❓கேள்வி: குழந்தைப் பிறந்தவுடன் நாம் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைப் பிறந்தவுடன் அதன் சார்பாக சிலவற்றை செய்யவேண்டும் என இஸ்லாம் கூறுகிறது. அவை அனைத்துமே கட்டாயமாக செய்யவேண்டும் என்றோ, உடனே செய்யவேண்டும் என்றோ கிடையாது. என்றாலும், அவற்றில் நபிவழி என்பதற்காக செய்யப்படுவதும், நாள் குறிப்பிட்டு செய்யவேண்டும் என சொல்லப்பட்டவையும் உண்டு.
அவற்றை எப்படி செய்யவேண்டும் என்பதை எடுத்துக்காட்ட ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. நமது வாட்ஸ்அப் குழும உறுப்பினர்களின் உடனடி தேவைக்கருதி இப்போதைக்கு சுருக்கமாக கூறியுள்ளோம். ஆதாரங்களோடு பின்னர் பதிவு செய்வோம், இன்ஷா அல்லாஹ்.
அவற்றை இப்போது ஒவ்வொன்றாக பார்ப்போம்:
✅ தஹ்னீக் செய்வது
இனிப்புக்காக பேரீச்சம்பழத்தின் சாறை மட்டுமோ அல்லது தேன் போன்ற இயற்கையான இனிப்பை சிறிது தொட்டு, குழந்தையின் வாயில் தடவுவது (ஆனால் இது கட்டாயமில்லை)
✅ பெயர் வைப்பது
இறைவனுக்கு இணைவைக்கும் அர்த்தங்கள் இல்லாத, தவறான அர்த்தங்கள் இல்லாத மற்றும் மார்க்கம் தடுக்காத பெயர்களை வைக்கவேண்டும். யாரும் கேள்விப்படாத பெயர்களை வைக்கவேண்டும் என்று நினைத்து, நவீனமாக பெயர் வைக்கிறோம் என்று அர்த்தம் இல்லாத பெயர்களை வைத்துவிடக்கூடாது.
(அகீகா கொடுக்கும்போது குழந்தைக்குப் பெயர் வைப்பது சுன்னத் என்றாலும், குழந்தைப் பிறந்த அன்றே பெயர் வைப்பதற்கும் வழிகாட்டல் உள்ளது.
✅ பெயர் வைத்ததும் குழந்தையின் பரக்கத்துக்காக நாம் விரும்பும் நல்ல வார்த்தைகளைச் சொல்லி துஆ செய்துக்கொள்ளலாம்; கட்டாயமில்லை.
✅ தலைமுடியை மழிப்பது
அகீகா கொடுக்கும்போது தலைமுடியை நீக்குவது சுன்னத் என்றாலும், சில நாட்கள் தாமதப்படுத்தியும் தலைமுடியை நீக்குவது குற்றமில்லை. முடிந்தவரை சீக்கிரமாக நீக்குவது சிறந்தது.
✅ அகீகா கொடுப்பது
"அகீகா" என்பது கடமையில்லை. வசதியும், வாய்ப்பும் இருந்தால் கொடுக்கலாம்.
குழந்தைப் பிறந்த ஏழாவது நாள், ஆண் குழந்தையாக இருந்தால் ஒரே மாதிரியான 2 ஆடுகள் கொடுப்பது. (இயலாவிட்டால் ஒரு ஆட்டை மட்டும் கொடுக்கலாம்). பெண் குழந்தையாக இருந்தால் 1 ஆடு கொடுப்பது.
✅ ஆண் குழந்தைகளாக இருந்தால் ஃஹத்னா செய்வது
ஏழாம் நாளில்தான் செய்யவேண்டும் என்ற வழிகாட்டல் இல்லை; செய்தால் குற்றமுமில்லை. நன்கு வளர்ந்தப் பிறகு கூட செய்யலாம்.
செய்யக் கூடாதவை:
❌ குழந்தையின் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும் சொல்வது
❌ தஹ்னீக் செய்யும்போது வாயில் மென்று அதைத் தடவக்கூடாது. அது நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய தனி சிறப்பானது.
❌ ஆலிம்கள்தான் பெயர் வைக்கவேண்டும் என்று பிரத்யேகமாக அழைத்துவந்து பெயர் வைக்க சொல்வது
❌ பெயர் வைத்துவிட்டு துஆ செய்வதற்காக "கூட்டு துஆ" என்ற பித்அத்தை செய்வது
❌ பெயர் வைப்பதையும், ஃஹத்னா செய்வதையும் விழாவாக நடத்துவது
❌ பெயர் வைப்பதற்கு குழந்தையின் பெயரை மூன்று தடவைகள் கூப்பிடுவது
❌ குழந்தையின் முடியில் சிறிதோ, பாதியோ மட்டும் எடுத்துவிட்டு மீதியை விட்டுவைப்பது
❌ முடியின் எடைக்கு சமமான வெள்ளியைக் கொடுப்பது
❌ பெண் பிள்ளைகளுக்கும் ஃஹத்னா செய்வது
❌ தொடக்கைக் கழிப்பதாக சொல்லி, விழுந்த தொப்புள் கொடி, தாயின் தலைமுடி, வெட்டிய நகம் ஆகியவற்றை 40-வது நாளன்று புதைப்பது
.... இதுபோன்ற இன்னும் பல பித்அத்கள் சமூகத்தில் மலிந்துக் கிடக்கின்றன.
(இந்தக் கட்டுரையில் இப்போதைக்கு சுருக்கமாக கூறியுள்ளோம். இது சம்பந்தமாக் சொல்லப்பட்டுள்ள சட்டஙளை ஆதாரங்களோடு பின்னர் பதிவு செய்வோம், இன்ஷா அல்லாஹ்.)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!