இருமலோடு கூடிய சளிப் பிரச்சனைக்கு இந்த கை மருந்து மிக அருமையாக பலன் தரும்.
எவ்வளவு இருமினாலும் நெஞ்சில் கட்டிய சளி, சரிவர வெளியாகாமல் பசைப் போன்று நெஞ்சுக்குள் ஒட்டிக்கொண்டது போல ஒரு உணர்வு இருக்கும்.
இதனால் இருமும்போது மிகக் குறைந்த அளவிலேயே சளி வெளியாகும். அத்துடன் தொடர் இருமல் வந்துக் கொண்டே இருக்கும். எதிலும் கவனம் செலுத்த முடியாமல் பாடாய் படுத்தும்.
இந்த இருமலால் இரவில் தலைசாய்த்து தூங்குவது கூட சிரமமாக இருக்கும். கொஞ்ச நேரம் கண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாலும் இந்த இருமல் வந்தவுடன் தூக்கம் களைந்துவிடும் அளவுக்கு தொல்லைக் கொடுக்கும்.
இப்படி பல நாட்களாக தொடர்ந்து இருமுவதால் தொண்டை எரிச்சல் ஏற்படுவதோடு, தலைப்பகுதி மற்றும் கழுத்துப் பகுதியில் உள்ள நரம்புகள் எல்லாம் மிகவும் வலி கொடுக்கும்.
இது எல்லாவற்றிற்கும் அற்புதமான ஒரு மருந்துதான் இந்த கஷாயம்!
வீட்டில் யாருக்காவது இருமல் ஏற்பட்டு 2 நாட்களில் தானாகவே சரியாகவில்லை என்றால், இன்னும் நாட்களைத் தள்ளிக் கொண்டிருக்காமல் உடனே இதை செய்துக் கொடுங்கள்.
தேவையான பொருட்கள்:
வெற்றிலை - 1
கற்பூரவள்ளி இலை - 3 அல்லது 4
இஞ்சி - 1 இன்ச் அளவு
மிளகு - 10 எண்ணிக்கை
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
பனங்கற்கண்டு - 1 ஸ்பூன்
- வெற்றிலை மற்றும் கற்பூரவள்ளி இலையை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போடவும்.
- இஞ்சியை தோல் நீக்கி கழுவிய பிறகு நன்கு நசுக்கி அதனுடன் சேர்க்கவும்.
- மிளகை ஒன்றிரண்டாக இடித்து அதில் போடவும்.
- அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து, அதில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பை மீடியம் ஹீட்டில் வைத்து கொதிக்கவிடவும்.
- கஷாயம் 2 டம்ளர் அளவுக்கு பாதியாக வற்றியதும், அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து கரைத்து அடுப்பை அணைக்கவும்.
- குடிக்கும் பதத்தில் சற்று சூடு ஆறியதும் வடிகட்டி, அதிலிருந்து ½ டம்ளர் எடுத்து குடிக்கவும்.
இப்படி காலை, மதியம், மாலை, இரவு என ஒரு நாளைக்கு 4 முறை குடித்து வரவும்.
இந்த கஷாயத்தை ஓரிரு நாட்கள் மட்டும் குடித்துவிட்டு நிறுத்திவிடாமல், சளி முழுமையாக கரைந்து வெளியேறும்வரை தொடர்ந்து குடிக்கவும். சளி பாதிப்பின் வீரியத்தைப் பொருத்து, 4-5 நாட்கள் முதல் 1 வாரம் வரை குடிக்கலாம்.
நெஞ்சுக்குள் கட்டியிருக்கும் அத்தனை சளியும், அதன் பசைப் போன்ற தன்மை மாறி, லேசான இருமலோடு சுலபமாக வெளியாகிவிடும்.
இது மிக அற்புதமான சளி வெளியேற்ற உதவும் மருந்து! முயற்சித்துப் பாருங்கள். இறைவன் குணமளிப்பான்!
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!