அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday, 1 November 2010

ஒட்டகம் நகர மறுத்தது ஓர் இறை ஏற்பாடு! (ஹுதைபிய்யா தொடர் 3)

ஹுதைபிய்யா தொடரின் முதல் பகுதியைக் காண இங்கே அழுத்தவும். இரண்டாவது பகுதியைக் காண இங்கே அழுத்தவும்.
நான்காவது பகுதியைக் காண இங்கே அழுத்தவும்.
ஐந்தாவது பகுதியைக் காண இங்கே அழுத்தவும்.


இவ்வாறு நடைப்பெற்ற "பைஅத்துர் ரிள்வான்" என்ற‌ இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சிக்கு பிறகு, நபி(ஸல்)அவர்கள் மக்காவை நோக்கி பயணத்தைத் தொடர்கிறார்கள். இறைத் தூதரையும் அவர்களின் தோழரையும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லாத மக்காவிலிருந்த நிராகரிப்பாளர்களுக்கு இருந்த ஒரே வழி யுத்தம் செய்வது மட்டுமே. எனவே, இடையிலேயே இறைத்தூதரையும் முஸ்லிம்களையும் தடுத்து நிறுத்திப் போராட மக்காவாசிகள் காலித் பின் வலீதின் கீழ் ஒரு படைப்பிரிவை அனுப்புகிறார்கள்.

மக்காவை நோக்கி நபி(ஸல்)அவர்கள் புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தபோது வழியில் நபி(ஸல்)அவர்கள், "காலித் பின் வலீத், குறைஷிகளின் குதிரைப் படையுடன் 'கமீம்' என்ற இடத்தில் (போர் வியூகத்துடன்) முதல் அணியாக (நம்மை எதிர் கொள்ளக்) காத்திருக்கின்றார். ஆகவே, வலப்பக்கப் பாதையில் செல்லுங்கள், (காலித் பின் வலீதுக்குத் தெரியாமல் மக்காவின் அருகே சென்று விடலாம்)" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் வருவதை காலித் அறியவில்லை. குறைஷி குதிரைப் படையினர் (முஸ்லிம்களுடைய) உம்ரா பயணக் குழுப்படை எழுப்பிய புழுதியைக் கண்டவுடன் (அதன் தளபதியான) காலித் பின் வலீத், குறைஷிகளை எச்சரிப்பதற்காக, குதிரையைக் காலால் உதைத்து விரட்டியவராக (விரைந்து) சென்றார்.                     நூல்: புகாரி

தொடர்ந்து நபி(ஸல்)அவர்களும் அவர்களின் தோழர்களும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்காவினுள் இறங்கும் வழியாக அமைந்துள்ள சிறிய மலை ஒன்றை அடைந்ததும் ('மிரார்' என்னுமிடத்தில்) அவர்களுடைய ஒட்டகம் மண்டியிட்டு அமர்ந்துக் கொண்டது. மக்கள்(அதை எழுப்பி நடக்க வைப்பதற்காக) "ஹல் ஹல்" என்று அதட்டினார்கள். அது எழும்ப மறுத்து முரண்டு பிடித்ததும் மக்கள், "கஸ்வா பிடிவாதம் பிடிக்கிறது, கஸ்வா பிடிவாதம் பிடிக்கிறது'' என்று கூறினார்கள். ("கஸ்வா" என்பது நபி(ஸல்)அவர்களின் ஒட்டகத்தின் பெயர்)

நபி (ஸல்) அவர்கள், "கஸ்வா பிடிவாதம் பிடிக்கவுமில்லை; பிடிவாதம் பிடிப்பது அதன் குணமுமில்லை. ஆனால், (யமன் நாட்டு மன்னன் அப்ரஹா தலைமையில் யானைப்படை கஃஅபாவை இடிக்க வந்தபோது) யானையைத் தடுத்த(இறை)வனே அதையும் தடுத்து வைத்திருக்கிறான்" என்று கூறினார்கள்.                            நூல்:புகாரி


ஒட்டகம் நகர மறுத்து, படுத்துவிட்ட‌தைக் கண்ட நபி(ஸல்)அவர்கள், அது இறைவனின் ஏற்பாடு என்று புரிந்துக் கொண்டு, சமாதானத்திற்கு முதலிடம் கொடுக்கும் வகையில் மக்காவோடு ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்காக மிகவும் கவனத்தோடு, நிதானமாகவும் பொறுமையாகவும் செயல்படுகிறார்கள்.

"என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (போரைக் கைவிட்டு) அல்லாஹ்வின் புனித(த் தல)ங்களை கண்ணியப்படுத்தும் ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டால் அதை நிச்சயம் அவர்களுக்கு நான் (வகுத்துக்)கொடுப்பேன்" என்று கூறினார்கள். பிறகு நபி(ஸல்)அவர்கள் தம் ஒட்டகத்தைத் தட்டி எழுப்பினார்கள். உடனே அது குதித்தெழுந்தது.                                   நூல்: புகாரி

இறுதியில், ஹுதைபிய்யா பள்ளத்தாக்கின் எல்லையில் நபி(ஸல்)அவர்கள் முகாமிடுகிறார்கள். இந்த நிலையில் குறைஷிகளின் பக்கமிருந்து ஐந்து தூதுவர்கள் ஒவ்வொருவராக நபி(ஸல்)அவர்களிடத்தில் வருகிறார்கள். அந்த‌ தூதுவர்களில் நேர்மையான சிலர் இருந்தாலும் குறைஷிகள், நபி(ஸல்)அவர்களோடு பேசுவதற்கு பொருத்தமற்ற சிலரையும் அவர்களிடம் தூதுவர்களாக அனுப்புகிறார்கள்.



தொடரும்.... இன்ஷா அல்லாஹ்!


8 comments:

  1. மாஷா அல்லாஹ், படித்ததுதான் என்றாலும் ஸீறா மட்டும் எத்தனை தரம் படித்தாலும் அலுப்பு தட்டுவதில்லை. அதிலும் தமிழில் படிப்பது சுகம். தொடருங்கள் மாஷா அல்லாஹ்.

    ReplyDelete
  2. @ அன்னு...

    //மாஷா அல்லாஹ், படித்ததுதான் என்றாலும் ஸீறா மட்டும் எத்தனை தரம் படித்தாலும் அலுப்பு தட்டுவதில்லை. அதிலும் தமிழில் படிப்பது சுகம். தொடருங்கள் மாஷா அல்லாஹ்//

    ஆமா அன்னு.. உண்மைதான். படிக்க படிக்க மீண்டும் படிக்கவே தூண்டும், சுப்ஹானல்லாஹ்!படித்தவர்கள் மீண்டும் அதை புதுப்பித்துக் கொள்ளவும், படிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்தவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாகவும் இருக்கட்டுமே என்றுதான் இதை தொகுக்கிறேன். அதை நன்மையாக இறைவன் ஏற்றுக்கொள்ளட்டும், இன்ஷா அல்லாஹ்!

    ReplyDelete
  3. வழக்கம் போல் இம்முறையும் தெளிவா சொல்லியிருக்கீங்க.

    முகம்மது நபியின் வரலாறு என்ற ஒரு புத்தகத்தில் இந்த போரினை பற்றி படித்துள்ளேன். ஆனால் சுருக்கமாக சொன்ன விதம் அருமை.

    வாழ்த்துக்கள் அஸ்மா

    ReplyDelete
  4. எப்பவோ படித்தது; மறுபடியும் உங்கள் எழுத்தில் வாசித்து மீட்டெடுப்பதில் மகிழ்ச்சி. மாஷா அல்லாஹ்.

    ReplyDelete
  5. @ ஆமினா...

    //வழக்கம் போல் இம்முறையும் தெளிவா சொல்லியிருக்கீங்க.

    முகம்மது நபியின் வரலாறு என்ற ஒரு புத்தகத்தில் இந்த போரினை பற்றி படித்துள்ளேன்//

    போராக உருவாக இருந்தது உடன்படிக்கையாக மாறியதுதான் ஹுதைபிய்யாவில் நடந்தது ஆமினா. சந்தோஷம், தொடர்ந்து படிங்க.

    ReplyDelete
  6. @ ஹுஸைனம்மா...

    //எப்பவோ படித்தது; மறுபடியும் உங்கள் எழுத்தில் வாசித்து மீட்டெடுப்பதில் மகிழ்ச்சி. மாஷா அல்லாஹ்//

    நம் ஆயுள் முழுவதும் நம் எண்ணங்களில் புதுப்பித்துக் கொண்டிருக்க வேண்டியவை இவை! அனைவரும் இதில் ஆர்வமாக இருப்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது மிஸஸ் ஹுஸைன். அல்ஹம்துலில்லாஹ்!

    ReplyDelete
  7. அடுத்த தொடர் படிக்க ஆர்வமுடன் இருக்கிறேன்...
    சீக்கிரம் அக்க.... :)

    ( தாராளமா கருத்து சொல்லியாச்சு :D )

    ReplyDelete
  8. @ Hasan1...

    //அடுத்த தொடர் படிக்க ஆர்வமுடன் இருக்கிறேன்...
    சீக்கிரம் அக்க.... :)

    ( தாராளமா கருத்து சொல்லியாச்சு :D )//

    இன்ஷா அல்லாஹ் இன்று முடிந்தால் போட்டுவிடுகிறேன் தம்பி! தாராளமா கருத்து சொன்னதற்கு :) நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை