அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday, 7 April 2011

மீன் பிரியாணி (Fish Biryani)


பிரியாணி பல வகையாக செய்யலாம் என்பது நாம் அறிந்ததே! இதில் மீன் பிரியாணி செய்வது கொஞ்சம் மெனக்கெட்ட வேலை என்பதால், அவசரமில்லாமல் சமைக்கும் நேரங்களில் செய்வதே நல்லது. இதை முறையாக செய்தால் ரொம்ப அருமையாக இருக்கும்! இதில் கொடுக்கப்பட்டுள்ள முறை, என்ன‌ருமை தாயார் பல விருந்துகளில் செய்துக் கொடுத்து பலரையும் அசத்திய செய்முறை. பெரும்பாலான சமையல்கள் என் தாயாரிடமிருந்து கற்றுக்கொண்டதுதான் என்றாலும், சின்ன மாற்றம்கூட செய்து பார்க்காமல் அவர்களிடம் கற்றதை நான் அப்படியே செய்யக்கூடிய பல‌ ரெசிபிகளில் இதுவும் ஒன்று :) நீங்களும் இதுபோல் செய்துப் பார்த்து சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள்:

பாகம் 1:

மீன் துண்டுகள் - ½ கிலோ
முட்டை - 2
கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மிளகு ஜீரகம் - 3 ஸ்பூன்
மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 3/4 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

பாகம் 2:

பாஸ்மதி அரிசி - ½ கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பழுத்த பச்சை மிளகாய் - 10
கேரட் - 1
கெட்டி தயிர் - 1 கப்
பால் - 100 மில்லி
அரைத்த தேங்காய் - 1 பிடியளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்
மல்லி கீரை - 1 கொத்து
பொதினா - 1 பிடி
எலுமிச்சை பழம் - 1
பட்டை - 1; கிராம்பு - 3; ஏலக்காய் - 2
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
கறி மசாலாத் தூள் - 3 ஸ்பூன்
சிக்கன் ஸ்டோக் (அல்லது வெஜிடபிள் ஸ்டோக்) - 1 க்யூப்
பசு நெய் - 5 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு


செய்முறை:

1. முத‌ல் பாகத்தில் சொன்ன பொருட்களில் இஞ்சி பூண்டு, மிளகு ஜீரகம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் சில சொட்டுகள் எலுமிச்சை சாறும் சிறிது தண்ணீரும் தெளித்து கலந்து, மீன் துண்டுகளில் தடவி சிறிது நேரம் பிரட்டி வைத்து, பிறகு எண்ணெய் விட்டு பொரிக்கவும்.

2. நன்கு பொரிந்து முறுகியவுடன் மெதுவாக (உடையாமல்) மறுபக்கம் திருப்பி, அதுபோல் முறுகவிட்டு எடுக்கவும்.

3. முட்டையில் (புளியங்கொட்டை அளவு) சிறிது சிக்கன் ஸ்டோக் சேர்த்து நன்கு கலக்கிக் கொண்டு, கடலை மாவை அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலக்கவும்.

4. வேறொரு வாணலியில் எண்ணெய் விட்டு, பொரித்து வைத்துள்ள மீன் துண்டுகளை முட்டை+ கடலை மாவு கலக்கியதில் இரண்டு பக்கமும் முக்கியெடுத்து மீண்டும் பொரிக்கவும்.

5. பொன்முறுகலாக ஆனவுடன் மறுபக்கம் பிரட்டி, கலக்கிய முட்டை+ கடலை மாவு மீதமிருப்பதை அதன் மீது ஊற்றி இரண்டு பக்கமும் பொரியவிட்டு எடுக்கவும்.





1. இப்போது பிரியாணிக்கான மீன் ரெடி. அடுத்து நீளவாக்கில் நறுக்கிய 1½ வெங்காயம், சுத்தப்படுத்தி நறுக்கிய மல்லிக்கீரை இரண்டையும் எண்ணெய் விட்டு, தீயாமல் பொன் நிறத்தில் பொரித்து எடுக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். கேரட்டில் பாதியைத் துருவிக் கொண்டு, மீதியை சிறியதாக நறுக்கி வைக்கவும்.  தக்காளி மற்றும் மீதியுள்ள பாதி வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.

2. அரிசியை தண்ணீரில் கழுவும் முன், கப் அல்லது குவளை ஏதாவது ஒன்றால் அரிசியை அளந்துக்கொண்டு, 100 மில்லி பாலும் தண்ணீரும் சேர்ந்தால் அதே அளவுக்கு வரும்படி கலந்து தனியாக‌ வைக்கவும். (உம்: அரிசியை அளக்கும்போது 600 மில்லியளவு இருந்தால்½ லிட்டர் தண்ணீருடன் 100 மில்லி பாலைச் சேர்த்து கலந்து 600 மில்லியளவு எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். அதாவது 1 க்கு 1 என்ற அளவு.) பிறகு அரிசியைக் களைந்துவிட்டு எடுத்து வைத்துள்ள தண்ணீர்+ பாலை அதில் ஊற்றி ½ மணி நேரம் மட்டும் ஊற வைக்கவும். அதிக நேரம் ஊறக்கூடாது.

3. இப்போது சோறு புழுங்க‌ப்போடும் பாத்திரத்தில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, கீறி வைத்துள்ள பச்சை மிளகாயைப் போட்டு வெண்ணிறத்தில் பொரிந்த பிறகு வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

4. வெங்காயம் முறுகி வரும்போது இஞ்சி பூண்டு சேர்க்கவும்.





1. இஞ்சி பூண்டு முறுக ஆரம்பிக்கும்போது துருவிய & நறுக்கிய கேரட், தக்காளி, பொதினா சேர்த்து நன்கு வதக்கவும்.

2. வதங்கிய பிறகு கெட்டி தயிர், அரைத்த தேங்காய், மசாலாத் தூள், மஞ்சள் தூள் சிக்கன் ஸ்டோக் மற்றும் தேவைக்கு உப்பு சேர்க்கவும்.

3. எல்லாம் சேர்ந்து குருமா திரண்டு வரும் வரை அடுப்பை நிதானமாக வைத்து வதக்கவும்.





1. குருமா தயாரானவுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து கலக்கி விட‌வும்.

2. இப்போது ஒரு கோப்பை அளவுக்கு குருமாவை எடுத்து வைக்கவும்.

3. மீதியுள்ள குருமாவில் அரிசி ஊற வைத்த தண்ணீர்+ பாலை வடிகட்டி எடுத்து குருமாவில் ஊற்றி, உப்பு தேவைப்பட்டால் சேர்க்க‌வும்.

4. குருமா கொதி வந்தவுடன் ஊறிய அரிசியைக் கொட்டி மூட‌வும்.





1. அரிசி முக்கால் பதம் வெந்தவுடன் மெதுவாக கிண்டிவிட்டு,

2. கீழே அனல் தட்டு போட்டு ஆவி போகாத கனமான மூடியால் மூடி சிம்மில் வைக்கவும். (தண்ணீர் நிறைந்த பாத்திரத்தைக் கூட மேலே ஏற்றி வைக்கலாம்.)





1. சோறு பதமாக வெந்தவுடன், உடையாமல் சோற்றைக் கிண்டி அதில் பாதி சோற்றை எடுத்துவிட்டு மீதி சோற்றின் மீது, தயார் பண்ணி வைத்துள்ள மீனில் பாதியை வைத்து அதன் மேல் எடுத்து வைத்துள்ள குருமாவில் பாதியை வைக்கவும்.

2. அதன்மேல் பொரித்த வெங்காயம், மல்லிக் கீரையில் 1/3 பகுதியைத் தூவவும்.

3. இப்போது எடுத்து வைத்துள்ள சோறில் பாதியை அதன்மேல் மூடிவிட்டு, மீதியுள்ள‌ மீன் துண்டுகளையும் பரத்தி, மீதி குருமாவை மீண்டும் அதுபோல் (மீன்மேல்) வைக்கவும்.

4. மீதமுள்ள பொரித்த வெங்காயம், மல்லிக் கீரையில் பாதியை அதன்மேல் தூவவும். இத்துடன் 2 அடுக்குகள் முடியும்.





கடைசியாக மீதமுள்ள சோற்றை அதன்மேல் போட்டு மூடிவிட்டு, மீதியுள்ள பொரித்த வெங்காயம், மல்லிக் கீரையைத் தூவி, பரவலாக‌ பசு நெய் விட‌வும். இதற்கு மசாலா கம்மியாக கொடுப்பதால், ஆரஞ்சு கலர் பவுடர் சிறிது தண்ணீரில் கரைத்து அதன்மேல் ஊற்றலாம். பிறகு மூடி போட்டு அதே அனல் தட்டின் மீது 5 நிமிஷம் மட்டும் சிம்மில் வைத்திருந்து இறக்கவும்.






டேஸ்ட்டி மீன் பிரியாணி ரெடி!



குறிப்பு:

‍o சிறிய முட்கள் இல்லாத பெரிய மீனின் துண்டுகள்தான் பயன்படுத்த‌ வேண்டும். கொடுவா மீன், வஞ்சிர மீன்(நெய் மீன்/அருக்குலா மீன்), விலை மீன், (பெரிய) தேங்காய்ப் பாறை மீன், காக்கை மீன், (கடல்) சால்மன் மீன் போன்றவை இதற்கு ஏற்றது. இப்போது இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது விலை மீன் துண்டுகள். (வளர்ப்பு மீன்க‌ள் வேண்டாம்)

o முட்டையும் கடலை மாவும் சேர்த்து 2 வது முறை மீனைப் பொரிக்கும்போது மீன் சீக்கிரம் உடையாது. அத்துடன் அதன் சுவையும் நறுமணமும் கூடும்.

o குழந்தைகளுக்கு கொடுக்கும்போது சோற்றில் முட்கள் எதுவும் கலந்துள்ளதா என்று பார்த்துக் கொடுக்கவும். (பெரிய மீன் துண்டுகளாக‌ இருந்தாலும் சிலவேளை அதிலிருந்து உடைந்த முட்கள் கலக்க வாய்ப்புள்ளது)

o பிரியாணியைப் பரிமாறும்போது உள்ளே வைத்த மீன்கள் உடையாமல் மெதுவாக எடுக்கவும்.

44 comments:

  1. ஐயோ அஸ்மா செம அசத்தலா இருக்குப்பா....நிச்சயம் ஒரு நாள் செய்து பார்க்கிறேன்..விருப்பபட்டியலில் சேர்த்தாச்சு..மீனை 2 முறை பொரிப்பதால் நிச்சயம் மீன் உடையாதுதான்..எனக்கும் பார்சல் அனுப்பியிருக்கலாமே..விலை மீனுக்கு ப்ரெஞ்சுல என்ன பெயர்ன்னு சொல்லுங்க.சீக்கிரம் செய்து பார்க்கதான்..

    கேரட் இல்லாமலும் செய்யலாம் தானே..பாலுக்கு பதில் தே.பால் செர்த்து செய்கிறேன்...

    ReplyDelete
  2. ப்ரேசண்டேஷன் சூப்பர்ர்!!

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    சகோ.அஸ்மா,
    மீன் பிரியாணி செய்முறை அருமை...!

    'என்னதான் கவனமாக கிளறினாலும், மீன்கள் உடைந்து சோற்றில் முட்கள் கலந்து தொண்டையில் செருகிக்கொள்ளுமோ' என்ற பயமே மீன் பிரியாணி செய்ய & சாப்பிட மக்கள் தயங்குவதற்கு காரணம்...!

    ஆனால், அதற்கு தக்க பதிலாய்...

    //o முட்டையும் கடலை மாவும் சேர்த்து 2 வது முறை மீனைப் பொரிக்கும்போது மீன் சீக்கிரம் உடையாது. அத்துடன் அதன் சுவையும் நறுமணமும் கூடும்.//---இது முற்றிலும் புதிய தகவல். நன்றி..!

    ReplyDelete
  4. பிரியாணியைப் பற்றிய தொகுப்பு அருமை வாழ்த்துக்கள் சகோ.

    ஆமா... பிரியாணியை கண்டு பிடித்தது யாருனு தெரியுமா ?

    பிரியாணி என்று எப்படி பெயர் வந்தது?

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் தோழி அஸ்மா,

    மீன் பிரியாணி செய்முறை அருமை.

    தங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.உங்களின் கருத்தினை பகிருங்கள்.


    //சகோ முஹம்மத் ஆஷிக்
    முட்டையும் கடலை மாவும் சேர்த்து 2 வது முறை மீனைப் பொரிக்கும்போது மீன் சீக்கிரம் உடையாது. அத்துடன் அதன் சுவையும் நறுமணமும் கூடும்.//---இது முற்றிலும் புதிய தகவல்.//

    அஸ்ஸலாமு அலைக்கும்

    அனுபவமா சகோ.சமையல்ல அசத்துறீங்க...

    ReplyDelete
  6. @ S.Menaga...

    //ஐயோ அஸ்மா செம அசத்தலா இருக்குப்பா....நிச்சயம் ஒரு நாள் செய்து பார்க்கிறேன்..// நிச்சயம் செய்து பாருங்க மேனகா.

    //விருப்பபட்டியலில் சேர்த்தாச்சு..// அப்படியா..? :-) இது உங்கள் விருப்பமானது சந்தோஷம் :)

    //எனக்கும் பார்சல் அனுப்பியிருக்கலாமே..// முகப்பில் இப்போதான் ரெடியா பார்சல் பண்ணி வைத்தேன் மேனகா.. சூடா இருக்கு, எடுத்துக்கோங்க :))

    //விலை மீனுக்கு ப்ரெஞ்சுல என்ன பெயர்ன்னு சொல்லுங்க.சீக்கிரம் செய்து பார்க்கதான்..//

    இங்கு விலை மீனை தமிழ் கடைகளில் தமிழ்ல மட்டும்தான் பெயர் போட்டு வைத்திருக்காங்கபா. நீங்கள் Gare du Nord போனீங்கன்னா அங்கு 'விலை மீன்' என்றே கேட்டு வாங்கலாம். அதை இலங்கைக் காரர்கள் 'நரி கொடுவா' என்றும் சொல்கிறார்கள். ஆனா நரி கொடுவாவும் விலை மீனும் ஒன்றல்ல. அதனால் நீங்க குழப்பிக்காம‌ 'விலை மீன்' என்று கேளுங்க, கொடுப்பார்கள். ஃப்ரோஸனில் உள்ளதை விட அங்கு ஃப்ரெஷ் மீன் கடை ஒன்று இருக்கும், அங்கு போனால் ரொம்ப ஃப்ரெஷ்ஷாவே வாங்கலாம். கிலோ 9 ஈரோ போட்டிருப்பார்கள். நீங்கள் Gare du Nord போவது சிரமம் என்றால், பக்கத்தில் ஆஃப்ரிக்கன் கடை இருந்தால் ஃப்ரோஸனில் இருக்கும், வாங்கலாம். ஆனா ஃப்ரெஞ்சு பெயர் உங்களுக்காக பிறகு கேட்டு சொல்கிறேன் மேனகா.

    //கேரட் இல்லாமலும் செய்யலாம் தானே..பாலுக்கு பதில் தே.பால் செர்த்து செய்கிறேன்...//

    கேரட் சேர்ப்பது குருமாவிற்கு ருசி கொடுக்கும். நான் சேர்க்காமல் செய்ததில்லை. ஒன்று மட்டும் சேர்ப்பதால் இனிக்கும் என்று பயப்பட தேவையில்லை. பாலுக்கு பதில் விரும்பினால் தே.பால் சேர்த்துக்கலாம். வருகைக்கு நன்றி மேனகா!

    ReplyDelete
  7. ஆஹா...அஸ்மா...கலக்கலோ கலக்கல்..

    பொறுமையாக படம் எடுத்து தெளிவான விளக்கம் கொடுத்து எங்களையும் சீக்கிரம் செய்துவிட தூண்டுகின்றது...பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    மீனுல பிரியாணியா? புதுச இருக்கு

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  9. as salamu alaykum,

    aahaa..... asma....seymuraia paartha, fajrla aarambicha (naan) dhu8hrukkaavathu mudippenaannu irukku. ennaikkum enga ammaa veetukku / avangga ennidam varraangalo, annikuthan ithu. naan bayangara slowvaaga velai paarkum aalu. ippadi biriyani seyrathukkul enga veetula ellaarum kadaikku poye saappittukuvaanga...he he :))

    aanaa aasaiyathen irukku, mudiyarappa follow up panren....jooooot!!!

    ReplyDelete
  10. சூப்பர் ரிச் பிரியாணி.செய்து பார்க்க வேண்டும்.உங்க பக்குவம் எனக்கு வருதான்னு பார்க்கவேண்டும்.அருமையாக பரிமாறியிருக்கீங்க.அஸ்மா.

    ReplyDelete
  11. @ முஹம்மத் ஆஷிக்...

    //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    சகோ.அஸ்மா,
    மீன் பிரியாணி செய்முறை அருமை...!//

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...நன்றி சகோ.

    //---இது முற்றிலும் புதிய தகவல். நன்றி..!//

    மீன் பிரியாணிக்கு இது மிக‌ முக்கியமான‌ டிப்ஸ். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  12. பதிலுக்கு மிக்க நன்றி அஸ்மா!!..நான் தமிழ் கடைக்கு போவது மிக அரிது.போனால் வாங்குகிறேன்..BAR மீனில் செய்யலாமா??

    ReplyDelete
  13. @ அந்நியன் 2...

    //பிரியாணியைப் பற்றிய தொகுப்பு அருமை வாழ்த்துக்கள் சகோ.// நன்றி சகோ.

    //ஆமா... பிரியாணியை கண்டு பிடித்தது யாருனு தெரியுமா ? பிரியாணி என்று எப்படி பெயர் வந்தது?//

    ஜெய்லானி பாய்க்கு வர்ற சந்தேகமெல்லாம் உங்களுக்கும் வர ஆரம்பிடுச்சா? :))) இதற்கு பதில் தெரிஞ்சா கண்டிப்பா சொல்கிறேன். ஒருவேளை மொகலாயர்களின் கண்டுபிடிப்பாக இருக்கலாம். ம்.. எப்படியோ... நல்லா இருந்தா சரிதான் :-)

    ReplyDelete
  14. @ ஆயிஷா அபுல்...

    வ‌ அலைக்குமுஸ்ஸலாம் தோழி.

    //மீன் பிரியாணி செய்முறை அருமை// நன்றி ஆயிஷா.

    //தங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.உங்களின் கருத்தினை பகிருங்கள்//

    தங்களின் அழைப்பை ஏற்றுக்கொண்டேன், நன்றி :) நான் கேட்டுக் கொண்டதுபோல் கொஞ்சம் டைம் கொடுங்க ஆயிஷா. இன்ஷா அல்லாஹ் எழுதுகிறேன்.

    ReplyDelete
  15. @ S.Menaga...

    //ப்ரேசண்டேஷன் சூப்பர்ர்!!//

    நன்றி மேனகா :) உங்களுக்காக ஃபோன் பண்ணி விலை மீன் பெயர் கேட்டேன். இன்னும் சரியான தகவல் கிடைக்கவில்லை. தெரிந்ததும் கண்டிப்பா சொல்கிறேன்.

    ReplyDelete
  16. @ GEETHA ACHAL...

    //ஆஹா...அஸ்மா...கலக்கலோ கலக்கல்..// நன்றி கீதாச்சல் :)

    //பொறுமையாக படம் எடுத்து தெளிவான விளக்கம் கொடுத்து எங்களையும் சீக்கிரம் செய்துவிட தூண்டுகின்றது// தூண்டிடுச்சுல்ல... செய்து சாப்பிட்டுடுங்க. எங்களுக்கு வயித்த வலிக்காம இருக்கும்ல.. :))) வருகைக்கு நன்றிபா!

    ReplyDelete
  17. @ ஹைதர் அலி...

    வ‌ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

    //மீனுல பிரியாணியா? புதுச இருக்கு//

    உங்க ஊர் பக்கம் இல்லைன்னு நினைக்கிறேன். பேச்சுலர்ஸ் செய்வது சிரமம். ஊருக்கு போனா இன்ஷா அல்லாஹ் மேடத்திடம் செய்து கேளுங்க :) வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  18. @ அன்னு...

    வ அலைக்குமுஸ்ஸலாம் அனிஷா. என்ன தங்கிலீஷ்? :) மீண்டும் அதே பிரச்சனையா?

    //aahaa..... asma....seymuraia paartha, fajrla aarambicha (naan) dhu8hrukkaavathu mudippenaannu irukku//

    ச்சே.. ச்சே.. அவ்வளவு சீக்கிரம் செய்ய ஆரம்பிக்க வேணாம். உங்க வேகத்துக்கு முந்திய நாளே செய்ய ஆரம்பிச்சுடுங்க அனிஷா :))

    //ennaikkum enga ammaa veetukku / avangga ennidam varraangalo, annikuthan ithu//

    பிள்ளைங்க கொஞ்சம் வளர்ந்துட்டா உங்களுக்கு பொறுமையா சமைக்க கொஞ்சம் நேரம் கிடைக்கும் அனிஷா. சூழ்நிலை பார்த்துட்டு செய்யுங்க, கஷ்டப்படாதீங்க. வருகைக்கு நன்றி அனிஷா.

    ReplyDelete
  19. @ asiya omar...

    //சூப்பர் ரிச் பிரியாணி.செய்து பார்க்க வேண்டும்.உங்க பக்குவம் எனக்கு வருதான்னு பார்க்கவேண்டும்//

    உங்களுக்கு வராதா என்ன..? :-) நிச்சயம் பக்குவமா வரும், செய்து பாருங்க ஆசியாக்கா.

    //அருமையாக பரிமாறியிருக்கீங்க.அஸ்மா// நன்றி ஆசியாக்கா :)

    ReplyDelete
  20. @ S.Menaga...

    //நான் தமிழ் கடைக்கு போவது மிக அரிது.போனால் வாங்குகிறேன்..//

    உங்க இட‌த்தில் Tibsy, Poissonerie Exotique போன்ற அரபு கடைகளோ, மற்ற ஆஃப்ரிக்கன் கடைகளோ இருந்தால் கூட நீங்க பார்க்கலாம் மேனகா.

    //BAR மீனில் செய்யலாமா??//

    Bar மீன் வேண்டாம் மேனகா. சதைப்பற்றா இருந்தாலும் சிறிய முட்கள் சதையோடு கலந்திருக்கும்.

    அல்லது நெய் மீன்/அருக்குலா மீன்/வஞ்சிர மீன் இப்படி பல பெயர்களில் சொல்லப்படும் மீன், நீங்க எப்படி சொல்வீங்கன்னு தெரியல. அதற்கு ஃப்ரெஞ்ச் பெயர் "Thazard" னு போட்டிருக்கும். அது வாங்குங்க, அருமையா இருக்கும். ஆனா துண்டுகளை 3/4 இன்ச் அளவாவது போடணும், மெலிதா போட்டா பிரியாணி எடுக்கும்போது உடைந்துவிடும். அது அவ்வளவு சாஃப்ட் மீன். அதுவும் கிடைக்காவிட்டால் கொடுவா மீன் "Capitaine" என்று போட்டிருக்கும். அதுவும் மீன் பிரியாணிக்கு சூப்பர்! அது கிடைக்குதான்னு பாருங்க. எது கிடைச்சுதுன்னு அப்புறமா வந்து சொல்லுங்க :) சரியா?

    ReplyDelete
  21. surumbu meenukku per keetingala? chinese kadaila chinesela enna pernnu kettu sollunga. he he he... kovaila enna pernnu theriyalai!! naan insha allah india porathukku munnaadi intha kurippai ammaavukku anuppittu appurama ticket podaren. he he he...

    //ச்சே.. ச்சே.. அவ்வளவு சீக்கிரம் செய்ய ஆரம்பிக்க வேணாம். உங்க வேகத்துக்கு முந்திய நாளே செய்ய ஆரம்பிச்சுடுங்க அனிஷா :))
    //
    (naane ennai paarthu-- ithu unakku thevaiya anisha, ithu unakku thevaiya!!)

    ;-))))))))))))))

    ReplyDelete
  22. இதுவரை கண்டதில் மிகவும் ருசியான பிரியாணி இதுவாக தான் இருக்கக் கூடும் ...ரொம்ப அழகா ப்ரெச்ன்ட் பண்ணியிருக்கீங்க சுவையான குறிப்பும் தந்திருக்கீங்க.

    Thalika

    ReplyDelete
  23. ரொம்ப ரிச்சா இருக்கும்போல இந்தப் பிரியாணி. நான் மற்ற பிரியாணிகளைப் போலவேதான் மீன் பிரியாணியும் செய்வேன். அதனால் மட்டன், சிக்கனைவிட மீன் பிரியாணி எனக்கு ஈஸியாக இருப்பதாகப் படும்.

    நானும் அனிஷா கட்சி. (ரொம்ப ஸ்லோ). அதனால் இது மெதுவாத்தான் செஞ்சு பாக்கணும்.

    ReplyDelete
  24. @ அன்னு...

    //surumbu meenukku per keetingala? chinese kadaila chinesela enna pernnu kettu sollunga//

    உங்களுக்காக சைனீஸ் கடைக்கு போயாவது பெயர் கேட்டு சொல்கிறேன் அனிஷா :) ஆனா அங்கே சுறும்பு மீனே இல்லாட்டி..? ம்.. சரி எப்படியாவது உங்களுக்கு கேட்டு சொல்ல முயற்சிக்கிறேன், இன்ஷா அல்லாஹ். சரியா?

    //kovaila enna pernnu theriyalai!! naan insha allah india porathukku munnaadi intha kurippai ammaavukku anuppittu appurama ticket podaren. he he he...//

    நல்ல ஐடியாவா இருக்கே.. உம்மா செய்துக் கொடுத்து சாப்பிடுவது தனி சுகம்தான் அனிஷா ;)

    //(naane ennai paarthu-- ithu unakku thevaiya anisha, ithu unakku thevaiya!!) ;-))))))))))))))//

    :)))))))) cool anisha... cool!

    ReplyDelete
  25. @ Thalika...

    //இதுவரை கண்டதில் மிகவும் ருசியான பிரியாணி இதுவாக தான் இருக்கக் கூடும் ...ரொம்ப அழகா ப்ரெச்ன்ட் பண்ணியிருக்கீங்க சுவையான குறிப்பும் தந்திருக்கீங்க//

    மாஷா அல்லாஹ், சந்தோஷம் ருபீனா :) ஓய்வு கிடைத்தால் செய்து பாருங்க. நன்றிமா!

    ReplyDelete
  26. @ ஹுஸைனம்மா...

    //மட்டன், சிக்கனைவிட மீன் பிரியாணி எனக்கு ஈஸியாக இருப்பதாகப் படும்//

    மீன் பிரியாணி ஈசியா செய்வீங்களா..?! அந்த மெதட் எங்களுக்கெல்லாம் சொல்லித்தர மாட்டீங்களா ஹுஸைனம்மா..? அதான் மற்ற பிரியாணி போலன்னு சொல்லிட்டேனேன்னு எஸ்கேப் ஆகக்கூடாது ஆமா.. :‍-)

    //நானும் அனிஷா கட்சி. (ரொம்ப ஸ்லோ). அதனால் இது மெதுவாத்தான் செஞ்சு பாக்கணும்//

    மெதுவா செஞ்சுப் பார்த்து சொல்லுங்க, இன்ஷா அல்லாஹ். நன்றி ஹுஸைனம்மா.

    ReplyDelete
  27. மீன் பிரியானி செய்துபார்க்க ரொம்ப நாள் ஆசை.இன்ஷா அல்லாஹ் ....உங்கள் ரெசிப்பி அசத்தல்.மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  28. @ zumaras...

    //மீன் பிரியானி செய்துபார்க்க ரொம்ப நாள் ஆசை.இன்ஷா அல்லாஹ் ....உங்கள் ரெசிப்பி அசத்தல்.மாஷா அல்லாஹ்//

    செய்துப் பார்த்து இன்ஷா அல்லாஹ் சொல்லுங்க தோழி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

    ReplyDelete
  29. ஸலாம் சகோ..
    ரொம்ப நாள் ஆச்சு,உங்க வலைபக்கம் வந்து.மீன் பிரியாணி..ம்ம்..நீட்டா சூப்பரா போட்டோஸ் எடுத்து போடுரதுல உங்கள மிஞ்ச முடியாது.அருமை..

    வாழ்த்துக்கள் பல..

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  30. அஸ்மா பதிலுக்கு மிக்க நன்றி!! நீங்கள் சொல்லிய பெயர் எனக்கு மிக உதவியா இருக்கும்,தேடி பார்க்கிறேன்...நிச்சயம் மீனை தேடிப்பார்த்தாவது வாங்கி,செய்து சொல்லுகிறேன்...நான் இருக்கும் இடத்தில் ஆப்ரிக்கன் கடைகள் இல்லைப்பா.தமிழ் கடைக்கு போனால்தான் வாங்கனும்...இதுக்காகவாது வீட்டுக்காரரை தொல்லை பண்ணனும் வாங்கிட்டு வரச்சொல்லி...

    ReplyDelete
  31. @ RAZIN ABDUL RAHMAN...

    //ஸலாம் சகோ..//ஸலாம்.

    //மீன் பிரியாணி..ம்ம்..நீட்டா சூப்பரா போட்டோஸ் எடுத்து போடுரதுல உங்கள மிஞ்ச முடியாது.அருமை..//

    அப்படீங்கிறீங்க..? :‍) மாஷா அல்லாஹ்! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  32. @ S.Menaga...

    //நீங்கள் சொல்லிய பெயர் எனக்கு மிக உதவியா இருக்கும்,தேடி பார்க்கிறேன்...நிச்சயம் மீனை தேடிப்பார்த்தாவது வாங்கி,செய்து சொல்லுகிறேன்...// சந்தோஷம் :)

    //நான் இருக்கும் இடத்தில் ஆப்ரிக்கன் கடைகள் இல்லைப்பா.தமிழ் கடைக்கு போனால்தான் வாங்கனும்...இதுக்காகவாது வீட்டுக்காரரை தொல்லை பண்ணனும் வாங்கிட்டு வரச்சொல்லி...//

    பார்த்து மேனகா... நீங்க தொல்லைப் பண்ணப்போய் அது மீன் பிரியாணி பக்கம் கோபமா திரும்பிடப் போகுது :))))) உங்க ஆர்வத்துக்கு நன்றிபா!

    ReplyDelete
  33. வித்தியாசமாக செய்து இருக்கீங்க அஸ்மா.ரொம்பவே மெனகெட்டாலும் சூப்பர் சுவையாக இருக்கும்.கண்டிப்பா இந்த முறியில் அவசியம் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  34. @ ஸாதிகா...

    //வித்தியாசமாக செய்து இருக்கீங்க அஸ்மா.ரொம்பவே மெனகெட்டாலும் சூப்பர் சுவையாக இருக்கும்.கண்டிப்பா இந்த முறியில் அவசியம் செய்து பார்க்கிறேன்//

    சந்தோஷம், கண்டிப்பா ஒருநாள் செய்து பார்த்து சொல்லுங்க :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸாதிகா அக்கா!

    ReplyDelete
  35. அன்புச்சகோதரி அஸ்மா,

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பராகாதுஹு

    King Fish - வஞ்சிரம் மீன், (முக்கியமா சூறை (TUNA) வஞ்சிரம் போன்றே இருக்கும் ஆனால் நீளம் குறைவு, இம்மீனை வெட்டினால் அடர் சாம்பல் நிறத்தில் கறி இருக்கும் எனவே இம்மீன் வேண்டாம், சுவையும் ம்ஹும் )
    Grouper (Hamour) 3 வகைகள் உண்டு(இது ரொம்ப சுவையா இருக்கும்), எது பெரிதாக கிடைக்கிறதோ அதை தேர்ந்தெடுக்கவும். இன்னும் Salmon Fish இதுக்கு சரியாக செட் ஆக கூடும் இதை சதை ஆரஞ்சு வண்ணதில் இருக்கும் எளிதில் கண்டு கொள்ளலாம், விலை சற்றே கூடுதல், சுவைத்தவுடன் கொடுத்த பணத்துக்கு திருப்தி கண்டிப்பாக உண்டு.

    அன்புடன்
    உம்மு நஸீஹா

    ReplyDelete
  36. @ உம்மு நஸீஹா...

    வ‌ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரக்காதுஹு.

    //King Fish - வஞ்சிரம் மீன், (முக்கியமா சூறை (TUNA) வஞ்சிரம் போன்றே இருக்கும் ஆனால் நீளம் குறைவு, இம்மீனை வெட்டினால் அடர் சாம்பல் நிறத்தில் கறி இருக்கும் எனவே இம்மீன் வேண்டாம், சுவையும் ம்ஹும் )//

    வஞ்சிரம் மீனும் தூனா மீனும் பார்ப்பதற்கு ஓரளவுக்கு ஒரே மாதிரி இருந்தாலும் கவனித்துப் பார்த்தால் நிறைய வித்தியாசங்கள் உண்டு. சுவையிலும் நிறையவே வித்தியாசம். தூனா மீன் (கவுச்சி)ஸ்மெல்லும் அதிகம். வஞ்சிர மீனை 'நெய் மீன்' என்றுகூட சொல்வார்கள், அவ்வளவு டேஸ்ட்டாக இருக்கும். எங்க பக்கம் அதை 'அருக்குலா மீன்' என்பார்கள். நான் மேலே சொல்லியிருந்தது தூனா மீன் அல்ல, இந்த வஞ்சிர மீனைதான்.

    //Salmon Fish இதுக்கு சரியாக செட் ஆக கூடும் இதை சதை ஆரஞ்சு வண்ணதில் இருக்கும் எளிதில் கண்டு கொள்ளலாம், விலை சற்றே கூடுதல், சுவைத்தவுடன் கொடுத்த பணத்துக்கு திருப்தி கண்டிப்பாக உண்டு//

    சால்மன் மீன் நீங்கள் சொல்வதுபோல் மீன் பிரியாணி செய்ய ஏற்றதுதான். ஆனால் சில இடங்களில் வளர்ப்பு மீன் விற்கப்படுகிறது. கடல் சால்மன் மீன் அளவுக்கு அது அவ்வளவா சுவை கொடுக்காது. அதனால் பார்த்து வாங்கவேண்டும். வளர்ப்பு சால்மன் விலை கம்மி. அப்படியானால் விலை சற்று கூடுதல் என்று நீங்கள் சொன்னது கடல் சால்மன்தான். நினைவூட்டியதற்கும் தங்கள் முதல் வருகைக்கும் நன்றி சகோதரி :) சால்மன் மீனையும் மேலே சேர்த்துவிடுகிறேன்.

    ReplyDelete
  37. அன்பு அஸ்மா,நேற்று உங்க மீன் பிரியாணி ரெசிபி செய்தேன்.சுவை நான் எதிபார்த்ததை விட ரொம்ப நல்லாயிருந்தது.என் சந்தேகத்தை தீர்த்தமைக்கும்,சுவையான குறிப்புக்கும் மிக்க நன்றி.அளவுகளை மட்டும் 2பேர் சாப்பிடுமளவிற்க்கு ஏற்ப செய்தேன்.மீனும் உடையாமல் இருந்தது.மீண்டும் உங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. @ S.Menaga

      //அன்பு அஸ்மா,நேற்று உங்க மீன் பிரியாணி ரெசிபி செய்தேன்.சுவை நான் எதிபார்த்ததை விட ரொம்ப நல்லாயிருந்தது.என் சந்தேகத்தை தீர்த்தமைக்கும்,சுவையான குறிப்புக்கும் மிக்க நன்றி//

      சுவையான மீன் பிரியாணி செய்துப் பார்த்து, உடனே இங்கு வந்து கருத்து தெரிவித்தமைக்கு உங்களுக்கும் நன்றி மேனகா :)

      Delete
  38. Replies
    1. @ Anonymous

      //Superb//

      நன்றி. அடுத்தமுறை பெயரைக் குறிப்பிடுங்கள்.

      Delete
  39. உங்களின் தளம் (இந்தப் பதிவு) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_21.html) சென்று பார்க்கவும்...

    ReplyDelete
    Replies
    1. //உங்களின் தளம் (இந்தப் பதிவு) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...//

      சென்று பார்த்தேன். தகவலுக்கு நன்றி தனபாலன் சார் :)

      Delete
  40. அட்டகாசமான அடுப்படிகள்
    http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_21.html
    உங்கள் பதிவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.

    ReplyDelete
    Replies
    1. //உங்கள் பதிவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்//

      பார்த்தேன் :) மிக்க நன்றி! அதுவும் அசைவத்தில் முதலாவதாக மீன் பிரியாணி கம்பீரமாக நிற்கிறது :) ஜஸாகல்லாஹ் ஜலீலாக்கா!

      Delete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை