அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, 17 June 2011

அன்று நீ...!அன்று இவ்வுலகில் உனக்கு இறுதி நாள் !
அதுதான் உன் மரணநாள்

அன்று நீ நினைத்திருக்கமாட்டாய்
உன் முந்திய வேளை உணவு உனக்கு கடைசியென்று!


அன்று நீ கண்மூடும் முன் பார்த்த பார்வையும்
உன் இறுதிப் பார்வையென எண்ணியிருக்க‌மாட்டாய்!


அன்று உன் உறவினர்களும் நண்பர்களும் அழுதாலும்
உன்னைக் காப்பாற்ற யாராலும் இயலாது!

அன்று அனைவரின் அழுகையும் உன் முடிவினால் என்றாலும்
நீ உலகைப் பிரியும் கடைசி நொடி - உனக்குள்

அன்று நீ அழுவதோ/சிரிப்பதோ 
உன் நல்ல/தீய செயல்களைப் பொறுத்தே அமையும்!

அன்று உன்னால் குளிக்க இயலாது - ஆனால்
நீ குளிப்பாட்டப்படுவாய்!

அன்று உன்னால் ஆடை அணிய இயலாது - ஆனால்
நீ ஆடை அணிவிக்கப்படுவாய்!

அன்று உன்னால் நறுமணம் பூசிக்கொள்ள இயலாது
நீ நறுமணம் பூசப்படுவாய்!

அன்று நீ யாரையும் பார்க்க இயலாது - ஆனால்
நீ அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படுவாய்!

அன்று உன்னால் பள்ளிக்குச் செல்ல இயலாது - ஆனால்
நீ பள்ளிக்கு கொண்டுச் செல்லப்படுவாய்!

அன்று உன்னால் தொழ இயலாது - ஆனால்
நீ முன்னால் வைக்கப்பட்டு உனக்காக தொழுகை நடத்தப்படும்!

அன்று உன்னால் இறைவனிடம் பிரார்த்திக்க இயலாது
நீ ஈடேற்றம் அடைய உனக்காக பிரார்த்திக்கப்படும்!

அன்று முதல் உன் குடும்பத்தினரோடு பஞ்சணையில் உறங்க இயலாது
நீ மண்குழிக்குள் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவாய்!

அன்று உன்னால் வீட்டிற்கு திரும்பி வர இயலாது - ஆனால்
உன்னை விட்டுவிட்டு உன் உறவினர்கள் வீடு திரும்பிவிடுவார்கள்!

அந்த 'அன்று' இன்றாகக் கூட இருக்கலாம் ‍- அதற்காக‌
உன் ஏக இறைவனை அஞ்சி தயாராகிக்கொள்!


அல்குர்ஆனின் சில வசனங்கள்:


"நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும். நீங்கள் மிகவும் உறுதியான‌ கோட்டைகளில் இருந்தபோதிலும் சரியே!" [அல்குர்ஆன் 4:78]

மனிதர்களே! உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்துக் கொள்ளுங்கள். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் அவ்விருவரிலிருந்து, ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருக‌ச் செய்தான்; எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். [அல்குர்ஆன் 4:1]

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சித்துப் பார்ப்பதற்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வர‌ப்படுவீர்கள். [அல்குர்ஆன் 21:35]

நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மரிக்கும்படிச் செய்கிறோம். மேலும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வரவேண்டியிருக்கிறது. [அல்குர்ஆன் 50:43]

அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் எனக் கருதியோர் நிச்சயமாக நஷ்டம் அடைந்துவிட்டனர். திடீரென அந்த (மறுமை நாள்) நேரம் அவர்களிடம் வரும்பொழுது 'உலகில் நாங்கள் வரம்பு மீறி நடந்துக் கொண்டதால் எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே!' என்று கூறுவார்கள். மேலும் தங்கள் முதுகுகளின் மேல் தங்கள் (பாவச்)சுமைகளை அவர்கள் சுமப்பார்கள். அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். [அல்குர்ஆன் 6:31] 

18 comments:

 1. அதிரா17 June 2011 at 18:02

  என்னால முடியேல்லை அஸ்மா ... நெஞ்செல்லாம் ஏதோ செய்யுது.

  ReplyDelete
 2. @ அதிரா...

  //என்னால முடியேல்லை அஸ்மா ... நெஞ்செல்லாம் ஏதோ செய்யுது//

  என்ன செய்ய அதிரா... வானத்திற்கு கீழே வீட்டைக் கட்டிக்கொண்டு மழைக்கு பயந்தால் முடியுமா..? :( வந்தே தீரும் அந்த 'அன்று'க்கு முன்னால் நம்மை முறையாக‌ தயார்படுத்திக் கொண்டால், அங்கு நமக்கு இறைவனின் கருணை கிடைக்கும்! வருகைக்கு நன்றி அதிரா.

  ReplyDelete
 3. //அந்த 'அன்று' இன்றாகக் கூட இருக்கலாம் ‍- அதற்காக‌
  உன் ஏக இறைவனை அஞ்சி தயாராகிக்கொள்!//உண்மை தான்..

  ரொம்ப அருமையாக எழுதி இருக்கின்றிங்க...

  ReplyDelete
 4. @ GEETHA ACHAL...

  ///உண்மை தான்..//

  ஆமாம்பா. இறையச்சத்துடன் கூடிய நற்செயல்கள் மட்டுமே நமக்கு அங்கே கைக்கொடுக்கும். வருகைக்கு நன்றி கீதாச்சல்!

  ReplyDelete
 5. என்னைப் பற்றி இப்போ எல்லாம் எனக்குப் பயமில்லை அஸ்மா.... கண்ணை மூடிவிட்டால் பின்பு என்ன நடக்குமோ தெரியாதே..., ஆனால், அந்நேரம் உயிரோடிருக்கும், எம் குடும்பம், சொந்த பந்தத்தின் மனநிலையைத்தான் நினைத்துப் பார்க்கவே முடியாமல் இருக்கு.

  ReplyDelete
 6. இதனை பிரிண்ட் செய்து தினம் தினம் படித்துப்பார்க்கவேண்டும் அஸ்மா.

  ReplyDelete
 7. @ அதிரா...

  //என்னைப் பற்றி இப்போ எல்லாம் எனக்குப் பயமில்லை அஸ்மா.... கண்ணை மூடிவிட்டால் பின்பு என்ன நடக்குமோ தெரியாதே...,//

  உங்களுடைய நம்பிக்கை எப்படியோ எனக்கு தெரியவில்லை அதிரா. நான் நம்பியுள்ளபடி, நாம் கண்ணை மூடிவிட்டால் இவ்வுலகில் நடப்பது மட்டும்தான் அதிரா நமக்கு தெரியாது. மறு உலகில் நுழைவத‌ற்கு திறக்கப்படும் வாசலே மரணம்! அப்போது நம்முடைய நல்ல/தீய செயல்களை வைத்து நம் ரிசல்ட் நிச்சயமா தெரியும். அதனால்தான் நல்ல ரிசல்ட்டுடன் மண்ணறயில் நுழைய நாம் தயாராகிக் கொள்ளவேண்டும் என்று சொன்னேன்.

  //ஆனால், அந்நேரம் உயிரோடிருக்கும், எம் குடும்பம், சொந்த பந்தத்தின் மனநிலையைத்தான் நினைத்துப் பார்க்கவே முடியாமல் இருக்கு//

  யார் மரணித்தாலும் ஆரம்பத்தில் ரொம்ப வேதனைப்படுகிறோம். நாட்கள் கடந்த பிறகு பிரிவை எண்ணி வருந்தினாலும், சகஜமான உலக வாழ்விற்கு திரும்பிவிடுகிறோம். அதுதான் மனித வாழ்வின் இயற்கையாகவும் உள்ளது. நமக்கு பிறகு நம் குடும்பத்தின் நிலையும் அப்படியே இருக்கும் அதிரா :(

  ReplyDelete
 8. @ ஸாதிகா...

  //இதனை பிரிண்ட் செய்து தினம் தினம் படித்துப்பார்க்கவேண்டும் அஸ்மா//

  கட்டாயம் மரணத்தை அவ்வப்போது சிந்தித்துப் பார்க்கவேண்டும்! ஆனால் இதை எழுதி வைத்த பிறகு சரியாக எழுதியுள்ளோமா என்று சரி பார்க்க மீண்டும் மீண்டும் நான் படித்து, நானே அப்செட்டாகிப் போனேன் ஸாதிகா அக்கா :(

  தினமும் அதுபற்றி சிந்திக்கும் மன திடத்தையும், அதற்காக தயாராகும் பக்குவத்தையும் நமக்கு இறைவன் தரட்டும், இன்ஷா அல்லாஹ்! வருகைக்கு நன்றி ஸாதிகா அக்கா.

  ReplyDelete
 9. அஸ்ஸலாமு அலைக்கும்,

  ஒவ்வொரு வரிகளும் எல்லோரையும் சிந்திக்க வைக்க கூடியது. யார் ஒருவர் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்களோ, அவர்களுக்கு நிச்சயம் இறை அச்சம் வந்து விடும்.

  ReplyDelete
 10. @ இளம் தூயவன்...

  வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

  //யார் ஒருவர் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்களோ, அவர்களுக்கு நிச்சயம் இறை அச்சம் வந்து விடும்//

  நிச்சயமா சகோ. இறையச்சத்துடன் வாழ்ந்து, அதேநிலையில் மரணிக்கும் பாக்கியம் நம் அனைவருக்கும் கிடைக்க இறைவன் உதவி செய்வானாக! வருகைக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  இப்பதிவை படிக்கும்போதே என்னுள் இது ஏற்படுத்திய தாக்கத்தை முழுமையாக இங்கே சொல்லமுடியாது.

  ஆனால், இப்பதிவின் ஒவ்வோர் வரியும் படிப்போர் நெஞ்சில் இறையச்சத்தை ஏற்படுத்தி, 'நானிலத்தில் நல்லோராய் நாம் வாழவேண்டும்' என்ற எண்ணத்தை ஊ(கூ)ட்டுகிறது.

  அருமையான ஆக்கம் சகோ.அஸ்மா.
  ஜசாக்கலாஹ் க்ஹைர்.

  ReplyDelete
 12. @ முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'...

  வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

  //இப்பதிவின் ஒவ்வோர் வரியும் படிப்போர் நெஞ்சில் இறையச்சத்தை ஏற்படுத்தி, 'நானிலத்தில் நல்லோராய் நாம் வாழவேண்டும்' என்ற எண்ணத்தை ஊ(கூ)ட்டுகிறது//

  அல்ஹம்துலில்லாஹ்! இறையச்சம் நம் மறுமை வாழ்வுக்கு அச்சாணியல்லவா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 13. ஒரு நடுக்கம் ஊடுருவிப் போகிறது. அந்த நாளை எதிர்கொள்ளும் திடத்தை இறைவன் தர வேண்டும்.

  ReplyDelete
 14. ஸலாம்
  மறுமையை ஞாபகபடுத்தும் அருமையான பதிவு.அனைவருக்கும் அந்நாளின் பாக்கியம் கிட்டட்டும்.ஆமீன்

  ReplyDelete
 15. @ ஹுஸைனம்மா...

  //ஒரு நடுக்கம் ஊடுருவிப் போகிறது. அந்த நாளை எதிர்கொள்ளும் திடத்தை இறைவன் தர வேண்டும்//

  இன்ஷா அல்லாஹ், நம் நற்செயல்களின் பயனை அந்த நேரத்தில் நமக்கு மன தைரியமாக இறைவன் ஆக்கிக் கொடுப்பான். வருகைக்கு நன்றி ஹுஸைனம்மா.

  ReplyDelete
 16. @ zumaras...

  ஸலாம்

  //அனைவருக்கும் அந்நாளின் பாக்கியம் கிட்டட்டும்.ஆமீன்//

  இன்ஷா அல்லாஹ்! வருகைக்கு நன்றிமா.

  ReplyDelete
 17. என்னதான் அழுதாலும் அவள்தான் பிள்ளை பெற்றாகனுமுன்னு ஒரு பழமொழி இருக்கு . அதுப்போல பல நேரங்களில் நான் இதை நினைத்து நடுங்குவதுன்டு .

  நான் இதுவரை செய்ததை இறைவன் ஏற்றுக் கொண்டுள்ளானா.. என்னுடைய பிராத்தனை அக்கீகரிக்கப்பட்டிருக்கான்னு தெரியாமல் மனதுக்குள்ளே புலம்புவதுண்டு ..

  இதை படிச்சதும் .இன்னும் நடுக்கமே அதிகமாகுது.

  இறைவனிடமிருந்து வந்தோம் .இன்னும் அவனிடமே திரும்ப வருபவர்களாக இருக்கிறோம்.


  ஜஸாக்குமுல்லாஹ் க்கைர்

  ReplyDelete
 18. @ ஜெய்லானி...

  //என்னதான் அழுதாலும் அவள்தான் பிள்ளை பெற்றாகனுமுன்னு ஒரு பழமொழி இருக்கு . அதுப்போல பல நேரங்களில் நான் இதை நினைத்து நடுங்குவதுன்டு .

  நான் இதுவரை செய்ததை இறைவன் ஏற்றுக் கொண்டுள்ளானா.. என்னுடைய பிராத்தனை அக்கீகரிக்கப்பட்டிருக்கான்னு தெரியாமல் மனதுக்குள்ளே புலம்புவதுண்டு ..

  இதை படிச்சதும் .இன்னும் நடுக்கமே அதிகமாகுது//

  நிச்சயமா சகோ, வந்த நாம் போய்தான் ஆகணும். நம் நிலை என்னன்னு நமக்கே தெரியாதபோது, அந்தக் கடைசிக் கட்டத்தை நினைத்தால் நம் உள்ளம் நடுங்கவே செய்யும். அந்த நேரத்தில் பாவமன்னிப்புக் கூட ஏற்றுக் கொள்ள‌ப்படாதாம்! அல்லாஹ் காப்பாற்றணும்.

  //இறைவனிடமிருந்து வந்தோம் .இன்னும் அவனிடமே திரும்ப வருபவர்களாக இருக்கிறோம்.

  ஜஸாக்குமுல்லாஹ் க்கைர்//

  அவனிடம் திரும்பிச் செல்லும் நேரம் வருவதற்குள் அதற்கான முன்னேற்பாடுகளை நாம் தயார் செய்துக் கொள்ள‌வேண்டுமல்லவா? அல்லாஹுதஆலா நம்மனைவருக்கும் அந்த 'கடைசிக் கட்டத்'தை சந்தோஷமாக‌ அடைய அருள்புரிவானாக!

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!