கேள்வி:
"அல்லாஹ்வுடைய படைப்பை (மனிதர்கள்) மாற்றி அமைப்பார்கள்" என்று ஷைத்தான் கூறுவதை வைத்து, பல்லுக்கு கம்பி கட்டக்கூடாது என்று கூறுகிறார்கள். அப்படியானால் உடல் எடையைக் குறைப்பது, கூட்டுவது போன்றவையும் கூடாதுதானே?
பதில்:
உங்கள் கேள்வியில் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். முதலில், "பற்களுக்கு க்ளிப் போடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?" என்பதைப் பற்றி பார்ப்போம்.
பற்கள் நேர்மாறாகவோ, குறுகலாகவோ, வளைந்தோ அல்லது அதிக இடைவெளியில் இருந்தாலோ அதை சரிசெய்யும் சிகிச்சையே (Braces Treatment) ப்ரேஸ் சிகிச்சையாகும். அதாவது, பற்களுக்கு க்ளிப் போடுவதாகும்.
பற்களை சீரமைக்க செய்யப்படும் இந்த க்ளிப் சிகிச்சை மூலம் பற்களின் மேல் கம்பிகள் வழியாக அந்த பற்களுக்கு சிறிது சிறிதாக அழுத்தம் கொடுத்து, சரியான அமைப்புக்கு கொண்டுவரும் முறை ஆகும்.
மருத்துவர் குறிப்பிடும் காலகட்டம்வரை அதை அணிந்திருந்துவிட்டு, பிறகு அவ்வப்போது கழற்றி, மாட்டக்கூடிய க்ளிப்பை ஒரு வருடத்துக்கு அணிந்திருக்க வேண்டியிருக்கும். இது இயற்கையான அமைப்புக்கு மாற்றமாக உள்ள குறைபாடுகளைச் சரிசெய்வதற்காக செய்யப்படும் சிகிச்சைதான் தவிர, இதில் எந்தவித உருவ மாற்றமும் ஏற்படாது.