அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday 30 August 2010

ஜகாத்தும் ஸதகாவும் ஒன்றல்ல

நம் இஸ்லாமிய மக்களில் பலர் மார்க்கத்தில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டு அமல்கள் செய்தாலும், முக்கியமான கடமைகளில் ஒன்றான ஜகாத்தையும், கடமையல்லாத உபரி வணக்கமான ஸதக்காவையும் பிரித்தறியாதவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் ரமலான் மாதத்தில் ஏழை எளியவர்களுக்கு சில சில்லரைக் காசுகளை கொடுப்பதின் மூலம் தங்களின் ஜகாத் நிறைவேறிவிட்டதாக நிம்மதியடைந்துக் கொள்கிறார்கள். இதனால் கடமையான ஜகாத்தை முறையாக நிறைவேற்றாத ஆபத்தான நிலை ஏற்படுகிறது. அல்லது முறையாக ஜகாத்தை கணக்கிடுபவர்களும் அதே போலவே ரமலானில் அவற்றை சில்லரைகளாக பகிர்ந்துக் கொடுத்துவிட்டு, ஜகாத்தையும் அதுபோக அதிகபட்சமாக கொடுக்கவேண்டிய ஸதகாவையும் 'டூ-இன்-ஒன்'னாக கொடுத்து வேலையை முடிப்பதையும் பார்க்கிறோம். எனவே நாம் ஜகாத்திற்கும் ஸதகாவிற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து செயல்பட்டு அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிக்கவும், உபரியான ஸதகாவை அதிகமதிகம் கொடுத்து இறைவனின் அருளைப் பெறுவதற்காகவும் சிலவற்றை நாம் அவசியம் தெரிந்துக்கொள்ளவேண்டியுள்ளது.

- ஜகாத் என்பது ஒருவர் தம்முடைய செல்வத்திலிருந்து இஸ்லாம் மார்க்கம் வரையறுத்துள்ள குறிப்பிட்ட அளவின்படி குறிப்பிட்ட சில வகையின‌ருக்கு கொடுப்பதன் மூலம் செய்யும் கடமையான ஒரு இறை வணக்கமாகும்.

தொழுகையை நிலை நாட்டுங்கள்; ஜகாத்தையும் கொடுங்கள் (அல்குர்ஆன் 2:43)

‘இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

(1) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வை அன்றி வேறு யாரும் இல்லை என்றும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுதல்.
(2) தொழுகையை நிலைநாட்டுதல்.
(3) ஜகாத்தைக் கொடுத்தல்.
(4) ஹஜ் செய்தல்.
(5) ரமலானில் நோன்பு நோற்றல் என்பனவே அவையாகும்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்:புகாரி

- ஸதகா என்பது இஸ்லாத்தில் கடமையாக இல்லாவிட்டாலும் ஒருவர் தம்முடைய செல்வத்திலிருந்து யாருக்கு வேண்டுமானாலும் தானமாக கொடுப்பதன் மூலம் செய்யும் ஓர் இறை வணக்கமாகும்.

**********************************************************************************

- ஜகாத் என்பது திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிட்டுக் கூறியுள்ள சில‌ குறிப்பிட்ட பிரிவினருக்கு கொடுப்பதாகும். (இந்தப் பிரிவினர்களைத் தவிர வேறு யாருக்கும் ஜகாத் கொடுப்பதற்கு அனுமதியில்லை. அப்படி கொடுத்துவிட்டால் அந்த ஜகாத் செல்லாது)

(ஜகாத் என்னும்) தானதர்மங்களெல்லாம், ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும், இந்தத் தானதர்மங்களை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளம் ஈர்க்கப்பட்டவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடன் பட்டவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல் குர்ஆன் 9:60)

- ஸதகா என்பது ஜகாத்துக்காக இறைவன் வரையறுத்துள்ள பிரிவுகள் மட்டுமின்றி கஷ்டப்படக்கூடிய பிறருக்கும் கொடுக்கலாம். இப்படி கொடுக்கும்போது ஒருவேளை அது செல்வந்தர்களை சென்றடைந்துவிட்டாலும் அது செல்லும்.

**********************************************************************************

- ஜகாத் என்பது ஒருவரின் செல்வம் 'நிஸாப்' என்று சொல்லப்படும் ஒரு குறிப்பிட்ட அளவை அடைந்தவுடன் அவர் மீது கடமையாகும்.

- ஸதகா என்பதற்கு குறிப்பிட்ட அளவு நிர்ணயம் கிடையாது. ஒருவர் எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

**********************************************************************************

- ஜகாத் என்பது தங்கம், வெள்ளி, விளை பயிர்கள்/பழங்கள், வியாபார பொருட்கள் மற்றும் ஒட்டகம், ஆடு, மாடு போன்ற கால் நடைகள் ஆகிய குறிப்பிட்ட பொருட்களுக்காக மார்க்கம் வரையறுத்துள்ள குறிப்பிட்ட அளவின்படி கொடுக்கப்படுவதாகும்.

- ஸதகா என்பது குறிப்பிட்ட ஒரு பொருள் என்றில்லாமல் ஒருவர் எந்தப் பொருளையும் இறைவழியில் செலவழிப்பதாகும். இதற்கு இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்ற‌ வரையறையும் இல்லை.

**********************************************************************************

- ஜகாத்தைக் கொடுக்கும்போது ஒருவருடைய பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மொத்த தொகையாக ஒருவருக்கு கொடுக்கவேண்டும்.(அதன் மூலம் அவரும் ஜகாத் கொடுக்கக்கூடிய நிலைமைக்கு உயர்த்தப்படலாம்.)

சில்லரைகளாக ஜகாத் கொடுக்கக் கூடாது.

- ஸதகா என்பது மொத்தமாகவோ சில்லரையாகவோ நம் வசதிக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு கொடுக்கலாம்.

**********************************************************************************

- ஜகாத் கடமையான நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவரது வாரிசுகள் அவருடைய சொத்துக்களை பங்கிடுவதற்கும் அவரது மரண சாசன‌த்தை நிறைவேற்றுவதற்கும் முன்பே கடமையான ஜகாத்தை இறந்தவரின் சொத்திலிருந்து முதலில் நிறைவேற்றவேண்டும்.

- ஸதகா என்பதில் அவ்வாறான கடமை எதுவும் இல்லை.

**********************************************************************************

- ஜகாத் கொடுக்காவிட்டால் மறுமையில் தண்டணை உண்டு.

'எவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு' (அல் குர்ஆன் 9:34)

- ஸதகா கொடுப்பது நமக்கு அதிகபட்ச‌ நன்மைகளைப் பெற்றுத்தரும். கொடுக்காவிட்டால் நம்முடைய நன்மைகளின் அளவு குறையுமே தவிர தண்டனைக்குரிய‌ குற்றமாகாது.

**********************************************************************************

- ஜகாத்தை ஒருவர் தனது பெற்றோர்களுக்கோ அல்லது தமது வாரிசுகளுக்கோ கொடுக்கக்கூடாது.

- ஸதகா என்பதை இவர்களுக்கு கொடுக்கலாம்.

**********************************************************************************

- முஸ்லிமல்லாதவர்களில் யார் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் உளமார அன்பு செலுத்துகிறார்களோ அவர்களுக்கோ அல்லது பகைமைக்கொண்ட முஸ்லிமல்லாதவர்கள், தங்கள் பகைமையைக் கைவிடுவார்கள் என்றால் அவர்களுக்கும் ஜகாத் கொடுக்கலாம்.

இது தவிர முஸ்லிமல்லாத மற்றவர்களுக்கு ஜகாத் கொடுப்பதற்கு அனுமதியில்லை.

"......இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும்..." (அல்குர்ஆன் 9:60)

நபி(ஸல்)அவர்களும் இவ்வாறு அவர்களுக்கு வழங்கியுள்ளார்கள். நூல்: முஸ்லிம்; எண்: 4275, 4277

- ஸதகாவை நிராகரிப்பவர்களுக்கும், இணை வைப்பவர்களுக்கும் கொடுக்கலாம்.

இவைகளே ஜகாத்துக்கும் ஸதகாவுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசங்களாகும்.

குறிப்பு:-

- 'ஜகாத்' என்ற வார்த்தைக்கு 'வளர்ச்சி அடைதல்', 'தூய்மைப் படுத்துதல்' போன்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு. ஏனெனில், ஜகாத் வழங்குவது பொருளாதாரம் வளர்ச்சியடையவும் நன்மைகள் வளரவும் காரணமாக அமைகிறது.

"தர்மம் செய்வதால் செல்வம் குறைந்து விடாது". நூல்:முஸ்லிம், திர்மிதி, அஹ்மத்

ஸதகா என்பது எல்லா நற்செயல்களையும் குறிக்கக்கூடிய பரந்த பொருளுடையதாக இருக்கிறது.

'எல்லா நற்செயலும் தர்மமே' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி)அறிவித்தார்கள். நூல்:புகாரி

- கடமையான ஜகாத்தும் (குர்ஆன்/ஹதீஸ்களில்) சில இடங்களில் ஸதகா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அப்படி பெயர் சொல்லப்படும் இடங்களிலும்கூட‌ சட்டங்கள் ஒன்றாகாது.

அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

6 comments:

 1. அருமையான விளக்கம்.
  புரிந்து கொண்டேன்.
  மிக்க மகிழ்ச்சி

  ReplyDelete
 2. @ Mohamed Ayoub K....

  //...புரிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி// அல்ஹம்துலில்லாஹ்!

  பின்னூட்டத்திற்கு நன்றி.

  ReplyDelete
 3. அருமையான விளக்கம்,நானும் இதன் மூலம் தெரியாத விஷயங்கள் பலவற்றை தெரிந்துகொண்டேன்.நன்றி.நேரம் கிடைக்கும் பொழுது இன்னும் எழுதுங்கள்.

  ReplyDelete
 4. @ asiya omar...

  //...நானும் இதன் மூலம் தெரியாத விஷயங்கள் பலவற்றை தெரிந்துகொண்டேன்//அல்ஹம்துலில்லாஹ்!

  //நேரம் கிடைக்கும் பொழுது இன்னும் எழுதுங்கள்// இன்ஷா அல்லாஹ், தொடர்ந்து எழுத‌ துஆ செய்யுங்க, ஆசியாக்கா!

  ReplyDelete
 5. தெளிவான சொன்ன விதம் அழகு :-)

  ReplyDelete
 6. @ ஜெய்லானி...

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நானா!

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை