அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Wednesday, 26 July 2023

ஆஷூரா நோன்பை எந்த நாட்களில் நோற்கவேண்டும்?

ஆஷூரா நோன்பை முஹர்ரம் பிறை 9, 10 இந்த இரண்டு நாட்களில் மட்டும்தான் நோற்க வேண்டுமா? அல்லது பிறை 10 & 11 - வது நாட்களிலும் நோற்கலாமா?

ஆஷூரா நோன்பை எந்த நாட்களில் நோற்கவேண்டும் என்ற விஷயத்தில் நம்மில் சிலர் ஆதாரமற்ற, தவறான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். அதாவது, முஹர்ரம் பிறை 9 & 10 அல்லது 10 & 11 - வது நாட்களிலும் ஆஷூரா நோன்பை நோற்கலாம் எனக் கூறுகின்றனர்.

"ஆஷூரா" என்ற அரபிச் சொல்லுக்கு தமிழில் "பத்தாவது" என்று பொருள். "அல்லாஹ்வுடைய மாதம்" என்று சொல்லப்பட்ட புனிதமிக்க இந்த முஹர்ரம் மாதத்தில், பத்தாவது நாள் இந்நோன்பு நோற்கப்படுவதால் இதற்கு "ஆஷூரா நோன்பு" (அதாவது பத்தாவது நாள் நோன்பு) என்று பெயர் சொல்லப்படுகிறது.

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அல்குர்ஆன் 9:36)

புனிதமான அந்த நான்கு மாதங்கள் எவை என்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருபவை. அவை துல்கஃஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜமாத்துல் ஆஹிர், ஷஃஅபான் ஆகிய மாதங்களுக்கு இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.

நூல்: புஹாரி (3197, 4406, 4662, 5550, 7447)

ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கின் முதல் மாதமாகிய 'முஹர்ரம் மாதம்' புனிதமிக்க நான்கு மாதங்களில் ஒன்றாகும். இந்த ஆஷூரா மாதத்தில் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் நமக்கு சுன்னத்தான நோன்புகளில் மிக சிறப்பிற்குரிய நோன்பாக ஆக்கியுள்ளார்கள்.

ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஃஅபாவுக்குப் புதிய திரைப் போடப்படும் நாளாகவும் இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, 'யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டுவிட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டுவிடட்டும்' என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: புஹாரி (1592)

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அறியாமைக்கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி(ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள், "நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டுவிடலாம்" எனக் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (1901)

மேற்கண்ட ஹதீஸ்கள் ஆஷூரா நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதும், சுன்னத்தானதும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

இவ்வளவு சிறப்புமிக்க இந்த ஆஷூரா நோன்பை நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழியில் நோற்றால்தான் அதற்குரிய நன்மைகளை நாம் அடைய முடியும். அப்படியானால், முஹர்ரம் மாதத்தின் எந்த நாட்களில் இந்த நோன்பை நாம் நோற்க வேண்டும்?

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், 'அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?' என்று வினவினர்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் (சேர்த்து) நோன்பு நோற்போம்' என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.

நூல்: முஸ்லிம் (2088)

அடுத்த ஆண்டுவரை நான் உயிரோடிருந்தால் ஒன்பதாவது நாளில் (சேர்த்து) நோன்பு நோற்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (2089)

நபி(ஸல்) அவர்கள் மறுவருடம் 10 - வது நாளுடன் 9- வது நாளையும் சேர்த்து நோன்பு நோற்காமல் அதற்கு முன்பே மரணித்துவிட்டாலும் யூத, கிறிஸ்தவர்களுக்கு மாறுசெய்யும் வகையில், "அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் (சேர்த்து) நோன்பு நோற்போம்" என்று அவர்கள் கூறிவிட்டதால், நாம் முஹர்ரம் பிறை 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களும் ஆஷூரா நோன்பு நோற்கவேண்டும். அதுதான் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையாகும்!

ஆனால், சிலர் ஆஷூரா 9 & 10 - வது நாளுடன் 11 - வது நாளும் சேர்த்து மூன்று நோன்புகளாகவோ அல்லது 9 & 10 இரண்டு நாட்களில் நோன்பு நோற்பதுபோல், 10 & 11 இரண்டு நாட்களில் நோன்பு நோற்கலாம் என்றும் கூறுகின்றனர். அதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ஆஷூரா நோன்பு வையுங்கள். அதில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மாற்றம் செய்யுங்கள். அதற்கு முந்திய நாளோ அல்லது அதற்கு பிந்திய நாளோ நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்."

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)நூல்: அஹ்மத் (2047, 2154), குப்ரா பைஹகீ (8405, 8406), முஸ்னத் பஸ்ஸார் (5238), இப்னு ஹுஸைமா (2095)

இது தொடர்பான அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு அபீ லைலா (محمد بن عبد الرحمن الأنصاري ) என்பவர் இடம் பெறுகிறார். இவர்  மனன சக்தியில் மிக மோசமானவர் ஆவார். இவரை பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். மேலும் இதில் வரும் தாவூத் பின் அலி (داود بن علي) என்பவரும் பலவீனமானவர். எனவே, இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

முஹர்ரம் 9 & 10 - வது நாட்களில் நோன்பு நோற்க வேண்டும் என்று வரக்கூடிய செய்திகள் மட்டும்தான் ஆதாரப்பூர்வமானவை ஆகும். எனவே 9,10 ஆகிய இரண்டு நாட்கள் தவிர, 11 - வது நாளையும் சேர்த்தோ அல்லது 9 - க்கு பதிலாக 10 & 11 - வது நாட்களில் நோன்பு நோற்பதோ கூடாது. அவை நபிவழிக்கு மாற்றமானவையாகும்.

Friday, 14 April 2023

ஸஹர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஃபஜ்ரு பாங்கு சொல்லப்பட்டால்...?

ஸஹர் நேரத்தில் நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஃபஜ்ரு பாங்கு சொல்லப்பட்டுவிட்டால் என்ன செய்வது? அதை அப்படியே வைத்துவிட்டு உணவு உட்கொள்வதை உடனே நிறுத்திக்கொள்ள வேண்டுமா? அல்லது நமது உணவுத் தட்டில் வைத்துள்ள உணவு முழுவதையும் சாப்பிட்டு முடியும்வரை தொடர்ந்து சாப்பிடலாமா?

இதில் சிலர் தவறான கருத்தை மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுசம்பந்தமாக வரக்கூடிய ஒரு செய்தி முறையாக ஆய்வு செய்யப்படாமல், Facebook, YouTube, WhatsApp போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதை சரியென்று நம்பி நடைமுறைப்படுத்தும் மக்களின் நோன்பும் இதனால் பாழாகக்கூடிய நிலை ஏற்படும் என்பதால், அதன் உண்மைத் தன்மையை அவசியம் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

Saturday, 8 April 2023

அமல்களுக்கான 'நிய்யத்'தை வாயால் மொழிய வேண்டுமா?

"நிய்யத்" என்றால் 'எண்ணம்' (மனதால் நினைப்பது) என்று பொருள். முஸ்லிம்கள் எந்த வணக்கத்தைச் செய்வதாக இருந்தாலும் 'இந்த வணக்கத்தை செய்கின்றோம்' என்ற எண்ணத்துடன்தான் செய்யவேண்டும். எந்த எண்ணமும் இல்லாமல் ஒரு வணக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது. எனவே ஒவ்வொரு வணக்கத்துக்கும் "நிய்யத்" என்னும் எண்ணம் அவசியமாகிறது.

நிய்யத்

Saturday, 1 April 2023

நோன்பு வைத்த நிலையில் இரத்த தானம் செய்தால் நோன்பு முறிந்துவிடுமா?

'இரத்த தானம்' செய்வது என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்ததில்லை. ஆனால், அவர்களின் காலத்துக்கு முன்பிருந்தே இரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்றும் ஒரு சிகிச்சை முறை அரபியர்களிடம் இருந்தது. நபி(ஸல்) அவர்களின் காலத்திலும், அதற்கடுத்த காலக் கட்டங்களிலும் அந்த வழக்கம் நோய் நிவாரணத்திற்காக நடைமுறையில் தொடர்ந்து இருந்துவந்தது.

தலையின் உச்சியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் துவாரமிட்டு, கொம்புப் போன்ற கருவியின் மூலம் அதை உறிஞ்சி இரத்தத்தை அவர்கள் வெளியேற்றி வந்தனர். கண்ணாடிக் குவளையைப் பயன்படுத்தியும் இவ்வாறு இரத்தத்தை வெளியேற்றி வந்தனர். அப்படி செய்வது கெட்ட இரத்தத்தை வெளியேற்றும் முறை என்றும், அது உடலுக்கு ஆரோக்கியமானது என்ற நம்பிக்கையும் இருந்தது. அதற்கு அரபியில் 'ஹிஜாமா (حجامة)' என்று சொல்வார்கள். இன்றளவும் பலர் அதை மருத்துவ வழிமுறைகளில் ஒன்றாக செய்துக்கொண்டுள்ளனர்.

Blood Donation in Islam

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த இந்த நடைமுறையை வைத்து, வேறு பல சட்டங்களை நாம் அறிந்துக் கொள்ளலாம். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا خَالِدٌ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي الْأَشْعَثِ عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ أَنَّهُ مَرَّ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَمَنَ الْفَتْحِ عَلَى رَجُلٍ يَحْتَجِمُ بِالْبَقِيعِ لِثَمَانِ عَشْرَةَ خَلَتْ مِنْ رَمَضَانَ وَهُوَ آخِذٌ بِيَدِي فَقَالَ أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ

"இரத்தம் கொடுப்பவரும், எடுப்பவரும் நோன்பை முறித்துவிட்டனர்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் கூறினார்கள். நூல்: அஹ்மத்

இந்தக் கருத்தில் இன்னும் பல ஹதீஸ்களும் உள்ளன. ஆனால், இரத்தம் கொடுப்பவரின் நோன்பு முறிந்துவிடும் என்ற இந்தச் சட்டம் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் நடைமுறையிலிருந்து பின்னர் மாற்றப்பட்டுவிட்டது.

الدارقطنى

 2283 – حَدَّثَنَا أَبُو الْقَاسِمِ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى عَنْ ثَابِتٍ الْبُنَانِىِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ أَوَّلُ مَا كُرِهَتِ الْحِجَامَةُ لِلصَّائِمِ أَنَّ جَعْفَرَ بْنَ أَبِى طَالِبٍ احْتَجَمَ وَهُوَ صَائِمٌ فَمَرَّ بِهِ النَّبِىُّ -صلى الله عليه وسلم- فَقَالَ « أَفْطَرَ هَذَانِ » ثُمَّ رَخَّصَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- بَعْدُ فِى الْحِجَامَةِ لِلصَّائِمِ وَكَانَ أَنَسٌ يَحْتَجِمُ وَهُوَ صَائِمٌ كُلُّهُمْ ثِقَاتٌ وَلاَ أَعْلَمُ لَهُ عِلَّةً.

ஆரம்பத்தில் ஜஅஃப‌ர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்தபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைக் கடந்துச் சென்றார்கள். அப்போது, "இரத்தம் கொடுத்தவரும், எடுத்தவரும் நோன்பை விட்டுவிட்டனர்" என்று  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினர்கள். அதற்கு (சில காலங்களுக்கு) பிறகு நோன்பாளி இரத்தம் கொடுக்க அனுமதி வழங்கினார்கள். நூல்: தாரகுத்னீ

இவ்வாறு நோன்பு நோற்றவர் உடலிலிருந்து இரத்தத்தை வெளியேற்றுவதற்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதித்ததை ஆதாரமாகக் கொண்டு, உயிர் காக்கும் அவசியத்தை முன்னிட்டு இரத்த தானம் செய்வதால் நோன்பு முறியாது என்பதை நாம் அறிந்துக் கொள்ளலாம்.

அதேசமயம், நோன்பு நோற்றவர் தன் உடலில் இரத்தம் ஏற்றிக் கொள்ளுதல், குளுக்கோஸ் ஏற்றிக் கொள்ளுதல், ஊசி மூலம் மருந்துகளை உடலில் ஏற்றிக் கொள்ளுதல் போன்றவற்றுக்கு இதை ஆதாரமாகக் காட்டமுடியாது. ஏனெனில் இரத்தத்தை வெளியேற்றுவதற்கும், உள்ளே செலுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. வெளியேற்றுவற்கு அனுமதியளிக்கப்பட்டது என்பது, உள்ளே செலுத்துவதற்கு பொருந்தாது.

அதுபோல், குளுக்கோஸ் ஏற்றும் அளவுக்கு ஒருவரது நிலை பலஹீனமாக இருந்தால் அவர் நோன்பை முறித்துவிட சலுகைப் பெற்றவராக இருக்கிறார். ஆனால், உணவு உட்கொண்டு நோன்பை முறித்து அந்த பலஹீனத்தைப் போக்கிக் கொள்வதற்கு பதிலாக குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டாலும் உணவு உட்கொண்டது போன்ற சக்தியைப் பெற இயலும். அப்படி செய்வது, ஒரு நோன்பாளி எதையும் உண்ணக் கூடாது என்ற தடையை மீறியதாகவே ஆகும். எனவே, ஒருவர் மிகவும் பலஹீனமான நிலையில் இருந்து குளுக்கோஸ் ஏற்றிக்கொள்ளும் தேவையோ, அவசர நிலையோ ஏற்பட்டால் அவ்வாறு ஏற்றிக்கொண்டு நோன்பை முறித்த பிறகு, முறித்த நோன்பை மற்றொரு நாளில் வைத்துக் கொள்ளலாம். குளுக்கோஸ் ஏற்றும் நிலைமை ஏற்படாமலே உடலுக்குத் தெம்பு ஏற்றும் நோக்கத்தில் குளுகோஸ் ஏற்றப்பட்டால் அதுவும் உணவுடைய நிலையில் உள்ளதால், அவ்வாறு செய்வதும் நோன்பை முறித்துவிடும்.

இதுபோலவே இரத்தம் ஏற்றும் நிலையும் சாதாரண நிலையில் நடப்பது அல்ல. உயிர் காக்கும் அசாதாரணமான நிலையில்தான் இரத்தம் ஏற்றவேண்டிய நிலை ஏற்படும். இதுபோன்ற நிலையை அடைந்தவர் நோன்பை விட்டுவிட சலுகைப் பெற்றுள்ளார். உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் நோன்பை விட்டுவிடுவது இவரைப் பொருத்தவரை கடமையாகவும் ஆகிவிடும். அப்படியொரு ஆபத்தான சூழ்நிலையிலும் நோன்பை விடாமல் ஒருவர் இரத்தம் ஏற்றிக்கொள்வார் எனில், அவ்வாறு இரத்தம் ஏற்றிக்கொள்வதன் மூலம் அவருடைய நோன்பு தானாகவே முறிந்துவிடும். ஏனெனில், நாம் ஏற்கனவே சொன்னதுபோல் இரத்தத்தை வெளியேற்றுவதற்கும், உள்ளே செலுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. மருத்துவ தேவைக்காக இரத்தத்தை வெளியேற்ற மட்டுமே நபி(ஸல்) அவர்களின் அனுமதி உள்ளது.

அதுபோல், ஊசி மூலம் மருந்து செலுத்தும் அளவுக்கு உடல்நிலை சரியில்லாதவரும் நோன்பை விட்டுவிட அனுமதி பெற்றவர்தான். உடலுக்குள் அவற்றைச் செலுத்தினால் வயிற்றுக்குள் சென்று செயல்படுவதைவிட விரைவாக இரத்தத்தில் கலப்பதால், அதுவும் உணவு உட்கொண்டது போல்தான் ஆகும். எனவே, மருந்துகளை ஊசி மூலம் உடலில் செலுத்துவதும் நோன்பை முறித்துவிடும். நோயாளியாக இருப்பவர் வேறு ஒரு நாளில் அந்த நோன்பை வைத்துக் கொள்ள இறைவன் தெளிவான வழிகாட்டியிருக்கும்போது இவர்கள் நோன்பை விட்டுவிடுவதே சிறப்பாகும்.

ஆக, நோன்பு வைத்துக்கொண்டு இரத்தம் கொடுப்பதால் பலஹீனம் ஏற்படும் என்ற நிலையிலுள்ளவர்கள் அதைத் தவிர்த்துக் கொள்ளலாமே தவிர, நீரிழிவு நோயாளிகள் வீட்டிலிருந்தே செய்யக்கூடிய மிகச் சிறிய அளவிலான இரத்தப் பரிசோதனை முதல், முழு இரத்தப் பரிசோதனைக்காக இரத்தம் கொடுப்பது, இரத்த தானம் செய்வது போன்ற அனைத்தும் நோன்பை முறிக்காது. 

மாறாக, குளுக்கோஸ் ஏற்றிக் கொள்வது, ஊசி மூலம் மருந்து ஏற்றிக்கொள்வது, இரத்தம் ஏற்றிக் கொள்வது போன்றவைதான் நோன்பை முறிக்கும். 

இவற்றை படங்கள் மூலமாகவும் நினைவில் வைத்துக் கொள்வோம்:

மருத்துவ ரீதியாக நோன்பை முறிக்காதவை:

இரத்தப் பரிசோதனை (Simple Blood Test)

இரத்த தானம் செய்வது (Blood Transfusion)


முழு இரத்தப் பரிசோதனை செய்வது (Blood Check up)

மருத்துவ ரீதியாக நோன்பை முறிப்பவை:

குளுக்கோஸ் ஏற்றுவது (Infusion)

ஊசி மூலம் மருந்து ஏற்றுவது (Injunction)

இரத்தம் ஏற்றிக் கொள்வது (Blood Infusion)


Wednesday, 29 March 2023

நோன்பு துறக்கும்போது என்ன துஆ ஓதவேண்டும்?

நீண்ட காலங்களாகவே பெரும்பாலான மக்கள், நோன்பு துறக்கும் ஓதும் துஆவாக, "அல்லாஹும்ம ல(க்)க சும்(த்)து.." என்று துவங்கும் துஆவை ஓதி வருகிறார்கள். இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதைப்பற்றி முதலில் பார்ப்போம்.


பயணிக்கும் பாதை