அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Sunday, 14 October 2012

ஹஜ் - உம்ராவுக்கான சட்டங்கள் (பாகம் 1)


'ஹஜ் யாருக்கு கடமை?', 'ஹஜ்ஜின் சிறப்புகள், பலன்கள் எவை?' போன்ற இதர விஷயங்களைக் கூறமுன், இந்த வருட ஹாஜிகளுக்கு ஹஜ்ஜின் நேரம் நெருங்கிவிட்ட காரணத்தினாலும், ஆதாரங்களோடு கொடுக்காமல் அதன் சட்டங்களை மட்டும் கொடுத்தால் (உடனுக்குடன் எடுத்துப் பார்த்துக்கொள்ள) ஒரு குறிப்பேடாக பயன்படும் என்பதாலும், பிரிண்ட் பண்ணும் வசதிக்காகவும் இதில் 'உம்ரா' மற்றும் 'ஹஜ்'ஜுடைய சட்டங்கள் மட்டும் வரிசைப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. (அதற்கான ஹதீஸ் ஆதாரங்கள் இன்ஷா அல்லாஹ் பிற்ச்சேர்க்கையாகவோ, வேறொரு பதிவாகவோ பின்னர் கொடுக்கப்படும்.) அத்துட‌ன், சுலபமாக புரிந்துக் கொள்வதற்காக தேவையான இடங்களில் அட்டவணைகளும், சில படங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ள‌ன. இதன் மூலம் தவறுகள் இல்லாத சரியான, நபிவழியில் அமைந்துள்ள 'ஹஜ் - உம்ரா'வின் அமல்களை அனைவரும் செய்வதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக!

இந்த வருடம் ஹஜ்ஜுக்கு செல்லாதவர்களாக இருந்தாலும் தங்களின் உற்றார், உறவினர், நண்பர்கள், அண்டை வீட்டார்களுக்கு அதனை அச்செடுத்து அன்பளிப்பாக கொடுத்து, நன்மையில் பங்கெடுத்துக் கொள்ள‌லாம். அல்லாஹ்தஆலா நம் அனைவரின் நற்காரியங்களையும் ஏற்றுக் கொள்வானாக!

'உம்ரா' செய்தல்

❶ குளித்துவிட்டு, 'இஹ்ராம்' (நிலைக்குரிய) ஆடையை அணிந்துக் கொண்டு

❷ கஃபாவில் ஏழு சுற்றுக்கள் சுற்றி தவாஃப் செய்து,

❸ 'மகாமு இப்ராஹீமி'ல் இரண்டு ரக்அத்கள் தொழுது,

ஸஃபா மர்வாவுக்கிடையே ஏழு தடவை வேகமாக நடப்பது/ஓடுவது

ஆகியவையே 'உம்ரா'வாகும். 'இஹ்ராம்' நிலைக்கு வந்ததிலிருந்து தவாஃபை துவங்கும் வரை தல்பியா கூறிக் கொண்டே இருப்பதும், ஸஃபா மர்வாவில் 'ஸயீ' என்ற தொங்கோட்டத்தை முடித்த பிறகு தலையை மழித்து அல்லது சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்வதும் உம்ராவின் வணக்க வழிபாடுகளைச் சார்ந்ததாகும். இதன் பிறகு இஹ்ராமிலிருந்து விடுபடவேண்டும். மேற்சொன்ன இந்த வணக்கங்களில் இஹ்ராம், கஅபாவை தவாஃப் செய்தல், ஸஃபா, மர்வாவுக்கிடையில் ஸஃயீ செய்தல் ஆகியவை இல்லையெனில் 'உம்ரா' இல்லை; செல்லாது.

உம்ராவின் செய்முறை விளக்கத்தை ஒவ்வொன்றாக‌ பார்ப்போம்.

ஹஜ்ஜுக்காக குறிப்பிட்ட நாட்களில் இஹ்ராம் கட்டி, குறிப்பிட்ட நாட்களில் அதை நிறைவேற்றுவதைப்போல், உம்ராவுக்கென்று குறிப்பிட்ட நாட்கள் கிடையாது. எல்லா நாட்களிலும் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி அதை நிறைவேற்றலாம்.  
உம்ராவுக்காக தயாராகும்போது

Creating a Table
ஆண்களும் பெண்களும்
இஹ்ராமுக்காக முற்கூட்டியே
செய்யவேண்டியவை
துல்ஹஜ் முதல் பிறைக்கு முன்போ, மற்ற நாட்களிலோ புறப்படுபவர்கள்  புறப்படும் முன்பே நகம்,
தேவையற்ற முடிகளைக்
களைந்துக் கொள்ளவேண்டும்.
துல்ஹஜ் மாத பிறை பிறந்த பிறகு புறப்படுபவர்கள்   ஊரில் தங்கியிருந்தாலும் பிறைக்கு 
முந்திய நாள் (29 வது பிறை முடியும் முன்) நகம், தேவையற்ற முடிகளைக்
களைந்துக் கொள்ளவேண்டும்.


Creating a Table
இஹ்ராம் ஆடை 
அணியும் சமயம் ஆண்கள்
இஹ்ராம் ஆடை 
அணியும் சமயம் பெண்கள்
குளித்துவிட்டு, மேனியிலும் ஆடையிலும் நறுமணம் பூசிக் கொள்ளவேண்டும். குளித்துவிட்டு, மேனியில் மட்டும்
நறுமணம் பூசிக் கொள்ளலாம். (மாதவிலக்கு, பிரசவ இரத்தப் போக்கு உள்ள பெண்களாக இருந்தாலும் இஹ்ராமுக்கு முன் குளிக்கவேண்டும்.


Creating a Table
இஹ்ராமில் ஆண்கள்
அணிய வேண்டியவை
இஹ்ராமில் ஆண்கள்
அணியக் கூடாதவை
தையல் இல்லாத வேஷ்டி 

மேல் துண்டு [உடம்பில் போர்த்திக் கொள்ள‌]

(கணுக்கால் மூடாத) செருப்பு
தொப்பி
தலைப்பாகை மற்றும் தலையுடன் ஒட்டிய மறைப்புகள்
சட்டை
கால்ச்சட்டை (பேண்ட்)
'வர்ஸ்' எனும் சாயம் தோய்க்கப்பட்ட
மஞ்சள் ஆடை
குங்குமச் சாயமிடப்பட்ட ஆடை


Creating a Table
இஹ்ராமில் பெண்கள்
அணிய வேண்டியவை
இஹ்ராமில் பெண்கள் அணியக் கூடாதவை
(அந்நிய ஆண்களுக்கு மத்தியில் 
முகம், முன்கை மட்டும் தெரியும் வண்ணமுள்ள) 
வழக்கமான ஆடைகள்
- முகத்தை மறைப்பது கூடாது
- கைகளுக்கு உறை அணியக்கூடாது

'இஹ்ராம்' நிலைக்கு வந்துவிட்ட ஒருவர் அதற்கு முன்பே குறிப்பிட்ட வகையில் உடையணிந்திருக்க வேண்டும் என்றாலும், அந்த‌ ஆடைதான் 'இஹ்ராம்' என தவறாக விளங்கிக் கொள்ளக்கூடாது. ஹஜ் அல்லது உம்ரா செய்வதாக (நிய்யத் சொல்லி) ஒருவர் தீர்மானம் செய்தவுடன், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல விஷயங்கள் அவருக்கு தடுக்கப்பட்டவையாக ஆகிவிடுகின்றன. அந்த நிலைக்கு எப்போது ஒருவர் நுழைகிறாரோ அந்த நிலைதான் 'இஹ்ராம்' எனப்படும்.

இஹ்ராம் ஆடைகளை அணிந்து கொள்ளுமிடம் & இஹ்ராமுக்குள் நுழையுமிடம்:
 
Creating a Table
         நேரடி விமானத்தில் பயணிப்பவர்கள் விமானம் மாறி பயணிப்பவர்கள்
ஆண்கள்
விமானத்தில் ஏறும் முன்பு ஏர்போர்ட்டில் வைத்தோ, வீட்டிலோ (தங்கள் வசதிப்படி) அணிந்துக் கொள்ளலாம். எல்லையை அடைந்ததும் (விமானத்தில் அறிவிக்கப்பட்டவுடன்) "லப்பைக்க உம்ரத்தன்" என்று கூறி இஹ்ராம் நிலைக்கு வ‌ந்துவிட வேண்டும். இஹ்ராம் எல்லைக்கு முன்பாக இடையில் வேறு இடங்களில் இறங்கும்போது அங்கே அணிந்துக் கொள்ளலாம். மீண்டும் விமானத்தில் ஏறி பயணிக்கும்போது, எல்லையை அடைந்ததும் (விமானத்தில் அறிவிக்கப்பட்டவுடன்) "லப்பைக்க உம்ரத்தன்" என்று கூறி இஹ்ராமுக்குள் நுழைந்துவிட வேண்டும்.
பெண்கள்

[முன்பு சொன்னதுபோல்] வழக்கமான ஆடைகள்தான் என்பதால் ஆடை மாற்றத் தேவையில்லை. கையுறை அல்லது முகம் மூடிய நிலையில் (நிகாப்) இருந்தால் விமானத்தில் ஏறும் முன்போ, எல்லை வருவதற்கு முன்போ கவனமாக‌ அகற்றிவிட வேண்டும். எல்லை அடைந்ததை அறிவிக்கப்பட்டவுடன் "லப்பைக்க உம்ரத்தன்" என்று கூறி இஹ்ராமுக்குள் நுழைந்துவிட வேண்டும். வழக்கமான ஆடைகள்தான் என்பதால் மாற்றத் தேவையில்லை. கையுறை அல்லது முகம் மூடிய நிலையில் (நிகாப்) இருந்தால் விமானத்தில் ஏறும் முன்போ, எல்லை வருவதற்கு முன்போ கவனமாக‌ அகற்றிவிட வேண்டும். எல்லையை அடைந்தவுடன் "லப்பைக்க உம்ரத்தன்" என்று கூறி இஹ்ராம் நிலைக்கு வ‌ந்துவிட வேண்டும்.

அச்சத்தினால் அல்லது ஏதேனும் நோயினால் ஹஜ் அல்லது உம்ராவுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கருதுபவர்கள் முன் நிபந்தனையிட்டு,
اللَّهُمَّ مَحِلِّيْ حَيْثُ حَبَسْتَنِي

 "இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்" என்று சொல்லி இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம். 

இவ்வாறு செய்பவர்கள் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் அவர் பலிப்பிராணி கொடுக்காமல் தனது உம்ரா அல்லது ஹஜ்ஜிலிருந்து உடனே விடுபட்டுக் கொள்ளலாம். வரும் ஆண்டு அவர் ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர் செய்கின்ற ஹஜ் முதன்முதலில் செய்கின்ற ஹஜ்ஜாக இருந்தால், (பரிகாரமாக பலிப்பிராணி தேவையில்லை என்றாலும்) அந்த ஹஜ்ஜை வரும் ஆண்டு நிறைவேற்றியாக வேண்டும்.

Creating a Table
                     இஹ்ராமின்போது தடுக்கப்பட்டவை
ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் முடிப்பதோ, அது சம்பந்தமான விசாரணைகள், ஒப்பந்தங்கள், பேச்சு வார்த்தைகளோ கூடாது
இல்லறத்தில் ஈடுபடக்கூடாது
ஆசையுடன் தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல் போன்றவை கூடாது.
வீண் விவாதங்களிலோ, குற்றச் செயல்களிலோ ஈடுபடக்கூடாது
வேட்டையாடக் கூடாது
நகம் வெட்டவோ, முடிகளை நீக்கவோ கூடாது.
நறுமணம் பூசக்கூடாது. (இஹ்ராம் கட்டும்போது நறுமணம் பூசியிருந்தால் அந்த நறுமணம் தொடர்வதில் தவறில்லை) 

'மீகாத்' என்று சொல்லப்படும் (இஹ்ராமுக்குள் நுழைய‌வேண்டிய/நிய்யத் சொல்ல‌வேண்டிய) எல்லைகள்

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரக்கூடிய மக்களுக்கான‌ எல்லைகளை நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்துள்ளார்கள்:

ஜித்தாவுக்கு சமீபமான, (தற்போது 'ஸஃதிய்யா' என்றழைக்கப்படும்) 'யலம்லம்' என்ற இடம் இஹ்ராம் கட்டவேண்டிய ஒரு எல்லையாகும். 'யலம்லம்' என்பது மக்காவுக்கு வடக்கே உள்ள மலை. இது மக்காவிலிருந்து 54 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. [யமன்வாசிகளுக்கு, இலங்கை, இந்தியாவிலிருந்து செல்பவர்களுக்கு மற்றும் அந்த எல்லை வழியாக வரக்கூடியவர்களுக்கு]

மக்கா நகரின் கிழக்கு புறத்திலிருந்து வரக்கூடியவர்களுக்கு மக்காவிலிருந்து 94 கி.மீ. தொலைவிலுள்ள ('அஸ்ஸைலுல் கபீர்' என்றழைக்கப்படும்) 'கர்ன் அல்மனாஸில்' என்ற மலைப் பிரதேச‌மாகும். இது தாஃயிபுக்கு சமீபமாக உள்ளது. [நஜ்துவாசிகளுக்கு, ரியாத், ஜுபைல், தமாம் மற்றும் அந்த எல்லை வழியாக வரக்கூடியவர்களுக்கு]

மக்கா நகரின் வடக்கு புறத்திலிருந்து வரக்கூடியவர்களுக்கு மக்காவிலிருந்து 187 கி.மீ. தொலைவிலுள்ள, (தற்போது 'ராபிஹ்' என்றழைக்கப்படும்) 'ஜுஹ்ஃபா' என்ற இடமாகும். [ எகிப்து, ஜோர்டான், சிரியா(ஷாம்)வாசிகளுக்கு மற்றும் அந்த எல்லை வழியாக வரக்கூடியவர்களுக்கு]

மக்கா நகரின் தெற்கு புறத்திலிருந்து வரக்கூடியவர்களுக்கு மக்காவிலிருந்து 450 கி.மீ. தொலைவிலுள்ள 'துல்ஹுலைஃபா' என்ற இடமாகும். [மதீனாவாசிகளுக்கு மற்றும் அந்த எல்லை வழியாக வரக்கூடியவர்களுக்கு]

(தற்போது 'லரீஃபா' என்றழைக்கப்படும்) "தாது இர்க்" [இராக்வாசிகளுக்கு மற்றும் அந்த எல்லை வழியாக வரக்கூடியவர்களுக்கு]

(விமானப் பயணம், கப்பல் பயணம் போன்றவற்றில் எல்லைகள் வந்தவுடன் அறிவிக்கப்படும்)

* வரையறுக்கப்பட்ட (மேற்சொன்ன) எல்லைகளுக்கு உள்ளே இருப்பவர்கள்(1), மக்காவின் மற்ற ஏதாவது ஒரு பகுதியில் இருந்தால், தங்கியுள்ள இடத்திலேயே இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம். அதேபோல் 'தமத்துஃ' அடிப்படையில் இஹ்ராம் கட்டி உம்ராவை முடித்துவிட்டு, மக்காவிலேயே தங்கியிருந்து மீண்டும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுபவர்களும்(2) மக்கா எல்லைக்கு வெளியே செல்லாமல் தங்கியுள்ள இடத்திலேயே இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம். ஆனால் உபரியான உம்ராக்கள் செய்ய விரும்புபவர்கள்(3) மக்கா எல்லைக்கு வெளியே சென்றுதான் இஹ்ராம் கட்டிக்கொண்டு வரவேண்டும்.

* அதேசமயம் ஹரம் எல்லைக்குள் இருப்பவர்கள்(4) அனைவருமே ஹரமை விட்டு வெளியே சென்று இஹ்ராம் கட்டிக்கொண்டு ஹரமுக்குள் நுழையவேண்டும்.

(மேற்கண்ட 4 வகையினரில் முதல் 2 வகையினருக்குரிய‌ ஒரு சட்டத்தையும், அடுத்த 2  வகையினருக்குரிய‌ மற்றொரு சட்டத்தையும் நினைவில் வைத்துக் கொள்வதற்காக இங்கே வித்தியாசப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது.)

ஹரம் எல்லைகள் யாவை?

ஹரம் எல்லையை அடையாளம் காட்டுவதற்காக ஐந்து இடங்களில் 1 மீட்டர் உயரத்தில் தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஐந்து எல்லைகளுக்கும் உட்பட்ட இடங்கள் 'ஹரம்' என்று சொல்லப்படும் புனிதமான இடங்களாகும்.

❶ மக்காவுக்குத் தெற்கே 6 (ஆறு) கி.மீ. தொலைவில் உள்ள 'தன்யீம்' என்ற இடம் (மற்ற எல்லைகளைவிட இதுதான் தூரம் குறைந்த எல்லையாகும்.) 

❷ வடக்கே 12 (பனிரெண்டு) கி.மீ. தூரத்திலுள்ள 'அளாஹ்' என்ற இடம்

❸ கிழக்கே 16 (பதினாறு) கி.மீ. தொலைவிலுள்ள 'ஜியிர்ரானா' என்ற இடம்

❹ வடமேற்கே 14 (பதினான்கு) கி.மீ. தொலைவிலுள்ள 'வாதீ நக்லா' என்ற இடம்

❺ மேற்கே 15 (பதினைந்து) கி.மீ. தொலைவில் உள்ள 'ஹுதைபியா' எனும் இடம்

ஆகியவையே அந்த ஐந்து எல்லைகளாகும். இந்த ஐந்து எல்லைகளுக்கு உட்பட்ட இடங்களை அல்லாஹ் புனித பூமியாக்கி இருப்பதால் 'ஹரம்' என்று சொல்லப்படுகிறது. இஹ்ராமில் இருப்பவர்களாயினும், சாதாரண நிலையில் இருப்பவர்களாயினும் இந்த ஹரமுக்குள் மரங்களை வெட்டுவதோ, இரத்தத்தை ஓட்டுவதோ, வேட்டையாடுவதோ, வேட்டையாடித் தரும்படி ஏவுவதோ (ஹராம்) தடுக்கப்பட்டதாகும். 

இஹ்ராமுக்காகத் தனித் தொழுகை உண்டா?

இஹ்ராமுக்காகத் தனித்தொழுகை ஏதுமில்லை. கடமையான தொழுகை நேரத்திற்கு ஏற்ப அவரது இஹ்ராம் அமைந்துவிட்டால் அதை தொழுதுவிட்டு இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். அதேசமயம் மதீனாவிலிருந்து வருபவர்களுக்குரிய எல்லையான 'துல்ஹுலைபா'வின் வழியாக வருபவர்கள் மட்டும் இரண்டு ரக்அத்துகள் தொழுதுக் கொள்ளவேண்டும். (அது பரக்கத் நிறைந்த பள்ளத்தாக்கு என நபி(ஸல்) அவர்களுக்கு வானவர் மூலம் அறிவிக்கப்பட்ட‌தால் நபி(ஸல்) அங்கே தொழுதார்கள்.)

தல்பியா சொல்வது அவசியம்

எல்லை வந்தவுடன் (இஹ்ராம் நிலைக்குள் வரும்போது) கிப்லாவை நோக்கி நின்றுக் கொண்டு நிய்யத் சொல்லி, தல்பியா சொல்லவேண்டும். விமானத்தில் பயணிப்பவர்கள் கிப்லாவை முன்னோக்க முடியாது என்பதால் அவர்கள் பயணிக்கும் திசையிலேயே இருந்து சொல்லிக் கொள்ளலாம். நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த தல்பியா வாசகம்:

لَبَّيْكَ اَللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّبيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَشَرِيْكَ لَكَ

(லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க், லாஷரீக லக்)

கவனிக்க:

* தல்பியாவை இயன்றவரை தொடர்ந்து, உரத்துச் சொல்லவேண்டும்.
* தல்பியாவை பெண்களும் சப்தமிட்டுச் சொல்லலாம். காரணம் தல்பியாவைப் பற்றிச் சொல்கின்ற ஹதீஸில் ஆண், பெண் என்று பிரிக்காமல் பொதுவாகவே அமைந்திருக்கின்றது.
* மக்காவிற்கு வந்ததும் தல்பியாவை நிறுத்திக் கொள்ளவேண்டும்.

மக்காவிலும் கஃஅபாவிலும் நுழையும்போது
* மக்காவில் நுழைவதற்கு முன்பு குளிப்பதற்கு வசதியிருந்தால் குளித்துக் கொள்ளவேண்டும்.

* முற்பகலில் (லுஹருக்கு சற்று முந்திய நேரம்) மக்காவில் நுழைவது சுன்னத்தாகும்.  (வசதிப்பட்டால் அந்த நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.)

* மக்காவில் நுழையும்போது 'முஅல்லாத்' என்று அழைக்கப்படும் மேற்புறம் வழியாக உள்ளே நுழையவேண்டும்.

* கஃஅபாவில் நுழையும் சமயம் (சிரமமின்றி முடியுமானால்) 'பாபுஸ்ஸலாம்' என்று சொல்லக்கூடிய 'பாபு பனீ ஷைபா' ("Bani Shaibah Gate") வழியாக நுழையவேண்டும்.

* கஅபாவில் மற்ற பள்ளிகளைப் போன்றே வலது காலை எடுத்து வைத்து நுழையவேண்டும். அத்துடன் மற்ற பள்ளிகளில் ஓதும் துஆவான,
اَللَّهُمَّ إفْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمِتِكَ

(அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மத்திக) என்ற துஆவை ஓதிக் கொள்ள வேண்டும்.

* தவாஃபுல் குதூம் *


* புனிதப் பள்ளிக்குள் நுழைந்ததும் முதலில் ஹஜ்ருல் அஸ்வதைக் கையால் தொட்டு, அந்தக் கையை முத்தமிட்டுக் கொள்ளவேண்டும். கையால் தொட முடியவில்லை எனில் தொடுவதுபோல் அதை நோக்கி கையை நீட்டி சைகை செய்து,  'அல்லாஹ் அக்பர்' என்று கூறிக் கொள்ள‌வேண்டும்.

* ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட்டுத் துவங்கி, கஃஅபா நம‌து இடது புறமாக இருக்கும் வண்ணமாக சுற்றினை (இடமிருந்து வலமாக - Anti-Clockwise ல்) ஆரம்பித்து மீண்டும் 'ஹஜ்ருல் அஸ்வத்' வரை ஒரு சுற்று என்ற வீதம் 7 சுற்றுக்கள் சுற்றவேண்டும். (சுற்றின் ஆரம்பமும் முடிவும் ஒரே இடமாக இருப்பதை அடையாளப்படுத்த ஒரு பச்சை விளக்கு பொருத்தப்பட்டிருக்கும்.)

* தவாஃபின் ஒவ்வொரு சுற்றின்போதும் ஹஜ்ருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிட வேண்டும். (ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுவதில் ஏராளமான சிறப்புக்கள் உள்ளன.) கூட்டம் காரணமாக தொட இயலாவிட்டால் முன் சொன்னதுபோல் சைகை செய்துக் கொள்ளவேண்டும்.

* ஒவ்வொரு சுற்றின்போதும் ஹஜ்ருல் அஸ்வதிற்கு வந்ததும் தக்பீர் சொல்லவேண்டும்.

* தவாஃப் செய்யும்போது (ஆண்கள்) வலது புஜத்தைத் திறந்து இடது புஜத்தை மூடிக் கொள்ளவேண்டும். (ஆடையின் ஒரு விளிம்பை இடது கையின் தோள் புஜத்தில் வைத்து சிறிது தொங்கவிட்டு, இன்னொரு ஒரு விளிம்பை முதுகு வழியாக வலதுபக்கம் கொண்டுவந்து, அதை முன்பக்கம் எடுத்து, நெஞ்சின்மீது போர்த்தி இடது தோள் புஜத்திற்கு மேல் போட்டுக் கொள்ள‌வேண்டும்.)

*  தவாஃபின் ஏழு சுற்றுக்களில் முதல் 3 சுற்றுக்களை சற்று வேகமாகச் சுற்றவேண்டும். மீதி 4 சுற்றுக்களில் நடந்தே செல்லவேண்டும்.

* கஅபாவின் மூன்றாவது மூலையில் அமைந்திருக்கின்ற 'ருக்னுல் யமானி'க்கு வரும்போது அதைக் கையால் தொட்டு முத்தமிடவேண்டும். கையால் தொடமுடியவில்லை என்றால் சைகை செய்யவோ தக்பீரோ தேவையில்லை.

* ருக்னுல் யமானிக்கும் ஹஜ்ருல் அஸ்வதுக்கும் இடையே வரும்போது,

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

 (ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்) என்ற வசனத்தை ஓதிக் கொள்ளவேண்டும்.

* கஃஅபாவின் மற்ற இரு மூலைகளையும் முத்தமிடக் கூடாது. (ஏனெனில் நபி(ஸல்) அவர்களிடமிருந்து இது தொடர்பாக எந்தவொரு ஹதீசும் வரவில்லை)

* தவாஃப் செய்வதற்கென்று எந்தவொரு தனிப்பட்ட திக்ரும் கிடையாது.

* தவாஃபின்போது பேசுவது தவறில்லை.

* மாதவிலக்கான பெண்கள் தவாஃப் செய்வதற்கு அனுமதியில்லை.

* ஏழாவது சுற்றை முடித்தவுடன் தன்னுடைய வலது புறத்தை மூடிக்கொண்டு 'மகாமு இப்ராஹீமு'க்குச் சென்று,
وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى

(வத்தஹிதூ மின் மகாமி இப்ராஹீம முஸல்லா) என்று ஓதவேண்டும். (தவாஃபுக்கு முன்பே ஒளூ செய்துக் கொண்டால் தவாஃப் முடிந்து தொழ வசதியாக இருக்கும்.)

* மகாமு இப்ராஹீம் நம‌க்கும் கஃஅபாவுக்கும் இடையில் இருக்குமாறு நாம் நிற்குமிடத்தை அமைத்துக் கொண்டு, அந்த இடத்தில் இரண்டு ரக்அத்துக்கள் தொழவேண்டும். (அதாவது 'மகாமு இப்ராஹீம்' இருக்கக்கூடிய கிழக்கு திசையில் நின்றுக்கொண்டு கஃபாவை நோக்கி தொழவேண்டும்.)

* அந்த இரு ரக்அத்துக்களில் முதல் ரக்அத்தில் 'குல் யாஅய்யுஹல் காஃபிரூன்' சூராவும், 2 வது ரக்அத்தில் 'குல் ஹுவல்லாஹு அஹத்' சூராவும் ஓதவேண்டும்.

* தொழுது முடித்ததும் ஜம்ஜம் நீரை நோக்கிச் சென்று அதைப் பருகிக் கொள்ளவேண்டும்.

* ஜம்ஜம் நீரைத் தலையிலும் சிறிது ஊற்றிக் கொள்ளவேண்டும்.

* பிறகு மீண்டும் ஹஜ்ருல் அஸ்வதுக்கு வந்து அதை முத்தமிடவேண்டும். (இயலாவிட்டால் அதை நோக்கி கையை நீட்டி சைகை செய்துக் கொள்ளவேண்டும்)
ஸஃபா, மர்வாவில் ஸயீ செய்தல்
* பிறகு ஸஃபாவிற்கு வரவேண்டும். அங்கு வந்து,

    إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوْ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ 2:158  
                                                                                 

("இன்னஸ் ஸஃபா வல்மர்வத்த மின் ஷஆரில்லாஹ்..." (2:158) என்ற வசனம் முழுவதையும் ஓத வேண்டும்.

* ஓதிவிட்டு, أَبْدَأُ بِمَا بَدَأَ اللهُ بِهِ - (அப்தஉ பிமா பதல்லஹு பிஹி) என்றோ அல்லது (அவரவர் மொழியிலோ) - தமிழில், "அல்லாஹ் முதலில் ஸஃபாவைச் சொல்லியிருப்பதால் ஸஃபாவைக் கொண்டு துவங்குகின்றேன்" என்றோ கூறவேண்டும்.

* ஸஃபாவிலிருந்து துவங்கும் விதமாக அதன்மீது ஏறி கஅபாவைப் பார்க்கவேண்டும். கஅபாவை நோக்கி 'லாயிலாஹ இல்லல்லாஹ்'  என்று கூறவேண்டும். 'அல்லாஹு அக்பர்' என்று தக்பீர் கூறவேண்டும்.

* அதைத் தொடர்ந்து,

لاَاِلَهَ اِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيْكَ لَهُ، لَهُ اْلمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ. لاَاِلَهَ اِلاَّ اللهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ

 (லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து, யுஹ்யீ வயுமீத்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹ், அன்ஜஸ வஅதஹ், வ நஸர அப்தஹ், வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்)

என்ற திக்ரை மூன்று தடவை கூறவேண்டும்.

* இந்த 3 முறை (திக்ரு)களுக்கிடையே விரும்பிய‌ துஆவும் செய்துக் கொள்ளவேண்டும்.

* இதன் பின் ஸஃபா, மர்வாவுக்கு இடையே (மெதுவாக‌) ஓடுவதற்காக இறங்கவேண்டும்.
 * ஸஃபாவிலும் மர்வாவிலும் அடையாளமிடப்பட்ட 2 பச்சை நிற விளக்குகளுக்கிடையில் உள்ள‌  இடத்தை சற்று வேகமாகக் கடக்கவேண்டும்.

* மர்வாவிற்கு வந்து அதில் ஏறி, கிப்லாவை முன்னோக்கி ஸஃபாவில் செய்தது போன்ற திக்ருகள், துஆக்களை இங்கும் அப்படியே செய்ய வேண்டும்.

* பிறகு ஸஃபாவை நோக்கித் திரும்ப வரவேண்டும். இது இரண்டாவது சுற்றாகும்.

* பின்னர் மீண்டும் மர்வாவுக்குச் செல்லவேண்டும். இப்படியே கடைசிச் சுற்று மர்வாவில் முடிகின்ற விதமாக ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும்.

* மாதவிலக்கான பெண்கள் 'ஸயீ' செய்வதற்கு அனுமதியில்லை.

* ஏழாவது சுற்று முடிவடைந்ததும் தன்னுடைய தலைமுடியைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.

இத்துடன் 'உம்ரா' நிறைவடைகின்றது. ('ஹஜ்' அல்லாத மற்ற நாட்களில் 'உம்ரா' மட்டும் செய்யக் கூடியவர்களுக்கும் இதே சட்டங்கள்தான்.)

இதன் பிறகு துல்ஹஜ் பிறை 8 ல் ஹஜ்ஜுக்குரிய இஹ்ராம் கட்டவேண்டும். அதுவரை இஹ்ராமின்போது தடுக்கப்பட்ட அனைத்தும் இப்போது அனுமதிக்கப்படுகின்றது. இல்லறத்தில் ஈடுபடுவது உட்பட அனைத்தும் ஆண்/பெண் இருவருக்கும் அனுமதிக்கப்படுகின்றது. இந்த அனுமதி துல்ஹஜ் பிறை 8 ல் இஹ்ராம் கட்டுகின்றவரை நீடிக்கும்.
No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!