அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday 5 August 2010

தலைப்பிறைப் பார்ப்போம்!


இஸ்லாத்தில் பிறையைப் பார்த்து நாட்களையும், சூரியனை வைத்து நேரத்தையும் நிர்ணயிக்கும்படி சட்டங்கள் நமக்கு விளக்குகின்றன. அந்த வகையில் ரமலானின் துவக்கத்தையும் முடிவையும் பிறையைப் பார்த்தே நாம் கணக்கிடுகிறோம். இதை இப்போது குர்ஆன், சுன்னாவின் ஆதாரங்களோடு பார்ப்போம்.

அல்லாஹ் தனது திருமறையில்,

ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான். (அல்குர்ஆன் 10:5)

பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். 'அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:189)

அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதிக்களமாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் ஏற்பாடு என்று கூறிக்காட்டுகிறான். (அல்குர்ஆன் 3:96)

மேலும் ரமலான் மாதத்தைப் பற்றிக் கூறும்போது,

'இந்தக் குர்ஆன் ரமலான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்' என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 2:185)

'உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ' என்று இறைவன் இங்கு கூறுகிறான். அதாவ‌து, உங்களில் அம்மாதத்தை அடையாதவர்களும் இருப்பார்கள் என்பதை இத‌ன் மூலம் நமக்கு வல்ல ரஹ்மான் சுட்டிக்காட்டுகிறான். அப்படியானால் 'அடைந்தவர்', 'அடையாதவர்' என்றால் யார், யார்? இவற்றை பின்வரும் ஹதீஸ்கள் நமக்கு எவ்வாறு விளக்குகின்றன என்பதைப் பார்ப்போம்.

'மாதத்திற்கு இருபத்து ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
       அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி); நூல்: புகாரி 1907

நாங்கள் உம்ராவுக்காகப் புறப்பட்டோம். 'பதன் நக்லா' என்ற இடத்தில் ஓய்வெடுத்தோம். அப்போது பிறைப் பார்க்க முயன்றோம். (பிறை தென்பட்டது) சிலர் இது மூன்றாவது இரவின் பிறை என்றனர். மற்றும் சிலர் இரண்டாவது இரவின் பிறை என்றனர். நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து இது பற்றிக் கூறினோம். அதற்கவர்கள் 'நீங்கள் எந்த இரவில் பார்த்தீர்கள்?' என்று கேட்டார்கள். இந்த இரவில்தான் பார்த்தோம் என்று விடையளித்தோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 'பிறையைப் பார்க்கும் வரை (முதல்) மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். எனவே பிறையை எந்த இரவில் நீங்கள் பார்த்தீர்களோ அந்த இரவில்தான் அது பிறந்தது என்று விளக்கமளித்தார்கள்.
          அறிவிப்பவர்: அபுல்பக்தரீ; நூல்: முஸ்லிம்

அதாவது பிறையைக் கண்டவர்கள் 'ரமலானை அடைந்தவர்கள்'. மேக மூட்டத்தின் காரணமாகவோ அல்லது கண்களுக்கு தென்படாத அளவுக்குள்ள நேரத்தில் உள்ள பிறையைக் காண இயலாமல் போனவர்கள் 'ரமலானை அடையாதவர்கள்'. அவர்கள் ஷஃஅபானுடைய மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்துக் கொள்ளவேண்டும். அன்று பிறை பிறந்திருந்தாலும் கூட , நம் கண்களுக்கு புலப்படாத காரணத்தினால், அல்லாஹ் நமக்கு முந்தைய மாத்தை நீட்டிக் கொடுக்கிறான் என்ற நபி(ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டுதல் நம்முடைய‌ தெளிவான நடைமுறைக்கு எவ்வாறு வித்திடுகிறது பாருங்கள், சுப்ஹானல்லாஹ்! ஆக, வானில் கண்ணுக்குத் தெரியாத பிறை பிறந்துவிட்டதாக கணிக்கப்படுவதை வைத்து பிறையை நாம் தீர்மானிக்கக் கூடாது. மேலும் மிக‌ தூர தொலைவில் பார்த்ததாகத் தகவல் கிடைப்பதை வைத்தும் பிறையை நாம் தீர்மானிக்கக் கூடாது. (அதற்கான ஆதாரத்தை பின்னால் பார்ப்போம்). இப்போது நபி(ஸல்) அவர்களின் இந்த ஹதீஸை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் எந்த மாதிரியான சூழ்நிலையில் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதையும் கவனிப்போம்.

மேற்கண்ட ஹதீஸில், பிறையின் அளவு பெரிய‌தாக இருந்த‌தால் முந்திய‌ பிறையைத் தவறவிட்டதாக மக்கள் நினைக்கிறார்கள். அன்று பிறைப் பார்த்த யாருமே அதைத் தலைப்பிறையாக‌ நினைக்கவில்லை. அப்போதுதான், "நீங்கள் எந்த இரவில் பார்த்தீர்களோ அந்த இரவுதான் உங்களுக்கு முதல் பிறை, ஏனெனில் பிறையைப் பார்க்கும் வரை (முந்திய‌) மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான்" என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புதமான வாச‌கத்தை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் இங்கு எடுத்துக் காட்டுகிறார்கள்.

அதாவது உண்மையில் பிறை பிறந்திருந்து, அதைப் பார்க்க நாம் முயற்சி செய்தும் ஏதோ காரணத்தால் அதை பார்க்க முடியாமல் போனால், முந்திய பிறையை தவற விட்டுவிட்டோமே என்று நாம் வருந்தத் தேவையில்லை. ஏனெனில், நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படி, பிறை பிறந்தே இருந்தாலும்கூட அது நமக்கு புலப்படாவிட்டால், நம் சிரமத்தைக் குறைத்து, குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக அம்மாதத்தின் ஒரு நாளை அல்லாஹ் நீட்டித்து சலுகை அளிக்கிறான். இந்த சூழ்நிலையில் இருப்பவர்கள்தான் மேலே சொன்ன 2:185 ஆயத்தின்படி, இன்னும் 'ரமலானை அடையாதவர்கள்' ஆவார்கள். அதே சமயம், ஒரு வாரம் மேக மூட்டமாக‌ இருந்தாலும் அம்மாதத்தில் ஒரு வாரத்தை அதிகமாக்கிக் கொள்ளவேண்டுமா? என்று இந்த இடத்தில் யாரும் குதர்க்கம் பேசாமல் இருப்பதற்காக இப்னு உமர்(ரலி) அறிவித்த முன்னே சொன்ன ஹதீஸை மீண்டும் இங்கே நினைவுபடுத்துகிறோம்.

'மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.' (புகாரி)

'சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) யார் நோன்பு நோற்கிறாரோ அவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்.'
    அறிவிப்பவர்: அம்மார்(ரலி); நூல்: ஹாகிம்

அதாவது பிறைப் பார்க்கவேண்டிய‌ இரவு என்பதே, 29 நாட்கள் முடிந்து முப்பதாம் இரவில்தான். அன்றுதான் 'ஷக்'குடைய நாள் என்று சொல்லப்படும் சந்தேகத்திற்குரிய நாள். அன்று பிறை தெரியவில்லை என்றால் முந்தைய மாதத்தில் ஒரு நாள்தான் அல்லாஹ் நீட்டித்தரக்கூடிய நாள் என்பதைப் புரிந்துக்கொள்ளவேண்டும். ஒரு மாதத்தின் குறைந்தபட்ச அளவு 29 நாட்கள்; அதிகபட்சம் 30 நாட்கள். ஆக, நோன்பின் எண்ணிக்கை 29 ஐ விடக் குறைவாகவோ, 30 ஐ விட அதிகமாகவோ இருக்கக் கூடாது என்பதையும், மாதத்தை அல்லாஹ் நீட்டித்தருகிறான் என்றால், நீட்டப்படுவது ஒரு நாள்தான் என்பதையும் மேற்கண்ட நபிமொழிகள் கூறுகின்றன. ஆக, பிறையைப் பார்த்துதான் முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு மேற்கண்ட‌ ஹதீஸ்களும் தெளிவான ஆதாரங்களாக அமைந்துள்ளது. மேலும் நீட்டப்படுவது ஒரு நாள்தான் என்பதும், பிறைத் தென்படாதவர்கள் அன்றைக்கு 'ரமலானை அடையாதவர்கள்' என்பதும் இதன் மூலம் தெளிவாக விளங்குகிறது.

இதுபோன்றே 2:185 வது ஆய‌த்திற்கு விளக்கமாக உள்ள‌ இன்னும் சில ஹதீஸ்களையும் காண்போம்:

'மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.'
      அறிவிப்பவர்: அபூ உமைர்; நூற்கள்: இப்னுமாஜா, அபூதாவூத், நஸாயீ, பைஹகீ, தாரகுத்னீ, இப்னு ஹிப்பான், அஹ்மத்

நபி(ஸல்) அவர்களிடம் வந்த வாகனக் கூட்டத்தினர், ஷவ்வாலுடைய (பெருநாள்) பிறையைப் பார்த்துவிட்டு, அது விஷயமாக தெளிவு பெறுவதற்காக நோன்பையும் (விடாமல்) வைத்துக்கொண்டு வருகிறார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்களும், அவர்களுடன் இருந்த சஹாபாக்களும் அவர்கள் பகுதியில் மேக மூட்டத்தினால் பிறைத் தென்படவில்லை என்பதால் ரமலானை முப்பதாக பூர்த்திசெய்யும் விதமாக அன்றைக்கு நோன்பு நோற்றுள்ளார்கள். இப்போது பிறைப் பார்த்துவிட்டு வந்த வாகனக் கூட்டத்தினருக்கு அன்றைய பொழுது பெருநாளின் பொழுதாக அமைந்துவிடுகிறது. ஆனால் அவர்களோ பகலின் கடைசிப்பொழுதில், அதாவது நோன்பு திறக்க குறைந்த நேரமே இருக்கும்போது (நோன்பு நோற்ற நிலையில்) வந்து சேர்கிறார்கள். பெருநாள் அன்று நோன்பு வைக்கக்கூடாது என்ற காரணத்தினால், இன்னும் சிறிது நேரத்தில் நோன்பை முடித்துவிடலாம் என்றிருந்தும், நோன்பை விட்டுவிடும்படி அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள். மேலும், பெருநாள் தொழுகையை நிறைவேற்ற முடியாத நேரமாக இருப்பதால், மறுநாள் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிடுகிறார்கள்.

ஆனால், 'நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம்' என்று தன்மை நிலையில் ஆரம்பிக்கும் இந்த வாசகம், தொடர்ந்து 'அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும், விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும்' என்று படர்க்கையில் சொல்லப்படுவதை இங்கு நாம் நன்றாக கவனிக்கவேண்டும். ஏனெனில், இவை அனைத்தும் பிறைப் பார்த்துவிட்டு வந்த வாகனக்கூட்டத்தினருக்கு மட்டுமே! பிறைப் புலப்படாததால் ரமலானை 30 ஆக பூர்த்தி செய்வதற்காக‌ நபி(ஸல்) அவர்களோடு நோன்பு வைத்திருந்த சஹாபாக்களுக்கு அல்ல என்பது, தொலை தூரத்தில் பார்த்ததாகத் தகவல் கிடைப்பதை வைத்து பிறையை நாம் தீர்மானிக்கக் கூடாது என்பதற்குரிய ஆதாரமாகவும், தலைப்பிறையை எவ்வாறு நாம் தீர்மானிக்கவேண்டும் என்பதற்குரிய முக்கியமான ஒரு சட்டத்தை நிலைநிறுத்துவதாகவும் அமைந்துள்ளது.

பின்வரும் இன்னொரு ஹதீஸும் இந்த கருத்தை அப்படியே பிரதிபலிப்பதாகவும், மேற்கண்ட நபிவழிச் சட்டத்தை இன்னும் வலுவாக்குவதாகவும் அமைந்துள்ளதைப் பாருங்கள்!

உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் என்னை சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமலானின் தலைப்பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். 'நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?' என்று (என்னிடம்) கேட்டார்கள். 'நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்' என்று கூறினேன். 'நீயே பிறையைப் பார்த்தாயா?' என்று கேட்டார்கள். 'ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்' என்று கூறினேன். அதற்கவர்கள் 'ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடிப்போம்' என்றார்கள். 'முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?' என்று நான் கேட்டேன். அதற்கவர்கள், 'போதாது! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித்தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்' என்று விடையளித்தார்கள்.
     அறிவிப்பவர்: குரைப்(ரலி); நூல்: முஸ்லிம்

தானும் பிறைப்பார்த்து, முஆவியா(ரலி)வும் பார்த்து, மக்களும் பார்த்த விபரத்தை குரைப் அவர்கள் கூறும்போதும், இப்னு அப்பாஸ்(ரலி) அதை ஏற்க மறுக்கிறார்கள். நாங்கள் எங்கள் பகுதியில் மறுநாள்தான் ரமலானுடைய பிறையைப் பார்த்தோம். அதனால், எப்போது நாங்கள் எங்கள் பகுதியில் மறுபிறையைப் பார்க்கிறோமோ அப்போதுதான் எங்களுக்கு ஷவ்வாலுடைய‌ பிறை, இல்லாவிட்டால் ரமலானை முப்பது நாட்கள் என்று முடிவு செய்து கொள்வோம் என்பதாகதான் அவர்களுடைய‌ பதில் அமைந்துள்ளது. இவ்வளவு பேர் பார்த்திருக்கிறோமே அது போதாதா என்று கேட்டதற்கும், 'போதாது' என்று விடையளித்த இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், 'இவ்வாறுதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர்' என்ற ஹதீஸை, (தான் சொன்ன‌ பதிலுக்கு காரணமாக) முன்வைக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களின் சொல்லையும், வழிகாட்டுதலையும் முன் வைக்காமல் அவர்களே சுயமாக இந்த முடிவை எடுத்திருந்தால் நாம் அதை மார்க்கச் சட்டமாக எடுக்க முடியாதுதான். ஆனால் நபி(ஸல்) அவர்களின் கட்டளைதான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களால் இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. ஆக இந்த சம்பவத்தில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் தன்னுடைய சுய கருத்தை சொன்னதாக யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. எனவே இந்த ஹதீஸின் மூலமும் தலைப்பிறையை தீர்மானிப்பது எப்படி என்ற நபி(ஸல்) அவர்களின் தெளிவான கட்டளை நமக்கு கிடைத்துவிடுகிறது.

ஆக, தொலை தூரமான‌ ஒரு பகுதியில் கண்ட பிறை இன்னொரு தூரப் பகுதியைக் கட்டுப்படுத்தாது என்பதை அறிகிறோம். அதே சமயம், வரக்கூடிய தகவல் அருகிலிருந்து வந்தால் அதை நாம் ஏற்றுக் கொள்ள‌லாமா? என்பதை இதன் தொடர்ச்சியான அடுத்த பதிவில் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்!

8 comments:

 1. சகோதரி உங்களுக்கு அல்லாவிடம் நற் கூலி உண்டு. நிச்சயமாக சரியான நேரத்தில் இந்த ஆதாரத்தை வெளிபடுத்தியுள்ளிர்கள்.
  சிலர் சவுதியை பார்த்து நோன்பு நோற்றவர்கள், கூட இந்த வருடம் தன் செயலை மாற்றும் அறிகுறி தெரிகின்றது. உண்மையை
  மறைக்க முடியாது. ஒருநாள் வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர், இளம் தூயவன்! நீங்கள் சொல்லும் சந்தோஷமான அந்த உண்மை எனக்கும் எட்டியது. அசத்தியம் அழிந்துவிடும்; சத்தியம்தான் என்றும் நிலைக்கும்! எல்லோரும் சத்தியத்தை அதற்குரிய முறையில் புரிந்து, ஈகோவுக்கு இடம் கொடுக்காமல், மறுமை வெற்றியை மட்டுமே மனதில் கொண்டு நடந்துக்கொண்டால், சந்தோஷமே!

  இன்னும் சில நாட்களுக்கு முன்பே தொகுத்து வெளியிட நினைத்த இந்த பதிவு, மற்ற வேலைகளினால் கொஞ்சம் கால‌ தாமதமாகிவிட்டது. இருந்தும் பிறைக்கு முன்பே வெளியிட உதவி செய்த வல்ல ரஹ்மானுக்கே எல்லாப் புகழும்! மீதியையும் விரைவில் பதிவிடவேண்டும், இன்ஷா அல்லாஹ். தங்களைப் போன்றவர்களின் துஆ என்றுமே வேண்டும்!

  ReplyDelete
 3. சரியான நேரத்தில சரியான பதிவு. ஆனா அதே நேரத்துல ஊருடன் ஒத்து போக வேண்டியிருக்கிறதே என்ன செய்ய ....

  ReplyDelete
 4. பாஸ் கொஞ்சம் படித்து பார்க்கவும், இதில் கூறப்பட்டுள்ள ஹதீஸ் அவர் அவர் இருக்கும் இடத்தில் தான் பிறை பார்த்து நோன்பு
  வைக்க சொல்லப்பட்டுள்ளது.அது ஊரோடு தான் ஒத்து போகின்றது.

  ReplyDelete
 5. குர்ஆன், ஹதீஸுடன் ஊர் ஒத்துப் போகும்வரை நாமும் ஊரோடு ஒத்துப்போவதில் குற்றமில்லை, ஜெய்லானி நானா! இந்த பிறை விஷயத்தைப் பொறுத்தவரை, எனக்குத் தெரிந்து எல்லா ஊர்களிலும் பிறைப் பார்த்துதான் நோன்பு வைக்கிறார்கள். அதனால் நீங்க இந்த விஷயத்தில் ஊரோடுதான் ஒத்துப் போவீர்கள். அப்ப‌டியே குர்ஆன், ஹதீஸைப் புறக்கணித்த பாவத்திலிருந்து தப்பித்த பலனும் உண்டு!

  ReplyDelete
 6. உங்கள் பதிலுக்கு நன்றி, இளம் தூயவன்!

  ReplyDelete
 7. கொஞ்சம் தாமதமாக வந்துட்டேன், பரவா இல்லை நானும் உங்கள்களோடு ஒத்து போயிட்றேன்ங்க.

  அருமையான பகிர்வு, எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே போகட்டும்

  அரை வரி கருத்து எழுதுவதற்கே மே..மூச்சு ..கீ .மூச்சு வாங்குது எனக்கு

  பக்கம் ..பக்கமா எழுதுற நீங்கள் மறுமையில் நற்க்கூலிப் பெற பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 8. //கொஞ்சம் தாமதமாக வந்துட்டேன், பரவா இல்லை நானும் உங்கள்களோடு ஒத்து போயிட்றேன்ங்க.//

  தாமதமா வந்தால் என்ன, குர்ஆன் ஹதீஸோடு ஒத்துப் போகிறீர்களே அது போதும், அல்ஹம்துலில்லாஹ்!

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை