அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday 27 August 2011

பெருநாள் தொழுகையின் சட்டங்கள் (பகுதி 1)

இஸ்லாமிய மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்டுள்ள‌ வருடத்தின் இரண்டு பெருநாட்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். அண்ணல் நபி(ஸல்) அவர்களும் இந்த நாட்களைப் பற்றி சிலாகித்துக் கூறியுள்ளார்கள்.

"நபி(ஸல்)அவர்கள் மதீனா நகருக்கு வருகைத் தந்தபோது மதீனாவாழ் மக்களுக்கு இரண்டு (திரு)நாட்கள் இருந்தன. அவ்விரண்டு நாட்களிலே மக்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவார்கள். அப்போது நபி(ஸல்)அவர்கள் "இவ்விரண்டு நாட்களைவிடச் சிறந்த (இரண்டு) நாட்களை உங்களுக்கு இறைவன் ஏற்படுத்தியுள்ளான். அவை குர்பானிப் பெருநாள், மற்றும் ஃபித்ரு பெருநாளாகும்" என்றார்கள். 
                   அறிவிப்பவர்: அனஸ்(ரலி; நூல்: அபூதாவூத், நஸாயீ

இந்தப் பெருநாட்களை நாம் கொண்டாடத் துவங்குவதே தொழுகையைக் கொண்டுதான்! பருவமடைந்த ஒவ்வொரு ஆண், பெண்ணும் பெருநாள் தொழுகைத் தொழுவது அவசியமானதாகும்.

பெண்களுக்கும் அவசியமான பெருநாள் தொழுகை

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதை பொதுவாக அனுமதித்திருந்தாலும், அவர்கள் பள்ளியில்தான் தொழுதாக வேண்டும் என்று கட்டாயமாக்க‌வில்லை. ஆனால் வேறெந்த தொழுகைக்கும் வலியுறுத்தாத அளவுக்கு பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்துக் கொள்ளவேண்டும் என்ற உத்தரவை நபியவர்கள் பிறப்பித்துள்ளார்கள்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் மைதானத்திற்கு) புறப்படச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் (மட்டும்) தொழுமிடத்தை விட்டு விலகியிருப்பார்கள்.
    அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி); நூல்: புகாரி(324, 351, 974, 980, 981, 1652)

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் மைதானத்திற்கு) புறப்படச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் மக்களுக்குப் பின்னால் இருக்க வேண்டும். அன்றைய நாளின் பரக்கத்தை எதிர்நோக்கி அவர்களுடன் சேர்ந்து இவர்களும் தக்பீர் கூறவேண்டும். அவர்களோடு இவர்களும் துஆச் செய்ய வேண்டும் என்றும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். 
        அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி); நூல்: புகாரி(971)

பெருநாளுக்கென ஒரு பரக்கத் இருக்கின்றது. அந்த நாள் ஆண்களோடு சேர்ந்து பெண்களும் (மாதவிடாய்ப் பெண்களும்) தக்பீர் சொல்ல வேண்டும். ஆண்கள் துஆச் செய்யும்போது பெண்களும் தங்களுக்காக துஆச் செய்யவேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது. மாதவிடாய்ப் பெண்கள் தொழுகையைத் தவிர மற்ற காரியங்களில் கலந்துக் கொள்ளவேண்டும்.

ஜமாஅத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை போன்ற கூட்டுத் தொழுகைகளில் பெண்கள் பங்குக் கொள்ளாமல் தமது வீடுகளிலேயே தனியாகத் தொழுதுக் கொள்வதற்கு பெண்களுக்குச் சலுகை வழங்கியுள்ள இஸ்லாம், பெருநாள் தொழுகையில் மட்டும் பெண்கள் கண்டிப்பாகக் கலந்துக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆக, மற்ற தொழுகைகளைவிட பெருநாள் தொழுகைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது, இத்தொழுகையின் அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது.

தொழுகை நேரம்

"இன்றைய தினத்தில் நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார்" என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.
   அறிவிப்பவர்: பர்ராஃ இப்னு ஆஸிப்(ரலி); நூல்: புகாரி (951, 965, 968, 976, 5545, 5560)

மேற்கண்ட ஹதீஸ் பெருநாள் தினத்தில் முதல் காரியமாக தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. பொதுவாக சுபுஹு தொழுகைக்குப் பின்னர் சூரியன் நன்கு வெளிப்படும் வரை தொழுவதற்குத் தடை உள்ளதால், அந்த நேரம் முடிந்தவுடன் பெருநாள் தொழுகையின் நேரம் துவங்கி விடுகின்றது.

சுபுஹுக்குப் பின் சூரியன் உதித்துப் பிரகாசிக்கின்ற வரை தொழுவதையும், அஸருக்குப் பின் சூரியன் மறைகின்ற வரை தொழுவதையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
              அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி); நூல்: புகாரி (581)

ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான‌ இடங்களில் நீண்ட நேரம்வரை தாமதப்படுத்தி பெருநாள் தொழுகையைத் தொழுகின்றார்கள். இது தவறாகும். அதுவுமில்லாமல், பெருநாள் தொழுகை மைதானத்தில் தொழவேண்டிய ஒரு தொழுகையாக இருப்பதால், தொழுகையைத் தாமதப்படுத்தும்போது உச்சி வெயிலில் நின்று பெருநாள் தொழுகையைத் தொழவேண்டிய நிலைக்கு மக்கள் ஆளாகிறார்கள்.

"கடுமையான வெப்பம் நரக வெப்பத்தின் வெளிப்பாடாகும். எனவே வெப்பம் கடுமையாகும்போது தொழுகையை (வெப்பம் தணியும் வரை) தாமதப்படுத்துங்கள்" என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
             அறிவிப்பவர்: அபூதர்(ரலி); நூல்: புகாரி(534, 537, 538, 539)

பள்ளிவாசலில் சென்று தொழவேண்டிய கடமையான தொழுகைகளைக் கூட வெயிலின் கடுமையைக் காரணம் காட்டி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தாமதப்படுத்துமாறு கட்டளையிட்டு, மக்கள் சிரமப்படக் கூடாது என்பதில் அந்த அளவுக்குக் கவனமாக இருந்துள்ளார்கள். எனவே நபிவழியைப் பின்பற்றித் தொழுவது என்றால் மைதானத்தில்தான் இத்தொழுகை நிறைவேற்றப்பட வேண்டும். மைதானத்தில் மக்கள் வெயிலைத் தாங்க முடியாத நேரத்தில் தொழுவது மேற்கண்ட நபிவழிக்கு முரணாக அமைகிறது.

எனவே பெருநாளன்று திடலில் தொழும்போது மக்களை வெயில் தாக்கும் என்பதால், அதிகாலையிலேயே பெருநாள் தொழுகையை முடித்துவிட வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டியுள்ளது.

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) 'முஸல்லா' என்ற (ஈத்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்களது காரியங்களில் முதல் காரியமாக தொழுகையைத் துவக்குவார்கள்.
        அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி); நூல்கள்: புகாரி(956), முஸ்லிம்(1612)

இந்த ஹதீஸிலும், இது போன்ற பல்வேறு ஹதீஸ்களிலும் பெருநாள் தொழுகையை காலையில் முதல் காரியமாக நிறைவேற்றவேண்டும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளதால், சூரியன் முழுமையாக வெளிப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழுது விடுவதுதான் நபிவழியில் முறையான‌ செயலாகும்.

பாங்கு, இகாமத் உண்டா?

நோன்புப் பெருநாளிலும், ஹஜ் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை.
         அறிவிப்பவர்கள்: இப்னு அப்பாஸ்(ரலி), ஜாபிர்(ரலி); நூல்: புகாரி

முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மற்றொரு ஹதீஸில் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை என்று ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள். எனவே பெருநாள் தொழுகைக்கு பாங்கோ, இகாமத்தோ இல்லை.

தொழும் முறையும் தக்பீர்களும்:-

நிய்யத்:

பெருநாள் தொழுகை மற்ற தொழுகைகளைப் போன்றதுதான் என்றாலும் இந்தத் தொழுகையில் அதிகப்படியான சில அம்சங்கள் உள்ளன. அவற்றிலும் நபி வழியல்லாத‌ பல்வேறு முறைகளை மக்கள் கடைப்பிடிக்கிறார்கள். அவற்றையெல்லாம் தவிர்த்து நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த அம்சங்களை மட்டும் நம் தொழும் முறைகளாக‌ அமைத்துக் கொள்ளவேண்டும்.

பெருநாள் தொழுகைக்காக நின்றவுடன் இமாம், பெருநாள் தொழுகைக்கான 'நிய்யத்' சொல்லிக் கொடுக்கும் வழக்கம் நம் மக்களிடத்தில் இப்போதும் உள்ளது. மனதால் எண்ணுவதுதான் நிய்யத் ஆகுமே தவிர‌, வாயால் மொழிவதல்ல. எந்த வணக்கத்தில் ஈடுபட்டாலும் அதில் ஈடுபடும் சமயம் அந்த வணக்கத்தைப் பற்றிய‌ எண்ணம் இருப்பது அவசியமாகும். அதுதான் 'நிய்யத்' என்பதாகும். மேலும் வாயால் சொல்வது நபிவழியும‌ல்ல!

தக்பீர்கள்:

பெருநாள் தொழுகையில் கூடுதலான தக்பீர்களை கூறும்படி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே, பெருநாள் தொழுகை ஏனைய தொழுகைகளைப் போன்றே தொழப்பட்டாலும் சாதாரண தொழுகைகளில் சொல்லப்படும் வழக்கமான தக்பீர்களை விட இந்தத் தொழுகையில் அதிகப்படியாக பன்னிரண்டு தக்பீர்கள் சொல்லப்பட வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள்.
    அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு பின் ஆஸ்(ரலி); நூல்கள்: திர்மிதி, அபூதாவூத்

மேற்கண்ட ஹதீஸின் மூலம் இரண்டு ரக்அத்களைக் கொண்ட இத்தொழுகையில், முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களுமாக மொத்தம் 12 தக்பீர்கள் சொல்லவேண்டும் என்பதை விளங்குகிறோம். அதாவது, முதல் ரக்அத்தில் 'அல்லாஹும்ம பாயித் பைனீ...' அல்லது 'வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ.....' போன்ற துஆக்களில் ஏதேனும் ஒன்றை ஓதிய பின்னர், 'அல்லாஹு அக்பர்' என்று இமாம் ஏழு முறை தக்பீர்கள் கூற வேண்டும். பின்பற்றித் தொழுபவர்களும் ஏழு முறை சப்தமின்றி தக்பீர்கள் கூற வேண்டும். பிறகு 'சூரத்துல் பாத்திஹா' மற்றும் துணை சூராக்கள் கொண்ட கிராஅத் ஓதிவிட்டு ருகூவு, சுஜூத்களை மற்ற தொழுகையில் செய்வதைப் போன்று செய்யவேண்டும்.

பிறகு இரண்டாம் ரக்அத்திற்கு எழுந்தவுடன் பாத்திஹா சூரா ஓதுவதற்கு முன்னர் இமாம் ஐந்து தடவை 'அல்லாஹு அக்பர்' என்று கூறவேண்டும். பின்பற்றித் தொழுபவர்களும் அதேபோல் சப்தமின்றி ஐந்து தடவை 'அல்லாஹு அக்பர்' என்று கூற வேண்டும். அதற்கு பிறகு முதல் ரக்அத்தில் சொன்னதுபோலவே செய்து தொழுகையை முடிக்க வேண்டும்.

பெருநாள் தொழுகையின் சட்டங்கள் இரண்டாவது பகுதி மற்றும் பெருநாள் தொழுகையின் சட்டங்கள் மூன்றாவது பகுதிகளைப் பார்க்கவும்.


(16/11/10 அன்று வெளியிடப்பட்ட கட்டுரையின் மீள்பதிவு)

4 comments:

  1. நல்ல தகவல் அஸ்மா!

    பல விஷயங்களை தெரிந்துக்கொள்ள வாய்ப்பு கிட்டியது.
    குறிப்பாக பெண்கள் தொழுகை பற்றி. மிக்க நன்றி

    ReplyDelete
  2. @ ஆமினா...

    //பல விஷயங்களை தெரிந்துக்கொள்ள வாய்ப்பு கிட்டியது.
    குறிப்பாக பெண்கள் தொழுகை பற்றி//

    அல்ஹம்துலில்லாஹ், சந்தோஷம் ஆமினா.

    ReplyDelete
  3. என்ன ஜீ சூரா பாதிஹாவுக்கு முன்பு தஸ்பீஹ் ஓத வேண்டாமா...?அதை சொல்ல மறந்துட்டீங்க...!!

    ReplyDelete
    Replies
    1. //அதாவது, முதல் ரக்அத்தில் 'அல்லாஹும்ம பாயித் பைனீ...' அல்லது 'வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ.....' போன்ற துஆக்களில் ஏதேனும் ஒன்றை ஓதிய பின்னர், 'அல்லாஹு அக்பர்' என்று இமாம் ஏழு முறை தக்பீர்கள் கூற வேண்டும். பின்பற்றித் தொழுபவர்களும் ஏழு முறை சப்தமின்றி தக்பீர்கள் கூற வேண்டும். பிறகு 'சூரத்துல் பாத்திஹா' மற்றும் துணை சூராக்கள் கொண்ட கிராஅத் ஓதிவிட்டு ருகூவு, சுஜூத்களை மற்ற தொழுகையில் செய்வதைப் போன்று செய்யவேண்டும்//

      இந்த வரிகளைப் படித்தீர்களா? இதல்லாமல் சூரா ஃபாத்திஹாவுக்கு முன்பு வேறு எந்த தஸ்பீஹும் இல்லை. நீங்கள் எதை சொல்கிறீர்கள் என தெளிவாக குறிப்பிடுங்கள் சகோ.

      Delete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை