அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Tuesday, 2 November 2010

தொடர்ச்சியாக வந்த தூதுவர்கள் (ஹுதைபிய்யா தொடர் 4)

ஹுதைபிய்யா தொடரின் முதல் பகுதி, இரண்டாவது பகுதி, மூன்றாவது பகுதி, ஐந்தாவது பகுதிகளைப் பார்க்கவும்.

ஹுதைபிய்யா பள்ளத்தாக்கு

உம்ரா செய்வதற்காக வந்த நபி(ஸல்)அவர்கள் ஹுதைபிய்யா பள்ளத்தாக்கின் எல்லையில் முகாமிட்ட பிறகு, குறைஷிகளின் சார்பில் ஒவ்வொருவராக ஐந்து தூதுவர்கள் நபி(ஸல்)அவர்களிடத்தில் பேச்சு வார்த்தை நடத்த வருகிறார்கள். அந்த‌ தூதுவர்களில் நேர்மையான சிலர் இருந்தாலும் குறைஷிகள், நபி(ஸல்)அவர்களோடு பேசுவதற்கு பொருத்தமற்ற சிலரையும் அவர்களிடம் தூதுவர்களாக அனுப்புகிறார்கள். ஆனால் நபி(ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் மோசமான எண்ணம் கொண்டிருந்தவர்கள் கூட, நபி(ஸல்)அவர்களோடு பேசிவிட்டு திரும்பும்போது அவர்கள் ஏற்கனவே கொண்டிருந்த‌ எண்ணங்களில் தடுமாறியவர்களாகவும், அண்ணல் நபி(ஸல்)அவர்களைக் கண்டு ஆச்சரியமுற்றவர்களாகவுமே திரும்பினார்கள்.

(முதலில்) புதைல் பின் வரகா அல்குஸாயீ அவர்கள், தம் குஸாஆ குலத்தார் சிலருடன் வருகை தந்தார்கள். அவர்கள் (மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களான‌) திஹாமாவாசிகளிடையே நபி(ஸல்) அவர்களின் நலம் நாடும் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தனர். புதைல் அவர்கள், "(முஹம்மத் அவர்களே!) கஅப் இப்னு லுஅய், மற்றும் ஆமிர் இப்னு லுஅய் ஆகியோர் ஹுதைபிய்யாவின் வற்றாத ஜீவ சுனைகளின் அருகே முகாமிட்டிருக்க, அங்கே அவர்களை விட்டுவிட்டு (தங்களிடம் செய்தி சொல்ல) வந்துள்ளேன். அவர்களுடன் தாய் ஒட்டகங்களும் தம் குட்டிகளுடன் வந்துள்ளன. அவர்கள் உங்களுடன் போரிட்டு உங்களை இறையில்லமான கஃஅபாவை (சந்திக்க விடாமல்) தடுக்கப் போகிறார்கள்" என்று கூறினார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள், "நாங்கள் எவருடனும் போரிடுவதற்காக வரவில்லை. மாறாக, நாங்கள் உம்ரா செய்வதற்காகதான் வந்திருக்கின்றோம். குறைஷிகள் அடிக்கடி போரிட்டுக் களைத்துப் போயிருக்கிறார்கள். போரின் காரணத்தால் அவர்களுக்கு நிறையவே இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு ஒரு காலகட்டம் குறிப்பிட்டு சமாதான ஒப்பந்தம் செய்துக் கொள்கிறேன். அவர்கள் எனக்கும் மக்களுக்குமிடையே (இஸ்லாமியப் பிரச்சாரத்திற்குத்) தடையாக இருக்கவேண்டாம். நான் வெற்றி பெற்றுவிட்டால், அவர்கள் விரும்பினால் மக்களெல்லாம் விரும்பி ஏற்றுக் கொள்ளும் இந்த மார்க்கத்திலேயே இணைந்து கொள்ளட்டும். இல்லையென்றால் (சில நாட்கள்) அவர்களுக்கு ஓய்வாவது கிடைக்கும். அவர்கள் இதற்கு மறுத்துவிட்டால், என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் எனது இந்த விவகாரத்திற்காக என் தலை துண்டாகி விடும் வரை அவர்களுடன் போரிடுவேன். அல்லாஹ், தன் திட்டத்தை நடத்தியே தீருவான்" என்று கூறினார்கள்.

"நீங்கள் சொல்வதை அவர்களுக்கு நான் எடுத்துரைப்பேன்" என்று கூறிவிட்டு புதைல் பின் வரகா குறைஷிகளிடம் சென்று, "நாங்கள் இந்த மனிதரிடமிருந்து உங்களிடம் வந்திருக்கிறோம். அவர் ஒரு விஷயத்தைக் கூறியதை நாங்கள் கேட்டோம். அதை உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் நாங்கள் அவ்வாறே செய்கிறோம்" என்று சொன்னார்.

அப்போது அவர்களிலிருந்த அறிவிலிகள், "அவரைக் குறித்து எங்களுக்கு எதையும் நீர் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறினர். ஆனால், அவர்களில் கருத்துத் தெளிவுடையவர்கள், "அவரிடமிருந்து நீங்கள் கேட்டதை எடுத்துச் சொல்லுங்கள்" என்று கூறினர். பிறகு புதைல், "அவர் இப்படியெல்லாம் சொல்லக் கேட்டேன்" என்று நபி(ஸல்)அவர்கள் சொன்னதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

உடனே, (அப்போது இறை மறுப்பாளராயிருந்த) உர்வா இப்னு மஸ்ஊத் அஸ்ஸகஃபீ எழுந்து நின்று, "என் சமுதாயத்தாரே! நீங்கள் என் தந்தையைப் போல் (என் மீது இரக்கமுடையவர்கள்) அல்லவா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஆம்" என்று பதிலளித்தனர். உர்வா, "நான் உங்கள் மகனைப் போல் (உங்கள் நலம் நாடுபவன்) இல்லையா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஆம் (நீங்கள் எங்கள் நலம் நாடுபவர் தாம்)" என்று பதிலளித்தனர். மேலும் அவர், "நீங்கள் என்னைச் சந்தேகிக்கிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "இல்லை" என்று பதிலளித்தனர்.

அப்போது உர்வா, "உக்காழ் (சந்தை) வாசிகளிடம் உங்களுக்கு உதவும்படி கேட்டதும் அவர்களால் உதவ முடியாத (நிலை ஏற்பட்ட)போது நான் என் வீட்டாரையும் என் குழந்தையையும் எனக்குக் கட்டுப்பட்டவர்களையும் உங்களிடம் கொண்டு வந்துவிட்டேன் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஆம் (தெரியும்)" என்று பதிலளித்தார்கள்.

அப்போது அவர், "முஹம்மது, உங்கள் முன் நல்லதொரு திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார். நீங்கள் (அதற்கு) ஒப்புக் கொள்ளுங்கள். அவரிடம் என்னைச் செல்ல விடுங்கள்" என்று கூறினார். அதற்கு அவர்கள், "அவரிடம் (எங்கள் சார்பாகப் பேசச்) செல்லுங்கள்" என்று கூறினர். அவரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று பேசத் தொடங்கினார்.

நபி(ஸல்)அவர்கள் புதைலிடம் சொன்னதைப் போலவே சொன்னார்கள். அப்போது உர்வா, "முஹம்மதே! உங்கள் சமுதாயத்தினரை முற்றிலுமாக அழித்து விடுவதை நீங்கள் உசிதமாகக் கருதுகிறீர்களா? உங்களுக்கு முன்னால் அரபுகள் எவரேனும் தம் சமுதாயத்தாரை வேரோடு அழித்தார் என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? வேறு விதமான முடிவு ஏற்பட்டாலும்... குறைஷிகள் வென்றுவிட்டாலும்...(அதனால் உங்கள் தோழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விடுவார்கள் அல்லவா?) நானோ, அல்லாஹ்வின் மீதாணையாக! பல முகங்களை (உங்கள் தோழர்களிடம்) பார்க்கின்றேன்; மக்களில் பலதரப்பட்டவர்களைப் பார்க்கிறேன்; உங்களை விட்டுவிட்டு விரண்டோடக்கூடிய (கோழைத்தனமுடைய)வர்களாகவே (இவர்களை) நான் பார்க்கிறேன்" என்று கூறினார்.

(இதைக் கேட்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள் அவரை அக்கால வழக்கப்படி ஏசிவிட்டு, "நாங்கள் இறைத் தூதரை விட்டுவிட்டு ஓடிவிடுவோமா?" என்று (கோபத்துடன்) கேட்டார்கள். அதற்கு உர்வா, "இவர் யார்?" என்று கேட்டார். மக்கள் "அபூபக்ர்" என்று பதிலளித்தார்கள். அதற்கு உர்வா, "நீங்கள் முன்பு எனக்கு உதவி செய்திருக்கிறீர்கள். அதற்கான நன்றிக் கடனை நான் உங்களுக்கு இன்னும் தீர்க்கவில்லை. அந்த நன்றிக் கடன் மட்டுமில்லாவிட்டால் நான் உங்களுக்கு (தகுந்த) பதில் கொடுத்திருப்பேன்" என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்களிடம் பேசத் தொடங்கினார். நபி(ஸல்)அவர்களுடன் பேசும்போதெல்லாம் அவர்களுடைய தாடியைப் பிடித்தபடி இருந்தார்.

அப்போது முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் (கையில்) வாளுடனும் தலையில் இரும்புத் தொப்பியுடனும் நபி(ஸல்)அவர்களின் தலைப் பக்கமாக நின்று கொண்டிருந்தார்கள். ஆகவே உர்வா, நபி(ஸல்)அவர்களின் தாடியைப் பிடிக்க முனைந்தபோதெல்லாம் முகீரா(ரலி)அவர்கள், அவரது கையை வாளுறையின் (இரும்பாலான) அடிமுனையால் அடித்து, "உன் கையை அல்லாஹ்வின் தூதருடைய தாடியிலிருந்து அப்புறப்படுத்து" என்று கூறிய வண்ணமிருந்தார்கள்.

அப்போது உர்வா தனது தலையை உயர்த்தி, "இவர் யார்?" என்று கேட்க மக்கள், "இவர் முகீரா பின் ஷுஅபா" என்று கூறினார்கள். உடனே உர்வா, "மோசடிக்காரரே! நீர் மோசடி செய்த போது (உம்மை தண்டனையிலிருந்து பாதுகாத்திட) நான் உழைக்கவில்லையா?" என்று கேட்டார்.

முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு) ஒரு குலத்தாருடன் (எகிப்து மன்னனைக் காண) பயணம் சென்றார்கள். அப்போது (அக்குலத்தார் வழியில் குடித்துவிட்டு மயங்கிக் கிடக்க,) அவர்களைக் கொன்றுவிட்டு அவர்களுடைய பொருட்களை எடுத்துக் கொண்டார்கள். (அதற்காக பனூ மாலிக் குலத்தார் முகீரா அவர்களைப் பழி வாங்க முனைந்தபோது அவரது தந்தையின் சகோதரரான உர்வாதான், அவர்களை உயிரீட்டுத் தொகைக் கொடுத்து தண்டனையிலிருந்து காப்பாற்றினார்) பிறகு முகீரா (அங்கிருந்து) வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீ இஸ்லாத்தைத் தழுவியதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், (நீ அபகரித்துக் கொண்டு வந்த) பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்படவில்லை" என்று கூறியிருந்தார்கள்.

உர்வா தன் தோழர்களிடம் சென்று, "என் சமுதாயத்தாரே! (ரோமாபுரி மன்னன்) சீசரிடமும், (பாரசீக மன்னன்) கிஸ்ராவிடமும், (அபிசீனிய மன்னன்) நஜாஷியிடமும் தூதுக் குழுவில் சென்றுள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் தோழர்கள் முஹம்மதுக்கு அளிக்கின்ற கண்ணியத்தைப் போல் எந்த அரசருக்கும் அவரது தோழர்கள் கண்ணியம் அளிப்பதை நான் பார்த்ததேயில்லை. மேலும், அவர் உங்கள் முன் நேரிய திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார். ஆகவே, அதை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.

உடனே பனூகினானா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர், "என்னை அவரிடம் செல்லவிடுங்கள்" என்று சொன்னார். அதற்கு அவர்கள், "சரி, செல்லுங்கள்" என்று கூறினர். அவர் நபி (ஸல்)அவர்களிடமும் அவர்களின் தோழர்களிடமும் வந்தபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள், "இது இன்னார், இவர் இறைவனுக்காக ஹஜ்ஜில் அறுக்கப்படும் தியாக ஒட்டகங்களை கண்ணியப்படுத்துகின்ற ஒரு குலத்தைச் சேர்ந்தவர். ஆகவே, இவரிடம் தியாகப் பலி ஒட்டகத்தை அனுப்பி வையுங்கள்" என்று சொன்னார்கள். உடனே, அவரிடம் ஒரு தியாக ஒட்டகம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. மக்கள் "தல்பியா" கூறியபடி அவரை வரவேற்றார்கள். இதை அவர் கண்டவுடன், "சுப்ஹானல்லாஹ்! இவர்களை இறையில்லத்திற்கு வரவிடாமல் தடுப்பது சரியில்லையே" என்று (தமக்குள்) கூறிக்கொண்டார்.

(குறைஷிகளான‌) தம் தோழர்களிடம் திரும்பிச் சென்றபோது, "தியாக ஒட்டகங்கங்களுக்கு (அடையாள) மாலைக் கட்டித் தொங்கவிடப்பட்டு, அவற்றை அடையாளமிடப்பட்டிருப்பதை நான் கண்டேன். ஆகவே, இறையில்லத்திற்கு வரவிடாமல் அவர்களைத் தடுப்பதை நான் சரியானதாகக் கருதவில்லை" என்று கூறினார்.

அவர்களில் மிக்ரஸ் பின் ஹஃப்ஸ் என்றழைக்கப்பட்ட ஒரு மனிதர் எழுந்து, "என்னை அவரிடம் போக விடுங்கள்" என்று கூறினார். மக்காவாசிகள், "சரி, நீங்கள் அவரிடம் போங்கள்" என்று கூறினர். முஸ்லிம்களிடம் அவர் சென்றபோது நபி(ஸல்)அவர்கள், "இவன் மிக்ரஸ் என்பவன். இவன் ஒரு கெட்ட மனிதன்" என்று கூறினார்கள். அவன் (வந்தவுடன்) நபி(ஸல்)அவர்களிடம் பேச ஆரம்பித்தான்.

அவன் பேசிக் கொண்டிருக்கையில், சுஹைல் இப்னு அம்ர் என்பவர் குறைஷிகளின் தரப்பிலிருந்து வந்தார். சுஹைல் இப்னு அம்ர் வந்த போது நபி(ஸல்) அவர்கள், "உங்கள் விவகாரம் சுலபமாகி விட்டது" என்று ("சஹ்ல் = சுலபம்" என்னும் பொருள் கொண்ட பெயருடைய ஒருவர் வந்ததைக் குறிக்கும் வகையில்) கூறினார்கள். சுஹைல் இப்னு அம்ர் வந்து, "(ஏட்டைக்) கொண்டு வாருங்கள். உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலான (சமாதான ஒப்பந்தத்திற்கான) பத்திரம் ஒன்றை எழுதுவோம்" என்று கூறினார்.       
                                                      நூல்: புகாரி (2731)

நபி(ஸல்)அவர்களின் சமாதான உடன்படிக்கைக்கான வேண்டுகோளை சுஹைல் இப்னு அம்ர் ஏற்றுக்கொண்டதும், அண்ணலவர்கள் உடன்படிக்கைகளை எழுத தயாராகிறார்கள். ஆனாலும் இருவர் தரப்பு ஒப்புதலோடும் எழுதப்படவேண்டிய ஒப்பந்தத்தை, நிராகரிப்பாளர்கள் தங்களின் இஷ்டப்படி எழுத நிபந்தனைகளை விதிக்கிறர்கள்.

அண்ணல் நபி(ஸல்)அவர்கள் அந்த ஒப்பந்தத்திற்காக‌ முயற்சிக்கின்ற அந்த வேளை, 'மக்கா எந்த வகையிலும் முஸ்லிம்களை ஏற்கும் நிலையில் இல்லை' என்ற வகையில் இம்முயற்சியைக் குழப்பிவிடும் நோக்கம் கொண்டதாக நிராகரிப்பவர்களின் நடவடிக்கைகள் அமைகின்றன.


தொடரும்.... இன்ஷா அல்லாஹ்!


8 comments:

 1. அல்ஹம்துலில்லாஹ், அபூ பக்க‌ர் சித்திக்(ரலி) அவர்களின் வாழ்வில் அவரைப் பற்றிய இமேஜை இன்னொரு விதமாய் பார்க்க வைக்கும் நிகழ்வு இது. அதனை சிறிது விரிவாக எழுதியிருக்கலாம். எல்லாம் தெரிந்தவள் போல் சொல்கிறேனோ என்றே எனக்கு படுகிறது. இருந்தாலும் இமாம் அன்வர் அவ்லகி இந்த சம்பவத்தை விவரிக்கும்பொழுது, அபூ பக்கர்(ரலி) அவர்களைப் பற்றி இந்த இடத்தில் இன்னும் மேன்மையாக, அவரின் இயற்கையான சுபாவம் மீறி நடந்து கொண்டதற்கான காரணத்தையும், அவரின் மேன்மையான குண்திசியங்களையும் சொல்வார். எனவேதான் அதை இஙே எதிர்பார்த்தேன். அடுத்த பகுதியில் அலி(ரலி) அவர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சி வரும் என்பதால் ஆவலோடு இருக்கிறேன். மற்றபடி, உங்கள் மேல் பொறாமைதான் ஏற்படுகிறது. இவ்வளாவு அழ‌காய் தேர்ச்சியுடன் எழுதுவதை கண்டு. ஆன்லைனில் இந்த அளவு ஸீறா வோ / ஹதீத் புத்தகங்களோ உள்ளதா? நான் சில தொகுப்புக்களை மட்டுமே கண்டுள்ளேன்...முழு புத்தகங்களை தமிழில் அல்ல. :(

  ReplyDelete
 2. @ அன்னு...

  //அல்ஹம்துலில்லாஹ், அபூ பக்க‌ர் சித்திக்(ரலி) அவர்களின் வாழ்வில் அவரைப் பற்றிய இமேஜை இன்னொரு விதமாய் பார்க்க வைக்கும் நிகழ்வு இது. அதனை சிறிது விரிவாக எழுதியிருக்கலாம்//

  அதற்கு இன்னொரு தொடரே எழுதணும் அன்னு. நான் புளூ கலரில் எழுதியிருப்பவை அனைத்தும் ஹதீஸின் மொழியாக்கம். அதனிடையில் விளக்கங்கள் கொடுத்தால் ஹதீஸின் தொடர்ச்சி நின்றுபோய் சொல்ல வந்த டாபிக் மாறிடும் என்றுதான் அன்னு விட்டுட்டேன்.

  //எல்லாம் தெரிந்தவள் போல் சொல்கிறேனோ என்றே எனக்கு படுகிறது//

  அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அன்னு. எனக்கு தெரியாத எத்தனையோ விஷயங்கள் உங்களுக்கும் உங்களுக்கு தெரியாத ஒருசில விஷயங்கள் எனக்கும் தெரிந்திருக்கலாம். நீங்கள் சொன்னது சரியான விதமே! :)

  //அடுத்த பகுதியில் அலி(ரலி) அவர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சி வரும் என்பதால் ஆவலோடு இருக்கிறேன்//

  அதுவும் ஹதீஸ் மட்டும் சொல்லிதான் முடிக்க இருக்கிறேன், இன்ஷா அல்லாஹ். காரணம் மேலே சொன்னதுதான் :)தொடர் என்று எழுத வாய்ப்பு கிடைக்கும்போது இந்த சம்பவத்தையும் இன்ஷா அல்லாஹ் சேர்க்கலாம்!

  //ஆன்லைனில் இந்த அளவு ஸீறா வோ / ஹதீத் புத்தகங்களோ உள்ளதா? நான் சில தொகுப்புக்களை மட்டுமே கண்டுள்ளேன்...முழு புத்தகங்களை தமிழில் அல்ல//

  எனக்கு தெரிந்து ஸீரா முழுமையாக இருப்பதாக தெரியவில்லை. தப்பித் தவறி இருந்தாலும் அதெல்லாம் ஆதாரப் பூர்வமானதுதானா என்று கண்டிப்பாக பார்க்கணும். ஆனால், புகாரி, முஸ்லிம் போன்றவை முழுமையாக தமிழில் இருக்கிறது அன்னு. இப்போதைக்கு லிங்க் தரமுடியவில்லை. தேவைப்பட்டால் சொல்லுங்கள் 2,3 நாட்களில் தருகிறேன், இன்ஷா அல்லாஹ்.

  ReplyDelete
 3. நன்றி அஸ்மா.

  //ஆனால், புகாரி, முஸ்லிம் போன்றவை முழுமையாக தமிழில் இருக்கிறது அன்னு. இப்போதைக்கு லிங்க் தரமுடியவில்லை. தேவைப்பட்டால் சொல்லுங்கள் 2,3 நாட்களில் தருகிறேன், இன்ஷா அல்லாஹ். //
  என்னுடைய Blogger Profileஇல் பார்த்தீர்களானால் Email லின்க் இருக்கும், அதனை உபயோகித்து மெயில் எழுதலாம். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது லின்க் அனுப்புங்கள்.

  //எனக்கு தெரிந்து ஸீரா முழுமையாக இருப்பதாக தெரியவில்லை. தப்பித் தவறி இருந்தாலும் அதெல்லாம் ஆதாரப் பூர்வமானதுதானா என்று கண்டிப்பாக பார்க்கணும். //
  நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. தமிழில் இப்படியொரு ஆக்க‌ம் வரவே ஆசை எனக்கு. இமாம் ஷம்சுதீன் காஸிமியின் நபித்தோழர்கள் பற்றிய ஸீறா தமிழில் கேட்டுள்ளேன். ஆதாரபூர்வமான், எதுவும் கலக்கப்படாத ஸீறாஹ் அது. மற்றபடி தமிழில் வேறேதுவும் இன்னும் கண்ணில் படவில்லை. சத்தியமார்க்கம் தள‌த்தில் வரும் சஹாபாமார் ஸீறாக்களும் அதே போல, மிகுந்த பிரயத்தனப்பட்டுஆதாரத்துடன் எழுதப்படுபவை. படித்துப் பார்த்திருக்கீர்களா??

  ReplyDelete
 4. @ அன்னு...

  //என்னுடைய Blogger Profileஇல் பார்த்தீர்களானால் Email லின்க் இருக்கும், அதனை உபயோகித்து மெயில் எழுதலாம்//
  இல்ல அன்னு.. என் ப்ரொஃபைலுக்கு கீழே என் மெயில் ஐடி உள்ளதல்லவா? அதற்கு டெஸ்ட் மெஸ்ஸேஜ் ஒண்ணு நீங்க‌ அனுப்புங்க. அந்த ஐடிக்கு நான் உங்களுக்கு மெயில் பண்ணுகிறேன். ஓகேவா? அல்லது நீங்க சொன்னதுபோலவே மெயில் பண்ணிட‌வா?

  ReplyDelete
 5. @ umuroshni...

  வாங்க உம்மு ரோஷ்னி! இன்ஷா அல்லாஹ் நாளை அடுத்த பகுதி வெளிவரும். இதுபற்றி தொடர்ந்து டெலிஃபோனிலும் தொடர்புகொண்டு ஆர்வமுடன் கேட்டுவரும் உங்களுக்கு இறைவன் கல்வி ஞானத்தை அதிகப்படுத்திக் கொடுப்பானாக!

  உங்கள் வருகைக்கு நன்றி :)

  ReplyDelete
 6. தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. @ THOPPITHOPPI...

  //தீபாவளி வாழ்த்துக்கள்//

  மன்னிக்கவும். நாங்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை. கொண்டாடக்கூடிய சகோதர சகோதரிகளுக்கு உங்கள் வாழ்த்துக்கள் சென்றடையட்டும். வருகைக்கு நன்றி!

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!