Sunday, 24 April 2011

பெண் எழுத்து (தொடர் பதிவு)


முன்னுரை: "பெண் எழுத்து" பற்றிய தொடர் பதிவுக்கு என்னை அழைத்த தோழி ஆயிஷா அபுல் அவர்களுக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதை எழுதி முடித்து நாமும் சிலரை அழைக்கலாமே என்று பதிவர்களைத் தேடியபோதுதான் தோழி அனிஷா(அன்னு)வும் இந்த தொடர்பதிவுக்கு என்னை அழைக்காமல் அழைத்திருந்தது தெரிந்தது :) அவர்களுக்கும் எனது நன்றிகள்!

தொடர் பதிவுகளின் சில தலைப்புகளில் ஆர்வமில்லாமல் இதற்கு முன்னால் அழைக்கப்பட்ட அழைப்புகளுக்கு டிமிக்கி கொடுத்தாச்சு :) சரி இதையாவது எழுதுவோமே என்று நினைத்து எதையாவது எழுதி வைக்கக்கூடாதே என்று கொஞ்சம் வெய்ட் பண்ணி :) இப்போது தொடர்கிறேன். இதுபோல் (இறைவன் நாடினால்) ஏற்கனவே அழைக்கப்பட்ட தொடர் பதிவுகளையும் கவுண்ட் டவுன் முறையிலாவது :) எழுதவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஏற்கனவே அழைத்தவர்களுக்கு கொடுக்கும் மரியாதையாக இதை கூறிக்கொள்கிறேன் :)

"பெண் எழுத்து" என்ற இந்த தலைப்பில் பல பதிவர்களும் தங்கள் கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். அனைத்தையும் படிக்க இயலாவிட்டாலும், படித்தவரை அத்தனையும் அருமையாக, வெவ்வேறு கோணங்களில் இருந்தன. அதில் என்னுடைய கருத்துக்களுக்கு ஒத்த கருத்துக்களும் நிறையவே இருந்ததில் (நம்மைப் போலவே தோழிகளும் சிந்திக்கிறார்கள் என்று)மகிழ்ச்சி!:) சரி, இப்போது தலைப்புக்கு வருவோம்.

உலகில் எங்குமே பெண்ணுக்கென்று ஒரு 'தனி மொழி' இல்லை என்னும்போது 'எழுத்து' மட்டும் "பெண் எழுத்து" என்று எப்படி வந்தது?!! பலருக்கும் இதுபோல் தோன்றிய மாதிரி எனக்கும் தோன்றியது. பலகோடி உலக மக்களிடையே ஒவ்வொரு நொடிப் பொழுதும் எண்ணற்ற விஷயங்கள் நட‌ந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதுபோல் பல்வேறு எண்ண‌ங்களும் தோன்றி மறைகின்றன. அவற்றில் சிறு பகுதியே எழுத்துக்களாக பரிமாறப்படுகின்றன. நடக்கும் நிகழ்வுகளையும், சொல்ல நினைக்கும் எண்ணங்களையும்தான் எழுத்தால் நாம் வடிக்கிறோம். அந்த எண்ணங்கள் பொதுவான விஷயங்களைப் பற்றியோ, நாட்டு நடப்புகளைப் பற்றியோ, வரையறுக்கப்பட்ட சட்டங்க‌ளைப் பற்றியோ சொல்லக்கூடிய ஒரு எழுத்தாக/பேச்சாக வெளிப்படும்போது, சொல்ல வேண்டிய கோணம் மாறுபடலாமே தவிர, அங்கே ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் இருக்காது; இருக்கவும் முடியாது.

ஆனால் பெண்களுக்கே உரித்தான சில இயற்கையான தன்மைகளால், குறிப்பிட்ட சில விஷயங்களைத் துணிந்து எழுதவோ, பேசவோ பெண்கள் முன்வருவதில்லை. அவரவர் மனநிலை, வளக்கப்பட்ட விதம், சுற்றியுள்ள சூழ்நிலை, வாழ்வில் கிடைத்த அனுபவங்கள், அதனால் ஏற்பட்ட பண்பாடுகள்/மன உறுதிகள் போன்றவற்றின் வித்தியாசங்களால், தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த பெண்கள் தங்களுக்கு தாங்களே விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகளும் வித்தியாசப்படலாம். ஆனால் எப்படியோ ஏதாவது ஒருவிதக் கட்டுப்பாட்டிற்கு உள்ளேதான் பெண்களின் எழுத்தும் அமைந்துள்ளது என்பதை, ஆண்களைவிட பெண்கள்தான் நன்கு உணரமுடியும். அதுதான் உண்மையும்கூட! குறிப்பிட்ட சில வட்டத்துக்குள் பெண்கள் தங்களை வைத்திருப்பதற்கு காரணங்களில் சில:

பெண்களின் இயற்கை சுபாவங்கள்

உதாரணமாக அஞ்ச வேண்டிய விஷயங்களுக்கு அஞ்சுவது என்பது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். ஆனால் 'அச்சம்' என்பதை பெண்களுக்கே உரிய இலக்கணமாக கூறி வந்ததாலோ என்னவோ பெண்கள்தான் அதிகமாக, சொல்லப் போனால் சில விஷயங்களில் தேவையில்லாமலே கூட அஞ்சுகிறார்கள். அதுபோல் 'நாணம்' என்று சொல்லப்படும் வெட்கமும் இரு பாலருக்கும் இருக்கவேண்டியதே! ஆண் என்பதால் எதையும், எப்படியும் எழுதலாம் என்று எழுதும்போது அது அறுவருப்பாகவே தோன்றும். அதுபோன்ற எழுத்துக்களிலும் பெண்கள் ஒதுங்கியே இருப்பார்கள். ஏனெனில் அறிந்தோ, அறியாமலோ பெண்களிடம் குடிகொண்டிருக்கும் அதிகபட்சமான நாணம். இப்படியே நிறைய சொல்லலாம்.

ஆண்களுக்கு அதிகம் பரிச்சயமில்லாத விஷயங்களை பெண்கள் அறிந்து வைத்திருப்பது

உதாரணமாக சமையல், தையற்கலை, குழந்தை வளர்ப்பு, வீட்டு வைத்திய முறைகள், கைவினைப் பொருட்கள் செய்வது என்று பெண்களே அதிகமாக தெரிந்து வைத்திருக்கும்போது, அதைப் பகிர்ந்துக் கொள்வதிலேயே பெண்களின் எழுத்துக்கள் முன்னிலை வகிக்கின்றன. அப்போதும் அது பெண் எழுத்து என்றாகிவிடுகிறது.

இதைத் தவிர தான்பட்ட கஷ்டங்களையோ/அனுபவித்த சந்தோஷங்களையோ/கற்றுக்கொண்ட கலைகளையோ மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளும்போது, ஆண், பெண் வித்தியாசம் அங்கு காணப்படுவதில்லை. ஆண்களின் திறமைக்கு சற்றும் குறைவின்றியே பெண்களின் எழுத்துக்களும் அமைந்துள்ளன. பெண்கள் ஜன்னலின் வலைக்குள்ளிருந்து வெளியுலகை எட்டிப்பார்த்த காலம் மாறி, இணையத்தின் வலைகளில் பெண்களும் சுதந்திரமாக உலா வருகிறோம். ஆனால் அதைத் தூற்றவும் சிலர் உண்டு!

எனக்குத் தெரிந்து நம்ம நாட்டில், அதுவும் தமிழ்த் (திரு)நாட்டில்தான் பெண்களின் எழுத்து/பேச்சு என்றால் ஒரு வித்தியாசப் பார்வை இருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது. இணையத்தில் எழுதினால், 'வீட்டில வேற வேலை இல்ல போலிருக்கு...', 'கம்ப்யூட்டரே கதின்னு உட்கார்ந்திருப்பாங்க போல' இப்படியான பேச்சுகள் சிலருக்கு அடியாக விழுகின்றன. பெண்கள் என்றால் அடுப்பங்கரையும், துடைப்பமும், குழந்தை வளர்ப்பும் மட்டும்தான் தெரிந்து வைத்திருக்கணுமா என்ன? குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு, சில நேரங்களில் தன்னுடைய ஊண்/உறக்கத்தைக் கூட தள்ளி வைத்துவிட்டு, தான் கற்றவற்றையும், சிந்தனையில் வரும் நல்ல விஷயங்களையும் எழுதும் பெண்களின் செயல்திறன் புரிந்துக் கொள்ளப்படுவதில்லை. "தோட்டத்து பச்சிலைக்கு வீரியம் கம்மி" என்று சும்மாவா சொன்னார்கள்?

சரி, சமையலைப் பகிர்ந்துக் கொண்டால் அதற்காவது சும்மா விடுவார்களா என்றால், அதுவுமில்லை. 'ஆமா ஆம்மா.. கடுகு எப்படி போடணும், கறிவேப்பிலை எப்படி தாளிக்கணும்னு சொல்றதுக்கு நேரத்தை ஒதுக்குறாங்க பாரு.. அங்கே ஆம்பளைங்க சமையல்தான் நடக்குது போல... இல்லாட்டி அவங்களுக்கு மட்டும் எப்படி இதற்கெல்லாம் நேரம் கிடைக்குது..?' இப்படியும் சிலருக்கு வசை/வதைச் சொற்கள் விழுகின்றனவாம்! ஆக பெண்கள் என்றால் எந்த நல்ல விஷயம் செய்தாலும் அதைக் குற்றக்கண் கொண்டு பார்க்கும் நல்லெண்ணம்(?) படைத்தவர்களாலும் பெண் எழுத்துக்கள் சில இடங்களில் ஒடுக்கப்பட்டு விடுகின்றன. சொல்வதையெல்லாம் ஒரு காதில் வாங்கி இன்னொரு காதால் வெளியிடும் பக்குவம் எல்லா பெண்களிடம் இல்லாததும், அவற்றைத் தாங்கிக் கொள்ள முடியாத பலஹீனமும்தான் இத்தகைய பின்னடைவுகளுக்கு காரணமாக அமையும்.

ஆனால் அதையும் மீறி (பல ஆண்கள் கூட‌ மாற்றுப் பெயரில்/புனைப் பெயரில் எழுதும்போது), பெரும்பாலான பெண்கள் தங்கள் சொந்தப் பெயரிலேயே எழுதுகிறோம். இதுகூட தேவையில்லாத தடைக் கற்களை மீறிய, பெண்களின் எழுத்துக்கு கிடைத்த‌ முன்னேற்றம் எனலாம். சமுதாய நலன் கருதி சொல்லியே ஆகவேண்டும் என்ற விஷயங்களைச் சொல்வதற்கு நாம் தயங்குவதில்லை. இதுவும் பெண் எழுத்துக்களின் முன்னேற்றம்தான். இந்த முன்னேற்றங்களுக்கு உதவியாக இருக்கும் ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அதாவது,

ஒவ்வொரு ஆணின் வளர்ச்சிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பதாக கூறப்படுவது உண்மையாக இருக்கலாம், சிலவேளை இல்லாமலும் இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணின் (முன்னேற்ற) எழுத்திற்கு பின்னால் ஒரு ஆண் இருப்பது என்பது மறுக்க முடியாத உண்மை! ஏனெனில் பெண்மை என்றாலே மென்மைதான். அந்த மென்மையையும் தாண்டி, சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் தயக்கமின்றி துணிந்து எழுத‌/செயல்பட துணையாக நின்று ஊக்குவிப்பது அந்தப் பெண்ணின் கணவனாகவோ, தந்தை அல்லது சகோதரனாகவோ இருக்கிறார்கள். அவ்வாறு எழுதும் ஒவ்வொரு பெண்களின் எழுத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கும். அந்த நோக்கம் நல்ல நோக்கமாக இருக்கும் பட்சத்தில், தைரியமாகவும், அதேசமயம் வரம்பு மீறாமலும் எழுதும்போது பெண் எழுத்தும் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படலாம்!

அழைப்பை ஏற்று நினைவில் வ‌ந்தவரை எழுதிவிட்டேன். இதைத் தொடர்ந்து எழுத சிலரை அழைக்கிறேன். தலைப்பில் விருப்பம் இருந்தால் தொடருங்கள்.

ஜலீலாக்கா சமையலோடு பல விஷயங்களையும் பகிர்ந்துக் கொள்வீர்கள் என்பதால் அழைக்கிறேன் :)

கவிசிவா வகேஷன் முடிந்து வந்தீர்கள், மீண்டும் ஆளைக் காணோம் :) வந்தவுடன் எழுதுங்கள்.

ஹுஸைனம்மா இதுவரை நீங்கள் இதைப்பற்றி எழுதவில்லை என்று நினைக்கிறேன் :)அதனால் எழுதுவீர்கள் என எதிர்ப்பார்க்கிறேன்.

கீதாச்சல், மேனகா இருவரும் சமையல் சமாச்சாரங்கள் பற்றி அதிகம் எழுதினாலும் இதையும் எழுதலாமே! :)

தளிகா உங்க நடையில் இந்த தலைப்பைத் தொடர்ந்தால் அனைவருக்கும் சுவாரஸ்யமாக இருக்குமே! :)

30 comments:

 1. masha allah...அருமையான ஆட்களைத்தான் தேர்வு செஞ்சிருக்கீங்க. உங்க பதிவும் அருமையாத்தான் இருக்கணும். உடம்பு சரியில்லைன்னீங்களேன்னு பாக்க வந்தேன்ப்பா. படிக்க நேரமில்லை... ஹி ஹி... மறுபடியும் வந்து படிக்கறேன்.

  வஸ் ஸலாம்.

  ReplyDelete
 2. நல்ல பகிர்வு.அஸ்மா.

  ReplyDelete
 3. ஆஹா, மாட்டிவிட்டுட்டீங்களா? இது சம்பந்தமா நான் எழுத நினைச்சதையெல்லாம் நீங்க, அனிஷா, முத்துலெட்சுமிக்கா, மனோக்கா எல்லாருமே அழகா எழுதிட்டீங்க. எனக்கு பாக்கி எதுவுமே வைக்காம!! :-))))

  எதாவது புதுசா தோணுச்சுனா எழுதுறேன்க்கா.

  ReplyDelete
 4. //இணையத்தின் வலைகளில் பெண்களும் சுதந்திரமாக உலா வருகிறோம். ஆனால் அதைத் தூற்றவும் சிலர் உண்டு//

  ம்.. :-(((

  ReplyDelete
 5. அழகாகச் சொல்லிட்டீங்க அஸ்மா.

  ReplyDelete
 6. ஸலாம் சகோ அஸ்மா.
  பெண்களின் எழுத்தில் உள்ள பல தடைகளை எடுத்து எழுதியிருக்கிறீர்கள்..அவர்களின் உள ஓட்டத்தையும் சரியாக பிரதிபலித்துள்ளது உங்களின் இப்பதிவு..

  வலையில் பெரும்பாலும் பெண்கள் பயனுள்ளவற்றையே எழுதப் பார்க்கிறேன்..

  ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பது உண்மைதான்...ஆனால் அது எல்லா ஆண்களுக்கும் அமைந்துவிடுவதில்லை...

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அழைக்கும்

  ரெம்ப அருமையாக எழுதி உள்ளீர்கள்.வாழ்த்துக்கள்

  நன்றி தோழி.

  ReplyDelete
 8. பெண் எழுத்து பற்றி மிக அழகாக ,தெளிவாக எழுதி இருக்கீங்க.
  உங்களோடு சேர்த்து 3 வது அழைப்பு,
  என்னால் முடிந்தது நான் எழுது கிறேன்.

  ReplyDelete
 9. பலருக்கு தலை எழுத்தே சரி இல்லாத போது...

  பெண் எழுத்து ஆண் எழுத்து என்று வேருபாடு தேவையா?

  ReplyDelete
 10. ஹூசைனம்மா சொன்னதையே வழிமொழிகிறேன்..எல்லோரும் இதைபத்தி எழுதிட்டாங்க,இதுக்கு மேல என்ன எழுதன்னு தெரியல...முடிந்தால் எழுட்திறேன் அஸ்மா.அழைப்பிற்கு நன்றி!!

  ReplyDelete
 11. அனைத்தனையும் தெளிவாக சொல்லிட்டீங்க தோழி அருமை..

  ReplyDelete
 12. @ அன்னு...

  //உடம்பு சரியில்லைன்னீங்களேன்னு பாக்க வந்தேன்ப்பா. படிக்க நேரமில்லை... ஹி ஹி... மறுபடியும் வந்து படிக்கறேன்//

  அல்ஹம்துலில்லாஹ், இப்போ பரவாயில்லை அனிஷா. தொடர் பதிவில் ஆவல் அவ்வளவா இருக்காது. அதனாலேயே எந்த தொடர் பதிவையும் எழுதாமல் இருந்தேன். இப்போது நட்பு வட்டங்களின் அழைப்புக்காக என் கருத்துக்களை பதிவாக எழுதியுள்ளேன் :) உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பொறுமையா படிங்க.(நீங்கள் அழைத்த தொடர் பதிவையும் பிறகு எழுதுகிறேன், இன்ஷா அல்லாஹ்)

  ReplyDelete
 13. @ asiya omar...

  //நல்ல பகிர்வு.அஸ்மா//

  நன்றி ஆசியாக்கா.

  ReplyDelete
 14. @ ஹுஸைனம்மா...

  //ஆஹா, மாட்டிவிட்டுட்டீங்களா?// நீங்க மாட்டாமலா என்ன? :)))

  //எதாவது புதுசா தோணுச்சுனா எழுதுறேன்க்கா//

  புதுசா தோணலன்னா.. எஸ்கேப்தானா? :-)

  ReplyDelete
 15. //எனக்குத் தெரிந்து நம்ம நாட்டில், அதுவும் தமிழ்த் (திரு)நாட்டில்தான் பெண்களின் எழுத்து/பேச்சு என்றால் ஒரு வித்தியாசப் பார்வை இருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது. இணையத்தில் எழுதினால், 'வீட்டில வேற வேலை இல்ல போலிருக்கு...', 'கம்ப்யூட்டரே கதின்னு உட்கார்ந்திருப்பாங்க போல' இப்படியான பேச்சுகள் சிலருக்கு அடியாக விழுகின்றன//

  இப்புடியெல்லாம் கூட கொஞ்சம் பேரு நம்மைப் பத்தி நினைப்பாங்களா?? பயமா இருக்கே.. :)

  //அந்த எண்ணங்கள் பொதுவான விஷயங்களைப் பற்றியோ, நாட்டு நடப்புகளைப் பற்றியோ, வரையறுக்கப்பட்ட சட்டங்க‌ளைப் பற்றியோ சொல்லக்கூடிய ஒரு எழுத்தாக/பேச்சாக வெளிப்படும்போது, சொல்ல வேண்டிய கோணம் மாறுபடலாமே தவிர, அங்கே ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் இருக்காது; இருக்கவும் முடியாது.//

  சரியே..

  ReplyDelete
 16. @ athira...

  //அழகாகச் சொல்லிட்டீங்க அஸ்மா//

  நினைவில் வந்த‌தை எழுதிவைத்தேன் :) வருகைக்கு நன்றி அதிரா.

  ReplyDelete
 17. @ RAZIN ABDUL RAHMAN...

  ஸலாம் சகோ.

  //பெண்களின் எழுத்தில் உள்ள பல தடைகளை எடுத்து எழுதியிருக்கிறீர்கள்..அவர்களின் உள ஓட்டத்தையும் சரியாக பிரதிபலித்துள்ளது உங்களின் இப்பதிவு..//

  பெண்ணுக்குதானே பெண்ணின் மனதை (ஓரளவு முழுமையாக‌) புரிய முடியும்! :)

  //ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பது உண்மைதான்...ஆனால் அது எல்லா ஆண்களுக்கும் அமைந்துவிடுவதில்லை...//

  நிச்சயமா சகோ. அதனால்தான் "..சிலவேளை இல்லாமலும் இருக்கலாம்" என்று குறிப்பிட்டிருந்தேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 18. @ ஆயிஷா அபுல்...

  வஅலைக்குமுஸ்ஸலாம் ஆயிஷா.

  //ரெம்ப அருமையாக எழுதி உள்ளீர்கள்//

  ம்.. அப்படியா..?! :) நீங்கள் அழைக்கும்போது என்ன எழுதுவதென்று கொஞ்சம் குழப்பமாக இருந்தது. பிறகு யோசித்ததில் எது மனதில் பட்டதோ அதை பட்டென்று எழுதி முடிச்சாச்சு :) கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தோழி.

  ReplyDelete
 19. @ Jaleela Kamal...

  //பெண் எழுத்து பற்றி மிக அழகாக ,தெளிவாக எழுதி இருக்கீங்க.
  உங்களோடு சேர்த்து 3 வது அழைப்பு,
  என்னால் முடிந்தது நான் எழுது கிறேன்//

  கருத்துக்கு நன்றி ஜலீலாக்கா. 3 பேரின் அழைப்பா? அப்போ சீக்கிரம் எழுதிடுங்க :)

  ReplyDelete
 20. @ அந்நியன் 2...

  //பலருக்கு தலை எழுத்தே சரி இல்லாத போது...

  பெண் எழுத்து ஆண் எழுத்து என்று வேருபாடு தேவையா?//

  'தலையெழுத்து' இறைவன் விதிச்சது. 'பெண் எழுத்து ஆண் எழுத்து'.. யாரோ முதலில் யோசிச்சு, தொடர் பதிவா மாட்டிவிட்டது :)

  ReplyDelete
 21. @ S.Menaga...

  //எல்லோரும் இதைபத்தி எழுதிட்டாங்க,இதுக்கு மேல என்ன எழுதன்னு தெரியல...முடிந்தால் எழுட்திறேன் அஸ்மா.அழைப்பிற்கு நன்றி!!//

  ட்ரைப் பண்ணிப் பாருங்க மேனகா. நீங்க சொன்ன மாதிரி முடிந்தா எழுதுங்க. நானும் எழுதாமல் எஸ்கேப் ஆகதான் பார்த்தேன் :) நட்பு வட்டங்களின் அன்புக் கட்டளைக்காக எழுதியாச்சு. அழைப்புக்கு வந்து பதில் சொன்னவரை சந்தோஷம், நன்றி மேனகா :)

  ReplyDelete
 22. @ அன்புடன் மலிக்கா...

  //அனைத்தனையும் தெளிவாக சொல்லிட்டீங்க தோழி அருமை..//

  நீங்க உங்க கவிதை நடை சேர்த்து அழகா சொல்லியிருந்தீங்க. அப்படிலாம் நம்மால் முடியுமா.. இது ஒரு சாதாரண எழுத்து நடை :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.

  ReplyDelete
 23. //அப்படிலாம் நம்மால் முடியுமா.. இது ஒரு சாதாரண எழுத்து நடை//

  தன்னடக்கம் தன்னடக்கம்..

  அப்படியே வந்துபாருங்க இங்கேhttp://niroodai.blogspot.com/2011/04/blog-post_27.html

  ReplyDelete
 24. @ எல் போர்ட்.. பீ சீரியஸ்...

  //இப்புடியெல்லாம் கூட கொஞ்சம் பேரு நம்மைப் பத்தி நினைப்பாங்களா?? பயமா இருக்கே.. :)//

  இது ச்சும்மா..டூப்புக்கு :‍-) பயப்படுற மாதிரில்ல தெரியுது..? :‍-) தேவையில்லாமல் குறை நினைப்பவர்களுக்கும் பேசுபவர்களுக்கும் சொல்லியா கொடுக்கணும்..? போகட்டும்! கருத்துக்கும் முதல் வருகைக்கும் :) நன்றி சந்தனா.

  ReplyDelete
 25. @ அன்புடன் மலிக்கா...

  //தன்னடக்கம் தன்னடக்கம்..//

  :)))) உண்மையச் சொன்னா ஒத்துக்க மாட்டேங்கிறீங்களேப்பா.. :)) எனக்கும் கவிதைப் பிடிக்கும். பொய் கலாக்காமல் எழுத முயற்சியும் பண்ணியிருக்கேன். ஆனா உங்க அளவு வராது :)

  ReplyDelete
 26. Asma,arumaiyaaga ezhudhiyirukeenga..ippadiyellaam enakku puttu puttu vekka theriyaadhu irundhaalum porumaiyaaga neram pola vandhu podugiren sariyaa.

  ReplyDelete
 27. @ தளிகா...

  //ippadiyellaam enakku puttu puttu vekka theriyaadhu//

  புட்டு புட்டு வைக்காம முழுசாவே எழுதுங்க ருபீ. அதான் நல்லா இருக்கும் :)))

  //irundhaalum porumaiyaaga neram pola vandhu podugiren sariyaa//

  ஓகே, ஓகே பொறு...மையா.. உங்க வசதிப்பட்ட நேரத்தில் எழுதினால் போதும் ருபீனா. அழைப்பிற்கு வந்து பதில் சொன்னதற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 28. உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்

  என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி

  http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html

  ReplyDelete
 29. அருமை. அழகான ,ஆழமான வரிகள். எத்தனை சிறந்த எழுத்தாளர்கள் காலத்தின் கட்டாயத்தால்,மறைக்க பட்டார்களோ,...
  ஓவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டிய வரிகள்...
  நன்றி....

  ReplyDelete
 30. @ செந்தில்கீதா...

  //அருமை. அழகான ,ஆழமான வரிகள். எத்தனை சிறந்த எழுத்தாளர்கள் காலத்தின் கட்டாயத்தால்,மறைக்க பட்டார்களோ,...
  ஓவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டிய வரிகள்...//

  தங்களின் முதல் வருகைக்கும் அழகிய பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி :)

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!