அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday, 28 February 2011

கொழுப்பைக் கரைக்கும் பசலைக் கீரை!பசலைக் கீரையில் பச்சைப் பசலை, சிகப்புத் தண்டு பசலை, கத்திப் பசலை என பல வகைகள் உள்ளன. அவை அனைத்தும் சத்துக்களில் குறையில்லாதவை. பசலைக் கீரைக்கு சமமான‌ அளவுக்கு உடலுக்கு நன்மை தரும் காய்கறி வேறெதுவும் இல்லை என சொல்லலாம். அந்தளவுக்கு இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம். இதிலுள்ள‌ ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. ஆனால் இதயநோய் வந்தவர்கள் இந்தக் கீரையை அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது.


குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு வியாதிகளை வராமல் தடுப்பதால் மேலை நாடுகளில் இதை கோதுமை, மைதா போன்ற மாவுகளில் கலந்து விற்கிறார்கள். இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவைத் தடுக்கிறது. மலச்சிக்கலுக்கு இது எதிரியாக வேலை செய்கிறது.
சரித்திரம்: பசலைக் கீரை ஆசியாவில் முதலில் பழக்கத்திற்கு வந்ததாக சொல்கிறார்கள். பத்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமானது. 1800-களில் பிரான்ஸ், இங்கிலாந்து வந்து பின் அமெரிக்காவுக்குப் போய் எங்கும் பிரபலமானது . ஆரம்பத்தில் மக்கள் அதிக நேரம் இதை வேக வைத்ததால் சாம்பல் கலருக்கு மாறி வாசனையும் போய் சத்தெல்லாம் வீணானது. அப்புறம்தான் கீரையை எவ்வளவு ஃப்ரஷ்ஷாக சமைக்கிறோமோ, அந்த அளவுக்கு நல்லது; சத்து வீணாகாது என்று புரிந்தது.
கிடைக்கும் பருவம்: இது ஆண்டு முழுவதும் கிடைக்கும். குளிர்காலத்தில் இளசாக கிடைக்கும். மணமும் அலாதி. ஹிந்தியில் இதை 'பாலக்' என்பார்கள்.
தேர்ந்தெடுத்தல்: பசுமையாக ஈரப் பசையுடன், கரும்பச்சை நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் இலைகள் இருந்தால் கீரை பழசு. தண்டு மெலிதாக இருந்தால் இளசு. முகர்ந்து பார்த்தால் அதன் பச்சை வாசனையிலேயே தெரியும் புதியது என்று.
பாதுகாத்தல்: சாதாரணமாக கீரையை நறுக்கி விட்டு அலம்புவார்கள். அப்படிச் செய்தால் சத்துக்கள் வெளியேறிவிடும். பதிலாக ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் வைத்து அப்படியே முழுசாக போட்டு அலசி எடுக்கவும். தண்ணீரில் மண் குப்பையெல்லாம் தங்கிவிடும். பின்பு நறுக்கி சமைக்கவும். முற்றிய தண்டுகளையும், வெளிறிய இலைகளையும் கிள்ளி போட்டுவிட வேண்டும். 
மருத்துவக் குணங்கள்: இதில் மிக அதிகமாக உள்ள பச்சயம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது. மேலும் இது ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.
சமைப்பது: கட்டாக இருந்தால் பிரித்து கொஞ்சம் வாடிய மஞ்சள் இலை, தண்டை எடுத்துவிட்டு காற்றோட்டமாக சிறிது நேரம் வைத்தால் உள் ஈரம் போய்விடும். அலசும்போது இருக்கும் ஈரமே போதும். அதிக தண்ணீர் வைத்து வேகவைப்பது தவறு. தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடாமல் வேக விடலாம். நிறம் மாறாமல் இருக்க சிறிது சர்க்கரை சேர்க்கலாம். கீரையில் இருக்கும் உப்பே இதற்கு போதுமானது; கூடுதலாக தேவையில்லை என்கிறார்கள். தேவைப்பட்டால் கடைசியில் கொஞ்சமாக உப்பு போடலாம். வெந்தால் கீரை சுருங்கி விடுமென்பதால் முதலில் சேர்த்தால் உப்பு கரிக்கும். திறந்த நிலையில் குறைந்த நேரமே வேக வைக்கவும்.
உணவுச்சத்து: இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த விருத்திக்கும் உதவுகிறது.
ஒரு கப் பசலைக்கீரையில் இருக்கும் உணவுச்சத்து:
கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லி கிராம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம்.
சில சமையல் வகைகள்: இதை பச்சையாக சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம். வெங்காயம் தக்காளி சேர்த்துக் கடைதல், தேங்காய், மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்துக் கூட்டு செய்தல், புளி, பருப்பு போட்டு குழம்பு, மோர், தேங்காய் அரைத்து மோர்க் குழம்பு இப்படி நிறைய முறையில் சமைக்கலாம்.

(குறிப்பு: இது என்னுடைய ஆக்கமல்ல. மெயிலில் வந்த இந்த கட்டுரையில் சில கூடுதல் தகவல்கள் சேர்த்து, சில திருத்தங்கள் செய்து அனைவரோடும் பகிர்ந்துக் கொள்கிறேன்)

15 comments:

 1. கீரையின் முழு விஷயத்தையும் போட்டிருக்கீங்க :-)

  நானும் தான் சாப்பிட்டுப்பார்த்து இருக்கேன் ஆனா என் கொழுப்பு கூடி இருக்குன்னுதான் எல்லாரும் சொல்றாங்க ..ஒரு வேளை வேரோட அப்படியே சாப்பிடனுமா..? :-))

  ReplyDelete
 2. @ ஜெய்லானி...

  //ஆனா என் கொழுப்பு கூடி இருக்குன்னுதான் எல்லாரும் சொல்றாங்க ..ஒரு வேளை வேரோட அப்படியே சாப்பிடனுமா..? :‍))//

  வேரோட சாப்பிட்டா வாய்க் கொழுப்பும் குறையுமாமே..? :-) ட்ரை பண்ணிதான் பாருங்களேன் சகோ... :))))) எஸ்கேப்....

  ReplyDelete
 3. ஸலாம் சகோ அஸ்மா,
  ஒரு கீரையை பற்றிய கம்ப்லீட் பயோடேட்டா குடுத்து இருக்கீங்க..
  கீரைக்கெல்லா ஹிஸ்ட்ரி இருக்குங்கிறது இப்பதா தெரியுது,,

  நல்ல பதிவு..அமீரக வாழ்க்கையில் கீரைகளை சாலட்களில் மட்டுமே காணமுடிகிறது..என்ன செய்ய...

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 4. மிக நல்ல தகவல். எங்களுக்கு இந்த பாஆஆஆலக்.... மட்டும்தான் இங்கு கிடைக்கும்.

  //மேலை நாடுகளில் இதை கோதுமை, மைதா போன்ற மாவுகளில் கலந்து விற்கிறார்கள்.// இதை நான் கேள்விப்படவில்லையே, பெயர் தெரிந்தால் கூறவும் பிளீஸ்ஸ்.

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா..,
  மிகவும் பயனுள்ள பதிவை போட்டு இருக்கீங்க...
  அதுவும் அழகாக பிரித்து தெளிவாக எழுதியிருப்பது சிறப்பாக இருந்தது.பலருக்கும் நிச்சயம் உபயோகமாக இருக்கும்.
  வாழ்த்துக்கள் அஸ்மா...

  அன்புடன்,
  அப்சரா.

  ReplyDelete
 6. //வேரோட சாப்பிட்டா வாய்க் கொழுப்பும் குறையுமாமே..? :-) ட்ரை பண்ணிதான் பாருங்களேன் சகோ... :))))) //


  நானும் அதைதான் கேட்டேன் ஹய்யோ...ஹய்யோ...!! :-))

  ReplyDelete
 7. //நானும் தான் சாப்பிட்டுப்பார்த்து இருக்கேன் ஆனா என் கொழுப்பு கூடி இருக்குன்னுதான் எல்லாரும் சொல்றாங்க ..ஒரு வேளை வேரோட அப்படியே சாப்பிடனுமா..? :-)) //

  ஜெய்லானி பாய், உங்க மாதிரி ஆளுங்களுக்கு liposuction பண்ணாலும் கொறையாதாம்மா... ஹி ஹி


  //ஜெய்லானி said... 6

  //வேரோட சாப்பிட்டா வாய்க் கொழுப்பும் குறையுமாமே..? :-) ட்ரை பண்ணிதான் பாருங்களேன் சகோ... :))))) //


  நானும் அதைதான் கேட்டேன் ஹய்யோ...ஹய்யோ...!! :-))
  //

  எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் இதயம்...அடா அடா.. :)

  அஸ்மா, மொத பதிவுல கேரட் அல்வா போட்டு கொழுப்பை ஏத்தி விட்டுட்டு அடுத்த பதிவுல அதை எபப்டி கரைக்கிறதுன்னு சொல்றீங்களா... நல்ல ஆளும்மா... “:))

  ReplyDelete
 8. //ஜெய்லானி பாய், உங்க மாதிரி ஆளுங்களுக்கு liposuction பண்ணாலும் கொறையாதாம்மா... ஹி ஹி//


  அனீஸ் அட, விட்டா பைப்பை என் வாய்குள்ளேவே விட்டுடூவீங்க போலிருக்கே.நல்ல வேளை நீங்க டாக்டரா ஆகல..ஒரு வேளை ஆனா என் கதி என்னாகிறது அவ்வ்வ்வ்வ்

  //எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் இதயம்...அடா அடா.. :) //

  ஆமாமா...அதுக்காக கூட்டணி வச்சி கும்மிறாதீங்க .ஹா..ஹா. :-)))

  ReplyDelete
 9. @ RAZIN ABDUL RAHMAN...

  //ஸலாம் சகோ அஸ்மா,
  ஒரு கீரையை பற்றிய கம்ப்லீட் பயோடேட்டா குடுத்து இருக்கீங்க..
  கீரைக்கெல்லா ஹிஸ்ட்ரி இருக்குங்கிறது இப்பதா தெரியுது//

  ஸலாம். எனக்கு மெயிலில் வந்த தகவல்களோடு சில கூடுதல் தகவல்களும், தேவையான மாற்றங்களும் செய்து கொடுத்தேன் சகோ. ஹிஸ்ட்ரி/ஜாகரஃபி இல்லாம எதுவுமில்ல என்றுதான் சொல்லணும் :-) நன்றி சகோ.

  ReplyDelete
 10. @ athira...

  //எங்களுக்கு இந்த பாஆஆஆலக்.... மட்டும்தான் இங்கு கிடைக்கும்// அப்போ நல்லா சாப்பிடுங்கோஓஓ.. :-)

  //இதை நான் கேள்விப்படவில்லையே, பெயர் தெரிந்தால் கூறவும் பிளீஸ்ஸ்//

  உங்களுக்காக தேடிட்டு இருக்கேன் அதிரா :) பெயர் தெரிந்தால் நிச்சயம் சொல்கிறேன். நன்றி அதிரா.

  ReplyDelete
 11. @ apsara-illam...

  //பலருக்கும் நிச்சயம் உபயோகமாக இருக்கும்//

  வ அலைக்குமுஸ்ஸலாம் அப்சரா! கீரை வகைகளை சிலர் அலட்சியப்படுத்துவார்கள். முழு பலன் தெரிந்தாலாவது பயன்படுத்துவார்களே என்றுதான் இந்த பகிர்வு. நன்றி அப்சரா!

  ReplyDelete
 12. @ அன்னு...

  //ஜெய்லானி பாய், உங்க மாதிரி ஆளுங்களுக்கு liposuction பண்ணாலும் கொறையாதாம்மா...//

  எத்தன நாள் கோபமோ இந்த அன்னுவுக்கு...? :)))

  //அஸ்மா, மொத பதிவுல கேரட் அல்வா போட்டு கொழுப்பை ஏத்தி விட்டுட்டு அடுத்த பதிவுல அதை எபப்டி கரைக்கிறதுன்னு சொல்றீங்களா... நல்ல ஆளும்மா... “:))//

  இல்லபா... "கேரட் அல்வா" உங்க மகன் ஜுஜ்ஜூவுக்கு! பசலைக்கீரை உங்களுக்கு :))) வேணும்னா ஜுஜ்ஜுகிட்ட ஐஸ் வச்சி கேரட் அல்வாவ கொஞ்சமா வாங்கி சாப்பிட்டுக்கோங்க.. அப்போ கொழுப்பு ஏறாது :‍-)

  (இப்போ சீரியஸா..) கேரட் அல்வாவில் பட்டரைக் குறைத்தும் செய்யலாம் அன்னு. அதாவது வதக்கும்போது பட்டர் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமா தேவைக்கு எண்ணெய் விட்டு, கடைசியா மட்டும் பசுநெய் சிறிது சேர்த்துக்கலாம். பிள்ளைகளுக்கு மட்டும் செய்வதாகவோ, விருந்து சமயங்களில் என்றாலோ இதுபோல் ரிச்சாக செய்யலாம்.

  ReplyDelete
 13. @ ஜெய்லானி...

  //ஆமாமா...அதுக்காக கூட்டணி வச்சி கும்மிறாதீங்க//

  அந்த பயம் இருந்தா போதும் :))))))

  ReplyDelete
 14. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  கீரை இல்லாத உணவு கூரை இல்லாத வீட்டுக்கு சமம்.
  என்று தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது

  தினமும் 100 கிராம் கீரையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இது கண்களுக்கும் நல்லது

  தகவலுக்கு நன்றி சகோ

  ReplyDelete
 15. @ ஹைதர் அலி...

  வ‌ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

  //கீரை இல்லாத உணவு கூரை இல்லாத வீட்டுக்கு சமம்.
  என்று தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது//

  அப்படியா... இப்போதான் இந்த பழமொழி கேள்விப்படுகிறேன் சகோ :)

  //தினமும் 100 கிராம் கீரையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இது கண்களுக்கும் நல்லது// நிச்சயமா, ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் உள்ளன! வருகைக்கு நன்றி சகோ.

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!