அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday, 1 October 2012

ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை!


லகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள். பல்வேறு தயாரிப்புகள், பணம், உடை, உணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது. எப்படி தவாஃப் செய்ய வேண்டும், எவ்வாறு இஹ்ராம் உடை அணிவது, மினாவிலும் அரஃபாவிலும் எவ்வாறு நடந்துக் கொள்ளவேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், மிக முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் மறந்து விடுகின்றனர். அது, உடல்நலம்!

ஹஜ்ஜின்போது ஹாஜிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகும் ஒரு விஷயம் "உடல்நலம்" குறித்ததாகும். ஏனெனில், ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களில் 60 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் 60 வயதிற்கு மேலுள்ள முதியவர்கள்தாம்!

பொதுவாகவே வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் பல்வேறு விதமான நோய்கள் "ஹஜ்" செய்வதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. இதனைத் தவிர்த்து "ஆரோக்கியமான ஹஜ்" ஜினை மேற்கொள்ள இதோ சில முக்கியமான வழிகாட்டுதல்கள்:

1. ஹஜ் பயணத்திற்கு முன் நடைப்பயிற்சி அவசியம்! எப்போது ஹஜ்ஜிற்காக "விண்ணப்பிக்கிறார்களோ" அந்நாள் முதல் ஹாஜிகள் செய்யவேண்டிய முதன்மையான பணி என்னவெனில், நடைப்பயிற்சிதான். நாள்தோறும் குறைந்தது 5 முதல் 7 கி.மீ வரை நடப்பது சாலச் சிறந்தது. அதுவும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே இப்பயிற்சியைத் தொடங்கவேண்டும்.

ஏனெனில், ஹஜ்ஜின்போது அதிகம் நடக்கவேண்டும். மினாவில் ஷைத்தான் மீது கல்லெறியக் கூடாரத்திலிருந்து வெகுதூரம் நடக்கவேண்டி வரும். அதே போல் அரஃபா முதல் முஸ்தலிஃபா வரை ஹாஜிகள் நடக்கும் சூழ்நிலை ஏற்படும். (இதன் தொலைவு 8 கி.மீ) எல்லாவற்றிற்கும் மேலாக ஹரம் ஷரீஃபில் அன்றாட தவாஃப் செய்ய எண்ணும் ஹாஜிகளுக்கு நடைப்பயிற்சி மிக மிக முக்கியம். கூட்ட மிகுதியான நாட்களில் ஒரு தவாஃப் முடிய நடக்கும் தூரம் பல கி.மீ வரை நீளும். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் ஹாஜிகள் மிகவும் கஷ்டப்படுவது "நடக்கும்" விஷயத்தில்தான்! காரணம், முதுமையான வயதில் ஹஜ்ஜை மேற்கொள்வது. அதிக வசதி வாய்ப்பு உள்ள முஸ்லிம்கள் நடப்பதே இல்லை என்றே கூறலாம். எனவே நடைப்பயிற்சி மிக மிக முக்கியம்.

2. ஹாஜிகளே! உங்களுடைய கால்களை பத்திரமாய் பார்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் ஹஜ்ஜின்போது கால்களுக்குத்தான் அதிக வேலை இருக்கும். எனவே காலில் எந்தவிதமான காயமோ புண்ணோ ஏற்படாமல் கவனித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக புதிதாக செருப்பு வாங்கி அணியாதீர்கள். இப்போது நீங்கள் பயன்படுத்தும் சாதாரணமாக காலணிகளில் இரண்டு ஜோடியினை நீங்கள் ஹஜ்ஜின்போது பயன்படுத்துங்கள். புதுச் செருப்புகள் ஏற்படுத்தும் பாதிப்புகளால் நீங்கள் நடப்பதில் சிக்கல் ஏற்படும்.

3. ஹாஜிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான இன்னோரு உண்மை, மக்கா மாநகரம் கடல் மட்டத்திலிருந்து பல மீட்டர் உயரத்திலிருக்கும் ஒரு பகுதி ஆகும். எனவே அங்கு காற்றழுத்தம் (ஆக்சிஜன்) குறைவாகும். எனவே நீண்ட தொலைவு நடப்பது என்பது நம்மூரில் நடப்பது போன்று எளிதன்று! ஹஜ்ஜில் "மெதுவாக" நடக்கவேண்டும். வேகமாக நடப்பதால் மூச்சுப் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

4. பல ஹஜ் குழுக்கள் மக்காவை ஹஜ்ஜிற்குப் பல நாட்களுக்கு முன்பே சென்றடைந்து விடுகின்றன. ஆர்வ மிகுதியால் ஹாஜிகள் தினமும் அதிகமதிகம் தவாஃப் செய்கின்றனர். உம்ராவும் செய்கின்றனர். தவாஃப் செய்வது முக்கியமானதுதான்! எனினும் ஹஜ்ஜுக்குரிய முக்கியமான ஐந்து நாட்களில் (துல்ஹஜ் 8 முதல் 13 வரை) செய்யப்பட வேண்டிய கிரியைகளுக்கு உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவேண்டியது மிக அவசியம். ஆனால் ஹாஜிகள் பலர் இந்நாட்களில் சோர்வு அடைந்து விடுகின்றனர். இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

5. ஆண்களைப் பொறுத்தவரை "இஹ்ராம்" உடையில் நடப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே உள்ளாடை எதுவும் அணியாமல் வேட்டி மட்டுமே அணிந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது உதவியாக இருக்கும்.

6. பெண்களில் சிலர் மாதவிடாயைத் தாமதப்படுத்துவதற்காக சில ஹார்மோன் மருந்துகளை ஒரு மாதகாலம் சாப்பிடுகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். அதிகபட்சம் 5 நாட்கள் இம்மாத்திரைகளைப் பயன்படுத்தலாம். அதுவும் பெண் மருத்துவரின் ஆலோசனையின்படி தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் தவிர இம்மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடு.

நோயாளிகளும் ஹஜ்ஜும்:

* ஹாஜிகள் பலர் உயர் ரத்த அழுத்தம் (BP) நீரழிவு முதலான நோயுள்ளவர்கள். இவர்கள் தங்களுடைய மருந்துகளை முறையாக உட்கொள்வதோடு மட்டுமன்றி உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்பவர்களுக்கு உணவைத் தாங்களே தயாரிப்பதால் உப்பு, சர்க்கரை, விஷயத்தில் பிரச்சினை இல்லை. ஆனால் தனியார் குழுக்களில் சர்க்கரை நோயாளிகளுக்குத் தேவையான உணவைத் தயாரிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இன்று பல தனியார் குழுக்கள் "சிறப்பு உணவினை" இது போன்ற நோயாளிகளுக்குத் தயாரிக்கின்றனர் என்பது மகிழ்ச்சியான செய்தி. ஆனால் ஹாஜிகள் உணவு விஷயத்தில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்.  

* சிறுநீர் தொந்தரவுள்ளவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். ஹரமில் கழிப்பறைக்குச் சென்று வரவேண்டுமெனில் அது மிகச் சிரமமானதாகும். எனவே ஒவ்வொரு தொழுகைக்கு முன்னும் அவர்கள் தங்களுடைய அறைகளிலே சிறிநீர் கழித்து ஒளு செய்துவிட்டு பள்ளிக்கு வருவது சிறந்ததாகும்.

* முக்கியமான ஒரு நோய் என்னவெனில் "சளி தொந்தரவு". சுமார் 35 லட்சம் மக்கள் சந்திக்கும் ஒரு இடத்தில் ''சளி தொந்தரவு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். ஹஜ் காலங்களில் (குறிப்பாக ஹஜ்ஜிற்குப் பிந்தைய காலங்களில்) பள்ளிவாயில்களில் இருமல் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். அதாவது ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் நுரையீரல் சளி நோய். இதற்கு மருந்துகள் பல இருப்பினும் மிகச் சிறந்த மருந்து "முன்னெச்சரிக்கை" தான். முகத்தில் "முகமூடி" அணிந்து கொள்வது இந்நோய் வராமல் பாதுகாக்கும். குறிப்பாக ஏ.சி. அறைகளிலும், ஏ.சி. பள்ளிவாயில்களிலும் இது மிக மிக வேகமாகப் பரவும். எனவே ஹாஜிகளில் எவருக்கேனும் இருமல், சளி இருந்தால் உடனடியாக மருந்து சாப்பிடுவது மட்டுமன்றி அவர்கள் தங்கியுள்ள அறைகளில் ஏ.சி.யை அணைத்து விட்டு ஜன்னல்களைத் திறந்து வைப்பது அவசியம்.

பல்வேறு விதமான நுரையீரல் சளி நோய்கள் இன்று உலகெங்கும் பரவி வருகின்றன. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற வைரஸ் நோய்களால் ஹாஜிகள் யாரும் பயப்படவேண்டாம். முகமூடி அணியுங்கள். அல்லாஹ் போதுமானவன்!

7. இறுதியாக, இந்தியாவிலிருந்து வரும் ஹாஜிகளுக்காக (அரசு மூலமும், தனியார் குழுக்கள் மூலமும்) மருத்துவக் குழு மக்காவிலும், மதீனாவிலும் செயல்படும். நீங்கள் தங்கியுள்ள பகுதிகளில் மருத்துவ மையமும், மருத்துவமனையும் அமைந்திருக்கும். இந்திய மருத்துவர்களால் நடத்தப்படுவதால் மொழிப் பிரச்சினையும் இல்லை. எனவே கவலைப்படாமல் இம்மையங்களை அணுகுங்கள்! தனியார் குழுக்களில் பல மருத்துவர்களை அழைத்து வருவதால் பிரச்சினை இல்லை. இதைத் தவிர சவூதி அரசினால் நடத்தப்படும் மருத்துவமனைகளும் 24 மணி நேரமும் அவசர சிகிச்சைகளை அளிக்கின்றன. எனவே ஹாஜிகள் கவலைப்படத் தேவையில்லை.

ஆக, ஹஜ்ஜிற்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களே! உங்களுடைய ஹஜ் ஆரோக்கியமாக அமைய வேண்டுமெனில் நீங்கள் முன்னெச்சரிக்கையாக நடந்துக் கொள்ளவேண்டும்.

உங்கள் பயணத்தில் நீங்கள் சில முக்கிய மருந்துகளை எடுத்துச் செல்லுங்கள்.

1. வலி நிவாரணக் களிம்புகள் (Ointment)
2. முகமூடிகள் (Face Masks)
3. சாதாரண காய்ச்சலுக்குண்டான மாத்திரைகள்
4. நீங்கள் ரத்த அழுத்தம் அல்லது நீரழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவரானால் அவற்றுக்குரிய மருந்துகளை உங்கள் பயண காலத்திற்குக் கணக்கிட்டு மொத்தமாக வாங்கி எடுத்துச் செல்லுங்கள்.
5. இருமல் சளிக்கான மருந்துகளை (Sirup) பிளாஸ்டிக் குப்பிகளில் எடுத்துச் செல்லுங்கள்.
6. தூக்க மாத்திரைகளும், வலி நிவாரணத்திற்குப் பயன்படுத்தும் சில மாத்திரைகளும் சவூதி அரசில் தடை செய்யப்பட்டவையாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
7. கொஞ்சம் பஞ்சினை மருந்துடன் வைத்துக் கொள்ளுங்கள். குளிர்காலத்தில் காதுகளை அடைத்துக் கொள்ள உதவும்.

நோயுள்ளவர்கள் தங்களுடைய மருத்துவச் சீட்டினை அவசியம் எடுத்துச் செல்லவேண்டும். ஜம் ஜம் தண்ணீரை அதிகம் பருகுங்கள். அது நோய் தீர்க்கும் அருமருந்தாகும்.

எனவே ஹாஜிகளே! உங்கள் ஹஜ்ஜை ஆரோக்கியமாக நிறைவேற்றுங்கள். சுறுசுறுப்பாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுங்கள்! உங்களுடைய ஹஜ்ஜை ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக இறைவன் ஆக்கியருள் புரிவானாக!

நன்றி : Dr. ஜெ.முஹ்யித்தீன் அப்துல் காதர் MBBS, MS.(இந்திய மருத்துவக் குழுவில் ஹஜ் பயணம் மேற்கொண்ட மருத்துவர்)

[இதில் கொடுக்கப்பட்டுள்ள பயனுள்ள தகவல்கள் முன்பு மெயிலில் வந்த ஞாபகம்! நான் பாதுகாத்து வைத்திருந்ததை இந்த வருடம் ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு உதவலாம் என பதிந்துள்ளேன். இதுவரை பார்க்காதவர்கள் பார்த்து குறித்துக் கொள்ளலாம்!]

* சகோ. சுவனப்பிரியன் அவர்களின் பயனுள்ள தகவல்களும் ஹாஜிகளுக்கு நிச்சயம் பயன்படும், இன்ஷா அல்லாஹ்! அதனை "ஹஜ் பயணம் இனி மெட்ரோ ரெயிலில்!" என்ற‌ லிங்கில் சென்று பார்க்கலாம்.

19 comments:

 1. விரிவான விளக்கம்... பேகம்பூரில் உள்ள எனது முஸ்லிம்கள் நண்பர்களுக்கு மிகவும் உதவும்... பகிர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. //விரிவான விளக்கம்... பேகம்பூரில் உள்ள எனது முஸ்லிம்கள் நண்பர்களுக்கு மிகவும் உதவும்... பகிர்கிறேன்...//

   கண்டிப்பா கொடுத்து உதவுங்கள், வருகைக்கு மிக்க நன்றி சகோ.

   Delete
 2. ஏ அப்பா இவ்வளவு விஷயங்கள் இருக்கா. விரிவான விளக்கங்கள் ஹஜ் பயணம் செல்கிறவர்கள் உடல் நலனில் அக்கரை கொள்ள வேண்டியதன் அவசியத்தை நன்றாக சொல்லி இருக்கிங்க

  ReplyDelete
  Replies
  1. //ஏ அப்பா இவ்வளவு விஷயங்கள் இருக்கா//

   ஆமா...! சுமார் 50 முதல் 60 லட்சம் மக்கள் கூடுமிடம் அல்லவா லஷ்மிம்மா? :)

   //விரிவான விளக்கங்கள் ஹஜ் பயணம் செல்கிறவர்கள் உடல் நலனில் அக்கரை கொள்ள வேண்டியதன் அவசியத்தை நன்றாக சொல்லி இருக்கிங்க//

   இது பல மாதங்களுக்கு முன்பு எனக்கு மெயிலில் வந்தது. இந்த சமயத்தில் பகிர்ந்தால் பயனாக இருக்குமென பதிந்தேன் :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி லஷ்மிம்மா!

   Delete
 3. உண்மைதான் அஸ்மா. பிரார்த்தனைகளைப் பற்றிப் பக்கம்பக்கமாகப் பேசுகிறார்களே ஒழிய, ஒரு புது இடத்திற்கு - வெளிநாட்டிற்கு முதன்முறையாகப் போகின்ற, அதுவரை ஊர் எல்லையைக் கூடத் தாண்டாத சில ஆண்-பெண்களுக்கு அங்கே என்ன இருக்கும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற வழிகாட்டுதலை எந்த நிறுவனங்களும் தருவதேயில்லை. சென்ற ஹஜ்ஜில், தடுமாறிய பலரைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டேன். அதன் விளைவாக இதேபோல ஒரு சிறு முயற்சி செய்து வருகிறேன். இறைவன் நலமாக்கித் தர வேண்டும். துஆ செய்ங்க.

  ReplyDelete
  Replies
  1. //ஒரு புது இடத்திற்கு - வெளிநாட்டிற்கு முதன்முறையாகப் போகின்ற, அதுவரை ஊர் எல்லையைக் கூடத் தாண்டாத சில ஆண்-பெண்களுக்கு அங்கே என்ன இருக்கும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற வழிகாட்டுதலை எந்த நிறுவனங்களும் தருவதேயில்லை//

   ம்.., ரொம்ப ரேராக சில இடங்களில் சொல்லித் தருகிறார்கள். நிறைய பேருக்கு கண்ணைக்கட்டி காட்டில் விட்ட மாதிரிதான் :( முன்அனுபவப்பட்டவர்கள் மூலம் எனக்கு கிடைத்த இன்னும் நிறைய டிப்ஸ்களையும் பகிரலாமே என்றுதான் நினைத்தேன். நம் சொந்த அனுபவத்திற்கு பிறகுதான் அது இன்னும் சுலபமாக இருக்கும் சொல்வதற்கு என விட்டுவிட்டேன் :)

   //சென்ற ஹஜ்ஜில், தடுமாறிய பலரைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டேன். அதன் விளைவாக இதேபோல ஒரு சிறு முயற்சி செய்து வருகிறேன்//

   அது என்ன முயற்சிபா? ப‌திவு மூலமா?

   //இறைவன் நலமாக்கித் தர வேண்டும். துஆ செய்ங்க//

   இன்ஷா அல்லாஹ், நீங்களும் துஆ செய்யுங்க ஹுஸைனம்மா :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா!

   Delete
 4. அஸ்மாக்கா.... இந்த பதிவை ஹஜ்ஜுக்குச் செல்லும் எனக்குத் தெரிந்தவர்களோடு பகிர்ந்திருக்கிறேன். நன்றி.

  ஹுஸைனம்மா.... /இறைவன் நலமாக்கித் தர வேண்டும்/ இறைவன் அம்முயற்சியை வெற்றியாக்கித் தருவான். நல்லபடியாக செய்யுங்க.

  ReplyDelete
  Replies
  1. //அஸ்மாக்கா.... இந்த பதிவை ஹஜ்ஜுக்குச் செல்லும் எனக்குத் தெரிந்தவர்களோடு பகிர்ந்திருக்கிறேன். நன்றி//

   நல்லது, சந்தோஷம்பா :) வருகைக்கு நன்றி பானு!

   Delete
 5. மிகவும் தேவையான பதிவு.. எங்க குடும்பத்தில் இன்று தான் கிளம்பினாங்க.. அடுத்த வாரம் ஒரு குரூப் கிளம்புராங்க. அவங்களுக்கு இந்த தகவல் உதவியாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. //எங்க குடும்பத்தில் இன்று தான் கிளம்பினாங்க.. அடுத்த வாரம் ஒரு குரூப் கிளம்புராங்க. அவங்களுக்கு இந்த தகவல் உதவியாக இருக்கும்//

   அப்படியா... உங்க ஃபேமிலியும் வர்றாங்களா? :) அல்ஹம்துலில்லாஹ்! முடிந்தா அவங்களுக்கு ஃபார்வர்டு பண்ணினா அவங்களுக்கு ஹெல்பா இருக்கும்னு நினைக்கிறேன். வருகைக்கு நன்றி ஃபாயிஜா!

   Delete
 6. அஸ்மா சரியான நேரத்தில் மிக அருமையான அனைவருக்கும் பயனுள்ள ஹஜ் டிப்ஸ் கொடுத்து இருக்கீங்கள்

  ReplyDelete
  Replies
  1. //அஸ்மா சரியான நேரத்தில் மிக அருமையான அனைவருக்கும் பயனுள்ள ஹஜ் டிப்ஸ் கொடுத்து இருக்கீங்கள்//

   நான் சேமித்து வைத்திருந்த டிப்ஸ் இவை, வருகைக்கு நன்றி ஜலீலாக்கா!

   Delete
 7. அஸ்ஸலாமு அலைக்கு அஸ்மா.மிகவும் அவசியமான பகிர்வு.குறித்து வைத்துக்கொண்டேன்.

  ReplyDelete
 8. ஏனெனில், ஹஜ்ஜின்போது அதிகம் நடக்கவேண்டும். மினாவில் ஷைத்தான் மீது கல்லெறியக் கூடாரத்திலிருந்து வெகுதூரம் நடக்கவேண்டி வரும். அதே போல் அரஃபா முதல் முஸ்தலிஃபா வரை ஹாஜிகள் நடக்கும் சூழ்நிலை ஏற்படும். //ஏம்ப்பா அஸ்மா.டிராவல்ஸ் வாகனம் ஏற்பாடு செய்யமாட்டார்களா?அல்லாஹ் நமக்கு போதிய வலிமையைத்தருவானாக..

  ReplyDelete
  Replies
  1. வ‌ அலைக்குமுஸ்ஸலாம் ஸாதிகா!

   //மிகவும் அவசியமான பகிர்வு.குறித்து வைத்துக்கொண்டேன்//

   நல்லது ஸாதிகா அக்கா!

   //ஏம்ப்பா அஸ்மா.டிராவல்ஸ் வாகனம் ஏற்பாடு செய்யமாட்டார்களா?அல்லாஹ் நமக்கு போதிய வலிமையைத்தருவானாக..//

   அஜீஜியாவில் இருப்பவர்களுக்கு மட்டும் வாகன‌ங்கள் ஏற்பாடு பண்ணுவார்கள். அரசாங்கம் ஏற்பாடு பண்ணியுள்ள வாகனங்களும் அங்கு தொடர்ந்து கிடைக்கும் என்கிறார்கள் ஸாதிகா அக்கா! எதுவாக இருந்தாலும் அல்லாஹ்தஆலா நமக்கு இன்ஷா அல்லாஹ் வலிமையைத் தந்தருள்வானாக!

   Delete
 9. பகிர்வுக்கு நன்றி ..முதல் முறையாக உங்களின் தளத்துக்கு வந்து இருக்கின்றேன் . அப்படியே ஒரு ரவுண்ட் அடித்து கொண்டு வருகின்றேன் சகோ

  ReplyDelete
  Replies
  1. //முதல் முறையாக உங்களின் தளத்துக்கு வந்து இருக்கின்றேன் . அப்படியே ஒரு ரவுண்ட் அடித்து கொண்டு வருகின்றேன் சகோ//

   முதல் வருகைக்கு நன்றி சகோ, உங்களுக்கு முடியும்போது தொடர்ந்து வாங்க இன்ஷா அல்லாஹ் :)

   Delete
 10. //டிராவல்ஸ் வாகனம் ஏற்பாடு செய்யமாட்டார்களா?//

  அக்கா,டிராவல்ஸை எல்லா சமயமும் நம்ப முடியாது. முஜ்தலிஃபாவிலிருந்து மினா வரை நடந்தே ஆகவேண்டும். அரஃபா டூ முஜ்தலிஃபா கூட நடக்க வேண்டி வரலாம்.

  அதே சம்யம், அவர்கள் நினைத்தாலும், சில இடங்களுக்கு வாகனம் செல்ல அனுமதி இல்லை. உதாரணமாக, கல் அடிக்க போகும்போது 4-6 கிமீ நடக்க வேண்டும் தினமும்.

  அதேபோல, மினாவிலிருந்து தவாஃப் செய்ய மக்கா போக, வர குறைந்த தூரத்திற்கு வண்டி (அதிக வாடகையில் கிடைத்தாலும்), மீதி தூரம் நட்ந்தே ஆக வேண்டும்.

  எனினும், இறைவன் லேசாக்கித் தருவான்.

  ReplyDelete
 11. ஸலாம்

  சிறந்த பதிவு ...

  ஹஜ் செய்பவர்களுக்கு நல்ல ஆலோசனை .. உடல் ஆரோக்கியம் பற்றி ...

  ஹஜ் விழிப்புணர்வு பதிவு ..

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!