ G u l a m...

    வ அலைக்குமுஸ்ஸலாம் தம்பி குலாம்! //....எளிதாய் புரியும் வண்ணம்......//

    அல்ஹம்துலில்லாஹ்!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை