அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, 13 October 2017

ஹஜ் மானியத்தை நிறுத்துவது சரியா?

ஹஜ் மானியத்தை பத்து வருடத்துக்குள் நிறுத்தவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது சரியா?

பதில்:

இந்தியாவை ஆள்பவர்களுக்கும், நீதி வழங்குவோருக்கும், ஊடகங்களுக்கும் பொது அறிவு இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

அறைகுறையாகவும், மேலோட்டமாகவும் எதையாவது உளறுவதுதான் அறிவு என்று ஆகிவிட்டது. இந்தியா மதச்சார்பற்ற நாடு. எனவே ஒரு மதத்தினரின் புனிதப் பயணத்துக்கு மானியம் வழங்குவது மதச் சார்பின்மைக்கு எதிரானது என்பதுதான் பிரச்சனையாக்கப்படுகிறது.


வசதி படைத்தவர்கள்தான் ஹஜ் பயணம் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த மானியம் எல்லாம் தேவை இல்லை என்பதும் கூடுதலாக முன் வைக்கப்படுகிறது.

ஆனால் உண்மை என்ன தெரியுமா? ஹாஜிகளுக்காக மத்திய மாநில அரசுகள் ஒரு நயா பைசாவும் நமக்குத் தருவதில்லை. மாறாக ஹஜ் பயணம் மேற்கொள்வோர் மூலம் கோடிகோடியாக இந்த அரசாங்கம் கொள்ளை அடிக்கிறது என்பதுதான் உண்மை.

இவர்கள் மானியம் என்று எதைச் சொல்கிறார்கள் என்பதை முதலில் அறிந்துக்கொள்ள வேண்டும். நாம் ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்வது என்றால் முதல் வகுப்பில் செல்ல ஒரு லட்சத்து முப்பதாயிரம் பணத்தை மத்திய அரசுக்கு வழங்கவேண்டும். இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வது என்றால் ஒரு லட்சத்தி இருபதாயிரம் ரூபாய்கள் செலுத்தவேண்டும்.
மூன்றாம் வகுப்பில் பயணம் செல்வது என்றால் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்கள் செலுத்தவேண்டும்.

இந்தப் பணம் எதற்காக செலுத்த வேண்டும்?

சாதாரண வகுப்பில் விமான டிக்கெட், பதினைந்து நாட்கள் சவூதியில் ஆகும் உணவுச் செலவு, சவூதியில் தங்கும் அறைகள் ஆகிய ஏற்பாடுகளுக்காகத்தான் இந்த தொகை வசூலிக்கப்படுகிறது.

இந்த ஒரு லட்சத்தி முப்பதாயிரத்தில் விமானக் கட்டணம் குறைந்தது 25 ஆயிரம் ரூபாய்கள். அதிக பட்சம் (சீசன் நேரத்தில்) 40 ஆயிரம் ஆகும்.

சவூதியில் இறங்கியவுடன் நம்முடைய உணவுக்காக 20 ஆயிரத்தை தருவார்கள். அதுதான் மானியமாம். ஒரு அறைக்கு ஆறு பேர் என்று அடைப்பதால் தங்கும் விடுதிக் கட்டணம் பத்தாயிரத்தை தாண்டாது. அதுவும் ஆற்காடு நவாப் மூலம் இந்தியர்கள் தங்குவதற்காக இந்தியாவுக்கான தங்கும் விடுதிகளும் உள்ளன.

மொத்தமாகக் கூட்டிப் பார்த்தால், விமானக் கட்டணம் 40 ஆயிரம், உணவுக்காக கையில் இருபதாயிரம், தங்கும் விடுதிக்காக பத்தாயிரம் ஆக மொத்தம் 70 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது. மீதம் உள்ள 60 ஆயிரம் ரூபாய் ஹாஜிகளிடம் இருந்து கொள்ளை அடிக்கப்படுகிறது. 70 ஆயிரம் செலவாகும் ஒரு புனிதப் பயணத்திற்கு மேலும், அறுபதாயிரம் ரூபாய்கள் கூடுதலாக கொள்ளை அடித்துவிட்டு மானியம் தருவதாக சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

ஒவ்வொரு ஹாஜிகள் மூலமும் போலி மானியத்தைக் கழித்த பின்னர் அறுபதாயிரம் ரூபாய்கள் சுரண்டிவிட்டு மானியம் கொடுப்பதாக பிரச்சாரம் செய்வதை எப்படி சகித்துக்கொள்ள முடியும்?

குருட்டுப் பிச்சைக்காரனின் பாத்திரத்தில் கிடக்கும் பத்து ரூபாயை லவட்டிவிட்டு ஒரு ரூபாய் தர்மம் செய்வதற்கும் மத்திய அரசின் போலி மானியத்துக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. முஸ்லிம்கள் புனிதப் பயணம் செல்ல வேண்டுமானால் அறுபதாயிரம் ரூபாய் கப்பம் செலுத்த வேண்டும் என்று நேரடியாகவே சொல்லிவிடலாம்.

மற்றவர்கள் புனிதப்பயணம் மேற்கொண்டால் எந்த வரியும் செலுத்த தேவை இல்லை. முஸ்லிம்கள் புனிதப் பயணம் மேற்கொண்டால் வரிசெலுத்த வேண்டும் என்பதுதான் யதார்த்தம்.

ஹஜ்ஜுக்கு செல்வதற்கு அனுமதியும், பயண ஏற்பாடும் மட்டும் செய்து தந்துவிட்டு அரசாங்கம் ஒதுங்கிக் கொண்டால் 40+20+10=70 ஆயிரம் ரூபாயில் முஸ்லிம்கள் ஹஜ் செய்வார்கள். மானியம் என்ற பழியையும் சுமக்கும் இழிநிலை ஏற்படாது.

மத்திய அரசே ஒவ்வொரு ஹஜ் பயணியிடமும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிப்பதை உடனே நிறுத்து என்று சுவரொட்டி மூலம் அம்பலப்படுத்தினால்தான் ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்கப்படவில்லை என்பதை இந்து மக்களும் அறிந்துக் கொள்வார்கள்.

மத்திய அரசாங்கம்தான் முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காக மானிய நாடகம் நடத்துகிறது என்றால் நீதிபதிகளுக்குமா மூளை வரண்டுவிட்டது? எப்படி மானியம் வழங்கப்படுகிறது என்று விசாரித்து இருந்தால் மானியம் எதுவும் வழங்கப்படவில்லை என்பதை அறிந்துக் கொள்ள முடியுமே?

உணர்வு வார இதழ் 16:38

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை