கடந்த 05.12.16 அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உயிரிழந்தார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைச் சிறப்பாக வைத்திருந்து பல நல்ல திட்டங்களை நிறைவேற்றிய ஜெயலலிதாவின் இழப்பு தமிழக மக்களுக்குப் பேரிழப்புதான்.
பொதுவாக ஒருவர் மரணிக்கும்போது சம்பிரதாயமாக அளவுக்கு மீறிப் புகழ்வது மனிதர்களின் இயல்பாக அமைந்துள்ளது. எந்தத் தலைவர் மரணித்தாலும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் இவருக்கு நிகர் யாருமில்லை என்றும் புகழ்வதும், பின்னர் மற்ற தலைவருக்கும் இதே புகழ் மாலைகளைச் சூடுவதும் வழக்கமாக நாம் பார்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.
முஸ்லிம்களைப் பொருத்தவரை இறைத்தூதர்கள் எனும் நபிமார்கள் அதிகம் மரியாதை செலுத்தத் தக்கவர்களாவர். அப்படி இருந்தும் இறைத்தூதர்களை எல்லை மீறிப் புகழ்வதை நபிகள் நாயகம் அவர்கள் கண்டித்துள்ளார்கள்.
எனவே தவ்ஹீத் ஜமாஅத் யாருடைய மரணத்தின்போதும் எல்லை மீறியோ, மிகைப்படுத்தியோ, பொய்யான வர்ணனை கொண்டோ புகழ்வதில்லை. இது எதார்த்தமான உண்மைகளை மட்டுமே சொல்லி வருகிற இயக்கமாகும்.
எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் அவர்கள் புகழுக்காகவும், உலகில் பலவித ஆதாயங்களை அடைவதற்காகவும்தான் அரசியலில் ஈடுபடுகிறார்கள். தன்னலம் பாராமல் மக்களுக்காகப் பாடுபடும் ஒரு அரசியல்வாதியும் இன்றைய உலகில் இல்லை. இதில் ஜெயலலிதாவும் விதிவிலக்கல்ல. அண்ணா, காமராஜர், எம்ஜிஆர் உள்ளிட்ட யாரும் விதிவிலக்கானவர்கள் அல்லர். அதேவேளை.. ஒரு அரசியல்வாதியாக அவர் செய்த செயல்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, முஸ்லிம் சமுதாயத்திற்கு அவர் என்ன செய்தார் என்பதை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்கின்றோம்.
முதன் முறை பதவியேற்ற ஜெயலலிதாவின் செயல்பாடுகள் ஜெயலலிதா 1991 ஆம் ஆண்டு முதல் 1996 வரை ஆட்சி செய்தபோது முஸ்லிம்களுக்கு எதிரான கடும் போக்கை மேற்கொண்டு இருந்தார். முஸ்லிம்களின் சின்னஞ்சிறிய குற்றங்களுக்காக முஸ்லிம்களை தடா சட்டத்தில் கைது செய்தவர் ஜெயலலிதா.
இந்துத்துவா இயக்கத்தால் முஸ்லிம் கொல்லப்பட்டால் அவருக்கு எந்த இழப்பீடும் கிடையாது. ஆனால் முஸ்லிம் ஒருவரால் இந்துத்துவாவினர் கொல்லப்பட்டால் அவருக்கு மூன்று லட்சம் உதவி என்று அறிவிக்கும் அளவுக்கு வெளிப்படையாக முஸ்லிம் விரோதப் போக்கை கடைப்பிடித்து வந்தார்.
பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்தவர் ஜெயலலிதா. பாஜகவுடன் பகிரங்கமாக கூட்டணி வைத்தார். பாஜக தமிழகத்தில் காலூன்ற அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். இவரது ஆட்சியில் நடந்த கொடுமை தாங்க முடியாமல்தான் தமுமுக என்ற இயக்கம் அன்று ஆரம்பிக்கப்பட்டது.
முஸ்லிம்கள் விரும்பும் நபராக ஜெ. மாறியது எப்படி?
என்ன செய்தாலும் முஸ்லிம்கள் நம்மை ஆதரிக்க மாட்டார்கள் என்றும், முஸ்லிம்கள் திமுகவின் அடிமைகளாக உள்ளனர் என்றும் அவர் கருதியது அவரின் அத்தகைய செயல்பாடுகளுக்கு காரணமாக இருக்கலாம். அப்படி முஸ்லிம்களால் அதிகம் வெறுக்கப்படும் நிலையில் இருந்த ஜெயலலிதா அதிக முஸ்லிம்களால் விரும்பத்தக்கவராக எப்படி ஆனார்? இதற்குக் காரணம் கருணாநிதி தான்.
1996 ஆம் ஆண்டு கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தது முதல் முஸ்லிம்களிடம் அவர் நடந்துக் கொண்ட விதம் ஜெயலலிதாவை மிஞ்சக்கூடிய வகையில் அமைந்தன. சிறுபான்மை மக்களை ஒடுக்கினால் பெரும்பான்மை மக்களின் ஆதரவு பெருகும் என்று அவர் கணக்குப் போட்டார்.
முஸ்லிம்கள் டிசம்பர் 6 ல் போராட்டம் அறிவிப்பு செய்தால் உடனே அதற்குத் தடை போட்டார். இரும்புக் கரம் கொண்டு அடக்குவேன் என்று கூறினார். ஒவ்வொரு டிசம்பரிலும் முதல் தேதியன்றே முஸ்லிம்களை நள்ளிரவில் வீடு புகுந்து முன் எச்சரிக்கை கைது செய்தார். அவர் ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளிலும் இந்த முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகள் தொடர்ந்தன. முஸ்லிம்களின் எல்லா போராட்டங்களுக்கும், மாநாடுகளுக்கும் தடை போட்டார்.
இதனிடையே கோவையில் காவலர் செல்வராஜ் கொலையை ஒட்டி முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் நிகழ்த்தப்பட்டது. போலீசாரும், இந்துத்துவா இயக்கமும் கூட்டாக நடத்திய இந்தக் கலவரத்தில் 19 முஸ்லிம்கள் போலீசாரால் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஊனமாக்கப்பட்டனர். முஸ்லிம்களின் பல்லாயிரம் கோடி சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஆனால் இதற்காக ஒருவரும் கருணாநிதி ஆட்சியில் தண்டிக்கப்படவில்லை.
போலீசார் எந்தத் தவறும் செய்யவில்லை என்று சட்டசபையிலேயே கருணாநிதி சொன்னார். இதற்காக கோகுல கிருஷனன் கமிஷன் அமைத்தார்; அந்த அறிக்கையிலும் குற்றவாளிகள் அடையாளம் காட்டப்படவில்லை. எந்த நடவடிக்கையும் பரிந்துரைக்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்கும் பரிந்துரை மட்டுமே வழங்கப்பட்டது.
இவரைவிட ஜெயலலிதா மேல் என்ற எண்ணம் முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக உருவானது. இதைத் தொடர்ந்து நடந்த குண்டு வெடிப்பைக் காரணம் காட்டி ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் நாடு முழுவதும் சொல்லொனாத துன்பத்தை காவல் துறையால் அனுபவித்தது. சட்ட சபையிலேயே முஸ்லிம் தீவிரவாதி என்று சொல்லும் அளவுக்கு முஸ்லிம்களுக்கு எதிரான போர்ப் பிரடகடனம் செய்தார். குண்டு வெடிப்பில் சம்மந்தமில்லாத ஆயிரக் கணக்கானோரைக் கைது செய்தார்.
மனித வெடிகுண்டு என பொய்யாக உருவாக்கப்பட்ட கற்பனைப் பாத்திரமான சங்கீதா என்ற ஆயிஷா(?) கதாபாத்திரம் பற்றி காவல் துறை மூலம் செய்தியைப் பரப்பி, ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணையும் மற்றவர்கள் சந்தேகத்துடன் பார்க்கும் நிலையை ஏற்படுத்தினார். அத்வானியும், வாஜ்பாயும் கோவை வந்தால் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் அநியாயமாக படுக்கையறை வந்து கைது செய்யும் காவல்துறையின் அட்டூழியங்கள்;
முஸ்லிம் சமுதாய இளைஞர்களுக்கு எதிரான பொய் வழக்குகள்; குஜராத் கலவரத்தின்போது மோடியின் குஜராத் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என நாடாளுமன்ற வாக்கெடுப்பில் மோடிக்கு ஆதரவாக வாக்களித்த திமுகவின் துரோகம் என முஸ்லிம் சமுதாயத்தின் மீது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சிய நடவடிக்கைகளில் கலைஞர் தொடர்ச்சியாக ஈடுபட்டபோதுதான் முஸ்லிம் சமுதாயம் தனக்கென ஒரு பாதுகாப்பு அரணைத் தேடி தவிக்கின்றது!
இந்நிலையில் முஸ்லிம் சமுதாயத்தை அரவணைத்தால் அவர்கள் நன்றி விசுவாசமுள்ள சமுதாயமாக இருப்பார்கள் என்பதை ஜெயலலிதா உணரத் தொடங்கினார். முஸ்லிம் சமுதாயத்தைத் தக்க தருணத்தில் அரவணைத்த ஜெயலலிதா முஸ்லிம் சமுதாயத்தைத் தக்க தருணத்தில் அரவணைத்ததன் மூலமும், சிறுபான்மை சமுதாயத்தவர்களுக்குண்டான பாதுகாப்பை தனது நடவடிக்கைகளின் மூலம் உறுதி செய்ததன் வாயிலாகவும் முஸ்லிம் சமுதாயத்தின் தேட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டார். அவரிடத்தில் நல்ல மாற்றங்கள் தென்பட்டன!
அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தது முதல் டிசம்பர் ஆறு முன் எச்சரிக்கை கைது நடவடிக்கை ஒழிந்தது. முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்காக ஆணையம் அமைத்த நிகழ்வு 2004 ஆம் ஆண்டு பிஜேபி கூட்டணியுடன் அவர் சந்தித்த பாராளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியைத் தொடர்ந்து முஸ்லிம் சமுதாயத்தின் மீதான அவரது கரிசனப் பார்வை அதிகரித்தது!
அன்று பாஜகவிற்கு தமிழகத்தில் முழுக்குப் போட்டவர்தான் இன்றுவரை பாஜக தனிமரமாக யாராலும் சீண்டப்படாத, தீண்டத்தகாத கட்சியாக தனிமைப் படுத்தப்பட்டதற்கு இவரும் ஒரு முக்கிய காரணகர்த்தாவானார்.
பாஜகவை வனவாசத்திற்கு அனுப்பியதோடு மட்டுமல்லாமல் முஸ்லிம் சமுதாயத்தின் மீதான அரவணைப்பையும் அதிகப்படுத்தினார் ஜெ..! அதன் வெளிப்பாடுதான் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு வித்திட்டு ஜெயலலிதா அவர்கள் அமைத்த ராஜரத்தினம் தலைமையிலான இடஒதுக்கீட்டு ஆணையம்.
ஆம்! கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கும்பகோணத்தில் நடத்திய மாபெரும் முஸ்லிம்கள் பேரணியைத் தொடர்ந்துதான் இந்த சமுதாயத்தின் வீரியத்தையும், கோரிக்கையையும் கவனித்து, முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக இடஒதுக்கீட்டை சட்டமாக்க முதல்படியாக ஆணையத்தை அமைத்தார் ஜெயலலிதா.
இடஒதுக்கீடு கேட்டு நாட்டை கலவர பூமியாக மாற்றப் போகின்றீர்களா என சட்டசபையில் முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டுக் கோரிக்கையைக் கண்டித்துப் பேசிய கருணாநிதியின் உள்ளத்தில், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதுதான் சரி என்ற விதையை விதைத்தவர் ஜெயலலிதாதான். அதன் பிறகுதான் 3.5 சதவீத இடஒதுக்கீடு முஸ்லிம்களின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்தது.
இடஒதுக்கீடு அமைக்க ஆணையம் அமைத்ததன் மூலமும், முஸ்லிம்களை அரவணைத்ததன் மூலமும் கலைஞர்தான் இஸ்லாமிய சமுதாயத்தின் பாதுகாவலர் என்றிருந்த சித்திரத்தை ஜெயலலிதா தகர்த்தெறிந்தார்!
முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த தருணம்
அதுமட்டுமல்லாமல் விஷ்வரூபம் என்ற கமலஹாசனின் திரைப்படம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியபோது அந்தத் திரைப்படத்திற்கு தடை விதித்தார் ஜெயலலிதா.
ஒட்டுமொத்த தமிழகத்தின் அரசியல்வாதிகளும், ஒட்டு மொத்த திரையுலகினரும் இந்த விஷயத்தில் அவரை எதிர்த்து கமலஹாசனுக்கு ஆதரவாக களம் கண்டனர். கருணாநிதி உள்ளிட்ட அனைவரும் ஜெயலலிதாவைக் கண்டித்து அறிக்கை விட்டனர்.
ஆனால் யார் எதிர்த்தாலும் பரவாயில்லை; முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளை நான் மதிக்கின்றேன் என்று சொல்லி விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்ததோடு மட்டுமல்லாமல், அந்தத் தடையில் உறுதியாகவும் இருந்து, திரைப்படத்திலுள்ள ஆட்சேபனைக்குரிய வாசகங்களையும், காட்சிகளையும் நீக்க முஸ்லிம் சமுதாயத் தலைவர்களோடு கமலஹாசனை பேச்சுவார்த்தை நடத்த வைத்து, முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளுக்கு ஜெயலலிதா அவர்கள் மதிப்பளித்த தருணத்தை மறக்கவே முடியாது..!
பழியிலிருந்து பாதுகாப்புப் பெற்ற முஸ்லிம் சமுதாயம், 'ம்..' என்றால் சிறை வாசம்; ஏன் என்றால் வனவாசம் என்று சொல்லுவார்கள்; அப்படிப்பட்ட ஒரு நிலையை முஸ்லிம் சமுதாயம் கலைஞர் ஆட்சியில் அனுபவித்து வந்த நிலையில் ஜெயலலிதா அவர்களின் ஆட்சி முஸ்லிம்களை பழிச் சொல்லிலிருந்து பாதுகாத்த ஆட்சியாக அமைந்தது என்றால் அது மிகையல்ல!
எத்தனையோ காவி அமைப்பின் தலைவர்கள் முன் விரோதம், கட்டப்பஞ்சாயத்து தகராறு, ரியல் எஸ்டேட் பேரம், கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, கள்ளக்காதல் தகராறு உள்ளிட்ட பல சமூக விரோத செயல்களின் காரணமாக படுகொலை செய்யப்பட்ட போதெல்லாம், அதைக் காரணம் காட்டி அமைதிப் பூங்காவாகத் திகழும் இந்த தமிழகத்தில் கலவரத்தை உண்டு பண்ண காவிகள் கலவர சதித்திட்டம் தீட்டியபோது, அந்தப் படுகொலை குறித்த விசாரணைகளை நிதானமாக கையாண்ட ஜெயலலிதா தலைமையிலான காவல்துறை உயர் அதிகாரிகள் பல்வேறு பழிச்சொல்லில் இருந்து முஸ்லிம் சமுதாயத்தை காத்ததோடு உண்மை குற்றவாளிகளைக் கைது செய்ய ஆவண செய்தனர்!
மோடியா? லேடியா?
குறிப்பாகச் சொல்வதாக இருந்தால் இதுபோன்ற காவி அமைப்புத் தலைவர்களின் படுகொலை குறித்தும் அந்த கொலைக்கான பின்னணி காரணங்கள் குறித்தும் டிஜிபி மூலமாக தனி அறிக்கை வெளியிட்டு முஸ்லிம் சமுதாயத்தை பழிச்சொல்லில் இருந்து பாதுகாத்து, அரணாக விளங்கிய ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை முஸ்லிம் சமுதாயம் என்றும் மறக்காது.
சிறுபான்மையினர் நசுக்கப்படவில்லை; படுக்கையறை வரை வந்து நள்ளிரவுக் கைது செய்யும் காவல்துறையின் அராஜகங்கள் இல்லை; காவிகள் கலியாட்டம் ஆட மேடை அமைத்துத் தர வாய்ப்பளிக்கவில்லை; மாறாக, மோடியா? லேடியா? எனக்கேட்டு மோடியின் மோடி வித்தைகளை விரட்டியடித்த நெஞ்சுறுதியையும், அதன் மூலம் சிறுபான்மை சமுதாய மக்கள் அடைந்த பலனையும் இந்த தருணத்தில் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
ஒரு நடிகையாக, ஒரு அரசியல்வாதியாக அவரது செயல்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு முஸ்லிம் சமுதாயத்தின் பார்வையில் அவரது செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்தால், முஸ்லிம்களுக்குப் பெரிய நன்மைகளை ஜெயலலிதா செய்யாவிட்டாலும் பெரிய அளவுக்கு கருணாநிதி போல் அநியாயம் செய்யவில்லை; நேர்மையாக நடந்துக் கொண்டார் என்பதே சிறுபான்மை முஸ்லிம்களால் பெரிய நன்மையாக நினைத்துப் பார்க்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
மனித நாகரீகமும், அரசியல் நாகரீகமும் தொடர வேண்டும்! 1987 ஆம் ஆண்டு எம். ஜி. ஆர் இறந்தபோது தமிழகத்தின் நிலை தலைகீழ்! திமுகவினரின் அலுவலகங்கள் அதிமுகவினரால் சூறையாடப்பட்டன. மறைந்த அன்றைய முதல்வர் எம். ஜி. ஆரின் உடலுக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்த எம். ஜி. ஆரின் 40 ஆண்டுகால நண்பர் கருணாநிதி, நாட்டிற்கு எம். ஜி. ஆர் மறைவை அறிவிக்கும் முன்பே யாருக்கும் தெரியாமல் சென்று அஞ்சலி செலுத்தி வந்தார் என்பது நடந்த நிகழ்வு. காரணம்.. அ. தி. மு. க தொண்டர்களால் அவருக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று காரணம் சொல்லப்பட்டது.
அதை நிரூபிக்கும் வகையில் அன்று சென்னையில் இருந்த கருணாநிதி சிலையும் சிதைக்கப்பட்டது. தி. மு. க. வினரும், தி. மு. க. வினரின் சொத்துக்களும் தாக்கப்பட்டன. ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ்; ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த எதிர்க்கட்சியான தி. மு. க. வைச் சேர்ந்த ஸ்டாலினும், கனிமொழியும், மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான தே. மு. தி. க. தலைவர் விஜய்காந்தும் பொதுவெளியில் மக்களுடன் மக்களாக வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர்.
ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்ப்பு வந்தபோது தர்மபுரியில் கல்லூரி மாணவிகள் இதே அ.தி.மு.க.வினரால் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர். அந்த நிலையெல்லாம் தற்போது மாற்றம் கண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில அசம்பாவிதங்களைத் தவிர, அ.தி.மு.க.வினர் அமைதியான முறையில் ஜெயலலிதாவின் மறைவை எதிர்கொண்டு வருவது உண்மையிலேயே வரவேற்கத்தக்க நிகழ்வு..!
அரசியல் நிகழ்வுகளில் கடுமையாக அதிமுகவும், திமுகவும் எதிர்த்துக் கொண்டாலும், இன்று மனித நாகரீகத்துடன் அவர்கள் நடந்துக்கொண்டதும், அதை அ.தி.மு.க.வினரும் எந்த சிறு சலனமும் இல்லாமல் அங்கீகரித்ததும், மக்களிடையும் அரசியல் நாகரீகம் வளர்ந்துள்ளதை பறைசாற்றுகின்றன!
தமிழக மக்கள் பன்பட்ட மக்கள்; அவர்கள் இன்னும் பண்பட்டுள்ளார்கள் என்பதை மேற்கண்ட நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
மஹாராஷ்ட்ராவில் பால்தாக்ரே என்ற ஒரு காவி வெறியன் மரணித்தபோது வேற்று மாநில, வேற்று மொழி பேசக்கூடிய இந்து மக்களும் கூட காவி வெறியர்களால் தாக்கப்பட்டனர்; மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களையும் கூட இந்த காவிக்கூட்டம் அடித்து நொறுக்கியது. அதைக் கண்டித்து ஃபேஸ்புக்கில் எழுதிய ஒரு பெண்மணியையும், அதற்கு லைக் போட்ட பெண்ணையும் கூட காவிகள் வீடு புகுந்து தாக்கும் அளவிற்கு வெறியாட்டம் ஆடினர். அந்தக் கொடூர நிகழ்வுகளையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது, அந்த நிகழ்வோடு தற்போது ஜெயலலிதாவின் மறைவின்போது தமிழக மக்களும், அதிமுகவினரும் நடந்துக் கொண்ட முறைகளும் தமிழகம் என்றும் அமைதி பூங்காவாகத் திகழும் என்பது குறித்து கட்டியம் கூறக்கூடியதாக அமைந்துள்ளன..!!
எந்தத் தலைவருடைய இழப்பு ஏற்பட்டாலும் சரி; இனி எந்த இழப்பு ஏற்பட்டாலும் சரி; இதுபோன்ற மனித நாகரீக நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பும்.
நன்றி: உணர்வு வார இதழ் &
தவ்ஹீத் ஜமாஅத்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!