ஹஜ்ஜுக்காக 3 வகையாக இஹ்ராம் கட்டலாம். அவை,
❶ ஹஜ் தமத்துஃ
முந்திய பதிவில் கண்டவாறு உம்ராவை முடித்துவிட்டு, ஹஜ்ஜுக்குரிய இஹ்ராம் கட்டுகின்றவரை இஹ்ரமிலிருந்து விடுபட்டு, மீண்டும் ஹஜ்ஜுக்காக துல்ஹஜ் பிறை 8 ல் இஹ்ராமில் நுழைந்து ஹஜ்ஜை நிறைவேற்றும் முறைக்கு "ஹஜ் தமத்துஃ" என சொல்லப்படும். இந்த முறையில் ஹஜ் செய்பவர்கள், இஹ்ராம் இல்லாத அந்த இடைப்பட்ட நாட்களில் மக்காவிலேயே தங்கியிருக்கவேண்டும். (இந்த முறையே சிறந்தது.)
❷ ஹஜ் கிரான்
ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் எந்தவொரு இடைவெளியும் இல்லாமல் அப்படியே அதே இஹ்ராமிலேயே ஹஜ் முடிகின்ற வரை தொடர்ந்து நீடிப்பதற்கு "ஹஜ் கிரான்" என்று பெயர். கிரான் என்றால் சேர்த்தல் என்று பொருள். ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துச் செய்வதால் இந்தப் பெயர் வழங்கப்படுகின்றது.
'கிரான்' முறையில் ஹஜ் செய்பவர்கள் உம்ரா செய்யும்போது ஸஃபா, மர்வாவுக்கு இடையில் 'ஸயீ' செய்திருந்தால் ஹஜ்ஜின்போது ஸயீ செய்யத் தேவையில்லை. அல்லது உம்ராவின்போது ஸயீ செய்யாமல் ஹஜ்ஜின்போது மட்டும் செய்துக் கொள்ளலாம்.
'தமத்துஃ', 'கிரான்' ஆகிய முறைகளில் எந்த முறையில் ஹஜ் செய்தாலும் அவர்கள் குர்பானி கொடுக்கவேண்டும். அவ்வாறு கொடுக்க இயலாதவர்கள் மக்காவில் 3 நோன்புகளும், ஊருக்குத் திரும்பிய பின் 7 நோன்புகளும் நோற்கவேண்டும்.
❸ ஹஜ் இஃப்ராத்
ஹஜ்ஜை மட்டும் தனித்துச் செய்வதற்குப் பெயர் "இஃப்ராத்" ஆகும். இவ்வகை ஹஜ் செய்பவர்கள் உம்ரா செய்யமாட்டார்கள். அதனால் அவர் குர்பானி கொடுக்கவும் தேவையில்லை. 'இஃப்ராது'க்கும் 'கிரானு'க்கும் உள்ள வித்தியாசம், 'நிய்யத்' மற்றும் 'குர்பானி' ஆகியவற்றைத் தவிர வேறு வித்தியாசமில்லை.
இப்போது ஹஜ் கிரியைகளின் விபரங்களைப் பார்ப்போம்.
இஹ்ராமும் மினாவுக்குச் செல்லுதலும்:துல்ஹஜ் எட்டாம் நாள்
❶ துல்ஹஜ் பிறை எட்டாம் நாள், "லப்பைக் ஹஜ்ஜன்" என்று கூறி ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி தல்பியா கூறவேண்டும். உம்ராவுக்கு இஹ்ராம் கட்டும்போது செய்த குளித்தல், நறுமணம் பூசுதல், தையல் இல்லாத மேலாடை/கீழாடை அணிதல் போன்ற அனைத்துக் காரியங்களையும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டும்போதும் பேணிக் கொள்ளவேண்டும்.
❷ தங்கியிருக்கும் இடத்திலேயே இஹ்ராம் கட்டி, தல்பியா கூறவேண்டும்.
❸ பத்தாம் நாளன்று 'ஜம்ரத்துல் அகபா'வில் கல்லெறிகின்ற வரை தல்பியாவை நிறுத்தாமல் சொல்லவேண்டும்.
❹ பிறகு மினாவுக்குச் சென்று அங்கு மறுநாள் காலை (பிறை 9) வரை தங்கவேண்டும். மினாவில் லுஹர், அஸர், மக்ரிப், இஷா, (மறுநாள்) சுப்ஹ் ஆகிய தொழுகைகளை அந்தந்த நேரங்களில் தொழவேண்டும். மற்ற வேளை தொழுகைகளுடன் சேர்த்து தொழும் 'ஜம்உ' இங்கு கிடையாது. ஆனால் லுஹர், அஸர், இஷா ஆகிய நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்துகளாகச் சுருக்கி (கஸ்ராக) தொழ வேண்டும்.
அரஃபாவுக்குச் செல்லுதல்:துல்ஹஜ் ஒன்பதாம் நாள்
❶ சூரியன் உதயமானதும் மினாவிலிருந்து அரஃபாவுக்குச் செல்லவேண்டும்.
❷ அவ்வாறு செல்லும்போது 'தல்பியா'வும் சொல்லலாம். தக்பீரும் சொல்லலாம்.
Namirah |
❹ சூரியன் உச்சி சாய்ந்ததும் அரஃபாவுக்குச் சற்று முன்பாக அமைந்திருக்கக்கூடிய 'பத்னுல்வாதி' (அல்லது 'உர்னா') எனுமிடத்திற்கு வரவேண்டும். அந்த இடத்திற்கு ஏற்றவாறு அங்கு இமாம் சொற்பொழிவு நிகழ்த்தவேண்டும்.
(குறிப்பு: 'நமிரா', 'பத்னுல்வாதி' அல்லது 'உர்னா'வில் தங்க வாய்ப்பு இல்லையெனில் நேராக அரஃபாவுக்குச் சென்றுவிடலாம் என்று 'இப்னு தைமிய்யா' அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.)
❺ அரஃபாவில் லுஹரையும் அஸரையும் சேர்த்தும், நான்கு ரக்அத்துக்களை இரண்டு ரக்அத்துக்களாகச் சுருக்கியும் ('கஸ்ரு-ஜம்' ஆக) தொழவேண்டும். அஸருடைய வக்தில் ஜம்உ செய்யாமல், லுஹருடைய வக்திலேயே முற்படுத்தி இந்த தொழுகையை தொழவேண்டும். (இதற்கு 'ஜம்உ தக்தீம்' என சொல்லப்படும்.)
❻ இவ்விரு தொழுகைகளுக்கும் ஒரு பாங்கு, இரண்டு இகாமத் சொல்ல வேண்டும். (லுஹருக்கும் அஸருக்கும் இடையில் நபி (ஸல்) அவர்கள் வேறெதையும் தொழவில்லை. அங்கு வேறு எந்த தொழுகையும் தொழக்கூடாது.)
❼ இந்த தொழுகையை இமாம் தொழ வைக்கும்போது அதில் சேர்ந்து தொழவேண்டும். அதற்கு முன் நிகழ்த்தப்படும் குத்பாவை உரையை செவிமடுக்கவேண்டும்.
மிக மிக முக்கியமாக கவனிக்கவேண்டியது: அரஃபாவின் எல்லைகளில் மஞ்சள் போர்டுகள் வைத்திருப்பார்கள். அந்த எல்லைகளுக்குள் தங்கவேண்டும். எல்லைக்கு முன்பாகவோ/தாண்டியோ தங்கிவிட்டால் 'ஹஜ்' செல்லாது. அரஃபாவில் எந்த இடத்திலும் தங்கிக் கொள்ளலாம். ஆனால் அரஃபா தங்காவிட்டால் 'ஹஜ்' இல்லை.
❶ அரஃபாவிலுள்ள 'ஜபலுர் ரஹ்மத்' மலை அடிவாரத்தில் வந்து நிற்கவேண்டும். (இல்லையேல் அரஃபாவில் எங்கும் நின்று கொள்ளலாம்.)'ஜபலுர் ரஹ்மா'வில் துஆச் செய்தல்
Jabalur'Rahmah |
❸ நரகத்திலிருந்து விடுதலையை ஆதரவு வைத்து, அல்லாஹ்விடம் நாம் நாடியதைக் கேட்டும், அதிகமதிகமாக பாவமன்னிப்பு கேட்டும் துஆ செய்துக் கொண்டும், தல்பியா சொல்லிக் கொண்டும் சூரியன் மறைகின்றவரை அரஃபாவில் இருக்கவேண்டும். (சூரியன் மறையும் முன் அரஃபாவிலிருந்து புறப்படக்கூடாது.)
❹ அரஃபா நாளில் ஹாஜிகளுக்கு நோன்பு இல்லை.
முஸ்தலிபாவுக்குச் செல்லுதல்
Going to Muzdalifah |
❶ சூரியன் மறைந்ததும் அங்கே மஃரிப் தொழாமல் அரஃபாவிலிருந்து முஸ்தலிபாவுக்கு அமைதியாகவும் நிம்மதியாகவும் செல்லவேண்டும்.
❷ முஸ்தலிபாவுக்கு வந்து சேர்ந்ததும் ஒரு பாங்கு, ஒரு இகாமத் சொல்லி முதலில் மக்ரிப் தொழுகையையும், பின்னர் இகாமத் மட்டும் சொல்லி இஷாவை இரண்டு ரக்அத்களாச் சுருக்கி, மக்ரிபுடன் சேர்த்து தொழ வேண்டும். இந்த தொழுகையை மஃரிபுடைய வக்தில் ஜம்உ செய்யாமல் பிற்படுத்தி இஷாவுடைய வக்தில் தொழவேண்டும். (இதற்கு 'ஜம்உ தஃகீர்' என சொல்லப்படும்.)
❸ இவ்விரு தொழுகைகளுக்கு இடையேயும், இஷாவிற்குப் பிறகும் எந்தத் தொழுகையும் தொழவேண்டாம். (வித்ரு, தஹஜ்ஜத் போன்ற எந்த தொழுகையும் இங்கே கிடையாது)
Muzdalifah |
❹ பிறகு சுப்ஹ் வரை தூங்கவேண்டும்.
❺ ஃபஜ்ர் நேரம் உதயமானதும் ஒரு பாங்கு, ஒரு இகாமத் சொல்லி ஃபஜ்ர் தொழவேண்டும். (இங்கே சுன்னத் தொழுகை கிடையாது)
❻ பலவீனமானவர்கள், பெண்களைத் தவிர உள்ள ஹாஜிகள் அனைவரும் முஸ்தலிபாவிலேயே ஃபஜ்ர் தொழவேண்டும். (பெண்கள் மற்றும் பலவீனமானவர்கள் நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக நடு இரவுக்குப் பின் மினாவுக்கு செல்லலாம்.)
* பத்தாம் நாள் *
'மஷ்அருல் ஹராமி'ல் துஆச் செய்தல்:
❶ பிறை 10 அன்று முஸ்தலிபாவில் ஃபஜ்ரு தொழுத பிறகு 'மஷ்அருல் ஹராமு'க்குச் சென்று கிப்லாவை முன்னோக்கியவாறு, அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் கூறி, 'லாயிலாஹ இல்லல்லாஹ்' போன்ற திக்ருகளைச் செய்யவேண்டும். பிரார்த்தனையும் செய்யவேண்டும்.
❷ முஸ்தலிபாவில் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம்.
❸ வானம் வெளுக்கின்ற வரை 'மஷ்அருல் ஹராமி'ல் துஆச் செய்ய வேண்டும். ஆனால் சூரியன் உதிப்பதற்கு முன்பே அங்கிருந்து 'மினா'வுக்கு புறப்பட்டு விடவேண்டும்.
மீண்டும் மினாவுக்குச் செல்லுதல்:
❶ சூரியன் உதிப்பதற்கு முன்னால் மினாவுக்குத் திரும்பும்போது 'பத்னுல் முஹஸ்ஸர்' என்ற இடத்தை அடைந்ததும் சற்று வேகமாகச் செல்லவேண்டும்.
❷ 'ஜம்ரத்துல் அகபா'வுக்கு மையப் பாதையில் செல்லவேண்டும்.
கல்லெறிதல்:
❶ கல் எறிவதற்கு 'ஜம்ரத்துல் அகபா', 'ஜம்ரத்துல் வுஸ்தா', 'ஜம்ரத்துல் ஊலா' என 3 இடங்கள் மினாவில் அமைந்துள்ளன. 'ஜம்ரத்துல் அகபா' என்பது முஸ்தலிபாவிலிருந்து மினாவுக்குள் நுழையும்போது இடப்புறமாக கடைசியில் அமைந்திருக்கும் அகபாவாகும். (மக்காவிலிருந்து வரும்போது இது முதல் அகபாவாக இருக்கும்.) 10 ஆம் நாளான்று இந்த 'ஜம்ரத்துல் அகபா'வில் மட்டும்தான் கல்லெறியவேண்டும்.
❷ 'ஜம்ரத்துல் அகபா'வில் கல்லெறிவதற்காக முஹஸ்ஸரில் அதாவது மினாவில் கற்களைப் பொறுக்கிக் கொள்ளவேண்டும். (பொறுக்கும்போது சில கற்கள் கூடுதலாக பொறுக்கி தனியாக வைத்துக் கொண்டால், சிலநேரம் தவறி கீழே விழும் கற்களுக்கு பதிலாக எறிந்துக் கொள்ளலாம்.)
❸ 'மினா' நமது வலது புறத்திலும், 'மக்கா' நமது இடது புறத்திலும் அமைந்திருக்கும் நிலையில் 'ஜம்ரத்துல் அகபா'வை முன்னோக்கி நிற்க வேண்டும்.
❹ சுண்டி விளையாடக்கூடிய அளவிலுள்ள 7 சிறிய கற்களை ஜம்ராவில் எறியவேண்டும்.
❺ ஒவ்வொரு கல்லை எறியும்போதும் 'அல்லாஹு அக்பர்' என்று தக்பீர் கூறவேண்டும்.
❻ கல்லெறிதல் முடிந்தவுடன் அதுவரை கூறி வந்த தல்பியாவை நிறுத்திக் கொள்ளவேண்டும்.
❼ பொதுவாக அனைவருமே சூரியன் உதித்த பிறகுதான் கல்லெறியவேண்டும்.
❽ முஸ்தலிபாவிலிருந்து இரவிலேயே புறப்பட்டு வந்த பெண்களுக்கு மட்டும், சூரியன் உதிக்கும் முன் கல்லெறிவதற்கு சலுகை உள்ளது. ஆனால், இரவில் புறப்பட்டு மினாவுக்கு வந்த பலவீனர்கள் ஆண்களாக இருந்தால் அவர்கள் சூரியன் உதித்த பிறகே கல்லெறிய வேண்டும்.
❾ சூரியன் உதித்ததிலிருந்து, உச்சி சாய்வதற்கு முன்பு வரை கல்லெறிந்து கொள்ளலாம். சூரியன் உச்சி சாய்வதற்கு முன்பு கல்லெறிய முடியவில்லையெனில் சூரியன் உச்சி சாய்ந்த பின் அல்லது இரவு வரை கல்லெறிந்து கொள்ளலாம்.
❿ அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் விதமாக நெருக்கியடித்தலோ, சண்டை சச்சரவோ, கூச்சலோ போடக்கூடாது. பொறுக்கி வைத்துள்ள கற்களைத் தவிர (செருப்பு, குடை போன்ற) வேறு எதனையும் எறியக்கூடாது.
குர்பானி கொடுத்தல்:
❶ கல்லெறிந்து முடிந்ததும் மினாவில் அறுக்குமிடத்திற்கு வந்து நமது குர்பானிப் பிராணியை அறுக்க வேண்டும். மினாவில் மற்ற இடங்களிலும் அறுக்கலாம். (ஏனெனில் நபி(ஸல்) அவர்கள், மினா அனைத்துமே அறுக்குமிடம்தான் என்று கூறியுள்ளார்கள்.)
❷ குர்பானிப் பிராணியை நாமே அறுப்பது நபிவழியாகும். அடுத்தவரிடம் பொறுப்பை ஒப்படைத்தும் குர்பானியை நிறைவேற்றலாம்.
❸ ஹஜ்ஜில் குர்பானி கொடுப்பவர் அந்த இறைச்சியிலிருந்து சாப்பிடலாம்; சேமித்தும் வைக்கலாம்.
❹ ஒட்டகம், மாடு ஆகியவற்றில் ஏழு பேர் கூட்டாகச் சேர்ந்துக் கொள்ளலாம்.
❺ தமத்துஃ அல்லது கிரான் முறையில் ஹஜ் செய்பவர் குர்பானி கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க இயலாதவர் அங்கு இருக்கும்போது மூன்று நோன்புகள், ஊருக்குத் திரும்பியதும் ஏழு நோன்புகள், ஆக மொத்தம் பத்து நோன்புகள் நோற்கவேண்டும்.
தலை முடியை மழித்தல்
❶ குர்பானி முடிந்ததும் தலையை மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும். அல்லது குறைத்துக் கொள்ளவேண்டும். மொட்டையடிப்பதே சிறந்தது.
❷ தலையை மழிப்பது ஆண்களுக்கு மட்டும்தான்; பெண்கள் தலைமுடியை சிறிது குறைத்துக் கொள்ளவேண்டும்.
❸ மழித்துக் கொள்பவர் தனது வலது புறத்திலிருந்து மழிக்க அல்லது முடியை குறைக்கத் துவங்கவேண்டும்.
❹ இவ்வாறு முடியை மழித்ததும் அல்லது குறைத்ததும் அதுவரை இஹ்ராமின்போது தடுக்கப்பட்ட காரியங்களில் மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுவதைத் தவிர மற்ற அனைத்தும் இப்போது அனுமதிக்கப்படுகின்றன. இதன்படி ஹாஜி தையல் சட்டை அணிந்து கொள்ளலாம்; நறுமணம் பூசிக் கொள்ளலாம். (இது முதல் விடுதலை எனப்படுகின்றது.)
❺ பலியிடுகின்ற நாளான பத்தாம் நாள், மினாவில் லுஹர் நேரத்தில் ஜம்ராக்களுக்கு இடையில், மக்களுக்கு ஹஜ்ஜின் சட்டதிட்டங்களைக் கற்றுக் கொடுக்கும் வகையில் இமாம் சொற்பொழிவாற்றுவது நபிவழியாகும்.
❻ 10 ஆம் நாளன்று ஹாஜிகளுக்கு பெருநாள் தொழுகைக் கிடையாது. ஆயினும் நபி(ஸல்) அவர்கள் 10 ஆம் நாளன்று மினாவில் சொற்பொழிவு நடத்தியுள்ளார்கள். (மினாவில் லுஹர் தொழுகை நடத்திய பிறகு இந்த உரையை நடத்தியிருக்கக் கூடும்.)
தவாஃபுல் இஃபாளா
❶ பத்தாம் நாளன்று புனித ஆலயமான கஃபாவுக்குச் சென்று (ஹஜ்ஜுக்குரிய) தவாஃப் செய்யவேண்டும். (இதற்கு 'தவாஃபுல் இஃபாளா' எனவும், ''தவாஃப் ஸியாரா'' எனவும் கூறப்படுகிறது.)
❷ இந்தத் தவாஃபின்போது ('தவாஃபுல் குதூம்' என்ற ஆரம்ப தவாஃபில் செய்தது போன்று) முதல் மூன்று சுற்றுக்கள் சற்று வேகமாக நடப்பதும், வலது புஜத்தைத் திறந்த நிலையில் ஆடை அணிவதும் இல்லை.
❸ ஏழாவது சுற்று முடிந்ததும் மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழவேண்டும்.
❹ பிறகு ஸஃபா, மர்வாவுக்கு இடையில் (தொங்கோட்டம்) 'ஸயீ' செய்யவேண்டும். 'கிரான்' முறையில் ஹஜ் செய்வோருக்கு ஏற்கனவே ஸஃபா, மர்வாவுக்கு இடையில் 'ஸயீ' செய்திருந்தால் இப்போது செய்யவேண்டிய அவசியமில்லை.
❺ இந்தத் தவாஃப் முடித்தவுடன் மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட அனைத்தும் அனுமதிக்கப்பட்டு, முழுமையாக ஒருவர் இஹ்ராமிலிருந்து விடுபடுகிறார். (இது இரண்டாவது விடுதலை எனப்படுகின்றது.)
❻ ஜம்ஜம் நீருக்கு அருகில் வந்து அதைப் பருகவேண்டும்.
குறிப்பு:-
* கல்லெறிதல், குர்பானி கொடுத்தல், முடி களைதல் ஆகியவை முடிந்ததும் முதல் விடுதலை என்று பார்த்தோம். இந்தச் சலுகையைப் பெற வேண்டுமானால் அன்றைய தினம் (பத்தாம் நாள்) சூரியன் மறைவதற்கு முன்பு 'தவாஃபுல் இஃபாளா' செய்தாகவேண்டும்.
* முதல் விடுதலை பெற்றவர் 'தவாஃபுல் இஃபாளா' செய்யாமல் சூரியன் மறைந்துவிட்டால் அவருக்கு அந்தச் சலுகை ரத்தாகிவிடும். அதாவது மீண்டும் அவர் இஹ்ராமுடைய நிலைக்கு வந்துவிடுவார். அதனால் அவர் தையல் ஆடை அணியவோ, நறுமணம் பூசவோ கூடாது.
* இந்த நிலையை அடைந்தவர் (குர்பானி கொடுத்து, மொட்டையடித்த பின்னர்) ஏற்கனவே தையல் ஆடை அணிந்திருந்தால் அவர் மீண்டும் இஹ்ராம் ஆடை அணிந்துக் கொள்ளவேண்டும். 'தவாஃபுல் இஃபாளா' முடித்த பின்னர்தான் தையல் ஆடை அணிதல், நறுமணம் பூசுதல் போன்ற சலுகையை அவர் பெறமுடியும். இந்த தவாஃபை செய்யாமல் புறப்படக்கூடாது.
* மக்காவில் லுஹர் தொழவேண்டும். திரும்ப வந்து மினாவிலும் லுஹர் தொழுதுக் கொள்ளலாம்.
* பத்தாம் நாளன்று 1. கல்லெறிதல், 2. பலியிடுதல், 3. தலைமுடி களைதல், 4. தவாஃபுல் இஃபாளா ஆகிய வரிசைப்படி நபி(ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள். இயன்றவரை நாமும் அதன்படி செய்யவேண்டும். எனினும் இந்த வணக்கங்களை முன், பின் மாற்றிச் செய்துவிட்டால் குற்றமில்லை.
❶ மினாவுக்கு வந்து 11, 12, 13 ஆகிய நாட்களில் தங்கவேண்டும்.(11, 12, 13 ஆகிய நாட்கள்) மினாவில் தங்குதல்
❷ இந்த நாட்களில் சூரியன் உச்சி சாய்ந்த பிறகு மூன்று ஜம்ராக்களிலும் 7 கற்கள் வீதம் ஒவ்வொரு நாளும் எறியவேண்டும்.
❸ 'மஸ்ஜிதுல் கைப்' அருகில் உள்ள (சிறிய) முதல் ஜம்ராவிலிருந்து கல்லெறியத் துவங்கவேண்டும். அதில் எறிந்து முடித்தவுடன் சற்று வலது பக்கமாகச் சென்று, கிப்லாவை முன்னோக்கி கைகளை உயர்த்தி நீண்ட நேரம் துஆச் செய்ய வேண்டும்.
❹ இரண்டாவது ஜம்ராவுக்கு வந்து அதுபோன்று கல்லெறிய வேண்டும். பிறகு இடது பக்கமாகச் சென்று கைகளை உயர்த்தி, கிப்லாவை நோக்கி நீண்ட நேரம் துஆச் செய்யவேண்டும்.
❺ பிறகு மூன்றாவது ஜம்ராவுக்கு வந்து, மக்கா நமது இடது புறமாகவும் மினா நமது வலது புறமாகவும் அமையுமாறு நின்று கல்லெறிய வேண்டும். இங்கு கல்லெறிந்த பிறகு அங்கு நிற்கக் கூடாது.
❻ பிறை 12, 13 ஆகிய நாட்களிலும் இவ்வாறே கல்லெறிய வேண்டும்.
❼ பிறை 13 அன்று தங்காமல் 12 வது நாளிலேயே ஊர் திரும்புவதற்கு அனுமதி உண்டு. அல்லாஹ் இந்தச் சலுகையை அளிக்கின்றான். 13 ஆம் நாள் தங்குவதாக இருந்தாலும் தங்கலாம். எனினும் 13 அன்று தங்கிச் செல்வது நபிவழியாகும்.
❽ தக்க காரணம் உள்ளவர்கள் மக்காவில் தங்கிக் கொண்டு மினாவில் வந்து கல்லெறியலாம். அதுபோல் தக்க காரணம் உள்ளவர்கள் இரண்டு நாட்கள் எறிய வேண்டிய கற்களை ஒரே நாளில் எறியலாம்.
❾ 12 ஆம் நாள் அல்லது 13 ஆம் நாள் கல்லெறியும் வணக்கம் முடிந்ததும் மஸ்ஜிதுல் ஹராமில் அதிகமதிகம் தொழ வேண்டும்.
❿ அதிகமதிகம் தவாஃப் செய்ய வேண்டும்.
❶ தேவைகள் முடிந்து பயணத்தை உறுதி செய்ததும் கஅபாவிற்குச் சென்று 'தவாஃபுல் விதா' (விடை பெறும் தவாஃப்) செய்ய வேண்டும்.விடை பெறும் தவாஃப்
❷ மாதவிலக்கான பெண்கள் 'தவாஃபுல் விதா' செய்யாமல் புறப்பட்டுக் கொள்ளலாம்.
குறிப்பு:-
* ஜம்ஜம் நீரை வயிறு நிரம்ப அருந்துவதும், அதை தத்தமது ஊர்களுக்கு எடுத்துச் செல்வதும் விரும்பத்தக்கதாகும்.
மதீனாவுக்கு செல்வது ஹஜ்ஜின் கிரியைகளில் ஒன்றோ, கட்டாயமோ, சுன்னத்தோ கிடையாது. ஆனால், அங்கு தொழுவதால் (மஸ்ஜிதுல் ஹராம் நீங்கலாக உள்ள) மற்ற பள்ளிகளைவிட 1000 மடங்கு நன்மைகள் கிடைப்பதன் சிறப்பை முன்னிட்டு செல்லலாம். கண்டிப்பாக ஜியாரத் நோக்கில் செல்லக்கூடாது. ஆனால் தொழுவதை நோக்கமாகக் கொண்டு அங்கு சென்றால், அதற்கு பிறகு நபி(ஸல்) அவர்களின் கப்ரிலும் மற்ற பொது மையவாடியிலோ ஜியாரத் செய்யலாம்.மதீனாவுக்கு செல்வதும், சலாம் சொல்வதும்
நபி(ஸல்) அவர்களுக்கு 'சலாம் கூறுங்கள்' என்று ஹஜ் செய்யக் கூடியவர்களிடம் சொல்லி அனுப்பும் வழக்கம் நம் மக்களிடையே உள்ளது. அது தவறான நடைமுறையாகும். நாம் அங்கு சென்று சலாம் சொன்னால் நபி(ஸல்) அவர்களுக்கு விளங்கும் என்ற தவறான எண்ணமே இதற்கு காரணமாகும். ஆனால் நாம் உலகின் எந்த இடத்தில் இருந்துக் கொண்டும் அவர்கள் மீது சொல்லும் சலவாத்தினை நபி(ஸல்) அவர்களிடம் சேர்ப்பிப்பதற்கான பொறுப்பை மலக்குகளிடம் அல்லாஹுத ஆலா கொடுத்திருக்கிறான். அதனால் அதிகமதிகம் சலவாத் ஓதுவது மட்டுமே அவர்களுக்கு எடுத்து செல்லப்படுமே தவிர அங்கு செல்பவர்கள் மூலமாக சலாம் சொல்லி அனுப்புவது அல்லாஹ்வோ, ரசூலோ சொல்லித் தராத, நாம் கண்டிப்பாக தவிர்ந்துக் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!