அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Sunday, 1 June 2025

கார்ட்டூன் படங்கள் மற்றும் டி.வி. யில் தெரியும் உருவங்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன?

கேள்வி:

உருவப்படமும், நாயும் உள்ள வீட்டிற்கு மலக்குகள் வரமாட்டார்கள் என்று ஹதீஸ் உள்ளது. அதனடிப்படையில்.. டிவி பார்க்கும்போதும், கார்ட்டூன் படங்கள் ஓடும்போது வரக்கூடிய உருவங்களும் இதில் அடங்குமா?

பதில்:

உருவப்படங்களையும், உருவச் சிலைகளையும் பயன்படுத்துவதை இஸ்லாம் தடை செய்துள்ளது என்பது நம்மில் பெரும்பாலோர் அறிந்து வைத்துள்ள ஒன்று.

ஆனால் நவீனக் கருவிகளைப் பயன்படுத்தி தயார் செய்யப்படும் உருவப் படங்கள் பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பைப் பலரும் அறியாமல் உள்ளனர். இவற்றை சற்று விரிவாக நாம் ஆராய்ந்தாலே தெளிவு கிடைக்கும்.

حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا مَخْلَدٌ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، أَنَّ نَافِعًا، حَدَّثَهُ أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ حَدَّثَهُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ حَشَوْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم وِسَادَةً فِيهَا تَمَاثِيلُ كَأَنَّهَا نُمْرُقَةٌ، فَجَاءَ فَقَامَ بَيْنَ الْبَابَيْنِ وَجَعَلَ يَتَغَيَّرُ وَجْهُهُ، فَقُلْتُ مَا لَنَا يَا رَسُولَ اللَّهِ. قَالَ " مَا بَالُ هَذِهِ الْوِسَادَةِ ". قَالَتْ وِسَادَةٌ جَعَلْتُهَا لَكَ لِتَضْطَجِعَ عَلَيْهَا. قَالَ " أَمَا عَلِمْتِ أَنَّ الْمَلاَئِكَةَ لاَ تَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ، وَأَنَّ مَنْ صَنَعَ الصُّورَةَ يُعَذَّبُ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ أَحْيُوا مَا خَلَقْتُمْ ".

அன்னை ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள்:

"நபி(ஸல்) அவர்களுக்கு நான் ஒரு தலையணையை (ஈச்ச நாரை அடைத்துத்) தயாரித்தேன். அதில் உருவப் படங்கள் வரையப்பட்டிருந்தன. அது சிறிய மெத்தை போன்றிருந்தது.

நபி(ஸல்) அவர்கள் வந்ததும் (அதைப் பார்த்துவிட்டு) இரண்டு கதவுகளுக்கிடையே நின்றார்கள். அவர்களின் முகம் (கோபத்தால் நிறம்) மாறத் தொடங்கியது. நான், 'நாங்கள் என்ன (தவறு) செய்து விட்டோம்? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என்ன இந்தத் தலையணையில்?' என்று (கோபமாகக்) கேட்டார்கள்.

நான், 'இது, நீங்கள் (தலைவைத்துப்) படுத்துக் கொள்வதற்காக தங்களுக்கென நான் தயாரித்த தலையணை' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'உருவப் படம் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்பதும், உருவப் படத்தைச் செய்தவன் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவான் என்பதும் அப்போது அல்லாஹ் (உருவப் படத்தைச் செய்தவர்களை நோக்கி), 'நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்' என்று சொல்வான் என்பதும் உனக்குத் தெரியாதா?' என்று கேட்டார்கள்.

நூல்: புஹாரி (3224, 5957)

حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ سَمِعْتُ أَبَا طَلْحَةَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةُ تَمَاثِيلَ".

"எந்த வீட்டில் உருவச் சிலைகளும், நாய்களும் உள்ளனவோ அங்கே மலக்குகள் (வானவர்கள்) நுழைய மாட்டார்கள்" என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ தல்ஹா (ரலி)
நூல்: புஹாரி (
3225)


நீங்கள் குறிப்பிடும் செய்தி மேற்கண்ட ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளன. இந்தக் கருத்தில் இன்னும் சில ஹதீஸ்களும் உள்ளன.

"உருவச் சிலைகள்" என்று மொழிபெயர்க்கப்பட்ட இடங்களில், "தமாஸீல்" (تَمَاثِيلُ), "ஸுரத்" (صُورَة) ஆகிய சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சொற்கள் உருவச் சிலைகளையும், உருவப் படங்களையும் குறிக்கும் பொதுவான சொற்களாகும்.

தொலைக்காட்சி மற்றும் வீடியோக்களில் தோன்றும் உருவங்கள், மொபைல் போன்ற டிஜிட்டல் ஸ்க்ரீன்களில் தெரியும்  உருவங்கள், ஒளிப்படங்கள் எல்லாம் 'உருவப் படங்கள்' என்பதில் சேராது. உருவப் படங்கள் என்பதற்கும், தொலைக்காட்சி, வீடியோ, மொபைல் போன்றவற்றில் வரும் உருவங்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

ஒரு பொருளில் காணப்படுவது, பிரதிபலிப்பது எல்லாம் படங்கள் அல்ல. ஒன்றில் பதியப்படுவதும், நிலைத்திருப்பதுமே படங்கள்.

உதாரணமாக, நமது முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறோம். நமது உருவம் கண்ணாடியில் தெரிவதால் காண்ணாடியை யாரும் உருவப்படம் என்று சொல்வதில்லை. கண்ணாடியில் முகம் பார்த்தால் மலக்குகள் வருவதில்லை என்றும் கூறுவதில்லை.

கண்ணாடியில் தெரியும் உருவத்தை, "படம்" (Photo) என்று சொல்லாமலிருக்க என்ன காரணம் கூறுவோம்?

நாம் கண்ணாடியைப் பார்க்கும்போது நம் உருவம் கண்ணாடியில் பதியவும் இல்லை; அதில் நிலைத்திருக்கவும் இல்லை. நாம் முன்னால் நின்றால் அது நம்மைக் காட்டும். வேறு யாராவது நின்றால் அவர்களைக் காட்டும். யாருமே நிற்காவிட்டால் எதையும் காட்டாது.

தொலைக்காட்சியும் இதுபோன்றதுதான். நாம் எதை ஒளிபரப்புகிறோமோ அது தெரியும். நம்மை ஒளிபரப்பினால் நாம் தெரிவோம்; மற்றவர்களை ஒளிபரப்பினால் அவர்கள் தெரிவார்கள். எதையும் ஒளி பரப்பாவிட்டால் எதுவுமே தெரியாது. அது மட்டுமில்லாமல், ஏற்கனவே ஒளிபரப்பும்போது அதில் தோன்றிய உருவங்கள், அந்த நிகழ்ச்சி முடிந்ததுமே மறைந்துவிடும். ஏனெனில், தொலைக்காட்சியில் எதுவும் பதியவுமில்லை; அதில் எந்த உருவமும் நிலைக்கவுமில்லை. ஆக, உருவப்படம் என்று காரணம் காட்டி இதைத் தடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. சுருங்கச் சொல்வதென்றால், நேரடியாகக் காண்பதுபோன்ற தன்மையே தொலைக்காட்சி மற்றும் வீடியோக்களில் காணப்படுகிறது. எனவே இவற்றை உருவப்படம் என்ற பட்டியலில் சேர்க்க முடியாது.

ஒரு விளையாட்டு நிகழ்ச்சி நடக்கிறது என்றால், அதை நேரிலும் பார்க்கலாம்; கண்ணாடி வழியாகவும் பார்க்கலாம். டி.வி.,யின் நிலையும் இதுதான். மார்க்க விளக்க நிகழ்ச்சிகள், கல்வி, விவசாயம், மருத்துவம், தொழிற்பயிற்சிகள், சமையல் கலை, நாட்டு நடப்புகள், அனுமதிக்கப்பட்ட விளையாட்டுகள், செய்முறைப் பயிற்சிகள் போன்ற நிகழ்ச்சிகளை நேரிலும் பார்க்கலாம்; டி.வி.யிலும் பார்க்கலாம். எனவே, மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ள எச்சரிக்கை இவற்றிற்கு பொருந்தாது.

இத்துடன் விழிப்புணர்வுக்கான ஒரு சிறிய உபதேசம்:

ஆபாசக் காட்சிகள், பச்சை வசனங்கள் பேசும் நிகழ்ச்சிகள், இதுபோன்ற மார்க்கம் தடுத்த மற்ற எவற்றையெல்லாம் நேரிலும் பார்க்கக் கூடாதோ அவற்றையெல்லாம் டி.வி.யிலும் பார்க்கக் கூடாது. அவற்றில் உருவப் படங்கள் தெரிவதால் அல்ல. அவை தவறானவை என்பதற்காக அவற்றைப் பார்ப்பது தடுக்கப்பட்டுள்ளது. எனவே, 

❖ டி.வி.யாக இருந்தாலும், மொபைலாக இருந்தாலும் மார்க்கம் அனுமதிக்கின்ற வழிகளில் மட்டும் அவற்றைத் தங்களால் பயன்படுத்த முடியுமா? என்றும், மனதைக் கெடுக்கும் சமாச்சாரங்கள் காட்டப்படும்போது அதை சபலப்பட்டு பார்த்துக் கொண்டிருக்காமல் அதை ஒதுக்கிவிட்டு கடந்து வருவதன் மூலம் தங்களைத் தாங்களே வெல்ல முடியுமா? என்றும் பலமுறை யோசிக்க வேண்டும்!

❖ ஒரு குடும்பத் தலைவர் வேலையின் காரணமாக வெளியிலோ, வெளி ஊருக்கோ, வெளி நாட்டுக்கோ சென்றப்பின் அவருடைய குடும்பத்தினர் அதை மார்க்கம் அனுமதிக்கின்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பயன்படுத்துவார்களா? என்பதையும் யோசிக்க வேண்டும்.

❖ நம்முடைய பிள்ளைகள் அவற்றில் மூழ்கி உள்ளம் கெட்டுப்போவதுடன், கல்விக் கற்பதில் அக்கறையற்றவர்களாக ஆகிவிடாமலிருப்பார்களா?  என்பதையும் யோசிக்க வேண்டும்.
இவ்வளவு உறுதியும், கட்டுப்பாடும் உள்ளவர்கள் டி.வி.யைத் தங்கள் வீடுகளில் வைத்துக் கொள்வதிலும், பிள்ளைகளுக்கு மொபைலைப் பயன்படுத்தக் கொடுப்பதிலும் தவறேதும் இல்லை.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை