அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday, 5 August 2017

அல்குர்ஆன் 2:102 - வது வசனம் ஓர் பார்வை


வ்ஹீத்வாதிகள் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வோரிடையே தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் ஏனைய ஜமாஅத்திற்குமிடையில் சூனியம் என்ற ஒன்று, மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தும் பங்கை வகிக்கிறது.

'சூனியம் என்ற ஒன்று இருக்கிறது; அது  இருப்பதால்தான் அல்லாஹ் சூனியம் பற்றி  சொல்லிக்காட்டுகிறான்; ஆகவே சூனியம் இல்லை என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்வது அல்லாஹ் அங்கீகரித்த ஒன்றை மறுப்பதாகும்; சூனியக்காரன் வைத்த சூனியம் அல்லாஹ் நாடாமல் பலிக்காது; ஆனால் அல்லாஹ் நாடினால் பலிக்கும்' என்பது அவர்களின் வாதம்.

'சூனியம் என்பது இருக்கிறது; ஆனால் சூனியம் என்பதற்கு நீங்கள் வைக்கும் விளக்கமும் அதன் மீதுள்ள உங்கள் நம்பிக்கையும் தவறு; அதை செயல்படுத்த அல்லாஹ் நாடமாட்டான்; அல்லாஹ் நாடுவான் என்று நீங்கள் சொல்வது தவறு' என்று இஸ்லாமிய அடிப்படைகளின் மூலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுதிபட சொல்கிறது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தாயத்தை தொங்கவிடுகின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்துவிட்டார்.

அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர்(ரலி)
நூல்: அஹ்மத்(16781)

'தாயத்து அணிவது இணைவைத்தல்' என்று ஏன் இங்கு சொல்லப்படுகிறது என்றால், தாயத்திற்கு சக்தி இருப்பதாக எண்ணுவதாலேயே! அதேபோல் சூனியத்திற்கு சக்தி உண்டு என்று நம்புவதே இணைவைத்தல் ஆகிவிடுகிறது. 'அல்லாஹ் நாடினால் அதற்கு சக்தி கிடைக்கலாம்' என்றுதானே சொல்கிறோம் என்பது அறிவற்ற வாதம். தனக்கு மட்டுமே உரித்தான சக்தியை அல்லாஹ் தன் படைப்பினங்களின் செயல்களுக்கு கொடுப்பான் என்று நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையின் தாத்பரியத்தை முறையாக விளங்காததின் விளைவேயாகும்!

சூனியம் செய்வது இணைவைத்தல்தான் என்பதை ஏற்கும் எதிர்தரப்பினர், அல்லாஹ் நாடினால் சூனியம் செய்வதன் மூலம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும், அவர்கள் திட்டமிட்ட பாதிப்புகள் நடக்கும் என்பதற்கு அல்பகரா அத்தியாயத்தின் 102 - ஆவது வசனத்தை ஆதாரமாக காட்டுகிறார்கள்.

அந்த வசனம் சொல்வது என்ன என்பதை முதலில் பார்த்து விடுவோம்.

وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَى مُلْكِ سُلَيْمَانَ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنْزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنْفُسَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. மேலும் (ஜிப்ரீல், மீக்காயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை. பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே (ஏக இறைவனை) மறுத்தனர். "நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவனை) மறுத்து விடாதே!" என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. எனவே எதன் மூலம் கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவார்களோ அதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. மேலும் அவர்கள் தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். "இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை" என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா? (அல்குர்ஆன் 2:102)

இது அறிஞர் பிஜெ அவர்களின் மொழி பெயர்ப்பு.

அரபி இலக்கணத்தில் "மா" (مَا) என்பதை பல வகைகளில் பயன்படுத்தப்படும். இந்த வசனத்தைப் பொறுத்தவரை இரண்டுவிதமான "மா"வைப் பற்றி பார்த்தாலே போதுமானதாக இருக்கும்.

"மா" என்ற எழுத்து (நாஃபிய்யா) எதிர்மறையைக் குறிக்கக்கூடிய வார்த்தையாகவும் பொருள் கொள்ள முடியும், (மௌசூல்) லாக வார்த்தைகளை இணைக்கும் இணைப்புச் சொல்லாகவும் பொருள் கொள்ள முடியும். அந்த வாசகத்தின் முன்பின் உள்ள  வார்த்தைகளை வைத்தே இடத்திற்கு தகுந்தாற்போல் பொருள் கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு (وَمَا کَفَرَ سُلَيْمٰنُ) "வமா கஃபர சுலைமான்" என்பதை சுலைமான் நிராகரிக்கவில்லை என்று எதிர்மறை வினையாகவும் பொருள் கொள்ளலாம். அதேநேரம் சுலைமான் நிராகரித்தாரே அது என்று உடன்பாட்டு வினையில் இணைக்கப்பட்ட (மவ்சூல் என்ற) வார்த்தையை வைத்தும் பொருள் கொள்ள முடியும். ஆனால் இடத்திற்கு தகுந்தாற்போல்தான் இலக்கணத்தைப் பயன்படுத்தவேண்டும் என்பதால் அனைத்து அறிஞர்களும் எதிர்மறையாக (நாஃபிய்யாவாக)தான் பொருள் கொள்வார்கள்; அப்படிதான் பொருள் கொள்ளவேண்டும். இல்லையேல் சுலைமான்  நபி நிராகரித்தார்கள்  என்ற விபரீதமான பொருள் வந்துவிடும்.

ஆனால் அப்படி பொருள்கொள்ள முடியாதபடி அதனோடு சேர்ந்த அடுத்த வாசகமான (وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا) "வலாகின்னஷ் ஷயாத்தீன கஃபரூ" என்பது, 'ஷைத்தான்களே (ஏக இறைவனை) மறுத்தனர்' என்று கூறுவதன் மூலம் சுலைமான் நிராகரிக்கவில்லை என்ற எதிர்மறை வினையை மட்டுமே அங்கே தெளிவாக உறுதிபடுத்துகிறது.

அதேசமயம் நாம் ஏற்கனவே சொன்னதுபோல் இருவேறு பொருள் கொள்ள இடமளிக்கும் வாசகமான,

(وَمَآ اُنْزِلَ عَلَى الْمَلَـکَيْنِ) "வமா உன்ஸில அலல் மலக்கைனி" என்பதை அறிஞர் பிஜெ  அவர்கள் மேலும் (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை என்று எதிர்மறையாக (மன்ஃபியின்) பொருள் கொடுத்துள்ளார்கள். அறிஞர் பிஜெவைத்  தவிர ஏனையவர்கள் அதை மவ்சூலாக, பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்) என்று தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதாவது, 'எந்த ஒன்று மலக்குமார்களுக்கு இறங்கியதோ அந்த ஒன்றை' என்று பொருள் வைத்துள்ளனர். இலக்கண விதிப்படி இப்படியும் பொருள் வைக்கலாம் என்றாலும், இந்த  பொருள் சரியானதா என்பதை இடத்தைப் பொருத்து பொருள் வைத்து அங்கே அவர்கள் செய்த தமிழாக்கம் சரியானதா என்பதை உரசிப் பார்த்து சரிகாண கடமைப்பட்டுள்ளோம்.

இப்போது அறிஞர் பிஜெவைத் தவிர  மற்றவர்களின் மொழி பெயர்ப்புகளை நாம் பார்ப்போம்:-

அப்துல் ஹமீது பாக்கவியின் மொழி  பெயர்ப்பு:

மேலும், (அந்த யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியைப் பற்றி (அவர்களுக்கு) ஷைத்தான் ஓதிக் (கற்றுக்) கொடுத்திருந்த (சூனியம், மாய மந்திரம் ஆகிய)வைகளைப் பின்பற்றினார்கள். ஆனால் ஸுலைமானோ "நிராகரிப்பவராக" இருக்கவில்லை; அந்த ஷைத்தான்கள்தான் உண்மையாகவே நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மனிதர்களுக்கு சூனியத்தையும் "பாபிலூன்" (என்னும் ஊரில்) "ஹாரூத்" "மாரூத்" என்னும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்தவற்றையும் கற்றுக்கொடுத்து வந்தார்கள். அவ்விரு மலக்குகளோ (அவர்களிடம் சூனியத்தைக் கற்கச்சென்ற மனிதர்களை நோக்கி) "நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்றால் நீங்கள் நிராகரிப்பவர்களாகி விடுவீர்கள். ஆதலால் இதைக்கற்று) நீங்கள் நிராகரிப்பவர்களாகிவிட வேண்டாம் என்று கூறும்வரையில் அவர்கள் அதனை ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதேயில்லை, (இவ்விதம் கூறிய பின்னும் இதைக் கற்க விரும்பியவர்கள்) கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவினை உண்டுபண்ணக்கூடிய வழியை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் கட்டளையின்றி அதன்மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைத்திட முடியாது. அன்றி, அவர்களுக்கு யாதொரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக் கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். தவிர, (இறை நம்பிக்கைக்குப் பதிலாக) அ(ச் சூனியத்)தை எவன் விலைக்கு வாங்கிக் கொண்டானோ அவனுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதைத் தெளிவாக சந்தேகமற அவர்களும் அறிந்திருக்கிறார்கள். அன்றி, தங்களையே விற்று அவர்கள் எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!  (அல்குர்ஆன் 2:102)

ஜான் ட்ரஸ்ட் மொழி  பெயர்ப்பு:

அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 2:102)

இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT) மொழி  பெயர்ப்பு:

(இதற்குப் பதிலாக) ஸுலைமானுடைய ஆட்சியின்போது ஷைத்தான்கள் எடுத்தோதி வந்த (சூனியத்)தை அவர்கள் பின்பற்றலானார்கள். ஆனால் ஸுலைமான் (ஒருபோதும்) நிராகரிக்கவில்லை. ஆயினும் மக்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த ஷைத்தான்கள்தாம் நிராகரித்தார்கள். மேலும், பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களுக்கும் இறக்கி வைக்கப்பட்டதையும் அவர்கள் பின்பற்றினார்கள். (ஆனால்) எவருக்கேனும் சூனியக்கலையைக் கற்றுக்கொடுக்க நேரும்போது அந்த வானவர்கள், “நாங்கள் உங்களுக்கு ஒரு சோதனையாகவே இருக்கிறோம்; ஆகவே, நீங்கள் (இதனைக் கொண்டு) இறை நிராகரிப்பை மேற்கொள்ள வேண்டாம்” என எச்சரித்துவிடுவார்கள். ஆனால் இதற்குப் பிறகும், கணவனுக்கும் மனைவிக்குமிடையே பிளவை உருவாக்குகின்ற சூனியத்தை அவ்விருவரிடம் இருந்து அவர்கள் கற்று வந்தனர். அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் இந்த சூனியத்தைக் கொண்டு எவருக்கும் (எந்த வகையிலும்) அவர்களால் தீங்கிழைக்க முடியாது. உண்மையில் தங்களுக்குப் பலனளிக்காததும், தீங்கிழைக்கக் கூடியதுமானதையே அவர்கள் கற்றனர். மேலும் (சூனியத்தைக் கற்று) அதனை விலைக்கு வாங்கிக் கொண்டவனுக்கு மறுமையில் யாதொரு பங்கும் கிடையாது என்பதை அவர்கள் நன்கு அறிந்தேயிருந்தனர். தங்கள் உயிர்களை விற்று அவர்கள் வாங்கிக் கொண்ட பொருள் எத்துணைக் கெட்டது! இதனை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா? (அல்குர்ஆன் 2:102)

இக்பால் மதனியின் மொழி  பெயர்ப்பு:

மேலும், அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்காலத்தில் ஷைத்தான்கள் (பொய்யாக) ஓதியவற்றைப் பின்பற்றினார்கள். இன்னும் ஸுலைமான், (சூனியம் செய்து அல்லாஹ்வை) நிராகரிக்கவில்லை; எனினும் ஷைத்தான்கள் நிராகரித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் சூனியத்தையும், பாபிலோ(ன் நகரி)னில் ஹாரூத், மாரூத் என்னும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்த(தாகக் கூறி, பல)வற்றையும் மனிதர்களுக்குக் கற்றுக்கொடுத்து வந்தார்கள். மேலும், அவ்விருவரும் "நாங்கள் சோதனையாக இருக்கிறோம். ஆதலால் (இதைக் கற்று) நீ காபிராகி விடவேண்டாம்" என்று கூறும்வரை, அவர்கள் (அதனை) ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை, ஆகவே கணவனுக்கும், மனைவிக்குமிடையில் எதைக்கொண்டு பிரிப்பார்களோ அதை அவ்விருவரிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். மேலும், அல்லாஹ்வின் கட்டளையின்றி, அதைக்கொண்டு அவர்கள், ஒருவருக்குமே தீங்கிழைக்கக் கூடியவர்களாக இல்லை. அன்றியும், அவர்களுக்கு இடரளிப்பதும், அவர்களுக்கு பயனளிக்காததுமானதை அவர்கள் கற்றுக் கொள்கிறர்கள். இன்னும், அ(ச் சூனியத்)தை எவர் விலைக்கு வாங்கிக்கொண்டாரோ அவருக்கு, மறுமையில் எந்த பாக்கியமுமில்லை என்பதைத் திட்டமாக அவர்கள் அறிந்திருக்கின்றனர். மேலும், அவர்கள் அறிந்து கொள்ளக்கூடியவர்களானால் எதற்குப்பகரமாக தங்களையே அவர்கள் விற்று விட்டார்களோ அது மிகக்கெட்டது  (அல்குர்ஆன் 2:102)

இங்குள்ள நான்கு மொழிபெயர்ப்புகளையும் கொஞ்சம் ஆய்வு செய்வோம்:

அவற்றில் சொல்லப்படும் விஷயங்கள்,

1) ஷைத்தான்கள்தான் சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள்.

2) சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷைத்தான்கள், ஹாரூத் மாரூத் என்ற  இரண்டு மலக்குமார்களுக்கு இறங்கியதையும் கற்றுக் கொடுத்தார்கள். (அதாவது ஹாரூத் மாரூத் சூனியத்தைக்  கற்றுக் கொடுக்கவில்லை, சூனிய பந்து ஷைத்தான்களின் கைகளில்தான்  இருக்கிறது.)

3) மேலும், அவ்விருவரும் "நாங்கள் சோதனையாக இருக்கிறோம். ஆதலால் (இதைக் கற்று) நீ காஃபிராகி விடவேண்டாம்" என்று கூறும்வரை, அவர்கள் (அதனை) ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. (அதாவது ஷைத்தான்கள் கையில் இருந்த சூனிய பந்து எப்போது மலக்குமார்களின் கைகளில் வந்தது என்பது அவர்களுக்கே விளங்கவில்லை. சூனியத்தைக் கற்றுக் கொடுத்தது ஷைத்தான்களா மலக்குகளா என்பதை தெளிவில்லாமல் குழப்பியுள்ளனர்.)

4) "ஆகவே கணவனுக்கும், மனைவிக்குமிடையில் எதைக் கொண்டு பிரிப்பார்களோ அதை அவ்விருவரிடமிருந்து கற்றுக் கொள்வார்கள்" என்று இக்பால் மதனியும்,

"ஆதலால் இதைக்கற்று நீங்கள் நிராகரிப்பவர்களாகிவிட வேண்டாம் என்று கூறும்வரையில் அவர்கள் அதனை ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதேயில்லை, (இவ்விதம் கூறிய பின்னும் இதைக் கற்க விரும்பியவர்கள்) கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவினை உண்டுபண்ணக் கூடிய வழியை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள் என்று அப்துல் ஹமீது  பாக்கவியும் மற்றவர்களும் மொழிபெயர்த்துள்ளனர்.

(அந்த ஆயத்தில், "எதன் மூலம் கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவார்களோ" என்று பொருள் கொடுத்துள்ள அறிஞர் பிஜேவின் மொழிபெயர்ப்பைப் பார்த்து  'எதன்மூலம் என்ற வார்த்தை அந்த வசனத்தில் எங்கே உள்ளது?' என்று கேட்டு வானுக்கும் பூமிக்கும் குதித்த (தங்களை ஸலஃபிகள் என்று சொல்லிக் கொள்ப)வர்கள், தங்களைச் சார்ந்த ஸலஃபியான இக்பால் மதனியின் மொழிபெயர்ப்பு  பற்றி வாய் மூடி மவுனம் சாதிப்பதை எண்ணி வியக்கிறோம்...!)

அந்த நான்கு மொழிபெயர்ப்புகளிலிருந்து மேலே சொல்லப்பட்டவற்றில்,

- 'சூனியம்' - முதல் விஷயம்
- 'மலக்குமார்களுக்கு இறங்கியது' - இரண்டாவது விஷயம்
- 'கணவன் மனைவியைப் பிரிப்பது' - மூன்றாவது விஷயம்

ஆக, இவர்களின் மொழிபெயர்ப்புகளில் மூன்று விஷயங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அறிஞர் பிஜெவின் மொழிபெயர்ப்பில், சூனியம் என்ற ஒரு விஷயமும் கணவன் மனைவியைப் பிரிக்கும் கலை என்ற இரண்டாவது விஷயமும் மட்டுமே சொல்லப்படுகிறது.

"அதன்மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்யமுடியாது" என்பதில், அதன்மூலம் என்பது இலக்கண விதிப்படி கடைசியாக சொல்லப்பட்ட கணவன் மனைவியைப் பிரிக்கும் கலையின் மூலம் என்றே பொருள் கொள்ள முடியும். இந்த இலக்கண விதியை அறிஞர் பிஜெ அவர்களின் மொழிபெயர்ப்பைத் தவிர மற்ற நான்கு மொழிபெயர்ப்புகளிலும் கவனிக்கத் தவறியிருக்கின்றனர்.

ஆக, மேலே பார்த்த  மொழிபெயர்ப்புகளில் அறிஞர் பிஜெவின் மொழிபெயர்ப்புக்கு மாற்றமாக பொருள் கொள்ளப்பட்டதுதான் சரி என்று எண்ணுவோர் இந்த வசனத்தை முரண்பாடின்றி விளக்க முடிந்தால் முன்வாருங்கள். வருவீர்களா..?

யாரெல்லாம் ஹாரூத், மாரூத்தை மலக்குகள் என்று சொல்கிறார்களோ அவர்கள் அனைவரும் இந்த வசனத்தின் மொழிபெயர்ப்புகளில் ஷைத்தான்கள் என்று சொன்னது ஏன் என்ற கேள்விக்கு விளக்கம் சொல்லியாக வேண்டும். சொல்வீர்களா...?

எதையும் வெட்டாமல் ஒட்டாமல் அர்த்தம் வைக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டே, அதன்மூலம் என்பதை அதற்கு அருகில் சொல்லப்பட்ட கணவன் மனைவியைப் பிரிக்கும் கலையை விட்டுவிட்டு, அதற்குமேல் உள்ள மலக்குமார்களுக்கு இறங்கியதாக சொல்லும் கலையையும் விட்டுவிட்டு, அதற்கும் முன் சொல்லப்பட்ட சூனியத்தை இழுப்பது ஏனோ..??

சூனியத்தைப் பற்றி திருக்குர்ஆனில் பல இடங்களில் சொல்லக்கூடிய அல்லாஹ்தஆலாவின் வசனங்களை கண்டுகொள்ளாமல்,

சூனியம் என்பது  பொய்சூனியம் என்பது வெறும் சூழ்ச்சி என்று அல்லாஹ்வே சொன்னாலும், இல்லை இல்லை.. இந்த அல்பகரா அத்தியாயத்தின் 102 - ஆவது வசனம் பற்றி மட்டுமே பேசுவோம் என்ற எதிர்கொள்கை உடையவர்கள் அதில் அவர்கள் செய்துள்ள குளறுடிகளை, அதாவது அவர்களின் மொழிபெயர்ப்பில் உள்ள குழப்பங்களை ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்க முயற்சித்தால் ஒருவேளை அவர்களுக்கு (அல்லாஹ் நாடினால்) தெளிவு கிடைக்கலாம்!

எனவே அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உங்களின் மனோ இச்சையை பின்பற்றாமல், குர்ஆனில் உள்ளதை உள்ளபடி வார்த்தைக்கு வார்த்தை பொருத்தமான பொருள் செய்துப் பாருங்கள்! தெளிவு கிடைக்கும் இன்ஷாஅல்லாஹ்!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை