அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Wednesday, 28 May 2025

CREDIT CARD (கடன் அட்டை) பயன்படுத்துவது கூடுமா?

தற்போது CREDIT CARD ("க்ரெடிட் கார்டு") எனும் கடன் அட்டை பயன்பாடு மக்களிடம் அதிகரித்து வருகின்றது. வங்கிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இந்த கார்டை வைத்து நமக்குத் தேவையான பொருட்களை கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். கடைக்காரர்கள் வங்கியில் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். கடன் அட்டையை பயன்படுத்தியவர் 45 நாட்கள் (அல்லது குறிப்பிட்ட நாட்கள்) முடிவதற்குள் வங்கியில் பணத்தைச் செலுத்தினால் அதற்கு வட்டி இல்லாமல், நாம் கடனாகப் பெற்று செலவழித்த தொகையை மட்டும் செலுத்தலாம். குறிப்பிட்ட நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் அந்தத் தொகைக்கான வட்டியுடன் திரும்ப செலுத்தவேண்டும்.

 

 
 

குறிப்பிட்ட நாட்களுக்குள் கடனைச் செலுத்திவிடும்போது அதற்கு வட்டி செலுத்தும் நிலை வராது என்பதால் இது குற்றமாகாது; வட்டி வாங்கிய குற்றமும் சேராது. ஆனால், குறிப்பிட்ட நாட்களுக்குள் நாம் செலுத்தத் தவறினால் வட்டி கட்டும் குற்றத்தைச் செய்யவேண்டிய நிலை ஏற்படும். அப்போது நாம் குற்றவாளியாக ஆகும் நிலை ஏற்படலாம்.

அதனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் நாம் வட்டி இல்லாமல் அசலைச் செலுத்தினால் குற்றம் வராது என்றாலும், குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்தக் கடனைச் செலுத்த இயலாமலும் போகலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், கடனாகக் கிடைக்கிறது என்பதற்காக சக்திக்கு மீறி கடன் அட்டை மூலம் கடன் வாங்கிவிட்டு, அதைக் கட்ட முடியாமல் திணறக்கூடிய மக்களை நாம் அதிகளவில் பார்க்கிறோம்.


அன்றாடம் உழைத்து வாழக் கூடியவர்களும், அதிகமான கையிருப்பு இல்லாதவர்களும் கடன் அட்டை வாங்கினால், அதன்மூலம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி செலவு பண்ணிவிட்டு, வங்கி கெடு விதித்த குறிப்பிட்ட நாட்களுக்குள் அதைத் திருப்பி செலுத்த இயலாமல் அவர்கள் வட்டி செலுத்தும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இவர்கள் (Credit Card) கடன் அட்டையைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் பாதுகாப்பானது.

ஏழைகளும், நடுத்தர மக்களும் இதை உணர்ந்து தனக்குத்தானே சிரமத்தில் தள்ளி சக்திக்கு மீறிய பொருட்களை வாங்கத் தூண்டும் கடன் அட்டையில் இருந்து தங்களைக் காத்துக் கொள்வதுதான் இம்மைக்கும், மறுமைக்கும் நல்லது.

அடுத்து, "குறிப்பிட்ட காலத்துக்குள் கடனைச் செலுத்தாவிட்டால் அதற்கான வட்டியைச் செலுத்துவேன்" என்று ஒப்புக்கொண்டு விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்திட்டால்தான் க்ரெடிட் கார்டு தரப்படும். நாம் குறிப்பிட்ட காலத்துக்குள் கடனைச் செலுத்தி வட்டியிலிருந்து மிகவும் கவனமுடன் தவிர்ந்துக் கொள்பவர்களாக இருந்தாலும், "குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த க்ரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனைச் செலுத்தாவிட்டால் வட்டி செலுத்துவோம்" என்று ஒப்புக் கொண்டது தவறுதானே என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.

குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தி வட்டி கொடுக்காமல் நடந்துக் கொள்வேன் என்று நம்பிக்கை வைத்து, ஒருவேளை அப்படி செலுத்த முடியாவிட்டால் வட்டி செலுத்துவேன் என்று கூறுவது வட்டி வாங்கியதாகவோ, கொடுத்ததாகவோ, துணை நின்றதாகவோ ஆகாது. மேலும், ஒரு பேச்சுக்காக இதுபோன்ற சொற்களைப் பயன்படுத்துவது மார்க்கத்தில் குற்றமாக ஆகாது.

கிறிஸ்தவர்களுடன் விவாதம் செய்யும்போது, 'நீங்கள் பைபிளை இறைவேதம் என்று நிரூபித்துவிட்டால் அதை நாங்கள் வேதமாக ஏற்றுக்கொள்வோம்' என்று ஒப்பந்தம் செய்கிறோம். அவர்கள் பைபிளை இறைவேதம் என்று நிரூபிக்க முடியாது என்பதில் நாம் உறுதியாக இருப்பதால் வாயளவில் இதைக் கூறுகிறோம். பைபிளை ஏற்றுக் கொள்வதாக இதற்கு நாம் அர்த்தம் செய்யமாட்டோம்.

அதுபோல், 'தர்கா வழிபாட்டிற்கு ஆதாரத்தைக் காட்டினால் நாங்களும் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்' என்று கூறுவதோ, எழுதுவதோ தர்காவை ஆதரித்ததாக ஆகாது. அவர்களால் ஆதாரத்தைக் காட்டவே முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகவே நாம் இப்படி கூறுகிறோம்.

"ரஹ்மானுக்கு (அல்லாஹ்வுக்கு) பிள்ளை இருக்குமானால் முதலில் வணங்குபவனாக நான் இருப்பேன் என்று கூறுவீராக!" (திருக்குர்ஆன் 43:81)

என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வுக்குப் பிள்ளை இல்லவே இல்லை என்பதில் உறுதியாக நம்பிக்கை வைத்த நிலையில்தான் நபியை இப்படி அல்லாஹ் கூறச் சொல்கிறான்.

இதேபோல், இஸ்லாத்தில் வட்டி தடுக்கப்பட்டதை அறிந்து, வட்டி கொடுக்கமாட்டோம் என்று உறுதியாக நம்பிக்கை வைத்துள்ள நாம், 'குறிப்பிட்ட நாளில் கடனைச் செலுத்தத் தவறினால் வட்டி செலுத்துவேன்' என்று அந்த ஒப்பந்தத்தில் கூறுகிறோம். வட்டி செலுத்தும் நிலைக்குப் போகமாட்டோம் என்ற நம்பிக்கையுடன்தான் இப்படி கூறுகிறோம்; வட்டி செலுத்துவோம் என்பதற்காக கூறவில்லை.

எனவே இதைக் காரணமாகக் கொண்டு கடன் அட்டை கூடாது என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல. அதேசமயம், நாம் (Credit Card) கடன் அட்டைகளைப் பயன்படுத்தி வாங்கும் பொருட்களுக்குரிய பணத்தை, அதற்கான வட்டி கணக்கிடப்படும் தேதிக்கு முன்பே செலுத்திவிடுவோம் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

ஏனெனில், சில நேரம் நமது கையிருப்பிலுள்ள பணம் எதிர்பாராத காரணங்களால் குறைவாகிவிட்டாலோ அல்லது மறதி மற்றும் கவனக்குறைவாலோ குறிப்பிட்ட தேதிக்குள் பணம் செலுத்தாவிட்டால் வட்டியின் வலையில் விழுந்துவிடக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிகமான பணத்தை எடுத்துச் செல்ல சிரமமாக உள்ளது என்பதற்காக சிலரும், பிரயாணத்தில் பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இயலாது என்று நினைப்பவர்களும், தன்னிடம் பணம் கையிருப்பில் இருந்தும் பணப் புழக்கத்தை சுலபமாக்கிக் கொள்வதற்காக இந்த (CREDIT CARD என்ற) கடன் அட்டையைப் பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மட்டும்தான் குறித்த காலத்துக்குள் பணத்தைச் செலுத்தி வட்டி இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும். ஏனெனில், அவர்களிடம் பணத் தட்டுப்பாடு இருக்காது.

மற்றபடி ஆடம்பர தேவைகளுக்காக அல்லாமல், வட்டிக்குள் சென்றுவிடாமல் குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தைத் திருப்பிவிட முடியும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும், மேலே சொன்ன சில சூழ்நிலைகளுக்காக மிகுந்த கவனமுடன் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இத்துடன் மிக முக்கியமான இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்! நம்மில் யாருக்கு, எப்போது மரணம் வரும் என்று தெரியாது. நாட்களைக் கடத்தாமல் உடனே திருப்பி செலுத்திவிடும் நல்லெண்ணத்தோடு ஒருவர் கடன் அட்டையை பயன்படுத்தி இருந்தாலும், அந்த குறுகிய காலத்திற்குள் மரணம் வந்துவிடாது என்று யாராலும் சொல்ல இயலாது. 

ஒருவர் கடனாளியாக மரணிப்பதை இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கை செய்கிறது! 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"يُغْفَرُ لِلشَّهِيدِ كُلُّ ذَنْبٍ إِلاَّ الدَّيْنَ"

"அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த ஷஹீதுக்கு கடனைத் தவிர எல்லாப் பாவங்களும் மன்னிக்கப் பட்டுவிடுகின்றன" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (3498)

கடன் வாங்குவ‌ர்களுக்கு இந்த ஹதீஸ் ஓர் எச்சரிக்கையாகும்! ஷஹீதைவிட உயர்ந்த அந்தஸ்து கொண்டவர் யாரும் இருக்கமுடியாது. இத்தகைய பெரிய தகுதியைப் பெற்றவருக்கும் கடன் வாங்கி அதைத் திருப்பி செலுத்தும் முன் மரணித்த காரணத்தால் அல்லாஹ் பாவத்தை மன்னிக்கமாட்டான் என்று நபி ﷺ அவர்கள் கூறிவிட்டார்கள்.

எனவே, இவை எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு நன்கு சிந்தித்து, CREDIT CARD போன்றவற்றை இயன்றவரை தவிர்த்துக் கொள்வதே மிகச் சிறந்தது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை