அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Tuesday, 16 November 2010

பெருநாள் தொழுகையின் சட்டங்கள் (பகுதி 2)

தக்பீரின்போது கைகளை உயர்த்தவேண்டுமா?            

'தக்பீர்' என்ற சொல்லை 'தக்பீர் கட்டுதல்' என்ற அர்த்தத்தில் மக்கள் தவறாக விளங்கியிருப்பதால், ஒவ்வொரு தக்பீருக்கும் மக்கள் கைகளை அவிழ்த்துக் கட்டும் வழக்கம் இருந்து வருகின்றது. ஆனால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவ்வாறு கைகளை உயர்த்தியதாக எந்த ஹதீசும் இல்லை.

'தஹ்லீல்' என்றால் 'லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுதல்' என்பதும், 'தஸ்பீஹ்' என்றால் 'சுப்ஹானல்லாஹ் என்று சொல்லுதல்' என்பதும், 'தஹ்மீத்' என்றால் 'அல்ஹம்துல்லாஹ் என்று சொல்லுதல்' என்பதுதான் பொருள்.

இதே போல் 'தக்பீர்' என்றால் 'அல்லாஹு அக்பர் என்று சொல்லுதல்' என்றுதான் பொருளாகும். உதாரணமாக, தொழுகைக்குப் பிறகு 33 தடவை தக்பீர் சொல்ல வேண்டும் என்றால், 33 தடவை கைகளை நெஞ்சின் மீது அவிழ்த்துக் கட்டுதல் என்று விளங்கமாட்டோம். இதுபோன்றுதான் 7+5 தக்பீர்கள் சொல்வார்கள் என்பதற்கு கைகளை அவிழ்த்துக் கட்டுதல் என்று பொருள் கொள்ளக்கூடாது. 7+5 தடவை 'அல்லாஹு அக்பர்' என்று கூற வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.  எனவே முதல் தக்பீரின் போது மட்டும் கைகளை உயர்த்தி நெஞ்சில் கட்டிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு கைகளைக் கட்டிய நிலையிலேயே (கைகளை உயர்த்தவோ, அவிழ்க்கவோ செய்யாமல்) 'அல்லாஹு அக்பர்' என ஏழு தடவை கூற வேண்டும். இரண்டாம் ரக்அத்திலும் கைகளைக் கட்டிய நிலையிலேயே ஐந்து தடவை 'அல்லாஹு அக்பர்' என்று கூறவேண்டும். மேலும் கைகளை உயர்த்தவோ, அவிழ்க்கவோ நபி வழியில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும்.

தக்பீர்களுக்கிடையில் திக்ருகள் சொல்லவேண்டுமா?

சில பகுதிகளில், பெருநாளுக்கென்று கூடுதலாக சொல்லப்படும் இந்தக் தக்பீர்களுக்கு இடையில் 'சுப்ஹானல்லாஹி வல்ஹம்துல்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ்' என்ற திக்ரை சொல்லவேண்டும் என்று கூறுகின்றார்கள். அவ்வாறு ஓதவேண்டும் என எந்த ஒரு திக்ரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. எனவே இடையில் எதையும் ஓதக் கூடாது.

எந்த சூராக்களை ஓதுவது சிறந்தது?

பெருநாள் தொழுகையில் தக்பீர்கள் கூறிய பின் சூரத்துல் ஃபாத்திஹா ஓதிவிட்டு ஓதக்கூடிய துணை சூராக்கள் குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா' (அத்தியாயம்: 87), 'ஹல் அதாக ஹதீசுல் காஷியா' (அத்தியாயம்: 88) ஆகிய அத்தியாயங்களை ஓதுபவர்களாக இருந்தனர். பெருநாளும், ஜும்ஆவும் ஒரே நாளில் வந்துவிட்டால் அவ்விரண்டிலுமே மேற்கண்ட அத்தியாயங்களை ஓதுவார்கள்.
        அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ரலி); நூல்:முஸ்லிம்(1452)

அபூ வாகித் அல்லைஸி(ரலி)யிடம், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஹஜ் பெருநாள் தொழுகையிலும், நோன்புப் பெருநாள் தொழுகையிலும் என்ன ஓதுவார்கள்? என்று உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள் கேட்டபோது, அவ்விரு தொழுகைகளிலும் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' (அத்தியாயம்: 50) 'இக்தர பதிஸ் ஸாஅ' (அத்தியாயம்: 54) ஆகிய அத்தியாயங்களை ஓதுவார்கள் என்று பதிலளித்தார்கள்.
                         நூல்: முஸ்லிம் 1477

மேற்கண்ட ஹதீஸ்கள் என்னென்ன அத்தியாயங்களை பெருநாள் தொழுகையில் ஓதவேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றன. இவ்வாறு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஓதிய சூராக்களை நபித்தோழர்கள் அறிவிப்பதிலிருந்து கிராஅத்தைச் சப்தமிட்டு ஓதவேண்டும் என்பதும் தெளிவாகின்றது.

பெருநாள் தொழுகைக்கு முன்/பின் சுன்னத் உண்டா?

சில ஊர்களில் பெருநாள் தொழுகைக்கு முன் சுன்னத் என்ற பெயரில் இரண்டு ரக்அத் தொழும் வழக்கம் இருந்து வருகின்றது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய, நபிவழிக்கு மாற்றமான நடைமுறையாகும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் முஸல்லா என்ற திடலுக்குச் செல்வார்கள். அவர்கள் முதன் முதல் (பெருநாள்) தொழுகையைதான் துவக்குவார்கள்.
              அறிவிப்பவர்: அபூஸயீத் அல் குத்ரீ (ரலி); நூல்: புகாரி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதற்கு முன்பும், பின்பும் அவர்கள் எதையும் தொழவில்லை.
                   அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்:புகாரி

முதலில் தொழுகையா? 'குத்பா' என்ற‌ உரையா?

ஜும்ஆ தொழுகையைப் போன்றே பெருநாள் தொழுகையும் இரண்டு ரக்அத்துகள் தொழுகையுட‌ன், சொற்பொழிவும் அடங்கியதாகும். ஜும்ஆவின்போது முதலில் இமாம் உரை நிகழ்த்திவிட்டுப் பின்னர் தொழுகை நடத்தவேண்டும். ஆனால் பெருநாள் தொழுகையில் முதலில் தொழுகை நடத்திவிட்டு அதன் பிறகு இமாம் உரை நிகழ்த்த வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடன் நான் பெருநாள் தொழுகையில் பங்கு எடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர்.
            அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்: புகாரி

நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள், அபூபக்கர்(ரலி), உமர்(ரலி) ஆகியோர் இரு பெருநாட்களிலும் உரை நிகழ்த்துவதற்கு முன்பு தொழுபவர்களாக இருந்தனர்.
                அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி); நூல்:புகாரி (962)

முதலில் தொழவேண்டும், அதன் பிறகுதான் உரை நிகழ்த்தவேண்டும் என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறியலாம். ஆனால் இன்று சில‌ ஊர்களில் தொழுவதற்கு முன்பாக ஒரு அரை மணி நேர உரை முதலில் நடைபெறும். அதன் பிறகு தொழுகையும், அதற்குப் பிறகு இரண்டு உரைகளும் நடைபெறும். இது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைக்கு மாற்றமான செயலாகும். எனவே, பெருநாள் தொழுகை முடிந்ததும் மக்களுக்கு இமாம் உரையாற்றுவதுதான் நபிவழியாகும்.

ஒரே உரையின் இடையில் இமாம் அமரவேண்டுமா?

இரு பெருநாட்களிலும் நிகழ்த்தப்படக்கூடிய உரையின்போது இடையில் உட்காருவதற்கு நபி வழியில் ஆதாரமில்லை. இரு உரைகளுக்கு இடையில் பிரித்துக் காட்டும் விதமாக அமர்வது நபிவழி (சுன்னத்) என்று இமாம் ஷாபி அறிவிப்பதாக ஒரு செய்தி கூறப்படுகின்றது. அந்தச் செய்தியை அறிவிக்கும் உபைதுல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு உத்பா என்பவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவரல்ல என்பதால், இந்த ஹதீஸ் ஏற்கத்தக்க முடியாத வகை ஹதீஸ்களில் சார்ந்தவையாகிவிடுகிறது. இதுபோன்ற இன்னும் ஒரு பலகீனமான ஹதீஸும் உள்ளதே தவிர, ஆதாரப் பூர்வமான எந்த ஹதீஸும் இல்லாததால், ஜும்ஆவைப் போன்று இரண்டு உரைகள் ஆற்றக்கூடாது என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மிம்பர் (மேடை) உண்டா?


வழக்கமாக ஜும்ஆவின் இரு உரைகளும் பள்ளியில் உள்ள மிம்பரில் ஆற்றப்படும். ஆனால் பெருநாள் தொழுகையில் இமாம் தரையில் நின்றுதான் உரையாற்ற வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாளன்று தரையில் நின்று உரையாற்றினார்கள். 
          அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ(ரலி); நூல்:இப்னு குஸைமா

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்கு) தயாராகி தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் (உரையை) முடித்து, (அங்கிருந்து) நகர்ந்து பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கை மீது சாய்ந்துக் கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். 
             அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி); நூல்: புகாரி(978)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தரையில் நின்று உரையாற்றியுள்ளதால் நாமும் பெருநாள் தொழுகையில் மிம்பர் பயன்படுத்தக்கூடாது.

பெண்களுக்குத் தனியாகப் பிரச்சாரம் செய்யவேண்டுமா?

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தாம் பேசியது பெண்களுக்குக் கேட்கவில்லை என்று கருதியதும் பெண்கள் பகுதிக்கு வந்தார்கள்.
           அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: புகாரி(98)

இமாம் பேசுவது பெண்களுக்கு எட்டிவிடுமானால் அந்த உரையே போதுமானதாகும். இல்லையேல் பெண்கள் பகுதிக்கு வந்து உரையாற்ற வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

பெருநாள் குத்பாவைக் கேட்பதன் அவசியம்

விரும்பினால் பெருநாள் உரையைக் கேட்கலாம்,  இல்லையேல் கேட்க வேண்டியதில்லை என்ற கருத்துப்பட வரக்கூடிய ஹதீஸ்கள் ஆதாரமற்றவையாகும்.

கன்னிப் பெண்கள், மாதவிடாய்ப் பெண்கள் உட்பட அனைவரும் வந்து இந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதன் பெருநாள் உரையை கேட்பதற்காகதானே தவிர மைதானத்திற்கு வந்து பேசிக் கொண்டிருப்பதற்காக அல்ல! எனவே பெருநாள் உரையின் போது பேசிக் கொண்டிருக்காமல் நபித்தோழர்கள் எப்படி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் உரையை அமர்ந்து அமைதியாகக் கேட்டார்களோ அதுபோல் நாமும் (ஜும்ஆ உரயைப் போன்றே) அமைதியாக இமாமின் பெருநாள் உரையைக் கேட்க வேண்டும்.

பெருநாள் பிரார்த்தனை

பெருநாள் தொழுகையும், உரையும் முடிந்ததும் நாம் உடனே கலைந்து விடாமல் ஆண்களும், மாதவிடாய்ப் பெண்கள் உட்பட அனைத்துப் பெண்களும் திடலில் அவரவருக்குரிய இடத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யவேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும் மகத்துவமும் உள்ளது.

பெருநாள் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டும் எனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
         அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி); நூல்:புகாரி(971)

இந்த ஹதீஸில் பெருநாளைக்கு என்று ஒரு பரக்கத்தும், புனிதமும் இருப்பதாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அந்த பாக்கியத்தை நாம் இழந்து விடக்கூடாது என்பதற்காக பெருநாள் உரை முடிந்ததும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஜும்ஆவும் பெருநாளும்

ஜும்ஆத் தொழுகை கடமை என்றாலும் கூட, ஜும்ஆ தினத்தில் பெருநாள் வந்தால் ஜும்ஆவிற்குப் பதிலாக பெருநாள் தொழுகையே போதுமானது என்று இஸ்லாம் கூறுகின்றது. ஆனால், அப்படி ஜும்ஆ தினத்தில் பெருநாள் வரும்போது, நாம் விரும்பினால் பெருநாள் தொழுகையைத் தொழுதுவிட்டு பிறகு ஜும்ஆத் தொழுகையையும் தொழுதுக் கொள்ளலாம். விரும்பினால் அன்றைய தினம் பெருநாள் தொழுதுவிட்டு ஜும்ஆத் தொழுகையை தொழாமலும் இருக்க‌லாம். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இந்த இரண்டு விதமான நடைமுறைகளுக்கும் சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும், ஜும்ஆவிலும் 'ஸப்பி ஹிஸ்ம ரப்பிகல் அஃலா' என்ற அத்தியாயத்தையும், 'ஹல் அதாக ஹதீஸுல் காஷியா' என்ற அத்தியாயத்தையும் ஓதுவார்கள். ஒரே நாளில் பெருநாளும், ஜும்ஆவும் வந்துவிட்டால் இரு தொழுகைகளிலும் அந்த இரு அத்தியாயங்களையும் ஓதுவார்கள். 
      அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ரலி); நூல்:முஸ்லிம்(1452)

இந்த ஹதீஸிலிருந்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஒரே நாளில் வந்த‌ பெருநாள் தொழுகையையும், ஜும்ஆத் தொழுகையையும் தொழுது இருக்கிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ள முடிகிறது.

'இன்றைய தினம் உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் வந்துள்ளன. யார் இந்தப் பெருநாள் தொழுகையைத் தொழுகிறாரோ அவர் ஜும்ஆத் தொழாமல் இருக்கலாம். ஆனால் நாம் ஜும்ஆத் தொழுகையை நடத்துவோம்' என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். 
                அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி);நூல்:அபூதாவூத்(907)

பெருநாள் தொழுதவர்கள் அன்றைய தினம் ஜும்ஆ தொழாமல் இருக்க அனுமதி வழங்கியுள்ளதால் இந்த அனுமதியையும் நாம் நடைமுறைப்படுத்தலாம்.

தொடரும்... இன்ஷா அல்லாஹ்!

முதல் பகுதி மற்றும் மூன்றாவது பகுதிகளைப் பார்க்கவும்.


4 comments:

  1. தோழி தாங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தியாக திருநாள் வாழ்த்துகள்.

    கட்டுரை மிக அருமை அவசியமான பதிவும்கூட..

    ReplyDelete
  2. @ அன்புடன் மலிக்கா...

    //தோழி தாங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தியாக திருநாள் வாழ்த்துகள்//

    தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி தோழி! உங்களுக்கும், ம‌ஃரூஃப் மற்றும் அனைவருக்கும் என் மனங்கனிந்த பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா...,
    தங்களின் ஹதீஸ்களை ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும் போது படித்து கொண்டிருக்கின்றேன்.இன்றுதான் பெருநாள் தொழுகையின் சட்டங்களின் மூன்று பகுதிகளையும் முடித்தேன்.
    மிகவும் அழகாக தெளிவான விளக்கத்தோடு சொல்லியிருக்கின்றீர்கள்.
    நான் இஸ்லாத்திற்க்கென்ற பக்கத்தை எழுத முயலுவதால் உங்களுடைய எழுத்துக்களையும்,அதன் தெளிவையும் பார்க்கும்போது நாமெல்லாம் இப்படி தெளீவாக எழுதிட முடியுமா நாம் எழுதுவதெல்லாம் எம்மாத்திரம் என்பது போல் தோன்றுகின்றது.
    இன்னும் ஆங்காங்கே உங்கள் எழுத்துக்களை வாசித்து கருத்தை பதிவிடுகின்றேன்.
    மிகவும் அருமையான விளக்கங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் தங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நற்க்கூலியையும்,நீண்ட ஹயாத்தினையும் தருவானாக....

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  4. @ apsara-illam...

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    //நாமெல்லாம் இப்படி தெளீவாக எழுதிட முடியுமா நாம் எழுதுவதெல்லாம் எம்மாத்திரம் என்பது போல் தோன்றுகின்றது//

    அப்படிலாம் இல்லமா.. நீங்களும் உங்கள் நடையில் எழுதலாம் அப்சரா :) (அல்ஹம்துலில்லாஹ்!) அல்லாஹ்தஆலா நம் அனைவருக்கும் கல்வி ஞானத்தை அதிகப்படுத்திக் கொடுப்பானாக!

    //இன்னும் ஆங்காங்கே உங்கள் எழுத்துக்களை வாசித்து கருத்தை பதிவிடுகின்றேன்//

    பொறுமையா படித்தாலும் நிச்சயமா படிங்க அப்சரா. தேடியெடுத்து படிப்பதற்கும் உங்களின் துஆவிற்கும் நன்றிமா!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை